Saturday, December 11, 2010

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம். (12)



மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம். (12)

வெங்கட் சுவாமிநாதன்

எந்திரன் பற்றி எழுதியது போதும், இனி மற்ற விஷயங்களைப் பற்றி எழுதலாமே என்று சில அன்பர்கள் இங்கு எழுதியிருக் கிறார்கள். வாஸ்தவம். ஒரு ஆரோக்கியமான சமூகத்தில், எந்திரன் பற்றிப் பேச்சே எழுந்திராது. ஆனால் அது ரஜனி காந்த் ஸார், சன் டிவி என்ற இரு பிரம்மாண்ட சக்திகள் கையில் ஒரு மகத்தான சினிமாவாக ஒரு சூறாவளி விளம்பரத்தின் தயவில் முன் வைக்கப்பட்டிருக்கிறது. அது திரும்பத் திரும்ப, சன் தொலைக்காட்சியின் டாப் டென்னில் இன்னமும் முதலிடம் வகிப்பதாக தர நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. தர நிர்ணயம் என்பது நம் தமிழ் சினிமா உலகில் ஒட்டு மொத்தமாக எல்லோராலும் வரும்படியை வைத்துத்தான் தரம் பற்றி முடிவு செய்யப்படுகிறது. வரும்படி என்கிற சமாசாரம் நிதர்சனமாகக் காணக்கூடிய ஒன்று. நிரூபிக்கப்படக்கூடிய ஒன்று.

ஆனால் தரம் என்கிற உணர்வு இருக்கிறதே அது, நிதர்சனமற்றது. ஆளுக்கு ஆள் வித்தியாசப்படும். ஆனால் சன் தொலைக்காட்சி ஆட்சி செய்யும், தமிழ் பேசும் உலகில், வரும்படி கூட கட்டாயத் திரையிடல் மூலம் அறிவிக்கப்படுகிறது. ஆக ஒரு கால கட்டத்திற்குப் பிறகு இப்படி கட்டாயமாக வெற்றி திணிக்கப்பட்ட ஒன்றை தரம் பற்றி பேசுவோரே இல்லாமல் செய்துவிட்ட தமிழ் சமூகத்தில் அது பற்றிப் பேசித் தான் உதறித் தள்ள வேண்டியிருக்கிறது. காரணம், எந்திரன் ஒரு உச்சத்தின் குற்யீடாகிவிட்டது. இனி அந்த எவெரெஸ்டை நோக்கித் தான் எல்லோரும் பயணிக்கும் கனவு காண்பார்கள். செயல்படுவார்கள்.

இன்னம் ஒன்று. ஏந்திரன் பற்றி எழுதியது போதும் என்று சில அன்பர்கள் சொன்னது இங்கு வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால், எந்திரன் பற்றி நான் எழுதியதைப் பொறுக்கமாட்டாது ஆபாசமாகத் திட்டி வந்த பின்னூட்டங்கள் நிறையவென்றும், ஆனால் அவை ஆபாசமாக இருந்ததால் அவற்றை வெளியிடவில்லை என்று அருண் சொல்கிறார். மாதிரிக்கென்று ஒன்றிரண்டை வெளியிட்டிருந்தால், அவை எத்தனையில் ஒன்றிரண்டு என்றும் சொல்லியிருந்தால் நம் தமிழ் சமூகத்தில் ரஜனி சாரின் ரசிகர்கள், எப்படிப்பட்ட எதிர்வினையைக் காட்டுபவர்கள் என்பதோடு நம் தமிழ் சமூகத்தின் சீரழிவு எத்தனை ஆழ வேர்கொண்டதும், பரவலானதும், கொடூரமானதும் என்பது தெரிந்திருக்கும். நம் ஆபாசங்களை, நம்மைப் பீடித்திருக்கும் பயங்கர நோய்களை நாம் அறியாது மூடி மறைப்பானேன்?. நம் வியாதியைப் பற்றி நாம் அறியாதிருப்பதும் கண்மூடிக்கொள்வதும், நோயை பயங்கரமாக முற்றச் செய்துவிடும். செய்துவிடும் என்ன, முற்றிவிட்டது என்று தான் எனக்குத் தோன்றுகிறது.

