Wednesday, December 15, 2010

யாயும் ஞாயும் யாரா கியரோ - அறிமுகம்



தமிழவன்


தமிழவன் தமிழ் ஆய்வாளர்களில் முக்கியமானவர். இலக்கியவாதி, படைப்பாளி, விமர்சகர் மற்றும் திறனாய்வாளர். சிறுகதைகள் மற்றும் புதின எழுத்தாளர். தமிழ‌வன் 80களில் தமிழ் இல‌க்கிய‌த்தில் அமைப்பிய‌ல்வாத‌த்தை முன்னெடுத்துச் சென்ற‌வ‌ர். த‌மிழ் ஆய்வில் முன்சென்ற‌ த‌லைமுறையைத் தாண்டி ஆய்வுமுறையில் த‌ன‌க்கென்ற‌ த‌னியிட‌த்தைப் பிடித்த‌வ‌ர்.

அமைப்பியலிலும் பின் ந‌வீன‌த்துவ‌திலும் தேர்ந்த‌ இவ‌ர் த‌மிழின் மிக‌ச் சிற‌ந்த‌ ஆய்வு நூல்க‌ளை எழுதியுள்ளார். த‌மிழ‌வ‌ன் ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள், சரித்திரத்தி்ல் படிந்த நிழல்கள், ஜி.கே. எழுதிய மர்மநாவல், வார்ஸாவில் ஒரு கடவுள் போன்ற நாவல்களையும் பல்வேறு சிறுகதைகளையும் எழுதியுள்ளார். தமிழவன் ஸ்ட்ரக்சுரலிசம், படைப்பும் படைப்பாளியும், தமிழும் குறியியலும், தமிழில் மொழிதல் கோட்பாடு போன்ற ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார்.

தமிழவன் தொடர்ந்து தீராநதியில் "மரமும் ஓயாத காற்றும்" என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகளை எழுதி வருகிறார். தமிழ் வாழ்வும் அதன் மரபுத் தொடர்ச்சி சங்க காலம் தொடர்ந்து தமிழ் இலக்கியத்தில் இன்றளவும் தொடரும் உயிர்ப்பும் தமிழ் தேசியம் என அவர் எழுதும் கட்டுரைகள் தமிழ் பதிவுகளில் மிக நுட்பமானது.அவர் ஓர்மை என்ற சொல்லாடலை கட்டமைக்கிறார். ஓர்மை என்பது தமிழ் ஞாபகம். அது தொடர் ஓட்டம் போல் நூற்றாண்டுகள் கழிந்தும் மரபைக் கடத்தி மொழியை அதன் உன்னதத்துடன் இயங்க வைத்துக் கொண்டு இருப்பது. தொல்காப்பியனிடம் தொடங்கி அது எவ்வாறு பாரதி, அண்ணா, பிரபாகரன், பாரதிதாசன் , நேசமணி, க.நா.சு, புதுமைப்பித்தன் ஏனைய தமிழ் எழுத்தாளர்கள், போராளிகள் எனத் தொடர்ந்து தமிழ் தன் இருப்பை அர்த்தப்படுத்திக் கொண்டு இருப்பதன் அழகியலை நுண் சிந்தனையால் தருவிக்கிறார். மொழியென்பது சொற்கள் என்னும் அதிர்வலைகளால் கட்டப்பட்டிருக்கும் ஒரு மந்திரம். அதன் புலன் நம் மரபணுக்களில் உள் நுழைந்து மறைந்து கொள்கிறது.

தமிழவன் கூடு இணையதளத்திற்காக எழுதும் இக்கட்டுரையின் நோக்கம் தமிழின் புதிய தலைமுறைக்கு இலக்கியத்தை எடுத்துரைத்தலும் பொய்மையாக இலக்கியமென வியாபாரிகளால் கட்டமைக்கப்பட போலி பிரதிகளின் கட்டமைப்பை உடைத்தலும். அமைப்பியலிலும் பின் நவீன போக்கின் வழியிலும் திறனாய்வை நவீன வாசகர்களும், மொட்டுவிரிக்கும் எழுத்தாளர்களுக்கும் கற்றுக் கொடுத்தலே இதன் அடிப்படை. விவாதங்களும் தத்துவ மோதல்களும் என்பதே இக்கட்டுரைகளின் ஊடாட்டமாக இருக்கும். இதன் வழி தமிழில் திறனாய்வை கற்றுக் கொடுத்தல், சரியான இலக்கியப் புரிதலை ஏற்படுத்துதல், உலக இலக்கியங்களைக் காட்டிலும் தமிழில் ஒரு சிறந்த படைப்புமுறைமையை உருவாக்குதலே இதன் எண்ணம்.

அமைப்பியல், இசங்கள், நவீன இலக்கியம் என உங்கள் கேள்விகள், விவாதங்களை முன் வையுங்கள்.. அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:thamizhstudio@gmail.com



No comments:

Post a Comment