Saturday, June 6, 2009

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் ஒன்பதாவது குறும்பட வட்டம் மற்றும் சிறந்த வலைப்பதிவர் விருது வழங்கும் விழா.

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் ஒன்பதாவது குறும்பட வட்டம் மற்றும் சிறந்த வலைப்பதிவர் விருது வழங்கும் விழா.

நாள்: சனிக்கிழமை (13-06-09)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது. 
நேரம்: காலை 10 முதல் இரவு 7 வரை 

10 AM - 2 PM - உலகப் படம் திரையிடல்

இந்த மாதம் உலகப் படம் திரையிடல் பகுதியில் ஐசன்ஸ்டீன் இயக்கத்தில் வெளிவந்த "தி பாட்டில்ஷிப் ஆப் பொடேம்கின்" திரைப்படமும், டெர்ரி க்ரோர்ஜ் இயக்கத்தில் வெளிவந்த"ஹோட்டல் ர்வாண்டா" திரைப்படமும் திரையிடப்படுகிறது. 

இத்துடன் ஆர்வலர்களுடன் கலந்துரையாடலும் நடைபெறும்.

3 PM - 7 PM - குறும்பட வட்டம் 

முதல் பகுதி: (3 PM-4 PM) - கலைகளை ஆவணமாக்குவோம்.

இந்த மாதம் இலக்கியப் பகுதியில் எழுத்தாளர் வெ. நீலகண்டன் அவர்கள் "கலைகளை ஆவணமாக்குவோம்" என்கிறத் தலைப்பில் தனது கருத்துகளை வாசகர்களுடன் பகிர்ந்துக் கொள்வார். 

இவரைப் பற்றி:

இவரது கவிதைகள் "நாங்களும் சில பூக்களும்" என்ற பெயரில் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. 'கூடாரம்' என்ற பெயரில் இலக்கிய இதழ் நடத்திய அனுபவமும் உண்டு. தமிழின் பிரதான வார இதழில் 2 தொடர் கட்டுரைகள் எழுதியுள்ளார். அந்தக் கட்டுரைகள் நூலாக வரவுள்ளன. இருளர்கள், நரிக்குறவர்கள் உள்ளிட்ட விழிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கைநிலை, அவர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் பற்றி ஆய்வு செய்து வரும் இவர் அது பற்றிய நூலொன்றை விரைவில் வெளியிட இருக்கிறார். தமிழக ஆறுகளின் இயற்கைச்சூழலும், இப்போதைய இழிநிலையும என்றொரு நூலும் தயாராகி வருகிறது. சென்னையின் பிரதான கானா பாடகர்களில் ஒருவரான ' மரணகானா விஜியின்' சர்ச்சைக்குறிய வாழ்க்கை வரலாறை தொகுத்து "சாக்கடை சரித்திரம்" என்ற பெயரில் நூலாக வெளியிட இருக்கிறார். 

சிறந்த வலைப்பதிவர் விருது:

இம்மாதம் சிறந்த பதிவருக்கான விருது பெறுபவர் திரு. நர்சிம் அவர்கள்.இவரது வலைப்பூ. http://www.narsim.in/

தமிழ் ஸ்டுடியோ.காம் சிறந்த பதிவருக்கான விருது வழங்கும் விழா மாதந்தோறும் சிறந்தப் பதிவர் தெரிவு செய்யப்பட்டு வழங்கப்படுகின்றது. விருது வழங்கப்படும் மாதத்திற்கு முந்தைய மாதத்தில் பதிவர் எழுதிய கட்டுரைகள், பதிவுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல் 

இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரைப்பட ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் திரு. சக்தி சரவணன் அவர்கள் பங்குபெறுகிறார். குறும்படங்களில் ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் குறித்து மிக நுணுக்கமான பல தகவல்களை வாசகர்கள் அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

இவர் பணியாற்றியுள்ள படங்கள்: 

திரு. சக்தி சரவணன் அவர்கள் "பூவே உனக்காக", "சூரிய வம்சம்", "ஆஹா" "திருப்பாச்சி", உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராகவும், சமீபத்தில் வெளிவந்த "சிலம்பாட்டம்" படத்தின் இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.

மூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல்

இந்த மாதம் திரையிடல் பகுதியில் செல்வி. திவ்யா அவர்கள் இயக்கிய "இருண்டவீடு", திரு. சா.சு. அவர்கள் இயக்கிய "வேண்டுதல்" திரு. எ. என். சரவணன் அவர்கள் இயக்கிய "அறியாமை" ஆகியக் குறும்படங்கள் திரையிடப்படுகின்றன.

மூன்றாம் பகுதியின் சிறப்பு அழைப்பாளர்:

இம்மாதம் புகழ்பெற்ற திரைப்பட கதாசிரியர் திரு. வியட்நாம் வீடு சுந்தரம் அவர்கள் மூன்றுக் குறும்படங்களையும் பார்த்துவிட்டு அதன் நிறை குறைகளை அலசி அதன் இயக்குனர்களுக்கு தேவையான ஆச்லோசனைகளும் வழங்க உள்ளார். 

குறும்படங்கள் திரையிடப்பட்ட பின்னர் அதுபற்றிய கலதுரையாடல் நடைபெறும். இயக்குனர் மற்றும் வாசகர்களிடையே நடைபெறும் இக்கலந்துரையாடலில் குறும்படங்களின் நிறைகளும், குறைகளும் அலசப்படும். 

6.30 PM - 7 PM - வாசகர்களின் தேவைகளை பற்றி வாசகர்களே பேசும் பகுதி.

மறக்காமல் வாசகர்கள் தங்கள் சந்தாத் தொகையினை கட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். சந்தாத்தொகை ரூபாய் 50 மட்டும். 

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:

9840698236, 9894422268 


மேலும் படிக்க:

Thursday, May 21, 2009

குறும்பட இயக்குனர்களுக்கு ஓர் வாய்ப்பு



குறும்பட இயக்குனர்களே! உங்களிடம் நல்லக் கதைக் களம் இருக்கிறதா? குறும்படங்கள் இயக்க வேண்டும் என்கிற உங்கள் எண்ணத்திற்கு பணம் ஒரு தடையாக உள்ளதா? குறும்பட ஆர்வலர்களுக்கு தொடர்ந்து தன்னால் இயன்ற உதவிகளை செய்து வரும் தமிழ் ஸ்டுடியோ.காமின் அடுத்த முயற்சியாக உங்களுக்கு உதவும் அறிவிப்பு.

தமிழ் ஸ்டுடியோ.காமின் உதவி:

கேமரா மற்றும் படத்தொகுப்பு உதவி.

விபரங்கள்:

இன்றைய நாட்களில் குறும்படத் துறையில் அதிக செலவுப் பிடிக்கும் இரண்டு துறைகள், ஒன்று ஒளிப்பதிவு. இரண்டு படத்தொகுப்பு. இந்த இரண்டு தொழில்நுட்ப உதவிகளையும் தமிழ் ஸ்டுடியோ.காம் உங்களுக்கு இலவசமாக செய்துத் தர முன்வதுள்ளது. இதில் உங்களின் செலவு: நடிகர், நடிகைகளுக்கு கொடுக்க வேண்டியத் தொகை, மற்றும் இதர சிறு சிறு செலவுகள். மிக அதிக செலவாகும் கேமரா மற்றும் எடிட்டிங் சார்ந்த உதவிகள் எங்களிடம் இருந்து நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். 

எங்களிடம் இருந்து உங்களுக்கு கிடைக்கும் உதவிகள்:

கேமரா:

panasonic GS 330 3CCD Handy Camera with tripod and single light. and camera with UV filter and small wide angle lense. 

உங்களிடம் திறமை வாய்ந்த ஒளிப்பதிவாளர் இருக்கும்பட்சத்தில் நீங்களே கேமரா அது சார்ந்த உபகரணங்களை எங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். உங்களுக்கு ஒளிப்பதிவாளர் உதவி தேவைப்படும் பட்சத்தில் ஒளிப்பதிவாளரையும் நாங்களே ஏற்பாடு செய்துத் தருகிறோம். 

படத்தொகுப்பு:

படத்தொகுப்பு மென்பொருள்: 

1. Apple i-Movie or 

2. A adobe premiere

படத்தொகுப்பு முழுதும் தமிழ் ஸ்டுடியோ.காம் செய்து கொடுக்கும். உங்களிடம் திறமை வாய்ந்த படத்தொகுப்பாளர் இருக்கும்பட்சத்தில் படத்தொகுப்பு ஸ்டுடியோ மற்றும் உபரகரணங்களை எங்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம்

படத்தொகுப்பாளர் இல்லையென்றால் நாங்களே படத்தொகுப்பும் செய்துக் கொடுத்து விடுவோம்.

நீங்கள் செய்யவேண்டியது:

1. உங்கள் கதை மற்றும் திரைக்கதையை கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அல்லது கீழ்க்கண்ட முகவரிக்கு அஞ்சல் அல்லது கொரியரில் அனுப்பி வைக்கலாம்.