எந்திரனைப் பற்றி இன்னம் கொஞ்சம் சொல்லி விட்டு பின் மற்றவற்றிற்கு நகர்கிறேன். ஏனெனில் இது பற்றி நாம் மிகவும் பெருமைப் பட்டுக்கொள்கிறோம். தமிழ் சினிமாவின் வரலாற்றிலேயே இப்படத்தின் தொழில் நுட்பமும், கற்பனையும் விஞ்ஞானத்தைக் கலையாக்கியதாகவும், எல்லாம் ஒரு உச்ச கட்ட சாதனையென்றும் பேசிக்கொள்ளப்படுகிறது. குத்தாட்டம், ஸ்டண்ட் காட்சிகள், வட்டாரப் பேச்சு, கிராமம் , காமிக் என்று எந்த ஒன்று ரசிகப் பெருமக்களின் வரவேற்பைப் பெற்று அதிக வரும்படிக்கு வழி காட்டுகிறதோ, அதையே பின் வரும் நிறைய படங்கள் காப்பி அடிப்பது நம் சினிமா மரபு ஆதலால், இனி நிறைய எந்திரன் காப்பிகள் வருவதை எதிர்பார்க்கலாம். தமிழ் சினிமாவின் வரலாற்றை எழுத ஆரம்பித்தால் அதன் ஒவ்வொரு அத்தியாயமும் இப்படித்தான் நீளும். எந்த மசாலா சரக்கு வெற்றியடைந்து, காபி செய்யப்பட்டு எத்தனை வருடங்களுக்கு எத்தனை படங்களுக்கு அது நீடித்தது பின் எந்த மசாலா எந்த வருடம் எந்தப் படத்தில் புகுந்து வெற்றிக்கு வழிவகுத்தது என்று அந்த அத்தியாயங்கள் நீளும்.

ஆனால் இது எப்படி ஒரு தமிழ் சினிமாவின் சாதனையாகும் என்பது முக்கியமான கேள்வி. இந்த படத்தை மற்றவற்றிலிருந்து வேறுபடுத்தி ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளதாகச் சொல்லப்படும் சமாசாரங்கள் எதுவும் தமிழ் மண்ணைச் சேர்ந்ததில்லை. தமிழனின் படைப்பல்ல. நான் ரஜனி சாரைச் சொல்லவில்லை. அவர் இங்கு தான் தன் சினிமா வாழ்வையும் வளத்தையும் கண்டவர். அவரும் நம் தமிழ் அரசியல் வாதிகளைப் போல, தமிழைக் கோஷமாக்கியே தன் அனேக காரியங்களைச் சாதித்துக்கொள்கிறார். அவர் மூச்சிலே தமிழ் இருக்கும் என்று பிரகடனம் செய்தவர். தமிழ் தான் இருக்குமே தவிர காவிரித் தண்ணி இருக்காது. அது கன்னடம் தான் பேசும். ஆக, காவிரித்தண்ணி பற்றி மட்டும் பேசிவிடக்கூடாது. அதற்கு அவரை மட்டும் தனித்துக் குற்றம் சொல்லிவிடமுடியாது. நம் அரசியல் தலைவர்களும், தமிழினத் தலைவர்களும் மிகவும் அடக்கித் தான் வாசிக்கிறார்கள். காவிரி, பாலாறு, ஈழத் தமிழர் பற்றியெல்லாம் ஏதும் வீராவேச முழக்கங்கள், அறை கூவல்கள் விடுவதில்லை.

