Showing posts with label ve.sa. venkat saaminathan. Show all posts
Showing posts with label ve.sa. venkat saaminathan. Show all posts

Monday, August 29, 2011

தமிழ் மகனின் வெட்டுப்புலி - வெங்கட் சாமிநாதன்



தமிழ் மகனின் வெட்டுப்புலி

திராவிட இயக்க அரசியல் சார்ந்த முதல் இலக்கிய பதிவு


வெங்கட் சாமிநாதன்

கடந்த ஒரு நூற்றாண்டாக தமிழ் நாடு பெரும் சமூக மாற்றங்களை, அரசியல் மாற்றங்களை, கண்டிருக்கிறது. இம்மாற்றங்களின் விளைவாக வாழ்க்கை மாறியுள்ளது. வாழ்க்கை மதிப்புகளும் மாறியுள்ளன. ஆனால் இந்த அரசியல் போராட்டங்களோ அவற்றின் பின்னிருந்த உந்துசக்திகளோ பார்வைகளோ மாறிய வாழ்க்கை இலக்கியத்தில், கலைகளில் பதிவு பெற்றதில்லை. காரணம் இவை எவற்றிலும் உண்மை இருந்தது இல்லை. சத்தம் பெரிதாக இருக்கலாம். ஆனால், ஆழ்மனதில் ரத்தத்தில் கொதிநிலையில், அனுபவத்தில் இல்லாத எதுவும் இலக்கியமாக கலைகளாக மலர்வது சாத்தியமில்லை.

குறிப்பாக 1916—ல் பிரகடனப் படுத்தப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரில் பிறந்து, பல அவதாரங்களில் பல்கிப் பெருகி, இன்று தமிழ் நாட்டின் பெரும் அரசியல் சமூக சக்தியாக விளங்கும் திராவிட இயக்கமும் சரி, அதற்குச் சற்றுப் பின் தோன்றி இன்று வரை சமூகத்திலும் சரித்திரத்திலும் எந்த வித பாதிப்பையும் விளைவித்திராத பொது உடமை இயக்கமும் சரி, கிட்டத் தட்ட ஒரு நூற்றாண்டு கால இவற்றின் தொடர்ந்த இருப்பில் இவ்விரண்டின் கூச்சல், மேடைப் பேச்சுக்களிலும், பத்திரிகைப் பிரசாரங்களிலும் மிக உரக்க இருந்த போதிலும், இவை பிரசாரமாகவே நின்றுவிட்டன, ஆதியிலிருந்து இன்று வரை. இவையெல்லாம் என்னதான் நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், சினிமா என்று எல்லா இலக்கிய, கலை வடிவங்களிலும் எழுதிக் குவிக்கப் பட்டுக்கொண்டே இருந்தாலும், அவை குப்பைகளாகத் தான் மலையென பெருகிக் கிடக்கின்றன.

ஒன்று விலகி இருந்து சாட்சி பூதமாக தன் பார்வையை வைக்கத் தெரிந்திருக்கவேண்டும். அல்லது எந்தத் தரப்பிலிருந்தாலும், கம்யூனிஸ்ட் கட்சியிலோ அல்லது திராவிடக் கட்சிகளிலோ எதிலிருந்தாலும், தனக்கும் தன் அனுபவத்துக்கும் உண்மையாக நேர்மையாக இருக்கத் தெரியவேண்டும். இரண்டுமே இதுவரை சாத்தியமாகவில்லை. இரண்டு தரப்புகளுமே தானே நம்பாத கொள்கைகளின் பிடியில் சிக்குண்டு அவற்றை உரத்து சத்தமிட்டு கிடப்பவை. அதில் சுயலாபம் இருப்பதால் தாம் சிக்குண்டு கிடப்பதில் அவர்களுக்கு விருப்பம் தான். அதில் திளைத்துக் கிடப்பவர்கள். அவர்கள்.

ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. இந்த இரண்டு கட்சிகளும் ஒரு நூற்றாண்டு காலமாக நீடித்திருப்பதும், தமிழ் மண்ணில் வேரூன்றி பலம் பெற்றிருப்பதும் அவற்றில் உண்மை இல்லாது சாத்தியமா?, அதற்கு மக்கள் வரவேற்பும் அவர்கள் கொள்கைகளில் மக்களுக்கு நம்பிக்கை இல்லாது இந்த வெற்றி சாத்தியமா என்று.. சாத்தியமாகியிருப்பது இரு தரப்பினரின் கோட்பாட்டின் பலத்தால் அல்ல. இரு தரப்பினரின் கொள்கை நடைமுறை என்ற இருமுக வாழ்வின் காரணமாகத் தான். இது தலைவனிலிருந்து தொண்டன் வரை புரிந்து கொள்ளப் பட்டுள்ளதன் காரணமாக, இருமுக வாழ்வே ஒரு நூற்றாண்டு காலமாக சாத்தியமாகியுள்ளது.

தமிழ் மகனின் வெட்டுப்புலி நாவல் தமிழ் நாட்டின் ஒரு சின்ன பகுதியின் ஒரு நூற்றாண்டு மக்களின் வாழ்வையும் சிந்தனையோட்டத்தையும் ஆசைகளையும் சொல்கிறது. அது மக்களின் வாழ்க்கையும் ஆசை நிராசைகளும். அந்த மக்கள் சென்னையை அடுத்த ஒரு ஐம்பது – நூறு மைல்களுக்குள்ளான மண்ணில் வாழ்கிறவர்கள்.

வெட்டுப் புலி படம் ஒட்டிய தீப்பெட்டிகளை நான் பள்ளியில் படித்த காலத்தில் பார்த்திருக்கிறேன். சொல்லப்போனால் 1940 களில் நிலக்கோட்டையில் தீப்பெட்டி வாங்கினால் அது வெட்டுப் புலி படம் ஒட்டியதாகத்தான் இருக்கும். இடது பக்கம் ஒரு வளைந்த அரிவாளை, கதிர் அறுக்கும் அரிவாளை ஓங்கிய கையும் முழங்காலுக்கு தூக்கிக் கட்டிய வேட்டியுமாக ஒரு வாலிபன். அவனோடு ஒரு நாயும் இருக்கும். அவன் முன்னால் புதரிலிருந்து சீறும் ஒரு புலி. இது முப்பதுக்களில் நடந்த கதை என்பது இப்போது தமிழ் மகனின் இந்த நாவலிலிருந்து தெரிந்து கொள்கிறேன்.

இது ஒரு பெரிய விஷயமா என்றால் தனி ஒருவனாக ஒரு புலியை அரிவாளால் எதிர்கொண்டு வெட்டி வீழ்த்தியது ஒரு தனி மனித சாகஸம் தான். ஆனால் அது இவ்வாறு கொண்டாடப்படுவது கிட்டத் தட்ட அந்த காலகட்டத்தோடு சற்று முன்னும் பின்னுமாக இணைந்த பெரிய சமூக நிகழ்வுகள். இரண்டுமே தமிழ் வாழ்க்கையின் சமூகத்தின், சரித்திரத்தின் குணத்தை நிர்ணயித்தவை. இரண்டும் அதற்குச் சற்று முன்னரே தொடங்கி விட்டவை தான்.

எங்களூரில் கிட்டத்தட்ட இம்மாதிரி ஒரு சின்ன நாட்டார் காவியமாக சிறப்பிக்கப்பட்ட நிகழ்வுகள் உண்டு. ஒன்று தென் மாவட்டங்களில் அந்நாட்களில் மிகவும் பரவலாகப் பேசப்பட்ட, ஜம்புலிங்கம் என்ற ஒரு பெரிய கொள்ளைக்காரனின் சாகசங்கள். மக்களால் கொண்டாடப்பட்டவன். பின் என் சின்ன வயசில் எல்லோரும் வியந்து வாய் பிளந்து பேசும் தீச்சட்டி கோவிந்தன் என்றே மக்களால் பட்டம் தரப்பட்ட ஒரு சப் இன்ஸ்பெக்டரின் சாகஸங்கள். கோவிந்தன் தீச்சட்டியைத் தூக்கி முன்னால் செல்ல, அவரைப், பின்னால் தொடர்ந்த காவலர்கள் சுமந்து வந்த பாடையில் துப்பாக்கிகளை அடுக்கிப் போர்த்தி பிணமென மறைத்து மயானத்துக்கு எடுத்துச் சென்ற சாகஸ வரலாறு.. அம்மாதிரி ஒரு கதாநாயகன் ஆன சப் இன்ஸ்பெக்டர் என்ன, போலீஸ் டைரக்டர் ஜெனரல் கூட யாரும் இல்லை. இந்த 70 – 80 வருட காலத்தில்.

வெட்டுப்புலி சம்பந்தமில்லாது ஒட்டவைக்கப்பட்ட சமாந்திர கால நிகழ்வு என்றில்லை. இந்த நாவல் சொல்லும் கதையின் இன்னொரு இழையின் மூத்த தலைமுறைக்காரர் சின்னா ரெட்டி தான் வெட்டுப் புலி தீப்பெட்டி லேபிளில் காணும் ஹீரோ. நாவல் தொடங்கும் தசரத ரெட்டியின் சகலை. அந்த ஆரம்பம் மிக அழகாகவே சொல்லப்பட்டிருக்கிறது. அந்த சாகஸ நிகழ்வின் சாதாரணத்துவத்துக்கு மேலே அது வீர காவியமாக ஆக்கப் படவில்லை. அந்த சாதாரண நிகழ்விலேயே அதன் எதிர்பாராத தன்மையில் எதிர்கொண்டதிலேயே தான் சாகஸம். அனேகமாக நாவல் முழுதும் இந்த சாதாரண தோரணையிலேயே நிகழ்வுகள் சொல்லப்படுகின்றன. அதன் இடைவிடா தொடர்ச்சி தான் சரித்திரமாக நம் எல்லோரையும் ஆக்கிரமித்துக்கொண்டுள்ளது.

பத்திருபது அய்யர்மார்கள் இருந்த அக்கிரகாரம் இப்போது இரண்டு மூன்று பேர் கொண்ட அகரமாகக் குறுகிவிட்டது அந்த முப்பதுகளிலேயே. அவர்கள் ஒரு பொருட்டே இல்லை. முப்பதுக்களில் மற்ற இடங்களில் சுதந்திரப் போராட்டம் பெரும் கொந்தளிப்பாக இருக்கலாம். ஆனால் ஜெகநாதபுரத்தின் .தசரத ரெட்டிக்கு அது “உபயமத்த வேலை” அது ஜமீந்தார்களும், அங்கு ஒரு மணி ஐயர் கணக்குப் பிள்ளையாகவும், குதிரைமேல் சவாரி செய்து வெள்ளைக்காரன் வருவதுமான காலம். விவசாயம் செய்யும் ரெட்டியார்கள். ஆனால் நாமம் போட்டு வைணவர் களானால் நாயக்கர்கள்,. இன்னும் சற்றுத் தள்ளி தெற்கே போனால் படையாச்சி. மதராஸ் பக்கம் போய் ”ரெட்டியார்னு சொன்னா தெலுங்கனான்னு கேக்கறான்,”. என்று இப்படி சாதி பற்றிய பிரக்ஞை தான் முன்னிற்கிறது.

ஒர் இடத்தில் தஸரத ரெட்டி சொல்கிறார், ”சாதியெல்லாம் ரொம்ப நாளா வந்திட்டிருக்கு. அதுலே ஏதோ இருக்குன்னு தான் இப்படி யெல்லாம் செஞ்சு வச்சிருக்காங்க. நம்ம காலத்திலே எப்படியாவது இதைக் கட்டிக் காத்துட்டோம்னா போதும்” என்று நினைக்கிறார். நண்பர்களிடையே பேச்சு வருகிறது. “வெள்ளைக்காரன் மாதிரி இவனுங்களும் (பாப்பானுங்களும்) காபி குடிக்க ஆரம்பிச்சுடானுங்க. அவன் மாதிரி உடுத்த, அவன் பாஷைய பேச ஆரம்பிச்சுட்டானுங்க. ஆனா அவன் மாத்திரம் நாட்டை விட்டுப் போயிடனும்” என்று பேச்சு நடக்கிறது. அந்தப் பேச்சு செய்யும் வேலையையும் தொடுகிறது. ”அவன் படிக்கிறான். நம்ம பசங்களுக்கு செருப்பு தைக்கணும், வண்டி ஒட்டணும். படிப்புன்னா மாத்திரம் கசக்குது. என்னடான்னா, அவன் செய்யறது ஒசத்தி, நாம செய்யறது மட்டம்னு ஆயிப்போச்சு. ஒவ்வொத்தன் அவனுக்கு தெரிஞ்சதைத் தான் செய்யறான்”. என்று பேசிக் கொள்கிறார்கள். இதுக்கெல்லாம் முத்தாய்ப்பா வருவது “பாப்பானைத் திட்டனும்னா அப்[படி ஒரு ஆவேசம் வருதுய்யா”. என்கிறார் கணேச ரெட்டி. ஆவேசம் வருது. திட்டணும் .

ஆனால் ஏன் அப்படி ஆவேசம் வருது என்று கேட்டால் அதற்கு பதில் அவரவர் வாழ்க்கையிலிருந்து கிடைப்பது இல்லை. உதாரணத்துக்கு கருணாநிதியிடம் பொங்கிப் பெருகும் அதீத பார்ப்பன துவேஷத்துக்கு காரணம் என்ன என்று அவரது நெஞ்சுக்கு நீதியின் அவ்வளவு பாகங்களிலும் கிடைக்காது. அவரது திருக்குவளை வாழ்க்கையிலும் கிடைக்காது. அவர் அதைப் பெற்றது பனகல் மகாராஜைவைப் பற்றிப் படித்ததிலிருந்து தான் என்று சொல்கிறார். அதே கதைதான் தசரத ரெட்டியாருக்கும் கணேச ரெட்டியாருக்கும். எல்லாம் பொது வெளியில், காற்றில் மிதந்து வரும் பரிமாறல்கள் அவற்றின் நியாயத்தை விட அவை அவர்களுக்கு திருப்தி அளிப்பவையாக இருக்கின்றன என்று தான் சொல்லவேண்டும். நாவலின் 370 சொச்சம் பக்கங்கள் அத்தனையிலும் எங்கும் யாரும் என்ன காரணங்களுக்காக இத்துவேஷத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான காரணங்கள் கிடைக்காது. இப்படி கிடைக்காமல் போவது நிச்சயமாக அனுபவம் சார்ந்தது. இது வரை நாம் கண்ட திராவிட, கம்யூனிஸ் எழுத்துக்கள் போல கொள்கைகள் சார்ந்து பின்னப்பட்ட கதையோ வாழ்க்கையோ மனிதர்களோ அல்ல. .பாப்பானிடம் காணும் ஒவ்வொன்றையும் பார்த்து உள்ளூர கொதித்துக்கொண்டிருக்கும் பொறாமை தான் துவேஷத்துக்கான காரனங்களைத் தேடச் சொல்கிறது.