2. இதற்கு முன் நீங்கள் குறும்படம் எடுத்திருந்தால் அது பற்றிய தகவல்களையும் உடன் இணைக்க வேண்டும். அதில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரங்களும் தெரிவிக்கப்பட வேண்டும்.

3. உங்கள் குறும்படத்தின் மொத்த செலவு (Budget) தொகையையும் தெரிவிக்க வேண்டும். இதில் கேமரா மற்றும் எடிட்டிங் வேலைகளுக்கும் சேர்த்தே பட்ஜெட் தயாரிக்க வேண்டும்.

4. குறும்படம் எடுக்கவிருக்கும் இடங்கள் பற்றியத் தகல்வல்களும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

நிபந்தனைகள்:

1. எங்களுக்கு வந்து சேரும் படைப்புகளில் இருந்து நடுவர் குழு தெரிவு செய்யும் குறும்பட கதைக்கு மேற்கண்ட உதவிகள் செய்யப்படும். ஒவ்வொரும் மாதமும் ஒருக் குறும்படத்திற்கு மேற்கண்ட உதவிகள் செய்யப்படும். எனவே உங்கள் படைப்புகளை ஒவ்வொரும் மாதமும் நீங்கள் தொடர்ந்து அனுப்பலாம்.

2. ஒரு மாதம் உங்கள் படைப்பு தெரிவு செய்யப்படாவிட்டால் அடுத்த மாதம் நீங்கள் வேறொரு கதையை அனுப்பி வைக்கலாம். ஒரே படைப்பை ஒவ்வொரும் மாதமும் அனுப்பி வைக்கக்கூடாது. 

3. கேமரா மற்றும் இதர உபரகரணங்கள் உங்கள் பழுதுபட்டால் பழுதை சரிசெய்து கொடுக்கும் பொறுப்பு உங்களுடையது. ஒருக் குறும்படத்திற்கு அதிக பட்சம் ஐந்து நாட்கள் மட்டுமே கேமரா மற்றும் இதர உபகரணங்கள் கொடுக்கப்படும். ஐந்து நாட்களுக்கு மேல் தேவை ஏற்பட்டால் நடுவர் குழு அதனை தீர்மானிக்கும். 

4. நீங்கள் கதை மற்றும் திரைக்கதை எந்தக் காரணம் கொண்டும் திருப்பி அனுப்ப இயலாது. ஆனால் உங்கள் அனுமதியின்றி வேறொரு வடிவத்திலேயோ அல்லது அதே வடிவிலேயே தமிழ் ஸ்டுடியோ.காம் பயன்படுத்தாது.

5. உங்களுக்கு ஏற்படும் ஐயங்கள் குறித்து அறிந்துக் கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எங்கள்: 9840698236, 9894422268

உங்கள் கதை மற்றும் திரைக்கதைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:thamizhstudio@gmail.com



அஞ்சல் முகவரி தேவைப்படுமாயின் தொலைபேசி வாயிலாக கேட்டுத் தெரிந்துக்கொள்ளலாம்.

(நினைவிருக்கட்டும்: திரைப்படத்திற்கு உதவி செய்வது குறித்து நாடவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது. இதுக் குறித்த தகவல்களை தொலைபேசியில் பரிமாறிக் கொள்ள இயலாது.)

இந்த உதவிகள் முற்றிலும் இலவசமாக தமிழ் ஸ்டுடியோ.காம் மூலமாக உங்களுக்கு வழங்கப்படுகின்றது.


மேலும் குறும்படங்கள் விபரங்கள் அறிய: www.thamizhstudio.com

Monday, May 4, 2009

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் எட்டாவது குறும்பட வட்டம் மற்றும் சிறந்த வலைப்பதிவர் விருது வழங்கும் விழா 04 -05 -09 : 10.45 PM

நாள்: சனிக்கிழமை (09-05-09)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது. 
நேரம்: காலை 10 முதல் இரவு  7 வரை 


10 AM - 2 PM - இந்த மாதம் காலை நிகழ்வில் உலகத் திரைப்படங்கள் திரையிடல் நேரத்தில் கவிஞர். வைகை செல்வி அவர்களின் "ஒவ்வொரு சொட்டும்" ஆவணப்பட வெளியீட்டு விழா நடைபெறும். இயக்குனர் திரு. வசந்த் அவர்கள் ஆவணப்படத்தை வெளியிட கல்கி ஆசிரியர் திருமதி. சீதாரவி அவர்கள் பெற்றுக் கொள்கிறார்கள்.

3 PM - 7 PM - குறும்பட வட்டம் 

முதல் பகுதி: (3 PM-4 PM) - இலக்கியமும் குறும்படங்களும்

இலஇந்த மாதம் இலக்கியப் பகுதியில் எழுத்தாளர் திரு. ந. முருகேசப் பாண்டியன் அவர்கள்"இலக்கியமும் குறும்படங்களும்" என்கிறத் தலைப்பில் தனது கருத்துகளை வாசகர்களுடன் பகிர்ந்துக் கொள்வார். என் இலக்கிய நண்பர்கள் எனும் இவரது நூல் உயிர்மை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கிராமத்து நினைவுகளை உயிர்மை இதழில் தொடர்ந்து எழுதி வருபவர்.

இம்மாதம் சிறந்த பதிவருக்கான விருது பெறுபவர் திரு. முனைவர் மு.இளங்கோவன் அவர்கள். இவரது வலைப்பூ. http://www.muelangovan.blogspot.com/

தமிழ் ஸ்டுடியோ.காம் சிறந்த பதிவருக்கான விருது வழங்கும் விழா மாதந்தோறும் சிறந்தப் பதிவர் தெரிவு செய்யப்பட்டு வழங்கப்படுகின்றது. விருது வழங்கப்படும் மாதத்திற்கு முந்தைய மாதத்தில் பதிவர் எழுதிய கட்டுரைகள், பதிவுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.


இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல் 

இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரைப்பட படத்தொகுப்பாளர் திரு. சுரேஷ் அர்ஸ்அவர்கள் பங்குபெறுகிறார். குறும்படங்களில் படத்தொகுப்பு குறித்து மிக நுணுக்கமான பலத்த தகவல்களை வாசகர்கள் அவரிடமிருந்து பெறலாம். திரு. சுரேஷ் அர்ஸ் அவர்கள் சமீபத்தில் வெளிவந்த "நான் கடவுள்", "மரியாதை" போன்ற படங்களில் மட்டுமின்றி பல வெற்றிப் படங்களுக்கு படத்தொகுப்பு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாம் பகுதி:  (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல்

திரு. பத்மநாபன் அவர்கள் இயக்கிய "வினா", திரு. நித்தி அவர்கள் இயக்கிய "விடியலை நோக்கி" திரு. ஸ்ரீதர் அவர்கள் இயக்கிய "டுலெட்" ஆகியக் குறும்படங்கள் திரையிடப்படுகின்றன.

இம்மாதம் புகழ்பெற்ற தியிப்பட திறனாய்வாளர் திருமதி. பிரசன்னா ராமசாமி அவர்கள் மூன்றுக் குறும்படங்களையும் பார்த்துவிட்டு அதன் நிறை குறைகளை அலசி அதன் இயக்குனர்களுக்கு தேவையான ஆச்லோசனைகளும் வழங்க உள்ளார். 

குறும்படங்கள் திரையிடப்பட்ட பின்னர் அதுபற்றிய கலதுரையாடல் நடைபெறும். இயக்குனர் மற்றும் வாசகர்களிடையே நடைபெறும் இக்கலந்துரையாடலில் குறும்படங்களின் நிறைகளும், குறைகளும் அலசப்படும். 

6.30 PM - 7 PM - வாசகர்களின் தேவைகளை பற்றி வாசகர்களே பேசும் பகுதி.

மறக்காமல் வாசகர்கள் தங்கள் சந்தாத் தொகையினை கட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். சந்தாத்தொகை ரூபாய் 50 மட்டும். 

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:

9840698236, 9894422268 



Sunday, May 3, 2009

சினிமாட்டோ கிராஃபி காமிரா - சி. ஜெ. ராஜ்குமார், ஒளிப்பதிவாளர் நாள்:02-05-09 :11.30 AM



சினிமாக்கலையின் அசையும் காட்சிகளை பதிவு செய்யும் கருவியை சினிமாட்டோ கிராஃப் காமிரா (Cinematograph Camera) பிலிம் காமிரா (Film Camera) என்று அழைக்கப்படுகிறது.

கேமரா வகை படங்களை காண இங்கே சொடுக்கவும்.

கிரேன் வகை படங்களை காண இங்கே சொடுக்கவும்.



பிலிம் காமிரா அசைவுகளை தொடர் நிழற்படங்களாகவே (Serious of Images) பதிவு செய்யப்படுகிறது.

காமிராவின் முக்கிய பாகங்கள்:
1) பிலிம் மகசின் (Film Magazine)
2) காமிரா அறை (Camera Body)
3) லென்ஸ் (Lens)
4) வியு ஃபைன்டர் (View Finder) 
5) டிரைவ் (Drive)
6) மெட் பாக்ஸ் (Matte Box) 

பிலிம் காமிராவில் பயணிக்கும் முறை தொடர்ந்து செல்வது போல நமக்கு தோன்றினாலும் பிலிம் பயணிக்கும் தன்மையை நின்று செல்லும் முறை என்று அழைக்கப்படுகிறது. இதை இன்டர்மிடன்ட் மோஷன் என்று அழைக்கப்படுகிறது.

