Tuesday, April 14, 2009

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய ஏழாவது குறும்பட வட்டம் மற்றும் சிறந்த வலைப்பதிவர் விருது வழங்கும் விழா 11 -04 -09 : 12:03 PM

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய ஏழாவது குறும்பட வட்டம் மற்றும் சிறந்த வலைப்பதிவர் விருது வழங்கும் விழா 11 -04 -09 : 12:03 PM

கடந்த சனிக்கிழமை (11-04-2009)அன்று சென்னை எக்மோரிலுள்ள ஜீவன ஜோதி அரங்கில் தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய ஏழாவது குறும்பட வட்டம்இனிதே நடைபெற்றது. இந்த மாதம் குறும்பட வட்டம் காலை பத்து மணிக்கு தொடங்கியது. 

முதலில் பத்து குறும்படங்கள் திரையிடப்பட்டன. பின்னர் மூன்று மணியளவில் குறும்பட வட்டம் தொடங்கியது. காலையில் பத்து குறும்படங்கள் பின்னர், மாலையில் மூன்று குறும்படங்கள் என இந்த மாதம் குறும்படத் திருவிழாவாக அமைந்தது.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாசகர்கள் வந்துக் கலந்துக் கொண்டனர். குறும்பட உலகில் புதிய வரவாக செல்வி. திவ்யா அவர்கள் நுழைந்துள்ளார். இவர் இயக்கிய "இருண்ட வீடு" குறும்படம் இம்மாதம் காலையில் திரையிடப்பட்டது. தொடர்ந்து "Future","மரணக்குழி", "சத்தமில்லாத மரணங்கள்"போன்ற குறும்படங்கள் திரையிடப்பட்டன.

குறும்படங்கள் திரையிடப்பட்டதும், அந்தக் குறும்படங்களின் இயக்குனர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டனர். 

பின்னர் மூன்று மணியளவில் குறும்பட வட்டம் தொடங்கியது. 

முதல் பகுதி:

இம்மாதம் இலக்கியப் பகுதிக்காக திரு. சுசி திருஞானம் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்தார். தன்னம்பிக்கை கதைகள் பழக கூறி, வந்திருந்த பல படைப்பாளிகளை ஊக்குவித்தார். தொய்வு நிலையில் இருக்கும் பல படைப்பாளிகள் இவரது பேச்சால் உத்வேகம் பெற்றுள்ளனர் என்றால் அது மிகையாகாது. இவர் எழுதிய புத்தகத்தில் இருந்து இவர் கூறிய மதுரா ட்ராவல் இயக்குனர் திரு. பாலாவின் உண்மைக்

கதையும், சன் டிவி திரு. கலாநிதி மாறனின் கதையும் ஆர்வலர்களுக்கு மேலும் தெம்பை ஊட்டியது. தொடர்ந்து பேசிய சுசி திருஞானம் அவர்கள் படிக்க வேண்டிய ஐந்து புத்தகனளை ஆர்வலர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

சிறந்த பதிவர் விருதளிக்கும் நிகழ்வு:

இந்த முறை சிறந்த விருது திரு. வினோத் அக்னிப் பார்வை என்கிற அவரது வலைப்பூவிற்காக வழங்கப்பட்டது. இவர் நமது தமிழ் ஸ்டுடியோ.காமில் சார்லி சாப்ளின் தொடரை எழுதி வருகிறார் என்பது குறிப்படத்தக்கது. இவருக்கு தமிழ் ஸ்டுடியோ.காம் திரு. குணசேகரன் அவர்கள் விருது வழங்க அதைப் பெற்றுக் கொண்ட திரு. வினோத் அவர்கள் 15 மணித்துளிகள்

ஆர்வலர்களிடையே பேசி பல நல்லக் கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அவரது பேச்சு ஒரு நல்லாப் பதிவாக அமைந்தது. மனிதருக்கு உண்மையில் நல்ல குரல் வளம் அமைந்துள்ளது. பாராட்டுகள். ஆனால் இந்த மாதம் சிறந்த பதிவருக்கு எங்களால் ஊக்கத் தொகை ஏதும் வழங்க முடியவில்லை. காரணம் தொடர்ந்து இணையதளத்தை எந்தவித வருமானமும் இன்றி நடத்தி வருவதாலும், குறும்பட வட்டம் நிகழ்ச்சிக்கு போதுமான ஸ்பான்சர்கள் கிடைக்காத காரணத்தினால், சில ஆயிரங்கள் நட்டம் ஏற்பட்டு விட்டதாலும் பதிவருக்கும் மற்ற குறும்பட படைப்பாளிகளுக்கும் எங்களால் ஊக்கத் தொகை வழங்க இயலவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். 

இரண்டாம் பகுதி:

குறும்பட வழிகாட்டலுக்காக நாம் அழைத்திருந்த திரு. மாணிக்கம் அவர்கள் வர இயலாத காரணத்தால் இம்முறை நமக்கு ஆபத்பாண்டவனாக வந்தவர் இயக்குனர். திரு. அருண் மொழி அவர்கள். இவர் திரைக்கதை அமைப்பது பற்றிய கலந்துரையாடலை நடத்தினார். உண்மையில் வழிகாட்டல் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்று பல ஆர்வலர்கள் நம்மிடையே தங்கள் கருத்துகளை பகிர்ந்துக் கொண்டனர்.