தசரத ரெட்டியும் அவர் மனைவி மங்கம்மாவும் பேசிக்கொள்கிறார்கள். தசரத ரெட்டி சொல்கிறார் மனைவியிடம்.

“குருவிக்காரன், பள்ளி, பறையன், செட்டி, கம்மான் எல்லாம் சமம்னு சட்டம் வரப்போவுதாம். அப்புரறம் எல்லாரும் எல்லா வேலையும் செய்யவேண்டிதான்”.

அதற்கு மங்காத்தா பதில், “நல்லாருக்கு. நாம அணில் அடிச்சி சாப்பிடணும், அவன் வந்து வெள்ளாமை பண்ணுவான்.”

இது இந்த இரண்டு பேருடன் மாத்திரம் முடிகிற விஷயம் இல்லை. ஆரம்பித்து வைத்த பனகல் மகாராஜாவிலிருந்து, ஈரோட்டு ராமசாமி நாயக்கரிலிருந்து தொடங்கி திருமாவளவனும் டாக்டர் கிருஷ்ணசாமியும் ஒருவர் முகம் ஒருவர் பார்த்துக்கொள்ள விரும்பாத இன்று வரை நம்மூர் கிராமத்து கூரை வேய்ந்த சாயாக் கடையின் தனித் தம்ளர் வரை.

பாப்பானைத் திட்டுவதில் தான் ஒரே குரல் இவர்களுக்கு. அதனால் தான் மங்காத்தாவுக்கு இந்த சிக்கலை தசரத ரெட்டி விளக்கமாகச் சொல்கிறார்.

“குருவிக்காரனும் நாமும் சமம்னு ஆயிடணும்னு இல்லடி. பாப்பானும் நாமும் சமம்னு சொல்றதுக்குத் தாண்டி சட்டம் போடச் சொல்றாங்க.”

மங்காத்தாவுக்கு இது ஒன்றும் சரியாகப் படவில்லை. “அவன் மேரி நாமும் ஆவணும்னா கறி மீனை விட்டுப்புட்டு தயிர் சோறு சாப்பிட்டுக்கினு நாக்கு செத்துப் போக வேண்டியது தான். அடச்சீ, நாம எதுக்கு பாப்பானை மாரி ஆவணும்”

இந்தக் கேள்வி பல ரூபங்களில் இன்று வரை எல்லா திராவிட அரசியல் சாரந்தவர்கள் குடும்பங்களிலும் தலைவர் முதல் தொண்டன் வரை கேட்கப்படும் கேள்வி தான். நமக்குத் தெரியும் இந்தக் கேள்வி இன்றும் தொடர்கிறது, மூன்று தலைமுறை வயதான, இன்று இந்தப் போக்கிற்கே அச்சாணியாக தம்மை சந்தர்ப்பம் நேரும்போதெல்லாம் விளம்பரப் படுத்திக்கொள்ளும் தலைமைகளின் வீடுகளிலும் தொடர்கிறது. வேறு வேறு தொனிகளில், அழுத்தங்களில், வார்த்தைகளில். அப்போது ஒரு தரப்பு உள்ளார்ந்த நம்பிக்கையின், வளமையின் வழி வாழும்போது, மறு தரப்பு, மூர்க்கம், முரட்டு அதிகாரம் வழி ஆள்கிறதையும் பார்க்கலாம். இந்த நாவலிலேயே அனேக பக்கங்களில் விரியும் இதற்கான சான்றுகளை, ஒரு சில என சுட்டிக்காட்டலாம்.

இது இரண்டு தலைமுறைகள் கடந்து அறுபதுகளில் நடப்பது. என்றும் நிகழும் வாழ்க்கையில் ஒரு நாளைய ஒரு நேர காட்சி. ஒரு சோத்துப் பதம். இது தியாகராஜன் என்னும் ஒரு தீவிர திமுகவுக்கும் அவனது புது மனைவி, தெலுங்குக் குடும்பம், ஹேமலதா என்னும் ஒரு அப்பாவிக்கும் இடையில்

“இரவு சாப்பாடெல்லாம் முடிந்து சந்தோஷமான மன நிலையில் இருக்கும் போது, சாதாரணமாகப் பேச்சு எடுக்கிறாள் ஹேமா

“ஏங்க, ஐயருங்கள திட்டுறதை விட்டுட்டு நாமளும் அவங்க மாதிரி ஆனா என்னாங்க”

அதெல்லாம் நடக்ககூடிய காரியம் இல்லடி.

“நாமளும் நாமம் போட்டுக்கிட்டு தயிர் சாதம் சாப்பிடணும், அவ்வளவு தானே”

பதில் சொல்லாது அவன் திசை திருப்பவே, புனிதா கேட்கிறாள் திரும்பவும்.

“நான் சொன்னதுக்கு பதிலைச் சொல்லுங்க. அவங்க மாதிரி சுத்தபத்தமாக இருக்க முடியலைன்னு தானே அவங்க மேலெ பொறாமை?”

“அடி செருப்பாலே”.. மென்ற வெற்றிலைச் சாறை பிளிச் சென அவள் முகத்தில் துப்பினான் .”பைத்தியக்காரி…..முட்டாள்….. தயிர் சாதம் சாப்பிட்டா நீயும் ஐயர் ஆயிடுவியா?, கலெக்டர் ஆயிடுவியா?, ஜட்ஜ் ஆயிடுவியா?” ஆத்திரம் தாளாமல் அப்படியே இழுத்து முதுகில் நாலு சாத்து சாத்தினான்”

இது ஒரு காட்சி.

இதுவே குடும்பத்தை மீறி வெளி உலக வாழ்க்கையிலும் எந்த காரணமும் இல்லாது பொறாமை, தன் இயலாமை, பாப்பான் என்ற ஒரு சொல்லே மூர்க்கத்தனத்துக்கு இட்டுச் செல்கிறது.

இடையிடையே நாவல் எங்கிலும் எழுபது எண்பது வருட கால நீட்சியை உள்ளடக்கிய சரித்திரத்தில் வேறு பல மாற்றங்களையும் ஆங்காங்கே பதித்துச் செல்கிறார். தமிழ்மகன்

.இதற்கு முந்திய போன தலைமுறையிலேயே, “அரிசிச் சோறு சாப்பிடும் ஆசை பிள்ளைகளூக்கு வந்து விட்டது பற்றிய கவலை சின்னா ரெட்டிக்கு வந்துவிடுகிறது. அதனால் நாலு ஏக்கர் நிலம் நெல்லுக்கு என ஒதுக்க வேண்டி வந்துவிடுகிறது.

.பல இடங்களில் இவையெல்லாம் அப்போது நடந்தனவா என்ற சந்தேகம் எனக்கு எழுந்ததுண்டு. முப்பதுகளில் டீசல் மோட்டார் வைத்து நீர்ப்பாசனம் வந்து விட்டதா என்ற சந்தேகம் கூட்டணி என்ற சொல் அந்தக் கால அரசியலிலேயே வரவில்லை. பொது வாழ்க்கையில் வந்து விட்டதா? 1940 களில் நான்காம் ஜார்ஜ் தலை போட்ட ஒரு ரூபாய் தாள் இருந்ததா? அந்தக் காலத்தில் டெர்ரிலீன் சட்டைகள் வந்தனவா? இது போன்று ஆங்காங்கே படிக்கும்போது தட்டுப் படும்போது புருவம் உயரும். இருந்தாலும், ஆசிரியர் மிகவும் கஷ்டப்பட்டு அவ்வக் கால நடப்புகளையும் மாறி வரும் சூழல்களையும் பதித்துச் செல்கிறார் என்று நாவல் முழுதும் தெரிவதால், ஒரு வேளை இருக்கலாம் என்று சமாதானம் கொள்கிறோம். இது மட்டுமல்ல இன்னும் பல தகவல்களையும் தாண்டிச் செல்கிறோம். அதனால் மூன்று நான்கு தலைமுறைகளின் தமிழ் வாழ்க்கை அந்த இரண்டு வடக்கு மாவட்டங்களில் அதன் மைய நீரோட்டத்தைப் பதிவு செய்வதில் பெரும் தவறுகள் ஏதும் நிகழ்ந்துவிட்டதாகத் தோன்றவில்லை. விவரம் தெரிந்து தான் இத்தகவல்களை சேர்த்திருப்பார் என்ற நினைப்பில் மேல் செல்கிறோம்.

இருபதுகளில் தொடங்கும் இத்தலைமுறைக் கதை திராவிட அரசியலைத் தொடுவதோடு தமிழ் வரலாற்றின் போக்கிலேயே சினிமாவையும் தன்னுள் இணைத்துக்கொள்கிறது..முதல் சினிமாப் படம் தியாகராஜ பாகவதரை வைத்து எடுத்த படத்திலிருந்தே இந்த இணைப்பு தொடங்கிவிடுகிறது. சினிமா எடுக்க வேண்டும் என்ற ஆசை பிடித்தலையும் ஊத்துக்கோட்டை ஆறுமுக முதலியாரிலிருந்து இது தொடங்கிவிடுகிறது. படம் பார்க்கும் ஆசையிலிருந்து சினிமா எடுக்கும் ஆசை வளர்கிறது. மதராஸுக்கு பயணம். மாம்பலத்தில் வீடு வாங்கி குடியிருக்கும் அண்ணன் கணேசன் வீட்டுக்கு வருகிறார். அண்ணனிடம் தன் திட்டத்தைச் சொல்லி அரை நோட்டு ஆகும்கறாங்க” என்கிறார். அண்ணனுக்கு ரொம்ப சந்தோஷம். தம்பியின் தைரியத்தைப் பார்த்து. அவர் கொடுக்கும் ஒரே ஆலோசனை” ”இந்தப் பாப்பானுவ நுழையறதுக்கு முன்னாலே நீ நுழைஞ்சிடு. ”நாம பாப்பனுவ கிட்டே தான் அடிமையா இருக்கோம் வெள்ளைக்காரங்கிட்டே இல்லே. அதான் பெரியார் சொல்றாரு. ரெண்டாயிரம் வருஷமா அடிமையாயிருக்கோம். இதுதான் பெரிய விஷயம். இதை வச்சு படம் எடுத்துடு”. என்றவர் அடுத்து, “நம்ம சோடா ஃபாக்டரி வஜ்ரவேலு முதலியார் படம் எடுக்கறாரு. அவரிட்ட போய் ஜஸ்டிஸ் பார்ட்டி கணேசன் அனுப்பினார்னு சொல்லு” என்று வழி காட்டுகிறார். அங்கு போன இடத்தில் கே.பி.கேசவனின் நாடகத்தை, எம்.கே ராதாவின் அப்பா கந்தசாமி முதலி படம் எடுக்கப்போவதாகவும் அதில் பங்குதாரராகலாம் என்றும் தெரிகிறது.

ஆக, முதலியார்கள் நிறைந்திருக்கும் தொழிலில் பாப்பான் நுழைஞ்சிடப்போறானே என்று கவலையில் அடிமைத்தனம் எங்கு வந்தது.? போட்டியும் பொறாமையும் தானே. கவலைக்குக் காரணம்? இது ஆரம்பம். இதன் அடுத்த, அல்லது அதற்கும் அடுத்த கட்டம் தலைமுறைகள் தாண்டி ஐம்பது-அறுபதுக்களில் தொடர்கிறது அதே பொறாமையுடன்.

இப்போது அறுபதுகளுக்கு வந்தால், தியாகராஜனைச் சந்திக்கலாம். முதலியார் சாதியில் பெண் இருக்கக் கூடாது.

நாயுடு என்று சொன்னார்கள். தமிழ் தெரியாது தெலுங்கு பேசுகிறவள். ஐயரு இல்லாம செய்துகிட்ட சீர்திருத்த மணம் அவளையும் தன்னைப் போல் பெரியார் பக்தையாக்கிவிட முயன்றால், அவள் “எல்லாரையும் சமமா பாக்கணும்னு சொல்றீங்க… அப்புறம் இது வேறே அது வேறேனு சொல்றீங்க. எதுக்கு இந்தப் பித்தலாட்டம்கறா? என்று அவனுக்கு எரிச்சல். கடைசியில் திராவிட இயக்கக் கொள்கை தான் இதற்கு பதில் சொல்லி மனம் சமாதானமடையச் செய்யும் போலிருக்கிறது.

“தன்னைப் பழி வாங்க பார்ப்பனர் செய்த சதி போல இருந்தது அவனுக்கு மனைவி வாய்த்தது.” பிரசினை எதுவாக இருந்தாலும் பாப்பானைத் திட்டினால் பிரசினை தீர்ந்துவிடுவதாகத் தோன்றுகிறது.

வீட்டில் மாத்திரம் இல்லை. அவன் வேலை செய்யும் ஏஜீஸ் ஆபீஸிலும் அவனுக்கு எதிரான பார்ப்பன சதி தான்.

அவன் ஆபீஸில் ஒரு பார்ப்பனர் நாடகங்கள் போடுவதிலும் சினிமாவுக்கு வசனங்கள் எழுதுவதிலும் ஈடுபட்டிருந்ததை அறிந்ததும் அதுவும் அவன் தன் ரேங்கில் இருப்பவன் அவன் எம் ஜி ஆர் படங்களுக்கு வசனம் எழுதும் அளவுக்குப் போனது அவனுக்கு தாளமுடியாத ஆத்திரமாக வந்தது. இதுவும் பார்ப்பன சதி இல்லாமல் வேறென்ன?

அவனை யாரோ ஒரு பார்ப்பான் என்று உதறி எறியவும் முடியவில்லை. அந்த பாப்பானுக்கு ஒரு ரசிகர் கூட்டம் வேறெ. “பால சந்தர் படம்” என்று புகழ் பரவியது. அடுதடுத்து அந்த பாப்பான் வளர்ந்து கொண்டே போனால்? நாணல், எதிர் நீச்சல், பாமா விஜயம் மேஜர் சந்திரகாந்த், சர்வர் சுந்தரம் என்று அந்த வளர்ச்சி பெரிய தலைவலியாக இருந்தது. அவர் பெயரை “பால சந்திரனோ, பால சுந்தரமோ என்று தெனாவட்டாக உச்சரிப்பான்.

