மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம். (16)
http://thamizhstudio.com/serial_4_16.php இப்படியே நான் தமிழ் சினிமாவில் கமல் சாரின் பாத்திரத்தை, அவர் விரும்பி முயன்று விடாது வெளிக்காட்டிக்கொள்ளும் பாத்திரத்தின் குண விசேஷங்களை கூர்ந்து கவனித்துக்கொண்டே போனால், எனக்குத் தான் ஏதோ அவர் மீது தனிப்பட்ட வன்மம் இருப்பதால், அவரை இப்படி விமர்சித்துக் கொண்டு போவதாகத் தோன்றும். அது அவருக்கு தனி மனிதராக பெருத்த அநியாயம் செய்வதாகவும் தோன்றக்கூடும். கமல் சாரின் ரசிகர்களுக்கு எல்லாம் அப்படித்தான் மிக எளிதாக என் மீது குற்றம் சாட்டத் தோன்றும். அது தான் அவர்களது சிந்தனையும் சுய உணர்வுமற்ற பரிதாபத்திலிருந்து கமல் சாரையும் அவர்களையும் காப்பாற்றிக் கொள்ளும் வழியுமாகும். திடீரென்று அவருடைய 87-ம் வயதில் கருணாநிதியை, “இவ்வளவெல்லாம் ஏன் கஷ்டபட்றீங்க, பேசாம சாமி கும்பிட்டிட்டு வந்துடுங்களேன். நிம்மதியா இருக்கும்” என்று சொன்னால் அவரால் ஒப்புக்கொள்ள முடியுமா? இவ்வளவு நீண்ட காலம் பாதுகாத்த இமேஜை மிஞ்சி இருக்கிற காலத்துக்காவது காப்பாத்த வேண்டாமா? மேலும் அது பெரும் மன உளைச்சலில் வேறு ஆழ்த்திவிடும். ஆக, அவர்களுக்கு வேறு ஒரு ”சாரோ” “நாயகனோ” கிடைக்கும் வரை இந்த அவஸ்தை தொடரத்தான் செய்யும். போகட்டும். எனக்கு கமல் சார் ஒரு சௌகரியமான பெயர் தான். அது தமிழ் சினிமாவை ஆக்கிரமித்துள்ள பல போக்குகளில் ஒரு போக்கை உருவகப் படுத்தக் கிடைத்த அந்த போக்கின் வெற்றிகரமான உதாரணமே. உண்மையில் எல்லாமே கொள்ளை கொள்ளையாக காசு எப்படி சம்பாதிக்கிறதுங்கற சமாசாரம் தான். ஆனால் கலைக்காகத் தவம் கிடப்பதான, தான் ஈடுபட்டிருப்பது ஒரு கலை என்று சொல்லிக்கொள்ள அப்படி தமிழ் ரசிகர் உலகை நம்ப வைக்க, ஒரு தனி பாதை. ஒரு காலத்தில் இந்தத் துறையில் இருப்போர் அத்தனை பேரும் கூத்தாடிகள் என்று தான் பேசப்பட்டார்கள். அறியப்பட்டார்கள். அவர்கள் தொழில், நடிப்பு, வாழ்க்கை எல்லாம் என்னவாக இருந்தாலும், அக் கூத்தாடிகளில் சிலர் கலையைப் பேணியவர்கள். சிறந்த சங்கீத கலைஞர்கள் இருந்தாலும் அவர்கள் உலகம் கூத்தாடிகள் உலகமாகத் தான் இழிந்து பேசப்பட்டது. அவர்களில் சம்பாத்தியம் எப்படி இருந்தாலும் சமூகப் பொறுப்பு என்ற பிரக்ஞையோடு செயல் பட்டவர்கள். தம் வாழ்க்கையை பணயம் வைத்தவர்கள். தம்மை இழந்தவர்கள். அது ஒரு கால கட்டம். அக்கால கட்ட பொது தர்மம். “அது சரிய்யா, பணம் வருதுங்கறதுக்காக என்ன வேணாலும் செய்யறதா?” என்று படிப்பறிவற்ற ஏழை கூட சொல்லக்கூடிய ஒரு பொது தர்மம் பரவலாக இருந்த காலம். . ஆனால் கூத்தாடிகள் கலைஞராகிவிட்ட இந்த