Showing posts with label tamilmagan. Show all posts
Showing posts with label tamilmagan. Show all posts

Monday, August 29, 2011

தமிழ் மகனின் வெட்டுப்புலி - வெங்கட் சாமிநாதன்



தமிழ் மகனின் வெட்டுப்புலி

திராவிட இயக்க அரசியல் சார்ந்த முதல் இலக்கிய பதிவு


வெங்கட் சாமிநாதன்

கடந்த ஒரு நூற்றாண்டாக தமிழ் நாடு பெரும் சமூக மாற்றங்களை, அரசியல் மாற்றங்களை, கண்டிருக்கிறது. இம்மாற்றங்களின் விளைவாக வாழ்க்கை மாறியுள்ளது. வாழ்க்கை மதிப்புகளும் மாறியுள்ளன. ஆனால் இந்த அரசியல் போராட்டங்களோ அவற்றின் பின்னிருந்த உந்துசக்திகளோ பார்வைகளோ மாறிய வாழ்க்கை இலக்கியத்தில், கலைகளில் பதிவு பெற்றதில்லை. காரணம் இவை எவற்றிலும் உண்மை இருந்தது இல்லை. சத்தம் பெரிதாக இருக்கலாம். ஆனால், ஆழ்மனதில் ரத்தத்தில் கொதிநிலையில், அனுபவத்தில் இல்லாத எதுவும் இலக்கியமாக கலைகளாக மலர்வது சாத்தியமில்லை.

குறிப்பாக 1916—ல் பிரகடனப் படுத்தப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரில் பிறந்து, பல அவதாரங்களில் பல்கிப் பெருகி, இன்று தமிழ் நாட்டின் பெரும் அரசியல் சமூக சக்தியாக விளங்கும் திராவிட இயக்கமும் சரி, அதற்குச் சற்றுப் பின் தோன்றி இன்று வரை சமூகத்திலும் சரித்திரத்திலும் எந்த வித பாதிப்பையும் விளைவித்திராத பொது உடமை இயக்கமும் சரி, கிட்டத் தட்ட ஒரு நூற்றாண்டு கால இவற்றின் தொடர்ந்த இருப்பில் இவ்விரண்டின் கூச்சல், மேடைப் பேச்சுக்களிலும், பத்திரிகைப் பிரசாரங்களிலும் மிக உரக்க இருந்த போதிலும், இவை பிரசாரமாகவே நின்றுவிட்டன, ஆதியிலிருந்து இன்று வரை. இவையெல்லாம் என்னதான் நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், சினிமா என்று எல்லா இலக்கிய, கலை வடிவங்களிலும் எழுதிக் குவிக்கப் பட்டுக்கொண்டே இருந்தாலும், அவை குப்பைகளாகத் தான் மலையென பெருகிக் கிடக்கின்றன.

ஒன்று விலகி இருந்து சாட்சி பூதமாக தன் பார்வையை வைக்கத் தெரிந்திருக்கவேண்டும். அல்லது எந்தத் தரப்பிலிருந்தாலும், கம்யூனிஸ்ட் கட்சியிலோ அல்லது திராவிடக் கட்சிகளிலோ எதிலிருந்தாலும், தனக்கும் தன் அனுபவத்துக்கும் உண்மையாக நேர்மையாக இருக்கத் தெரியவேண்டும். இரண்டுமே இதுவரை சாத்தியமாகவில்லை. இரண்டு தரப்புகளுமே தானே நம்பாத கொள்கைகளின் பிடியில் சிக்குண்டு அவற்றை உரத்து சத்தமிட்டு கிடப்பவை. அதில் சுயலாபம் இருப்பதால் தாம் சிக்குண்டு கிடப்பதில் அவர்களுக்கு விருப்பம் தான். அதில் திளைத்துக் கிடப்பவர்கள். அவர்கள்.

ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. இந்த இரண்டு கட்சிகளும் ஒரு நூற்றாண்டு காலமாக நீடித்திருப்பதும், தமிழ் மண்ணில் வேரூன்றி பலம் பெற்றிருப்பதும் அவற்றில் உண்மை இல்லாது சாத்தியமா?, அதற்கு மக்கள் வரவேற்பும் அவர்கள் கொள்கைகளில் மக்களுக்கு நம்பிக்கை இல்லாது இந்த வெற்றி சாத்தியமா என்று.. சாத்தியமாகியிருப்பது இரு தரப்பினரின் கோட்பாட்டின் பலத்தால் அல்ல. இரு தரப்பினரின் கொள்கை நடைமுறை என்ற இருமுக வாழ்வின் காரணமாகத் தான். இது தலைவனிலிருந்து தொண்டன் வரை புரிந்து கொள்ளப் பட்டுள்ளதன் காரணமாக, இருமுக வாழ்வே ஒரு நூற்றாண்டு காலமாக சாத்தியமாகியுள்ளது.

தமிழ் மகனின் வெட்டுப்புலி நாவல் தமிழ் நாட்டின் ஒரு சின்ன பகுதியின் ஒரு நூற்றாண்டு மக்களின் வாழ்வையும் சிந்தனையோட்டத்தையும் ஆசைகளையும் சொல்கிறது. அது மக்களின் வாழ்க்கையும் ஆசை நிராசைகளும். அந்த மக்கள் சென்னையை அடுத்த ஒரு ஐம்பது – நூறு மைல்களுக்குள்ளான மண்ணில் வாழ்கிறவர்கள்.

வெட்டுப் புலி படம் ஒட்டிய தீப்பெட்டிகளை நான் பள்ளியில் படித்த காலத்தில் பார்த்திருக்கிறேன். சொல்லப்போனால் 1940 களில் நிலக்கோட்டையில் தீப்பெட்டி வாங்கினால் அது வெட்டுப் புலி படம் ஒட்டியதாகத்தான் இருக்கும். இடது பக்கம் ஒரு வளைந்த அரிவாளை, கதிர் அறுக்கும் அரிவாளை ஓங்கிய கையும் முழங்காலுக்கு தூக்கிக் கட்டிய வேட்டியுமாக ஒரு வாலிபன். அவனோடு ஒரு நாயும் இருக்கும். அவன் முன்னால் புதரிலிருந்து சீறும் ஒரு புலி. இது முப்பதுக்களில் நடந்த கதை என்பது இப்போது தமிழ் மகனின் இந்த நாவலிலிருந்து தெரிந்து கொள்கிறேன்.

இது ஒரு பெரிய விஷயமா என்றால் தனி ஒருவனாக ஒரு புலியை அரிவாளால் எதிர்கொண்டு வெட்டி வீழ்த்தியது ஒரு தனி மனித சாகஸம் தான். ஆனால் அது இவ்வாறு கொண்டாடப்படுவது கிட்டத் தட்ட அந்த காலகட்டத்தோடு சற்று முன்னும் பின்னுமாக இணைந்த பெரிய சமூக நிகழ்வுகள். இரண்டுமே தமிழ் வாழ்க்கையின் சமூகத்தின், சரித்திரத்தின் குணத்தை நிர்ணயித்தவை. இரண்டும் அதற்குச் சற்று முன்னரே தொடங்கி விட்டவை தான்.

எங்களூரில் கிட்டத்தட்ட இம்மாதிரி ஒரு சின்ன நாட்டார் காவியமாக சிறப்பிக்கப்பட்ட நிகழ்வுகள் உண்டு. ஒன்று தென் மாவட்டங்களில் அந்நாட்களில் மிகவும் பரவலாகப் பேசப்பட்ட, ஜம்புலிங்கம் என்ற ஒரு பெரிய கொள்ளைக்காரனின் சாகசங்கள். மக்களால் கொண்டாடப்பட்டவன். பின் என் சின்ன வயசில் எல்லோரும் வியந்து வாய் பிளந்து பேசும் தீச்சட்டி கோவிந்தன் என்றே மக்களால் பட்டம் தரப்பட்ட ஒரு சப் இன்ஸ்பெக்டரின் சாகஸங்கள். கோவிந்தன் தீச்சட்டியைத் தூக்கி முன்னால் செல்ல, அவரைப், பின்னால் தொடர்ந்த காவலர்கள் சுமந்து வந்த பாடையில் துப்பாக்கிகளை அடுக்கிப் போர்த்தி பிணமென மறைத்து மயானத்துக்கு எடுத்துச் சென்ற சாகஸ வரலாறு.. அம்மாதிரி ஒரு கதாநாயகன் ஆன சப் இன்ஸ்பெக்டர் என்ன, போலீஸ் டைரக்டர் ஜெனரல் கூட யாரும் இல்லை. இந்த 70 – 80 வருட காலத்தில்.

வெட்டுப்புலி சம்பந்தமில்லாது ஒட்டவைக்கப்பட்ட சமாந்திர கால நிகழ்வு என்றில்லை. இந்த நாவல் சொல்லும் கதையின் இன்னொரு இழையின் மூத்த தலைமுறைக்காரர் சின்னா ரெட்டி தான் வெட்டுப் புலி தீப்பெட்டி லேபிளில் காணும் ஹீரோ. நாவல் தொடங்கும் தசரத ரெட்டியின் சகலை. அந்த ஆரம்பம் மிக அழகாகவே சொல்லப்பட்டிருக்கிறது. அந்த சாகஸ நிகழ்வின் சாதாரணத்துவத்துக்கு மேலே அது வீர காவியமாக ஆக்கப் படவில்லை. அந்த சாதாரண நிகழ்விலேயே அதன் எதிர்பாராத தன்மையில் எதிர்கொண்டதிலேயே தான் சாகஸம். அனேகமாக நாவல் முழுதும் இந்த சாதாரண தோரணையிலேயே நிகழ்வுகள் சொல்லப்படுகின்றன. அதன் இடைவிடா தொடர்ச்சி தான் சரித்திரமாக நம் எல்லோரையும் ஆக்கிரமித்துக்கொண்டுள்ளது.

பத்திருபது அய்யர்மார்கள் இருந்த அக்கிரகாரம் இப்போது இரண்டு மூன்று பேர் கொண்ட அகரமாகக் குறுகிவிட்டது அந்த முப்பதுகளிலேயே. அவர்கள் ஒரு பொருட்டே இல்லை. முப்பதுக்களில் மற்ற இடங்களில் சுதந்திரப் போராட்டம் பெரும் கொந்தளிப்பாக இருக்கலாம். ஆனால் ஜெகநாதபுரத்தின் .தசரத ரெட்டிக்கு அது “உபயமத்த வேலை” அது ஜமீந்தார்களும், அங்கு ஒரு மணி ஐயர் கணக்குப் பிள்ளையாகவும், குதிரைமேல் சவாரி செய்து வெள்ளைக்காரன் வருவதுமான காலம். விவசாயம் செய்யும் ரெட்டியார்கள். ஆனால் நாமம் போட்டு வைணவர் களானால் நாயக்கர்கள்,. இன்னும் சற்றுத் தள்ளி தெற்கே போனால் படையாச்சி. மதராஸ் பக்கம் போய் ”ரெட்டியார்னு சொன்னா தெலுங்கனான்னு கேக்கறான்,”. என்று இப்படி சாதி பற்றிய பிரக்ஞை தான் முன்னிற்கிறது.

ஒர் இடத்தில் தஸரத ரெட்டி சொல்கிறார், ”சாதியெல்லாம் ரொம்ப நாளா வந்திட்டிருக்கு. அதுலே ஏதோ இருக்குன்னு தான் இப்படி யெல்லாம் செஞ்சு வச்சிருக்காங்க. நம்ம காலத்திலே எப்படியாவது இதைக் கட்டிக் காத்துட்டோம்னா போதும்” என்று நினைக்கிறார். நண்பர்களிடையே பேச்சு வருகிறது. “வெள்ளைக்காரன் மாதிரி இவனுங்களும் (பாப்பானுங்களும்) காபி குடிக்க ஆரம்பிச்சுடானுங்க. அவன் மாதிரி உடுத்த, அவன் பாஷைய பேச ஆரம்பிச்சுட்டானுங்க. ஆனா அவன் மாத்திரம் நாட்டை விட்டுப் போயிடனும்” என்று பேச்சு நடக்கிறது. அந்தப் பேச்சு செய்யும் வேலையையும் தொடுகிறது. ”அவன் படிக்கிறான். நம்ம பசங்களுக்கு செருப்பு தைக்கணும், வண்டி ஒட்டணும். படிப்புன்னா மாத்திரம் கசக்குது. என்னடான்னா, அவன் செய்யறது ஒசத்தி, நாம செய்யறது மட்டம்னு ஆயிப்போச்சு. ஒவ்வொத்தன் அவனுக்கு தெரிஞ்சதைத் தான் செய்யறான்”. என்று பேசிக் கொள்கிறார்கள். இதுக்கெல்லாம் முத்தாய்ப்பா வருவது “பாப்பானைத் திட்டனும்னா அப்[படி ஒரு ஆவேசம் வருதுய்யா”. என்கிறார் கணேச ரெட்டி. ஆவேசம் வருது. திட்டணும் .