”என் கூட வேலை செஞ்ச பய” என்று சொல்வான். பின் ”என் கீழே வேலை செஞ்சவன்” என்றும் சொல்லிப் பார்த்தான்..

லட்சுமண ரெட்டியார் திராவிட கழக அனுதாபி, அப்பப்போ படிப்பகம் அது இது என்று உதவுவதோடு நிற்பவர். அவர் தன் குடும்பத்தையே ஒன்றும் செய்ய முடிந்ததில்லை. அவர்கள் சம்பிரதாயத்திலேயே மூழ்கியவர்களாக இருந்தார்கள். இன்னும் ஏதாவது செய்யலாம் என்று தீவிர கழகக் காரரான மணி நாயுடுவை அண்டலாம் என்றால் அவர் சாராயக் கடையை ஏலம் எடுப்பதிலும் கவர்ன்மெண்ட் காண்டிராக்ட் ஏலம் எடுக்க அரசுத் தரகர்களுக்கு லஞ்சம் தருபவராக மாறிப்போனதால் அந்தத் தொடர்பும் விட்டுப் போகிறது.

முன்னர் ஜஸ்டீஸ் பார்ட்டியிலிருந்த சௌந்திர பாண்டிய நாடாரும் இதில் வருகிறார். பெரியார் திடலில் லட்சுமண் ரெட்டியாரைச் சந்திக்கிறார். நாடார் குல மித்ரன் என்ற பத்திரிகையின் பழைய இதழைப் படிக்கிறார். அதில் பெரியார் காங்கிரஸில் இருந்த போது ஹிந்து- முஸ்லீம் ஒற்றுமையைப் பற்றியும்,, ஸ்ரீமான் காவ்ய கண்ட கணபதி சாஸ்திரிகள் வரவேற்புரை அளிக்க, ஸ்ரீமான் ராமாசாமி நாயக்கர் அக்கிராசனராகிறார். காந்தியடிகள் உண்ணாவிரதம் வெற்றியடைய கடவுளைப் பிரார்த்திக்கிறார் ஜஸ்டிஸ் கட்சி ஒழிய நாள் தோறும் பிரார்த்தனை செய்து வருவதாகவும் சொல்கிறார். லட்சுமண ரெட்டியார் பெரியாரிடம் மரியாதை வைத்திருப்பவர். நாடார் குல மித்ரனில் தப்புத் தப்பாகப் போட்டிருக்கிறானோ என்று கேட்கிறார் சௌந்திர பாண்டிய நாடாரை.

லட்சுமண ரெட்டியார் சினனா ரெட்டி வெட்டுபுலி காலத்தில் சின்ன பையன். இப்போது தாத்தாவாகிவிட்டவர்.

இன்னொரு தலைமுறையில் நடராஜனுக்கு ஒரு கேள்வி. “இவனுங்க (பாப்பானுங்க) நாலு பேர் இருந்தா நாம நானுரு பேர் இருக்கோம். நாலு தட்டு தட்டி வச்சோம்னா சரியாயிடும்ல, அவனுங்க என்ன நம்ம அதிகாரம் பண்றது?, என்று கேட்கிறான். இன்னொரு சமயம் “இவனுங்க குரலே எனக்கு பிடிக்கல மாமா,. என்னமோ மூக்கில் பிரசினை மாதிரியே பேசறானுங்க. தொண்டையிலே சளி கட்டின மாதிரி. இவனுங்க மனுசனே இல்லே மாமா. வேறே ஏதோ மிருகம். குரங்குக்கும் மனுஷனுக்கும் நடுவிலே” இதற்கு மாமாவின் பதில், “அப்படி இல்லேடா. மனுஷனுக்கு அடுத்து வந்த மிருகம்னு வேணா சொல்லு. ஒத்துக்குவானுங்க” என்கிறார் சிரித்துக்கொண்டே.

ஆனால் நடராஜனுக்கு எப்படியோ பாரதியாரைப் பிடிக்கும். ஆனால அவன் வட்டாரத்தில் பாரதியாரை .ஒதுக்கினார்கள். பாரதி தாசன் போதும் அவர்களுக்கு. பாரதியும் பெரியாரும் சந்தித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைப்பான்.

வ.வு.சி.க்கும் பெரியாருக்கும் இடையே இருந்த நெருக்கம் பாரதிக்கும் வ.வு.சிக்கும் இடையே இல்லை. மனஸ்தாபமாவது இருந்திருக்கும். அப்படியானால் பாரதியாரை மறைமுகமாகக் கூட ஆதரிக்க வேண்டியதி்ல்லை” என்று இப்படிப் போகும் அவன் திராவிட இயக்க சிந்தனை பிரசினைகளும் அதற்கான சமாதானங்களும்.

நடராஜனுக்கு கன்னிமாரா லைப்ரரியில் ஒரு பெண்ணுடன் பழக நேரிடுகிறது. அவள் பிராமணப் பெண் என்று தெரிந்ததும் “அது ஒரு கரப்பான் பூச்சி பறந்து வந்து அவன் உடம்பில் உட்கார்ந்தது போல் இருந்தது” அவனுக்கு.

அவர்கள் பேசிக்கொள்வதைக் கேட்கலாம்:

நடராஜன்: “பொஸ்தகம்னா ப்ராமின்ஸ் எழுதறது தானே? பாரதியார், வ.வே.சு. தி.ஜானகிராமன், சுஜாதா, பாலகுமாரன், எல்லாம் யாரு?

(பேசிக்கொண்டிருபபது பிராமணப் பெண் இல்லையென்றால் ப்ராமின்ஸ்க்கு பதிலாக ”பாப்பானுவ” என்று சொல்லியிருப்பான். ).

எல்லாத்தையும் பெரியார் கண்ணாடி போட்டுப் பாக்காதீங்க. புதுமைப் பித்தன் ஜெயகாந்தன்லாம் உங்க ஆளுங்க தானே”? என்கிறாள் அவள்.

இதற்கு நடராஜன் பதில்: “உங்களுக்கு ஏத்த மாதிரி எழுதினதாலே விட்டு வச்சிருக்கீங்க.”

அவர்களை வழியில் ஒரு போலீஸ் இடைமறிக்கிறான். வழக்கமான சென்னை போலீஸ்தான். அவன் விசாரணைகள் எப்படி இருக்கும் என்பது நமக்குத் தெரியும்.

“அப்படி லவ்வு?” என்று கிண்டல் செய்கிறான்.

“அப்படிலாம் இல்லை சார். இது எங்க மாமா பையன். ஒண்ணாத்தான் படிக்கிறோம்.” என்று பதில் சொல்கிறாள் நடராஜன் கூட இருக்கும் கிருஷ்ண ப்ரியா.

“அப்படியாடா? “ என்று கேட்கிறான் நடராஜனப் பார்த்து.” நம்மைப் போன்ற ஒரு கருப்பனே நம்மை இழிவு படுத்தும்போது பாப்பான் ஏன் ஏளனமாக நடத்தமாட்டான்” என்று சிந்தனை போகிறது நடராஜன் மனதில்.

நாடு முழுக்க கொந்தளிப்பா இருக்கு. பத்திரமா வூடு போய்ச் சேரு. ஊரைச் சுத்திட்டு இருந்தே பொண்ணு பாழாயிடும் பாத்துக்க ஜாக்கிரத” என்று மிரட்டுகிறான்.

இருவரும் கிருஷ்ண்பிரியா வீட்டுக்குப் போகிறார்கள்.

பாப்பாத்தி என்று மனதில் வெறுப்பேற்றிக்கொண்டிருந்தவனை “என் மாமா பையன்” என்று சொல்லி அந்த இக்கட்டிலிருந்து காப்பாற்றியவளை “ஏன் அப்படிச் சொன்னாய்? என்று கேட்கிறான்.

“நான் அப்படிச் சொன்னதாலே தான் விட்டான்” என்று பதில் சொல்கிறாள்.

கிருஷ்ணபிரியா வீட்டு வாசலில் குடுமி யோடு நிற்கும் அவள் அப்பா, “நமஸ்காரம்: என்கிறார் நடராஜனைப்பார்த்து. அது நடராஜன் காதுகளில் ஈயம் காய்ச்சி ஊத்தின மாதிரி இருக்கிறது.

தொண்ணூறுகளில் நாம் சந்திப்பது ரவியை.. அவனுக்கு மணிரத்தினம் ‘அக்கினி நக்ஷத்திரம் என்ற இரண்டு பெண்டாட்டி கதையை ஜனாதிபதி பார்க்க வைத்தது, இரண்டு பேரும் பாப்பானுகளாக இருந்ததால் தான் சாத்தியமாகிறது என்று தோன்றுகிறது. .அந்த வெங்கட்ராமன் என்கிற பாப்பார ஜனாதிபதி அடிக்கடி விமானத்தில் வந்து சங்கராச்சாரியாரைப் பார்த்து போவது ஆச்சரியமாயில்லை.

அந்த சங்கராச்சாரியாரை ஜெயலலித அரெஸ்ட் செய்ய முடிகிறது. கலைஞரால் முடியவில்லையே. என்று கேட்கிறார் நியூயார்க் வந்திருக்கும் திமுக அப்பா வளர்த்த தமிழ்ச்செல்வனை.

”சட்ட சபை எங்க கையிலே இல்லை. நீதித்துறை எங்க கையிலே இல்லை. நிர்வாகமும் எங்க கையிலே இல்லை பாப்பான் உட்கார்ந்திருந்த இடமெல்லாம் இப்ப அவங்க கையிலே. ராஜாஜி இல்லே. வரதாச்சாரி இல்லே. ஆ,மாவா இல்லையா?”

எங்களைத் தான் நாட்டை விட்டே வெரட்டி அடிச்சுட்டாங்களே. இந்தக் கோட்டா, அந்தக் கோட்டா,, ரிசர்வேஷன்னு.. செரி அதை வுடு.க்ஷேமமாத்தான் இருக்கோம். இல்லாட்டிப் போனா அங்கே தான் கோயில்லே மணி அடிச்சிட்டு இருக்கணும்…” என்று சொல்லிக் கொண்டு வந்தவர் தமிழ்ச்செல்வனைக் கேட்கிறார். அம்மாவும் பெரியார் கட்சியா? என்று. தமிழ்ச் செல்வன் சிரித்துக்கொண்டே சொல்கிறான். இல்லை பேர் தான் நாகம்மா. ஆனால் சாய் பக்தை என்கிறான்.

இது போல்தான், சமூக மாற்றங்கள், மதிப்பு மாற்றங்கள்…பார்வை மாற்றங்கள் எப்படியோ நிகழ்கின்றன. என்றாலும் எல்லாம் ஒரு நேர்கோட்டில் நிகழ்வதில்லை. எல்லோருக்கும் வழியில் பாதை மாறிவிடுகிறது. ஆனால் ப்ழைய கோஷங்கள் தொடரத்தான் செய்கின்றன. வடமொழியைக் கேட்டால் நாராசமாக இருந்த தமிழ்ப் பற்றில் தொடங்கியது, ராஜெஷ் மகேஷ் என்ற பெயர்கள் வீட்டுக்குள் புழங்குவதைக் கேட்டு முகம் சுளிக்க வேண்டியிருக்கிறது. சினிமாவுக்குத் தாண்டிய தமிழும், இயக்கமும் அந்த கதிக்குத் தான் ஆளாகின்றன., இன்றைய சன் டிவியில் கேட்கப்படும், தமிழ் நிகழ்ச்சி. இந்த மாதிரிதான்.

“அடுத்த காலர் யார்னு பாக்கலாம். ஏம்மா டிவி வால்யுமைக் கம்மி பண்ணுங்கம்மா… நான் வெயிட் பண்றேன். நாங்க கேட்ட கொச்சினுக்கு ஆன்சர் தெரிஞ்சுதா. நல்லா திங்க் பண்ணீட்டு சொல்லுங்க… ப்ச்.. லைன் கட் ஆயிடுச்சு….அடுத்த காலர் யாரு?

இன்னொரு காட்சி. நடேசன் தீவிர திமுக. கலைஞர் விசுவாசி. தன் பெண்டாட்டி ரேணுவை தன் வழிக்குக் கொண்டு வர அயராது முனைந்தும் அவள் திருந்துவதாக இல்லை. கலைஞர் ஆட்சிக்கு வந்தால் தான் நாடு உருப்படும் என்ற உறுதியான நம்பிக்கை இருந்தது அவனுக்கு. ஆனால் ரேணுவுக்கு அந்த நம்பிக்கை என்றோ மறைந்துவிட்டது. அவள் தலைவரின் மகன் பெண்களிடம் மோசமாக நடந்துகொள்வது உண்மையா? என்று ஒரு முறை நடேசனிடம் கேட்டாள். நடேசனுக்கு ஆத்திரம் தாளவில்லை. “எவண்டி சொன்னான் உனுக்கு? கண்டவன் சொல்றதையெல்லாம் நம்பிக்கிட்டு.”

“அழகான் பொண்ணு ரோட்டிலே போனா கார்ல தூக்கிட்டுப் போயிடுவாராமே?

பிரேமா இங்கே வந்தாளாக்கும். “ பிரேமா அந்தப் பகுதி அதிமுக வட்டாரச் செயலாளரின் மனைவி.

”யார் சொன்னா என்னா?. சொன்னது உண்மையானு பாக்கணும்”.

”போடி. நல்ல உண்மையப் பாத்த…. எவனாவது பொறம்போக்கு ஆயிரம் சொல்லுவான். அதெல்லாம் உண்மையானு பாப்பியா? உனுக்கு ஒண்ணு சொல்றேன் கேட்டுக்க .”இன்னொரு வாட்டி தம்பியப் பத்தி இப்படி ஏதாவது கேட்டே, தொடப்பக்கட்ட பிச்சிக்கும்.”

