Showing posts with label sakthi trust. Show all posts
Showing posts with label sakthi trust. Show all posts

Sunday, April 26, 2009

சீனப் பயணக் கட்டுரைகள் - சக்தி ஜோதி

மகளிர் முன்னேற்றத்திற்கான வழிகாட்டியாக செயல்பட்டதற்காக 2007 –- 2008ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான விருது தேனி நேருயுவகேந்திரா நிறுவனத்தின் மூலமாக வழங்கப்பட்டது. இந்த நிறுவனம் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. இந்தியா முழுவதும் மாநில அளவில் விருது பெற்றவர்களில் இருந்து 15 சமூகப்பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அதில் ஒருவராக தமிழ்நாட்டின் சார்பாக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். மாநில விளையாட்டுத் துறை மூலமாக அருள்கண்மணி என்ற மாணவியும் பரதம் மற்றும் சிலம்பக் கலைக்காக தேர்வு செய்து அனுப்பி வைக்கப்பட்டார். தமிழகத்திலிருந்து நாங்கள் இரண்டு பேர் மட்டும் இந்த தூதுக்குழுவில் இடம் பெற்றிருந்தோம்.

இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் அமைச்சர் Dr. M.S. Gill மற்றும் இந்தியாவிற்கான சீனத்தூதர் (Ambassodor of China) Mr.H.E .ஷெங்யாங் (H.E.Zhang young) வழியனுப்ப Mr.S.K..அரோரா தலைமையில் டில்லியிலிருந்து புறப்பட்ட நாங்கள் முதலாவதாக சீனாவின் தலைநகரம் பெய்ஜிங் சென்றடைந்தோம்.

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நூறு இளைஞர்களை ஒருங்கிணைத்து வழி நடத்த அரசு உயர் அதிகாரிகளான திரு.நேதுஜெய்பாய், திருமதி. சாரதா அலிகான், திரு. கேவல்யா மற்றும் திரு. ஞானராஜசேகரன் அவர்களும், நியமிக்கப்பட்டிருந்தார்கள்.மேலும் தமிழகத்தைச் சேர்ந்த திரு.ஞான ராஜசேகரன் அவர்களும், திரு.S.K..அரோரா அவர்களுக்குப் பதிலாக ப்யூஷோ நகரில் எங்களோடு இணைந்து கொண்டார்.

மொத்த குழுவையும் தன் பக்கம் கவனம் திருப்ப வைத்த இன்னொரு நபர் பாண்டிச்சேரியைச் சேர்ந்த கமலக்கண்ணன். இவர் ஆங்கிலம் தெரியாத, ஹிந்தி மட்டுமே தெரிந்த சிலரிடம் பேசி அசத்துவதில் வல்லவர். (கமலக்கண்ணனுக்கு ஹிந்தியில் ஒரு வார்த்தையும் தெரியாது) டெல்லியில் ஏற்கனவே அறிமுகமாகியிருந்த நித்யா வாத்வா (பஞ்சாப்) என் அறைத் தோழியாக அமைந்ததில் இருவரும் மகிழ்ந்தோம். நித்யா தன் கல்லூரி படிப்பு முடித்த பின்பு சமூகப் பணியில் முழுநேரமாக ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்திலிருப்பவர். இப்போதே நிறைய சமூகப் பணிகளை செய்து கொண்டு இருக்கிறார்.

ஐந்து நிமிடம் தாமதமாக கிளம்பியதில் நானும், நித்யாவும் முதல் நாளே வழிநடத்துனர்களாக உள்ள அதிகாரிகளிடம் நன்கு அறிமுகமாகிவிட்டோம். நேரம் தவறாமை என்பது பொதுவாகவே வெளிநாட்டு பயணங்களில் தீவிரமாகவே கடைபிடிக்கப்படுவதுண்டு.

அறுபது சதவீதம் மாணவ மாணவிரும், நாற்பது சதவீதம் சமூகப்பணி மற்றும் பஞ்சாயத்ராஜ் பணியாளர்களும் கலந்து கொண்ட வித்தியாசமான இந்த குழு சீனாவிற்கான இந்திய தூதர் திருமதி. நிருபமா ராவ் அளித்த வரவேற்பு இரவு விருந்தில் கலை நிகழ்ச்சிகளால் சீனர்களை வியப்பிலாழ்த்தினோம். நான் 2005ம் ஆண்டு ஸ்ரீலங்கா சென்றிருந்த போது அப்போது இலங்கையின் இந்திய தூதராக நிருபமாராவ் இருந்தார்.

அவர், அப்போது நடந்த நிகழ்ச்சியில் தலைமையேற்று பேசியிருந்தார். இந்தியாவிலிருந்து வந்திருந்ததால் என்னிடம், என் கட்டுரையை பாராட்டி பேசியிருந்தார்;. எனவே தற்சமயம் சீனாவின் இந்திய தூதராக இருக்கும் திருமதி.நிருபமாராவை மீண்டும் சந்திப்பதில் என் மனதில் பரபரப்பு கூடியிருந்தது.

