உள்ளத்தை உறுத்தும் உளவியல் உண்மைகள் – 8
முப்பத்தி ஒன்பது வயது கமல் பதினைந்து வருடங்களாக தீயணைப்புத் துறையில் தீயணைப்பு வீரராக பணியாற்றி வருகிறார். பி.காம் பட்டதாரி தனக்கு மனக்குழப்பம் அதிகமாகி சில வேலைகளில் மனம் செயல்படாமல் வெறுமை நிலைக்கு ஆளாகி விடுவதாகவும், யாரைப் பார்த்தாலும் சமீப காலமாக கோபம் அதிகமாக வருவதாகவும், மனைவியிடத்தும் சங்கடம் அதிகமாகிக் கொண்டே போவதாகவும் கூறி தன் நடத்தைகளை சரி செய்துகொள்வதற்காக ஆலோசனைகளை வேண்டினார். கமலுக்கு இரண்டு குழந்தைகள் உண்டு. மகள் நான்காம் வகுப்பும், மகன் இரண்டாம் வகுப்பும் படிக்கின்றனர். அவரின் மனைவி எம்.ஏ பட்டதாரி. இரண்டு வருடமாக ஓர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். மனக்குழப்பம், கோபம் இதுதவிர வேறு ஏதாவது பிரச்சனைகள் உள்ளனவா என அவரிடம் வினவினேன். மனம் வெறுமையடையும் போது மனதில் எந்த உணர்வும் இல்லாதது போன்று உணர்கிறேன், கோபம் அதிகமாகும் போது மனப்பதட்டம் அதிகமாகி கைகள் இரண்டும் நடுங்க ஆரம்பித்து விடுகின்றன, சில நாட்களாக எதைப்பற்றியுமே சிந்திக்க முடிவதில்லை. மனைவி மீதும் உடன் பணியாற்றுபவர்கள் மீதும் அளவு கடந்த கோபம் வருகிறது. குழந்தைகளும் சில சமயம் பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்து விடுகின்றனர். பெரிய மகள் தொடக்கத்திலிருந்தே நன்கு படிப்பதில்லை. அவளுக்கு மறதி அதிகம் என்று கமல் கூறினார். உங்கள் குடும்பத்தை பற்றி கூறுங்கள் என அவரிடம் வினவினேன். தனது குடும்பத்தை பற்றியும், குடும்ப உறுப்பினர்கள் பற்றியும் கமல் விவரமாக கூறினார். கமலின் குடும்பம் ஏழ்மையானது. அவர் உடன் பிறந்தவர் இரு தம்பியர். இருவரும் தனியார் கம்பெனியில் வேலை செய்கிறாகள். ஒரு தம்பிக்கு திருமணம் முடிந்துவிட்டது. இன்னொரு தம்பிக்கு பெண் பார்த்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் ஒருவருடத்திற்கு முன்பு கமலின் தந்தை இறந்துவிட்டார். அதிகம் படிக்காத கமலின் தந்தை குடும்ப உறுப்பினர்களிடம் சற்று கறார் பேர்வழி மனைவியிடமும், குழந்தைகளிடமும் மிகவும் கண்டிப்புடனும் நட்ந்து கொள்வார். இதனால் கமல் உள்பட மகன்கள் யாரும் அப்பாவிடம் சகஜமாக பழகியதோ பேசியதோ கிடையாது. கமல் திருமணம் ஆகி தனிக்குடித்தனம் வந்த பிறகு அவ்வப்போது சென்று அம்மா அப்பாவை பார்த்துவிட்டு தேவைகள் ஏதுமிருந்தால் நிறைவேற்றிவிட்டு வருவார். தற்போது கமலின் தாய் அவர் தம்பிகளின் பராமரிப்பில் இருந்து வருகிறார். கமலுக்கு அவர் உறவினர் அனைவரிடமும் நல்ல உறவு உண்டு. அடிக்கடி அவர்களை சந்திக்கவும் செய்வார். அப்போதெல்லாம் தன் உறவினர்களை மகிழ்விக்க அவர்களோடு சேர்ந்து அளவாக மது குடிப்பது உண்டு. ஆனால் பிற சமயங்களில் கமல் மது குடிக்க மாட்டார், வேறெந்த கெட்ட பழக்கமும் அவருக்கு கிடையாது. கமலுக்கும் அவர் மனைவிக்கும் சில வருடங்களாக சிறிது மனத்தாங்கள். தன் கணவர் தன் குழந்தைகளுக்கு வேண்டும் என எதையும் சேமித்து வைக்காமல் சம்பாதிக்கும் பணத்தில் கணிசமான தொகையை அவர் வீட்டினருக்கே செலவு செய்து விடுகிறார் என கமலின் மனைவிக்கு வருத்தம். அதை தன் மனைவி சொல்லிக் காட்டும் போதெல்லாம் கமலுக்கு கோபம் தலைக்கேறி கணவன் மனைவி இடையே கடுமையான சண்டை நடந்து அடிதடியில் முடிந்துவிடும். உண்மையில் கமலும் அளவுக்கு மீறி எதையும் தன் குடும்பத்தினருக்கு செய்வது கிடையாது. அதே சமயத்தில் அவர்களை கஷ்டத்திலும் விடாமல் முக்கிய தேவைகளை நிறை வேற்றி விடுவார். ஆயினும் மனைவி இப்பிரச்சனைக்காக சண்டையிடும் போது “ஒருவேளை நான் அவ்வாறு தான் நடந்து வருகின்றேனோ” என்ற சுய சந்தேகம் கமலுக்கு ஏற்படுவதுண்டு. சொத்து வாங்கிய விஷயங்கள் பலவற்றை சில நண்பர்கள் பேசும்போது, தன்னிடம் சேமிப்போ, சொத்துக்களோ இல்லை என்று நினைக்கும் போதும் இச்சந்தேகம் கமலின் மனதில் வலிமை அடையும். கமலின் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் இரண்டு விஷயங்கள்தான். முதலாவது அவர் தந்தையின் இறப்பு. சிறு வயதிலிருந்தே தந்தையுடன் சரியாக பேசாத பழகாத கமல் மனதில் தன் தந்தைக்கு எதுவும் செய்யவில்லையோ என்ற மனத்தாங்கள் ஆழ்மன அளவில் உள்ளது. உறவினர்களிடம் நல்ல தொடர்பு வைத்துக்கொண்டு அவர்களை மரியாதையோடும் நடத்தி வருகின்ற கமலின் நடத்தையிலிருந்தே அவர் மனிதர்களிடம் பாச உணர்வு மிக்கவர் என்று தெரிந்துகொள்ளலாம். மேலும் தந்தை இறந்த பிறகுதான் கமலின் மனப்பிரச்சனைகள் தீவிரமடைந்திருகின்றன. எனவே தந்தை பாசமும், அவரின் இழப்பும் தீவிரமான மனச்சோர்வை கமலுக்கு உண்டாக்கியிருக்கிறது. இதனிடையே வேலைக்கு செல்ல ஆரம்பித்த கமல் மனைவி வெளி உலக அனுபவத்தினால் கிடைத்த மன தைரியத்தில் வருகிற வருமானத்தில் கணிசமாக உங்கள் வீட்டுக்கு செலவு செய்கிறீர்களே என போர்கொடி தூக்கியுள்ளார். தன் குடும்பத்திற்கு செய்ய வேண்டியது என் கடமை. அதை இவள் கேட்கிறாளே என்பதே கமலின் கோபத்திற்கு காரணம். பிரச்சனைகளை சமாளிக்கவும் முடியவில்லை வெளியில் சொல்லவும் முடியவில்லை என்ற நிலையில்தான் கை நடுக்கம் கமலுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆழ்மனதில் தீவிரமான உணர்ச்சிகள் அடக்கப் பட்டிருந்தால் அவை உடல் நோயாக ஏதாவதொரு வகையில் வெளிப்படலாம். இதற்கு மாற்ற நோய் (Conversion disorder) என உளவியல் பெயர். தந்தை இறந்த மனச்சோர்வும், மனைவியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாத மனக்குழப்பமுமே கைநடுக்கமாக வெளிப்பட்டுள்ளது. குழந்தைகள் படிப்பில் கவணம் செலுத்த முடியாமல் போனதும் வீட்டில் பெற்றோர் அடிக்கடி சண்டைபோட்டுக் கொள்வதால் ஏற்படும் மன அழுத்தமும், பெற்றோர்களின் கவனிப்பின்மையுமே ஆகும். இவையாவற்றையும் கமலுக்கு விளக்கிக் கூறி பின்வரும் வழிமுறைகளை கடைபிடிக்குமாறு அவருக்கு அறிவுறுத்தினேன்:- கமல் தன் மனைவியிடம் “நான் உனக்கும் குழந்தைகளுக்கும் வஞ்சனை செய்து என் குடும்பத்திற்கு இரகசியமாக எதுவும் செய்வதில்லை என்பதை தெளிவாக விளக்க வேண்டும். தகவல் பரிமாற்ற கோளாறினால்தான் கமலின் மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கமல் தன் மனைவியின் ஆதங்கத்தை சரிசெய்து விட்டாலே அவர் தன் தம்பிக்கு திருமணம் செய்து வைத்தல், குடும்பத்தினருக்கான அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுதல் என அனைத்தையும் மகிழ்வோடு செய்ய வாய்ப்பு ஏற்படும். கமல் மனைவி தற்போது வேலைக்குச் செல்வதால் அவர் இரட்டை பாத்திரத்தில் – தொழிலாளியாககும், குடும்பத்தலைவியாகவும் கடமையாற்ற வேண்டியுள்ளது. அவர் அடிக்கடி கோபப்படுவதற்கு காரணமும் இதுவே. எனவே அவரின் பணிப் ப்ழுவை குறைக்கும் வண்ணம் கமல் வீட்டு வேலைகளில் அவர் மனைவிக்கு உதவி செய்ய வேண்டும். குழந்தைகளை கவணித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு உதவி செய்வதே பல பிரச்சனைகளை தீர்த்துவிடும். குழந்தைகள் படிப்பு காரணமாக கவலை கொள்ளத் தேவையில்லை என்ன வேலையிருந்தாலும் தினமும் மாலை ஆறு மணிக்கு குழந்தைகளுடன் அமர்ந்து அவர்களை படிக்க பழக்க வேண்டும். கமலோ அல்லது அவர் மனைவியோ, யார் வேண்டுமானாலும் இதைச் செய்யலாம். நாளடைவியில் குழந்தைகள் தானாக நன்றாக படிக்கத் தொடங்கிவிடும். | ||
Monday, November 22, 2010
உள்ளத்தை உறுத்தும் உளவியல் உண்மைகள் – 8
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நல்ல பதிவு
//குழந்தைகள் படிப்பில் கவணம் செலுத்த முடியாமல் போனதும் வீட்டில் பெற்றோர் அடிக்கடி சண்டைபோட்டுக் கொள்வதால் ஏற்படும் மன அழுத்தமும், பெற்றோர்களின் கவனிப்பின்மையுமே ஆகும்.//
நிஜம்.. அவர்கள் முன் சண்டைகள் தவிர்க்கணும்
Post a Comment