ஆனால் ஏன் அப்படி ஆவேசம் வருது என்று கேட்டால் அதற்கு பதில் அவரவர் வாழ்க்கையிலிருந்து கிடைப்பது இல்லை. உதாரணத்துக்கு கருணாநிதியிடம் பொங்கிப் பெருகும் அதீத பார்ப்பன துவேஷத்துக்கு காரணம் என்ன என்று அவரது நெஞ்சுக்கு நீதியின் அவ்வளவு பாகங்களிலும் கிடைக்காது. அவரது திருக்குவளை வாழ்க்கையிலும் கிடைக்காது. அவர் அதைப் பெற்றது பனகல் மகாராஜைவைப் பற்றிப் படித்ததிலிருந்து தான் என்று சொல்கிறார். அதே கதைதான் தசரத ரெட்டியாருக்கும் கணேச ரெட்டியாருக்கும். எல்லாம் பொது வெளியில், காற்றில் மிதந்து வரும் பரிமாறல்கள் அவற்றின் நியாயத்தை விட அவை அவர்களுக்கு திருப்தி அளிப்பவையாக இருக்கின்றன என்று தான் சொல்லவேண்டும். நாவலின் 370 சொச்சம் பக்கங்கள் அத்தனையிலும் எங்கும் யாரும் என்ன காரணங்களுக்காக இத்துவேஷத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான காரணங்கள் கிடைக்காது. இப்படி கிடைக்காமல் போவது நிச்சயமாக அனுபவம் சார்ந்தது. இது வரை நாம் கண்ட திராவிட, கம்யூனிஸ் எழுத்துக்கள் போல கொள்கைகள் சார்ந்து பின்னப்பட்ட கதையோ வாழ்க்கையோ மனிதர்களோ அல்ல. .பாப்பானிடம் காணும் ஒவ்வொன்றையும் பார்த்து உள்ளூர கொதித்துக்கொண்டிருக்கும் பொறாமை தான் துவேஷத்துக்கான காரனங்களைத் தேடச் சொல்கிறது.

தசரத ரெட்டியும் அவர் மனைவி மங்கம்மாவும் பேசிக்கொள்கிறார்கள். தசரத ரெட்டி சொல்கிறார் மனைவியிடம்.

“குருவிக்காரன், பள்ளி, பறையன், செட்டி, கம்மான் எல்லாம் சமம்னு சட்டம் வரப்போவுதாம். அப்புரறம் எல்லாரும் எல்லா வேலையும் செய்யவேண்டிதான்”.

அதற்கு மங்காத்தா பதில், “நல்லாருக்கு. நாம அணில் அடிச்சி சாப்பிடணும், அவன் வந்து வெள்ளாமை பண்ணுவான்.”

இது இந்த இரண்டு பேருடன் மாத்திரம் முடிகிற விஷயம் இல்லை. ஆரம்பித்து வைத்த பனகல் மகாராஜாவிலிருந்து, ஈரோட்டு ராமசாமி நாயக்கரிலிருந்து தொடங்கி திருமாவளவனும் டாக்டர் கிருஷ்ணசாமியும் ஒருவர் முகம் ஒருவர் பார்த்துக்கொள்ள விரும்பாத இன்று வரை நம்மூர் கிராமத்து கூரை வேய்ந்த சாயாக் கடையின் தனித் தம்ளர் வரை.

பாப்பானைத் திட்டுவதில் தான் ஒரே குரல் இவர்களுக்கு. அதனால் தான் மங்காத்தாவுக்கு இந்த சிக்கலை தசரத ரெட்டி விளக்கமாகச் சொல்கிறார்.

“குருவிக்காரனும் நாமும் சமம்னு ஆயிடணும்னு இல்லடி. பாப்பானும் நாமும் சமம்னு சொல்றதுக்குத் தாண்டி சட்டம் போடச் சொல்றாங்க.”

மங்காத்தாவுக்கு இது ஒன்றும் சரியாகப் படவில்லை. “அவன் மேரி நாமும் ஆவணும்னா கறி மீனை விட்டுப்புட்டு தயிர் சோறு சாப்பிட்டுக்கினு நாக்கு செத்துப் போக வேண்டியது தான். அடச்சீ, நாம எதுக்கு பாப்பானை மாரி ஆவணும்”

இந்தக் கேள்வி பல ரூபங்களில் இன்று வரை எல்லா திராவிட அரசியல் சாரந்தவர்கள் குடும்பங்களிலும் தலைவர் முதல் தொண்டன் வரை கேட்கப்படும் கேள்வி தான். நமக்குத் தெரியும் இந்தக் கேள்வி இன்றும் தொடர்கிறது, மூன்று தலைமுறை வயதான, இன்று இந்தப் போக்கிற்கே அச்சாணியாக தம்மை சந்தர்ப்பம் நேரும்போதெல்லாம் விளம்பரப் படுத்திக்கொள்ளும் தலைமைகளின் வீடுகளிலும் தொடர்கிறது. வேறு வேறு தொனிகளில், அழுத்தங்களில், வார்த்தைகளில். அப்போது ஒரு தரப்பு உள்ளார்ந்த நம்பிக்கையின், வளமையின் வழி வாழும்போது, மறு தரப்பு, மூர்க்கம், முரட்டு அதிகாரம் வழி ஆள்கிறதையும் பார்க்கலாம். இந்த நாவலிலேயே அனேக பக்கங்களில் விரியும் இதற்கான சான்றுகளை, ஒரு சில என சுட்டிக்காட்டலாம்.

இது இரண்டு தலைமுறைகள் கடந்து அறுபதுகளில் நடப்பது. என்றும் நிகழும் வாழ்க்கையில் ஒரு நாளைய ஒரு நேர காட்சி. ஒரு சோத்துப் பதம். இது தியாகராஜன் என்னும் ஒரு தீவிர திமுகவுக்கும் அவனது புது மனைவி, தெலுங்குக் குடும்பம், ஹேமலதா என்னும் ஒரு அப்பாவிக்கும் இடையில்

“இரவு சாப்பாடெல்லாம் முடிந்து சந்தோஷமான மன நிலையில் இருக்கும் போது, சாதாரணமாகப் பேச்சு எடுக்கிறாள் ஹேமா

“ஏங்க, ஐயருங்கள திட்டுறதை விட்டுட்டு நாமளும் அவங்க மாதிரி ஆனா என்னாங்க”

அதெல்லாம் நடக்ககூடிய காரியம் இல்லடி.

“நாமளும் நாமம் போட்டுக்கிட்டு தயிர் சாதம் சாப்பிடணும், அவ்வளவு தானே”

பதில் சொல்லாது அவன் திசை திருப்பவே, புனிதா கேட்கிறாள் திரும்பவும்.

“நான் சொன்னதுக்கு பதிலைச் சொல்லுங்க. அவங்க மாதிரி சுத்தபத்தமாக இருக்க முடியலைன்னு தானே அவங்க மேலெ பொறாமை?”

“அடி செருப்பாலே”.. மென்ற வெற்றிலைச் சாறை பிளிச் சென அவள் முகத்தில் துப்பினான் .”பைத்தியக்காரி…..முட்டாள்….. தயிர் சாதம் சாப்பிட்டா நீயும் ஐயர் ஆயிடுவியா?, கலெக்டர் ஆயிடுவியா?, ஜட்ஜ் ஆயிடுவியா?” ஆத்திரம் தாளாமல் அப்படியே இழுத்து முதுகில் நாலு சாத்து சாத்தினான்”

இது ஒரு காட்சி.

இதுவே குடும்பத்தை மீறி வெளி உலக வாழ்க்கையிலும் எந்த காரணமும் இல்லாது பொறாமை, தன் இயலாமை, பாப்பான் என்ற ஒரு சொல்லே மூர்க்கத்தனத்துக்கு இட்டுச் செல்கிறது.

இடையிடையே நாவல் எங்கிலும் எழுபது எண்பது வருட கால நீட்சியை உள்ளடக்கிய சரித்திரத்தில் வேறு பல மாற்றங்களையும் ஆங்காங்கே பதித்துச் செல்கிறார். தமிழ்மகன்

.இதற்கு முந்திய போன தலைமுறையிலேயே, “அரிசிச் சோறு சாப்பிடும் ஆசை பிள்ளைகளூக்கு வந்து விட்டது பற்றிய கவலை சின்னா ரெட்டிக்கு வந்துவிடுகிறது. அதனால் நாலு ஏக்கர் நிலம் நெல்லுக்கு என ஒதுக்க வேண்டி வந்துவிடுகிறது.

.பல இடங்களில் இவையெல்லாம் அப்போது நடந்தனவா என்ற சந்தேகம் எனக்கு எழுந்ததுண்டு. முப்பதுகளில் டீசல் மோட்டார் வைத்து நீர்ப்பாசனம் வந்து விட்டதா என்ற சந்தேகம் கூட்டணி என்ற சொல் அந்தக் கால அரசியலிலேயே வரவில்லை. பொது வாழ்க்கையில் வந்து விட்டதா? 1940 களில் நான்காம் ஜார்ஜ் தலை போட்ட ஒரு ரூபாய் தாள் இருந்ததா? அந்தக் காலத்தில் டெர்ரிலீன் சட்டைகள் வந்தனவா? இது போன்று ஆங்காங்கே படிக்கும்போது தட்டுப் படும்போது புருவம் உயரும். இருந்தாலும், ஆசிரியர் மிகவும் கஷ்டப்பட்டு அவ்வக் கால நடப்புகளையும் மாறி வரும் சூழல்களையும் பதித்துச் செல்கிறார் என்று நாவல் முழுதும் தெரிவதால், ஒரு வேளை இருக்கலாம் என்று சமாதானம் கொள்கிறோம். இது மட்டுமல்ல இன்னும் பல தகவல்களையும் தாண்டிச் செல்கிறோம். அதனால் மூன்று நான்கு தலைமுறைகளின் தமிழ் வாழ்க்கை அந்த இரண்டு வடக்கு மாவட்டங்களில் அதன் மைய நீரோட்டத்தைப் பதிவு செய்வதில் பெரும் தவறுகள் ஏதும் நிகழ்ந்துவிட்டதாகத் தோன்றவில்லை. விவரம் தெரிந்து தான் இத்தகவல்களை சேர்த்திருப்பார் என்ற நினைப்பில் மேல் செல்கிறோம்.

இருபதுகளில் தொடங்கும் இத்தலைமுறைக் கதை திராவிட அரசியலைத் தொடுவதோடு தமிழ் வரலாற்றின் போக்கிலேயே சினிமாவையும் தன்னுள் இணைத்துக்கொள்கிறது..முதல் சினிமாப் படம் தியாகராஜ பாகவதரை வைத்து எடுத்த படத்திலிருந்தே இந்த இணைப்பு தொடங்கிவிடுகிறது. சினிமா எடுக்க வேண்டும் என்ற ஆசை பிடித்தலையும் ஊத்துக்கோட்டை ஆறுமுக முதலியாரிலிருந்து இது தொடங்கிவிடுகிறது. படம் பார்க்கும் ஆசையிலிருந்து சினிமா எடுக்கும் ஆசை வளர்கிறது. மதராஸுக்கு பயணம். மாம்பலத்தில் வீடு வாங்கி குடியிருக்கும் அண்ணன் கணேசன் வீட்டுக்கு வருகிறார். அண்ணனிடம் தன் திட்டத்தைச் சொல்லி அரை நோட்டு ஆகும்கறாங்க” என்கிறார். அண்ணனுக்கு ரொம்ப சந்தோஷம். தம்பியின் தைரியத்தைப் பார்த்து. அவர் கொடுக்கும் ஒரே ஆலோசனை” ”இந்தப் பாப்பானுவ நுழையறதுக்கு முன்னாலே நீ நுழைஞ்சிடு. ”நாம பாப்பனுவ கிட்டே தான் அடிமையா இருக்கோம் வெள்ளைக்காரங்கிட்டே இல்லே. அதான் பெரியார் சொல்றாரு. ரெண்டாயிரம் வருஷமா அடிமையாயிருக்கோம். இதுதான் பெரிய விஷயம். இதை வச்சு படம் எடுத்துடு”. என்றவர் அடுத்து, “நம்ம சோடா ஃபாக்டரி வஜ்ரவேலு முதலியார் படம் எடுக்கறாரு. அவரிட்ட போய் ஜஸ்டிஸ் பார்ட்டி கணேசன் அனுப்பினார்னு சொல்லு” என்று வழி காட்டுகிறார். அங்கு போன இடத்தில் கே.பி.கேசவனின் நாடகத்தை, எம்.கே ராதாவின் அப்பா கந்தசாமி முதலி படம் எடுக்கப்போவதாகவும் அதில் பங்குதாரராகலாம் என்றும் தெரிகிறது.

