சொல்லின் வனப்பே வனப்பு
திரைப்படத்துறையினர் நடத்திய கலைவிழா நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. பார்த்துக் கொண்டிருந்தேன். பிரபல இயக்குநர் அவரால் அறிமுகம் செய்யப்பட்ட உச்ச நட்சத்திரத்துடன் நேர்காணல் நடத்திக் கொண்டிருந்தார். அதில் ஒரு கேள்வி கவிதை பற்றியது. சிகர இயக்குநரால் அறிமுகப்படுத்தப்பட்டபோது சரியாகத் தமிழ் பேசத் தெரியாமலிருந்த நட்சத்திரம் முப்பது ஆண்டுக் காலமாக தமிழ்ப்படங்களில் பேசி நடித்தும் தமிழர்களுடன் கலந்துறவாடியும் மொழியறிவில் தேர்ச்சி பெற்றிருப்பதாக இயக்குநர் குறிப்பிட்டார். நடிகரும் ஒப்புக்கொண்டார். அப்படியானால் எப்போதாவது கவிதை எழுதத் தோன்றியிருக்கிறதா என்று கேட்டார் இயக்குநர். நடிகரும் ஆமென்றார். பின் ஏன் எழுதவில்லை? - இது இயக்குநரின் கேள்வி. பயமாக இருக்கிறது - இது நடிகரின் பதில். கவிதை தொடர்பான பொது அணுகுமுறையின் கூறு இந்த உரையாடலில் ஒளிந்திருக்கிறது. ஒரு மொழியைச் சரளமாகப் பேசவும் படிக்கவும் புரிந்து கொள்ளவும் முடியும்போது அந்த மொழியின் இலக்கியவடிவமும் வசப்பட்டு விட்டது என்றே பலரும் நம்புகிறார்கள். மொழியைத் தெரிந்து கொள்வதானாலேயே கவிதையையும் தெரிந்து கொண்டு விட்டதாக எண்ணுகிறார்கள். இதனால் ஒரு பயமின்மை உருவாகிறது. இந்த பயமின்மையிலிருந்தே ஏராளமான எண்ணிக்கையில் கவிதைகள் எழுதித் தள்ளப்படுகின்றன. மொழியைப் பேசுவதனால், புரிந்து கொள்வதனால் கவிதையும் தெரியாதா என்ன? இது சரியாக இருக்குமானால் மொழி தெரிந்த எல்லாரும் கவிதை எழுதுபவர்களாக இருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் அப்படி இல்லை. சிலர் மட்டுமே கவிதையாளர்களாகக் கருதப்படுகிறார்கள். அவர்கள் பயன்படுத்தும் மொழி எல்லாரும் புழங்கும் மொழியாக இருந்தாலும் வேறுபட்டதாக இருக்கிறது. அதனாலேயே பயமும் வருகிறது. இந்த பயமே சீரிய கவிதைகளை உருவாக்க உதவுகிறது. மனித சிந்தனையின் அடிப்படையான கருத்துப் பரிமாற்றச் சாதனங்களில் ஒன்று மொழி. கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதைத் தாண்டியும் மொழி பயன்படுத்தப்படுகிறது. ஒரு கோணத்தில் யோசித்தால் மொழி கருத்துகளைப் பரிமாறுகிறது. இங்கே அது உருவம். இன்னொரு கோணத்தில் பார்த்தால் மொழியே கருத்தாகவும் செயல்படுகிறது. இங்கே அது உள்ளடக்கம். இந்த இரண்டு கோணங்களையும் கொண்டிருப்பதனாலேயே மொழியின் உச்ச வடிவமாகக் கவிதை கருதப்படுகிறது. தமிழில் மட்டுமல்ல; எல்லா மொழிகளிலும் இலக்கியத்தின் சிகர வடிவம் கவிதையாகவே முன்வைக்கப்படுகிறது. கவிதை எழுதுபவனே சிறப்புச் சலுகைக்கு உரியவனாகிறான். நோபெல் இலக்கிய விருதை ஓர் எடுத்துக்காட்டாகப் பார்க்கலாம். முதலாவது நோபெல் இலக்கிய விருதே கவிதைக்குத் தான் வழங்கப்பட்டது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட படைப்பாளிகள் இந்த விருதைப் பெற்றிருக்கிறார்கள். நாவலாசிரியர்கள், சிறுகதை ஆசிரியர்கள், நாடகாசிரியர்கள் என்று பலவகையினரையும் சேர்ந்தவர்கள் உள்ளனர். இந்தத் துறைகளைச் சார்ந்தவர்களின் எண்ணிக்கையை விடக் கவிஞர்களின் எண்ணிக்கை அதிகம். இதுவரை நோபெல் பரிசு வழங்கப்பட்ட