ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் -2
இளம்பிறை – நீ எழுத மறுக்கும் எனதழகு
குட்டி ரேவதி |
நண்பர்களே, இக்கட்டுரைத்தொடர், தமிழில் நவீனப்பெண் கவிதை மொழியை அறிமுகப்படுத்தும் முயற்சி. கூடு இணையத்தின் நடத்துநர் அருண் இதற்கான ஆலோசனையை என்னிடம் முன்மொழிந்தார். வெறும் விமர்சனமாக இல்லாமல், எழுதவந்த படைப்பாளிகளின் காலமும் பின்னணியும் கருதி அவர்களின் எழுத்தையும் அதன் உட்பொதிந்திருக்கும் அரசியலையும் இன்றைய காலத்துடன் பொருத்தி அறிமுகப்படுத்துவதே என் நோக்கமாக இருக்கிறது. ‘ஆண்குறி மையவாதப் புனைவைச் சிதைத்தப் பிரதிகள்’ என்ற தலைப்பும் அந்தப் பொருளடக்கியே கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது, ஒவ்வொரு பெண்கவிஞரின் பிரதிக்கும் அதனதனளவில் பங்கு இருக்கிறது, என்பதைக் கண்டறிவதே என் பணி. பெண்ணெழுத்து, ‘உடலரசியல்’ பேசும் அரசியல் நிலைப்பாட்டிற்கு வருவதற்கு ஒரு நீள்பயணம் எடுத்திருக்கிறது என்பதையும் அது வெவ்வேறு காலக்கட்டங்களை எடுத்திருக்கிறது என்பதையும் எடுத்தாள்வதே இக்கட்டுரைத் தொடரின் மிக முக்கியமான நோக்கங்கள். மேலும், இரா.மீனாட்சி போன்றவர்கள் தீவிரமான உடலரசியலை தங்கள் எழுத்தில் முன்வைக்கவில்லை என்பதைக் கட்டுரையின் உள்ளுறையாக வைத்தே விவாதித்திருக்கிறேன். கூர்மையாக வாசிப்பவர்களுக்கு அது பழம் பிதுக்கிய விதையாக ஆங்காங்கே வெளிப்படும். எனது இக்கருத்தையே தம் கருத்துரையாக இட்டிருக்கும் வாசகர்களுக்கும் நண்பர்களுக்கும் ஒரே ஒரு விடயத்தை மட்டும் இங்குத் தெளிவாக்கிக் கொள்கிறேன். அதாவது, இன்றைய நவீன தமிழ்க்கவிதை சார்ந்த தனிப்பட்ட நமது பயிற்சியும் பார்வையுமே கூட, தமிழில் நிலவிய தொடர்க்கவிதை இயக்கத்தாலும், அதற்கு தனிநபராக நம்மை நாமே உட்படுத்திக்கொண்டதாலும் வந்தது. இல்லையென்றால், இன்றைய வாசகர்கள், இரா.மீனாட்சியின் கவிதையில் ’உடலரசியல்’ சார்ந்த பார்வையில்லை என்ற கருத்தை முன்வைக்கும் திறனையும் பெற்றிருக்க முடியாது தானே! உங்களின் தொடர் ஊக்கத்திற்கும் உரையாடலுக்கும் என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேல் செல்வோம்!
இளம்பிறையின் கவிதைகளை உதிரிகளாகவும் தனித்தொகுப்பாகவும் வாசித்த அனுபவம் உண்டு. சொற்கட்டான மொழியும் இசைக்கோர்வைக்கான துல்லியமான நடையும் கலந்த நளினத்தைத் தொடக்கத்திலிருந்தே தன் கவிதை மொழியாக்கிக் கொண்டவர். ஒரு தாயின் காதல் எனும் நிலையிலிருத்தி அவர் தன் எழுத்தைப் படைப்பாக்குகிறாரோ என்று என்னும் அளவிற்கு பெண்ணின் இருநிலைகளையும் தனக்குள் வைத்துக் கொண்டு எழுதுகையில் மொழி, இது வரை நீங்கள் தமிழில் எங்கிலுமே வாசிக்காத ஒரு அனுபவத்தைத் தருகின்றன. வெறும் புகழ்ச்சிக்கில்லை என்பதை உணர, மெல்ல அவர் கவிதைகளுக்குள் ஊடுருவலாம்.