ஆக, முதலியார்கள் நிறைந்திருக்கும் தொழிலில் பாப்பான் நுழைஞ்சிடப்போறானே என்று கவலையில் அடிமைத்தனம் எங்கு வந்தது.? போட்டியும் பொறாமையும் தானே. கவலைக்குக் காரணம்? இது ஆரம்பம். இதன் அடுத்த, அல்லது அதற்கும் அடுத்த கட்டம் தலைமுறைகள் தாண்டி ஐம்பது-அறுபதுக்களில் தொடர்கிறது அதே பொறாமையுடன்.

இப்போது அறுபதுகளுக்கு வந்தால், தியாகராஜனைச் சந்திக்கலாம். முதலியார் சாதியில் பெண் இருக்கக் கூடாது.

நாயுடு என்று சொன்னார்கள். தமிழ் தெரியாது தெலுங்கு பேசுகிறவள். ஐயரு இல்லாம செய்துகிட்ட சீர்திருத்த மணம் அவளையும் தன்னைப் போல் பெரியார் பக்தையாக்கிவிட முயன்றால், அவள் “எல்லாரையும் சமமா பாக்கணும்னு சொல்றீங்க… அப்புறம் இது வேறே அது வேறேனு சொல்றீங்க. எதுக்கு இந்தப் பித்தலாட்டம்கறா? என்று அவனுக்கு எரிச்சல். கடைசியில் திராவிட இயக்கக் கொள்கை தான் இதற்கு பதில் சொல்லி மனம் சமாதானமடையச் செய்யும் போலிருக்கிறது.

“தன்னைப் பழி வாங்க பார்ப்பனர் செய்த சதி போல இருந்தது அவனுக்கு மனைவி வாய்த்தது.” பிரசினை எதுவாக இருந்தாலும் பாப்பானைத் திட்டினால் பிரசினை தீர்ந்துவிடுவதாகத் தோன்றுகிறது.

வீட்டில் மாத்திரம் இல்லை. அவன் வேலை செய்யும் ஏஜீஸ் ஆபீஸிலும் அவனுக்கு எதிரான பார்ப்பன சதி தான்.

அவன் ஆபீஸில் ஒரு பார்ப்பனர் நாடகங்கள் போடுவதிலும் சினிமாவுக்கு வசனங்கள் எழுதுவதிலும் ஈடுபட்டிருந்ததை அறிந்ததும் அதுவும் அவன் தன் ரேங்கில் இருப்பவன் அவன் எம் ஜி ஆர் படங்களுக்கு வசனம் எழுதும் அளவுக்குப் போனது அவனுக்கு தாளமுடியாத ஆத்திரமாக வந்தது. இதுவும் பார்ப்பன சதி இல்லாமல் வேறென்ன?

அவனை யாரோ ஒரு பார்ப்பான் என்று உதறி எறியவும் முடியவில்லை. அந்த பாப்பானுக்கு ஒரு ரசிகர் கூட்டம் வேறெ. “பால சந்தர் படம்” என்று புகழ் பரவியது. அடுதடுத்து அந்த பாப்பான் வளர்ந்து கொண்டே போனால்? நாணல், எதிர் நீச்சல், பாமா விஜயம் மேஜர் சந்திரகாந்த், சர்வர் சுந்தரம் என்று அந்த வளர்ச்சி பெரிய தலைவலியாக இருந்தது. அவர் பெயரை “பால சந்திரனோ, பால சுந்தரமோ என்று தெனாவட்டாக உச்சரிப்பான்.

”என் கூட வேலை செஞ்ச பய” என்று சொல்வான். பின் ”என் கீழே வேலை செஞ்சவன்” என்றும் சொல்லிப் பார்த்தான்..

லட்சுமண ரெட்டியார் திராவிட கழக அனுதாபி, அப்பப்போ படிப்பகம் அது இது என்று உதவுவதோடு நிற்பவர். அவர் தன் குடும்பத்தையே ஒன்றும் செய்ய முடிந்ததில்லை. அவர்கள் சம்பிரதாயத்திலேயே மூழ்கியவர்களாக இருந்தார்கள். இன்னும் ஏதாவது செய்யலாம் என்று தீவிர கழகக் காரரான மணி நாயுடுவை அண்டலாம் என்றால் அவர் சாராயக் கடையை ஏலம் எடுப்பதிலும் கவர்ன்மெண்ட் காண்டிராக்ட் ஏலம் எடுக்க அரசுத் தரகர்களுக்கு லஞ்சம் தருபவராக மாறிப்போனதால் அந்தத் தொடர்பும் விட்டுப் போகிறது.

முன்னர் ஜஸ்டீஸ் பார்ட்டியிலிருந்த சௌந்திர பாண்டிய நாடாரும் இதில் வருகிறார். பெரியார் திடலில் லட்சுமண் ரெட்டியாரைச் சந்திக்கிறார். நாடார் குல மித்ரன் என்ற பத்திரிகையின் பழைய இதழைப் படிக்கிறார். அதில் பெரியார் காங்கிரஸில் இருந்த போது ஹிந்து- முஸ்லீம் ஒற்றுமையைப் பற்றியும்,, ஸ்ரீமான் காவ்ய கண்ட கணபதி சாஸ்திரிகள் வரவேற்புரை அளிக்க, ஸ்ரீமான் ராமாசாமி நாயக்கர் அக்கிராசனராகிறார். காந்தியடிகள் உண்ணாவிரதம் வெற்றியடைய கடவுளைப் பிரார்த்திக்கிறார் ஜஸ்டிஸ் கட்சி ஒழிய நாள் தோறும் பிரார்த்தனை செய்து வருவதாகவும் சொல்கிறார். லட்சுமண ரெட்டியார் பெரியாரிடம் மரியாதை வைத்திருப்பவர். நாடார் குல மித்ரனில் தப்புத் தப்பாகப் போட்டிருக்கிறானோ என்று கேட்கிறார் சௌந்திர பாண்டிய நாடாரை.

லட்சுமண ரெட்டியார் சினனா ரெட்டி வெட்டுபுலி காலத்தில் சின்ன பையன். இப்போது தாத்தாவாகிவிட்டவர்.

இன்னொரு தலைமுறையில் நடராஜனுக்கு ஒரு கேள்வி. “இவனுங்க (பாப்பானுங்க) நாலு பேர் இருந்தா நாம நானுரு பேர் இருக்கோம். நாலு தட்டு தட்டி வச்சோம்னா சரியாயிடும்ல, அவனுங்க என்ன நம்ம அதிகாரம் பண்றது?, என்று கேட்கிறான். இன்னொரு சமயம் “இவனுங்க குரலே எனக்கு பிடிக்கல மாமா,. என்னமோ மூக்கில் பிரசினை மாதிரியே பேசறானுங்க. தொண்டையிலே சளி கட்டின மாதிரி. இவனுங்க மனுசனே இல்லே மாமா. வேறே ஏதோ மிருகம். குரங்குக்கும் மனுஷனுக்கும் நடுவிலே” இதற்கு மாமாவின் பதில், “அப்படி இல்லேடா. மனுஷனுக்கு அடுத்து வந்த மிருகம்னு வேணா சொல்லு. ஒத்துக்குவானுங்க” என்கிறார் சிரித்துக்கொண்டே.

ஆனால் நடராஜனுக்கு எப்படியோ பாரதியாரைப் பிடிக்கும். ஆனால அவன் வட்டாரத்தில் பாரதியாரை .ஒதுக்கினார்கள். பாரதி தாசன் போதும் அவர்களுக்கு. பாரதியும் பெரியாரும் சந்தித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைப்பான்.

வ.வு.சி.க்கும் பெரியாருக்கும் இடையே இருந்த நெருக்கம் பாரதிக்கும் வ.வு.சிக்கும் இடையே இல்லை. மனஸ்தாபமாவது இருந்திருக்கும். அப்படியானால் பாரதியாரை மறைமுகமாகக் கூட ஆதரிக்க வேண்டியதி்ல்லை” என்று இப்படிப் போகும் அவன் திராவிட இயக்க சிந்தனை பிரசினைகளும் அதற்கான சமாதானங்களும்.

நடராஜனுக்கு கன்னிமாரா லைப்ரரியில் ஒரு பெண்ணுடன் பழக நேரிடுகிறது. அவள் பிராமணப் பெண் என்று தெரிந்ததும் “அது ஒரு கரப்பான் பூச்சி பறந்து வந்து அவன் உடம்பில் உட்கார்ந்தது போல் இருந்தது” அவனுக்கு.

அவர்கள் பேசிக்கொள்வதைக் கேட்கலாம்:

நடராஜன்: “பொஸ்தகம்னா ப்ராமின்ஸ் எழுதறது தானே? பாரதியார், வ.வே.சு. தி.ஜானகிராமன், சுஜாதா, பாலகுமாரன், எல்லாம் யாரு?

(பேசிக்கொண்டிருபபது பிராமணப் பெண் இல்லையென்றால் ப்ராமின்ஸ்க்கு பதிலாக ”பாப்பானுவ” என்று சொல்லியிருப்பான். ).

எல்லாத்தையும் பெரியார் கண்ணாடி போட்டுப் பாக்காதீங்க. புதுமைப் பித்தன் ஜெயகாந்தன்லாம் உங்க ஆளுங்க தானே”? என்கிறாள் அவள்.

இதற்கு நடராஜன் பதில்: “உங்களுக்கு ஏத்த மாதிரி எழுதினதாலே விட்டு வச்சிருக்கீங்க.”

அவர்களை வழியில் ஒரு போலீஸ் இடைமறிக்கிறான். வழக்கமான சென்னை போலீஸ்தான். அவன் விசாரணைகள் எப்படி இருக்கும் என்பது நமக்குத் தெரியும்.

“அப்படி லவ்வு?” என்று கிண்டல் செய்கிறான்.

“அப்படிலாம் இல்லை சார். இது எங்க மாமா பையன். ஒண்ணாத்தான் படிக்கிறோம்.” என்று பதில் சொல்கிறாள் நடராஜன் கூட இருக்கும் கிருஷ்ண ப்ரியா.

“அப்படியாடா? “ என்று கேட்கிறான் நடராஜனப் பார்த்து.” நம்மைப் போன்ற ஒரு கருப்பனே நம்மை இழிவு படுத்தும்போது பாப்பான் ஏன் ஏளனமாக நடத்தமாட்டான்” என்று சிந்தனை போகிறது நடராஜன் மனதில்.

நாடு முழுக்க கொந்தளிப்பா இருக்கு. பத்திரமா வூடு போய்ச் சேரு. ஊரைச் சுத்திட்டு இருந்தே பொண்ணு பாழாயிடும் பாத்துக்க ஜாக்கிரத” என்று மிரட்டுகிறான்.

இருவரும் கிருஷ்ண்பிரியா வீட்டுக்குப் போகிறார்கள்.

பாப்பாத்தி என்று மனதில் வெறுப்பேற்றிக்கொண்டிருந்தவனை “என் மாமா பையன்” என்று சொல்லி அந்த இக்கட்டிலிருந்து காப்பாற்றியவளை “ஏன் அப்படிச் சொன்னாய்? என்று கேட்கிறான்.

“நான் அப்படிச் சொன்னதாலே தான் விட்டான்” என்று பதில் சொல்கிறாள்.

கிருஷ்ணபிரியா வீட்டு வாசலில் குடுமி யோடு நிற்கும் அவள் அப்பா, “நமஸ்காரம்: என்கிறார் நடராஜனைப்பார்த்து. அது நடராஜன் காதுகளில் ஈயம் காய்ச்சி ஊத்தின மாதிரி இருக்கிறது.

தொண்ணூறுகளில் நாம் சந்திப்பது ரவியை.. அவனுக்கு மணிரத்தினம் ‘அக்கினி நக்ஷத்திரம் என்ற இரண்டு பெண்டாட்டி கதையை ஜனாதிபதி பார்க்க வைத்தது, இரண்டு பேரும் பாப்பானுகளாக இருந்ததால் தான் சாத்தியமாகிறது என்று தோன்றுகிறது. .அந்த வெங்கட்ராமன் என்கிற பாப்பார ஜனாதிபதி அடிக்கடி விமானத்தில் வந்து சங்கராச்சாரியாரைப் பார்த்து போவது ஆச்சரியமாயில்லை.