அந்த அளவுக்கு இந்த மாத வழிகாட்டல் பகுதியை மிகச் சிறப்பாக வழி நடத்திக் கொடுத்தார் அருண் மொழி அவர்கள். தொடர்ந்து ஆர்வலர்களின் வினாக்களுக்கு விடையளித்துப் பேசினார். குறும்படங்களுக்கு சென்சார் அங்கிகாரம் வாங்குவது குறித்து அவர் அளித்த விளக்கம் பலருக்கும் பயனுள்ளதாக அமைந்தது. 

மூன்றாம் பகுதி:

இந்த மாதம் மூன்றாவது சிறப்பு அழைப்பாளராக இயக்குனர் திரு. ஜெயபாரதி அவர்கள் வந்திருந்தார். திரையிடப்பட்ட மூன்றுக் குறும்படங்களையும் பார்த்துவிட்டு அவர் தனது கருத்துகளை பதிவு செய்தார்.

முதலாவதாக திரையிடப்பட்ட குறும்படம் "திரு. விஜிக்குமார்" அவர்கள் இயக்கிய "குப்பை மனசெல்லாம்" என்கிறக் குறும்படம் திரையிடப்பட்டது. பிள்ளைகளால் கைவிடப்பட்ட ஒரு தந்தையின் கடைசிக் கட்ட வாழ்க்கை நிலையை இயக்குனர் படம் பிடித்திருந்தார். தன் மகனை படிக்க வைத்து பெரிய அரசாங்க பதிவியில் அமர வைத்த தந்தை இறுதியில் இறந்த பின்னர் குப்பைத்

தொட்டியில் தீமூட்டப்படுவதாக அமைந்திருந்தது இக்குறும்படம். ஆங்காங்கே சிலக் குறைகள் தென்பட்டாலும் இயக்குனரின் முயற்சி பாராட்டத்தக்கது.

இரண்டாவதாக திரையிடப்பட்ட குறும்படம்"திரு. சக்தி பாரதி" அவர்கள் இயக்கிய "எங்கெங்கு காணினும்". சமூகத்தின் மீது தனக்கு இருக்கும் கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கை நிலைதான் இக்குறும்படம். இயக்குனர் இக்குறும்படத்தில் நடித்திருந்தார்.

கொஞ்சம் நீளத்தைக் குறைத்திருந்தால் இக்குறும்படம் இன்னும் பேசப்பட்டிருக்கும். இயக்குனருக்கு வாழ்த்துகள்.

மூன்றாவதாக திரையிடப்பட்ட குறும்படம்"திரு. நீலகண்டன்" அவர்கள் இயக்கிய "நல்லதோர் வீணை செய்து..." கண் தானத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இக்குறும்படம் நல்லதொருப் பதிவாக அமைந்தது. முன்னரே நாம் பார்த்திருந்த ஒரு சிலக் காட்சிகள் படத்தில் தொய்வு ஏற்படத்தி இருந்தாலும் இயக்குனரின் நல்ல முயற்சிக்கு நமது வாழ்த்துகள்.

மூன்று குறும்படங்களும் திரையிடப்பட்ட பின்னர் அக்குறும்படங்களின் இயக்குனர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டனர். பின்னர் ஆர்வலர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. திரையிடப்பட்ட மூன்று குறும்படங்களுக்கும் பாராட்டி தமிழ் ஸ்டுடியோ.காம் சார்பில் கேடயம் வழங்கப்பட்டது.

இறுதியாக மூன்று குறும்படங்கள் பற்றியும்இயக்குனர் "திரு. ஜெயபாரதி" அவர்கள் தன்னுடைய கருத்தை பதிவு செய்தார். சற்றே காட்டமாக விமர்சித்தாலும் இறுதியில் இயக்குனர்களை தட்டிக்கொடுத்து அவர்களின் நல்ல எதிகாலத்துக்கு தன்னுடைய வாழ்த்துகளை பதிவு செய்தார். குறும்படங்களில் இசையை சத்தமாக வைத்து ஏன் படுத்தி எடுக்கிறீர்கள்..

ஒரு சிலக் காட்சிகளுக்கு இசையை விட மௌனமே சிறந்தது என்கிற கருத்தை பதிவு செய்தார். அனைத்து படைப்பாளிகளும் அதிகமாக இலக்கியத்தைப் படிக்க வேண்டும் என்றும், இலக்கியத்தைப் படிக்காதத்தின் விளைவே இது போன்ற புரிதல் இல்லாத தவறுகள் ஏற்படுவதாகவும் விளக்கினார். உண்மையில் ஒரு நல்லாப் படைப்பாளியை சீர்படுத்தும் முயற்சியாக அவரது பேச்சு அமைந்தது. 

குறும்பட வட்டத்தின் இறுதி பகுதியாக ஆர்வலர்கள் தங்களை, தங்களின் திறமைகளை அறிமுகப் படுத்துக் கொள்ளும் பகுதி நடைபெற்றது. நடிப்பு, இசை, ஒளிப்பதிவு, என தங்களின் திறமைகளை ஆர்வலர்கள் அறிமுகப்படுத்த அவர்களின் தேவை இருக்கும் அனைவரும் அவர்களின் பெயர் மற்று தொலைபேசி என்னை குறித்துக் கொண்டனர்.

1 comment:

Anonymous said...

Not for publishing

Could you please give me your contact mail id?
Would like to talk to you regarding short films

Please write back with your contact details to
asifmeeran@gmail.com

Post a Comment