காலத்தில் தான் சினிமா உலகம் அதன் ஆத்மார்த்தத்தில் கூத்தாடிகள் உலகமாகியிருக்கிறது. கலைஞர்கள் கூத்தாடிகளாக இழிந்து பேசப்பட்ட காலம் போய் கூத்தாடிகள் கலைஞர்களாக கோஷிக்கப் படும் காலம் இது. இவர்கள் தம் வளத்துக்காக எதையும் பணயம் வைப்பார்கள். தம் சுய கௌரவத்தையும் இழக்கத் தயாராவர்கள். குத்தாட்டம் ஆடுபவர்களும், ஆட்டுவிக்கிறவர்களும், அதற்கு இசை அமைப்பவர்களும், பாடுபவர்களும் கலைஞர்கள் தாம் அவரகள் அரசியல் அதிகார மேடைகளில் கௌரவிக்கப்படுவார்கள். இவர்களில் பெரும்பாலோர் ஆட்டுவிக்கப்படும் பாவைகள் என்பதுதான் உண்மை. அரசியல் அதிகாரம் இவர்களைப் பயன்படுத்திக் கொள்ளும் போது பாவைகள் அங்கும் வீற்றிருப்பதை நாம் குறை சொல்ல முடியாது. இரண்டு பெரும் பிரிவுகளை இங்கு நாம் காணலாம். உத்தேசமான இரு பெரும் பிரிவுகள். ஒரு சில குணங்கள் இரண்டிலும் காணப்படலாம். சில குணங்கள் மங்கலாக மாறி மாறிக் காணலாம். முற்றிலும் ஒன்றை ஒன்று மாறிக் காணும் ஒன்றுக்கொன்று எதிரான பிரிவுகள் அல்ல. எல்லாமே வியாபாரம் தான். பணம் சம்பாதிக்கத் தான். புகழ் விரும்பித்தான். இதில் எதைக் குறை கூற முடியும்? ஆனால், புகழோ, பணமோ, விளம்பரமோ, இவை எதற்கும் எவ்வளவு தூரம் ஒரு மனிதன் செல்லத் தயாராக இருக்கிறான், எதையெல்லாம் விலையாகக் கொடுக்கத் தயாராக இருக்கிறான், எதையெல்லாம் செய்யத் தயாராக இருக்கிறான் என்பதில் தான் நாம் ஒருவனை கலைஞன் என்றும் மற்றவன் பணத்துக்காக எதையும் செய்பவன் என்றும் பிரித்துக் காண்கிறோம். இன்னொன்று, ஒரு தனி மனிதனின் ஆளுமை. எந்த செயலிலும் அவன் தன் ஆளுமையை எடுத்துச் செல்பவன். தன் செயல்களில், சிந்தனையில், தன் ஆளுமையை பிரதிபலிக்கச் செய்பவன். அப்போது தான் தனக்கு இருக்கும் நடிப்புத் திறனை, கமலஹாஸன் ரசிகர்களை வாய் பிளக்க வைக்கும் சேஷ்டைகளுக்குத்தான் செலவிடுகிறாரே தவிர ஒரு கலைஞனின் மனமோ பார்வையோ இருப்பதாகத் தெரியவில்லை. இது காறும் அவரிடமிருந்து அப்படி ஏதும் வந்துவிடவில்லை. அவருடைய ஆளுமை அப்படிப்பட்டது. உலகத்தின் சிறந்த படங்களையெல்லாம் அவர் பார்த்துத் தெரிந்து கொள்வது தன் கலை உணர்வுகளை விசாலப் படுத்திக்கொள்வதற்கோ தன் புரிதலை ஆழப்படுத்திக்கொள்வதற்கோ இல்லை. எதை எதையெல்லாம் எங்கேயிருந்து எடுத்தாண்டு தான் வித்தியாசமாகச் சிந்திப்பவன் என்ற செயற்கையான இமேஜை பெரிதாக்கிக்கொள்ளத் தான் என்பது, வாதம் புரிந்து நிலை நிறுத்த வேண்டிய விஷயம் இல்லை. இன்றைய தமிழ் சினிமாவில் எல்லோரும் பணம் சம்பாதித்து தம் வாழ்க்கையை வளமாக்கிக்கொள்ளத்தான் வந்திருக்கிறார்கள். யாரும் பணத்தைக் கொட்டி இழக்க வரவில்லை. அவரவர்க்குத் தெரிந்த