அந்த சங்கராச்சாரியாரை ஜெயலலித அரெஸ்ட் செய்ய முடிகிறது. கலைஞரால் முடியவில்லையே. என்று கேட்கிறார் நியூயார்க் வந்திருக்கும் திமுக அப்பா வளர்த்த தமிழ்ச்செல்வனை.

”சட்ட சபை எங்க கையிலே இல்லை. நீதித்துறை எங்க கையிலே இல்லை. நிர்வாகமும் எங்க கையிலே இல்லை பாப்பான் உட்கார்ந்திருந்த இடமெல்லாம் இப்ப அவங்க கையிலே. ராஜாஜி இல்லே. வரதாச்சாரி இல்லே. ஆ,மாவா இல்லையா?”

எங்களைத் தான் நாட்டை விட்டே வெரட்டி அடிச்சுட்டாங்களே. இந்தக் கோட்டா, அந்தக் கோட்டா,, ரிசர்வேஷன்னு.. செரி அதை வுடு.க்ஷேமமாத்தான் இருக்கோம். இல்லாட்டிப் போனா அங்கே தான் கோயில்லே மணி அடிச்சிட்டு இருக்கணும்…” என்று சொல்லிக் கொண்டு வந்தவர் தமிழ்ச்செல்வனைக் கேட்கிறார். அம்மாவும் பெரியார் கட்சியா? என்று. தமிழ்ச் செல்வன் சிரித்துக்கொண்டே சொல்கிறான். இல்லை பேர் தான் நாகம்மா. ஆனால் சாய் பக்தை என்கிறான்.

இது போல்தான், சமூக மாற்றங்கள், மதிப்பு மாற்றங்கள்…பார்வை மாற்றங்கள் எப்படியோ நிகழ்கின்றன. என்றாலும் எல்லாம் ஒரு நேர்கோட்டில் நிகழ்வதில்லை. எல்லோருக்கும் வழியில் பாதை மாறிவிடுகிறது. ஆனால் ப்ழைய கோஷங்கள் தொடரத்தான் செய்கின்றன. வடமொழியைக் கேட்டால் நாராசமாக இருந்த தமிழ்ப் பற்றில் தொடங்கியது, ராஜெஷ் மகேஷ் என்ற பெயர்கள் வீட்டுக்குள் புழங்குவதைக் கேட்டு முகம் சுளிக்க வேண்டியிருக்கிறது. சினிமாவுக்குத் தாண்டிய தமிழும், இயக்கமும் அந்த கதிக்குத் தான் ஆளாகின்றன., இன்றைய சன் டிவியில் கேட்கப்படும், தமிழ் நிகழ்ச்சி. இந்த மாதிரிதான்.

“அடுத்த காலர் யார்னு பாக்கலாம். ஏம்மா டிவி வால்யுமைக் கம்மி பண்ணுங்கம்மா… நான் வெயிட் பண்றேன். நாங்க கேட்ட கொச்சினுக்கு ஆன்சர் தெரிஞ்சுதா. நல்லா திங்க் பண்ணீட்டு சொல்லுங்க… ப்ச்.. லைன் கட் ஆயிடுச்சு….அடுத்த காலர் யாரு?

இன்னொரு காட்சி. நடேசன் தீவிர திமுக. கலைஞர் விசுவாசி. தன் பெண்டாட்டி ரேணுவை தன் வழிக்குக் கொண்டு வர அயராது முனைந்தும் அவள் திருந்துவதாக இல்லை. கலைஞர் ஆட்சிக்கு வந்தால் தான் நாடு உருப்படும் என்ற உறுதியான நம்பிக்கை இருந்தது அவனுக்கு. ஆனால் ரேணுவுக்கு அந்த நம்பிக்கை என்றோ மறைந்துவிட்டது. அவள் தலைவரின் மகன் பெண்களிடம் மோசமாக நடந்துகொள்வது உண்மையா? என்று ஒரு முறை நடேசனிடம் கேட்டாள். நடேசனுக்கு ஆத்திரம் தாளவில்லை. “எவண்டி சொன்னான் உனுக்கு? கண்டவன் சொல்றதையெல்லாம் நம்பிக்கிட்டு.”

“அழகான் பொண்ணு ரோட்டிலே போனா கார்ல தூக்கிட்டுப் போயிடுவாராமே?

பிரேமா இங்கே வந்தாளாக்கும். “ பிரேமா அந்தப் பகுதி அதிமுக வட்டாரச் செயலாளரின் மனைவி.

”யார் சொன்னா என்னா?. சொன்னது உண்மையானு பாக்கணும்”.

”போடி. நல்ல உண்மையப் பாத்த…. எவனாவது பொறம்போக்கு ஆயிரம் சொல்லுவான். அதெல்லாம் உண்மையானு பாப்பியா? உனுக்கு ஒண்ணு சொல்றேன் கேட்டுக்க .”இன்னொரு வாட்டி தம்பியப் பத்தி இப்படி ஏதாவது கேட்டே, தொடப்பக்கட்ட பிச்சிக்கும்.”

பெரியார் கண்ட கனவு, அப்பாவுக்கு இருந்த லட்சியம், எல்லாமே எப்படி எப்படியோ திசை மாறிப் போய்க்கொண்டிருக்கிற வலி எப்படியாவது கலைஞரை ஆட்சிக்கு வரவழைத்துவிட்டால் எல்லாம் சரியாகிப் போயிடும் என்ற நம்பிக்கை இருந்தது..அவனுக்கு.…

எல்லாம் சரியாப் போயிற்றா என்பதை யாரும் நமக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

மூன்று தலைமுறைகளின் வாழ்வில் காட்சிகள் எப்படி யெல்லாமோ மாறிவிடுகின்றன. அதற்கும் முன்னால் இருபதுகளிலேயே தசரத ரெட்டியார் காலத்தில் தான் இது தொடங்குகிறது. அந்தத் தொடக்கம் “பட்டணத்திலே இப்ப இது தான் பெரிய பிரசினையாம். பாப்பான் மாதிரி எனக்கும் ராஜாங்கத்திலே வேலை குடுன்னு கேட்டு ஒரு கட்சியே ஆரம்பிச்சிட்டங்களாம்,” என்று தான் அதன் தொடக்கம். அடுத்த தலைமுறை லட்சுமண ரெட்டியார் ஒருவர் தான் எப்படி பெரியார் பக்தர் ஆனார் என்று சொல்லப் படாவிட்டாலும் அடிக்கடி அவர் தான் காண்பதை அவர் அப்படி இருக்காது என்று தனக்குள் சொல்லிக்கொள்கிறார். கடைசி வரை தன் நம்பிக்கைகளில் நம்பிக்கை வைத்தவராக, அதைச் சொல்லிக் கொண்டு வேறொன்றை நாடாத மனிதராக, ஒரு சாதாரண மனிதராகக் காண்கிறோம். மற்றவர்கள் எல்லோரும் ”எல்லாம் சமம்,” என்று சொல்லிக்கொண்டே அடாவடித்தனமும் பொட்டை அதிகாரம் செய்பவர்களாகவுமே காண்கிறார்கள் அவர்கள் அக்கறைகள் எங்கெங்கோவெல்லாம் பரவுகிறது. கோஷங்களும் காரணம் தெரியாத ஆனால் எல்லோரும் உடன் படுகிற துவேஷமும் தான் தொடர்கிறது.

திராவிட இயக்கமும் சரி, கம்யுனிஸ்ட் கட்சியினரும் சரி, அவர்களது நீண்ட பல தலைமுறைகள் நீண்ட வாழ்வில் இலக்கியத்திற்கோ கலைக்கோ எதுவும் கொடுத்தது கிடையாது. அவர்கள் பங்களிப்பு பிரசாரங்களிலும் எழுப்பும் இரைச்சல்களிலும் தான். அதில் உண்மை இல்லை, காரணம், அவர்கள் சொல்வதில் அவர்கள் அனுபவம் இல்லையென்பதால் தான். தலித் எழுத்துக்கள் தான் அவர்களின் உண்மை அனுபவங்களைச் சொல்கின்றன. அவை தமிழ் இலக்கியத்துக்கு தம் பங்களிப்பைத் தந்துள்ளன.

தமிழ் மகனின் வெட்டுப் புலி வாழ்க்கையின் பல தளங்களில் இயங்குகிறது. சினிமா, அரசியல், பின் அன்றாட வாழ்க்கை. வெகு சில இடங்களில், சில காட்சிகள் சில மனிதர்களின் செயல்கள், சில திருப்பங்கள், தமிழ் சினிமா போல இருந்தாலும், அவை மூன்று தலைமுறைகளின், 70-80 ஆண்டுகளின் வாழ்க்கையில் நீட்சியில் பொருட்படுத்த வேண்டாதவையாகின்றன. இங்கு சொல்லப்பட்ட வாழ்க்கையும் மனிதர்களும், அவர்கள் செயல்பாடுகளும், நம்பகத் தன்மை கொண்டு ஜீவனோடு நம் முன் நடமாடுகின்றன அவர்களுடன் சேர்ந்து அந்த வாழ்க்கையைக் காணும்போது சுவாரஸ்யமாகத் தான் இருக்கின்றன.

நான் என் வார்த்தைகளில் சொல்ல முயன்றால் அவற்றின் தொனி மாறுமோ என்ற கவலையில் பெரும்பாலும் மேற்கோள்கலாகவே தந்திருக்கிறேன்.

தமிழ் மகனின் வெட்டுப் புலி ஒரு புதிய திருப்பத்தைத் தந்துள்ளது. 70-80 வருடங்களாக மற்றவர்கள். தோற்ற பாதையில் முதல் வெற்றியை நமக்குத் தந்திருக்கிறார்.

திராவிட இயக்கத்தைப் பர்றிப் பேசும் இந்த எழுத்தை அதன் கலைஞர்களும் கவிக்கோக்களும், கவிப்பேரரசுகளும் எப்படி எடுத்துக் கொள்வார்களோ தெரியாது.

எல்லா புத்தகங்களையும் போல, இதைப் பற்றியும் கூட தமிழ் உலகம் மௌனம் சாதிக்கலாம்.

-------------------------------------------------------------------------------------

வெட்டுப்புலி (நாவல்) : தமிழ் மகன்
உயிர்மை பதிப்பகம்,
11/29 சுப்பிரமணியன் தெரு,
அபிராமபுரம், சென்னை- 600018
ப..374 விலை ரூ. 220





Monday, March 14, 2011

யாமம்- ஒரு நாவலுக்குள் ஐந்து நாவல்கள்!



யாமம்- ஒரு நாவலுக்குள் ஐந்து நாவல்கள்!

தமிழ்மகன்




பகலை அப்படியே புரட்டிப் போட்டுவிடுகிறது இரவு. விழித்துக் கொண்டிருந்த மனிதர்கள் தூங்குகிறார்கள்.. இது வெளிப்படையான வித்தியாசம்.

இரவை உரித்துக் கொண்டே போகலாம். நல்லவர்களாக இருந்த பலர் கெட்டவர்களாக உருமாறுவார்கள். ஒழுக்கம் சற்றே வழுக்கும். நெறிமுறைகள் நகர்ந்து கொள்ளும். சபலங்கள் கண்விழிக்கும்... இரவு மனதின் விருப்பத்துக்கு நெகிழ்ந்து கொடுக்கும் தன்மையை உடையதாக இருக்கிறது. வெளிச்சம் குறைவது பலருக்குப் பாதுகாப்பாக இருக்கிறது.

ஞானிகளுக்கோ அதுதான் தத்துவார்த்த சிந்தனையைச் செதுக்கும் நேரமாக இருக்கிறது.

நாவலில் அப்துல் கரீமின் கனவில் வந்து பக்கீர் சொல்கிறார்.. ""கரீமே... சொல்லின் வழியாக இரவை அறிந்து கொள்ள முடியாது. பகலும் இரவும் ஒன்றுக்கொன்று எதிரானதும் அல்ல, உறவானதும் அல்ல. பகல் தீட்டும் சித்திரங்கள் யாவையும் இரவின் கரங்கள் அழித்து மறுஉருவாக்கம் செய்கின்றன.''

எஸ்.ராமகிருஷ்ணனின் கவித்துவமான நடையில் நாவல் நகர்கிறது. மானிடர் என்ற மாபெரும் கூட்டத்தின் நறுக்குகளாக சிலபிரதிநிதிகளை நாவலின் கதாபாத்திரங்களாகத் தேர்ந்தெடுக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.