’கிராமிய மணம் மிக்கது’ என்றும் ‘நாட்டுப்புறப் பாடல்கள்’ என்றும் கவனம் பெற்றிருக்கும் நகரத்திற்கு நகர்ந்தவர்கள் தங்கள் பால்யம் சிறகடித்தச் சமூகவெளியை எழுத்தாக்குவதைப் படித்து நாம் ரொம்பவும்தான் சிலாகித்துப் போகிறோம். நகரம், கிராமம் என்ற இரு வெளிகள் தாம் சமூகத்தில் இருக்கமுடியும் என்ற நமது மயக்கத்தில் நிகழ்ந்த பிழையால், மற்றுமொரு வெளியான ‘சேரி’ என்பதை அதுவாக அடையாளப்படுத்தாமலும் காந்தி சொன்னதன் அர்த்தத்திலேயே, ‘கிராமம்’ என்பதன் பெருமிதம் போற்றுவதும் நமக்குப் பழகிப்போய்விட்டது. இதற்கு அடிப்படையான காரணமான, சாதி அழுத்தத்தை வெளிப்படுத்துவதை அநாகரிகம் என்றும் அழுக்கு என்றும் கருதும் போலிமை சூடிய மனோபாவத்தின் எழுத்து தான் கிராமியம் என்பதைத் தன்னடையாளமாக்கிக் குதூகலிக்கும், என்பதை இளம்பிறையின் கவிதை நீரோட்டத்திற்குள் கைகள் விரித்த உடனேயே தெரிந்து விடும். எந்த விதமான போலியான அடையாளங்களையும் கிராமம் எனும் நம் பிரமைகளுக்குத் தராது, இருளடர்ந்த கனவு மரங்களின் வனத்திலிருந்து எழுதுகிறார்.
இளம்பிறையின் எழுத்து முற்றிலும் எதிர்த்திசையிலிருந்து தொடங்குகிறது. நகரத்திற்கு நகர்ந்து வந்த தன் வாழ்க்கையில் நகரத்தின் நடவடிக்கைகள் என்றென்றும் அலுப்பூட்டுவதாகவும் கிராமத்தில் தான் அனுபவிக்க நேர்ந்த ஏழ்மையின் யதார்த்தங்கள் சுவாரசியம் தட்டுவதாகவும் இருக்கின்றன அவருக்கு. ஆனால், இத்துடன் தன்னெழுத்தை அவர் முடித்துக்கொள்வதில்லை. இவை இரண்டிற்கும் இடையே இருக்கும் உள்ளார்ந்த அரசியலை வெளிப்படுத்தும் தீவிரத்தைத் தொடும்வரை அவர் கவிதையின் ஒற்றைப் பயணம் முடிவதில்லை. மேலும், அதன் அத்துணை பூடக அழகோடும் முடியும் வரையிலான தெளிந்த பார்வையும் ஊக்கமும்கூட அவருக்கேயானது. பெரும்பாலும், தோல்வியும் தோல்விக்குப் பின்பான எழுச்சியும் வேகமெடுக்க, அதற்கான நடையுடன் சொற்கள் வந்து விழுகின்றன.
பெண்களின் கவிதைகள் சுயபுலம்பல்களாகவும் அழுகையின் குறிப்புகளாகவும் இருக்கின்றன என்று விமர்சிக்கப்பட்டிருக்கின்றன. பெண்ணின் அழுகை என்பது உயிரியல் நிகழ்வன்று. அது ஒரு சமூகவெளிப்பாடாகத்தான் இருக்கிறது. ’ஒப்பாரி’ என்பது அதன் நீட்சி. தன் திடமான எதிர்ப்பை நீர்மமாக்கும் மொழியைப் பெண்கள் இயன்றவரை பாடல்களாகவும் கவிதைகளாகவும் கொட்டித்தீர்க்கின்றனர். அழுகை அதன் இயல்பில் நெகிழ்வான, ஓர் உணர்ச்சியின் வெளிப்பாடாக இருந்தாலும், சமூகத்தின் பார்வையில் அது மிகவும் அவலமான, பரிதாபத்திற்குரிய வெளிப்பாடாகவே பார்க்கப்பட்டிருக்கிறது. பெண்களின் வாழ்க்கை நிகழ்வுகள் ஒட்டி நிகழும் அழுகையின் அர்த்தங்களுக்கு ஓர் அகராதி தயாரிக்கலாம். ’கண்ணீரும் கம்பலையும்’ என அடுக்கடுக்காய் அர்த்தம் பெருகக்கூடியது அந்த அகராதி. கண்ணீர்த்துளிகள், ஆழமான வேர்களிடம் பெண்களைக் கூட்டிச்செல்பவை. தொடர்ந்த மனவேட்கையின் பிரதிபலிப்பாய் எட்டி எட்டிப்பார்த்து கண்களின் உயரத்திலிருந்து கனிந்து வீழ்ந்து கொண்டே இருப்பவை.
