Sunday, January 9, 2011

நாஞ்சில் நாடன் : நம் மனசாட்சியின் குரல்



மாலை சூடிய சாஹித்ய அகாடெமி

இந்த வருடம் சாஹித்ய அகாடெமி விருது (2010) "சூடிய பூ சூடற்க" சிறுகதை தொகுப்பிற்காக எழுத்தாளர் திரு. நாஞ்சில் நாடன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எத்தரப்பும் ஆட்சேபிக்காத ஒரு நல்ல நேர்மையான படைப்பாளிக்கு இந்த வருட விருதைக் கொடுத்து வெற்றி மாலை சூடிக் கொண்டது சாஹித்ய அகாடெமி அமைப்பு. நாஞ்சில் நாடன் அவர்களை கவுரவிக்கும் பொருட்டு புகழ் பெற்ற எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன் பற்றி எழுதும் சிறப்புக் கட்டுரைகளை தமிழ் ஸ்டுடியோ.காம் வெளியிட்டு மகிழ்கிறது.

இரண்டாவது சிறப்புக் கட்டுரை திரு. பாவண்ணன்

-------------------------------------------


நாஞ்சில் நாடன் : நம் மனசாட்சியின் குரல்


பாவண்ணன்


தமிழில் மிகச்சிறந்த புனைகதை எழுத்தாளர் நாஞ்சில் நாடன். கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாகவும் தரமாகவும் படைப்பிலக்கியத் தளத்தில் இயங்கிக்கொண்டிருப்பவர். தன்னுடைய அறச்சார்புநிலையிலிருந்து ஒருகணமும் பிறழாத உறுதியான மனம்கொண்டவர். அதன் காரணமாகவே, தன்னுடைய குரலை படைப்பிலக்கியத் தளத்திலும் சமூகத்தளத்திலும் தவிர்க்கப்படமுடியாத ஒன்றாக தன்னை நிறுவிக்கொண்டவர். எண்ணற்ற நெருக்கடிகளுக்கிடையேயும் இடைவிடாமல் உழைக்கும் வேட்கையும் வேகமும் இயல்பாகவே இவரிடம் குடிகொண்டுள்ள குணங்கள். நாஞ்சில்நாட்டு மனிதர்களைப்பற்றிய சித்திரங்களின் பதிவை தமிழிலக்கியப் பரப்பில் அழுத்தமாக உருவாக்கியதை இவருடைய கொடை என்றே சொல்லலாம். 63 வயதுடைய இவருக்கு இந்த ஆண்டுக்குரிய சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டுள்ளது.

நாஞ்சில் நாடன் எழுத்துகளில் நான் முதலில் படித்தது தலைகீழ் விகிதங்கள் என்னும் நாவல். ஒருநாள் இரவுச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு சிம்னி விளக்குவெளிச்சத்தில் படிக்கத் தொடங்கினேன். ஒருமணிநேரம் அல்லது இரண்டுமணிநேரம் படித்துவிட்டு தூங்கச் செல்லலாம் என்பதுதான் என் திட்டமாக இருந்தது. ஆனால் படிக்கப்படிக்க கதையின் வேகம் என்னை இழுத்துக்கொண்டு ஓடியது. பாதியில் நிறுத்த மனம் வரவே இல்லை. நள்ளிரவில் விழித்துப் பார்த்த அப்பா "காலாகாலத்துல தூங்காம ஏன் இப்படி ஒடம்ப கெடுத்துக்கற" என்று அலுத்துக்கொண்டார். அம்மா மட்டும் தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு, "இருக்கற மண்ணெண்ணய வச்சித்தான் இன்னும் கொற நாள ஓட்டணும் பாத்துக்கோ..." என்று பட்டும்படாமல் சொல்லிவிட்டு உறங்கத் தொடங்கிவிட்டார். எதுவுமே என் இதயத்தில் பதியவில்லை. மனமெல்லாம் சிவதாணுவும் பார்வதியும் நிறைந்திருந்தார்கள். வாழவேண்டிய காலத்தில் வீம்பாக பிரிந்து ஆளுக்கொரு மூலையில் அல்லல்படுகிறார்களே என்கிற பரிதாப உணர்வு அதன் முடிவை நோக்கி என்னை உந்தித் தள்ளியது. தொடர்ந்து படித்துக்கொண்டே இருந்தேன். அதிகாலை நான்குமணிக்கு சங்கு ஊதுகிற சமயத்தில் முடித்துவிட்டுத்தான் எழுந்தேன். ஆனால் மனம் பரபரவென்று இருந்தது. சிவதாணுவைப்பற்றி உடனடியாக யாரிடமாவது மனம்விட்டு பேசவேண்டும்போல சொற்கள் பொங்கிப்பொங்கி வந்தன. நேராக என் நண்பன் பழனியின் வீட்டுக்குச் சென்று, தூங்கிக்கொண்டிருந்தவனை எழுப்பி வெளியே அழைத்துவந்தேன்.

கடைத்தெருவில் அப்போதுதான் திறந்து இயங்கத் தொடங்கியிருந்த தேநீர்க்கடையில் சூடாக ஒரு தேநீர் வாங்கிப் பருகிவிட்டு நடக்க ஆரம்பித்தோம். நான் சிவதாணுவின் கதைமுழுக்க அவனிடம் வரிவரியாகச் சொன்னேன். ஒரு நேர்விகிதம் புரிதலின்மையால் முதலில் தலைகீழ் விகிதமாகி பிறகு மறுப்யும் நேர்விகிதமாக மாற்றமடையும் இராசாயனத்தை மாற்றமில்லாமல்......

more:

http://koodu.thamizhstudio.com/sirappukkatturai_nanjil_sahithya_2.php




Wednesday, January 5, 2011

மாலை சூடிய சாஹித்ய அகாடெமி



மாலை சூடிய சாஹித்ய அகாடெமி

இந்த வருடம் சாஹித்ய அகாடெமி விருது "சூடிய பூ சூடற்க" சிறுகதை தொகுப்பிற்காக எழுத்தாளர் திரு. நாஞ்சில் நாடன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எத்தரப்பும் ஆட்சேபிக்காத ஒரு நல்ல நேர்மையான படைப்பாளிக்கு இந்த வருட விருதைக் கொடுத்து வெற்றி மாலை சூடிக் கொண்டது சாஹித்ய அகாடெமி அமைப்பு. நாஞ்சில் நாடன் அவர்களை கவுரவிக்கும் பொருட்டு புகழ் பெற்ற எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன் பற்றி எழுதும் சிறப்புக் கட்டுரைகளை தமிழ் ஸ்டுடியோ.காம் வெளியிட்டு மகிழ்கிறது.