ஐந்து நாவல்களை கலைத்துப் போட்டுச் சேர்த்தது மாதிரியான உத்தியொன்று நாவலில் கையாளப்பட்டிருக்கிறது. அதாவது ஐந்து நாவல்கûளை எடுத்துக் கொண்டு, முதல் நாவலில் இருந்து ஒரு முதல் அத்தியாயம், இரண்டாவது நாவலில் இருந்து முதல் அத்தியாயம், மூன்றாவது நாவலில் இருந்து முதல் அத்தியாயம், நான்காவது நாவலில் இருந்து முதல் அத்தியாயம், ஐந்தாவது நாவலில் இருந்து முதல் அத்தியாயம் என்று அடுக்க வேண்டும். அப்படியே அந்த நாவல்களின் இரண்டாவது அத்தியாயங்கள். அப்படியே மூன்றாவது நான்காவது அத்தியாயங்கள்... இந்த நாவல்களின் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரும் தங்கள் அடுத்த நாவல் அத்தியாயத்தின் கதாபாத்திரங்களோடு ஒருபோது கலப்பதில்லை. முழுநாவலிலும் மறந்தும்கூட அது நடந்ததாகத் தெரியவில்லை.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரயில் தடம்போல போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் இதை ஒரு நாவலாக மாற்றுவது இரவு... யாமம். இன்னும் சரியாகச் சொல்லப் போனால் இரவின் தரிசனமான காமம்.

கதை ஒன்று...

பனி பொழியும் குளிர். இரவு கிழட்டு குதிரை போல அலைந்து கொண்டிருந்ததாகச் சொல்கிறார் ராமகிருஷ்ணன். அது பதினேழாம் நூற்றாண்டின் மையம். கம்பெனியார் இந்தியாவில் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. பிரான்சிஸ் டே இந்தியாவில் தம் கோட்டையை அமைக்க இடம் தேடுகிறான். இன்றைய செயின்ட் ஜார்ஜ் கோட்டை இருக்குமிடம் அவனுக்குப் பிடித்துப் போகிறது. கிளாரிந்தா என்ற வேசை அவனுக்குப் பரிச்சயமாகிறாள். இது வரலாறும் கற்பனையும் கைகோர்க்கும் இடமாக இருக்கலாம்.

கிளாரிந்தா நோய்வாய்ப்படுகிறாள். அவளைக்காக்க இந்திய மருத்துவமுறையை நாடுகிறார்கள். வைத்தியமும் நோயின் தீவிரமும் போட்டி போடுகின்றன. இது சென்னையில் பிரிட்டீஷார் காலூன்ற கதையை ஆரம்பித்து வைக்கிறது.

இன்னொரு கதை...

அப்துல் கரீம் அத்தர் யாமம் என்ற சென்ட் தயாரித்து விற்பவர். ஆண் வாரிசு இருந்தால்தான் அதைத் தொடர்ந்து தயாரித்து அளிக்க முடியும் என்பது பக்கீரின் வாக்கு. அவருக்கு மூன்று மனைவிகள். ரஹ்மானி, ஹபீசா, சுரையா. இரவும் பகலும் அவருக்கு காமம் சாத்தியப்படுகிறது. வாசனை திரவியத்தோடு சம்போகிக்கிறார்கள். ஆனால் யாருக்குமே ஆண் வாரிசு வாய்க்கவில்லை. அவர் குதிரை ரேஸ் பிரியாகி சொத்து சுகத்தையெல்லாம் இழந்து திடீரென்று காணாமல் போகிறார். மனைவிமார்கள் மீன் வியாபாரம் செய்கிறார்கள். பிஸ்கட் கடையில் வேலை செய்கிறார்கள். சென்னையில் காலரா காலத்தில் அவதியுறுகிறார்கள்.

கதை மூன்று...

கிருஷ்ணப்ப கரையாளர் பெரும் தனவந்தர். கூடவே சொத்து பிரச்சனை. சென்னை இம்பாலா ஹோட்டலில் தங்கியிருந்து வழக்கு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். எலிசபெத் என்ற வேசையுடன் தன் தனிமைக்குத் தீர்வு காண்கிறார். தமக்குச் சொந்தமான மேல்மலைக்கு அவளை அழைத்துச் செல்கிறார். அடர் காடு. விதம்விதமான தாவரங்கள். இயற்கை. விலங்குகள்... அவர் இயற்கையால் வசீகரிக்கப்பட்டு, தன் சொத்துக்கள் அனைத்தையும் எலிசபெத்துக்கே எழுதி வைத்துவிடுகிறார். அவள் பிரிட்டனுக்குப் போய் வருவதாகக் கிளம்பிச் செல்கிறாள். பின்னாளில் அந்த மலைப் பகுதி தேயிலைத் தோட்டங்களாக மாறப்போவதை அவள் அப்போது யோசித்து வைத்திருக்கவில்லை.

நான்காம் கதை...

பத்ரகிரி விசாலா, திருச்சிற்றம்பலம் தையல் கதையிது. பத்ரகிரியும் திருச்சிற்றம்பலமும் சகோதரர்கள். திருச்சிற்றம்பலம் கணித மேதை. லண்டனுக்குச் சென்று ஆய்வுப்படிப்பைத் தொடர்கிறான். அவனுடைய மனைவி பத்ரகிரியின் வீட்டில் தங்கியிருக்கிறாள். பத்ரகிரிக்கும் தையலுக்கும் காமம் பற்றிக் கொள்கிறது. குடும்பம் சிதைகிறது. தம்பி படிப்பை முடித்துவிட்டு வரும்போது தையல் மனச்சிதைவுக்கு ஆளாகி இருக்கிறாள்.

ஐந்தாம் கதை...

சதாசிவ பண்டாரம் ஒரே மகனாகப் பிறந்து ஆன்மிகத் தேடலில் வீழ்ந்தவன். அவனை ஒரு நாய் வழி நடத்துகிறது. அது செல்லும் இடம் தோறும் செல்கிறான். அது தங்குகிற இடத்தில் தங்குகிறான். அது மலையோர கிராமம் ஒன்றில் தனித்திருக்கும் கனகாவின் வீட்டின் முன் தங்குகிறது. எடுபிடி வேலைகள் செய்து கொண்டு அங்கே தங்கியிருக்கிறான் பண்டாரம். ஒருநாள் இரவு கனகா அவனருகில் வந்து படுத்துக் கொள்கிறாள். உறவு கொள்கிறார்கள். அவளிடம் மரிக் கொழுந்து வாசனை வீசுவதை அறிகிறான். கர்ப்பம் தரிக்கிறாள். குழந்தை பிறக்கும் நேரத்தில் நாய் அங்கிருந்து புறப்பட்டுவிடுகிறது. வள்ளலார் போல ஒரு அறைக்குள் பூட்டிக் கொள்கிறான். அவன் காற்றில் கரைந்து போய்விட்டதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

இந்த ஐந்து கதைகளும் காமமெனும் மெல்லிய கண்ணுக்குத் தெரியாத இழையால் கட்டப்பட்டிருப்பதை அறிய முடிகிறது. இவற்றை ஒரு நாவலாக்குவது அதுதான்.

இந்த ஐந்து கதைகளிலும் வாரிசு தேவைக்காக, தனிமையை நிரப்புவதற்காக, இச்சைக்காக, பரிதாபத்துக்காக என்று காமம் வெவ்வேறு மனச்சித்திரமாக இந்த நாவல் முழுதும் உணர்த்தப்பட்டிருக்கிறது. பல நேரத்தில் காமத்தை ஒரு வாசனையின் அடையாளமாக சொல்லியிருப்பதும்கூட ஐந்தையும் இணைக்கும் ஆதாரமாக கருத வேண்டியிருக்கிறது. ராமகிருஷ்ணன் இப்படி உத்தேசிக்காமலேயேகூட இதை எழுதியிருக்கலாம். அதை வாசகன் வியாக்யானத்தால் கண்டெடுக்கிற சுவை அம்சமாக இருந்தாலும் மகிழ்ச்சிதானே?

மீ புனைவைப்போல அப்துல் ஹகிமின் கனவில் பக்கிர் பேசுவதாக ஆரம்பமாகும் நாவல், அடுத்து லண்டன் மாநகரில் இந்தியாவில் வர்த்தக உரிமை வேண்டி மகாராணியின் அரண்மனையின் முன் நிற்கும் இங்கிலாந்து வணிகர்களின் கோரிக்கையோடு வரலாற்றுச் சூட்டை ஏற்றிக் கொள்கிறது.

நாவலில் அதன் கவித்தனத்தோடு ஆங்காங்கே தரப்பட்டிருக்கும் சரித்திர ஆதாரங்கள் பிரமிப்பானவை. இங்கிலாந்தின் 17 ஆம் குளிர் இரவையும் தெருக்களையும் கற்பனை செய்வது அபாரம். அது முழுக்கவே கற்பனையால் மட்டுமே சாத்தியமாக்க வேண்டிய கட்டாயம். அதற்கு இதே போன்ற காலகட்டத்தை காட்டும் ஒவியங்களும் சினிமாக்களும் நூல்களும் பக்கபலமாக இருந்தாலும் ராமகிருஷ்ணன் தீட்டும் காலச் சித்திரம் மலைக்கவைக்கிறது.

தி கிராண்ட் விர்த் சர்க்கஸ் சென்னையில் நடைபெறுவது அதில் தையல் காணால் போய் பத்ரிகரி தேடிக் கண்டுபிடிப்பது, பொப்பிலி ராஜாவுக்குச் சொந்தமான நிலத்தில் குத்தகையெடுத்துதான் சர்க்கஸ் நடைபெற்றதாக கூறுவது போன்ற பல்வேறு தகவல்கள் நாவலின் சம்பவங்களுக்கும் சரித்திரத்தைப் பின்னணியை விளக்குவதற்கும் பொருந்தி வந்திருக்கிறது. பத்ரகிரி நிலவியல் வரைபடம் தயாரிக்கும் பணியாளனாக இருப்பதால் பரங்கி மலையிலிருந்த ஆரம்பமாகும் பணியின் ஆரம்பக்கட்ட வேலைகளை அழகாக விவரிக்கிறார். சூரத்தில் வந்து இறங்கும் நில அளவீடு செய்வதற்கான தியோலைட் கருவி... அதை ஏற்று நடத்தும் லாம்டன் துரை. இம்பாலா ஓட்டலில் இருந்த இரண்டு பûனைமரங்கள், பாப்பாத்தி கிணறு, மதராச பட்டணம் கறுப்பர்களுக்கும் வெள்ளையர்களுக்குமாக பிரிந்து கிடந்த வரலாறு, காலரா வியாதி, சென்னையில் ஏற்பட்ட பஞ்சம் என நாவல் முழுதும் கொட்டிக் கிடக்கின்றன சென்னையின் வளர்ச்சியைச் சொல்லும் தகவல்கள்.

ஓவ்வொரு கதாபாத்திரத்தின் குணாதிசயத்தையும் எஸ். ராமகிருஷ்ணன் அறிமுகப்படுத்துவது ரசனையின் உச்சம். சாப்பாட்டு பித்துப் பித்துப் பிடித்த சுரையா, எதைக் கொடுத்தாகிலும் மகிழ்ச்சியை அடையத் துடிக்கும் கிருஷ்ணப்ப கரையாளர், ஆடம்பரப் பிரியனாக இருந்து சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் சற்குணம், வெளிநாட்டில் இருக்கும் கணவனைப் பிரிந்து வாழும் தையல், தன்னைவிட்டுப் பிரிந்துவிடக்கூடாது என்று ஆரம்பத்தில் பொஸஸிவாக இருந்து பிறகு அதை ஏற்றுக் கொள்ளும் விசாலா.. என ஒவ்வொரு பாத்திரத்தின் பல்வேறு உளவியலின் வெளிப்பாடாகப் பார்க்க முடிகிறது.

கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் தங்களின் திருப்திக்காக ஒவ்வொரு அம்சங்களை பணயம் வைக்கிறார்கள். தையல் கற்பை பணயமாக்குகிறாள். கிருஷ்ணப்ப காரையாளர் சொத்தை, சதாசிவ பண்டாரம் பந்தத்தை, திருச்சிற்றம்பலம் தன் சுகத்தை என ஒன்றை அடைய ஒன்றை இழந்து.. அந்தச் சுழல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. நாவல் முடிந்த பிறகும் தொடர்ந்து கொண்டிருக்கும் உணர்வாக அது நம்மிடம் தங்கிவிடுகிறது.

எல்லோருடைய கணக்கிலும் ஆரம்பத்திலோ, முடிவிலோ ஒரு பிழை ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது. மனித திட்டங்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் வெளியே இருக்கிற எதார்த்தத்தை அழகான பின்னலாக வெளிப்படுத்தும் நாவல்.