பெரியார் கண்ட கனவு, அப்பாவுக்கு இருந்த லட்சியம், எல்லாமே எப்படி எப்படியோ திசை மாறிப் போய்க்கொண்டிருக்கிற வலி எப்படியாவது கலைஞரை ஆட்சிக்கு வரவழைத்துவிட்டால் எல்லாம் சரியாகிப் போயிடும் என்ற நம்பிக்கை இருந்தது..அவனுக்கு.…

எல்லாம் சரியாப் போயிற்றா என்பதை யாரும் நமக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

மூன்று தலைமுறைகளின் வாழ்வில் காட்சிகள் எப்படி யெல்லாமோ மாறிவிடுகின்றன. அதற்கும் முன்னால் இருபதுகளிலேயே தசரத ரெட்டியார் காலத்தில் தான் இது தொடங்குகிறது. அந்தத் தொடக்கம் “பட்டணத்திலே இப்ப இது தான் பெரிய பிரசினையாம். பாப்பான் மாதிரி எனக்கும் ராஜாங்கத்திலே வேலை குடுன்னு கேட்டு ஒரு கட்சியே ஆரம்பிச்சிட்டங்களாம்,” என்று தான் அதன் தொடக்கம். அடுத்த தலைமுறை லட்சுமண ரெட்டியார் ஒருவர் தான் எப்படி பெரியார் பக்தர் ஆனார் என்று சொல்லப் படாவிட்டாலும் அடிக்கடி அவர் தான் காண்பதை அவர் அப்படி இருக்காது என்று தனக்குள் சொல்லிக்கொள்கிறார். கடைசி வரை தன் நம்பிக்கைகளில் நம்பிக்கை வைத்தவராக, அதைச் சொல்லிக் கொண்டு வேறொன்றை நாடாத மனிதராக, ஒரு சாதாரண மனிதராகக் காண்கிறோம். மற்றவர்கள் எல்லோரும் ”எல்லாம் சமம்,” என்று சொல்லிக்கொண்டே அடாவடித்தனமும் பொட்டை அதிகாரம் செய்பவர்களாகவுமே காண்கிறார்கள் அவர்கள் அக்கறைகள் எங்கெங்கோவெல்லாம் பரவுகிறது. கோஷங்களும் காரணம் தெரியாத ஆனால் எல்லோரும் உடன் படுகிற துவேஷமும் தான் தொடர்கிறது.

திராவிட இயக்கமும் சரி, கம்யுனிஸ்ட் கட்சியினரும் சரி, அவர்களது நீண்ட பல தலைமுறைகள் நீண்ட வாழ்வில் இலக்கியத்திற்கோ கலைக்கோ எதுவும் கொடுத்தது கிடையாது. அவர்கள் பங்களிப்பு பிரசாரங்களிலும் எழுப்பும் இரைச்சல்களிலும் தான். அதில் உண்மை இல்லை, காரணம், அவர்கள் சொல்வதில் அவர்கள் அனுபவம் இல்லையென்பதால் தான். தலித் எழுத்துக்கள் தான் அவர்களின் உண்மை அனுபவங்களைச் சொல்கின்றன. அவை தமிழ் இலக்கியத்துக்கு தம் பங்களிப்பைத் தந்துள்ளன.

தமிழ் மகனின் வெட்டுப் புலி வாழ்க்கையின் பல தளங்களில் இயங்குகிறது. சினிமா, அரசியல், பின் அன்றாட வாழ்க்கை. வெகு சில இடங்களில், சில காட்சிகள் சில மனிதர்களின் செயல்கள், சில திருப்பங்கள், தமிழ் சினிமா போல இருந்தாலும், அவை மூன்று தலைமுறைகளின், 70-80 ஆண்டுகளின் வாழ்க்கையில் நீட்சியில் பொருட்படுத்த வேண்டாதவையாகின்றன. இங்கு சொல்லப்பட்ட வாழ்க்கையும் மனிதர்களும், அவர்கள் செயல்பாடுகளும், நம்பகத் தன்மை கொண்டு ஜீவனோடு நம் முன் நடமாடுகின்றன அவர்களுடன் சேர்ந்து அந்த வாழ்க்கையைக் காணும்போது சுவாரஸ்யமாகத் தான் இருக்கின்றன.

நான் என் வார்த்தைகளில் சொல்ல முயன்றால் அவற்றின் தொனி மாறுமோ என்ற கவலையில் பெரும்பாலும் மேற்கோள்கலாகவே தந்திருக்கிறேன்.

தமிழ் மகனின் வெட்டுப் புலி ஒரு புதிய திருப்பத்தைத் தந்துள்ளது. 70-80 வருடங்களாக மற்றவர்கள். தோற்ற பாதையில் முதல் வெற்றியை நமக்குத் தந்திருக்கிறார்.

திராவிட இயக்கத்தைப் பர்றிப் பேசும் இந்த எழுத்தை அதன் கலைஞர்களும் கவிக்கோக்களும், கவிப்பேரரசுகளும் எப்படி எடுத்துக் கொள்வார்களோ தெரியாது.

எல்லா புத்தகங்களையும் போல, இதைப் பற்றியும் கூட தமிழ் உலகம் மௌனம் சாதிக்கலாம்.

-------------------------------------------------------------------------------------

வெட்டுப்புலி (நாவல்) : தமிழ் மகன்
உயிர்மை பதிப்பகம்,
11/29 சுப்பிரமணியன் தெரு,
அபிராமபுரம், சென்னை- 600018
ப..374 விலை ரூ. 220





Monday, April 11, 2011

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம். (21)



மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம். (21)

வெங்கட் சுவாமிநாதன்

இதுகாறும் நான் எழுதிவருவனவற்றைப் படிப்பவர்களிடமிருந்து வரும் எதிர்மறையான கருத்துக்கள் ஒரு சில வகைகளுள் அடங்கும்.

தங்களுக்குப் பிடித்த, ஏதோ கலைமேதையென தமக்குள் கற்பித்துக்கொண்டு பாலாபிஷேகம் செய்து பூசிக்கும் சில நடிகர்களை அவர்கள் நடித்த படங்களை, சில இயக்குனர்களையெல்லாம் குறிப்பிட்டு அவர்கள் இயக்கிய படங்களையும் பட்டியலிட்டு, ”இவையெல்லாம் நல்ல படங்கள் இல்லையா?” என்று தம்முள் பொங்கி எழும் சீற்றத்தை அல்லது தமக்குள் வதைபடும் மிகுந்த மன வேதனையைக் கொட்டிக் கேட்கிறார்கள். இவர்களுக்கு நான் முன் வைக்கும் கருத்துக்கள், பார்வைகள் எதையும் எதிர்கொள்ளும் மனமிருப்பதில்லை. அவற்றையெல்லாம் படித்தும், அது பற்றி கொஞ்சம் கூட சிந்திக்காமல், தம் கையிலிருக்கு விளக்குமாற்றால் ஒரே வீச்சில் அவ்வளவையும் துடைத்து எறிந்து விட்டு, தாம் முன் கொண்டிருந்த மனநிலைக்கே திரும்பி இதெல்லாம் நல்ல படமில்லையா, அதெல்லாம் நல்ல படமில்லையா? என்று தொண்டை அடைக்கக் கேட்கும் போது, அதை ஒரு வேதனைக் குரல் என்றே சொல்லவேண்டும், குரல் கம்மிக் கம்மி, கதற ஆரம்பித்துவிடுகிறார்கள். இதுகாறும் தம் சொப்பன சுகத்தில் ஆழ்ந்திருந்ததெல்லாம் பொய் எனச் சொல்லப்பட்டால் நிலை குலைந்து போவதைச் சகித்துக்கொள்ள முடிவதில்லை.. இல்லையெனில் திடீரென ஒரு அதிர்ச்சியும் கையாலாகாச் சீற்றமும். பத்து வயது அண்ணனுக்கு வீட்டில் அடி விழுந்தால் ஆறு வயது தம்பி தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்துவிடுவான். அண்ணன் எதற்கு அடிபடுகிறான், என்ன சொல்லி அப்பா அடிக்கிறார் என்பதெல்லாம் அவனுக்குப் புரிவதேயில்லை. அன்ணன் அடி படுவது தெரிகிறது. அது அவனால் தாங்க இயலாது. இரண்டாவது தான் தனித்து விடப்பட்ட துக்கம் வேறு. தாங்கத் தான் முடிவதில்லை. தம்பிப் பையனுக்கு.

இரண்டாவது வகையினர் இன்னொரு வேடிக்கையும் பரிதாபமுமான கற்பனை வாதம் ஒன்றை முன் வைக்கிறார்கள். நாளெல்லாம் வெயிலில் வேர்த்து விறுவிறுத்து உழைத்துத் திரும்புகிறவன் தன் கஷ்டங்களையெல்லாம் மறந்து ஜாலியாக இருக்க விரும்புகிறவன் எதிர்பார்ப்பதைத் தருகிறது அவனுக்கு அன்று ஒரு ஜெயமாலினி, இல்லை ஜோதி லட்சுமி, இன்று ஒரு நமீதாவாவது டான்ஸ் பண்ண வேண்டும். அதைப் பார்த்து மகிழ்ந்து நன்றாகத் தூங்கி நாளைக்கு மறுபடியும் வேர்த்து விறுவிறுக்கத் தயாராவான். இந்த மாதிரியான ஒரு சினிமா கலைத் தத்துவம் தமிழ் மன்ணுக்கே உரியது.. இது போல ஒரு பொய்யும் நேர்மையற்றதுமான ஒரு வாதம், இன்னொரு பெயரில் இளிச்சவாய்த்தனமான வாதம், இருக்குமா என்று யோசிக்கத் தோன்றுகிறது. ஆனாலும் கொள்ளையடிக்கவே வந்திருப்பவர்கள், அதற்கு ஏதாவது கவர்ச்சியான ஜனநாயகப் பூச்சு பூசி மக்களை ஆபாசத்துக்குத் தள்ளுகிறவர்கள் இன்னும் மோசமான பொருளைச் சந்தைக்கு எடுத்துச் செல்ல வேண்டி வரும்போது, இன்னமும் நேர்மை கெட்ட, இன்னமும் மோசடி நிறைந்த பொய்யை, மக்களுக்காகப்பேசுவதாக நினைத்துக்கொள்ளும் அறிவு ஜீவிகளுக்காகத் தயார் செய்ய மாட்டார்கள் என்பது நிச்சயமில்லை

முப்பது நாற்பது வருஷங்களுக்கு முன் புராணப் படங்கள் கோலோச்சிய காலத்தில் இந்திரனோ, எவனாவது மன்னனோ சபைக்கு வந்து அமர்ந்ததும் “ஏழு கன்னிகைகள் வந்து நடனமாடுவார்கள்.” பின்னர் அடுத்த தலைமுறையில் ஒரு கல்யாணமோ, இல்லை பெரிய மனிதருக்கு வரவேற்போ என்று காரணம் காட்டி ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்கு காண எல்லோரும் தியேட்டருக்குப் போவார்கள். அங்கு காதல் மலரும்.

இந்த மாற்றம் எந்த ஊர் தொழிலாளிகள் எல்லாம் தாம் சிந்திய வியர்வையைக் காட்டி எங்களுக்கெல்லாம் எங்கள் உடல் சிரமத்தைக் குறைத்து ஒத்தடம் கொடுத்து எங்கள் முகத்தில் சிரிப்பையும் இறைவனையும் வரவழைக்க சிலுக்கு சிமிதா நாட்டியம் காட்டுங்கள் என்று ஜாயிண்ட் பெட்டிஷன் போட்டார்களா, இல்லை ஏழு கோடி தமிழர்களிடம் கையெழுத்து வாங்கி கோடம்பாக்கம் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு பொது மனு கொடுத்தார்களா என்பது தெரியாது. ஒரு வேளை அந்த செய்தி வந்த அன்று என் ஏரியாவில் பவர் கட் இருந்திருக்கலாம். இதற்கு அடுத்து எப்போது இந்த மாதிரி ஒரு பொது மனு, “இனி உதகை பார்க், ஏற்காடு, வைகை அணையெல்லாம் பார்த்து அலுத்து விட்டது, இனி ஸ்விட்சர்லாந்துக்கோ, அர்ஜெண்டினாவுக்கோ, டோரண்டோவுக்கோ போய் கமல ஹாசனும், சிம்புவும் நயன்தாராவோடு ஒரு நாற்பது பேர் கூட்டத்தோடு டான்ஸ் பண்ணினால் தான் எங்கள் அலுப்பு தீரும்போல இருக்கு. இப்பல்லாம் பார்ங்க உடம்புலே கொட்டுற வியர்வை நிறையவே கூடிப்போச்சு உதகை பார்க் டான்ஸெல்லாம் இந்த வியர்வைக்குப் பத்தாது என்று மறுபடியும் கொடுத்தார்கள் என்ற செய்தியும் என் பார்வையிலிருந்து தப்பி விட்டது. அடிக்கடி வரும் பவர் கட்டினால் வரும் விபத்து இது. . .

எனக்கென்னவோ இந்த ஆபாசங்கள் எல்லாம் தயாரிப்பாளர், வினியோகஸ்தர்களின் டிமாண்டு தானே ஒழிய அப்பாவி தமிழ் மக்கள் அல்ல. அந்த வியர்வை கொட்ட அதைக் காய வைக்க எந்த அப்பாவி தமிழ் உழைப்பாளியும் 300 ரூபாயும் 500 ரூபாயும் கொடுத்து டிக்கட் வாங்க மத்தியானம் ரண்டு மணி வெயிலில் க்யூவில் நிற்கமாட்டான். அந்த பைத்தியக் காரத் தனம் செய்யும் தமிழ் ரகங்களே வேறே தான். கோடிக் கணக்கில் வசூலிக்கும் படத்தின் வெற்றிக்குக் காரணம் தேடுகிற வியாபாரக் கூட்டம், ஒரு கட்டத்தில் கருணாநிதி வசனம், சிவாஜி முக அவஸ்தைகள், சிலுக்கு ஸ்மிதா நடனம், கமலஹாசனின் மேக்கப் அவதாரங்கள், ரஜனி காந்தின் அங்க சேஷடைகள் என்று தம் நுண்மாண் நுழைபுல ஆராய்ச்சியில் கண்டு பிடித்து தம் அடுத்த படத்தில் அந்தச் சரக்கை இன்னும் ஒன்றிரண்டு பெக் கூடச் சேர்த்துக் கலந்த காக்டெயிலை சந்தைக்குக் கொண்டு வரும் பேராசைக் கனவுகளுக்கு என்னமோ உழைக்கும் வர்க்கம், சொட்டும் வியர்வை, மக்கள் ரசனை என்று கோஷிப்பதையே தம் கண்டு பிடிப்பு போலத் திரும்பத் திரும்ப நமக்குச் சொல்கிறார்கள், இந்த ஆபாசங்களும் தரக்கேடுகளும் தமக்கும் பிடித்துப் போக அதற்கு நியாயம் கற்பிக்கும் நம் அறிவு ஜீவிகள். தமிழ் சினிமா கலா ரசிகர்கள்.