இன்று நடைமுறையில் இருக்கும் காமிராக்கள் வசன உச்சரிப்பு முறைக்கு 1 நொடியில் 24 ப்ரேம்கள் பதிவு செய்கிறது. அந்த 24 ப்ரேம்கள் ஒவ்வொன்றும் பிலிம் கேட் என்ற இடத்தில் கனநொடியில் நின்று விட்டு தான் காட்சியை பதிவு செய்துவிட்டு பின் நகர்கிறது.

பிலிம் மகசின்:

காமிராவுக்கு வெளியே இருக்கும் பிலிம் மகசின் - ஒளி புகாதவாறு அதன் உள்ளே இரண்டு அறைகள் கொண்டது. ஒன்று டேக் - ஆப் (Take-Off) இன்னொன்று டேக் அப் (Take-up) உள்ளே பதிவு செய்யப்படாத (Unexposed) பிலிமை டேக் ஆஃப் (Take-Off) அறையில் வைத்து பிலிம் நுணியை அடுத்த அறையான டேக் அப் சொருக வேண்டும், இங்கே தான் பதிவு செய்யப்பட்ட பிலிம் தங்கும் இடம்.

பிலிம் மகசின் கீழே சுழற்சிப்போல உள்ள பிலிமை மகசின்னோடு காமிரா அறையில் செலுத்த வேண்டும்.

காமிரா அறை:

பிலிம்மானது காமிரா அறையில் உள்ளே சுழல வசதியாக ரோலர்களும் மற்றும் ப்ரேம் நகர கோக்கிகள் உள்ளது. காமிரா அறையில் பிலிம்கேட் என்னும் இடத்தில் நின்று காட்சிகள் பதிவாகும். பிலிம் கோக்கி மூலமாக இழுக்கப்பட்டு பிலிம்கேட்டில் நிற்கும்போது பிலிம் அதிர்வுகள் இல்லாமல் இருக்க அச்சமயத்தில் பிலிம்மில் உள்ள துவாரத்தில் ரேஜிஸ்டிரேஷன் பின் இயங்கி, பிலிம் நகரும்போது விடுவித்துக்கொள்ளும்.

காமிரா அறையில் பிலிம் பிலிம்கேட்டில் நின்று பதிவாகும் அதே நேரத்தில் காமிரா சட்டர் திறந்தே இருக்கும் பிலிம் அவ்விடத்தை விட்டு நகரும்போது சட்டர் ஒளியை பிலிம்மில் பதிவாகாதவாறு மூடிக்கொள்ளும். ஆகையால் ஒவ்வொரு ப்ரேம்முக்கும் அடுத்தற்கும் ஓர் கறுப்புக்கோடு இருக்கும்.

வியு ஃபைன்டர்:

காட்சிகளை பதிவு செய்யப்படும் முன்னும் செய்யும்போதும் காமிரா வாயிலாக நம் கண்கள் பார்க்கப்படும் பாகம்தான் வியு ஃபைன்டர். காமிரா பெட்டி இடது புறத்தில் அமைந்திருக்கும். வியு ஃபைன்டர் பார்க்கும்போது செவ்வகத்திரை போல இருக்கும். அதிலிருந்துதான் லென்ஸ் மூலமாக போகஸ் செய்வதும், காட்சிகளை பதிவு செய்வதற்கு வியு ஃபைன்டர் மூலமாகவே தான் பார்த்து காமிரா இயக்கப்படுகிறது.

இன்று பெரும்பான்மையான நவீன காமிராக்கள் ரிப்லக்ஸ் வியுஃபைன்டர் தான் பயன்படுத்தப்படுகிறது.

காமிராவில் உள்ள சட்டர் கண்ணாடித் தன்மையுடன் 45 டிகிரி ஒளி புகும் பாதையில் பிலிம்மிற்கு முன் வைக்கப்பட்டு அதிலிருந்து நிறப்பிரிகை மூலமாக வியுஃபைன்டரில் காட்சிகள் தெரிய வருகிறது.

டிரைவ் (இயக்கம்):

காமிரா மோட்டார் 12 வோல்ட்டிலிருந்து 24 வோல்ட் மின் சக்தியில் இயக்கப்படுகிறது.

மெட்டி பாக்ஸ் (Matte Box)

லென்ஸ் முன்னர் பில்டர் பொருத்துவதற்கும், லென்ஸ் மீது ஒளிச்சிதறல் ஏற்படாமல் தடுக்கவும் மெட்டி பாக்ஸ் பயன்படுத்தப்படுகிறது.

காமிராவும் திரையிடப்படும் முறைகளும்:

இன்று 35 எம் எம், சூப்பர் 35 எம் எம், 16 எம் எம், சூப்பர் 16, சினிமாஸ்கோப், 70 எம் எம் ஆகிய முறைகளில் ஒளிப்பதிவு செய்யப்படுகிறது.

35 எம் எம் 
35 எம் எம் காமிராவும், 35 எம் எம் பிலிம் பயன்படுத்தப்படுகிறது.
16 எம் எம் 
16 எம் எம் காமிராவும் 16 எம் எம் பிலிம் பயன்படுத்தப்படுகிறது
சினிமாஸ்கோப் (அகன்ற திரை)

அகன்ற திரை முறையான சினிமாஸ்கோப்பிற்கு 35 எம் எம் காமிராவும், 35 எம் எம் பிலிம் பயன்படுத்தப்படுகிறது. கூடவே அகன்றதிரை முறைக்கு அனமார்ஃபிக் லென்ஸ் பயன்படுத்தப்படுகிறது. அனமார்ஃபிக் லென்ஸ் அகன்ற பார்வையை 35 எம்எம் பிலிம்மில் சுருக்கி பதிவு செய்யும் தன்மைக் கொண்டது.

தியேட்டரில் அனமார்ஃபிக் லென்ஸ் பொருத்தப்பட்ட திரையிடும் கருவியில் திரையிடும்போது சுருக்கப்பட்ட காட்சி அகன்ற பார்வை கொண்ட காட்சியாக விரிந்து திரை முழுவதும் ஆக்கிரமித்து திரையிடப்படுகிறது.

70 எம் எம் 
இந்த அகன்ற திரைவடிவ முறைக்கு 65 எம் எம் காமிராவும் 65 எம் எம் பிலிமும் பயன்படுத்தப்படுகிறது.

சூப்பர் 16 
சூப்பர் 16 வகை காமிராக்களில் 16 எம் எம் பிலிமே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நாம் அகன்ற திரை வடிவில் திரையிடுதல் முறைக்கு ஏற்றவாறு காமிராவில் பிலிம் கேட்டில் சில மாறுதல் செய்யப்படுகிறது. இம்முறையில் 16 எம்எம் முறையில் பதிவு செய்யப்பட்டாலும் லாப்பில் அகன்ற வடிவில் பிரிண்டிங் செய்யப்படும்

சூப்பர் 35 எம் எம் 
இன்று பல ஒளிப்பதிவாளர்கள் மிகவும் விரும்பும் ஒளிப்பதிவு முறை சூப்பர் 35 எம் எம் அகன்ற திரை வடிவத்திற்கு சினிமாஸ்கோப் போல அனமார்ஃபிக் லென்ஸ் பயன்படுத்தப்பட வேண்டியதில்லை. சூப்பர் 35 எம் எம் முறையில் குறுகிய அறைகளில் கூட சிறப்பாக இமேஜ் கம்போஸ் செய்ய முடியும். ஸ்பேரிகல் லென்ஸ் பயன்படுத்தப்படுவது,
சூப்பர் 35 எம் எம் காமிராவில் அகன்ற வடிவத்திற்கு ஏற்ப பிலிம் கேட் மாறுதல் செய்யப்பட்டு 35 எம் எம் பிலிம், பதிவு செய்யப்பட்ட பின் டிஜிட்டல் நிறத் தேர்வு முறையில் அகன்ற வடிவத்திற்கு பிரிண்ட் செய்யும் நவீன முறை இன்று பலரால் பின்பற்றப்படுகிறது.

இந்தியாவில் பிரபலமாக நடைமுறையில் இருக்கும் காமிராக்கள் 
ஆரிஃப்பலக்ஸ் (ARRIFlex) ஜெர்மன் நாட்டுத் தயாரிப்பு

35 எம்எம் காமிராக்கள்:

ஆரி (ARRI) III 
ஆரி (ARRI) BL4
ஆரி (ARRI) 435
ஆரி (ARRI) 235
ஆரி (ARRI) 535

16 எம் எம் காமிராக்கள்:

ஆரி (ARRI) 16 SR 2
ஆரி (ARRI) 16 SR3
ஆரி (ARRI) 416

இப்பகுதி இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படும்.