இலக்கியவாதிகளில் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் கவிஞர்கள். இவையெல்லாம் கவிதைக்கு மனிதர்களிடையே இருக்கும் மதிப்பைக் காட்டுகின்றன. கவிதை எழுதுபவனுக்குக் கிடைக்கும் சிறப்புச் சலுகையை அடையாளப்படுத்துகின்றன. எல்லாரும் சமம். உண்மைதான். எனினும் ஒவ்வொருவரும் அடுத்தவரிலிருந்து வேறுபட்டவராகத் தன்னை முன்னிருத்தவே விரும்புகிறார்கள். சாதாரணர்கள் நடுவில் அசாதாரணர்களாகத் தோற்றமளிக்கவே ஆசைப்படுகிறார்கள். அந்த முனைப்பின் வெளிப்பாடுதான் கவிதைகள் எழுதவும் கவிஞனாக அறியப்படவும் தூண்டுகிறது. ஆசை காரணமாக எழுதப்படுபவையெல்லாம் கவிதைகளாக ஆவதில்லை. கவிதையுணர்வு முளை விடுவதற்கு இந்த ஆசை காரணமாக இருக்கலாம். ஆனால் கவிதை தீவிரமானது. அதன் தளங்கள் விரிவானவை. அதன் செயல்பாடுகள் பன்முகமானவை. சில நேரங்களில் சிக்கலானவை. எனவேதான் மொழி தெரிந்திருந்தாலும் கவிதை வசப்படாமல் போகிறது. புரியாமல் போகிறது. கவிதையையும் கவிதையல்லாத ஒன்றையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாமல் போகிறது. கவிதை மீது விருப்பம் கொண்ட வாசகனை இந்தச் சிக்கல் தடுமாறச் செய்கிறது. தமிழில் இன்று ஏராளமான கவிதைகள் எழுதப்படுகின்றன. அவற்றில் கவிதை எது? கவிதையல்லாதது எது என்பது புதிய வாசகனைக் குழப்பும் கேள்வி. இந்தக் கேள்விக்கான பதிலை இந்தப் பகுதியில் கண்டுபிடிக்க முயற்சிக்கலாம். அண்மையில் ஒரு மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். குறிப்பிட்ட உடற் பிரிவுக்கான மருத்துவரைக் கண்டுபிடிக்கக் கொஞ்சம் சிரமப்பட வேண்டியிருந்தது. அவருக்கென்று கதவில் பெயர்ப் பலகை பதிக்கப்பட்ட அறை ஒதுக்கப்பட்டிருந்தது. உள்ளே நுழைந்தும் குழப்பம் தீரவில்லை. எல்லாரும் வெள்ளைக் கோட்டும் ஸ்டெதாஸ்கோப்புமாகக் காட்சியளித்தார்கள். எல்லாரும் ஒரு மருத்துவர் செய்யக் கூடிய பணிகளை, நாடி பார்ப்பது, இரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பது போன்ற பணிகளைச் செய்துகொண்டிருந்தார்கள். மருத்துவரை அடையாளம் கண்டு பரிசோதனைக்கு உட்பட்டபோது, அவரும் அதே முறைகளைப் பின்பற்றினார். அல்லது மற்ற வெள்ளையர்களைக் கலந்து ஆலோசனை செய்தார். பின்னர் சிகிச்சை முறைகளைத் தொடங்கினார். அவரால் மட்டுமே உடற் பிரிவின் கோளாறை இன்னதெனக் கண்டுபிடிக்க முடிந்தது. அதற்கு அவருடைய கல்வி, பயிற்சி, உள்ளுணர்வு போன்றவை உதவின. ஒரு கவிதையை அடையாளம் காண்பதும் இப்படித்தான். வெள்ளுடை அணிந்தவர்கள் எல்லாம் மருத்துவர்கள் அல்லர்; கவிதை எழுதுபவர்களெல்லாம் கவிஞர்களல்லர். ஓர் மருத்துவரை அவருடைய மருத்துவ அனுபவம் தீர்மானிக்கிறது. ஓர் கவிஞனை அவனுடைய வாழ்க்கையனுபவம் நிர்ணயிக்கிறது. அரைகுறை மருத்துவ ஞானமுள்ளவர்களும் மருத்துவராக இருக்கலாம். வாழ்க்கையனுபவத்தைப் பரிசீலனை செய்யத் தெரியாதவர்களும் கவிஞராக இருக்கலாம். நமக்குத் தேவை யார்? எது? அதை அடையாளம் காண்பதே இந்தப் பகுதியின் நோக்கம். | |||
Showing posts with label சொல்லின் வனப்பே வனப்பு. Show all posts
Showing posts with label சொல்லின் வனப்பே வனப்பு. Show all posts
Thursday, February 3, 2011
சொல்லின் வனப்பே வனப்பு
Subscribe to:
Posts (Atom)