அந்த வரிசையில் முதலில் கலாப்ரியா அவர்கள் நாஞ்சில் நாடன் படைப்புகள் பற்றிய தன்னுடைய கருத்துகளை பகிர்ந்துக் கொள்கிறார்.

-------------------------------------------


”வாசறு மிண்டான்...... ”


கலாப்ரியா


எந்த ஒரு இலக்கியப் படைப்பும் கலைஞனின் நினைவுகளிலிருந்து, இறந்த காலத்திலிருந்தே உருப்பெறுகிறது. அகோரப்பசியுடன் தளிரையும் அரும்பையும் இலையையும் தின்று தன்னைச் சுற்றிக் கூடமைத்து ஒடுங்கிவிட்ட நிலையில் உறங்கி, வண்ணத்துப்பூச்சியாகி சிறகடிக்கப் போகிற யத்தனத்தில் கூட்டுப்புழுவாக, இலை மறைந்து கிடக்கிறது அனுபவங்கள்.

அழகு சிறகடிக்கிற வண்ணத்துப் பூச்சி என்றில்லை. எத்தனையோ விதமான பூச்சிகள் தன் கூட்டை விட்டு நீங்குகின்றன, வெளியில் நீந்த. கலைஞன் தன் இறந்தகால அனுபவங்களை எதிர்நாளின் பயங்கள், பிரமிப்பு, வலி, கனவுகள் நிறைவேறாமை குறித்த உத்திரவாதமின்மை (யே பெரும்பாலும்) ஆக்கிரமித்திருக்கிற மனதுடன் நிகழ் காலத்தில் எழுத அமர்கிறான்.

ஒரு அனுபவம் பல அனுபவங்களுடன் கோர்வையற்ற, அடுக்கினாலும் சரிந்து விடுகிற வரட்டிகள் போல், அடுக்குகளற்ற தன்மையுடன் நினைவில் புதைந்து கிடக்கிறது. இவை இடம், பொருள், வெளி என்பவற்றைப் புறந்தள்ளி, காலச்சட்டகத்தை மீறி, காலச்சட்டகம் என்பதே பெரிதிலும் பெரிதான ’வெளி’ என்று வாசகனுக்கு தோன்றாமல் தோன்ற வைக்கிற மொழியினை கவிதை கொண்டுள்ளது. அப்படியொரு மொழியில் கவிதை உருவாகிறது.

நாவலின் வடிவத்தில் பல நவீன உத்திகள் பிரக்ஞையின்றியும் பிரக்ஞை பூர்வமாகவும் வந்து கொண்டிருக்கின்றன. ஆனாலும் ஆதாரமான கதை சொல்லல் முறையில் யதார்த்தச் சித்தரிப்புகளின் காலம் முடியவே முடியாது. அதன் ஈர்ப்பும், மூளை கிளறி விடும் சுகமும் வேறுதான்.

சிறுகதையின் வடிவம் கவிதைக்கு சற்றே நெருங்கியது. கவிதை, வாசகவெளியின் எந்தப் புள்ளியையும் மையமாகக் கொண்டு விடும். சிறுகதைக்கு ஒரு விண் கல் அல்லது சின்னஞ்சிறிய கோள் மையமாக அமையும். அதில் காலூன்றினாலும் போதும், ஒரு சூரிய உதயமென்றில்லாமல் பல சூரியோதயங்கள் தோன்றி காலப்பிரக்ஞையை, கால அளவீட்டைக் கோரலாம். யதார்த்தக் கதைகளுக்கு எப்போதும் ஒரு சூரியோதயமே.

ஒருவரின் சிறுகதைத் தொகுப்பின் (தொகுப்பு என்பது முக்கியம்) நல்ல கதையைப் படித்து முடித்து அதன் அதிர்வும் பாதிப்பும் நினைவின் சுவாசத்தைக் கட்டிப் போட்டுவிட, மனம் ஒரு வெற்றிடத்திற்குள் நுழைந்த வாசக மனம், சில நிமிடம் மௌனமாகிப் போகிறதை உணர முடியும்.அப்போது மொழியற்றிருப்பதின் சுகம் பிடிபடும். அடுத்த கதையின் முதல் கொஞ்சம் வரிகள் பார்வையில் பட்டும், புத்திக்கு எட்டாமல் தப்பித்தப்பிப் போய் போக்குக் காட்டும். வாசகனும் கதை சொல்லியும், உடல் மொழி மனமொழி எதுவுமற்று, ஒன்றாகிற அற்புதக் கணமாக அமையும். கொஞ்ச நேரம்தான், சிந்தனை மறுபடி மொழிப்புல் மேயத் தொடங்கி விடும்.

நாவல் தன் பரப்பில் மணல் வீடு கட்டிக் கொள்ளவும், சிதைக்கவும், என்ன விதமான விளையாட்டுக்கும் இடம் தரக் கூடும். அங்கேயும் மொழியின் வல்லமை கவியனுபவத்தையோ, கதையனுபவத்தையோ தராமலும் இருக்காது.

நாஞ்சில் நாடன் கதைகள் முழுத்தொகுப்பு தரும் அனுபவம் அலாதியாய் இருந்தது. பழைய காலங்களை மீள நினைக்க வைத்த அதே நேரத்தில் பல புதுப்புது திறப்புகளையும் உண்டு பண்ணிற்று. ஒரு முழுத் தொகுப்பு என்பது நாஞ்சில் போன்ற கலைஞனைக் கொண்டாடுகிற ஒரு காரியம். அவற்றை ஒருச் சேர வாசிக்கையில் ஒன்று தோன்றியது, அவை ஒரே நாவலின் வெவ்வேறு அத்தியாயங்களாக இல்லை என்பது. அப்படியொரு அபாயம் நேராதது அவருக்கு மட்டுமல்ல தமிழ்ச் சிறுகதைக்கும் ஒரு வெற்றி. இதே அனுபவம் தி.ஜானகிராமன், புதுமைப்பித்தன் போன்றோரை வாசிக்கையில் வாய்த்தது. யூமா வாசுகி இதில் அதிகப் பிரமிப்புத் தந்தவரென்றால் பொய்யில்லை. ஜானகிராமனின் நாவலில் வரும் கதை மாந்தர்கள் எல்லோரும் ‘நல்லவரே’ என்கிற பொது அபிப்ராயம் ஒன்றுதான் அவரது சிறுகதை மாந்தர்களுக்கும் உள்ள குணாம்சம்.நாவலும் கதையும் எழுதுகிறவர்களைக் குறித்தே இந்தச் சிந்தனை.