ஆனால் எப்படி, நமது உலக நாயகனின் ஒவ்வொரு படத்துக்கான அவதார வேடங்கள் அனைத்துக்கும் ஹாலிவுட் ஒப்பனைக் காரர் எவராவது அழைத்து வரப்பட்டால் அது எப்படி தமிழ் சினிமாவின் தொழில் நுட்ப அல்லது கலைநுட்ப சாதனையாகும்? இதுகாறும் அனேகமாக எல்லா வேஷங்களும் போட்டுத் தீர்ந்துவிட்டதால், உலக நாயகன் இஸ்பானிய காளைச் சண்டை வீரராகிறார். மன்மதன் விட்ட அம்பு படத்தில் எம்ஜிஆர் சிங்கத்தோடு சண்டை போடவில்லையா? அதுக்கும், முன்னால், எப்பவோ முப்பது நாற்பதுக்களில், ஒரு சிறு குழந்தையாக, மூன்று வயசுக் குழந்தை, கண்ணன் ஒரு ராக்ஷஸ பாம்பை வளைத்துப் பிடித்து அதன் மேல் காளிங்க நர்த்தனம் செய்யவில்லையா? வேண்டியது ஒரு தேர்ந்த காமிராமேன். அடுத்த படத்தில் சூப்பர் ஸ்டாரோ இல்லை உலக நாயகனோ, பாகிஸ்தானிலிருந்து வரும் கோரி, கஜனி ஏவு கணைகளை அவை வரும் வழியிலேயே ஆகாயத்துக்கு எம்பி குதித்து அவை தாக்கும் முன்னரே தம் ஒற்றைக் கையில் பிடித்து விடுவார்கள். பாபா படத்தில் இதன் ஆரம்பங்களைப் பார்க்கவில்லையா என்ன?

இதெல்லாம் கிடக்கட்டும். சினிமாவில் வரும் பீதாம்பர வித்தைகள் இவை. அந்த வித்தை காட்டுபவரோ நம்மூரில் பிறந்தவர், வளர்ந்தவர். வித்தை கற்றுக் கொண்டவர். எனவே அதைத் தமிழனின் சாதனையாகக் கொள்ளலாம். ஆனால் உலக நாயகன் படங்களுக்கு வந்து அவருக்கு ஒப்பனை செய்யும் ஹாலிவுட் காரர் யாரோ ஒருத்தர். அதை நம்மது என்று தம்பட்டம் அடித்துப் பெருமை கொள்வதில் என்ன இருக்கிறது? சன் பிக்சர்ஸ் காரரிடம் 150 கோடியோ என்னவோ அநாயசமாக அள்ளிவிட பணம் அம்பாரம் அம்பாரமாகக் கொட்டிக்கிடக்கிற காரணத்தால் சங்கர், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்க்கு (எனக்கு இதற்கெல்லாம் தமிழில் என்ன சொல்வது என்று தெரியாது. இந்த என் குறைபாட்டை கேடிவி, சன் பிக்ஸர்ஸ் நடத்துபவரோ, அல்லது அவரது தாத்தாவுமோ கோவிக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்) எந்திரன் படத்துக்கான மொத்த செலவில் 40 சதவிகிதம் செலவழிக்க முடிகிறது. .சாகஸ காட்சிகளை உருவாக்க மாட்ரிக்ஸ் படத்தில் வேலை செய்த யுவென் வோ பிங்கையும் ஸ்டான் வின்ஸ்டன் ஸ்டுடியோவை க்ராஃபிக்ஸ்க்கும், அழைத்து வந்து செய்து கொண்டால் அது எப்படி சங்கருக்கோ சன் பிக்சர்ஸ்க்கோ, ரஜனி சாருக்குமோ பெருமை சேர்க்கும்?. இதெல்லாம் போகட்டும். ஐஸ்வர்யா ராய் இதில் காட்சி தரும் 57 வித உடையலங்காரங்களையும் சூப்பர் ஸ்டார் ரஜனி ஸார் தோன்றும் 55 வித உடைகளையும் வடிவமைத்து தயார் செய்து கொடுத்தது மேரி ஈ.வொட் என்பவர். எங்கிருந்து வந்தாரோ தெரியாது.