‘அழுத நினைவுகள்’, கவிதை, அவர் தன் இளம்பருவத்தில் அவசியமில்லாது வேண்டுமென்றே பெருங்குரலெடுத்தச் சந்தர்ப்பத்தங்களைக் குறிப்பிட்ட பின்,
குடத்தை உடைத்தது
வாத்தியார் அடித்தது
‘சட்னியைக் கொட்டிவிட்டு
நானில்லையென்று
சத்தியம் செய்தழுதது
பதினாலுக்குள்
இப்படி பல அழுகைகள்
ஒரு நாள் செல்லம்மாளுடன்
விறகு வெட்டப்போன போது
பெரியவளானேனென
அழைத்து வரப்பட்ட போது
அம்மா அழுததால்
நானும் அழுதேன்
ஏனென்று தெரியாது.’
பெண்கள் பருவமெய்தும் தருணத்தில் அழும் தாய்மார்களின் அழுகைகள் அவரவர்க்கு அவரவர் வாழ்க்கையின் எதிர்ப்பார்ப்பையும் அவற்றின் ஏமாற்றத்தையும் ஒருங்கு குவித்துக் காட்டும் கணம். இதுவே அவர் கவிதையின் பிறிதோரிடத்தில் தாயின் குரலாய், ‘கோட்டையில் பெண் பிறந்தாலும்/ போட்டபுள்ளி தப்பாதுன்னு/ எங்கிட்டுப் போயி இழுபடப்போவுதோ’ எனும் வரிகள் அதன் பின்பான பெண்வாழ்வின் நிச்சயமற்ற கோடுகளை நினைவுக்கு இழுத்து வருபவை.
புள்ளிகளும் கோலங்களும்
புள்ளி தடுமாறி
வரிசை வளைந்து
போட நேர்ந்த
கோலங்களின் கோடுகள்
துண்டுபட்டு நிற்கும்
சந்திக்க முடியாமல்
இணைக்கும் முயற்சியில்
அசிங்கப்படும் கோலத்தைப்
பெரும்பாலும்
நானே கலைத்துவிடுவேன்
இல்லையேல்
எவரேனும்
கலைத்துவிட்டுப் போய்விடுவார்கள்
நேரடியான வார்த்தைகளுக்குப் பின்னால் எரியும் பிறிதோரடுக்கு அர்த்தம், தாய் கூறிய புள்ளியையும் இழுபடும் கோட்டையும் குறித்து நிற்பது. தன்னழுகை நிலையிலிருந்து தாயின் அழுகைக்குக் கவிதையின் மொழியை இழுத்துச் செல்லும் விசை தீவிரமானது. அதுமட்டுமன்றி, எந்தப்பிறழ்வையும் சரிசெய்யும் தொடர்மனித யத்தனத்தை மாறிமாறி வாழ்க்கைக்கும் எழுத்துக்கும் இடையே பரிமாறிக்கொண்டே இருக்கிறார். இம்மாதிரியான ‘தன்னிலை’ யிலிருந்து கவிதைகள், கிளர்ச்சியடைந்து ஆண்களுடனும் ஆண் மனங்களுடனும் அயராமல் விவாதிக்கும், வேண்டுகோள் விடுக்கும், கட்டளையிடும், புறக்கணிக்கும், மன்றாடும், மன்னித்து அரவணைக்கும் வேறுபட்ட நிலைக்கும் என ஆண்களை நோக்கிய கிளைச்சாலைகளிலும் விரிந்து கொண்டே இருக்கின்றன. கபடம் என்ற இவர் கவிதையின் ‘உன் கபடங்களோடு சேர்த்தே அணைத்துக் கொள்கிறேன்’ வரியுடன் சல்மாவின், ‘எல்லா அறிதல்களுடனும் விரிகிறதென் யோனி’ வரி சென்று இணைகின்றது. இவ்விதமான சமரசம் கொண்ட பெண்ணின் தொனி, தொடர்ந்து வேறு வேறு திசைகளிலிருந்து பிறர் கவிதைகளிலும் ஒலிக்கக் கேட்கையில், அதை எளிதான அல்லது மலிவான ஓர் உடன்படிக்கையாக எடுத்துக் கொள்ள இயலவில்லை. அவலத்திலிருந்து மனிதமீட்சியை முன்னெடுப்பதற்கான ஒட்டுமொத்த உத்வேகத்திற்கான பொறுப்பையும் உறுதியையும் தம் தோள்களில் ஏற்றிக் கொள்வதுடன் அதையே தன் இறக்கையாக்கிப் பறக்கும் திட்டமும் பெண்களிடம் இருப்பதே காரணம். இன்னும் சொல்லப்போனால், இவ்விறக்கைகளால் இன்னொரு வானத்தை நோக்கிப்பறக்கும் திசையை எழுத்திலிருந்து தாம் கண்டடைகின்றனர்.