அதே போல் நாஞ்சில் நாடனின் நாவல்களிலிருந்து வெகுவாக வேறுபட்டவை அவர் சிறுகதைகள். நாஞ்சில் நாடனின் கதைகளைப் படிக்கும் முன் அல்லது அவரது பேரைக் கடக்கிற போதெல்லாம் ‘வாசறுமிண்டான்’ என்று நெல்லின் பேர் - அரிசியின் பேர் என்பது இன்னும் ஜீவனுள்ளதாகப் படுகிறது-தவறாமல் நினைவுக்கு வரும். அவரது பசுமைக் கதைகளில் அவரது பார்வையில் பட்டு நினைவின் பசுமையில் தங்கி இருக்கும் விஷயங்கள் அற்புதமானவை. அவரின் Green memory ஆச்சரியமாயிருக்கும். பால்பாண்டியன்(பிரதர்ஸ்,விருதுநகர்) மிட்டாய் ஆகட்டும் (பால்பாண்டியன் சினிமா ஃபிலிம்கள் அவர் வாங்கியிருப்பாரா, தெரியவில்லை. அரையணாவுக்கு ஐந்து ஃபிலிம்கள், பிரபலமான படங்களின் வேஸ்ட் ஃபிலிம்களை ஒரு தாளில் இறுக்கமாகப் பொதிந்து அட்டையில் ஒட்டி வைத்திருப்பார்கள். சிவாஜி எம்.ஜி.ஆர், படங்கள். திருடாதே, நாடோடி மன்னன், சபாஷ் மாப்பிள்ளே, பாவ மன்னிப்பு, ஸ்ரீவள்ளி, பட ஃபிலிம்கள் எல்லாம் இருக்கும். படத்தில் இல்லாத காட்சிகள் கூட இருக்கும்.) புதுக்குழந்தையைப் பார்க்கப் போகிறபோது பியர்ஸ் சோப் வாங்கிப் போவதாகட்டும் எல்லாம் உறுத்தாமல் கதையாடலின் போக்கிலேயே வரும். அது ஒரு தனிப்பகுதியாக ”இந்தா பார் என் நினைவாற்றலை” என்று காட்டிக் கொண்டிராது. அதே போல் பாரதம், செவ்விலக்கியவரிகள், பாசுரவரிகள், நாடோடிப்பாடல் வரி எல்லாமே கதையாடலின் போக்கிலேயே வரும். ’பண்டார சேனையாய்’ அவரைச் சுற்றிசுற்றி வரும் ரொம்ப ரொம்ப இயல்பாய்.

சில சிறுகதைகளைப் படிக்க அமரும்போது இது எத்தனை பக்கம் இருக்கும் என்று முன் கூட்டியே பார்க்கத் தோன்றும். சற்று அதிகப் பக்கங்கள் இருப்பது போலிருந்தால் ஒத்தி வைத்துவிடத் தோன்றும். அப்புறம் அது வாய்க்காமலே போய் விடும். நாஞ்சிலின் கதைகள் இந்தச் சிரமம் எல்லாம் தராது. (சுஜாதா என்றால் அது வேறுவகையான கொண்டாட்டம்.) நாஞ்சில் நாடனின் கதைகளை, கதையின் பக்கங்களை ஒருச் சேர்த்து கனம் பார்ப்பதில்லை. கதையை மளமளவென்று வாசிக்கத் தோன்றி விடும். சின்னச்சின்ன வாக்கியங்கள், சிறுசிறு வார்த்தைகளே கொண்ட உரையாடல். தார்க்கம்பு குத்தலில் தொடை சிலிர்த்துக் கொள்கிற வண்டிக் காளைகள் மாதிரி. (நாஞ்சில் என்றால் ‘மாதிரி’ என்று கூட எழுதமாட்டார்.)

கதைச் சம்பவங்கள், இழைப்புளி சீவச்சீவ மெருகு காட்டத் தொடங்குகிற தேக்கங்கட்டைகள் போல, கதையை நகர்த்திப் போகிறபோது ’இன்னும் கதை போகும் போலிருக்கே’ என்று தோன்றும். சுவாரஸ்யமாய் அடுத்த பக்கத்தைத் திருப்பினால், அரைப் பக்கத்தில் கதை முடிந்து விடும். ஆனால் கதை, கதையாய் முடிந்திருக்கும். உபாதை என்றொரு கதை.. பூமணியை, ’காலனுப்போவான்’கங்காதரம்பிள்ளை வயல்ச் சோலி முடித்து வருகையில் திடுமென மடக்கி விடுகிறார் வெள்ளிக்கிழமை விளக்கு வச்சாச்சா, கூலியும் கிடைக்காது. ”ஆமா, எம்புட்டுத் தருவேரு”... பணத்தை வாங்கிக் கொண்டு எதிர்பாராமல் வயலுக்குள் தள்ளி விட்டு விட்டு, படபடப்புடன் அரிசிக்கடைக்கு ஒதுங்கி விடுவாள். கதை சட்டென்று முடிந்து விடும். கதை, கதையாக முடிந்து விடும், என்பதுதான் முக்கியம்.

சீர்காழியின் கச்சேரிக்கு மகனுடன் போகிற அப்பாகூட்டத்தோட கூட்டமாய் ஓட்டலில் தின்று விட்டு ’ரெண்டு தேயிலை ‘என்று தானே கணக்குச் சொல்லிவிட்டு நழுவுவார்.(எவ்வளவு நீளமான வாக்கியமாய்ச் சொல்லுகிறேன் பாருங்கள்.) மகன் அப்பாவின் கள்ள முகத்தைப் பார்த்து விட்டு ‘இனிமே இவரு கூட வரக்கூடாது’ என்று ஒரு வரியில் முடிவெடுப்பான். ஒற்றை வரி. கதை, அடிக்கவும் வெடித்துவிடுகிற பொட்டுவெடி மாதிரி முடிந்து விடும். பாத்திரங்கள் நம் மனதுள் தம் ஆக்கிரமிப்பைத் தொடங்கி விடும். திடீரென்று ஒரு நாள் அக்காக்குருவியின் அந்த வருட முதல்க்கூவலைக் கேட்டு, பனி முடிந்து கோடை நுழையத் தயாராகிவிட்டது என்று தோன்றுகிற மாதிரி அவரது கதா உலகம், உலகின் ஒரு நிகழ்வு, முழுமையாகப் பதிவாகிவிடும் வாசக மனதில். ஒரு இறந்தபருவத்தைப் பின தள்ளுகிற ’அக்கூவ்’கூவல்.