ஆக ரோபோ வும் இறக்குமதி. அதன் இயக்கமும் தந்திர, சாகஸக் காட்சிகளும் இறக்குமதி செய்த பல தொழில் நுட்ப மூளைகளின் வேலைகள். போயும் போயும் உடையலங்காரங்கள் கூட இறக்குமதி, என்றால் அதில் நம்மைப் பற்றித் தம்பட்டம் அடித்துக்கொள்ள என்ன இருக்கிறது? அதிலும் அந்த உடைகள் எந்த நியாயத்துக்கோ தர்க்கத்துக்கோ கட்டுப் பட்டவை அல்ல. ஏதோ இஷடத்துக்கு கற்பனை செய்து கொள்ளப் பட்டவை. க்ராஃபிக்ஸூக்கு இந்தியா தான் சிறந்த இடம் என்றும் அதிலும் சென்னை தான் முன்னணியில் இருக்கிறது என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்படி இருந்தும் ஸ்டான் வின்ஸ்டன் ஸ்டுடியோவையும் யுவென் வோ பிங்கையும் தான் நாடவேண்டியிருந்திருக்கிறது. ஏனெனில் நம்ம படம் 150 கோடி படம் உலகத் தரத்துக்கு இருக்கவேண்டுமே. இவ்வளவையும் இறக்குமதி செய்துவிட்டு உலகத் தரத்துக்கு தயாரித்திருக்கிறோம் என்று பெருமையடித்துக்கொள்வது எப்படி சாத்தியமாகிறது? அதில் என்ன நியாயம் இருக்கிறது. பணம் தான் நம்மது. ஐஸ்வர்யா ராயைக் காதலிக்க ரோபோவுக்கும் ரஜனிசாருக்கும் போட்டி என்ற கற்பனையும் நம்மூர் கற்பனை. தான். சரி. வேறு எது இதில் நம்மது? பணம் கொடுத்து அமெரிக்காவிலிருந்து விலைக்கு வாங்கியதைக் காட்டி இது உலகத் தரத்துக்கு நான் செய்ததாக்கும் என்றால் அது கேலிக்கூத்தல்லவா? வெட்கப் படவேண்டாமா? I

ஆக, இதில் நம்மது, தமிழ் சினிமா சம்பந்தப்பட்டது எது? கலப்படமில்லாத தமிழ்ச் சரக்கு எது என்று பார்த்தால் அது ரஜனி சாரும், சங்கரின் கற்பனை வளமும், வழக்கமான தமிழ் வெற்றிப் படத்துக்கான ஆவி வந்த ஃபார்முலாக் கதை இருக்கே பின்னர் அந்தக் கதைக்கு தாளிக்கப்படும் கடுகு உளுத்தம் பருப்பு சமாசாரமாக, பாட்டு, டான்ஸ், சாகஸ காட்சிகள், எல்லாம். அது தான். அது இந்தப் படத்துக்கு மாத்திரம் இல்லை. எல்லாத் தமிழ் படத்துக்குமான தாளிப்பு தான். மஞ்சள் பொடி, உப்பு, மிளகாய்ப் பொடி வகையறாக்கள். ஆக எந்திரன் படத்தை மாத்திரம் தனிப்படுத்திப் பேசுவதில் அர்த்தமில்லை. எல்லா தமிழ் சினிமா படங்களையும் கணக்கில் கொண்டு தான் சொல்கிறேன்.

