கலாப்ரியா |
‘நரிப்பல் நாராயணசாமி’யும் ராமமூர்த்தியும் வந்த போது, நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தேன்.” என்னா தம்பீ, மாத்திரை மயக்கம் இன்னும் போகலியா” என்ற சிரிப்புடன் கலந்த குரல் கனவுக்குள் மறுபடி மறுபடி கேட்டது. “இது நரிப்பல்லின் குரலல்லவா” என்றவாறே விழிப்புத் தட்டியது. ‘நாநா’வைப் பார்க்கவே வெட்கமாயிருந்தது. வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று சொல்லி விடுகிறவர் அவர். கெட்ட வார்த்தைக்கு பஞ்சமே இருக்காது. பஸ்ஸை அந்தக் கடைசி நிறுத்தத்தில், சந்திப்பிள்ளையார் முக்கில், நிறுத்திவிட்டு எல்லா டவுண் பஸ் கண்டக்டர்களும், டிரைவர்களும் காபி, டீ, சிகரெட்,பீடி,வெற்றிலை பாக்கு புகையிலை என்று பத்து நிமிட ஓய்வெடுக்கிற இடமும் நாங்கள் சந்திக்கிற இடமும் அதுதான்.
ஒரு காலத்தில் ’டிஎம்.பி.எஸ்’(திருநெல்வேலி மோட்டார் பஸ் சர்வீஸ்) என்று தொழிலாளர்கள் ஒன்றாய்ச் சேர்ந்து ஆரம்பித்த பஸ் சர்வீஸ்தான் டவுண் பஸ்களாக ஓடிக்கொண்டிருந்தது.. டி.வி.எஸ்.கம்பெனி பின்னாலிருந்து இயக்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு நாமம் போட்ட ஐயங்கார், சதுரமான சிறிய மரப்பெட்டிக்குள் வைக்கப்பட்ட டைம்பீஸ் சகிதம் அவருக்கான ஒரு ஷெட்டில் உட்கார்ந்திருப்பார். பஸ் கரெக்டாக வரவேண்டிய நேரத்திற்கு வந்து, புறப்படவேண்டிய நேரத்திற்குப் புறப்படும். டைம்பீஸைப் பார்த்து விட்டு அய்யங்கார் நிமிர்ந்தால், கரெக்டாக வரவேண்டிய ரெண்டாம் நம்பர் பாளை பஸ்ஸ்டாண்ட் பஸ் வந்து நிற்கும். அவர் தலையை அசைத்தால், ”சரி நேரமாச்சு கிளம்பலாம்” என்று அர்த்தம், பஸ் கிளம்பிவிடும். அவர் வாய் பேசி நான் பார்த்ததே இல்லை. கூட்டம் இருக்கா இல்லையா என்பதெல்லாம் கிடையாது. அப்போதெல்லாம் கூட்டமும் கிடையாது. வீரராகவபுரம் என்கிற ஜங்ஷனுக்கு நடந்தே போய்விடுவார்கள். அதிகம் போனால் சைக்கிள்.