யாமம்
எஸ்.ராமகிருஷ்ணன்,
உயிர்மை வெளியீடு,
11/29 சுப்பிரமணியம் தெரு,
அபிராமபுரம், சென்னை}18
தொ.பே: 24993448.
மின்னஞ்ஞல்:: uyirmmai@gmail.com


http://koodu.thamizhstudio.com/nool_thiranaaivu_24.php




Thursday, March 3, 2011

பத்திரிகையாளனின் சுவாரஸ்யமான சரித்திர அனுபவங்கள்!


தமிழ்மகன் , tamilmagan2000@gmail.com

அரசியல் சதுரங்கம் என்பது நகர்த்தப்படும் காய்கள், வெட்டிச் சாய்க்கப்படும் தலைகள், பெறுகின்ற புள்ளிகள், தவற விட்ட வாய்ப்புகள்... என அது ஒரு விறுவிறுப்பான பயணம்.

வாட்டர் கேட் ஊழல், மிசா, ஜேம்ஸ் பாண்டு படத்தில் கே.ஜி.பி., போபர்ஸ், தற்போதைய 2ஜி நீரா ராடியா வரை அலுப்பு தட்டாத சுவாரஸ்யம் அது. ஷா கமிஷன், சர்க்காரியா கமிஷன், இஸ்மாயில் கமிஷன், பால் கமிஷன் என்று கடந்த அரை நூற்றாண்டுகளுக்குள்தான் எத்தனை விசாரணை கமிட்டிகள்? யார், யாரைப் பிடிப்பதற்காக, ஏன் போட்டார்கள் என்ன தீர்ப்பு வழங்கப்பட்டது? யார் தண்டிக்கப்பட்டார்கள்? கமிஷன் என்பது கண்துடைப்பு... கண்ணா மூச்சி... அரசியலில்தான் எத்தனை சகஜங்கள்..?

பத்திரிகையாளர்களாக இருப்பவர்களுக்கு இவை எல்லாவற்றையும் தினமும் கண்காணித்து வரவேண்டிய கட்டாயம். ஒரு நல்ல பத்திரிகையாளன் மகாபாரத கிருஷ்ண பரமாத்மா மாதிரி செயல்பட வேண்டியிருக்கிறது. நடக்கப் போகிற எல்லாவற்றையும் கணித்து (அறிந்து) அதில் தானும் ஒரு அங்கமாக செயல்பட வேண்டும்.

கொலை சதி தீட்டினார்கள் என்று ஒரு கட்சியின் மீது வழக்கு போட்டுவிட்டு அடுத்த மாதத்திலேயே அவர்களுடன் கூட்டணி பேச அமர்ந்துவிடும் கோமாளித்தனங்களையெல்லாம் பத்திரிகையாளர்கள் கவனித்து வரவேண்டும்.

சில தீவிரமான செய்தியாளர்கள் தினமும் ஓடிக் கொண்டே இருப்பார்கள். சொல்லப் போனால் அது சாரம் இல்லாத சக்கை வாழ்க்கை. குதிரைக்கு முன்னால் கொள்ளு கட்டி வசீகரிப்பதுபோல அதைக் கவ்விப் பிடித்துவிட ஓடியபடியே இருந்து என்ன பயன்?

வெகு சிலர் தானும் அதில் பங்கெடுத்துக் கொண்டு ரசித்துக் கொண்டிருப்பார்கள். பின்னர் அதை அவர்கள் எழுதும்போது அது பழங்கதை பேசுவதாக இல்லாமல், சரித்திரத்தின் வசீகரமான இன்னொரு பக்கத்தை விவரிக்கக் கூடியதாக இருக்கும்.

குல்தீப் நய்யார் அத்தகைய பத்திரிகையாளர்களில் ஒருவர்.

மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட நேரத்தில் துவங்குகிறது இவருடைய பத்திரிகை பணி. தேசம் ரத்தக்களறியான அந்த நேரம் தொடங்கி இன்றைய காலகட்டம் வரை இந்தியாவில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களில் இவருடைய நேரடி பங்களிப்புகளைப் பட்டியலிட்டிருக்கிறார்.

நேருவுக்குப் பின்: அடுத்த வாரிசு யார்? என இதில் ஒரு பகுதி வருகிறது.

தாய்ச் சமூகம் முளைவிட்ட நாளிலேயே இந்த பதவி மோகம் ஆரம்பித்துவிட்டது. விலங்குகள் மத்தியிலும் பூச்சியினங்களின் மத்தியிலும்கூட தலைவன் தொண்டன் சமாசாரமெல்லாம் இருக்கிறது. தேனிக்கள், எறும்புகள் முதல் யானை சிங்கம் வரையிலும் பார்க்க முடிகிறது.

நேரு இறக்கிறார். இறந்த அன்றே பதவி போட்டி ஆரம்பிக்கிறது. காமராசர்தான் அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர். இடைக்கால பிரதமராக இருந்த குல்சாரி லால் நந்தாவை காமராசர் கணக்கிலேயே எடுத்துக் கொள்ளவில்லை. டி.டி.கிருஷ்ணமாச்சாரியார் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். கட்சியின் தலைவரும் தமிழகத்துக்காரர், தானும் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்று டி.டி.கே. நினைத்திருக்கலாம். காமராசர் அவரையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அடுத்து இருந்தது மொரார்ஜியும் சாஸ்திரியும்.

அடுத்து தான் பிரதமர் என்பதில் உறுதியாக இருந்தார் மொரார்ஜி. அவருடைய வீட்டில் ஏகப்பட்ட ஆதரவாளர்கள் கூட்டம். குல்தீப் நய்யார், மொரார்ஜியை சந்திக்கச் செல்கிறார். அவருடைய ஆதரவாளர்களைப் பார்க்கிறார். அடுத்தது நாங்கள்தான் என்கிறார்கள் ஆதரவாளர்கள். அடுத்து சாஸ்திரியின் வீட்டுக்குச் செல்கிறார். அங்கு யாருமில்லை. அவர் தீவிரமாக யோசித்தபடி நடந்து கொண்டிருக்கிறார் (முடிவெடுக்க வேண்டிய நேரத்தில் நடந்து கொண்டே இருப்பது அவருடைய வழக்கம்.)

குல்தீப் அவரைச் சந்திக்க வருவதைப் பார்த்ததும் விரட்டுவதுபோல கண்டு கொள்ளாமல் சென்றுவிடுகிறார்.

இதை அப்படியே மறுநாள் பத்திரிகையில் பதிவு செய்கிறார் குல்தீப் நய்யார்.

மறுநாள் மொரார்ஜிக்கு இருந்த ஆதரவு அப்படியே மாறிவிடுகிறது. நேருவின் சடலம் இருக்கும்போதே மொரார்ஜி இப்படி பதவிக்காக ஆட்களைத் திரட்டிக் கொண்டிருக்கிறார் என்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குள் மன வேற்றுமை. சாஸ்திரியோ நேருவின் மரணத்தால் மனம் ஒடிந்து தனிமையில் கலங்கியிருப்பதாக அமைந்துவிட்டது அந்தக் கட்டுரை. நாடாளுமன்ற படிக்கட்டில் இறங்கிவரும்போது காமராசர் ரொம்ப நன்றி என்கிறார் குல்தீப்பிடம். எதற்கு என்று அப்போது குல்தீப் நய்யாருக்குப் புரியவேயில்லை. குல்தீப் அவருக்கே தெரியாமல் அடுத்த பிரதமரை தேர்வு செய்ய காரணமாக அமைந்துவிட்டார்.

சாஸ்திரி தாஷ்கண்டில் மரணமடைந்த அந்தக் கடைசி மணித்துளிகள் நெகிழ்ச்சியானவை. தேசத்தின் மீதிருந்த பற்றின் காரணமாக அவருடைய குடும்பத்தினரே அவரை நோகடித்ததையும் அவருடைய மரணத்தில் இன்னமும் சொல்லப்பட்டுவரும் மர்மத்தையும் திரை ஓவியம்போல படம் பிடித்திருக்கிறார் குல்தீப். அவருடைய மரணத்துக்குப் பின் மொரார்ஜியா, இந்திராவா என்ற காலகட்டம்.

ஒவ்வொன்றையும் படிக்கும் போது அவ்வளவு விறுவிறுப்பு மோலோங்குகிறது. மொழி பெயர்ப்பு மதுரை பிரஸ் என்று போடப்பட்டிருக்கிறது. இதை யார் மொழி பெயர்த்திருந்தாலும் இதை ஒரு மொழிபெயர்ப்பு போல இல்லாமல் செய்திருப்பதுதான் அவர்களுடைய மகத்தான சாதனை.

செய்திகளை முந்தித் தருவதில் பத்திரிகையாளனுக்கு இருக்கும் தாகத்துக்கு ஒரு உதாரணம் இது:

நேருவுக்குப் பிரியமானவராக இருந்த பஞ்சாப் முதல்வர் பிரதாப் சிங் கொய்ரோன் மீது ஊழல் குற்றச்சாட்டு. சாஸ்திரி பிரதமராக இருக்கிறார். விசாரணை கமிஷன் அமைக்கப்படுகிறது. அறிக்கையை முதலிலேயே பெற்று வெளியிட வேண்டும் என்பது குல்தீப் நய்யாரின் ஸ்கூப் மூளையின் ஆவல். மூன்று மந்திரிகள் கொண்ட குழு அந்த அறிக்கையை ஆராய்வதற்காக அமைக்கப்படுகிறது. அதில் ஒவ்வொரு மந்திரியாக நோட்டம் விடுகிறார். கடைசியாக பணிவது அசோக்சென் என்ற மந்திரி. அறிக்கையை ஒருமணி நேரத்தில் புரட்டிப் பார்த்துவிட்டுத் தந்துவிடுகிறேன் என்று வாங்கி வருகிறார். அப்போது குல்தீப் யு.என்.ஐ. செய்தி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அறிக்கையைப் பிரித்து அங்கு வேலை பார்க்கும் எல்லா டெலி பிரிண்டர்களிடமும் கொடுத்து வேகமாக அறிக்கையின் எல்லா பக்கங்களையும் டைப் செய்துவிடுகிறார். ஆனால் அறிக்கையின் பக்கங்கள் அழுக்காகிவிடுகின்றன.

அதனால் ஏற்படக் கூடிய விளைவுகளை அவர் அப்போது உணரவில்லை. மறுநாள் பஞ்சாப் முதல்வரைப் பற்றிய விசாரணை அறிக்கை யு.என்.ஐ.யில் வெளியாகிவிடுகிறது. எப்படி கிடைத்தது என்று பிரதமர் தவிக்கிறார். அறிக்கையைக் கொடுத்த மந்திரி அசோக்குக்கு தர்மசங்கடம். மூன்று மந்திரிகளிடம்தான் அறிக்கை நகல் இருக்கிறது. அதில் அசோக்கிடம் இருக்கும் அறிக்கை மட்டும் அழுக்காக இருந்தால் சந்தேகத்துக்கு இடமாகிவிடும்.

குல்தீப் இன்னொரு காரியம் செய்கிறார். மற்ற இருவருடைய கையில் இருக்கும் அறிக்கையை அழுக்காக்கிவிட்டால் ஒருவர் மீது இருக்கும் சந்தேகம் ஒழியும் தமக்கு உதவி செய்த அசோக்கைக் காப்பாற்றிவிடலாம். அறிக்கையை வைத்திருக்கும் இன்னொரு மந்திரி டி.டி.கே. அவருடைய உதவியாளரை குல்தீப்புக்கு நல்ல பழக்கம். அவரைச் சந்தித்து அறிக்கையை வாங்கி படுவேகமாக அழுக்காக்கிவிடுகிறார். இப்போது அறிக்கையை யு.என்.ஐ.க்குக் கொடுத்தது யார் என்பதற்கான சந்தேகம் இரண்டு பேரின் மீது பாயும்... இப்படியாக எத்தனையோ சாகஸங்களைக் கொண்ட அரிய வரலாற்றுப் பதிவாக இருக்கிறது இந்த நூல்.

பதவி என்ற சுவாரஸ்யம் அரசியல்வாதிகளுக்கு... ஸ்கூப் என்ற சுவாரஸ்யம் பத்திரிகையாளனுக்கு இந்த இரண்டும் எதிர் கொள்ளும் புள்ளிதான் இந்த நூல்.