தொழிலைச் செய்து பணம் சம்பாதிப்பதிலோ, பிராபல்யம் அடைவதிலோ, யாருக்கும் ஆக்ஷேபணை இருக்க முடியாது. அத்தோடு பிராபல்யம் எங்கு புகழாக பரிமளிக்கிறதோ, தொழில் எங்கு கலையாகப் பரிணாமம் பெறுகிறதோ அதையும் உணரும் திறனும், புரிந்து கொள்ளும் பிரக்ஞையும் நமக்கு இருந்தால் நல்லது. இருக்க வேண்டும். பால் முனி வாங் லங்காக நடித்த காலத்தில் உலகத் திரைப்படக் கலை என்ற சமாசாரம் எல்லாம் ஏதும் கிடையாது. Good Earth–ம் ஒரு கமர்ஸியல் படமாகத் தான் பணம் போட்டு பணம் சம்பாதிக்கத் தான் எடுக்கப்பட்டது. பணம் சம்பாதிப்பது என்பது அபத்தமான அசிங்கமான அதர்மமான எல்லை வரைக்கும் அர்த்தப்படுத்தப்பட்டு வாழும் தர்மமாகி விடாத காலம். ஆனால் பணம் பண்றது என்பது ஒரு மாதிரியாக அர்த்தப் படுத்தப்பட்டு, அதுவே சினிமாவாகி வளர்ந்து விட்ட இன்றைய கால கட்டத்தில், அந்த சினிமா தர்மத்தை, வியாபாரம் பண்ணும் உத்திகளை ஒன்று விடாமல் கடைப்பிடித்துக்கொண்டே தான் ஒரு பெரிய கலைஞனாக்கும் என்ற தானே வருவித்துக்கொள்ளும் மயக்கத்தில், மிதப்பில் ஒருவன் ஆழ்ந்து விடும் போது தான் சிக்கல்கள் எழுகின்றன. இன்னொரு முனையைப் பார்க்கலாம். சூப்பர் ஸ்டார், ரஜனி சார் இருக்காரே, இருபத்தைந்து கோடி ஒரு படத்துக்குப் பெறுவதாகச் சொல்கிறார்கள். அது இன்றைய ரேட். முதலில் நடிக்க வந்த போது கொஞ்சமாகத் தான், ரொம்பவும் கொஞ்சமாகத் தான் இருந்திருக்கும். தமிழ் சினிமாவை விட பலமடங்கு அதிக சந்தையுள்ள ஹிந்தி சூப்பர் ஸ்டார்களே அவ்வளவு பணம் பெறுகிறார்களா என்பது சந்தேகம். அவர்களில் எவரையும் வைத்து 150 கோடி ரூபாய் ஒரு படத்துக்கு செலவழிப்பார்களா என்பதும் சந்தேகம் தான். வயது அறுபதாகப்போகிறதா? ஏதோ அப்படித்தான் கிட்டத் தட்ட. அதை மறைப்பதும் இல்லை. ஒரு சூப்பர் ஸ்டாரின் முகமோ, அழகோ, பந்தாவோ எதுவும் இல்லை. சந்தைக்குப் போகும் இமேஜ் அவ்வளவும், நிஜ வாழ்க்கையில் பார்க்கும் இமேஜுக்கு முற்றிலும் வேறான அந்த இமேஜ் சினிமாவில் தோன்ற ரசிகர்கள் எதிர்பார்க்கும் சந்தோஷத்துக்காகத் தயாரிக்கப்படுகிறது. அது தான் அல்ல. ஸ்ரீரங்கம் சன்னதித் தெருக்களில் கோஷா விற்கமுடியாது. ஜெட்டாவில் காஞ்சீபுரம் பட்டுப் புடவை கடை வைக்க முடியாது. தவறிப் போய், சந்தையில் ஆகிவந்த ஃபார்முலாக்களோடு தன் ஆசையையும் கொஞ்சம் கலந்து தயாரித்த பாபா படம் “தலீவா, ஏமாத்திப் புட்டியே தலீவா” என்ற ரசிகர்களின் புலம்பலைக் கேட்ட பிறகு அந்த சிந்தனையையே சினிமாவிலிருந்து ஒதுக்கியாயிற்று. தனக்குப் பிடித்த தான் நடித்த படங்களைச் சொல்லக் கேட்ட குரு பாலசந்தரிடம் ரஜனி (அங்கு குருவின் முன்னால் ரஜனியாகத் தான் அடக்க