அவரது கதைகளில் பெரும்பாலாருக்குப் பெயர் கூடக் கிடையாது. முதல்க் கதையான ‘விரதத்’தில் சின்னத்தம்பியாபிள்ளை, சங்கரலிங்கம் பிள்ளை. முன்னவரின் மகள்களுக்குக் கூட பெயர் கிடையாது. அனேகமான கதைகளில் வரும் வார்த்தைகளைக் கணக்கெடுத்தால் நூறு வார்த்தைகளினால் ஆன ஒரு அகராதியே தேறும். ஆனால் விவரணைகளோ பங்கமின்றி இருக்கும். ‘வாய் கசந்தது’ கதையில்-அதை படித்துப் படித்து மாளாது எனக்கு-சூடடிக்கிற ஐயப்பனின் கணக்கு தக்ர்ந்து கொண்டே போகும். கதை முடிகிற போது, அதாவது கதை கதையாகிற போது, ஐயப்பனின் மேல் வியர்வையுடன் ஒட்டியிருக்கிற வைக்கோல் கூளமும் தாளும் நம் மேல் ஒட்டி,அரிப்பும் கசகசப்பும் எடுக்கிற உணர்வு நளுக்கும். அந்த பிந்திய நேரத்து நிலா குளிரைத் தராது.

பொதுவாக சீக்கிரம் உதிக்கிற ‘அறுவடைநிலா’தான் (HARVEST MOON)நெல் அறுப்புக்கு, சூடடிக்க உதவியாய் இருக்கும். ஆனால் தாமதமாக உதிக்கிற ’வேட்டைக்காரர்கள் நிலா’ (HUNTER’S MOON) இங்கே ஐயப்பன் போன்றோரைச் சுரண்ட உதவுகிறது.

இந்த HUNTER’S MOOனும் HARVEST MOOனும் மட்டும்தான் கணிதம் படித்திருக்கிற எனக்கும் நாஞ்சில் நாடனுக்கும் ஆகப் பொதுவான விஷயம். மற்றப்படி அவரது இலக்கிய உயரம் என்னிடமிருந்து எங்கேயோ இருக்கிறது. 30 டிகிரி, 40 டிகிரி, 60. 90, அண்ணாந்து கொண்டே போனால்.... ம்ஹூம் படுத்துக் கொண்டுதான் பார்க்க வேண்டும்.



செங்கைக் கலைத்தொடர்பு நிலையம் (Chengai Commision for Communication, Diocese of Chengalpattu) மற்றும் தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய கட்-கட் 2011 குறும்படப் பயிற்சிப் பாசறை



செங்கைக் கலைத்தொடர்பு நிலையம் (Chengai Commision for Communication, Diocese of Chengalpattu) மற்றும் தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய கட்-கட் 2011 குறும்படப் பயிற்சிப் பாசறை

ஆதவன்


செங்கைக் கலைத்தொடர்பு நிலையம் (Chengai Commision for Communication, Diocese of Chengalpattu) மற்றும் தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய கட்-கட் 2011 குறும்படப் பயிற்சிப் பாசறை
.

இந்த வருடம் தமிழ் ஸ்டுடியோ.காம் புதிதாக மற்றுமொரு முயற்சியாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் குறும்படப் பயிற்சி அளிக்கும் முயற்சியை தொடங்கியுள்ளது. சென்ற வருடத்தின் கடைசி மாதத்தில் புதிய தலைமுறையில் தமிழ் ஸ்டுடியோ.காம் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி வெளிவந்த கட்டுரையைப் படித்துவிட்டு செங்கை மறை மாவட்டத்தை சேர்ந்த ஆயர் (பிஷப்) திரு. லியோ டொமினிக் செங்கையில் பள்ளிகளுக்கிடையேயான ஒரு குறும்படப் பயிற்சியை நடத்தி தர வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அதன் படி ஜனவரி ஐந்தாம் தேதி பயிற்சி நடத்துவது என முடிவானது.

ஜனவரி ஐந்தாம் தேதி காலையில் ஆறு மணியளவில் சென்னையில் இருந்து தமிழ் ஸ்டுடியோ.காம் உறுப்பினர்கள், சுரேந்திர பாபு, பௌர்ணமி இரவு ஒருங்கிணைப்பாளர் முருகேசன், ஒளிப்பதிவு உதவியாளர் கார்த்திக் ஆகியோருடன் செங்கல்பட்டு சென்று சேர்ந்தோம். காஞ்சி மாவட்ட எல்லைக்கு உட்பட்ட அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பபட்டு சுமார் 80க்கும் மேலான மாணவ மாணவிகள் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர். சுமார் பத்து மணியளவில் நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சியை செங்கை மேய்ப்பு பணியக இயக்குனர் திரு. ஜார்ஜ் ஸ்டீபென் அவர்கள் குத்துவிளக்கை ஏற்றி தொடங்கிவைத்தார். பின்னர் தகவல் தொடர்பியல் குறித்த அவரது உரை முடிந்தது, பின்னர் ஆயர் திரு. லியோ டொமினிக் அவர்கள் நிகழ்ச்சி சார்ந்து அறிமுகம் செய்தார்.

லயோலாக் கல்லூரி காட்சி ஊடக பேராசிரியர் திரு. சின்னப்பன் தகவல் தொடர்பு துரையின் வளர்ச்சி பற்றி உரையாற்றினார்.

பின்னர் தமிழ் ஸ்டுடியோ.காம் நிறுவனர் அருண் தகவல் தொடர்பியல் சார்ந்து, அதன் வரையறைகளை மாணவர்களுக்கு விளக்கி நிகழ்வை கலந்துரையாடல் பாணியில் தொடர்ந்து வழி நடத்தி சென்றார். வந்திருந்த அனைத்து மாணவர்களும் நிகழ்வில் தங்களின் கூச்சத்தை போக்கிக்கொள்ள இது அமைந்தது. மேலும் தகவல் தொடர்பியலின் முதல் எதிரியே கூச்ச சுபாவமும், மேடை பயமும் தான் என்று அவர்களுக்கு எடுத்து சொல்லப்பட்டது.

தொடர்ந்து ஒளிப்பதிவு சார்ந்த பயிற்சி வகுப்பு தொடங்கப்படுமுன்னர் இரண்டு குறும்படங்கள் திரையிடப்பட்டது. அருண் இயக்கிய பெல் அடிச்சாச்சு, மற்றும் டீ பிரேக் ஆகிய குறும்படங்கள் திரையிடப்பட்டு அது பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது. மாணவர்கள் இரண்டு குறும்படங்களையும் பற்றி மிக ஆர்வமாக விவாதம் செய்தனர். பின்னர் கேமராவின் லென்சுகள், கோணங்கள். ஷாட்ஸ், போன்றவற்றைப் பற்றி விளக்கப்பட்டது. குறிப்பாக சில முக்கிய லென்சுகள் பற்றியும், ஷாட்ஸ் பற்றியும், விளக்கி அவற்றை படமாக்கி ப்ரஜெக்டர் மூலம் மாணவர்களுக்கு காண்பித்து அவர்களின் ஐயங்களும் தீர்த்து வைக்கப்பட்டது.