ஒரு ஆபாசத்தை நிலை நிறுத்த, தொடர்ந்து நடைமுறைப் படுத்த என்னென்ன வார்த்தை ஜாலங்கள் எல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது. “இலவச தொலைக்காட்சி தருவதற்கு என்ன உயரிய நோக்கம் சொல்லப் பட்டது? குடிசை வாசிகளும் உலக அறிவு பெற வேண்டும், கலை ரசனை பெருக வேண்டும் என்ற மகத்தான லக்ஷியம் தான் காரணம் என்று. கடைசியில் சன் டிவிக்குப் போட்டியாக அதிலிருந்தும் கீழிறங்கி “மானாட மயிலாட” கண்டு பிடிக்கப்பட்டது. எதற்கு?. உடன் பிறப்புகளும், ரத்தத்தின் ரத்தங்களும் உலக அறிவு பெற,. கலைகள் கண்டு களித்திட.

ஒவ்வொரு தரக்கேடும், ஒவ்வொரு ஆபாசமும் தனியே வருவதில்லை. உடன் அதற்கான லக்ஷிய கோஷங்களோடு தான் சந்தைக்கு வருகிறது.

மூன்றாவதாக, தமிழ் சினிமா முன்னேறிக்கொண்டு தான் வருகிறது. மாற்றங்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன என்று சொல்கிறவர்கள், மிஷ்கின், ..


read more: http://thamizhstudio.com/serial_4_21.php


Sunday, January 9, 2011

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம். (14)



மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம். (14)

வெங்கட் சுவாமிநாதன்

இந்தக் கட்டுரைத் தொடரை ஆரம்பித்ததே 1961- ல் நான் எழுதிய கட்டுரை ஒன்றில் தமிழ் சமூகம் என்றைக்காவது ஒரு கலை உணர்வு கொண்ட சமூகமாக இருக்குமா என்பதில் எனக்கு சந்தேகம் என்ற எழுதியிருந்ததையும் அந்த மிகக் கசப்பான ஆரூடம் போன்ற தமிழ் சமூகத்தின் குணச்சித்திரம் அன்று என் மனத்தில் பட்டது இன்று வரை மெய்யாகிக் கொண்டிருக்கும் அவலத்தைச் சுட்டிக் காட்டிச் சொல்லியே ஆரம்பித்தேன். அறுபது வருடங்கள் கடந்து விட்டன. அது பற்றி இன்று மறுபடியும் யோசிக்கும்போதுகூட அந்த ஆரூடம், இனியாவது என்றாவது பொய்த்துப் போகக்கூடும் என்று சொல்லுவதற்கான சூசகங்கள் ஏதும் அடி வானம் பூமியைத் தொடும் எல்லையில் கூட, ஒரு சிறு கரும்புள்ளியாகக் கூடத் தென்படுவாதாயில்லை.

இக்கட்டுரைத் தொடருக்கு வரும் எதிர்வினைகள் இரு பெரும் வகைகளில் அடங்கும். ஒன்று, நான் நம் தமிழ் சினிமாவைப் பற்றி ஒரு வெறுப்புணர்வுடன், அசிங்கமாக எழுதுவதாக சொல்லும் தரப்பு. இத்தரப்பு, என் மீது அடங்காத கோபத்தில், நான் சொலவது எதையும் கருத்தில் கொள்ளாமல், தமிழ் சினிமாவின் கனவுலக மயக்கத்தில், நமது ஸ்டார்களின் - (சூப்பர், சுப்ரீம், மெகா என்றெனப்படும், இன்னும் என்னென்ன ரகங்கள் உண்டோ எல்லா ரகங்களையும் ‘சார்’ வகையறாக்களையும் சேர்த்துத்தான்) - மாயா ஜால பிரகாசத்தில் கண் கூசி நிற்கும் ரகத்தைச் சேர்ந்தது.

இரண்டாவது தரப்பு, நான் இதையெல்லாம் ஏதோ இப்போது தான் எழுதத்தொடங்கி யிருப்பதாகவும், இதை முன்னரே சொல்லியிருந்தால் தமிழ் சினிமா இதற்குள் உருப்பட்டிருக்கும் என்ற என்ணத்தில் எழுதுகிறவர்கள். தமிழ் சமூகத்தைப் பற்றிக் கொண்டுள்ள, இதை விட, உண்மைக்கு முற்றிலும் புறம்பான, கற்பனையான, தமிழ் சமூகத்தை ஒரு நூற்றாண்டுக் காலம் விடாது பீடித்திருக்கும் நோயைப் பற்றிய தவறான கணிப்பும் சிகித்சையும் வேறு என்ன இருக்கக்கூடும் என்பது எனக்குத் தெரியவில்லை. இவர்களுக்கு நான் சொல்வது பிடித்திருக்கிறது, ஆதலால் இந்த அவல நிலை மாற வேண்டும் என்ற ஆவலில், அவர்கள் இத்தகைய ஒரு அசாதரண நம்பிக்கை கொள்கிறார்கள் என்றே எடுத்துக் கொள்கிறேன். நூற்றண்டு காலமாக பீடித்திருக்கும் நோய், காலம் செல்லச் செல்ல முற்றிக்கொண்டுதான் வருகிறது அந்த நோய், அது பற்றி, அது நோய் என்ற உணர்வு கூட இல்லாது, மாறாக அதைக் கண்டு பெருமையும் கர்வமும் கொள்ளும் சமூகம், தாம் ஏதோ உலகத் தரத்துக்கு உயர்ந்து விட்டதாக எண்ணும் பிரமையில் இருக்கும் சமூகம், இப்படி ஒரு சில கட்டுரைகளால், சினிமாத் துறைக்கு வெளியே இருக்கும் ஒரு சிலர் வெளிப்படுத்தும் கருத்துக்களால் மாறி விடும் என்று எப்படி கனவு காணமுடிகிறது?

ஏதோ ஒன்று முதலில் நிகழ வேண்டும். “இதென்னய்யா இது? ஒரே பைத்தியக்காரக் கூட்டமா இருக்கு? நம்மை என்ன மடையன்னு நெனச்சிட்டிருக்காங்களா இவனுக. இவனுங்களுக்குத் தான் மூளெ பெரண்டு கிடக்குன்னா, நம்ம எல்லாருக்குமில்ல ஒட்டு மொத்தமா மூளை பெரண்டு கிடக்குமன்னு நெனச்சிக்கிட்டானுவ, கபோதிப் பயலுவ ” என்று மக்கள். இந்த தமிழ் சினிமா என்னும் விவஸ்தை கெட்ட ஆட்டத்தை அறவே ஒதுக்கியிருக்க வேண்டும். அது தான் நியாயமாக, மக்களின் பொதுப்புத்தி செய்திருக்க வேண்டும்.

அல்லது, இந்த சினிமா உலகத்தைச் சேர்ந்தவர்களிடம் இருக்கும், (இருக்கும் என்று தான் நினைக்கிறேன். எல்லா ஜீவன்களுக்கும் கடவுள் அருளால் பொதுப்புத்தியும் இருக்கத் தான் செய்கிறது) தம் வீட்டுப் பரணில் தூக்கி எறியப் பட்டிருக்கும் தங்கள் பொதுப்புத்தியைத் திரும்ப எடுத்து வந்து, பின் தான் ஸ்டுடியோக்குள் நுழைய வேண்டும். அது நடக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை.

1960-61 வருடங்களில் எழுதிய “பாலையும் வாழையும்” கட்டுரையிலா, இல்லை பான்ஸாய் மனிதன் கட்டுரையிலா எதில் என்று சரியாக எனக்கு இப்போது நினைவில் இல்லை.

திரைப் படம் என்பது முழுக்க முழுக்க இயக்குனரின் படைப்புத் தான். அதில் மற்ற எல்லாமே அவர் விரல்கள் இயக்கும் கயிற்றசைவுக்கு ஏற்ப ஆடும் பாவைகள் தான் என்று எழுதி யிருந்தேன். அந்தக் கருத்து என்னோடு நின்றது. அந்த வருடக் கட்டுரையோடு நின்றது. சரியாகச் சொல்லப் போனால், “அடக்கம் செய்யப்பட்டு விட்டது.. அது என்னைவிட்டு, எழுதப்பட்ட அச்சிடப்பட்ட பக்கத்தைவிட்டு இன்னொருவருக்கு நகர்ந்ததற்கான சுவடு கூட ஏதும் இல்லை. இதை நான் ஏதோ எழுதி விட்டதால் சினிமா உலகம் திருந்தி விடும் என்று சொல்பவர் களுக்குச் சொல்கிறேன்.

இது சினிமாத் துறையிலிருந்து எழ வேண்டும். பராசக்தி வசனத்தைப் படித்ததும், பீம் சிங் கருணாநிதியிடம், ”;இதென்னங்க உங்க கச்சிக் கூட்டத்திலே பேசற மாதிரி இருக்கு. கோர்ட்டிலே எல்லாம் இப்படி பேசமாட்டாங்கன்னு தெரியாதுங்களா உங்களுக்கு?. இதெல்லாம் பெரியார் திடல்லே கச்சிக்காரங்க கூட்டத்திலேதான் எடுக்கும். மொதல்லே ஒண்ணு ரெண்டு கோர்ட்டுக்குப் போய் அங்கே என்ன எப்படி நடக்குதுன்னு பாத்துட்டு, இதையெல்லாம் திருத்தி எழுதிட்டு வாங்க. உங்க இஷடத்துக்கு எதையும் எழுதிட்டு வந்தா ஆச்சா,. இது சினிமாங்க, உங்க கச்சி பொதுக்கூட்டம் இல்லே” என்று அடுத்த நிமிடம் திருப்பிக் கொடுத்திருப்பார், அவருடைய பொதுப் புத்தி யை பயன்படுத்தி இருந்தால். அது நடக்கவில்லை. மாறாக, அது தமிழ் சினிமாவில் ஒரு புரட்சியை, புது அத்தியாயத்தைத் தொடங்கி வைத்த மைல்கல்லாகிவிட்டது. இன்று வரை அது தொடர்கிறது.

அசோக் குமார் என்று ஒரு ஹிந்தி நடிகர். அச்சுத் கன்யா காலத்திலிருந்து அவர் ஒரு ஹீரோ. அதாவது நாற்பது களிலிருந்து. ஐம்பதுகளில், திலீப் குமார், தேவ் ஆனந்த், ராஜ் கபூர் ஆகியோரின் சிகரத்தில் இல்லையென்றாலும் அடுத்த படியில் அவரும் ஒருவர். அவரை தமிழ்ப் படம் அழைத்தது. வாசனோ, மெய்யப்ப செட்டியாரோ, யாரென்று நினைவில் இல்லை. முதல் நாளே ஷூட்டிங் போது, அவர் சொன்னாராம். “பக்கத்திலே தானே இருக்கீங்க பின்னே என்னத்துக்கு இந்தக் கூச்சல் போடறீங்க? ரெண்டு பேரும். மெதுவா எப்போதும் பேசறாப்போல பேசுங்களேன். ஏன் இப்படி உரக்கக் கத்திக் கத்திப் பேசறீங்க?” என்றாராம். பராசக்தி, நடிகர் திலகம் “ஓடினாள், ஓடினாள்… சமாசாரங்க ” எல்லாம் நமக்கு பொரச்சி ஆயிடுச்சே. உணர்ச்சி பொங்க நடிக்கறதுண்ணு அர்த்தமாமே அதுக்கு, நாமும் ஏதாச்சும் ஒரு திலகம் ஆகணுமில்லே, உப்புச்சப்பில்லாமே பேசினா எப்படி? அசோக் குமாருக்கு இருந்தது வெறும் பொதுப் புத்தி. நம்ம சினிமா வரலாறு என்ன, கலாச்சாரம் என்ன, பண்பாடு என்ன, அது எதினாச்சும் அவருக்கும் தெரியுமா என்ன? விஷயம் தெரியாம பேசிப்புட்டாரு. எனவே அவர் கேட்டதை நாம் கண்டுக்கவே இல்லை. பீம் சிங் வாய்மூடி இருந்த அந்த கணம் மு.கருணாநிதியின் வசனம் சினிமாவானது. அவரும் கலைஞர் ஆனார். விழுப்புரம் கணேசன் போட்ட கூச்சல் அவரை நடிகர் திலகம் ஆக்கியது..

அதற்கு முன்னால், தியாகராஜ பாகவதர் தான் சினிமாவாக இருந்தார்.. அவர் பாட்டுக்காக அவரையும் பாட்டையும் மையமாகக் கொண்டு சினிமா உருவானது. கேட்க சுகமாக இருக்கலாம். (அன்று 40-50 களில். ஆனால், இன்று “உயிரணுக்கள் உடம்பில் எத்தனை” என்று கிதாரை வைத்துக்கொண்டு தென் அமெரிக்க பாலைவனத்தில் பாட வேண்டும் “கா. கா. கா…பாட்டு, ஆரம்பித்து வைத்த புரட்சி) அன்று எந்த இயக்குனரும் பாகவதரிடம், “சரிங்க நல்லா பாடறீங்க. அதெல்லாம் சரிதான். கேக்க சுகமாத்தான் இருக்கு. ஆனால் இதெல்லாம் சினிமா இல்லிங்க. இதுக்கு இசை நாடகம்னு சொல்லுவாங்க. பாட்டிலேயே. கதை சொல்ற நாடகம்.” என்று யாரும் நினைக்கவில்லை. சொல்லவில்லை. அப்போது பாட்டாவது கேட்க சுகமாயிருந்தது. போகுது போ,” என்று விடத் தோன்றியது. அது இப்போது, ”நாக்க மூக்க” வில் வந்து நிற்கிறது. ‘பொரச்சி தான். உலகத் தரம் தான். இந்த டெக்னிக்கில பாருங்க, நம்ம தமிழ் சினிமா கிட்ட யாரும் வந்துக்கிட முடியாது பாத்துக்கங்க.” தான்.

