தமிழ் ஸ்டுடியோ.காம்-ன் 26வது குறும்பட வட்டம் மற்றும் தமிழ் ஸ்டியோ.காம் மூன்றாவது ஆண்டு துவக்க விழா சென்னை இக்சா மையத்தில் 23.11.2010 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர் மாலன், நடிகர் ரமேஷ் கண்ணா, இயக்குனர் பிரபு சாலமன், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஆகியோர் கலந்து கொண்டனர். ‘தமிழ் ஸ்டியோ’ குணா வரவேற்புரை வழங்கினார். முதல் நிகழ்வாக இரண்டு குறும்படங்கள் திரையிடப்பட்டன. தமிழ் ஸ்டுடியோ மூன்றாமாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நடத்திய ஒரு நிமிட குறும்பட போட்டியில் பரிசு பெற்ற படங்கள் 1. பொதி - சுப்புராஜ் (முதல் பரிசு) ரூ.2000 தமிழ் ஸ்டியோ அருண் தமிழ் ஸ்டியோ காம் பற்றி சில வதந்திகள் உலவுகின்றன. இதற்கு பின்னணியில் எந்த நிறுவனமும் கிடையாது. எந்த NGO அமைப்புடனும் தொடர்பு கிடையாது. தமிழ் ஸ்டுடியோ ஒரு சுயேச்சியான அமைப்பாகும். கடந்த இரண்டு ஆண்டுகளாக நானும் குணாவும் எங்கள் சொந்த பணத்தை செலவு செய்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். இந்த ஆண்டு முதல் லிவிங்சன், தயாளன் இருவரும் எங்களுடன் சேர்ந்துக் கொள்கின்றனர். கடந்த 10 மாதங்களாக பவுர்ணமி கூட்டம் நடத்தி வருகிறோம். பவுர்ணமி இரவில் ஒரு குறும்படம் மற்றும் ஒரு உலக படம் திரையிட்டு விவாதிக்கிறோம். இதன் நோக்கம் குறும்பட ஆர்வலர்களுக்கு திரைப்பட ரசனையை வளர்க்க வேண்டும் என்பதாகும். குறுந்திரை பயணம் என்ற நிகழ்ச்சி மூலம் கிராமங்களுக்கு குறும்படங்களை கொண்டு செல்கிறோம். கிராம மக்கள் ஆர்வமாக உள்ளனர். நீங்கள் ஒத்துழைப்பு அளித்தால் உங்கள் கிராமங்களுக்கு கொண்டு செல்லலாம். கொஞ்சம் தேநீர் நிறைய அரட்டை மூலம் குறும்பட ஆர்வலர்களை இலக்கிய வாதிகளுடன் சந்திக்க வைக்கிறோம். குறும்பட ஆர்வலர்களின் இலக்கிய ரசனை மேம்பட இது உதவியாக இருக்குமென நம்புகிறோம். வரும் 27ந் தேதி முதல் புதுச்சேரியில் தமிழ் ஸ்டுடியோ.காம் கிளை செயல்பட இருக்கிறது. துவக்க விழாவிற்கு விருப்பம் உள்ளவர்கள் வரலாம். படம் எடுக்கலாம் வாங்க என்ற திட்டத்தின் மூலம் குறும்படம் எடுக்க காமிரா, படத்தொகுப்பு உதவிகள் செய்து தருகிறோம். குறும்பட இயக்குனர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் படிமை என்ற பயிற்சி இயக்கத்தை இந்த மாதம் தொடங்க இருக்கிறோம். இதன் மூலம் ஆர்வம் உள்ளவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கிறோம். குறும்படங்களை விற்பனை செய்வது சம்மந்தமான வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறோம். விரைவில் குறும்பட விற்பனை தொடங்கப்படும். இங்கு மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் குறும்பட விற்பனை செய்ய திட்டமிட்டு வருகிறோம். குறும்பட ஆர்வலர்களுக்கு பயன்படும் வகையில் நூலகம் (புத்தகங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் மற்றும் உலக படங்கள்) அமைக்கவும் முயற்சி செய்து வருகிறோம். எல்லா நிகழ்ச்சிகளையும் எவ்வித வியாபார நோக்கமும் இல்லாமல்தான் செய்து வருகிறோம். ஆர்வலர்கள் அவற்றை சிறப்பான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இயக்குனர் பிரபு சாலமன் எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்தமைக்கு முதலில் நன்றி கூறி விடுகிறேன். நிறைய பேர் கதை சொல்லி விட்டால் தன்னை இயக்குனர் என நினைத்துக் கொள்கின்றனர். என்னுடைய பாட்டிக்கூட நிறைய கதைகள் சொல்வார். கதை சொல்வது என்பது வேறு, இயக்கம் என்பது வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இயக்குனராக கடுமையாக உழைக்க வேண்டும். என்னுடைய 16 வருட உழைப்பு மூலம் நான் கற்ற விசயங்கள்தான் இன்று மைனா திரைப்படம் வெற்றிகரமாக ஓட காரணமாகும். மைனா படம் திராவிடர்களின் சினிமா என ரஜினி பாராட்டினார். இப்படத்திற்காக சுமார் 1200 கிலோ மீட்டர் பயணம் செய்தோம். யதார்த்தமாக அதேசமயம் வியபாரத்தனம் குறையாமலும் மைனாவை எடுக்க விரும்பினேன். அதை சிறப்பாக செய்துள்ளேன் என்பதை தான் மைனாவின் வெற்றி நிரூபிக்கிறது. குறும்பட, திரைப்பட ஆர்வலர்களுக்கு தமிழ் ஸ்டியோ.காம் ஒரு பெரிய வாய்ப்பை தருகிறது. அதை நீங்கள்தான் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இனி வரும் நாட்களில் நானும் தமிழ் ஸ்டுடியோவுடன் சேர்ந்து செயல்படுவேன் என கூறிக்கொண்டு விடை பெறுகிறேன். நடிகர் ரமேஷ் கண்ணா இரண்டு மாதங்களுக்கு முன்பே அழைத்தனர். வர முடியாமல் போய்விட்டது. இன்று கலந்து கொள்வது மகிழ்ச்சியாக உள்ளது. அருண், குணா இருவரின் முயற்சிகள் கனவுகள் சிறப்பாக உள்ளது. அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். குறும்பட ஆர்வலர்கள் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என்னிடம் சுமார் 5000 உலக படங்கள் உள்ளன. அதை தமிழ் ஸ்டுடியோ பயன்படுத்திக் கொள்ளலாம். ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் எனக்கு எழுதுவது எளிது, மேடையில் பேசுவது சிரமம். இருந்தாலும் சுருக்கமாக பேசிவிடுகிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என்னை ஒரு தொடர் எழுத அருண் கேட்டார். நானும் எழுதுவதாக ஒப்புக்கொண்டு யாவரும் கேளிர் என்ற தொடரை எழுதினேன். எழுதும்போது பல விசயங்களை கற்றுக் கொண்டேன். நான் தான் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். அருண் இங்கு பேசும்போது மிகவும் தன்னம்பிக்கையாக பேசினார். அவருடைய தன்னம்பிக்கைக்கு காரணம், திரை ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல வழிக்காட்டல் நிகழ்ச்சியாகும். ஆர்வலர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எழுத்தாளர் மாலன் இந்த நிகழ்ச்சிக்கு என்னை ஏன் அழைத்தார்கள் என அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. இங்குள்ள அனைவரும் சினிமா சார்ந்தவர்கள். நான் சினிமா மீது கடும் விமர்சனம் வைத்துள்ளவன். இன்னும் கொஞ்ச நாளில் பெரியார் சொன்னது போல் ஐந்து பாவங்களில் ஒன்று சினிமா என்ற மனநிலைக்கு கூட சென்றுவிடலாம். எழுபதுகளில் உலக படங்களை தொடர்ந்து பார்த்து இருக்கிறேன். உலக படங்களை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் திரையிடலுக்குக் கூட ஏற்பாடு செய்துள்ளோம். 16எம்எம் -ல் குறும்படம் எடுத்தேன். அதில் ஏற்பட்ட அனுபவங்கள் பல. சினிமா நமக்கானது அல்ல. எழுத்துதான் நான் பயணிக்க வேண்டிய பாதை என்ற முடிவுக்கு வந்தது மிக முக்கியமான அனுபவமாகும். குறும்படம் என்பது ஒரு பாதிப்பை தரக்கூடியது. உங்களை பாதித்த ஒரு விசயத்தை மட்டும் கூறுவது. என்னை பொறுத்தவரை ஊடகங்கள் செய்தியை சுமந்து செல்ல வேண்டும். அது எப்படி என்பது படைப்பாளியின் சுதந்திரம். இறுதியாக தமிழ் ஸ்டுடியோ அருண் நன்றி கூறினார். பண்பலை வானொலி தொகுப்பாளர் ராஜசேகர் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கினார். எழுத்து - சா.ரு. மணிவில்லன் |
Tuesday, December 7, 2010
தமிழ் ஸ்டுடியோ.காம் மூன்றாமாண்டு தொடக்க விழா... (பதிவு எண்: 475/2009)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment