படைப்பாளிகள் - த. அறிவழகன்
பால்ய வயதில் எத்தனை கதைகளை கேட்டு வளர்ந்திருந்தாலும் நம்முள் அச்சம் ஏற்படுத்தியிருக்கும் ஆவி கதைகளை நினைவு கொண்டால் இன்றும் நமக்குள் ஒளிந்திருக்கும் ஒரு அப்பாவிச் சிறுவன் வெளிப்படுவான்.மரத்தில் ஆடும் பாலித்தீன் பைகள்,எதிர் படும் கரிய உருவம், எங்கிருந்தோ வரும் சீட்டை ஒலி , தவளைகளின் துணை தேடும் படலத்தின இடைவிடாத இரைச்சல், இரவுப் பூச்சிகளின் தொடரும் ரீங்காரம் யாவும் நம்மை ஒரு சேர பயமுறுத்தும்.
சிறுவயதில் உறங்கும் போது அம்மாவை,அப்பாவை,பாட்டியை யாரையேனும் அணைத்துக் கொண்டு தூங்கி இருப்போம்.இதில் யாரிலும் சேராத ஸ்பரிஸம் தாத்தாவினுடையது.தாத்தாவின் திறந்த உடல்,அவரின் பெரிய தொப்பை,அருகில் செல்லும் போது அடிக்கும் வெற்றிலை நெடி, பேச்சிலே குழைந்திருக்கும் அக்கறை,ஆழ்ந்த நித்திரையில் கட்டிப் பிடிக்க கைக்குள் அடங்காத பெரிய வயிறு இவ்வாறெ நீண்டு கொண்டு போகும் தாத்தாவின் நினைவுகள்.இவை யாவையும் உங்கள் நினைவுக்குள் மீட்டெடுக்கும் கலை நேர்த்தி மிக்க குறும்படம் செவ்ளி. இதன் இயக்குநர் த.அறிவழகன். இனி இயக்குனர் திரு. த. அறிவழகன் அவர்களுடன் ஒரு நேர்காணல்: 1.உங்கள் குறும்படம் மண் வாசனையை, அதன் மனிதர்களை அழகாய் படம் பிடிக்கிறது. உங்கள் ஊரைப் பற்றிச் சொல்லுங்கள்?
நெய்வேலிக்கு அருகில் உள்ள வெளிக்கூனங்குறிச்சி எனது ஊர். இது கடலூர் மாவட்டத்தில் இருக்கிறது. விவசாய கிராமமான இங்கு கரும்பு, நெல், மல்லாட்டை போன்றவை அதிகம் பயிரிடப்படுகின்றன. ஆரம்பத்தில் வானம் பார்த்த பூமியாக இருந்த ஊர், நெய்வேலி நிலக்கரி நிறுவனம் வந்த பிறகு சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரைப் பயன்படுத்தி தற்போது பசுமையான ஊராக இருந்து வருகிறது. எனது பத்தாவது வயதிலேயே என் பழைய கிராமத்தை நெய்வேலி நிறுவனத்திற்காக இழந்திருக்கிறேன். தற்போதைய ஊர் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. செவ்ளி குறும்படத்தின் பெறும்பான்மையான காட்சிகள் பதிவு செய்யப்பட்டது இந்த ஊரில் தான்.
2."செவ்ளி" அதன் கதாப்பாத்திரங்களுடன் இருளின் ஒளியமைப்பும் கதை சொல்கிறது. நீங்கள் ஓளிப்பதிவின் போது சந்தித்த தொழில்நுட்ப(technical) ரீதியிலான சவால்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்?