இந்தப் பயிற்சியின் மிக முக்கிய நோக்கமே திரைப்படங்கள் மீது மாணவர்களுக்கு இருக்கும் மோகத்தை உடைத்தெறிய, அவர்களும் பெரியத் திரையில் மாற்று ஊடகம் மூலம் தோன்ற முடியும் என்பதையும் அவர்களுக்கு உணர்த்துவதே ஆகும். அந்த வகையில் மாணவர்களுக்கு ஒளிப்பதிவு பற்றிய அடிப்படை விஷயங்கள் கற்றுத்தரப்பட்டு அவர்கள் கையில் கேமெராக் கொடுக்கப்பட்டு அவர்களையே ஒரு கதையை உருவாக்கி, அவர்களுக்குள்ளாகவே ஒரு குழுவாகப் பிரித்து நடிகர், ஒளிப்பதிவாளர், உதவி ஒளிப்பதிவாளர், இயக்குனர், உதவி இயக்குனர் என பிரிக்கப்பட்டதும் அவர்களின் திரைப்பட மாயை நிச்சயம் சிறிதளவாவது குறைந்திருக்கும்.

இதில் திவ்யா என்கிற மாணவியின் கதை தெரிவு செய்யப்பட்டு மேற்சொன்ன குழுக்கள் பிரிக்கப்பட்டு அவர்களையே ஒரு குறும்படம் எடுக்கப் பணிக்கப்பட்டது. மொத்தம் பத்துப் பதினைந்து மாணவர்கள் வெவ்வோறு விதமான கதைகளுடன் வந்தனர். ஆனால் நேரமின்மைக் காரணமாக மாணவி திவ்யாவின் கதை மட்டும் குறும்படமாக்கப்பட்டது. கதை இதுதான்.

ஒரு மழைக் காலத்தில் சாலையில் ஒரு மரம் முறிந்து விழுந்துக் கிடக்கிறது. அந்த வழியாக போவோர் வருவோர் எல்லாம் அதனைப் பொருட்படுத்தாமல் செல்கின்றனர். சாலையில் வாகன நெரிசல் ஏற்படுகிறது. அந்த வழியே வரும் ஒரு பள்ளி சிறுவன் ஒருவன் அந்தக் கிளையை எடுத்து தன்னால் முடியாது எனத் தெரிந்தும் அப்புறப் படுத்த முயல்கிறான். சிறுவனின் முயற்சியைப் பார்த்து அந்த வழியேப் போகும் மற்றப் பெரியவர்களும், அந்தக் கிளையை அப்புறப் படுத்த வருகின்றனர்.

இது கதையா, அல்லது நல்ல கதையா என்கிற விவாதங்களை எல்லாம் தாண்டி ஒரு பள்ளி மாணவியின் முதல் முயற்சி என்பதே இங்கு முக்கியம். அதுவும் மிகக் குறைந்த நேரத்தில் ஒரு கதையை உருவாக்கி அதை மேடையில் நிகழ்த்திக் காட்ட குறைந்த பட்ச படைப்பாற்றலாவது தேவை. திவ்யா தனக்கான நடிகர்கள், ஒளிப்பதிவாளர், துணை இயக்குனர்கள் என அனைவரையும் அழைத்துக் கொண்டு படம் பிடிக்க சென்று அரை மணி நேரத்திற்குள் படத்தை முடித்துக் கொண்டு திரும்பினார்.

நிகழ்ச்சி தொடங்கும் முன்னர், இதே திவ்யாதான் எனக்கு மென்பொருள் பொறியாளராக வேண்டுமென்பதுதான் ஆசை, எனவே தகவல் தொடர்பியலில் ஆசை இல்லை என்று சொல்லி விட்டு சென்றார். ஆனால் பயிற்சி முடிந்ததும், ஆளுக்கொரு கதை தயார் செய்ய சொன்னதும், மற்ற யாரும் முன்வராதபோது முதல் ஆளாக கதையோடு முன் வந்தவர் திவ்யா. அதன் பின்னர் பத்துப் பதினைந்து மாணவர்கள் வரத் தொடங்கி விட்டது தனிக்கதை.

பின்னர் எடுக்கப்பட்ட குறும்படம் ப்ரொஜெக்டர் மூலம் திரையிடப்பட்டு காண்பிக்கப்பட்டது. மாணவர்களுக்கு தங்கள் முகத்தையே அவ்வளவு பெரிய திரையில் காண்பது பெரிய சந்தோசத்தை கொடுத்தது என்பது அவர்களின் முகத்தைப் பார்க்கும்போது தெரிந்தது.

நிகழ்ச்சியின் இடையே ஆக்சன் சாங் என்கிற ஒன்றை ஆயர் லியோ டொமினிக் அறிமுகப் படுத்தினார். மாணவர்கள் எப்போதாவது வகுப்பறையிலோ அல்லது வேறெந்த கருத்தரங்கிலோ சோர்வுற்றுக் காணப்பட்டால் இதுப் போன்ற பாடல்கள் நிச்சயம் அவர்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும். அந்தப் பாடல் இதுதான்.

Lean back, Lean forward..
to the right, to the left..
stand up, sit down..
to the right, to the left,
lean back, lean forward...

இந்த பாடலை நல்ல இசையோடும், ராகத்தோடும், சகோதரர்கள் ஜார்ஜ் மற்றும் ஜீவா இருவரும் பாடி மாணவர்களை அந்தப் பாடலுக்கேற்ப அசைவுற செய்து ஒரு புதுப் புத்துணர்ச்சி கொடுத்தார்கள் என்றால் மிகையல்ல. நான் மிகவும் ரசித்துக் கேட்டப் பாடல் இது. மேலும் தொடர்ந்து இதுப் போன்ற பல பாடல்களை சகோதரர்கள் இருவரும் பாடி மாணவர்களை புத்துணர்ச்சிப் பெற செய்தனர். நிகழ்வின் வெற்றியில் இந்த இரு சகோதரர்களுக்கும் நிச்சயம் பங்குண்டு.

அடுத்ததாக நிகழ்வின் இறுதியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. Dr. அம்ப்ரோஸ் சான்றிதல்களை வழங்கி நிறைவுரை ஆற்றினார். நிகழ்வில் ஆசிரியர்களுக்கு தனியாக பேராசியர் சின்னப்பன் தகவல் தொடர்பியல் தொடர்பாக விளக்கங்கள் அளித்தார்.

இந்த நிகழ்வில் கல்லூரி நாட்டு நலப் பணி திட்டக் குழுவினர், விஜய், பிரேம், கவிதா, தமயந்தி, சோபியா, ராஜ் ஆகியோர் உறுதுணையாக இருந்தனர்.

இப்படியான ஒரு நிகழ்வை பள்ளி மாணவர்களிடையே நடத்தியது நிச்சயம் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி. அந்த வகையில் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த ஆயர் திரு. லியோ டொமினிக் அவர்களுக்கு நன்றிகள் பல.