மருத மர நிழலை அனுபவித்த படியும், பசுமையான வய(ல்)க்காட்டிலிருந்து வீசுகிற குளிர்ந்த காற்றை சுவாசித்தபடியேயும் ஜங்ஷன் ரோட்டில் நடப்பது பரமானந்தம் என்பார், சின்னத்தாத்தா.அப்புறம் தனியார் பஸ்கள் என்று பாலசரஸ்வதி டிரான்ஸ்போர்ட், ஆண்ட்ருஸ் பஸ் எல்லாம் வந்துவிட்டது. மூன்றாம் நம்பர், பாலசரஸ்வதி பஸ், கடிகாரம் வைத்த பஸ் என்றே பிரபலமாகிவிட்டது. அதன் உரிமையாளர் பையன் நறுவிசான நடையுடை பாவனையோடு, போத்தி ஓட்டல் முன் நிற்பார். அவர் சாப்பிடுவதும் அவ்வளவு அழகாயிருக்கும். கல்யாணியண்ணனின் வகுப்புத் தோழர். பேட்டைக்கு ஏழாம் நம்பர் பஸ்.அதுவும் அபூர்வம். அப்போதுதான் பேட்டைக்கு ‘ஷண்டிங் சைக்கிளை’ அறிமுகப்படுத்தினார், எங்கள் தெரு முனையில் வாடகை சைக்கிள்க் கடை வைத்திருந்த “வீ.ம” சைக்கிள் ஷாப் கடை முஸ்லிம் பாய். ’வீனா. மானா’ பள்ளிவாசல் மேலரதவீதியில் இன்றும் பிரபலம். அங்கே முஹர்ரம் திருவிழா விமரிசையாக இருக்கும். நான் சிறுவனாக இருந்த போது,’ அல்லாகோயில் திருழா’வான முஹர்ரம், என்றால் ஸ்கூலில் கடைசிப்பீரியட் இருக்காது. அன்று சாயந்தரம் மார்பிள் தாள் ஒட்டிய ஒரு சப்பரம் போல ஒன்றை எடுத்துச் செல்வார்கள். அதில், ஒரு உருவமுமே இருக்காது. முஹரத்துக்கு இரண்டு நாளைக்கு முன் எங்கள் தெருவில் உள்ள வீடுகளிலெல்லாம், ஒரு மௌலவி வந்து ஜீனி வாங்கிப் போவார். இந்து. முஸ்லிம் என்றெல்லாம் பேதம் கிடையாது. முஸ்லிம்களே தெருவில் இல்லை. எங்கள் பக்கத்து வீட்டில் ஒருவர், இஸ்மாயில் சாயுபு என்று ஒருவர் மட்டும் உண்டு, அவர் கமெர்ஷியல் டேக்ஸ் ஆபிஸில் வேலை பார்த்தார்.
சீனியை வைத்து ஒரு வகையான உருண்டை செய்வார்கள். லேசான வாசனையோடு குளிர்ச்சியாக இருக்கும். முஹர்ரம் முடிந்ததும் கொஞ்சம் போல் மௌலவி கொண்டுவந்து தருவார். மௌலவி என்பதெல்லாம் இப்போது தெரிந்து கொண்ட நாமகரணங்கள். முஸ்லிம் பாய் என்றுதான் அப்போது தெரியும். இதெல்லாம் இன்றைக்கு ஐம்பது வருஷத்துக்கு முந்திய சமாச்சாரம்.
வீனாமானா ஷண்டிங் சைக்கிள்கடை பேட்டையிலும் உண்டு. அங்கே சைக்கிளை எடுக்கும் போது ஒரு சிகரெட் அட்டையில் அந்நேரத்தைக் குறித்து, ஒரு தேதி ரப்பர் ஸ்டாம்ப் அடித்துக் கொடுப்பார்கள். பெரும்பாலும் நன்கு அறிமுகமானவர்களுக்கே சைக்கிளை வாடகைக்கு கொடுப்பார்கள். சைக்கிளை இங்கே வந்து ஒப்படைத்துவிட்டு அரைமணிநேர வாடகை பத்துப் பைசா என்றால் இருபது பைசா தரவேண்டும். இரண்டு மடங்கு வாடகை. கொஞ்ச நாளைக்கு ’வீ.ம ஷண்டிங் சைக்கிள் ஷாப்’ பிரபலமாய் இருந்தது. ஒன்றிரண்டு சைக்கிள் காணாமல்ப் போய்விட்டது. அதோடு அதை நிறுத்தி விட்டார்கள். கதை வேறெங்கோ போகிறது. ’நாநா’வும் ராம மூர்த்தியும் செத்துப்பிழைத்த என்னைப் பார்க்க வந்திருந்தார்கள். இரண்டு பேருமே யூனிஃபாரத்தில் இருந்தார்கள். பஸ்ஸை நிறுத்திவிட்டு சாப்பிடுகிற நேரத்திற்கு வந்திருக்கிறார்கள் என்று புரிந்தது. பெண்கள் கல்லூரியின் இரண்டாவது ட்ரிப்பை முடித்து வந்திருக்கிறார்கள்.
காலையில் ஏழே முக்காலுக்கு அந்தக் கல்லூரிக்கான முதல் ட்ரிப். அதில்தான் எனக்கு ’வேலை.’ அவள் கல்லூரிக்கு காரில் போகாத...
more: http://koodu.thamizhstudio.com/thodargal_7_14.php
No comments:
Post a Comment