இருட்டு வேலையே திருட்டு வேலைதான் என்று ஊரில் சொல்வார்கள். அதாவது திருட்டு வேலை என்பது பயத்துடன் செய்யப்படுவது. இருளில் மிகக்குறைந்த லாந்தர் வெளிச்சத்தில் இயல்பாய் பதிவு செய்ய சிரமமாகத்தான் இருந்தது. அதற்கேற்ற தகுதியாக DSR 450 என்கிற கேமராவை முதலில் தேர்வு செய்தோம். லாந்தர் வெளிச்சத்தை சரியாகக் கொண்டுவர சாதாரண 60 வாட்ஸ் குண்டு பல்புகளை பயன்படுத்தினோம். லாந்தர் வெளிச்சத்தை குறைப்பதற்கும், கூட்டுவதற்கும் டிம்மரை பொறுத்தி பயன்படுத்தினோம். தாத்தாவும், பேரனும் பேசிக்கொண்டு நடக்கும்போது மட்டும் வெளிச்சத்தை தொடரச்செய்வதில் அதிக நேரம் பிடித்தது. படப்பிடிப்பு நடந்த இரவுகளில் பனிப்பொழிவு இருந்ததால் நீளமாக இணைத்திருந்த மின்சார வயர்களில் ஏற்பட்ட மின்கசிவு அச்சுறுத்தலாக இருந்தது. சிறு விபத்தும் நடந்து, பின் சரி செய்யப்பட்டது.
3. இக் குறும்படம் எழுத்தில் கீ.ராஜநாராயணனை நினைவு படுத்துகிறது. உங்கள் வாசிப்பு பழக்கம் பற்றி கூறுங்கள்.
சிறுவயது முதலே நூலகம் செல்லும் பழக்கம் எனக்கு இருந்தது. ஆரம்பத்தில் எதைப் படிப்பது என்று தெரியாமல் கையில் கிடைத்த புத்தகங்களை வாசித்துக்கொண்டிருந்தேன். பிறகு இலக்கிய அமைப்புகளோடு ஏற்ப்படுத்திக்கொண்ட தொடர்பினால் கவிதைகள் ,சிறுகதைகள், புதினங்களை தேர்ந்தெடுத்து வாசிக்கமுடிந்தது. தமிழின் பெரும்பான்மையான எழுத்தாளர்களின் படைப்புகளையும் படித்திருக்கிறேன், படித்துக்கொண்டிருக்கிறேன். கீ.ரா. அவர்களையும் வாசித்திருக்கிறேன். இந்தி, உருது மொழிகளில் எழுதிய எழுத்தாளர் பிரேம்சந்த் அவர்களின் மொழி பெயர்க்கப்பட்ட கதைகளை நிறைய வாசித்திருக்கிறேன். அவரின் தாக்கம் எனக்கு இருப்பதாக உணர்கிறேன். கிராமத்து அனுபவத்தோடு வாழ்ந்தவன் என்பதும் காரணம்.
|
4. இக் கதைக்கான பின்னணி உங்கள் நினைவில் இருந்து பின்னப்பட்டதா இல்லை கற்பனையில் புனையப்பட்டதா அல்லது இரண்டின் கலவைகளா?
இரண்டின் கலவைகளாகத்தான் இதன் பின்னணி உருவாக்கப்பட்டது. சிறு வயது முதல் என் தாத்தாவுடன் எனக்கிருந்த நெருக்கம், அதன் காரணமாக அவருடன் வயலுக்கு காவலுக்குச் சென்ற அனுபவம், அங்கு காவல் முடியும் வரை சிறுவனான என்னை தக்க வைத்துக்கொள்ள அவர் சொல்லும் கதைகள், அவற்றை சுவாரஸ்யமாக சித்தரிக்கும் லாவகம் போன்ற நினைவுகளோடு, எனது கற்பனையையும் சேர்த்து புனையப் பட்டதுதான் "செவ்ளி" சிறுகதை & குறும்படம்.
5.தமிழில் சிறுகதைகளை குறும்படமாக்கும் முயற்சி மிக அரிதாகவே காணக் கிடைக்கிறது. இதற்காண காரணமாக எதைச் சொல்வீர்கள்.