நிகழ்வு தொடர்பான மேலும் ஒளிப்படங்களைக் காண:

http://picasaweb.google.com/thamizhstudio/EjcshH#


தமிழ் ஸ்டுடியோ.காம் தொடர்ந்து இதுப் போன்ற பயிற்சி அரங்குகளை அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் நடத்தும் திட்டத்தில் உள்ளது.

எனவே உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி அல்லது உங்கள் கிராமங்களில் இதுப் போன்ற பயற்சிகள் நடத்தப் பட வேண்டுமாயின் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 9840698236, 9894422268

thamizhstudio@gmail.com



தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 28வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)



தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 28வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)

நாள்: சனிக்கிழமை (08-01-2011)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: மாலை மூன்று மணி (3 மணியளவில்)

முதல் பகுதி: (3 மணி) - ஒளியோடு விளையாடு...

இந்த மாதம் முதல் முதல் பகுதியில் ஒவ்வொரு மாதமும், ஒளிப்பதிவு தொடர்பான பயிற்சி வகுப்பு நடைபெறும். ஒலிப்பதிவின் தொழில்நுட்பங்கள், லென்ஸ், ஷாட்ஸ், கோணங்கள், போன்றவற்றை பற்றி விரிவான பயிற்சியும், ஆர்வலர்களுடன் அது சார்ந்த கலந்துரையாடலும் நடைபெறும்.

இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல்

இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரைப்பட வசனகர்த்தா திரு. ராதாகிருஷ்ணன் அவர்கள் பங்கேற்கிறார். குறும்படங்களில் வசனங்களின் முக்கியத்துவம் குறித்தும், வசனங்களின் பயன்பாடும் குறித்தும் பேசவுள்ளார்.

இவர் துரோகி, பானா காத்தாடி போன்ற திரைப்படங்களின் வசனகர்த்தா ஆவார்.

மூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல்

இந்த மாதம் திரையிடப்படும் குறும்படங்கள்.

குறும்படத்தின் பெயர்இயக்குனர் பெயர்கால அளவு

போஸ்ட்மேன்

மனோகர்

18 நிமிடங்கள்

யாசகன் வந்தான்

சுப்புராஜ்

8 நிமிடங்கள்
நிறைவு

ராம. முத்துகனேஷன்

12 நிமிடங்கள்

மூன்றாம் பகுதியின் சிறப்பு அழைப்பாளர்:

மூன்றாம் பகுதிக்கு இந்த மாதம் இயக்குனர் பத்ரி அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மூன்றுக் குறும்படங்களையும் பார்த்துவிட்டு அதன் நிறை குறைகளை அலசி ஆராய்ந்து அதன் இயக்குனர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்க உள்ளார்.

வீராப்பு, ஐந்தாம் படை, தம்பிக்கு இந்த ஊரு போன்ற திரைப்படங்களின் இயக்குனர் ஆவார்.

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:
9840698236, 9894422268


Tuesday, January 4, 2011

அசையும் படம் தமிழின் முதல் ஒளிப்பதிவு நூல் வெளியீட்டு விழா (06-01-2011)



அசையும் படம் தமிழின் முதல் ஒளிப்பதிவு நூல் வெளியீட்டு விழா (06-01-2011)

ஆதவன்


நாள்: 06-06-2011

நேரம்: மாலை 6 மணியளவில்

இடம்: பிரசாத் லேப் தியேட்டர், ஏ.வி.எம் ஸ்டுடியோ எதிரில்



பெரிதாகப் பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்


Sunday, January 2, 2011

திலீப்குமாருக்கு விளக்கு விருது



திலீப்குமாருக்கு விளக்கு விருது

இந்த ஆண்டிற்கான விளக்கு விருது திரு. திலீப்குமார் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று (02-01-2011) அன்று சென்னை மாவட்ட மைய நூலகத்தில் சிறிய அரங்கில் மிக எளிமையாக விழா நடைபெற்றது. தமிழின் முதுபெரும் எழுத்தாளர் திரு. அசோகமித்திரன் இவ்விழாவின் பிரதான சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றது விழாவின் சிறப்பு.

திலீப்குமார் அவர்களின் நூல்கள் :

மூங்கில் குருத்து, கடவு ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுதிகளும், மெளனியுடன் கொஞ்ச தூரம் என்ற இலக்கியத் திறனாய்வு நூலும் வெளியாகியிருக்கின்றன. ‘கடவு’ சிறுகதைத் தொகுதியின் புதிய பதிப்பு விரைவில் க்ரியா பதிப்பக வெளியீடாக வெளிவரவிருக்கிறது.

விளக்கு விருது பெற்ற திலிப் குமார் அவர்களை கவுரவிக்கும் விதமாக கூடு இணையம் அவருக்கான சிறப்புக் கட்டுரைகளை வெளியிட்டு மகிழ்கிறது. அந்த வகையில் இலக்கிய விமரிசகர் திரு. வெங்கட் சாமிநாதன் அவர்கள் திலிப் குமார் பற்றி தன் நினைவுகளைப் பகிர்ந்துக் கொள்கிறார்.


-------------------------------------------


மொழியின் எல்லைகளைக் கடந்து - திலீப் குமார்



வெங்கட் சாமிநாதன்


இன்றைய தமிழ் இலக்கியத்தில் எழுபதுகளில், தெரியவந்த முக்கியமான பெயர்களில் ஒன்று, திலிப் குமார். அவரது தாய் மொழி குஜராத்தி என்பதும் விசேஷம் கொள்ளும் விவரம். இது ஏதும் அவரை தனியாக முன்னிறுத்தி பார்வைக்கு வைக்கும் காரியத்தைச் செய்வதாக அல்ல. இன்றைய தமிழ் இலக்கியத்தில், மலையாளம், கன்னடம், தெலுங்கு, சௌராஷ்டிரம், போன்ற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள எழுத்தாளர்கள் நிறைந்திருக்கிறார்கள். இவர்களில் சிலர் எழுத்துக்கள் மைல்கற்கள், க்ளாஸிக்ஸ் என்று சொல்லத்தக்கவை. இது இன்றைய விசேஷம் அல்ல. தமிழ் இலக்கியத்தின் தொன்று தொட்டே, வரலாற்றின் தொடக்கம் தொட்டே காணப்படும் அம்சமாகும். சங்க காலப் புலவர்கள் பலரின் பெயர்கள் தமிழ் பெயர்களாக இல்லை. (உதாரணமாக, தாமோதரனார், கேசவனார், உருத்திரனார், ப்ரஹ்மசாரி, கண்ணனார், நாகனார், தேவனார்...) அப்பெயர்கள், காதா சப்த சதி தரும் பெயர்களைப் போலவே இருக்கின்றன. மேலும், பாடு பொருள், பாடல்கள் இயற்றப்பட்டுள்ள விதி முறைகள், பெயர் தரப்படாது, அவன் அவள், தோழி என்றே குறிக்கப்பட்டு வரும் மூன்றே பாத்திரங்கள், அவர்களது காதல் ஏக்கங்கள், காத்திருத்தல்கள், தூது எல்லாம் பிராகிருத மொழியில் உள்ள காதா சப்த சதியிலும், சங்க கால அகப் பாடல்களிலும் காணப்படும் பொது அம்சங்களாயிருப்பது நமக்கு இன்னும் திகைப்பூட்டுகிறது. ஒரு வேளை இரண்டிலும் பொதுவாகக் காணப்படும் புலவர் பெயர்கள் ஒருவரையே குறிக்குமோ. ஆனால் இந்த இழையைப் பற்றிக்கொண்டு மேற்செல்வது சங்கடமான காரியம்.