துவக்க உரை முடிந்த பின்பு இரவு விருந்திற்கு முன்பு நிருபமாராவை சந்தித்து இலங்கை நிகழ்ச்சியை நினைவு படுத்தினேன். அவர் அந்த நிகழ்ச்சியை நினைவில் வைத்திருந்தது மட்டுமின்றி, இலங்கையில் அந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்திய லங்கா மகிளாசமிதியின் நிர்வாகி ராணிஹெராத் பற்றியும் என்னிடம் விசாரித்தார். அவர் என்னை நினைவில் வைத்திருந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது.

இரவு உணவிற்கு பின்பு நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் லோக்கல் சிம்கார்டு கிடைக்காதலால், வேறு எங்கே வாங்கலாம் எனறு விசாரித்தோம். ஹோட்டலின் வரவேற்பு பெண்மணி எழுதிக் கொடுத்த முகவரியை கண்டதும் அதிர்ச்சியடைந்தோம். ஏனெனில் அவர் சைனீஸ் மொழியில் எழுதிக் கொடுத்திருந்தார்.மேலும் அவர், கடைகளின் பெயர் பலகைகள் அனைத்தும் சைனீஸ் மொழியில்    தான்   இருக்கும்   என்றும்   கூறி

எங்களை மேலும் குழம்ப வைத்தார். ஆனால் அங்கு செல்வதற்கான பாதையை வரைபடமாக வரைந்து கொடுத்து உதவி செய்தார்.

எங்களோடு இருந்த சிலர் பயந்து பின்வாங்க, சிம்கார்டு வாங்குவதற்காக என்னுடன் கமலக்கண்ணன், அருள் கண்மணி மற்றும் ஹசன் (அலிகார்க்) மட்டும் வந்தனர். ஏதோ தைரியத்தில் இரவு 9.30 மணிக்கு மேல் நாங்கள் நடந்து சென்றோம். டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் பாதை காட்ட, பதினைந்து நிமிட நடைப்பயணத்திற்கு பின்பு ஒரு வழியாக மூடியிருந்த கடையை கண்டுபிடித்தோம். என்ன செய்வதென்று அறியாமல், ஒருவித ஏமாற்றத்தில் திரும்பலாம் என நினைத்த போது எதிரில், இருந்த ஒரு புத்தக கடையில் விசாரிப்போம் என்று ஹசன் கூற நாங்கள் அங்கு சென்றோம்.

ஹிந்தி, தமிழ், ஆங்கிலம் என எந்த மொழியில் கூறி சிம்கார்டு கேட்டாலும் புரியாமல் திணறிய கடைக்கார பெண்மணி விளக்கம் கேட்பதற்காக ஒரு சிறிய கூட்டத்தையே கூட்டி விட்டார். திடீரென எனக்கு தோன்றிய யோசனை, மொபைல் போனிலிருந்து சிம்கார்டை கழட்டி காட்டி கேட்டவுடன் புரிந்து கொண்டு சிம்கார்டை அவர்கள் எடுத்துக் கொடுத்தார்கள். ஆனால் அடுத்த மிகப்பெரிய பிரச்சனை, சிம்கார்டு எவ்வளவு பணம் என்பது தான்.

சைனீஷ் மட்டுமே தெரிந்த அவர்களிடமிருந்து என்ன விலை கொடுத்தாவது வாங்கி விட நாங்கள் தயாராக இருந்தோம். ஆனால் எங்களிடம் இருந்தது அமெரிக்கன் டாலர். அவர்கள் யுவான் தான் வேண்டும் என்று கூற, ஒருவழியாக அவர்களை புரியவைத்து, ஒரு சிம் கார்டுக்காக இந்திய பணம் RS.1200/- கொடுத்து வாங்கினோம். வீட்டிற்கு போன் செய்து பேசியவுடன் எனக்கும், என் வீட்டினருக்கும் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அனைவரை விடவும் வீட்டோடு அதிக தொடர்புடன் இருந்து நானும், அருள் கண்மணியும் தான்.

தொலைபேசியில் பேசுவதை விடவும் மிக எளிதாக தொடர்பில் நான் இருந்தால், தொலைதூரப் பயணம் மேற்கொண்டிருந்த உணர்வு துளியும் ஏற்படவில்லை. என் அலுவலக பணிகளும் கூட தேக்கம் இன்றி இருந்தது. அலைபேசி தமிழகத்திற்கும் சீனாவிற்குமான தூரத்தை குறைத்து விட்டது. சீனப் பயணத்தில் பெறப்போகிற அனுபவங்கள் பற்றிய கனவுகளோடு முதல் நாள் நிறைவுற்றது.

பயணிப்போம்...


மேலும் படிக்க பாருங்கள்: www.thamizhstudio.com