தொடர்ந்து பயில்வோம்...நேரடி வகுப்புகள் பற்றி அறிய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 9840698236, 989442268 


யாவரும் கேளிர் - பகுதி - 11 -- (ரவிவர்மன், ஒளிப்பதிவாளர்)

மழைக்காலம் என்பதால் வெயில் குறைவு.சாமிஅய்யா கொண்டுவந்த ஒரு வண்டி ஆத்துமணலை வருத்துக்கொண்டுக் இருக்கிறாள் சாரதா. மஞ்சளும், காஞ்சமிளகாயும், கல் உப்பும் சேர்த்து கருங்கல் அம்மியில் அரைத்து வெண்கல காப்புக்கட்டிய மரக்காப்படியில் வைத்து இருக்கிறாள்.

செல்லப்பாவை குளிப்பாட்டி கோவணம் உடுத்தி வீட்டின் முன்வாசலில் வறுத்து கொட்டி இருக்கும் மணல் நடுவில் செல்லப்பாவை நிறுத்திய சாமிஅய்யா ஊர்மக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் செல்லப்பா பயத்துடன் சுடுமணலில் நிற்க சாமிஅய்யா பச்சை மூங்கிலை கத்திபோல் சீவி தன் கையில் ஒரு முறை கிழித்துப்பார்க்கிறான். அவன் கைதோல் கிழிக்கப்பட்டு ரத்தம் எட்டிப்பார்க்க அதை உறுதி செய்தவுடன், சாமிஅய்யா செல்லப்பாவின் கைகளை இறுக்ககட்டி அவனை அசையாமல் நிற்கவைக்க அவனும் வறுத்த மணல் சூடு பொறுக்கமுடியாமல் நிற்க்கும் வேளையில் சாமிஅய்யா அந்த மணல் சூடு ஆறுமுன் முடித்துவிடவெண்டும் என்று ஊர்மக்கள் கூர்ந்து கவனிக்கும் வேளையில் சாரதா செல்லப்பாவின் வாயில் ரஸ்தாளி வாழைப்பழத்தை திணித்துவிட்டாள், கண் இமைக்கும் நேரத்தில் எல்லாம் முடிந்துவிட்டது. செல்லப்பாவின் அழுகை சத்தம் மைக் வைத்து மக்களை ஏமாற்ற தொண்டை தண்ணீர் வற்றும் அளவுக்கும், அளவுக்கு அதிகமாக பொய்வாக்குறுதிகளை கக்கும் வேட்பாளர்கள் போல், செல்லப்பா கத்திக்கொண்டு இருக்கும் வேளையில் அவன் கைகளின் கட்டுகள் அவிழ்க்கப்பட்டு அவனின் உடல் முழுவதும் அந்த மூங்கில் கத்தியால் கிழிக்கப்பட்டு ரத்தம், நூரூ மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஓடி நின்றால் வேர்வை உடம்பில் மழைத்துளி போல் சொட்டுமே, அதேபோல் செல்லப்பாவின் உடம்பெல்லாம் ரத்தம் சொட்டுகிறது, அவ்வேளையில் வாயில் தினித்த வாழைப்பழத்தையும் மீறி அவன் வலி பொறுக்கமுடியாமல் அல்றிக்கொண்டு இருக்கும் போதே அவனை சுடும் மணலில் போட்டு புரட்டுகிறான் சாமிஅய்யா.

கிழிந்த பகுதிக்குள் சுடும் மணல் பட்டவுடன் மேலும் செல்லப்பா துடிக்க அதைப்பொருட்படுத்தாமல் அவனை மணலில் இருந்து தூக்கி நிறுத்தி “ ஏய் அரைச்சுவச்ச மஞ்சளை எடுத்துட்டு வாடி” என்று கூற, அவள் “இதோ” என்று மரைக்காப்படியில் உப்பு, மிளகாய் சேர்த்து அரைத்து வைத்திருந்த மஞ்சளை சாரதா, செல்லப்பாவிடம் கொடுக்க அதை வாங்கி ஏற்கனவே மூங்கில் கத்தியால் கிழிக்கப்பட்டு அவனை சுடும் மணலில் வறுத்து எடுத்து அவன் நின்ற போது அவன் உடம்பு நாட்டுத்துப்பாக்கியால் சுடப்பட்டு தப்பித்த சிட்டுகுருவிபோல் துடித்துக்கொண்டு இருக்கும்போதே சாமிஅய்யா கூடி இருந்த கூட்டத்தைப்பார்த்து “ ஏலேய் இரண்டுபேர் வாங்கடா” என்றான்.

கூட்டத்தில் இருந்து இருவர் ஒடி வந்து செல்லப்பாவின் கைகளையும், கால்களையும் இறுக்கி பிடித்துக்கொள்ள சாமிஅய்யா செல்லப்பாவின் உடம்பு முழுவதும் தன் கையில் வைத்திருந்த அரைத்த மஞ்சளை தடவ, மஞ்சலும், காய்ந்த மிளகாயும், உப்பும் அவன் உடம்பில் உள்ள புண்ணில் பட்டவுடன் கரும்பு தோட்டத்தில் தீப்பற்றி எரிவது போல் அவன் உடம்பில் வலிபாடாய்படுத்தியதில் செல்லப்பாவின் வாயில் இருந்த வாழைப்பழம் வெளியே வந்துவிழ, அவன் அலறும் சத்தம் கேட்டு ஊர்மக்கள் அனைவரும் கூடிக்கொண்டிருக்கும் வேளையில் ஸ்டீபன் வாத்தியாரும் அங்கே வந்துவிட்டார். அவரிடம் கொளந்தசாமி “வாத்தியாரே நீங்களாவது சொல்லக்கூடாதா? ஏன் சாமிஅய்யா இந்தப்பாடுபடுத்துறான், அந்த பச்சபுள்ளைய? “ அதைக்கேட்ட வாத்தியார் கொளந்தசாமியிடம் அவர் நல்லதுதான் பண்ணிக்கிட்டு இருக்கார். நாமதான் நாகரீகமா மாறணும்ன்னு நெனச்சு நல்ல விஷயங்களை எல்லாம் தொறத்திக்கிட்டு இருக்கோம் இந்த மாதிரி விஷயம் உங்களுக்கு புதுசா இருக்கும், ஆனா ?... 

நரிக்குறவர் இனத்தில் இன்றும் ஒர் வழக்கம் உண்டு. நிறைமாத கர்ப்பிணியை யார் துணையுமின்றி காட்டில் அவளுக்கென்று அமைக்கப்பட்ட குடிசைக்கு அனுப்பிவிடுவார்கள், அவளே தனக்கு தேவையான பணிகளை செய்து தன்னைத்தானே பார்த்துக்கொண்டும், சமைத்து சாப்பிட்டுக்கொண்டும், தனது பிரசவவலியை அடக்கி மனதைரியத்துடன் தானே பிரசவித்ததும் தனது குழந்தையுடன் சென்று தனது கூட்டத்தினருடன் வந்தினைந்து மகிழும் அவளின் மனோ பலத்தை என்னவென்று சொல்வது. பிரசவசக்காலத்தில் தாயும் குழந்தையும் இறந்தாலும் அவளின் உறவினர்கள் இறந்தபின்புதான் சென்று பார்ப்பார்கள்.

ஆப்பிரிக்க காட்டுல வசிக்கிற பழங்குடியினர் இன்றும் தங்களுக்கு குழந்தை பிறந்த சில நிமிடங்களில் குழந்தையை மரப்பானையில் ஐஸ்சை நிறைய நிறப்பி அதனுள் குழந்தையை தலைகீழாக பிடித்து தலையை மட்டும் ஐஸ் தண்ணீருக்குள் மூழ்கடிக்க சில நிமிடங்கள் கழித்து வெளியே எடுப்பார்கள். அதிலிருந்து பிழைத்த குழந்தைக்கு நோய் எதிர்ப்பு ச்க்தி அதிகமாம். அந்த மாதிரி செய்யும் போது சில குழந்தைகள் இறப்பதும் உண்டாம்.

அந்த கால போர் வீரர்கள் இந்த வைத்தியத்திற்கு உட்பட்டவர்கள் என்று வரலாறு சொல்கிறது. தமிழ் இனத்துக்காக மட்டுமல்ல நம்தமிழ் மொழிக்காகவும் தான் அந்த போராட்டம் என்பது நமக்கு தற்போது அறிவது கடினம். நம்மைவிட்டு வெகுதூரம் சென்றுவிட்டது தூயதமிழ். அதாவது யாழ்ப்பாணம் வழியாக கனடாவுக்கும் மற்றும் பல நாடுகளுக்கும் சென்று கொண்டு இருக்கிறது. (இதைப்பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் விளாவரியாக பேசுவோம்).