இப்படியே யாரும் ஏதும் கேள்வி கேட்காமலேயே, அழுக்குப் போகக் குளிப்பது போல, பொதுப் புத்திபோக நன்றாகத் தேய்த்து குளித்துவிட்டு தமிழ் சினிமாவில் புரட்சி செய்துகொண்டி ருக்கிறோம். எப்போதும், ஒன்று அது தியாகராஜ பாகவதரோ, இல்லை நடிகர் திலகமோ, இல்லை, மக்கள் திலகமோ, இப்படித்தான்,, வரிசையாக, ஒவ்வொருவரும் தம்மை மையமாக வைத்துக்கொண்டே, தம்மையே சினிமாவாக்கிக்கொண்டு வந்துள்ளனர். இப்போது அது உலக நாயகனையும், சூப்பர் ஸ்டாரையும் சினிமாவாகக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

எப்போதும் ஒரு ஸ்டாரை வைத்து அவருக்கேற்றவாறு கதை எழுதுவது, அந்த ஸ்டார் தன்னையே சினிமா முழுதும் வியாபித்துக்கொள்வது, அதுவும் அவர் விருப்பத்துக்கேற்ப, அல்லது அந்த ஸ்டார், தன் ரசிகர்கள் எப்படித் தன்னைப் பார்க்க விரும்பிறார்கள் என்று நினைக்கிறாரோ அதற்கேற்ப, படம் முழுதும் தன்னை வியாபித்துக் கொள்வார் என்றால், இது கடை வைக்கிற காரியம். வெறும்.. வெறும் வியாபாரம். அந்த ஸ்டார் நடிகரும் இல்லை. கதை தமிழ் வாழ்க்கையும் இல்லை. அந்த படம், சினிமாவும் இல்லை. வெங்காய வியாபாரம். ஒவ்வொரு ஸ்டாரும் ஒரு ப்ராண்ட்.

இயக்குனர் என்பவர் கடைக்கு வந்து யார் என்ன கேட்கிறார்களோ, புளியோ, பருப்போ, பொட்டலத்தில் மடித்துக் கொடுத்து, கல்லாவில் காசைப் போடுகிறவராயிருக்கிறார் இங்கு. தயார் செய்தது யாரோ, யார் விருப்பத்திற்கோ. ஒரு இயக்குனர், ‘கமல் சார், ரஜினி சார் என்று ஒரு நடிகனைப் பார்த்துச் சொல்கிறாரோ, அந்த இடத்தில் சினிமா இராது. நடப்பது வெங்காய பஜ்ஜி வியாபாரம். ரஜினி சார் என்றால் வாழைக்காய் பஜ்ஜி, சத்ய ராஜ் என்றால் (பாவம் இவருக்கு ஏன் சார் இல்லை?) கத்தரிக்காய் பஜ்ஜி. கமல் சார் என்றால் வெங்காய பஜ்ஜி. வெங்காயத்தைச் சுற்றி, அதை மையமாகக் கொண்டுதான் மற்றதெல்லாம். ரோல், கதை, துணைநடிகர்கள், நடிகைகள், ஹீரோயின்கள் பாட்டு, டான்ஸ் இத்யாதி எல்லாம், வெங்காயத்தை மையமாகக் கொண்டு தான், மற்ற, கடலை மாவு, அரிசிமாவு, மிளகாய்த் தூள், உப்பு, எண்ணெய் எல்லாம். மற்றதெல்லாம் இல்லாமல் வெங்காயம் மாத்திரம் பஜ்ஜி ஆகாது. அதற்காக, வெங்காய பஜ்ஜி என்ற ப்ராண்ட் மாறாது.

இதில் கூட பஜ்ஜிகள் பெயர் மாறுவது போல, உலக நாயகன் பஜ்ஜி வேறு. சூப்பர் ஸ்டார் பஜ்ஜி வேறு. இரண்டு பேருமே, சந்தைக்கு வரும் சரக்குகள் தாம். இவர்கள் மாத்திரமல்ல, எல்லாருமே, எல்லாமுமே. சுப்ரீம் ஸ்டார் ஆகட்டும்- (சுப்ரீம் ஸ்டார் என விருது கொடுக்கப்பட்டது நேத்துக்கு முந்தின நாள். இன்று திமுகவை விட்டுப் பிரிந்து வேறு ஒரு முன்னேற்றக் கழகம் தொடங்கிய பின், சுப்ரீம் ஸ்டார் என கலைஞர் அழைப்பாரா என்பது சந்தேகம் தான்) - அது இயக்குனர் சிகரமாகட்டும், இசைஞானி யாகட்டும், மதராஸ் மொஸார்ட்டே ஆகட்டும், எல்லாம் இந்த பஜ்ஜிகளுக்கு இரண்டாம் பட்ச சாமக்ரியைகள் தான். ஆனால் இதில் கொஞ்சம் வித்தியாசங்கள் உண்டு. இரண்டும் கறிகாய் வகை தான். ஆனாலும், வெங்காயம் வெங்காயம் தான். உருளைக் கிழங்கு உருளைக்


more:http://thamizhstudio.com/serial_4_14.php




Saturday, December 11, 2010

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம். (12)



மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம். (12)

வெங்கட் சுவாமிநாதன்

எந்திரன் பற்றி எழுதியது போதும், இனி மற்ற விஷயங்களைப் பற்றி எழுதலாமே என்று சில அன்பர்கள் இங்கு எழுதியிருக் கிறார்கள். வாஸ்தவம். ஒரு ஆரோக்கியமான சமூகத்தில், எந்திரன் பற்றிப் பேச்சே எழுந்திராது. ஆனால் அது ரஜனி காந்த் ஸார், சன் டிவி என்ற இரு பிரம்மாண்ட சக்திகள் கையில் ஒரு மகத்தான சினிமாவாக ஒரு சூறாவளி விளம்பரத்தின் தயவில் முன் வைக்கப்பட்டிருக்கிறது. அது திரும்பத் திரும்ப, சன் தொலைக்காட்சியின் டாப் டென்னில் இன்னமும் முதலிடம் வகிப்பதாக தர நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. தர நிர்ணயம் என்பது நம் தமிழ் சினிமா உலகில் ஒட்டு மொத்தமாக எல்லோராலும் வரும்படியை வைத்துத்தான் தரம் பற்றி முடிவு செய்யப்படுகிறது. வரும்படி என்கிற சமாசாரம் நிதர்சனமாகக் காணக்கூடிய ஒன்று. நிரூபிக்கப்படக்கூடிய ஒன்று.

ஆனால் தரம் என்கிற உணர்வு இருக்கிறதே அது, நிதர்சனமற்றது. ஆளுக்கு ஆள் வித்தியாசப்படும். ஆனால் சன் தொலைக்காட்சி ஆட்சி செய்யும், தமிழ் பேசும் உலகில், வரும்படி கூட கட்டாயத் திரையிடல் மூலம் அறிவிக்கப்படுகிறது. ஆக ஒரு கால கட்டத்திற்குப் பிறகு இப்படி கட்டாயமாக வெற்றி திணிக்கப்பட்ட ஒன்றை தரம் பற்றி பேசுவோரே இல்லாமல் செய்துவிட்ட தமிழ் சமூகத்தில் அது பற்றிப் பேசித் தான் உதறித் தள்ள வேண்டியிருக்கிறது. காரணம், எந்திரன் ஒரு உச்சத்தின் குற்யீடாகிவிட்டது. இனி அந்த எவெரெஸ்டை நோக்கித் தான் எல்லோரும் பயணிக்கும் கனவு காண்பார்கள். செயல்படுவார்கள்.

இன்னம் ஒன்று. ஏந்திரன் பற்றி எழுதியது போதும் என்று சில அன்பர்கள் சொன்னது இங்கு வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால், எந்திரன் பற்றி நான் எழுதியதைப் பொறுக்கமாட்டாது ஆபாசமாகத் திட்டி வந்த பின்னூட்டங்கள் நிறையவென்றும், ஆனால் அவை ஆபாசமாக இருந்ததால் அவற்றை வெளியிடவில்லை என்று அருண் சொல்கிறார். மாதிரிக்கென்று ஒன்றிரண்டை வெளியிட்டிருந்தால், அவை எத்தனையில் ஒன்றிரண்டு என்றும் சொல்லியிருந்தால் நம் தமிழ் சமூகத்தில் ரஜனி சாரின் ரசிகர்கள், எப்படிப்பட்ட எதிர்வினையைக் காட்டுபவர்கள் என்பதோடு நம் தமிழ் சமூகத்தின் சீரழிவு எத்தனை ஆழ வேர்கொண்டதும், பரவலானதும், கொடூரமானதும் என்பது தெரிந்திருக்கும். நம் ஆபாசங்களை, நம்மைப் பீடித்திருக்கும் பயங்கர நோய்களை நாம் அறியாது மூடி மறைப்பானேன்?. நம் வியாதியைப் பற்றி நாம் அறியாதிருப்பதும் கண்மூடிக்கொள்வதும், நோயை பயங்கரமாக முற்றச் செய்துவிடும். செய்துவிடும் என்ன, முற்றிவிட்டது என்று தான் எனக்குத் தோன்றுகிறது.

எந்திரனைப் பற்றி இன்னம் கொஞ்சம் சொல்லி விட்டு பின் மற்றவற்றிற்கு நகர்கிறேன். ஏனெனில் இது பற்றி நாம் மிகவும் பெருமைப் பட்டுக்கொள்கிறோம். தமிழ் சினிமாவின் வரலாற்றிலேயே இப்படத்தின் தொழில் நுட்பமும், கற்பனையும் விஞ்ஞானத்தைக் கலையாக்கியதாகவும், எல்லாம் ஒரு உச்ச கட்ட சாதனையென்றும் பேசிக்கொள்ளப்படுகிறது. குத்தாட்டம், ஸ்டண்ட் காட்சிகள், வட்டாரப் பேச்சு, கிராமம் , காமிக் என்று எந்த ஒன்று ரசிகப் பெருமக்களின் வரவேற்பைப் பெற்று அதிக வரும்படிக்கு வழி காட்டுகிறதோ, அதையே பின் வரும் நிறைய படங்கள் காப்பி அடிப்பது நம் சினிமா மரபு ஆதலால், இனி நிறைய எந்திரன் காப்பிகள் வருவதை எதிர்பார்க்கலாம். தமிழ் சினிமாவின் வரலாற்றை எழுத ஆரம்பித்தால் அதன் ஒவ்வொரு அத்தியாயமும் இப்படித்தான் நீளும். எந்த மசாலா சரக்கு வெற்றியடைந்து, காபி செய்யப்பட்டு எத்தனை வருடங்களுக்கு எத்தனை படங்களுக்கு அது நீடித்தது பின் எந்த மசாலா எந்த வருடம் எந்தப் படத்தில் புகுந்து வெற்றிக்கு வழிவகுத்தது என்று அந்த அத்தியாயங்கள் நீளும்.

ஆனால் இது எப்படி ஒரு தமிழ் சினிமாவின் சாதனையாகும் என்பது முக்கியமான கேள்வி. இந்த படத்தை மற்றவற்றிலிருந்து வேறுபடுத்தி ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளதாகச் சொல்லப்படும் சமாசாரங்கள் எதுவும் தமிழ் மண்ணைச் சேர்ந்ததில்லை. தமிழனின் படைப்பல்ல. நான் ரஜனி சாரைச் சொல்லவில்லை. அவர் இங்கு தான் தன் சினிமா வாழ்வையும் வளத்தையும் கண்டவர். அவரும் நம் தமிழ் அரசியல் வாதிகளைப் போல, தமிழைக் கோஷமாக்கியே தன் அனேக காரியங்களைச் சாதித்துக்கொள்கிறார். அவர் மூச்சிலே தமிழ் இருக்கும் என்று பிரகடனம் செய்தவர். தமிழ் தான் இருக்குமே தவிர காவிரித் தண்ணி இருக்காது. அது கன்னடம் தான் பேசும். ஆக, காவிரித்தண்ணி பற்றி மட்டும் பேசிவிடக்கூடாது. அதற்கு அவரை மட்டும் தனித்துக் குற்றம் சொல்லிவிடமுடியாது. நம் அரசியல் தலைவர்களும், தமிழினத் தலைவர்களும் மிகவும் அடக்கித் தான் வாசிக்கிறார்கள். காவிரி, பாலாறு, ஈழத் தமிழர் பற்றியெல்லாம் ஏதும் வீராவேச முழக்கங்கள், அறை கூவல்கள் விடுவதில்லை.

ஆனால் எப்படி, நமது உலக நாயகனின் ஒவ்வொரு படத்துக்கான அவதார வேடங்கள் அனைத்துக்கும் ஹாலிவுட் ஒப்பனைக் காரர் எவராவது அழைத்து வரப்பட்டால் அது எப்படி தமிழ் சினிமாவின் தொழில் நுட்ப அல்லது கலைநுட்ப சாதனையாகும்? இதுகாறும் அனேகமாக எல்லா வேஷங்களும் போட்டுத் தீர்ந்துவிட்டதால், உலக நாயகன் இஸ்பானிய காளைச் சண்டை வீரராகிறார். மன்மதன் விட்ட அம்பு படத்தில் எம்ஜிஆர் சிங்கத்தோடு சண்டை போடவில்லையா? அதுக்கும், முன்னால், எப்பவோ முப்பது நாற்பதுக்களில், ஒரு சிறு குழந்தையாக, மூன்று வயசுக் குழந்தை, கண்ணன் ஒரு ராக்ஷஸ பாம்பை வளைத்துப் பிடித்து அதன் மேல் காளிங்க நர்த்தனம் செய்யவில்லையா? வேண்டியது ஒரு தேர்ந்த காமிராமேன். அடுத்த படத்தில் சூப்பர் ஸ்டாரோ இல்லை உலக நாயகனோ, பாகிஸ்தானிலிருந்து வரும் கோரி, கஜனி ஏவு கணைகளை அவை வரும் வழியிலேயே ஆகாயத்துக்கு எம்பி குதித்து அவை தாக்கும் முன்னரே தம் ஒற்றைக் கையில் பிடித்து விடுவார்கள். பாபா படத்தில் இதன் ஆரம்பங்களைப் பார்க்கவில்லையா என்ன?