ஒடுக்கமாக உட்கார்ந்திருந்தார்) சொன்னது. ராகவேந்திரா, படையப்பா. தன் இயக்கத்தில் நடித்த படம் எதையும் சொல்லலையே நீ” என்று குரு கேட்க, அவர் குருவைச் சந்தோஷப்படுத்த பொய்யாக எதுவும் சொல்லவில்லை. சிரித்து மௌனமானதைத் தான் நான் பார்த்தேன். குரு தான் இயக்குனர் சிகரமாயிற்றே. உலகத் தரம், என்று ஏதோ குரு கேட்க, ரஜனி, “மிகவும் வெளிப்படையாக, பந்தா ஏதும் இன்றி, தன் உலகம் கமர்ஸியல் உலகம் தான் என்றும் தனக்கு கலை, அது இது என்று எல்லாம் ஏதும் தெரியாது என்றோ என்னவோ சொல்லி குருவுக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தைத் தந்தார் என்று தான் சொல்ல வேண்டும். எனக்கு, “அப்பா, இந்த வேஷங்கள் போடும் உலகில் ஒரு நேர்மையான மனிதனைச் சந்தித்தோம் என்ற சந்தோஷம் ஏற்பட்டது. உலக நாயகன், கமல் ஸார் தான் இருப்பது கமர்ஸியல் உலகம் என்று தன் குருவுக்கு, உலகம் முழுதும் பார்க்கும் ஒரு சன் தொலைக்காட்சிப் பேட்டியில் சொல்லியிருக்க மாட்டார் என்று தான் நினைக்கிறேன், அவரை நான் சரியாக புரிந்து கொண்டிருக்கிறேன் என்றால்; அவர் தான் 1952 பராசக்தியிலேயே எதிர் காலத்தில் வரவிருக்கும் சினிமா கலை நுணுக்கங்களை யெல்லாம் ”கலைஞர்” வசனத்திலேயே கண்டு மகிழ்ந்தவர் ஆயிற்றே. கலைஞர் சினிமா வசனங்கள் தான் அவருக்கு தமிழே கற்றுக்கொடுத்ததாமே. ஆனால் அந்த ஆரம்ப காலங்களில் குமுதத்தில் இயக்குனர் சிகரத்தைப் பற்றி ஏதோ எழுதப் போக, குருவுக்கு கோபம் வர, தகராறு முற்றி, அந்தத் தொடரையே குமுதம் நிறுத்தியது. கமல்ஸாரும் வருத்தம் தெரிவித்து அதற்குப் பிறகு அம்மாதிரி தவறுகளேதும் நேராதவாறு ஜாக்கிரதையாகவே இருப்பது மட்டுமல்லாமல், தன் குருவின் பாதையிலேயே யாரும் தன்னைப் பற்றியும் புகழுரைகள் தவிர வேறு ஏதும் மூச்சுக் கூட விடாதவாறு பார்த்துக்கொள்கிறார் என்று தோன்றுகிறது. சமீபத்தில்கூட ஜெயா தொலைக் காட்சியில் யாரோ அவரைப் ப்ற்றி ஏதோ சொல்லப் போக, அது உலக நாயகனுக்குத் தெரிய வர, அவர் உடனே தானே ஜெயா தொலைக்காட்சி அலுவலகம் சென்று அந்த ஆக்ஷேபகரமான கருத்துக்கள் வெளிவராதவாறு தணிக்கை செய்துவிட்டுத் தான் திரும்பினார் என்று தினகரன் இணைப்பு ஒன்றில் படித்தேன் தன் கருத்துக்களைச் சொல்லவே கூட பயப்பட வேண்டிய நிலை. தன் குருவை மீறி தன் வழிச் சென்ற ராமானுஜர் பற்றி நாம் படித்திருக்கிறோம். மகாத்மாவையே எதிர்த்து நின்று காங்கிரஸின் தலைமையை திரிபுரா காங்கிரஸில் பெற்ற சுபாஷ் சந்திர போஸ் பற்றியும் மூத்த தலைமுறையினருக்குத் தெரியும். இத்தலைமுறை சரித்திரத்தில் படித்திருப்பார்கள். சென்ற தலைமுறையினருக்குத் தெரியும் அண்ணாதுரை தன் குருவைத் தொடர்ந்து