ஸ்கூப்
குல்தீப் நய்யார்,

மதுரை பிரஸ்,
60,பி, கோதண்டராமர் கோவில் தெரு,
மேற்கு மாம்பலம், சென்னை- 33.
மின்னஞ்சல்: maduraipress@gmai.com

from: http://koodu.thamizhstudio.com/nool_thiranaaivu_22.php


Monday, January 24, 2011

சிறுகதை உலகம்



தமிழ்மகன்


தமிழ் ஸ்டூடியோ டாட் காம் நடத்தும் படிமை திரைப்பட பயிற்சி இயக்கத்தில் சிறுகதை குறித்த இரண்டு நாள் வகுப்பெடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. மிக சுவாரஸ்யமமான அனுபவம். இரண்டு நாளும் காலை முதல் மாலை வரை நான் படித்த சிறுகதைகள் குறித்து பேசிக் கொண்டே இருந்தேன். ஐந்து நிமிடங்களுக்குப் பேசுவதே சிரமம் என்ற எண்ணத்தில்தான் போனேன். பேசுவதற்கு விஷயங்கள் இருப்பதை அறிந்தேன். படித்தவற்றை நினைவூட்டும் விதமாக இருந்தது. பேசுவதற்காக நான் கையில் குறிப்பெடுத்துச் சென்றேன். அந்தக் குறிப்பு இதுதான்:

தமிழ் மொழியில் இலக்கியம் என்பவை செய்யுள் இலக்கியமாகத்தான் இருந்தன. சங்க இலக்கிய நூல்கள் தொடங்கி கண்ணகி, கோவலன் கதை, ராமன் சீதை கதை எல்லாமே நமக்கு செய்யுளாகத்தான் கிடைத்தன. ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகுதான் எப்படி பேசிக் கொள்கிறோமோ அதே பாணியில் எழுதுவதும் இலக்கியம்தான் என்ற முடிவுக்கு வந்தோம்.

மாயூரம் வேதநாயகம் பிள்ளை தமிழின் முதல் நாவலை எழுதினார். பிரதாப முதலியார் சரித்திரம் என்று அந்த நாவலுக்குப் பெயர். வ.வே.சு. ஐயரின் குளத்தங்கரை அரசமரம் என்ற சிறுகதை தமிழின் முதல் சிறுகதை என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அதற்கு முன்னரோ அதற்கு சம காலத்திலோ ஆ.மாதவையா, மகாகவி பாரதி போன்றோர் சிறுகதைகள் எழுத ஆரம்பித்திருந்தாலும் வடிவம் கூடிவரப் பெற்றது குளத்தங்கரை அரசமரம்தான். இதை ஆமோதிக்கிறார் மணிக்கொடி எழுத்தாளர் சி.சு. செல்லப்பா.

நாம் இன்று எத்தனையோ நாவலாசிரியர்களையும் சிறுகதையாசிரியர்களையும் பெற்றிருக்கிறோம்.

மணிக்கொடி இதழ் நமக்கு அரிய சிறுகதையாசிரியர்களைத் தந்தது. புதுமைப்பித்தன், கு.பா.ரா., மௌனி, கு.அழகிரிசாமி, ந.பிச்சமூர்த்தி, க.நா.சு., லா.ச.ரா., போன்ற பலர் அதில் இருந்து புறப்பட்டவர்கள்தான். தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, சுஜாதா, பிரபஞ்சன், நாஞ்சில் நாடன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா போன்ற பல முக்கிய எழுத்தாளர்கள் தமிழுக்கு வளம் சேர்த்திருக்கின்றனர்.

இவ்வளவு பேரும் எதற்காக எழுதினார்கள் என்பது எவ்வளவு நியாயமான கேள்வியாக இருந்தாலும் எத்தனையோ ஆயிரம் பேர் இவர்களை வாசித்தார்கள் என்பதே அதற்கு நியாயமான பதிலாக இருக்கிறது. படிக்கிற ஆர்வம் மிக இயல்பான மனப்போக்காக இருக்கிறது. இசை மீது ஆர்வம் கொள்கிறவர்களும் ஓவியத்தின் மீது ஆர்வம் கொள்வபவர்களும் போலவே எழுத்தின் மீது ஆர்வம் கொள்பவர்களும் உருவாகிறார்கள். ஒரு தாய் வயிற்றின் பிள்ளைகளான ஆர்.கே. நாராயண் எழுத்தாளராகவும் ஆர்.கே. லஷ்மண் ஓவியராகவும் தீர்மானமானது அவர்களின் எத்தனையாவது பிராயத்தில்.. அதில் எந்த தருணத்தில் என்பது புதிர் நிறைந்த கேள்வியாகத்தான் இருக்கிறது.

நீங்கள் கதைகள் பற்றி தெரிந்து கொள்ள குழுமியிருப்பதும் அத்தகைய ஒரு புதிர்தான். நீங்கள் ஏன் ரியல் எஸ்டேட் பிஸினஸ் வேலையோ, கார் டீலராகவோ இல்லாமல் புத்தகம் படிப்பது தொடர்பாக தெரிந்து கொள்ள விரும்பியிருக்கிறீர்கள்?

சினிமா இசையில் உங்களுக்கு இளையராஜாவையோ, ரஹ்மானையோ பிடிக்கலாம். தேவாவையோ சங்கர் கணேஷையோ பிடிக்கும் என்று கூறுபவர்கள் குறைவு. நாம் பல தரப்பட்ட ரசனை கொண்டவர்களாக இருந்தாலும் தனித்தன்மை இல்லாதவர்களைப் பின் தொடர்வதில்லை.

பாடகர்களில் உங்களுக்கு யாரைப் பிடிக்கும் என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? பெரும்பாலும் டி.எம்.எஸ்., பி.பி. சீனிவாசுலு, எஸ்.பி.பி., ஜேசுதாஸ் பெயரைச் சொல்லுபவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்குத் தனித்தன்மை இருந்தது. இவர்களைப் போல பாடுகிறவர்கள் சிலர் வந்தார்கள் அவர்கள் எடுபடாமல் போனார்கள். எந்தத் துறையிலும் தனித் தன்மை தேவை. பத்திரிகை ஓவியங்களை எடுத்துக் கொண்டால் சிலருக்கு ம.செ., சிலருக்கு மாருதி, சிலருக்கு ஜெயராஜ், சிலருக்கு கோபுலு சிலருக்கு அரஸ், சிலருக்கு ஷ்யாம்.. இப்படி ரசனை மாறுகிறது.
எழுத்துலகில் அது மிகவும் முக்கியமாக இருக்கிறது. அதற்காகத்தான் இத்தனை பரீட்சார்த்த முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

சிலருக்கு கல்கி பிடிக்கும். சிலருக்கோ அவரை ப் பிடிக்கவே பிடிக்காது. சுந்தர ராமசாமிதான் சிறந்த எழுத்தாளர் என்பார்கள். சிலருக்கோ சுஜாதாதான் படிக்கப் பிடிக்கும். ஜெயமோகனைப் பிடிப்பவர்களுக்கு சாருநிவேதிதாவைப் பிடிக்காமல் இருக்கும். ரசனை மாறுபாடு இருப்பது வாடிக்கை. எம்.ஜி.ஆருக்கு ஒரு ரசிகக் கூட்டம் இருந்தது போலவே சிவாஜிக்கு ஒரு ரசிகக் கூட்டம் இருந்தது அல்லவா?.

மொத்தத்தில் ரசனைகள் மாறுவது இயல்பு. ஒரே மாதிரிதான் இருக்க வேண்டுமானால் உலகில் ஒரே ஒரு நடிகரும் ஒரே ஒரு நூலும் ஒரே ஒரு இசைக் கலைஞருமாகத்தான் இருக்க முடியும். அது சாத்தியமில்லை; அது சரியுமில்லை.

கணம்தோறும் மாறிக் கொண்டிருக்கும் வளர்ந்து கொண்டிருக்கும் அதிசய பொக்கிஷமாக கலைகள் இருக்கின்றன. மனிதனின் அரிய கண்டுபிடிப்பாக கலை இருக்கிறது. குகையில் வாழ்ந்த நாளில் சுவரில் கிறுக்கிய நாளில் உருவான படைப்பாற்றல். விலங்குகளிடமிருந்து மனிதனைப் பிரித்தது அவனுடைய உழைப்பும் கலையும். மனிதன் வேட்டையாட ஆரம்பித்தான். அதற்கான கருவிகள் கண்டுபிடித்தான். அதோடு நிற்கவில்லை. அதை சுவையாக சமைக்கவும் கற்றான். புலியும் வேட்டையாடுகிறது. அது ஒரு போதும் மானை வேட்டையாடி மான் பிரியாணி செய்யப் போவதில்லை. மனிதனின் உழைப்பும் கலையும் ஒன்றாக வளர்ந்தவை.

படைப்பிலக்கியத்தில் இத்தனை வகைகள் இருக்கின்றன. அல்லது இத்தனைவிதமாக எழுதுகிறார்கள் நான் யாரைப் பின்பற்றுவது, யாரைப்படிப்பது என்ற கேள்வி எழலாம். எப்படி டி.எம்.எஸ்.ஸýக்கோ, சிவாஜிக்கோ, ரஹ்மானுக்கோ ரசிகர் ஆனீர்களோ அதுபோலத்தான் இதுவும். உங்கள் மன இயல்புக்கும் உங்கள் அனுபவத்துக்கும் உங்கள் சுபாவத்துக்கும் நெருக்கமான படைப்புகள் உங்களைத் தொடும். அப்போதுதான் அதை உங்களுக்கான இலக்கியமாக ஏற்றுக் கொள்கிறீர்கள். அட, நாம் நினைத்தது போலவே இருக்கிறதே என்றோ, இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் பட்ட அனுபவம்போலவே இருக்கிறது என்றோ, இந்த மாதிரி சந்தர்ப்பம் ஏற்பட்டால் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்றோ ஒரு இலக்கியத்தைப் படிக்கும்போது நாம் நினைக்கிறோம்.
எந்த நூலைப் பற்றியும் உங்கள் அபிப்ராயம் மாறுபடலாம். அதற்கு உங்களுக்கு முழுச் சுதந்திரம் உண்டு. ஆனால் அந்த அபிப்ராயம் உங்கள் சொந்த அபிப்ராயமாக இருக்க வேண்டும். இன்னொருத்தரின் அபிப்ராயத்தை பிரதிபலிக்காதீர்கள்.

மணிக்கொடி காலத்தில் தழைக்கத் தொடங்கிய சிறுகதை உலகம் தமிழில் தானே ஒரு தடத்தைப் போட்டு அதில் முன்னேறத் தொடங்கியது. மனிதர்களின் அவலங்களை, சந்தோஷங்களை, இயலாமையை, முயற்சியை அவை சொல்ல ஆரம்பித்தன. புதுமைப்பித்தனின் கிண்டல் தொனிக்கும் நடை, கு. அழகிரிசாமியின் கரிசனமான நடை, கு.பா.ரா.வின் மனித சபலங்களைச் சொல்லும் உளவியல் நடை என வாசகர்களின் பல்வேறு மனநிலைகள் அலசப்பட்டன. ந.பிச்சமூர்த்தி, மெüனி, க.நா.சு., லா.ச.ரா., தி.ஜானகிராமன் என வாசகர்களைச் சுழற்றிப் போட்ட எழுத்தாளர்கள் வரிசையாக உருவாகினர். தமிழ் சிறுகதை உலகின் பொற்காலம் அது.

பெரும்பாலும் கல்கி, நா.பார்த்தசாரதி, மு.வரதராசன், அகிலன் போன்றோரின் கதைகளில் வரும் லட்சிய நாயகர்களுக்கு அப்படி ஒரு வரவேற்பு இருந்தது. பலருடைய வீட்டில் கதாபாத்திரங்களின் பெயர்களை தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டுவது வழக்கமாக இருந்தது. ஆனால் அந்த லட்சியக் கதைகள் எதார்த்தமான உலகத்தைப் படைப்பதில் தவறு செய்தது. அது உருவாக்கப்பட்ட புதிய சூழ்நிலையில் புதிய லட்சியத்தோடு செயல்படுபவர்களைக் காட்டியது. சுதந்திரம் வாங்கிய கையோடு அதற்கு காந்திய சமூக சீர்திருந்த தேவையிருந்தது. அவர்கள் உண்மை பேசினார்கள். தியாகம் செய்தார்கள். குற்ற உணர்வு கொண்டு வருந்தினார்கள். அவையெல்லாம் மிகையாக இருந்தன. தேசியம் பேசிய இவர்களுக்குப் போட்டியாக தமிழ் தேசியம் பேசிய அல்லது திராவிடம் பேசிய சிறுகதைகள் உருவாகின. அண்ணா, கருணாநிதி, எஸ்.எஸ். தென்னரசு, டி.கே. சீனிவாசன், ஏ.வி.பி. ஆசைத்தம்பி, முரசொலி மாறன் போன்ற பலர் அவற்றைச் செய்தனர். தமிழ் தேசிய லட்சிய வாதம், பகுத்தறிவு வாதம், மிராசுதார் எதிர்ப்பு, காங்கிரஸ் எதிர்ப்பு போன்றவை இக் கதைகளின் அடி நாதமாக இருந்தன. இன்னொரு பக்கம் டி.செல்வராஜ், தனுஷ்கோடி ராமசாமி, கு.சின்னப்ப பாரதி, ஜெயகாந்தன், பொன்னீலன் போன்றவர்கள் கம்யூனிச சித்தாந்தத்தை வலியுறுத்தும் கதைகளோடு வந்தனர். இவர்களில் ஜெயகாந்தன் தன் தனித்துவமான கருத்துப் போக்கினால் அவர்களில் இருந்து விலகியே இருந்தார். அவருடைய கதைகள் அடித்தட்டு மக்கள் பிரச்சினையை பேசுவதில் தொடங்கி, மேல்தட்டு மக்களின் பிரச்சினைக்குக் கைமாறியது. பாரிஸýக்குப் போ, பிரம்மோபதேசம், சிலநேரங்களில் சில மனிதர்கள், கங்கை எங்கே போகிறாள், ஜெயஜெய சங்கர என்று திசைமாறலின் உச்சத்துக்குப் போனார்.