இதெல்லாம் கிடக்கட்டும். சினிமாவில் வரும் பீதாம்பர வித்தைகள் இவை. அந்த வித்தை காட்டுபவரோ நம்மூரில் பிறந்தவர், வளர்ந்தவர். வித்தை கற்றுக் கொண்டவர். எனவே அதைத் தமிழனின் சாதனையாகக் கொள்ளலாம். ஆனால் உலக நாயகன் படங்களுக்கு வந்து அவருக்கு ஒப்பனை செய்யும் ஹாலிவுட் காரர் யாரோ ஒருத்தர். அதை நம்மது என்று தம்பட்டம் அடித்துப் பெருமை கொள்வதில் என்ன இருக்கிறது? சன் பிக்சர்ஸ் காரரிடம் 150 கோடியோ என்னவோ அநாயசமாக அள்ளிவிட பணம் அம்பாரம் அம்பாரமாகக் கொட்டிக்கிடக்கிற காரணத்தால் சங்கர், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்க்கு (எனக்கு இதற்கெல்லாம் தமிழில் என்ன சொல்வது என்று தெரியாது. இந்த என் குறைபாட்டை கேடிவி, சன் பிக்ஸர்ஸ் நடத்துபவரோ, அல்லது அவரது தாத்தாவுமோ கோவிக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்) எந்திரன் படத்துக்கான மொத்த செலவில் 40 சதவிகிதம் செலவழிக்க முடிகிறது. .சாகஸ காட்சிகளை உருவாக்க மாட்ரிக்ஸ் படத்தில் வேலை செய்த யுவென் வோ பிங்கையும் ஸ்டான் வின்ஸ்டன் ஸ்டுடியோவை க்ராஃபிக்ஸ்க்கும், அழைத்து வந்து செய்து கொண்டால் அது எப்படி சங்கருக்கோ சன் பிக்சர்ஸ்க்கோ, ரஜனி சாருக்குமோ பெருமை சேர்க்கும்?. இதெல்லாம் போகட்டும். ஐஸ்வர்யா ராய் இதில் காட்சி தரும் 57 வித உடையலங்காரங்களையும் சூப்பர் ஸ்டார் ரஜனி ஸார் தோன்றும் 55 வித உடைகளையும் வடிவமைத்து தயார் செய்து கொடுத்தது மேரி ஈ.வொட் என்பவர். எங்கிருந்து வந்தாரோ தெரியாது.

ஆக ரோபோ வும் இறக்குமதி. அதன் இயக்கமும் தந்திர, சாகஸக் காட்சிகளும் இறக்குமதி செய்த பல தொழில் நுட்ப மூளைகளின் வேலைகள். போயும் போயும் உடையலங்காரங்கள் கூட இறக்குமதி, என்றால் அதில் நம்மைப் பற்றித் தம்பட்டம் அடித்துக்கொள்ள என்ன இருக்கிறது? அதிலும் அந்த உடைகள் எந்த நியாயத்துக்கோ தர்க்கத்துக்கோ கட்டுப் பட்டவை அல்ல. ஏதோ இஷடத்துக்கு கற்பனை செய்து கொள்ளப் பட்டவை. க்ராஃபிக்ஸூக்கு இந்தியா தான் சிறந்த இடம் என்றும் அதிலும் சென்னை தான் முன்னணியில் இருக்கிறது என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்படி இருந்தும் ஸ்டான் வின்ஸ்டன் ஸ்டுடியோவையும் யுவென் வோ பிங்கையும் தான் நாடவேண்டியிருந்திருக்கிறது. ஏனெனில் நம்ம படம் 150 கோடி படம் உலகத் தரத்துக்கு இருக்கவேண்டுமே. இவ்வளவையும் இறக்குமதி செய்துவிட்டு உலகத் தரத்துக்கு தயாரித்திருக்கிறோம் என்று பெருமையடித்துக்கொள்வது எப்படி சாத்தியமாகிறது? அதில் என்ன நியாயம் இருக்கிறது. பணம் தான் நம்மது. ஐஸ்வர்யா ராயைக் காதலிக்க ரோபோவுக்கும் ரஜனிசாருக்கும் போட்டி என்ற கற்பனையும் நம்மூர் கற்பனை. தான். சரி. வேறு எது இதில் நம்மது? பணம் கொடுத்து அமெரிக்காவிலிருந்து விலைக்கு வாங்கியதைக் காட்டி இது உலகத் தரத்துக்கு நான் செய்ததாக்கும் என்றால் அது கேலிக்கூத்தல்லவா? வெட்கப் படவேண்டாமா? I

ஆக, இதில் நம்மது, தமிழ் சினிமா சம்பந்தப்பட்டது எது? கலப்படமில்லாத தமிழ்ச் சரக்கு எது என்று பார்த்தால் அது ரஜனி சாரும், சங்கரின் கற்பனை வளமும், வழக்கமான தமிழ் வெற்றிப் படத்துக்கான ஆவி வந்த ஃபார்முலாக் கதை இருக்கே பின்னர் அந்தக் கதைக்கு தாளிக்கப்படும் கடுகு உளுத்தம் பருப்பு சமாசாரமாக, பாட்டு, டான்ஸ், சாகஸ காட்சிகள், எல்லாம். அது தான். அது இந்தப் படத்துக்கு மாத்திரம் இல்லை. எல்லாத் தமிழ் படத்துக்குமான தாளிப்பு தான். மஞ்சள் பொடி, உப்பு, மிளகாய்ப் பொடி வகையறாக்கள். ஆக எந்திரன் படத்தை மாத்திரம் தனிப்படுத்திப் பேசுவதில் அர்த்தமில்லை. எல்லா தமிழ் சினிமா படங்களையும் கணக்கில் கொண்டு தான் சொல்கிறேன்.

தமிழ் சினிமா மாறிக்கொண்டு வருகிறதாக்கும். என்னென்னவோ புது புது சோதனைகள் செய்கிறார்களாக்கும் என்கிறார்கள். சமீபத்தில் மகிழ்ச்சி என்று ஒரு படம். நீல பத்மனாபனின் தலைமுறைகள் என்னும் நாவலை படமாக்கியது என்றார்கள். தமிழ் சினிமாக் கதைகளுக்கும் தலைமுறை நாவலுக்கும் எப்படி முடிச்சு போட முடியும், ஒன்று மொட்டைத் தலை, இன்னொன்று முழங்கால், என்று எனக்குள் கேள்வி பிறந்தது. அதில் வரும் ஒரு ஆச்சி பிரமாதமான சிருஷ்டி. நாவல் முழுதும் வியாபித்து இருப்பவள். தலைமுறைகள் நாவலின் மைய பாத்திரம். தமிழ் இலக்கியத்திலேயே உன்னத சிருஷ்டிகளில் ஒன்று. ஜானகிராமனின், ஜமுனா போல, புதுமைப் பித்தனின் கந்தசாமிப் பிள்ளை போல, இமையத்தின் ஆரோக்கியம் போல. இந்த ஆச்சியைத் தமிழ் சினிமாவுக்குள் கொண்டு வர, தமிழ் சினிமாக் காரர்களுக்கு பைத்தியமா பிடித்திருக்கிறது? இல்லை. அவர்கள் புத்தி சுவாதீனத்தில் உள்ளவர்கள் தான் தம் வழிவந்த வெற்றிக்கு உத்தரவாதம் தரும் மரபைப் பேணுபவர்கள் தான். ஆகவே, கஞ்சா கருப்புக்கு தலைமுறை நாவலில் என்ன வேலை என்று கேட்கமுடியாது. அதன் சினிமா அவதாரமான மகிழ்ச்சியில் அவசிய வேலை உண்டு. நான் பார்த்த இரண்டு அல்லது மூன்று நிமிட துணுக்கில் அந்த ஆச்சி நூற்றுக்கு நூறு சதவிகித தமிழ் சினிமாவில் ஆகி வந்த ஆச்சி தான். தலைமுறை நாவலின் ஆச்சி அல்லள்.

நந்த லாலா பாருங்கள். இது உலகத் தரம் வாய்ந்த க்ளாஸிக் என்று இங்கு சில அன்பர்கள் எனக்குச் சொல்லியிருக்கிறார்கள்.

அவர்கள் சிபாரிசுக்காகக் கட்டாயம் பார்ப்பேன். அது தொலைக் காட்சியில் வரும்போது. தியேட்டருக்கு போய் அல்ல. ஆனாலும் நான் பார்க்கக் கிடைத்த சில நிமிட துணுக்கு எனக்கு உற்சாகம் தருவதாக இல்லை. இயல்பு என்பது நம் வசத்தில் சிக்க மறுக்கிறது. எதைச் செய்தாலும் ஒரு நாடகத் தன்மை கட்டாயம் வந்து ஒட்டிக்கொள்கிறது. அது படம் முழுதும் வியாபித்து பயமுறுத்துகிறது. இயல்பாக இருப்பது என்பது தமிழனுக்கு என்றுமே சாத்தியமாகாத ஒன்று என்று தோன்றுகிறது. இது என்ன இன்று நேற்று பீடித்த வியாதியா என்ன? இதன் உச்ச கட்டமே “அவள் ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஒடினாள்” சமாசாரத்தை அறுபது வருடங்களுக்குப் பிறகும் சொல்லிக்கொண்டு வருகிறோம். சமீபத்தில் கூட உலக நாயகன் அதில் தான் கண்ட சினிமா நயத்தை இன்றும் நினைத்து மலைத்து நிற்பதாகச் சொல்லியிருக்கிறார். யார் சொன்னது? உலக நாயகன் தான். ஆக, முன்னால் ஜெயகாந்தன் சொன்னது போல, திடீரென தமிழன் எட்டடிக்கு உயர்ந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். பார்க்கவேண்டும்.

(தொடரும்)




Friday, November 26, 2010

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம். (11)



மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம். (11)

வெங்கட் சுவாமிநாதன்

கடைசியில் எந்திரன் படத்தை வைத்துக்கொண்டு நாம் பெருமைப் பட என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. என் கேள்வி, கவனிக்கவும். நான் எந்திரன் படத்தை ஒரு சினிமாவாக இல்லை, ஒரு வியாபாரப் பொருளாகவே எடுத்துக்கொண்டு தான் பேசுகிறேன். சினிமாவாகப் பேச தமிழில் படங்கள் நமது சினிமாவின் 80 வருட வரலாற்றில் ஏதோ ஒன்றிரண்டு தேரலாமோ என்னவோ.

திரும்பவும் சொல்கிறேன். சினிமாவாகப் பேசத் தான். பெருமைகொள்ள அல்ல. இதை நான் முன்னரே அவசியம் நேரும் போதெல்லாம் இத் தொடரிலேயே பல முறை சொல்லியே வந்திருக்கிறேன். கலாநிதி மாறன் சார் ரஜனி ஸார், சங்கர் சார், ரஹ்மான் சார் ஆக இந்த சார்கள் எல்லாம் தவிர அலகு குத்திக்கொண்ட, பாலாபிஷேகம் செய்த, மொட்டை அடித்துக் கொண்ட, யாகம் செய்த ரசிகர் எல்லோருமே ஒத்துக்கொண்ட, “இது வியாபாரம்” “சினிமாவே எடுப்பதே 150 கோடி ரூபாய் முதல் போட்டதே மக்கள் விரும்புவதைக் கொடுத்து லாபம் சம்பாதிக்கத்தான்” போன்ற பொன்மொழிகளை நினைவில் கொண்டு அதை வைத்துக்கொண்டு சில கேள்விகளைக் கேட்கலாம் கேட்க வேண்டும். சம்பாதிப்பது என்ற ஒரே குறிக்கோள் இருப்பதன் காரணமாகத் தான், தாத்தா கொள்கை என்னவாக இருந்தாலும் மாமிகள் கதைகள் தான் தொடராகும், ஜோஸ்யம், ராசி பலன், கர்நாடக சங்கீதம், தெய்வ தரிசனம், அருணாசல கார்த்திகை தீபம் எல்லாம் சன் டிவியில் காட்ட வேண்டியிருக்கிறது. தமிழினத் தலைவர் தமிழ் பெயருக்கு வரி விலக்கு கொடுத்தாலும், தமிழ் நாட்டில் அது சன் டிவி தான். கேடிவி தான்.

மற்ற இடங்களில் அது சூர்யாவாகும், உதயாவாகும், அங்கெல்லாம் சன் டிவி பெயர் செல்லுபடியாகாது தமிழினத் தலைவரும்/.தாத்தாவும் இந்த சந்தை நியாயங்களை, தர்மங்களைப் புரிந்து கொள்வார். கண்டு கொள்ளமாட்டார்.

எந்திரன் படத்தில் நாம் பார்த்து வாய்பிளந்த விஷயங்கள் எதையும் காட்டி நாம் பெருமைப்பட என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. சமீப காலத்தில் நாம் அதிகம் பெருமைப் பட்டுக் கொள்வது நம் சினிமா சம்பந்தப்பட்ட வரையிலான தொழில் நுட்ப வளர்ச்சி. எனக்கு நம்ம தமிழ் சினிமாக் காரர்கள் பெருமைப் பட்டுக்கொள்ளும், இந்த தொழில் நுட்ப சமாசாரங்கள் எதுவும் அதிகம் புரிந்ததில்லை. படிகளின் உச்சியில் சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கும் ரஜனி சார் தன் வலது காலை இடது கால் மேல் போட்டால் ரம்பம் அறுக்கற மாதிரி ஒரு சபதம் வரும். அந்த சபதம் தன் ஆள்காட்டி விரலை அசைத்தாலே கூட வரும். துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டாலும் வரும். அந்த சபதம் வந்தால், சூப்பர் ஸடார் ஏதோ எதிரியை வீழ்த்துவதற்கு தன் பட்டாக்கத்தியை உருவி விட்டார் என்று ரசிகப் பெருமக்களுக்குச் சொல்கிறார் என்று நினைக்கிறேன். அந்த ரம்பம் அறுக்கும் சப்தம் தான் வாளை உருவி காற்றில் வீசும் சப்தம் என்று சொல்லப்படுகிறதோ என்னவோ.

இந்த ஒலிப்பதிவு நான் வேறு எங்கும் காணாத புதுமை தான். . நம்ம தமிழ் சினிமாவில் யாரும் ரயிலேறினால் ரயில் நிலையத்தில் நம்ம காதலனையும் காதலியையும் விட்டால் வேறு யாரும் இருக்க மாட்டார்கள். நம்ம ஊர் காதலி பிரயாணம் செய்யும் 21 கோச்சுகள் கொண்ட ரயிலில் தனியாகத்தான் இருப்பாள். அந்தக் கோச்சில் இன்னும் இரண்டு பேர் ஒப்புக்கு இருப்பார்கள். மற்றபடி ரயில் நிலையம் காலியாகத் தான் இருக்கும். அப்பத்தான் கமலஹாஸன் கிளம்பிவிட்ட ரயிலில் இருக்கும் ஸ்ரீதேவியை நோக்கி கதறிக்கொண்டும் நொண்டி நொண்டி ஓடிக்கொண்டும் வர சௌகரியமாக இருக்கும். இப்படி எத்தனையோ சமாசாரங்கள் தொழில் நுட்பங்கள் எனக்குப் புரிந்ததில்லை.