நிகழ் காலத்தில் கூட தமிழ் நாட்டில் இருக்கும் கன்னடம், தெலுங்கு பேசும் எழுத்தாளர்கள் இன்றைய தமிழ் இலக்கியத்திற்கு கணிசமாக பங்களித்துள்ளனர். இவற்றில் சில மிக முக்கியமான சிறப்பான படைப்புகளாகவும் விளங்குகின்றன. சௌராஷ்டிரர்களும் தான். ஆனால் அவர்கள் விஜயநகர


மேலும் வாசிக்க:

http://koodu.thamizhstudio.com/sirappukkatturai_dilip_vilakku.php

Saturday, January 1, 2011

கதை சொல்லி - குட்டி ரேவதி (Kutti Revathi)



கதை சொல்லி - குட்டி ரேவதி (Kutti Revathi)

லிவி



" நான் பாடல்
என‌க்கு கவிதை முகம்"
------------------------------------- அனார்

நெடுநாட்கள் கழித்து சென்னை மெரினா கடற்கரைக்குச் சென்றிருந்தேன். பெரிய மாற்றம் எதுவும் நிகழ்ந்து விட்டது போல் தெரியவில்லை. மழைக் காலம் ஆகையால் க‌டற்கரை மணலில் தண்ணீர் தேங்கி சிறு குளமாகியிருந்தது. கடைகள் அதிக அளவில் இயங்காத‌தால் அதனால் வரும் வெளிச்சம் வழக்கத்திற்கு மாறாக குறைவாகவே இருந்தது. நண்டுகளின் கூட்டம் போல் காதலர்கள், இம்முறை
மேகத்திற்கு பதிலாக குடை வானமாகியிருந்தது. குடை நிச்சயம் பெண்களின் முன்னெச்சரிக்கை குணத்தால் வந்ததாக இருக்கும். மல்லிகைப் பூவும் சேலையுமாக உலாவரும் மலின விலைமகளிர் காதலர் கூட்டம் கலையத் தொடங்கியவுடன் இணை தேடும் நடுவயது முதல் வயதானவர் வரை சுற்றும் ஓரினச் சேர்க்கையாளர்கள். எவ்வளவு தூரம் எட்டி நின்றும் கால்களை நனைத்து வெற்றி கொள்ள மட்டுமே தெரிந்த கடல் அலைகள் , தூரத்தில் ஏற்றி வைத்த தீபங்களைப் போல் கடலில் நங்கூரமிட்ட கப்பல்கள். உலகை வெற்றி கொண்ட நினைப் பெனக்கு. கூச்சலிட வேண்டும் போல இருந்தது. குட்டி ரேவதியிடம் கதைத்துவிட்ட சந்தோசம் எனக்குள்.

குட்டி ரேவதி தமிழின் முக்கியமான‌ பெண்ணிய கவிஞர்களில் ஒருவர். பெண்ணடிமைத் தனத்தால் சீழ் பிடித்து விட்ட மனதை ஆற்றின் மீனை போல் பற்கள் இல்லாமல் கொத்தி அழுக்ககற்றும் போராளி. பெண் சுதந்திரம் மறத்துப் போன ஆழ் மனதை சிறிதளவேணும் உசுப்பிப் பார்ப்பவை அவருடைய கவிதைகள். கட்டற்ற விடுதலையை எண்ணிப் பயணிக்கும் தமிழ் மரபுத் தொடர்ச்சியின் வீரிய உன்னதம்
அவர். அடங்க மறுக்கும் கலகக்காரனின் குரல் அவருடையது. சமரசமற்ற எழுத்தில் தன் கவிதைகளையும் உணர்வுகளையும் பதிவு செய்பவர்.

'கவிதைகள் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். இலக்கியத்தில் கவிதை என்பது வேறு சிறுகதை நாவல்கள் போன்ற மற்றவைகள் எல்லாம் வேறு' என்றார். மேற்குடி இலக்கியமாக இருந்த சங்க இலக்கிய காலகட்டத்தில் நாற்பதிற்க்கும் மேற்பட்ட பெண் கவிஞர்கள் இருந்தார்கள். இன்றுள்ள மக்கள் தொகைக்கு குறைந்தது நான்காயிரம்பேராக இருக்க வேண்டும். தமிழின் பெண்ணிய சிந்தைனையோடு வந்த
அலையில் குட்டி ரேவதி, சுகிர்தாராணி, சல்மா, லீனா மணிமேகலையென மட்டற்ற சுதந்திரத்தை தமதாகிக் கொண்டு பெண் கவிஞ்ர்கள் வந்தார்கள். அவர்களை அடுத்து சொல்லிக் கொள்ள பெண்கவிஞர்களிடம் இன்று ஒரு வெற்றிடம் வந்து விட்டது.

"பெண்ணிய சிந்தனையை கவிஞர்கள் ஒரு இயக்கமாக எடுத்துச் செல்ல தவறி விட்டோமோவெனத் தோன்றுகிறது. அன்றைய காலகட்டத்தில் இன்று இலக்கிய மேதமைகளாக வலம் வருபவர்கள் வாசகனை குழப்பச் செய்தார்கள். இது கவிதைகள் அல்லவென்று சொல்லிக் கொண்டு இருந்தார்கள்" என்றார். வெங்கட் சுவாமிநாதனுடன் ஒருமுறை உரையாடிக் கொண்டிருந்தபோது, கவிதையில் பெண்களின் உடல் மொழிகள், பால் உணர்ச்சிகள் கவிதையில் வருவதை கதைத்துக் கொண்டிருந்தோம். "பெண்கள் தம் உண்ர்வுகளைக் கவிதைகளாக்குவது தவறல்ல, வரவேற்க கூடியது ஆனால் அவை வலிந்து திணித்த‌வொரு முழக்கமாக இருக்க கூடாது" என்றார். வானம்பாடிகள் போல் ஆகி விடக்கூடாது என்கிற தொனி மட்டும் அதில் இருந்தது. எழுபது வயதை கடந்தவருக்கும் இன்றைய இளைஞர்களுக்கும் இல்லாத பொய்யான கட்டுக்கோப்பை நாற்பதை தாண்டிக் கொண்டு நிற்கும் இலக்கிய அப்பாக்கள் நிலை நாட்ட விரும்புகிறார்கள்.