இந்த சமயத்தில்தான் சுஜாதாவின் வருகை. ஏறத்தாழ இந்தக் காலத்தில்தான் நான் படிக்க ஆரம்பித்தேன். மேற் சொன்ன எல்லோரையும்விட அடுத்து வந்த இவரின் ஆதிக்கம் எனக்குள் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. ஏறத்தாழ அவருடைய எல்லா நூலையும் நான் வாசித்தேன். விஞ்ஞானம், புதுமை, எள்ளல், துறுதுறுப்பு, சுறுசுறுப்பு எல்லாம் இருந்தது இவருடைய கதைகளில். அவரை ஒரு சங்குக்குள் அடக்கமுடியவில்லை. புலனாய்வு கதைகள் எழுதுவார், ஸ்ரீரங்கத்து தேவதைகள் என்று காதல் கதைக்குத் தாவுவார், தலைமைச் செயலகம் என மூளை இயக்கம் பற்றி எழுதுவார், ஆழ்வார் பாசுரம் பற்றி எழுதுவார், சினிமா விமர்சனம் எழுதுவார், விஞ்ஞான கதைகள் எழுதுவார், வரலாற்றுக் கதை எழுதுவார்... மருத்துவம், காபி கொட்டை, சினிமா, இசைக் கச்சேரி, கவிதை எல்லாவற்றையும் எழுதினார். சுமார் 40 ஆண்டுகாலம் தமிழில் அவருடைய ஆட்சி நடைபெற்றது. இப்போதும் அவருடைய பாதிப்பு இல்லாமல் எழுத முடியாத எழுத்தாளர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். நிறைய வெளிநாட்டு நடப்புகளை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர், தமிழில் புதிதாக} தரமாக எழுதுபவர்களை இனம் கண்டு அறிவித்தவர் அவர்.
பிறகு தலித் இலக்கியம் என்ற பிரிவில் பாமா, சிவகாமி, ஆதவன் தீட்சன்யா போன்ற பலரது கதைகள் தமிழில் புதிய பாட்டையை ஏற்படுத்தின.

சுந்தரராமசாமியைத் தொடர்ந்து நாஞ்சில்நாடன், சாருநிவேதிதா, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், யூமா.வாசுகி, பாவண்ணன், பெருமாள்முருகன், எஸ்.சங்கரநாராயணன் போன்ற பலர் இப்போது எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் யாரையும் நீங்கள் படிக்கலாம். யாரைப் பற்றியும் அபிப்ராயம் ஏற்படுத்திக் கொள்ளலாம். முன்னரே சொன்னது போல அது உங்கள் சொந்த அபிப்ராயமாக இருக்க வேண்டும். ஒருவர் ஆதரிக்கிறார் என்பதற்காக யாரையும் நீங்கள் கண்மூடித்தனமாக ஆதரிக்கக் கூடாது.

எல்லோரையும் படியுங்கள். அது ஒரு பரவசமான அனுபவம். நீங்கள் கவனித்த அல்லது கவனிக்கத் தவறிய தருணங்களைப் படைப்பிலக்கியங்கள் உங்களுக்கு ஓர் உயரிய தரிசனத்தோடு தட்டில் வைத்துத் தருகிறது.

படைப்பிலக்கியங்கள் ஒரு காலத்தின் கண்ணாடியாக இருக்கின்றன. அ. மாதவய்யாவின் குசிகர் குட்டிக் கதைகளையோ, புதுமைப்பித்தனையோ படிக்கும்போது நாம் அந்தக் காலத்தைத் தரிசிக்கிறோம். அப்போதைய சமூகச் சூழல், சமூகப் பழக்க வழக்கம், பேச்சுமுறை எல்லாவற்றையும் பார்க்கிறோம். ஆனால் அவை சரித்திர சம்பவங்கள் இல்லை. புனைவுகள்.

சமஸ்கிருதம் கலந்த தமிழ் நடை அப்போதைய வழக்கமாக இருந்தது. முதல் சிறுகதையான குளத்தங்கரை அரசமரமாகட்டும் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரமாகட்டும் அதில் மணிப்பரவாளம் இருந்தது. தனித்தமிழ் இயக்கம், திராவிட இயக்கம் தமிழின் போக்கை மாற்றின. பாரதிதாசன் தனித்தமிழில் கவிதை எழுதும் மரபை உருவாக்கினார்.
எதற்காக மனிதன் எழுதவும் படிக்கவும் ஆரம்பித்தான் என்று சிந்திக்கலாம்?

மனிதன் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் நோக்கத்தோடுதான் குகைச் சுவற்றில் கிறுக்க ஆரம்பித்தான். விதம் விதமாக ஒலி எழுப்ப ஆரம்பித்தான். அவனுடைய கிறுக்கல்தான் இப்போது படைப்பிலக்கியமாகவும் ஓவியமாகவும் மாறியிருக்கிறது. விதம்விதமான ஒலிகளின் உருமாற்றம்தான் இன்றைக்கு இசையாகியிருக்கிறது. அனைத்துக்கும் மூல நாயகன் குகைச் சுவற்றில் முதன் முதலில் கிறுக்கிய அந்த மேதைதான்.

நெருப்பை உருவாக்கியவன் விஞ்ஞானியாகவும் குகையில் கிறுக்கியவன் கலைஞனாகவும் வளர்ந்தான்.

தான் அறிந்ததை, உணர்ந்ததை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று மனிதன் நினைத்தான். கூவி கத்தி அழைத்து தகவல்களைச் சொன்னான். புகையை உருவாக்கித் தகவல்களைச் சொன்னான். அது நிரந்தரமாகவும் இன்னும் நீண்ட தூரத்துக்குச் செல்லவும் முடியாததை உணர்ந்து ஓலை அனுப்ப ஆரம்பித்தான். கடிதம் முதல் படைப்பிலக்கியம். கடித இலக்கியம் என்று கி.ராஜநாராயணன், டி.கே.சி. போன்றவர்களின் எழுத்துகளைத் தொகுத்திருக்கிறார்கள். அறிஞர் அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்களையும் கலைஞர் உடன் பிறப்புக்கு எழுதிய கடிதங்களையும் இங்கே கவனிக்கலாம். கடிதங்கள் ஆச்சர்யங்களை, சோகங்களை, சந்தோஷங்களைச் சுமந்துவருபவை. என்னுடைய இளம் பிராயத்தில் வீட்டுக்குக் கடிதம் வந்தால் அதை யார் முதலில் ஓடிச் சென்று வாங்குவது என்பதில் தொடங்கி அதை யார் முதலில் படிப்பது என்பதவரை ஏகப் போட்டியிருக்கும். கடிதங்கள் சுவாரஸ்யமான தகவல்களைத் தாங்கி வருவதாக மனதில் பதிந்திருந்தது. இப்போது அது எஸ்.எம்.எஸ். ஆக சுருங்கிப் போய்விட்டது. இருந்தாலும் கடிதங்கள்தான் சிறுகதைகளின் ஆரம்பம். அதில்தான் மிகச் சில சம்பவங்களையும் சொன்னார்கள். ஒரு நபருக்கு இன்னொரு நபர் தெரிவிக்கும் செய்தி கடிதம். காலப்போக்கில் ஒரு செய்தியைப் பலருக்கும் தெரிவிக்க வேண்டிய அவசியம் எற்பட்டது. அவையே இலக்கியமாகின. ஹோமர் இலியட் எழுதினார். வியாசர் பாரதம் எழுதினார். மு.மேத்தா கண்ணீர் பூக்கள் எழுதினார். நாஞ்சில் நாடன் எட்டுத் திக்கும் மதயானை எழுதினார். ஒவியங்கள் டாவின்ஸியாகவும் டாலியாகவும் வான்காவாகவும் பரிணமித்தன.

சிறுகதைக்கான இலக்கணங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன. ஆரம்பத்தில் 25 பக்கங்களுக்கு இருக்க வேண்டும் என்றார்கள். பத்து பக்கமாகவும் ஐந்து பக்கமாகவும் சிறுகதை சுருங்கிவிட்டது. கதாபாத்திரங்களும் சம்பவமும் படிப்பவர் மனதில் இடம்பிடிக்க தோராயமாக சுமார் 5 பக்கத்திலிருந்து பத்து பக்க விவரணை வரை தேவைப்படுகிறது. ஒரு பக்கக் கதை, இரண்டு பக்கக் கதை என்பவை திடுக்கிட வைக்கும் ஒரு சம்பவத்தை மட்டுமே முன் வைக்கின்றன. அதற்கு நம்மை பழகிக் கொள்வது பிற தரமான கதைகளைப் படிப்பதற்குத் தடையாக மாறிவிடும் அபாயம் உண்டு.
இறுதியாக... படித்தால் மூளை குழம்பிவிடும் என்ற கருத்து தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதுமே உண்டு. இறைநூல்களுக்கு விரோதமாக இருப்பதாகக் கருதி பல நூலகங்கள் எரிக்கப்பட்ட சம்பவங்கள் உண்டு. எண்பதுகளில் யாழ்ப்பாணத்தில் ஒரு லட்சம் புத்தகங்கள் எரிக்கப்பட்ட சம்பவம் நினைவிருக்கலாம். புத்தகங்களுக்கும் மத அமைப்புகளுக்கும் பல வேளைகளில் ஏழாம் பொருத்தம்தான்.

ஆனால் மக்களுக்கு ஒரு பைபிளோ, ஒரு குரானோ, வேதங்களோ மட்டும் போதுமானதாக இல்லை. ஒரு நம்பிக்கை சார்ந்து அவற்றைப் பாதுகாப்பதோடு சமூக வளர்ச்சியைப் பின்தொடர, தொடர்ந்து பல அறிவுச் செல்வங்களைத் தேட வேண்டியிருக்கிறது. திரைப்படம், தொலைக்காட்சியைவிட அறிவைத் தேடுவதற்கு புத்தகங்கள்தான் இன்றும் முன்னணியில் இருக்கின்றன.

ஆயிரத்து ஐநூறுக்கும் அதிகமான மொழிகள் இப்போது உலகில் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் சொல்லுகிறது. அவற்றில் பல மொழிகளுக்கு எழுத்துவடிவம் கிடையாது. பல மொழிகளைப் பேசுவதற்கு ஆட்கள் கிடையாது. அதாவது அந்த மொழி பேசுகிறவர்கள் சிதறி வாழ்வதனாலோ, ஆட்சிமொழியாக வேறொரு மொழி அமைந்திருப்பதனாலோ வேறு மொழியைத் தொடர்ந்து பேச வேண்டியவர்களாக இருக்கிறார்கள். ஏசு பேசிய மொழியோ, புத்தர் பேசிய மொழியோ, சாக்ரடீஸ் பேசிய மொழியோ இன்று உலகில் இல்லை. ஆனால் வள்ளுவன் பேசிய மொழி இப்போதும் இருக்கிறது. அதுதான் பெருமை. அதனால் ஒரு நூலை தமிழில் எழுத வேண்டியதும் தமிழில் படித்திட வேண்டியதும் முக்கியம் என்பதை உணர வேண்டும். தமிழும் வேறு மொழியும் தெரிந்தவர்கள் தமிழிலிருந்து வேறு மொழிக்கும் வேறு மொழிகளிலிருந்து தமிழுக்கும் மொழி பெயர்க்கிற கடமையைச் செய்ய வேண்டும்.