குறும்படங்கள் இயக்கும் பெரும்பாலானவர்கள் வாசிக்கும் தன்மை உடையவர்களாக இருப்பதில்லை. அப்படி இருந்தாலும் அடுத்தவர்களின் அனுபவங்களை, படைப்புகளை உள் வாங்குவதில் அவர்களுக்குள் இருக்கும் சிக்கல்கள் ஒரு காரணாமாக இருக்கலாம். மட்டுமின்றி கதை, திரைக்கதை, வசனம் என தன்னை முன்னிலைப்படுத்த முனைவதும் காரணம் என்று நினைக்கிறேன்.
6.உங்கள் படத்தில் கலை அம்சத்தையும் தொழிற்நுட்ப ஒழுங்கமைவையும் காண முடிகிறது. உங்கள் திரைப்படத்தில் பணியாற்றிய பிற கலைஞர்களைப் பற்றிச் சொல்லுங்கள்.
இந்தக் குறும்படத்தை ஒளிப்பதிவு செய்தவர் தினேஷ் ஶ்ரீனிவாஸ். இவர் ஒளிப்பதிவாளர் அமரர், ஜீவா அவர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர். ஸ்டைல், நாளைய பொழுதும் உன்னோடு, கலிகாலம் போன்ற திரைப்படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்தவர். படத்தொகுப்பு மதன் குணதேவா. இவர் வெயில், பூ, நேபாளி போன்ற படங்களுக்கு படத்தொகுப்பு செய்தவர். சிறப்பு சப்தம் எம்.ஜே. ராஜூ. இவர் தமிழின் பெரும்பான்மையான படங்களுக்கு சிறப்பு சப்தம்(Sound effect) செய்தவர். தேசிய விருதும் பெற்றிருக்கிறார். இசை க. திருமுருகன். இவர் புதியவர்.
7.குறும்படத்தை அறிவுரை கூறும் ஊடகமாகவும் அல்லது விழிப்புணர்வு ஏற்படுத்தும் விளம்பரப் படமாகவே நிறைய குறும்பட இயக்குனர்கள் கையாள்கிறார்கள். இதன் மீதான உங்கள் விமர்சனம் என்ன?.
செய்திப்படம், ஆவணப்படம், விவரணப்படம், விளம்பரப்படம், விழிப்புணர்வு என தனித்தனி பிரிவுகளில் படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறும்படம் இதில் வேறொரு தளம் என்பதை சரியாகப் புரிந்துகொள்ளும் நிலையில் சரியாகலாம் என்பது என் கருத்து.
8.குறும்படங்களின் கலை நேர்த்தியை தாண்டி இன்று திரைப்பட மசாலாவைப் போல் மாறி வரும் அபாயம் இருக்கிறது. இதை வரவேற்பீர்களா?.இதைப் பற்றிய உங்களின் பார்வை என்ன?
திரைப்பட ஊடகத்திற்கு மாற்று ஊடகமாக பலரும் பரவலாக பேசிவரும் நிலையில் குறும்படங்களில் கலை நேர்த்தியை தாண்டி இது போன்ற படங்களை எதிர்கொள்வதில் சங்கடம் ஏற்படவே செய்கிறது.
9.சினிமா உங்கள் இலக்குகளில் ஒன்றா அல்லது குறும்பட இயக்குனராகவே தொடர்வீர்களா?
குறும்படம் என் இலக்குகளில் ஒன்று. திரைப்படம் இலக்கு.
10.நீங்கள் ரசித்த மிகச் சிறந்த குறும்படங்களை பட்டியலிடுங்கள்.
நான் பார்த்த வரையில் சிறந்தவைகளாக சில படங்கள் இருக்கின்றன. பார்க்காதவையாகவும் சிறந்த குறும்படங்கள் இருக்கின்றன எனவே வரிசைப்படுத்துவதில் சிக்கல் இருப்பதாக நினைக்கிறேன்.
இவரது குறும்படத்திற்கான திறனாய்வை வாசிக்க:
http://thamizhstudio.com/shortfilm_review_8.php படைப்பாளிகள் பயணிப்பார்கள்... |
No comments:
Post a Comment