புல், பூண்டுகள் கூட அழிந்துபோனால் மீண்டும் முளைத்துவிடுகிறபோது, ஒர் இனமா, அதுவும் நம் தமிழினமா அழிந்துவிடப்போகிறது? வெட்ட, வெட்ட முளைப்பவர்கள் வீரர்கள் அல்லவா! போரும், காதலும் தமிழனின் வாழ்வியல் விழுமியங்கள். போர் இலக்கணங்களை அறியாதவன் தமிழனல்ல என்று புறநானூறு சொல்கிறது. தமிழினத்தை காக்க போரிடுவது குற்றமா? ஈழத்தமிழினத்தை காக்க போரிடும் தமிழினத்தலைவன் தனது இளமை பருவத்தில் மஞ்சள்பத்து வைத்தியத்திற்கு உற்பட்டவர்தான் என்று சொல்ல கேள்வி. இதைப்பற்றி விளக்கமாக பிறகு பார்ப்போம்.....

“களம் கழுமிய படைஇரிய 
உளம் கிழித்தவேல் பறித்தோச்சின்னு “ என 
தமிழின வீரத்தை புறநானூறு சொல்கிறது.


பத்துவயதுக்கு மேலான ஆண்பிள்ளைகளுக்கு அந்தகாலத்தில் இதுபோல் செய்வது வழக்கமாம். “ஆமாம் கொளந்தசாமி ஏன் இந்த மாதிரி சாமிஅய்யா செல்லப்பாவுக்கு செய்கிறார்ன்னு தெரியுமா? “ தெரியாது வாத்தியாரே. “அதாவது இதுமாதிரி செய்த பிறகு உடல் உறுதியாகும், உடம்புல கத்தியால குத்துனாக்கூட கத்தி உடையுமாம். அதையும் மீறி காயப்பட்டா உடனே ஆறி அந்த காயப்பட்ட இடத்தில சுவடே அறியாதாம். எந்த பூச்சிகடிச்சாலும் விஷம் ஏறாது.”அப்படியா சார் “ நான் என்ன கதையா சொல்றேன்” என்றார் வாத்தியார். இருவரும் சிரிக்க, செல்லப்பாவை வேப்ப இலையையும் அதில் கொஞ்சம் புளிய இலையையும் கலந்து நாலு கையளவு ஆலம்பட்டையை அரைத்து தண்ணீரில் கொதிக்க வைத்து இளம் சூடாகிய பிறகு அந்த தண்ணீரை ஊற்றி சாரதா செல்லப்பாவை குளிப்பாட்ட அவனுக்கும் இதமாக இருக்கிறது. அவனுக்கு உடல் மட்டுமல்ல மனதும் உறுதியாகிறது. குளிப்பாட்டியபின் செல்லப்பாவின் தலையை தன்சேலைமுந்தானையால் துடைத்துக்கொண்டு இருக்கும் போது செல்லப்பாவிடம் சாரதா இதுயெல்லாம் ஒன் உடம்புக்கு நல்லது நீ பட்டனத்துலா படிக்கும் போது கண்டகண்ட தண்ணீயில குளிச்சு கண்டத தின்னாலும் எந்த வியாதியும் வராது... சரியாப்பா... 

சரிம்மா... என்றான் செல்லப்பா.

Sunday, April 26, 2009

ஜி.என்.பாலசுப்ரமணியம் (G.N.B) - லலிதா ராம்


செப்டம்பர் 24-ஆம் தேதி, கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த இசைக் கருத்தரங்கில் ஜி.என்.பி-யைப் பற்றி பேச ஒரு வாய்ப்புக் கிட்டியது. அக்கருத்தரங்கில் வெளியான ஆய்வுக் கோவையில் இக்கட்டுரை பதிப்பிக்கப்பட்டுள்ளது. டபுள் லைன் ஸ்பேசிங்கில் ஐந்து பக்கத்திற்கு மிகாமல் கட்டுரை இருக்க வேண்டியிருந்த்தால் பல விஷயங்களை மேலோட்டமாகவே இக்கட்டுரை தொடுகிறது. By no standards this could be considered a research article. Just an attempt to show the tip of the ice berg.

கர்நாடக இசைக் கச்சேரி முறையை தமிழுக்கு ஒப்பிட்டோமெனில், அரியக்குடி இராமானுஜ ஐயங்காரின் கச்சேரிகள் தொல்காப்பியத்திற்கிணையாகும். தொல்காப்பியம் படித்தவர் பலரிருப்பினும், காலத்தை கடந்து நிற்கும் வெண்பாக்களையும் விருத்தங்களையும் அகவல்களையும் படைத்திருப்பவர் சிலரே. அதே போல், அரியக்குடி இராமானுஜர் ஐயங்கார் அமைத்துக் கொடுத்த கச்சேரி முறையை பின்பற்றியவர் பலரெனினும், இசையுலகில் என்றுமழியாச் சுவடை விட்டுச் சென்றவர்கள் மிகச் சிலரே. அவர்களுள் முதன்மையாக விளங்குபவர் 'ஜி.என்.பி' என்று பரவலாய் அழைக்கப்பெற்ற கூடலூர் நாராயணசாமி பாலசுப்ரமணியம்.

ஜி.என்.பி என்னும் இசையுலக இளவரசரின் தோற்றம், ஜி.வி.நாராயணசாமி ஐயர் விசாலம் அம்மாள் தம்பதியினரின் வீட்டில், 1910-ஆம் வருடம் ஜூன் 6-ஆம் நாள் நிகழ்ந்தது. பார்த்தசாரதி சங்கீத சபையின் காரியதரிசியாகவும் ம்யூசிக் அகாடமியின் 'experts commitee' உறுப்பினராகவும் பொறுப்பு வகித்த நாராயணசாமி ஐயரின் வீட்டில், கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயர், பல்லடம் சஞ்சீவ ராவ், பூச்சி ஸ்ர்நிவாச ஐயங்கார் போன்ற சங்கீத ஜாம்பவான்களின் கூட்டம் எப்பொழுதும் குழுமியிருக்கும். இச்சூழலில் வளர்ந்த ஜி.என்.பி-யின் மனம் சங்கீதத்தின்பால் ஈர்க்கப்பட்டதில் வியப்பொன்றுமில்லை

1957-ஆம் வருடம் வெளியான 'My First Concert' என்ற ஜி.என்.பி-யின் கட்டுரையில் (தமிழாக்கம் பின்வருமாறு), " நான் பிறந்த நாள் முதல் எனைச் சுற்றியிருந்த சூழல் சங்கீத மயமாகவே இருந்தது. இதனால் எனது சங்கீத ஞானமும் அதன் பால் இருந்த ஈர்ப்பும் கிளைவிட்டு நாளுக்கு நாள் வளர்ந்தபடியிருந்தது. என் வீட்டிலிருந்தபடியே அற்புதமான சங்கீதத்தைக் கேட்கக்கூடிய வாய்ப்பு எனக்கு அமைந்திருந்தது. நல்ல சங்கீதத்தில் ஊறியதன் பயனாய் சஹானா, செஞ்சுருட்டி, பேகடா, சாவேரி போன்ற இராகங்களை பிழையின்றி பாட முடிந்தது. ஒரு குருவிடம் சென்று முறையாகப் பயிலாவிடினும் எனக்கு ஸ்வர ஞானம் சிறு வயதிலேயே கைக்கூடியது. இதற்குக் காரணம் பெரியோர்களின் ஆசியே என்பது என் கருத்து.' என்கிறார்.

ஜி.வி.நாராயணசாமி ஐயர் தனது மகன் வழக்கறிஞராவதையே விரும்பினாரெனினும் ஜி.என்.பி-யிடமிருந்த சங்கீத தாகத்தை உணர்ந்தவராய் சங்கீத சிக்ஷையுமளித்தார். அந்நிலையில், அவர் குடியியிருந்த வீட்டில் இன்னொரு பகுதியில் வயலின் வித்வான் மதுரை சுப்ரமணிய ஐயர் குடியேர, அவரிடமும் சில காலம் ஜி.என்.பி சங்கீதம் பயின்றார்.

1928-ஆம் வருடம், மயிலை கபாலீசுவரர் கோயில் வசந்த உத்சவத்தில் ஏற்பாடாகியிருந்த முசிறி சுப்ரமண்ய ஐயரின் கச்சேரி தவிர்க்க முடியாத காரணங்களால் ரத்தாகிவிட, அக்காலத்தில் இசைத் தோண்டில் ஆழ்திருந்த ஏ.கே.இராமசந்திர ஐயரும் மதுரை சுப்ரமணிய ஐயரும், நாராயணசாமி ஐயரிடம் ஜி.என்.பி-யின் கச்சேரிக்கு அனுமதியளிக்க வேண்டினர். நாராயணசாமி ஐயர் முதலில் சிறிது தயங்கினாலும், பின்பு அனுமதியளித்தார். சங்கீத வித்வானாவதையே இலட்சியமாய் கொண்டிருந்த ஜி.என்.பி-க்கு இவ்வாய்ப்பு மகிழ்வளித்தாலும், முசிறி சுப்ரமணிய ஐயர் போன்ற ஜாம்பவானின் இடத்தை தன்னால் நிரப்ப முடியமா, என்ற அச்சமும் கூடவேயிருந்தது. ஜி.என்.பி, மானசீக குருவாக உருவகித்திருந்த அரியக்குடி இராமனுஜ ஐயங்காரின் இசையுலகப் பயணம், திருப்பரங்குன்றத்தில் புதுக்கோட்டை தக்ஷிணாமூர்த்தி பிள்ளை ஏற்பாடு செய்திருந்த மதுரை புஷ்பவனத்தின் கச்சேரி ரத்தான பொழுது, அங்கிருந்த இளைஞரான அரியக்குடி இராமானுஜ ஐயங்கார் அவ்வாய்ப்பைப் பயன்படுத்தி புகழின் உச்சியை அடைய வைத்த நிகழ்வை, மதுரை சுப்ரமண்ய ஐயர் எடுத்துரைத்தவுடன், ஜி.என்.பி-யின் தயக்கம் தளர்ந்து கச்சேரிக்குத் தயாரானார். அக்கச்சேரியைக் கேட்ட கே.எஸ்.முத்துராமன் தனது புத்தகத்தில், “ஜி.என்.பி பாடிய பந்துவராளியும், பைரவியும், அடாணாவும் ஒரு மஹாவித்வானின் இசை சாம்ராஜ்யத்திற்கு அடிக்கல் நாட்டின", என்கிறார்.

