Wednesday, November 30, 2011

அரும் பெறல் மரபின் கரும்பு இவண் - பிர. தீபன்



அரும் பெறல் மரபின் கரும்பு இவண் - பிர. தீபன்

விக்ரமாதித்தன் நம்பி

விக்ரமாதித்யனின் கவிதை அனுபவம் - பிர. தீபன்

உண்மைதான்,
மலையின் தலையில் இருக்கிறது.
இதன் ஊற்றுக்கண்
உயரத்தில் உதித்தாலும்
நாடுகளுக்கு ஓடிவரும்
ஆறு இது என்று
நீங்களும் ஒப்புக் கொள்கிறீர்கள்

துணையாறுகள் அங்கங்கே
கொட்டிக் கலந்து
இது ஹோ என்று கோஷிக்க
தங்களை அர்ப்பணிக்கத்தானே
செய்யும்
அங்குதான் இது பேராறு

வாழ்த்தும் வணக்கமும்
வழியெல்லாம் பெற்று
ஓடுகையில்,
கிளைகளாய்ச் சில நதிகள்
பிரிவகையும்
எப்படித் தடுக்க முடியும்?

துணையின்றி கிளையின்றி
உலகூட்டுக என்று நீங்கள்
ஆற்றுக்குச் சொல்கிறீர்கள்
புறப்பட்ட கொஞ்ச தூரத்தில்
மறைந்து போகும் ஆறு

ஒருவேளை
தலையூற்றின் புனிதம் மட்டும்
மிஞ்சலாம்.

-- பிர. தீபன்
(விருட்சம் கவிதைகள் – தொகுதி 1 பக்கம் 98)

கவிதையைப் பற்றிச் சொல்லப்படுகிற எந்த விஷயத்தையும் விட, எந்தக் கருத்தையும் விடக் கவிதை முக்கியமானது.
-- க.நா.சு.

நான்கு பக்கமும் வாசலுள்ள பெரியகோயில் மாதிரியான கவிதை எப்படி வேண்டுமானாலும் பொருள் கொள்ளலாம் தத்தம் மனசு போல, அனுபவத்துக்கேற்ப. நீங்கள் அர்த்தப்படுத்திக் கொள்வதை நான் தவரென்று சொல்லமுடியாது, நான் வேறு பொருள் சொன்னால் நீங்கள் அப்படி இல்லை என்றும் மறுக்க முடியாது. கவிஞர், அதுபோலக் கவிதையாக்கியிருக்கிறார். உண்மையிலேயே, இது நல்ல காரியம் சுவாரஸ்யம் புத்தனுபவம்.

ஊற்றுக்கண்ணிலிருந்து தோன்றும் ஆறு மலையுச்சியில் ஓடிவரும் சமவெளியில் துணையாறுகள் பல கலந்து பேராறு வழியெல்லாம் பெறும் வாழ்த்தும் வணக்கமும் கிளைவிடும் தன்போக்கில்.

துணையில்லாமல், கிளைவிடாமல் உலகூட்டும் என்று எதிர்பார்க்க முடியுமா. அவ்வாறு இருந்தால், புறப்பட்ட கொஞ்ச தூரத்தில் மறைந்து போக நேரும். மிஞ்சுவது, தலையூற்றின் புனிதம் மட்டும்தான்.

கவிக்கூற்று இப்படி முன்வைக்கப்படுகிறது சரிதான். ஆற்றைப்பற்றிச் சொல்வது போல, ஒரு நிரந்தர உண்மையே சொல்கிறார் கவிஞர்.

இந்தக் கவிதை குறித்து யோசிக்கையில், காந்திதான் நினைவுக்கு வந்தார், அவர் வாழ்வுதான் மனத்தில் தோன்றியது கவிதையின் பொருளை எளிதில் உணரமுடிந்தது, அப்போது நம்முடைய கவிதைமரபில் பெரிதும் பேசப்படுவது, பிறிது மொழிதல் அணி. பிறிது மொழிதல் தானே இது.

உத்தியென்று நமக்குப் படுவது, உண்மையிலேயே, சமயங்களில், கருதிச் செய்ததாகக்கூட இல்லாமலிருக்கலாம் சில விஷயங்களைச் சில முறைகளில்தான் சொல்லமுடியும் என்பதும் இருக்கிறது.

கவிஞன் உள்ளத்துள்ளேயே இப்படித் தோன்றியிருக்கலாம், நதிமூலம், ரிஷிமூலம் போலத்தான் கவிமூலமும் கவிதை என்பதுதான் விஷயமே.

பிரதீபன், ஒரு செய்தி சொல்கிறார், அது கவிதையாகவே இருக்கிறது அதுதானே வேண்டும்.

சிந்திக்க வைக்கும் கவிதை கருத்துத் தெரிவிப்பது போல இருந்தாலும், கவிதையாகிவிட்டால் ஒதுக்கிவிட முடியாதுதானே.

உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதுதான் முக்கியம் உரைகாரன் உரைப்பதல்ல இந்த மாதிரி கவிதைகள் அந்தமாதரிதான்.

கவிதைரசனை ஒரு கைகாட்டிதான் நீங்களாகத்தான் வரவேண்டும்.

http://koodu.thamizhstudio.com/thodargal_18_11.php



No comments:

Post a Comment