இனி செல்ல இயலாது என தனிக்கட்சி தொடங்கி குருவின் சாபங்களை தான் முதன் மந்திரியாகும் வரை கேட்கும் நிலை வந்தது. கணக்குக் காட்டு என்று திமுக தலைவரைக் கேட்டு அவரது பகைமையைச் சம்பாதித்துக்கொண்ட எம்ஜிஆர் பற்றி தெரியாத தமிழன் இருக்க முடியாது. எதிர்த்துத் தன் வழிச்சென்ற யாரும் அதற்காகச் சிறுமைப் பட்டதில்லை. ஒரு கட்டத்தில் தன் கருத்தை வெளியிட்டுத் தம் தனித்துவத்தை ஸ்தாபித்துக்கொண்டவர்கள் இவர்கள். அத்தகைய கட்டம் யாருக்கும் வரும். தனித்துவமும் சுயமான ஆளுமையும் வாய்க்கப்பட்டவர்கள் தலைமையே கதி என்றிருப்பது கடினமான காரியம். அது வாய்க்கப் பெறாதவர்கள் பற்றிப் பேச்சில்லை.. இன்றைய தமிழ் நாட்டில் தனக்கு தெய்வ பக்தி உண்டு, தான் நாஸ்திகன் இல்லை என்று பொது மேடையில் சொல்லி அதைச் செயலில் காட்டித் தன் வழி செல்லக் கூட ஒரு தைரியம் வேண்டும். இதில் ஏதும் வீரம் வேண்டும் விஷயம் இல்லை. ஆனால் அரசியல் சமூகச் சூழல், அவனை மூடன் என்றும், பகுத்தறிவு அற்றவன் என்றும் சொல்லுமோ என்ற பயம் சமூகத்தில் பிரபலங்களாகி விட்டவர்களை யெல்லாம் வாட்டி வதைக்கிறது. வேடிக்கை என்னவென்றால் தான் நாஸ்திகன் என்று சொல்வதில் ஒரு போலிப் பெருமை இருப்பதாக, தான் மிக அறிவாளி போலவும் பந்தா செய்துகொள்ள நாஸ்திகன் என்ற பிரகடனம் தேவை என்று அப்பிரபலங்களுக்கு என்ணம். இரண்டிலுமே போலித்தனங்கள் பரவலாகக் காண்கிறது என்றாலும் நாஸ்திகத்தில் அறிவாளி பந்தா சேர்ந்துகொள்கிறது இந்த பந்தா உலக நாயகனிடம் இருப்பது பட்டவர்த்தனம். அதோடு கலைஞராக அறியப்படும் திமுக தலைவரிடம் தெய்வ நம்பிக்கை கொண்டவர்களை இழிவாகப் பேசுவது ஒரு பழக்கமாகக் காண்பது போல, அவரைத் திருப்திப் படுத்தும் சிந்தனையிலேயே இருக்கும் உலக நாயகன் தன் நாஸ்திகத்தைப் கர்வத்தோடு பிரகடனம் செய்து கொள்வதோடு ஆஸ்திக நம்பிக்கைகளை ஆபாசப் படுத்துவதும் அவருக்கு விருப்பமான விளையாட்டு. மன்மதன் அம்புக்காக அவர் கவிதை என்று சொல்லி படிக்கப் போக, அதன் புண்படுத்தும் எண்ணம் பலத்த எதிர்ப்பை விளைவிக்க பின் அந்த கவிதை எனப்பட்டது நீக்கப் பட்டது. நான் ஒருவரது தெய்வ நம்பிக்கை பற்ற்யோ அது இன்மையைப் பற்றியோ எதுவும் சொல்வதற்கில்லை. அது அவரவரது சிந்தனையைச் சார்ந்த சுதந்திரம். தெய்வ நம்பிக்கை தனி மனித சிந்தனைச் சுதந்திரம் போல. அது மரியாதைக்குரியது. மதிக்க வேண்டுவது. அது பற்றிப் பேசலாம். கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளலாம். ஆனால் மற்றவர் சிந்தனையைக் கேவலப் படுத்தக் கூடாது. மனம் புண்படுத்தக் கூடாது. அதற்கு எந்த உரிமையும் மற்றவர்க்கு இல்லை. வேத காலத்திலிருந்து நாஸ்திக