ஜி.என்.பி என்று நினைத்ததும் மனதில் முதலில் தோன்றுவது அவரின் கந்தர்வ குரல்தான். ஆழ்ந்த சங்கீத ஞானமும், அதீத கற்பனையும், அக்கற்பனையில் தோன்றுவதையெல்லாம் வெளிக்கொணரக் கூடிய அதிசயக் குரலும் கொண்ட அபூர்வ கலவையே ஜி.என்.பி. இக்கூற்றிற்கு அவர்தன் இளம் வயதில் கொடுத்திருக்கும் 'வாசுதேவயனி' கிராம்போன் ரிக்கார்டு ஒன்றே சான்று. வெளியாகி பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இன்றும் மக்களிடையில் பிரபலாமாக இருக்கும் இப்பாடலை வர்ணிக்க வார்த்தையில்லை. கல்யாணி இராகம் ஒரு பிரவாகம் போன்றது. அதன் முழு ஸ்வரூபமும் பல மணி நேரம் பாடினால் கூட முழுமையாய்க் கொண்டு வருவது துர்லபம். பத்து நிமிடத்திற்குள், ஒரு மின்னல் வேக ஆலாபனை, மத்யம கால கீர்த்தனை, ஸ்வர ப்ரஸ்தாரம் எல்லாம் பாடி, கேட்பவர் மனதில் நிறைவை ஏற்படுத்தியிருக்கும் ஜி.என்.பி-யின் அந்த ஒரு வெளியீடே அவரின் இசையாற்றலுக்கு தக்கச் சான்று.

இன்று கேட்கக் கிடைக்கும் ஜி.என்.பி-யின் கச்சேரிகளை பலமுறை அலுக்காமல் கேட்டிருப்பவன் என்னும் முறையில், அவரது கச்சேரியைப் பற்றிய சில குறிப்புகள் பின் வருமாறு. கச்சேரிகளில் ‘களை கட்டுதல்’ என்றொரு பதம் உண்டு. அதை விளக்க முயல்வது வீண் முயற்சி. அதன் பொருள் உணர ஜி.என்.பி-யின் கச்சேரியின் முதல் உருப்படியைக் கேட்டால் போதும். அவரது கச்சேரிகளில் இன்று நமக்கு அதிகம் கேட்கக் கிடைப்பது அவரது கடைசி 10 வருட வாழ்வில் பாடிய கச்சேரிகளே. அவற்றை மட்டும் ஆராய்ந்தால், விறுவிறுப்பான வர்ணம் அல்லது ‘யோசனா’, ‘தெலிசி ராம’ போன்ற மின்னல் வேகக் கீர்த்தனை அல்லது ‘வாதாபி கணபதிம்’ போன்ற மத்யம காலக் கீர்த்தனை, அல்லது சஹானா போன்ற ரக்தி ராகத்தில் அமைந்த ‘ஈ வசுதா நீவண்டி’ போன்ற கீர்த்தனை, என்று பல வகைகளில் கச்சேரி தொடங்கும். எப்படித் தொடங்கினும் கச்சேரியைக் களை கட்டும்படிச் செய்வது அவரது தனிச் சிறப்பாகும்.

அரியக்குடி இராமனுஜ ஐயங்காரின் பத்ததியின் படி மத்யம காலக் கீர்த்தனங்களே ஜி.என்.பி-யின் கச்சேரிகளில் நிறைந்திருக்கும். சவுக்க கால கீர்த்தனங்களும் கச்சேரியின் விறுவிறுப்பை குறைத்திடா வண்ணம் இடம் பெறும். ஜி.என்பி-யின் கற்பனையைப் பறைசாற்றும் வகையில் ஒரே இராகத்தின் ஆலாபனை கச்சேரிக்கு கச்சேரி அல்லது அவர் பாடும் கீர்த்தனத்திற்குக் கீர்த்தனம் மாறுபடும். அவரது ஆலாபனைகள் இரசிகரைக் குழப்பாமல், முதல் பிடியிலேயே இராக ஸ்வரூபத்தை தெளிவாகக் காட்டிவிடும். பல பிரபலமான இராகங்களில் புதிதாய் சில பிரயோகங்கள் பாடியிருப்பதும் (உ.தா கல்யாணி, காம்போஜி ராக ஆலாபனைகள்), அந்நாளில் புழக்கத்திலில்லா இராகங்களை புழக்கத்திற்கு கொண்டு வந்திருப்பதும் (உ.தா: மாளவி, செஞ்சு காம்போஜி, காபி நாராயணி, டக்கா, தீபகம்) ஜி.என்.பி-யின் பல இசைத் தொண்டுகளுள் குறிப்பிடத்தக்கவை. வாழ்நாள் முழுவதும் தன்னையொரு மாணவனாகவே கருதிக் கொண்ட ஜி.என்.பி, தனது கடைசி காலம் வரை புதிய கீர்த்தனங்கள் கற்றபடியிருந்தார். 'சோபில்லு', 'சரஸ சாம தான', 'மறுகேலரா', 'தாமதமேன்', 'ப்ரோசேவா', 'மா ரமணன்' போன்ற பாடல்களைப் பிரபலப் படுத்தியதுடன், பல கீர்த்தனங்களில் நிரவல், கல்பனை ஸ்வரம் பாடுவதிலும் பல புதுமைகள் புரிந்துள்ளார். உதாரணமாக, ‘ ஸ்ர் சுப்ரமண்யாய நமஸ்தே' பாடலில் பெரும்பான்மையானவர்கள் நிரவலுக்கு எடுத்துக் கொள்ளும் இடம் 'வாசவாதி சகல தேவ' என்பதாகும். ஜி.என்.பி-யின் நுண்ணறிவு 'தாபத்ரய ஹரண' என்னும் இடத்தில் 'தா பா' என்னும் ஸ்வராக்ஷரப் பிரயோகம் ஒளிந்திருப்பதைவுணர்ந்திருக்கிறது. இதே போல 'மீனாக்ஷி மேமுதம்', 'நிதி சால சுகமா' போன்ற பாடல் நிரவல்களிலும் ஜி.என்.பி-யின் கற்பனைத் திறன் உள்ளங்கை நெல்லிக்கனி. கல்பனை ஸ்வரங்கள் பாட அவர் தேர்ந்தெடுக்கும் இடத்தின் பொருத்தம் பலரின் பாராட்டைப் பெற்றவொன்று. ஜி.என்.பி-யின் சங்கீதத்தில் லயத்தில் உறுதியான பிடியிருப்பினும், ஸ்வரம் பாடும் பொழுது சர்வ லகு முறையையே பின்பற்றப் பட்டு இராக பாவம் கெடா வண்ணம் கவனமாகக் கையாளப்பட்டிருக்கும்.

ஜி.என்.பி-யின் இசையுலகிற்குப் பல புதிய பாதைகளை அமைத்துக் கொடுத்திருப்பினும், அவற்றுள் குறிப்பிடத்தக்கது 'ஸ்ருதி பேதம்' அல்லது 'கிரஹ பேதம்' ஆகும். நமது நாட்டின் இசை வரலாற்றைப் பார்க்கும் பொழுது ஒரு தாய் இராகத்தின் கிரஹ பேதத்திலிருந்து பிறந்தவையே பல இராகங்கள் என்று இலக்கியங்களின் மூலம் தெரிய வருகிறது. காலப் போக்கில் வழக்கொழிந்து போன இம்முறையைக் கச்சேரியில் ஜி.என்.பி பிரயோகித்த பொழுது பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அதனைத் தொடர்ந்து, ஜி.என்.பி-யின் செயலில் தகுந்த நியாயம் இருப்பதாக முத்தையா பாகவதர் தலைமையில் குழுமியிருந்த அறிஞர் குழு முடிவு கூறியது. ஓர் ராகத்தில் 'ஸ்ருதி பேதம்' செய்யும் பொழுது அதுவரை உருவாக்கிய பாவம் கெடாமல் இருப்பது அவசியம். இக்கம்பி மேல் நடக்கும் வித்தையில் தேர்ச்சி பெற்ற முதல் கலைஞர் ஜி.என்.பி எனலாம்.