குட்டி ரேவதிக்கு தமிழில் மிகப் பிடித்த கவிஞர் பிரமிள்." பிரமிளின் கவிதைகள் உள் நுழைவதற்கு முதலில் கடினமாக இருக்கும் அதன் பின்னர் அவருக்குள் பயணித்துக் கொண்டே இருக்கலாம். இன்றைய நவீன சிந்த‌னைகள் அனைத்தும் அவர் கவிதைகளில் இருக்கும்" என்றார். அடுத்துப் பிடித்த கவிஞர் தேவததேவன். மற்றொருவர் எம்.டி ராஜ்குமார். இவர் மாய எதார்த்தவாதத்தில் கவிதைகள் எழுதுபவர். ஈழத்துப் பெண் கவிஞர்களிடம் அதிக ஈடுபாடு கொண்டவராக‌ இருந்தார்." கவிதைகளில் ஈழத்துப் போர்ச் சூழல் காரணமாக அவர்களிடம் இருக்கும் வீச்சு நம் தமிழக பெண் கவிஞர்களிடம் இல்லை" என்றார். குட்டி ரேவதிக்குப் பிடித்த ஈழ்த்துப் பெண் கவிஞர்கள் "அனார், ஃபகிமா ஜகான், தில்லை, பானு பாரதி".

யார் தொடங்கியிருப்பார் ஆதி மனிதனில் இருந்து இந்த கதை சொல்லல் மரபை! ஒவியம், கூத்து, சிறுகதை, நாடகம் , நாவல்கள் கலையின் ஒவ்வொரு வடிவமும் கதை சொல்லலின் இருந்தே தன் பிறப்பு முறையை தேர்ந்தெடுத்திருக்கிறது. முடிவற்ற இந்த சங்கிலியின் சேர்க்கை வரலாறாகவும் பதிவு செய்யப்படுகிறது. சற்று விலகியிருந்து பார்த்தால் கதைகள் இதிகாசங்களாகவும் வேத நூல்களாகவும் உருவெடுத்து கதை மாந்தர்கள் கடவுள்கள் உப கடவுள்களாகவும் அந்தந்த பாத்திரங்களின் வசனங்கள் வேத வசனங்களாகவும் வாழ்க்கை நெறிமுறையை பின்பற்ற கடவுள் ஒதியவையாக ஆக்கப்பட்டிருக்கின்றன். கதைகளை கேட்டுக் கொண்டே இருக்கிறோம். கதைகளும் தீர்வதில்லை. கேட்டும் அலுப்பதில்லை. வாழ்வின் நிகழ்வுகளெல்லாம் வரலாறாக கதையாடிக் கொண்டே இருக்கிறது. வரும் சந்ததிக்கெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கிறோம். தொடரோட்டமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது இந்தச் செயல்.

கதை சொல்வதில் என்றும் பெண்களுக்கு அடுத்ததாகவே ஆண்கள் இருக்க முடியும் என்பதை நிரூபித்தார் குட்டி ரேவதி. கதை சொல்லிக்காக நேரம் ஒதுக்க இயலாததால் சந்திப்பு சில நாட்கள் தள்ளிக் கொண்டே சென்றது. 'தமிழ்ஸ்டூடியோ அலுவலகத்திற்கே வந்து கதை பதிவு செய்யலாம்' என்றார். அதன்படி ஞாயிறு பின்னேரம் குறிப்பிட்ட நேரத்திற்கு சரியாக வந்திருந்தார். கதை சொல்லத் தொடங்கும் முன் " மானசி(பவா செல்லதுரையின் குட்டி மகள்) மாதிரி எனக்கு கதை சொல்லத் தெரியாது , அவங்க பெரிய ஆள்,எனக்குத் தெரிஞ்சத நான் சொல்றேன்" என்றார்.கதை சொல்லலும் ஒரு கலை. எல்லோராலும் அது முடிவதில்லை.குட்டி ரேவதி ஆக‌ச் சிறந்த கதை சொல்லிகளில் ஒருவர்.

'க‌தை சொல்வ‌தில் ரொம்ப‌ ஆர்வ‌ம் என‌க்கு. க‌தை சொல்ல‌ மிக‌ மிக‌ பிடிக்குமென. நம்மிடம் வழக்கொழிந்து போன மரபை மீட்டுக் கொண்டு வர வேண்டுமெனச் சொன்னார்' குட்டி ரேவ‌தி. ஆனால் குட்டி ரேவ‌தி சிறிய‌ குட்டிக் குட்டிக் க‌தைக‌ளை ம‌ட்டும் சொன்னார் முத‌ல் காண‌லில். ஒரு தேர்ந்த‌ க‌தை சொல்லியின் குர‌லோடு க‌தைக‌ளின் இழைந்தாடும் த‌ன்மையை அழ‌கோடு கொண்டு வ‌ந்தார். ஒருவித‌ ல‌யிப்பு ஒட்டிக் கொண்ட‌து அவ‌ர் க‌தைக‌ளைக் சொல்ல‌ச்சொல்ல‌ கேட்கும் பொழுது.கதைகளின் சரளம் எங்கும் அவருக்கு மட்டுப் ப‌டவில்லை. தொடர்ச்சியாக கதைகளின் வரிகள் பாய்ச்சலோடு
வந்து கொண்டிருந்து.ஒரு தியானத்தை முடித்த பேரமைதி மனதுக்குள் வந்து விட்டிருந்தது அவர் கதைகளை கேட்ட போது.

க‌தைக‌ளின் தாக‌த்திற்கு போதுமான‌தாக‌ இல்லை அவ‌ரின் குட்டிக் க‌தைக‌ள். சிறிய‌ வேண்டுகோள் வைக்க‌ அவ‌ரும் ஆர்வ‌மாக இருந்ததால் மிக‌ நீண்ட‌ க‌தையொன்றை குறுந்த‌க‌ட்டில் ப‌திவு செய்து கொடுத்தார்.

குட்டி ரேவ‌தியின் க‌தைக‌ளைக் கேட்க‌ கீழே உள்ள‌ ப்ளே ஐக்கானை த‌ட்டுங்க‌ள்.

(கதைசொல்லி பகுதி ஒவ்வொரு வாரமும் திங்களன்று வெளிவரும்)


http://koodu.thamizhstudio.com/kadhaisolli_12.php