தமிழ் சினிமா மாறிக்கொண்டு வருகிறதாக்கும். என்னென்னவோ புது புது சோதனைகள் செய்கிறார்களாக்கும் என்கிறார்கள். சமீபத்தில் மகிழ்ச்சி என்று ஒரு படம். நீல பத்மனாபனின் தலைமுறைகள் என்னும் நாவலை படமாக்கியது என்றார்கள். தமிழ் சினிமாக் கதைகளுக்கும் தலைமுறை நாவலுக்கும் எப்படி முடிச்சு போட முடியும், ஒன்று மொட்டைத் தலை, இன்னொன்று முழங்கால், என்று எனக்குள் கேள்வி பிறந்தது. அதில் வரும் ஒரு ஆச்சி பிரமாதமான சிருஷ்டி. நாவல் முழுதும் வியாபித்து இருப்பவள். தலைமுறைகள் நாவலின் மைய பாத்திரம். தமிழ் இலக்கியத்திலேயே உன்னத சிருஷ்டிகளில் ஒன்று. ஜானகிராமனின், ஜமுனா போல, புதுமைப் பித்தனின் கந்தசாமிப் பிள்ளை போல, இமையத்தின் ஆரோக்கியம் போல. இந்த ஆச்சியைத் தமிழ் சினிமாவுக்குள் கொண்டு வர, தமிழ் சினிமாக் காரர்களுக்கு பைத்தியமா பிடித்திருக்கிறது? இல்லை. அவர்கள் புத்தி சுவாதீனத்தில் உள்ளவர்கள் தான் தம் வழிவந்த வெற்றிக்கு உத்தரவாதம் தரும் மரபைப் பேணுபவர்கள் தான். ஆகவே, கஞ்சா கருப்புக்கு தலைமுறை நாவலில் என்ன வேலை என்று கேட்கமுடியாது. அதன் சினிமா அவதாரமான மகிழ்ச்சியில் அவசிய வேலை உண்டு. நான் பார்த்த இரண்டு அல்லது மூன்று நிமிட துணுக்கில் அந்த ஆச்சி நூற்றுக்கு நூறு சதவிகித தமிழ் சினிமாவில் ஆகி வந்த ஆச்சி தான். தலைமுறை நாவலின் ஆச்சி அல்லள்.

நந்த லாலா பாருங்கள். இது உலகத் தரம் வாய்ந்த க்ளாஸிக் என்று இங்கு சில அன்பர்கள் எனக்குச் சொல்லியிருக்கிறார்கள்.

அவர்கள் சிபாரிசுக்காகக் கட்டாயம் பார்ப்பேன். அது தொலைக் காட்சியில் வரும்போது. தியேட்டருக்கு போய் அல்ல. ஆனாலும் நான் பார்க்கக் கிடைத்த சில நிமிட துணுக்கு எனக்கு உற்சாகம் தருவதாக இல்லை. இயல்பு என்பது நம் வசத்தில் சிக்க மறுக்கிறது. எதைச் செய்தாலும் ஒரு நாடகத் தன்மை கட்டாயம் வந்து ஒட்டிக்கொள்கிறது. அது படம் முழுதும் வியாபித்து பயமுறுத்துகிறது. இயல்பாக இருப்பது என்பது தமிழனுக்கு என்றுமே சாத்தியமாகாத ஒன்று என்று தோன்றுகிறது. இது என்ன இன்று நேற்று பீடித்த வியாதியா என்ன? இதன் உச்ச கட்டமே “அவள் ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஒடினாள்” சமாசாரத்தை அறுபது வருடங்களுக்குப் பிறகும் சொல்லிக்கொண்டு வருகிறோம். சமீபத்தில் கூட உலக நாயகன் அதில் தான் கண்ட சினிமா நயத்தை இன்றும் நினைத்து மலைத்து நிற்பதாகச் சொல்லியிருக்கிறார். யார் சொன்னது? உலக நாயகன் தான். ஆக, முன்னால் ஜெயகாந்தன் சொன்னது போல, திடீரென தமிழன் எட்டடிக்கு உயர்ந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். பார்க்கவேண்டும்.

(தொடரும்)




No comments:

Post a Comment