ஜி.என்.பி-யின் கச்சேரிகளில் பிரதான உருப்படியாக 'ராகம் தானம் பல்லவி' பெரும்பாலும் இடம் பெறும். பெரும்பாலும் இப்பகுதிக்கு முன் 'நெனருஞ்சினானு', 'விடஜால', 'ராமசந்திரம் பாவயாமி' போன்ற அதி துரித கீர்த்தனை இடம் பெறும். கச்சேரி களை கட்டி, குரலும் நல்ல பதத்தை அடைந்திருக்கும் நிலையில், ஜி.என்.பி பல பகுதிகளாய் பிரித்துக் கொண்டு ஒரு இராகத்தை ஆலாபனம் செய்வது வழக்கம்.

ஓவியர், தான் வரையப் போகும் விஷயத்தை சில கீற்றுகளாய் முதலில் நிரப்புவது போல, விஸ்தரிக்கப்படும் இராகத்தின் ஸ்வரூபம் சில கீற்றுகளில் காட்டப்படும். இரண்டாம் கட்ட ஆலாபனையில் மந்திர ஸ்தாயியில் உள்ள பிரயோகங்களில் கவனம் செலுத்தப்பட்ட, நாதஸ்வரப் பாணியில் பல அழகிய ஸ்வரக் கோர்வைகள் கோக்கப்படும். மூன்றாம் கட்டமாக தார ஸ்தாயிப் பிரயோகங்கள் இடம் பெறும். அவரது சங்கீத வாழ்வின் உச்சியில் இருந்த சமயத்தில் தார ஸ்தாயி தைவதம், நிஷாதம் போன்ற எட்டாக் கனிகளைக்கூட எட்டிப்பிடிக்கும் அற்புதக் குரலாய் அவர் குரல் விளங்கியதென்று அவர் கச்சேரிகளைக் கேட்ட பலர் கூறுகின்றனர். தார ஸ்தாயி ப்ரயோகங்களைத் தொடர்ந்து குரலை முதலில் பம்பரமாய் சுழலவிட்டு, அதன் பின் ராட்டினமாய் மூன்று ஸ்தாயிகளிலும் சுழலவிட்டு, கடைசியில் ஓர் சூறாவளி போல் ராகத்தின் பல இடங்களில் சஞ்சரித்து கேட்பவர் மனதில், அந்த ராகத்தில் பாட இனி ஒன்றுமில்லை என்னும் நிறைவு ஏற்படும்படியான சூழலை உருவாக்கிவிடும். குறைந்த பட்சம் 40 நிமிட ஆலாபனைக்குப் பின் விஸ்தாரமான தானமும் அதன் பின் பல்லவியும் பாடுவார். பல்லவிக்கு எடுத்துக் கொள்ளும் இராகங்களில் கல்யாணி, தோடி, காம்போஜி, பைரவி போன்ற கன இராகங்கள், தேவ மனோஹரி, சஹானா, ஆந்தோளிகா போன்ற அதிகம் பாடப்படாத இராகங்கள் என்று பல வகைகளில் பாடியிருக்கிறார். பல்லவியமைப்பும் 2 களை, 4 களை போன்ற கடினமான அமைப்பில் பாடியிருப்பினும் பல ஒரு களை பல்லவிகளும் பாடியிருக்கிறார். ஆலாபனை, தானம், ஸ்வரப்ரஸ்தாரம் அனைத்துமே இராக ஸ்வரூபத்தை வெளிக் கொணரும் பொருட்டேயிருக்கும். பல்லவிக்கு ஸ்வரம் பாடும்பொழுது வரும் இராகமாலிகை ஸ்வரங்களுக்கு இரசிகர்களிடையில் அதீத வரவேற்பிருந்தது.

ஜி.என்.பி கச்சேரிகளில், பல்லவியைத் தொடர்ந்து வரும் பாடல்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பிருந்தது. பல இராகங்களில் அழகிய படப்பிடிப்பாய் விளங்கும் விருத்தங்கள், ஸ்லோகங்கள் தவிர அவரே மெட்டமைத்த 'திக்குத் தெரியாத காட்டில்', 'சொன்னதைச் செய்திட சாகசமா', போன்ற துக்கடாக்கள் இடம் பெறும், கச்சேரி முடியும் பொழுது பாமரரும் பண்டிதரும் மன நிறைவுடன் செல்வதென்பதுறுதி.

சாரீர அமைப்பைப் போலவே சரீர அமைப்பும் பெற்றிருந்த ஜி.என்.பி, திரைப்படத்துறையில் 1934 முதல் 1937 வரை 'சகுந்தலை', 'ருக்மாங்கதன்', 'பாமா விஜயம்', 'உதயணன் வாசவதத்தா' போன்ற திரைப்படங்களில் நடித்தும் பாடியும் பெரும் பிராபல்யம் அடைந்தார். இவரது வாழ்வில் பல கௌரவங்களைப் பெற்றிருப்பினும் 1958-ஆம் வருடம் சங்கீத கலாநிதி பட்டத்தை இவருக்கு வழங்கி மியூசிக் அகாடெமி பெருமை தேடிக் கொண்டது. வாகேயக்காரராய் ஜி.என்.பி இசைக்கு ஆற்றிய தொண்டு அளப்பெரியதாகும். ‘சிவ சக்தி’, ‘அம்ருத பேஹாக்’ போன்ற அரிய இராகங்களிலிம், பிரபலமான இராகங்களில் சில அரிய பிரயோகங்கள் உபயோகித்தும், மிஸ்ர ஜம்பை போன்ற சுட்பமான தாள அமைப்பிலும் அவர் அமைத்திருக்கும் கீர்த்தனங்கள் இன்று பரவலாய் பாடப்படுகின்றன. ஜி.என்.பி, பாடகராக மட்டுமல்லாமல் சங்கீத ஆச்சாரியராகவும் மிகவும் பிரபலமாக இருந்தவராவார். அவரது பாணியை நிலை நிறுத்தும் வண்ணம் எம்.எல்.வி, திருச்சூர் இராமசந்திரன், தஞ்சாவூர் எஸ், கல்யாணராமன் போன்ற சிஷ்யர்களை இசையுலகிற்குத் தந்த பெருமையும் ஜி.என்.பி-யைச் சேரும். பாடகராய், வாகேயக்காரராய், குருவாய், நடிகராய் பல சாதனை புரிந்த ஜி.என்.பி-யின் வாழ்க்கை 55 வருட காலம் மட்டுமேயிருந்தது இசையுலகின் துர்பாக்யம் ஆகும்.

தொடர்ந்து இசைப்போம்...


மேலும் படிக்க பாருங்கள்: www.thamizhstudio.com



1.வில்லுப்பாட்டு - புதிய பாரதி: 13-04-09: 10: 30 PM



போர் மனிதனை விலங்காக்குகிறது. கலை மனிதனின் மனதை லேசாக்கி, கருணையையும், கனிவையும் புகுத்தி தெய்வமாக்குகிறது. கால் போக்கில் நடந்து, மனம் போன போக்கில் இயங்கிய ஆதிகால மனிதன், வேட்டைக்கருவியாக 'வில்'லை இனங்கண்ட காலத்திலேயே இசைக்கருவியாகவும் அது பரிணமித்து விட்டது. பசியாறிய களைப்பு நீங்க, வில்லை திருப்பி வைத்து நாணால் தட்டி கானகத்தை கலங்க வைத்த ஆதி மனிதனே முதல் வில்லிசைக்காரன்.

அதன் பின் போர்க்கருவியாக 'வில்' பரிமாணம் பெற்றபோது, வில்லடியும் களம் மாறியது. வில்லிசை, வெற்றியாளனின் குதுகலமாக அவதரித்தது. தொடர்ச்சியாக, நாகரீகம் மனித இனத்தின் பாதையை மாற்றி, இயந்திரவியல், மின்னணுவியல் சகாப்தங்களில் நிறுத்தி விட்ட தருணத்திலும் பல்வேறு ஏற்ற இறக்கங்களை கடந்து, உருவ, உள்ளடக்க மாற்றங்களுடன் மிஞ்சி காலத்தோடு இன்றும் கலந்திருக்கிறது வில்லிசை.

வில்லிசை உக்கிரமான மகிழ்ச்சி. எந்த இலக்கணத்துக்கும் உட்படாமல் குரலும், மனமும் போன போக்கில் உதித்த இந்தக் கலை போர்க்களத்தில் தொய்ந்து நிற்கும் போர்வீரர்களின் களைப்பை நீக்கவும், தங்கள் மூதாதைகளின் வீர வரலாற்றை போதித்து உரமேற்றவும் பயன்படுத்தப்பட்டது தான் ஜனரஞ்சகமான வரலாற்றின் தொடக்கம். 

இந்த கலையை முறைப்படுத்தி, இலக்கணமிட்டு அறங்கேற்றியவர் 15ம் நூற்றாண்டை சேர்ந்த பெயர் தெரியாத ஒரு அரசவைப்புலவர் என்று ஒரு கருத்து நிலவுகிறது. இன்னொரு தரப்பு, அருதக்குட்டி புலவர் தான் வில்லிசையை இலக்கணச் சுத்தமாக முழுமைப்படுத்தினார் என்கிறார்கள். இக்கலை கி.பி.1550ம் ஆண்டுக்கு முற்பட்டது என்கிறார்கள்.