இதுவரையிலான தன் கவிதைகளுக்கு ‘நீ எழுத மறுக்கும் எனதழகு’ என்று தலைப்பிட்டிருக்கும் இவர், அவ்வார்த்தைகளால், உலகெங்கிலும் நிலவும் அழகு குறித்த அரசியலை நொறுக்குகிறார். வெவ்வேறு பெண்கள் அழகெனும் அடையாளம் வழியாகத் தன்னை முன்னிறுத்தியும், உதாசீனப்படுத்தியும் தன் அழகைப் பிரதானப்படுத்தியும், அதையே அரசியல்படுத்தியும் எழுதியிருக்கின்றனர். பெண்ணின் அழகு நுகர்வுப்பண்பாட்டின் முக்கியமான விலைபொருள் என்பது, நுகர்வுப்பொருளாகியிருக்கும் பெண்களின் அடிமனதில் உளைவை ஏற்படுத்தாமல் இல்லை. உலகெங்கும் சித்திரமாய் அலையும் கண்ணாடிக்குள் பிரதிபலிக்கும் அழகு பற்றிய இக்கருத்தலை, ஏழ்மையான சூழலில் உழன்றுழன்று வாழ்க்கையுற்ற இவரது அழகின் முன்னோ மோதிச்சிதறுகிறது. அழகென்ற கோரிக்கையால் ஏற்றத்தாழ்வுக்குள்ளாகும் பெண்ணின் உடலைப் போலவே, அதன் பின்னால் பேசப்படாது விடுபடும் பொருளாதாரச்சூழலும் காட்சி பெறாமல் ஒளிந்துகொள்கிறது. ’என் வாழ்க்கைக்குள் வந்ததில்லை உன் கேமராக்கள்’! என்பதும் ஒரு நேரடியான வரியன்று. யதார்த்தத்தின் விளைவு!
நீ எழுத மறுக்கும் எனதழகு
…………………………………………………………………………….
கவர்ச்சிக்கல்ல
இல்லாத காரணத்தால்
சட்டை கிழிந்திருக்கும்.
இழுத்துப் போர்த்த எண்ணி
சேலையும் தோற்றிருக்கும்.
………………………………………………………………………..
எனது அழகுகள் எல்லாம்
இதுவரை தெரிந்ததில்லை
உன் எழுத்து விழிகளுக்கு.
என் வாழ்க்கைக்குள் வந்ததில்லை
உனது கேமராக்கள்.
குறைந்த பட்சம்
அழகிப்போட்டிகள் நடத்தி
என்னைப் பழித்துக்காட்டாமல்
இருக்கக்கூட
நினைப்பதில்லை நீங்கள்’
அழகு, பெண்ணுடலின் புறக்கருத்தமைவு. உடலுக்கான அக ஆளுமையையும் பெண்ணுடலுக்குத் திணிக்கப்படும் அக நெருக்கடிகளையும் மொழியும் கவிதை தான் எல்லா வகையிலும் அரசியலை இன்னும் தீவிரப்படுத்துகிறது. புற அழகை, காரணமாக்கி பெண் ஆளுமையைச் சிதைக்கும் இரு வேறுபட்ட நெருக்கடிகளை உடலுக்குத் தரும் சமூக நிகழ்வுகளைச் சுட்டுகிறார் இளம்பிறை. தன் ஒவ்வொரு கவிதையையும் ஒரு கதையின் கருவாய் மாற்றிப்படைக்கும் இவர், சிறுகதைக்கான ஓட்டத்துடன் ஓடிச்சென்று முற்றுப்புள்ளியுடன் ஓய்ந்துவிடுவதில்லை. கடைசிச் சொல்லுக்கு அப்பால் எழும் அதிர்வுகள் சொற்களற்றவை. ஆழக்கிணற்றில் எறிந்த கல், ஆழம் சேரும் போது ஒலித்தல் போல. இவருக்கிணையான சொற்கட்டுடன் கவிதை ஆளும் கவிஞர் வெகுசிலரே.. அழுத்தமான குரலை தன் மனவெளிக்குப் பழக்கிக்கொண்டே இருப்பார் போலும்!