ஆர்ட் டைரக்டர் என்றால் கதை நடக்கும் இடமும் நம்பகமாக தோற்றம் தர உதவுகிறவர் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். நம்ம சினிமாவில் டான்ஸ் பண்ணுவதற்கு பிரம்மாண்டமான மாயாஜாலங்கள் நிறைந்த செட் போடுகிறவர் என்று அர்த்தப் படுகிறவர். இதற்கு தோட்டா தரணியும், கிருஷ்ணமூர்த்தியும் போன்றவர்களை பயன்படுத்துவது மிகவும் கேவலப்படுத்தும் விஷ்யம். அவர்களை[ப் போன்ற ஓவியக் கலைஞர்களை மட்டுமல்ல, ஆர்ட் டைரக்ஷன் என்ற ஒரு கலைத் துறையையே கேவலப்படுத்துவதும் ஆகும். ஆனால் நம் சினிமாக் காரர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? அவர்களுக்குத் தெரிந்தது வியாபாரம். கொள்ளையாகப் பணம் பண்ண வேண்டும் என்ற பேராசை.

மளிகை, ஜவுளிக்கடை வியாபாரம் போல, சினிமாவும் ஒரு வியாபாரம் என்பது தான் அவர்கள் புத்தியில் பட்டிருப்பது. அது தான் அவர்கள் பேணும் மரபும். Last Emperor படம் எடுக்க வந்தவர்களுக்கு பெய்ஜிங்கில் இருக்கும் அரண்மனையை வெளிப்புறத்தில் இருந்து கூட படம் எடுக்க சீன அரசு மறுத்து விட்டது. பின்னர் அந்த மாளிகை ஒரு செட்டில் வேறு நாட்டில் உருவாக்கப்பட்டது.அந்த செட் 40 பேருடன் ரஜனி சாரோ கமல் சாரோ டான்ஸ் பண்ணுவதற்கல்ல சைனாவின் கடைசி வாரிசுவின் கதை, புரட்சியில் அல்லாடும் கதையைச் சொல்ல பெய்ஜிங் அரண்மனை தேவைப் பட்டது. யாருக்காவது படம் பார்த்தவர் களுக்கு அது உருவாக்கப்பட்ட செட் என்பது தெரிந்ததா? அதில் அதை உருவாக்கிய கலைஞனும், இப்படிச் செயல்படும் ஒரு நாட்டின் கலைஉணர்வும், பண்பாடும், பெருமைப் படத்தக்க ஒன்று. சிவாஜி படத்துக்கும் யந்திரன் படத்துக்கும் போட்ட செட் கலையும் இல்லை. அதை வேண்டிய தயாரிப்பாளரோ, இயக்குனரோ அல்லது அதைப் பார்த்து வாய்பிளக்கும் சமூகமோ,சினிமா சம்பந்தப்பட்டவர்கள் இல்லை.

திமுக மாநாடுகளுக்கு பிரம்மாண்ட அரண்மனைத் தோற்றம் தரும் செட் உருவாக்குகிறவர்களுக்கும் தோட்டா தரணிக்கும் வித்தியாசம் ஏதும் இல்லை. இங்கு தோட்டா தரணி ஒரு கலைஞராக இல்லை, தச்சு வேலை, செங்கல் கட்டிட வேலை செய்யும் மேஸ்திரியாகத் தான் கீழிறங்கியிருக்கிறார். இங்கு மட்டுமல்ல தமிழ் சினிமா இந்தமாதிரியான கலைஞர்களை எங்கெல்லாம் டான்ஸ் ஆடுவதற்கு செட் போட அமர்த்தி வருகிறார்களோ அந்த வரலாறு முழுதுமே ஒரு கேவலப்பட்ட வரலாறு தான். ஆர்ட் டைரக்டருக்கு தயாரிப்பாளர் இயக்குனர் சொன்னதைச் செய்தால் பணம் கிடைக்கிறது என்பது வேறு விஷயம். வெற்றிகரமான வியாபாரம் என்பதும் வேறுவிஷயம்,. ஆனால் இதெல்லாம் சினிமா சம்பந்தப் பட்ட சமாசாரங்கள் இல்லை. பணக் கொழுப்பில் வளர்ந்த டம்பங்கள்.

இது போலத்தான் எந்திரன் படம் சம்பந்தப்பட்டவர்களும் நம் சமூகமும் பெருமைப்பட்டுக்கொள்ளும் எதுவும். சங்கருக்கு வித்தியாசமான கற்பனைகள் தோன்றுவது வழ்க்கம். அது அவர் பிராண்ட் மேதமை. சரி. தான் உருவாக்கிய ஒரு மனித யந்திரம் தன் பிரதிமை போன்ற ஒன்று தனக்கே எதிரியானால்…. சரி சுவாரஸ்யமான கற்பனை தான். இந்த சமாசாரத்தை நாம் ஏற்கனவே இந்த தொழில் நுட்ப பிரம்மாண்ட கற்பனை என்னும் டம்பங்கள் எல்லாம் தலைகாட்டாத காலத்தில் ஜெமினி ஸ்டுடியோஸின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் பார்த்து விட்டோம். அதுவும் ஒரு வியாபாரச் சூழலில் வள்ர்ந்த எஸ் எஸ் வாசன் என்ற மனிதர் தந்தது தான். ஏதும் கலை அது இது என்று டம்ப புண்ணாக்குகள் பண்ணாத ஆனால் பொதுப் புத்திக்கு ஏற்கும் ஒரு கதையாக, படமாக நமக்குத் தந்திருந்தார். சுவாரஸ்யமான கதை சொல்லல். அதுவே அலெக்ஸாண்டர் டூமாஸின் கார்ஸிகன் ப்ரதர்ஸ் என்ற நாவலின் தழுவல் தான்.

ஆனால் நம் சாதாரண பொதுப் புத்திக்கும், நடிகர்களின் திறமைக்கும் ஏற்ற ஒன்றாக இருந்தது. அதை இன்றைய தொழில் நுட்பத்தின் வளர்ச்சியில், பாட்மான், சூப்பர்மேன், டெர்மினேட்டர் எல்லாம் பார்த்து தன்னை நவீனப் படுத்திக்கொண்ட 2010-ன் சங்கர் பதிப்பாக மேம்படுத்த நினைத்தால் அதையும் ஒரு அளவிற்கு நாம் ஒத்துக்கொள்ள முயலலாம். ஆனால் சங்கர் சாதாரண மனிதர் இல்லை. அவர் கால்கள் தமிழ் மண்ணில் பதிய மறுப்பவை. தமிழ் என்ன, இந்த மண்ணிலேயே பதிய கட்டாயம் மறுப்பவை. அவருடைய ரோபோ ரஜனி மாதிரியே உருவாகும். அந்தக் காலத்தில் ரஞ்சன் இரட்டை வேடத்தில் செய்ததை, இங்கு ரஜனி ரூபம் கொண்ட ரோபோ செய்யவேண்டும். ரஜனியே இரட்டை வேடம் போடலாமே. ரசிகர்கள் அடையும் பரவசம் சொல்லமுடியாதே. பாலாபிஷேகம் என்ன, தேனாபிஷேகமே செய்வார்களே கட் அவுட்டுக்கு. ஆனால் அது சங்கர் பிராண்ட் சிந்தனைக்கும் இயக்குனர் ஆளுமைக்கும் சரிப்பட்டு வராத சமாசாரம். . அவரது தனி ரக கற்பனை இதோடு நிற்பதில்லை.

ரஜனி என்கிற விஞ்ஞானி தன் காதலியோடு மாத்திரமில்லை இன்னும் நாற்பது பேரோடு பிரபு தேவா சொல்லிக்கொடுத்த டான்ஸாக இருக்கவேண்டும். அது ஆட வேண்டும். அந்த டான்ஸ் ஆட பெருநாட்டுக்கு அதுவும் மச்சு பிச்சுக்குத் தான் போயாக வேண்டும். இல்லையானால் ப்ரேஸிலிலோ அங்கு வேறு எங்கேயோ ஒரு பாலைவனத்தில் தான் டான்ஸ் பண்ணுவார், அதுவும் அந்த விஞ்ஞானி, மேரி ஈ. வோட் என்ற பெயர் கொண்ட ஒரு அயல் நாட்டுப் பெண்மணி தயாரித்த உடை அணிந்து கொண்டால் தான் மச்சு பிச்சுவில் ஐஸ்வர்யா ராயோடு ஆட முடியும். அந்த புதிய டிஸைன் ஆடைகளும் சங்கர் மாதிரி கற்பனை கொண்ட பெண்மணியாகத் தான் இருக்க வேண்டும். நம்ம ஊரில் ஊசி விற்கிறவர்களும், பகல் வேஷக் காரர்களும், தெருவில் மாஜிக் காட்டுகிறவர்களும் பாப் ம்யூஸிக் காரர்களும், வித விதமான கோமாளி உடைகளில் வருவார்கள். அந்த மாதிரி ஏகப்பட்ட டிசைன்களில். உடைகள் அணிந்துவ் வருவார் நம்ம சூப்பர் ஸ்டார். இது நம் தமிழ் சினிமா எல்லா ஹீரோ ஹீரோயின்களுக்குமான மரபு. ஒவ்வொரு டான்ஸிலும் 10 வித உடையலங்காரங்கள். இது இன்றைய விதி. 20 வருடங்களுக்கு முன் நல்ல குரலில் ரம்மியமான பாடல்களைப் பாடிக்கொண்டிருந்த ஹரிஹரன் இப்போது மாசத்துக்கு ஒரு ஸ்டைலில் உடை உடுத்திக்கொள்கிறார். மீசை, தலை முடி, கிருதா எல்லாம் மாற்றிக்கொள்கிறார். இல்லையா? எல்லாம் நாம் வாழும் காலத்தின் கோலமோ அலங்கோலமோ. சினிமா கலாசாரம்.

நம் டான்ஸும் பாட்டும், உடைகளும் எல்விஸ் பெஸ்லியும் மைக்கேல் ஜாக்ஸனும் பாட்டிலும் கால் கைகளை வலித்துக் கொள்வதிலும் உடையிலும் செய்த கோமாளித்தனங்கள் அத்தனையையும் செய்தால் தான் அது பாட்டும் டான்ஸும் ஆகும் என்ற நினைப்பில் உருவாகிறவை கடந்த இருபது ஆண்டுகளாக. பெஸ்லியையும் ஜாக்ஸனையும் மீறி விட்டவர்கள் நம் சங்கர் சார் போன்ற இயக்குன மேதைகள். அவர்கள் பொது மேடைகளில், ஸ்டுடியோக்களில் தான் ஆடினார்கள் பாடினார்கள். டோரண்டோ போகிறேன், மச்சு பிச்சு போகிறேன் என்று கிளம்ப வில்லை..



Wednesday, August 25, 2010

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம். (6)

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம். (6)

வெங்கட் சுவாமிநாதன்

ஞான ராஜசேகரனைப் பற்றிப் பேசலாம். மற்றவர்கள் நினைவில் வைத்துக் கொள்ளாத, எடுத்துச் சொல்லாத பெயர். ஆரம்ப கால ஞான ராஜ சேகரனை எனக்குத் தெரியுமாதலால் சொல்கிறேன். 1974-75 களில் அவருடன் பழக்கம் ஏற்படத் தொடங்கியதால் சொல்கிறேன்.

தமிழ் சினிமாவைக் கேலி செய்வது அவரது மனம் மகிழும் பொழுது போக்கு. மிக ஆரோக்கியமான, கேலி அது. தமிழ் சினிமாவே எத்தகைய கேலிக்கூத்து என்பதை அவர் அறிந்துவைத்திருந்தார். அந்நாட்களில் அவருக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் தி. ஜானகிராமன். அவரது மோகமுள் நாவலை படமாக்க வேண்டும் என்பது அந்நாட்களிலிருந்தே அவரது கனவாக இருந்து வந்தது. பிறகு அவரும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாகி, கேரள அரசில் சேர்ந்த பிறகும் அவரது கனவு மறையவில்லை. நானும் அவரும் மோகமுள் படமெடுக்க யாரிடமோ அந்த நாவல் விற்கப்பட்டுவிட்டதென கேள்விப்பட்டு, நான் சென்னை வந்திருந்த போது சிட்டியையும், ஜானகிராமனது புத்திரர்களையும் தேடிச் சென்றோம். இது நடந்தது எண்பதுக்களின் பின் பாதியில். பின் இந்த சிக்கல் ஒருவாறாக தீர்ந்தது என்று அறிந்தது நானும் ஞான ராஜசேகரனும் தில்லியில் உள்ள கேரள ஹவுஸில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து ஜானகிராமனின் நாவலை வைத்துக்கொண்டே அவரது வார்த்தைகளைக் கொண்டே திரைக்கதையின் வரைகோட்டையும் தீர்மானித்தோம். கதை நிகழுமிடங்கள் ஜானகிராமன் குறிப்பிட்டிருக்கும் கும்பகோணம் தெருக்களே. அன்று நாங்கள் தீர்மானித்திருந்த படத்தின் ஆரம்பம், நாவலின் கடைசிக் கட்டமான பாபுவின் வடநாட்டுப் பிரயாணம், சங்கீதம் கற்க. அவனுக்கு வழியனுப்பும் காட்சி. ரயில் புறப்படுகிறது. அதே ரயில் பெட்டியில் பாபு உட்கார்ந்திருக்கும் காட்சி தொட்ர்ந்து கதையின் ஆரம்பமும் ஆகிறது. அது பாபு கும்பகோணத்துக்கு வரும் காட்சி. படத்தின் கடைசி காட்சி, முதல் காட்சியான வடநாட்டுப் பிரயாணத் தொடக்கம், விரைந்து செல்லும் ரயில் பெட்டியில் பாபு. கேரளா ஹவுஸில் எழுதிச் சென்ற வரைகோடு மறக்கப் பட்டுவிட்டது. அதற்கு அவருக்கு உரிமை உண்டு. அவர் ஜானகிராமனுக்கும் அவரது நீண்ட நாள் லட்சியக் கனவுக்கும் திரைப்படத்தில் சாட்சியம்.............


மேலும் படிக்க: http://thamizhstudio.com/others_article_8.php