திருநெல்வேலி, கன்னியாகுமரி, இராமநாதபுரம் மாவட்ட கொடை விழாக்களில் இன்றளவும் வில்லிசை நிகழ்த்தப்படுகிறது. இக்கலையை வில்லுப்பாட்டு, வில்லடி, வில்லு, வில்லடிச்சான் பாட்டு என வட்டாரத்துக்கேற்ப பெயரிட்டு அழைக்கின்றனர். தற்காலத்தில் கோவில் சார்ந்த நாட்டார் கலையாக இதன் வடிவம் சுருங்கி விட்டது. 

இந்த கலைக்குறிய மேடை, தெய்வத்தின் நேர் எதிரில் அமைக்கப்படும். வில்லுப்பாட்டு நடத்தப்படும் கோவிலின் தலைமை தெய்வத்தைப் பற்றிய கதையே பாடலில் முதன்மை பெறும். பனங்கம்பு, மூங்கில் ஆகிய மரங்களில் வில் செய்யப்படுகிறது. வில்லிசை கருவியின் நாண் இல்லாத பகுதி வில் கதிர் எனப்படுகிறது. ஏழு அடி நீளமுள்ள வில்கதிரின் நடுப்பகுதி பெரிதாகவும், வில்லோடு இணையும் அதன் முனைகள் சிறிதாகவும் இருக்கும். கதிரின் மேல் வண்ணத்துணிகளை கட்டி அழகுபடுத்தி சாயம் பூசப்படுகிறது. கதிரின் இரு முனைகளிலும் வெண்கலத்தால் இரண்டு பூண்கள் பொருத்தப்பட்டு அதில் நாண் இழுத்துக் கட்டப்பட்டிருக்கும். விற்கதிரின் பின்னால் வளைந்த பகுதியில் நான்கு வளையங்கள் பொருத்தப்பட்டு அதில் வெண்கல மணிகள் இணைக்கப்பட்டிருக்கும். வில்க்கதிரின் நாண் மாட்டுத்தோளால் செய்யப்படும். 

பாடும் போது இசைவாணர் வில்லின் நாண் மீது வீசி இசையெழுப்பும் கம்புக்கு "வீசுகோல்" என்று பெயர். குழாய் போன்ற வடிவத்தில் இருக்கும் அந்த கோலின் உள்ளே வெண்கல பரல்கள் இடப்பட்டிருக்கும். நாணில் இந்த வீசுகோல் விழும்போது சலசலவென்று பரல்கள் ஒலியெழுப்பி வசீகரிக்கும். வில்லிசையின் முக்கிய துணைக்கருவி குடம். இதை கடம் என்றும் சொல்வதுண்டு. மண்ணால் செய்யப்பட்டு சுட்டு வடிவாக்கப்படும் குடத்தை இசையெழுப்பும் கருவியாக்க சில சித்து வேலைகள் செய்யப்படும். வாழை நார் மற்றும் வைக்கோலால் செய்யப்பட்ட பந்தடையில் குடத்தை வைத்து இசைக்கலைஞர் பாடலுக்கு தகுந்தவாறு இசையெழுப்புவார். குடத்தில் அடித்து இசையெழுப்ப "பத்தி" என்ற கோலை பயன்படுத்துவர். பத்தியால் அடித்தால் குடத்திற்கு பாதிப்பு வருவதில்லை. தற்காலத்தில் வசதி குறைந்த கலைஞர்கள் வீடுகளில் பயன்படுத்தப்படும் குடங்களையே இசைக்கவும் பயன்படுத்துகின்றனர். 

வில்லிசையின் இன்னொரு முக்கிய துணை இசைக்கருவி உடுக்கை. இடை சுருங்கியும், வாய் பெருத்தும் இருக்கும் உடுக்கையின் இரு முகப்புகளிலும் பனங்கிழங்கு நாரால் வளையங்கள் செய்து கோர்த்து, கன்றுக்குட்டியின் தோலைக் கட்டி காய வைத்து இசைப்பார்கள். உடுக்கை தான் இசையை உக்கிரமாக்கும். பாடுபவரின் குரலை உச்சஸ்தாயிக்கு கொண்டு சென்று, மேடையை தெய்வீகமயமாக்குவது இந்த இசைக்கருவி தான்.

அடுத்த துணை இசைக்கருவி ஜால்ரா. இது தவிர தேக்கு மரத்தால் செய்யப்பட்ட கட்டை என்ற இசைக்கருவியும் வில்லுப்பாட்டுக்கு பயன்படுத்தப்படுகிறது. இப்போது மரபு வழி இசைக்கருவிகள் தவிர, ஆர்மோனியம், தபேலா, ஆல்ரவுண்ட், பம்பை உள்ளிட்ட பல கருவிகள் பயன்படுத்தப்படுகிறது. பாடல் பாடுபவரை "அண்ணாவி" என்கிறார்கள். 

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கருவிகளுக்கு பூஜை நடைபெறும். முதலில் அண்ணாவி அமருவார். பின் பிற கலைஞர்கள் அமருவர். தொடக்கத்தில், அனைத்து கலைஞர்களும் ஒரு சேர "ராஜமேளம்" இசைப்பார்கள். பின் காப்புப்பாடல், குரு வணக்கம், அவை வணக்கம். பிறகு கதை தொடங்கும். பெரும்பாலும், 

"தந்தனத்தோம் என்று சொல்லியே... வில்லினில் பாட 
ஆமா வில்லினில் பாட.. வந்தருள்வாய் கணபதியே.." என்றே நிகழ்ச்சியை தொடங்குவார் அண்ணாவி. 5 அல்லது 6 மணி நேரத்துக்கு நீளும் வில்லிசை. அண்ணாவி வில்லில் அடித்து இசையெழுப்பிக்கொண்டே அபிநயத்தோடும், வார்த்தைகளுக்கு தகுந்த ஏற்ற இறக்கங்களோடும் பாட, மற்றவர்கள் சுவாரசியமாக "ஆமா.." என்பார்கள். சில நேரங்களில் இடக்காகவும் பேசி அவையை நகைப்பூட்டுவார்கள். பரம்பரைக் கலைஞர்கள் ஒத்திகை பார்க்கும் வழக்கமில்லை. இசையில் மிகவும் லயித்துப்போய் பாடுவார்கள். 

ஆண்களே ஆதிக்கம் செலுத்தும் இக்கலையில் ஒரு சில பெண்களும் ஜொலித்திருக்கிறார்கள். அண்மைக்காலத்தில் பல இளம் பெண்கள் பாடுகிறார்கள். திரைப்படத்தின் தாக்கங்களுக்கு உட்பட்டும் நசிந்து போகாமல் இன்று வரை சிற்சில சிதைவுகளோடு மிஞ்சியிருப்பது வில்லிசையின் சிறப்பு. தொழில்முறையாக வில்லிசையைக் கைகொண்ட கலைஞர்கள் இன்று வறுமையில் வாடி வருகிறார்கள். சிற்சில நெளிவு சுழிவுகளோடு திரையுலகம் சார்ந்து இயங்கும் சில கலைஞர்கள் செழிப்போடு இருக்கிறார்கள். பலர் எயிட்ஸ் விழிப்புணர்வு, காச நோய் விழிப்புணர்வு என்று வடிவத்தை மாற்றி வயிறு வளர்க்கும் சூழலும் நிலவுகிறது. ஆனாலும், எந்த சமரசமும் இல்லாமல் இன்னும் இதை தெயவீக கலையாக உருமாற்றாமல் பயன்படுத்தும் கலைஞர்களும் கொஞ்சம் மிஞ்சியிருக்கவே செய்கிறார்கள்.

வில்லிசையில் சாத்தூர் பிச்சைக்குட்டியை மிகவும் பிரசித்தி பெற்ற கலைஞராக அடையாளப்படுத்தலாம். திரையுலகம் பிச்சைக்குட்டியின் சேவையை முழுமையாக பயன்படுத்திக் கொண்டது. என்.எஸ்.கிருஷ்ணன், டி.எம்.மதுரம், எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் பிச்சைக்குட்டியிடம் வில்லிசை பயின்றவர்கள். இடைக்காலத்தில் நாடார் இன மக்களிடம் செழிப்புற்றிருந்த இக்கலை இடையில் நசிவுற்று பிற்காலத்தில் பிள்ளைமார்கள் மீட்டு வளர்த்தெடுத்ததாக சொல்கிறார்கள். 

நாகர்கோவில், திருநெல்வேலி வட்டாரங்களில் அண்மைக்கால ஊடகத்தாக்கங்களைத் தாண்டி பலத்த ரசிகர் கூட்டத்தினிடையே இன்றளவுக்கும் நடைபெற்று வருகிறது வில்லுப்பாட்டு.

அடுத்த வாரம் கணியன்கூத்து.

மேலும் படிக்க பாருங்கள்: www.thamizhstudio.com