சொல்லாமலே
வெடித்த வயல் வரப்புகள்
புதர் மேடுகளுக்கப்பால்
சிற்றலைகளில் வைரங்களாய்
வெய்யில் மின்னிக்கிடக்கும்
குளத்திலிருந்து….
இரட்டைக் குடமெடுத்து
தண்ணீர் சுமக்கிறார்கள்
தாயும்… மகளும்
பண்ணைய வீட்டுத்
தென்னம்பிள்ளைகளுக்கு.
சற்று கழிந்ததும்
செம்பில் தேநீர் வாங்கிவந்து
சுடச்சுட வாயில் ஊற்றிக் கொள்ளுங்கள் என்று
ஆற்றித் தந்துவிட்டுப் போகிறார் தந்தை.
சும்மாடு நழுவி…கழுத்து குன்னி
தடுமாறிய சுமை இறக்கி
அரைஅரை குடமாய் ஊற்றி
சீக்கிரம் செல்லலாம் என்கிறாள் மகள்.
அப்படி செய்யக்கூடாது
பாவம் தென்னம்பிள்ளைகள்
இரக்கப்பட்டு மகளை
நிழலிலிருந்து இளைப்பாறச்சொல்லி
தான் மட்டும் போய்வரும் தாய் பார்த்து
அடுத்த நடைக்கே…
எழுந்தோடுகிறாள் மகள்
வெய்யிலிலேயே கிடந்தாலும்
கலையாகத்தான் இருக்கிறாய் என்று
கோணலாகச் சிரித்துக் கண்சிமிட்டிக் கூப்பிட்ட
சின்ன முதலாளி முகத்தில்
சாணியள்ளி வீசியதைச்
சொல்லாமலேயே
தொடங்கிய அதே வீச்சிலேயே நடந்து சென்று அகத்தீவிரத்தைத் தன் கடைசி வரியிலும் சொல்லிலும் முழுதாய் வெளிப்படுத்தும் கவனமான, தண்டவாளம் மாறாத நடை! சொற்கள் இறைக்கப்படுவதே இல்லை. உணர்ச்சிகள் மட்டும் பீறிடுகின்றன!
காலங்காலமாக, பெண்ணுடல் ஆண்களால் எழுதப்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது. அதை ஒரு கவர்ச்சியான படைப்பாக்கி, மேன்மேலும் அதன் கவர்ச்சியை மிகைப்படுத்துவதற்கான மொழியையும் தானே உருவாக்கி, அம்மொழியின் வழியாக உடலைச்சுகிக்கும் வெளியையும் வசதியையும் வாசிக்கும் அனைவருக்கும் வழங்கும் ஒரு பொதுப்பொருளாக்கி, பூவுடலைப் படைத்திருக்கின்றனர், ஆண்கள். இத்தகைய சமூகத்தில் காதலும் உடலை, புணர்ச்சியின் மயிர் உதிர்த்துக் கடந்து போகிறது. இந்நிலையைக் கடந்துவிட்ட பின் அது பெறும் விடுதலைக்கான குறியீடாக இளம்பிறைச்சுட்டுவது மிக முக்கியமானது, முழுமையும் படிமத்தேர்ச்சியானது. ’நம்பிக்கை’ கவிதையில் மிகவும் பூடகமாக ஆளப்பட்ட பருவங்களின் விளையாட்டும் தந்திரமும் நேரடியான வார்த்தைகளால் ஆனால், உள்ளே அதனதன் அரசியல் வார்த்தைகள் பொதியப்பட்டிருக்கின்றன.
பூவுடல்கள் – பொய்மொழிகள்
நெஞ்சில் வளர்ந்த நெகிழ்வுக் கல்லிரண்டின்
மேலோ கீழோ இன்னொன்று வைத்து
சமைத்துவிடலாம் என்பாள்
more: http://koodu.thamizhstudio.com/thodargal_14_2.php
No comments:
Post a Comment