சிந்தனைகள் இருந்துள்ளன. அவர்கள் தத்துவ தரிசிகளாக, கலைஞர்களாக இருந்துள்ளனர். அவர்கள் மனித சிந்தனைக்கும் வாழ்வுக்கும் வளம் சேர்த்தவர்கள். ஆனால் தமிழ் நாட்டில் காணப்படுவது போல, அது ஒரு தரப்பினரிடம் கொண்ட பகைமையால அவர்களை இழிவு படுத்த மேற்கொண்ட அரசியல் கொள்கையானால் அது ஒரு இழிந்த மனதையே வெளிக்காட்டும். அப்படி இழிந்து பேசுகிறவன் கலைஞனாக மாட்டான். அவன் மரியாதைக்குரிய மனிதன் கூட இல்லை. அவன் ஒரு கடைத்தர மனிதன். அரசியல்வாதி. தன் தெய்வ நம்பிக்கையை, தான் நம்பும் ஆசாரங்களை ரஜனி காந்த் பிரசாரப் படுத்துவதுமில்லை. அது தனக்குப் பெருமை சேர்க்கும் ஒன்றாகவும் பிரகடனப் படுத்துவதில்லை. அந்த நம்பிக்கை அற்றவரை இழிவு படுத்துவதுமில்லை. தன்னளவில் அது தன் நம்பிக்கை சார்ந்தது. தான் வாழும் வழி அது என்பதை அவர் மறைப்பதும் இல்லை. பொதுவில் வைக்கத் தயங்குவதும் இல்லை. தன் மகள் திருமணத்தை அவர் வைதீக சடங்குகளோடு உலகம் பார்க்க நடத்தியது, ’பாபா’வை ரசிக்காத தன் ரசிகர்கள் கூட்டம் என்ன சொல்லுமோ, தன் சினிமா வியாபாரம் இதனால் கெடுமோ என்றும் அவர் நினைத்துப் பார்க்கவில்லை. அவர் மனத் திடத்தையும் தன் நம்பிக்கைகளின் பலத்தையும் சொல்லாமல் சொல்லும். ஒரு சினிமா சூப்பர் ஸ்டார், நாஸ்திகத்தைப் பெருமையாகக் கருதும் அரசியல் சூழலில். அத்தகைய அதிகார மையங்களின் நெருக்கத்தில் இருக்கும் ஒருவரின் இத்தகைய செயல் இது என் வழி, இது தான் நான் என்றும், தன் சூப்பர் ஸ்டார் இமேஜ் இமேஜ் தானே ஒழிய அது தான் அல்ல, என்றும் உலகின் முன் வைத்தது, ரஜனி காந்தை மரியாதைக்குரிய மனிதனாக, நாம் மதிக்க வேண்டிய மனிதனாகக் காட்டுகிறது. அவர் சினிமாவில் ஒன்று கூட எனக்குப் பிடித்த தில்லை. அவர் சினிமாவை சினிமாவாக நான் ஏற்பதில்லை. அவர் சினிமாவில் ஏற்ற பாத்திரங்கள் அவருக்கு தன் நடிப்புத் திறனைக் காட்டும் வாய்ப்பைத் தராமல் போயிருக்கலாம். இது தமிழ் சினிமாவில் உள்ள எல்லாரையும் சாரும் குற்றச் சாட்டுத் தான். அவர்கள் பாத்திரங்கள், அவர்கள் கதைகள், அவர்கள் பேச்சுக்கள் என் எதுவும் எனக்கு அவற்றை நம்பகத் தன்மையைக் கொடுக்காமல் தான் இருக்கின்றன. இந்தக் கூட்டத்தில் மிக வெற்றிகரகமாக ஒரு சந்தையை உருவாக்கிக் கொண்டுள்ளவர் ரஜனி காந்த். ஒரு சூப்பர் ஸ்டாராகவும் ஆக்கியுள்ளது அந்த வெற்றி. ஆனால் அவர் என்னளவில் ஒரு தனி மனிதராக மரியாதைக்குரியவர். http://thamizhstudio.com/serial_4_16.php (தொடரும்) | |||
Tuesday, February 1, 2011
மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம். (16)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment