செங்கைக் கலைத்தொடர்பு நிலையம் (Chengai Commision for Communication, Diocese of Chengalpattu) மற்றும் தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய கட்-கட் 2011 குறும்படப் பயிற்சிப் பாசறை | ||||
| ||||
இந்த வருடம் தமிழ் ஸ்டுடியோ.காம் புதிதாக மற்றுமொரு முயற்சியாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் குறும்படப் பயிற்சி அளிக்கும் முயற்சியை தொடங்கியுள்ளது. சென்ற வருடத்தின் கடைசி மாதத்தில் புதிய தலைமுறையில் தமிழ் ஸ்டுடியோ.காம் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி வெளிவந்த கட்டுரையைப் படித்துவிட்டு செங்கை மறை மாவட்டத்தை சேர்ந்த ஆயர் (பிஷப்) திரு. லியோ டொமினிக் செங்கையில் பள்ளிகளுக்கிடையேயான ஒரு குறும்படப் பயிற்சியை நடத்தி தர வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அதன் படி ஜனவரி ஐந்தாம் தேதி பயிற்சி நடத்துவது என முடிவானது. ஜனவரி ஐந்தாம் தேதி காலையில் ஆறு மணியளவில் சென்னையில் இருந்து தமிழ் ஸ்டுடியோ.காம் உறுப்பினர்கள், சுரேந்திர பாபு, பௌர்ணமி இரவு ஒருங்கிணைப்பாளர் முருகேசன், ஒளிப்பதிவு உதவியாளர் கார்த்திக் ஆகியோருடன் செங்கல்பட்டு சென்று சேர்ந்தோம். காஞ்சி மாவட்ட எல்லைக்கு உட்பட்ட அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பபட்டு சுமார் 80க்கும் மேலான மாணவ மாணவிகள் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர். சுமார் பத்து மணியளவில் நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சியை செங்கை மேய்ப்பு பணியக இயக்குனர் திரு. ஜார்ஜ் ஸ்டீபென் அவர்கள் குத்துவிளக்கை ஏற்றி தொடங்கிவைத்தார். பின்னர் தகவல் தொடர்பியல் குறித்த அவரது உரை முடிந்தது, பின்னர் ஆயர் திரு. லியோ டொமினிக் அவர்கள் நிகழ்ச்சி சார்ந்து அறிமுகம் செய்தார். லயோலாக் கல்லூரி காட்சி ஊடக பேராசிரியர் திரு. சின்னப்பன் தகவல் தொடர்பு துரையின் வளர்ச்சி பற்றி உரையாற்றினார். பின்னர் தமிழ் ஸ்டுடியோ.காம் நிறுவனர் அருண் தகவல் தொடர்பியல் சார்ந்து, அதன் வரையறைகளை மாணவர்களுக்கு விளக்கி நிகழ்வை கலந்துரையாடல் பாணியில் தொடர்ந்து வழி நடத்தி சென்றார். வந்திருந்த அனைத்து மாணவர்களும் நிகழ்வில் தங்களின் கூச்சத்தை போக்கிக்கொள்ள இது அமைந்தது. மேலும் தகவல் தொடர்பியலின் முதல் எதிரியே கூச்ச சுபாவமும், மேடை பயமும் தான் என்று அவர்களுக்கு எடுத்து சொல்லப்பட்டது. தொடர்ந்து ஒளிப்பதிவு சார்ந்த பயிற்சி வகுப்பு தொடங்கப்படுமுன்னர் இரண்டு குறும்படங்கள் திரையிடப்பட்டது. அருண் இயக்கிய பெல் அடிச்சாச்சு, மற்றும் டீ பிரேக் ஆகிய குறும்படங்கள் திரையிடப்பட்டு அது பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது. மாணவர்கள் இரண்டு குறும்படங்களையும் பற்றி மிக ஆர்வமாக விவாதம் செய்தனர். பின்னர் கேமராவின் லென்சுகள், கோணங்கள். ஷாட்ஸ், போன்றவற்றைப் பற்றி விளக்கப்பட்டது. குறிப்பாக சில முக்கிய லென்சுகள் பற்றியும், ஷாட்ஸ் பற்றியும், விளக்கி அவற்றை படமாக்கி ப்ரஜெக்டர் மூலம் மாணவர்களுக்கு காண்பித்து அவர்களின் ஐயங்களும் தீர்த்து வைக்கப்பட்டது. இந்தப் பயிற்சியின் மிக முக்கிய நோக்கமே திரைப்படங்கள் மீது மாணவர்களுக்கு இருக்கும் மோகத்தை உடைத்தெறிய, அவர்களும் பெரியத் திரையில் மாற்று ஊடகம் மூலம் தோன்ற முடியும் என்பதையும் அவர்களுக்கு உணர்த்துவதே ஆகும். அந்த வகையில் மாணவர்களுக்கு ஒளிப்பதிவு பற்றிய அடிப்படை விஷயங்கள் கற்றுத்தரப்பட்டு அவர்கள் கையில் கேமெராக் கொடுக்கப்பட்டு அவர்களையே ஒரு கதையை உருவாக்கி, அவர்களுக்குள்ளாகவே ஒரு குழுவாகப் பிரித்து நடிகர், ஒளிப்பதிவாளர், உதவி ஒளிப்பதிவாளர், இயக்குனர், உதவி இயக்குனர் என பிரிக்கப்பட்டதும் அவர்களின் திரைப்பட மாயை நிச்சயம் சிறிதளவாவது குறைந்திருக்கும். இதில் திவ்யா என்கிற மாணவியின் கதை தெரிவு செய்யப்பட்டு மேற்சொன்ன குழுக்கள் பிரிக்கப்பட்டு அவர்களையே ஒரு குறும்படம் எடுக்கப் பணிக்கப்பட்டது. மொத்தம் பத்துப் பதினைந்து மாணவர்கள் வெவ்வோறு விதமான கதைகளுடன் வந்தனர். ஆனால் நேரமின்மைக் காரணமாக மாணவி திவ்யாவின் கதை மட்டும் குறும்படமாக்கப்பட்டது. கதை இதுதான். ஒரு மழைக் காலத்தில் சாலையில் ஒரு மரம் முறிந்து விழுந்துக் கிடக்கிறது. அந்த வழியாக போவோர் வருவோர் எல்லாம் அதனைப் பொருட்படுத்தாமல் செல்கின்றனர். சாலையில் வாகன நெரிசல் ஏற்படுகிறது. அந்த வழியே வரும் ஒரு பள்ளி சிறுவன் ஒருவன் அந்தக் கிளையை எடுத்து தன்னால் முடியாது எனத் தெரிந்தும் அப்புறப் படுத்த முயல்கிறான். சிறுவனின் முயற்சியைப் பார்த்து அந்த வழியேப் போகும் மற்றப் பெரியவர்களும், அந்தக் கிளையை அப்புறப் படுத்த வருகின்றனர். இது கதையா, அல்லது நல்ல கதையா என்கிற விவாதங்களை எல்லாம் தாண்டி ஒரு பள்ளி மாணவியின் முதல் முயற்சி என்பதே இங்கு முக்கியம். அதுவும் மிகக் குறைந்த நேரத்தில் ஒரு கதையை உருவாக்கி அதை மேடையில் நிகழ்த்திக் காட்ட குறைந்த பட்ச படைப்பாற்றலாவது தேவை. திவ்யா தனக்கான நடிகர்கள், ஒளிப்பதிவாளர், துணை இயக்குனர்கள் என அனைவரையும் அழைத்துக் கொண்டு படம் பிடிக்க சென்று அரை மணி நேரத்திற்குள் படத்தை முடித்துக் கொண்டு திரும்பினார். நிகழ்ச்சி தொடங்கும் முன்னர், இதே திவ்யாதான் எனக்கு மென்பொருள் பொறியாளராக வேண்டுமென்பதுதான் ஆசை, எனவே தகவல் தொடர்பியலில் ஆசை இல்லை என்று சொல்லி விட்டு சென்றார். ஆனால் பயிற்சி முடிந்ததும், ஆளுக்கொரு கதை தயார் செய்ய சொன்னதும், மற்ற யாரும் முன்வராதபோது முதல் ஆளாக கதையோடு முன் வந்தவர் திவ்யா. அதன் பின்னர் பத்துப் பதினைந்து மாணவர்கள் வரத் தொடங்கி விட்டது தனிக்கதை. பின்னர் எடுக்கப்பட்ட குறும்படம் ப்ரொஜெக்டர் மூலம் திரையிடப்பட்டு காண்பிக்கப்பட்டது. மாணவர்களுக்கு தங்கள் முகத்தையே அவ்வளவு பெரிய திரையில் காண்பது பெரிய சந்தோசத்தை கொடுத்தது என்பது அவர்களின் முகத்தைப் பார்க்கும்போது தெரிந்தது. நிகழ்ச்சியின் இடையே ஆக்சன் சாங் என்கிற ஒன்றை ஆயர் லியோ டொமினிக் அறிமுகப் படுத்தினார். மாணவர்கள் எப்போதாவது வகுப்பறையிலோ அல்லது வேறெந்த கருத்தரங்கிலோ சோர்வுற்றுக் காணப்பட்டால் இதுப் போன்ற பாடல்கள் நிச்சயம் அவர்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும். அந்தப் பாடல் இதுதான். Lean back, Lean forward.. இந்த பாடலை நல்ல இசையோடும், ராகத்தோடும், சகோதரர்கள் ஜார்ஜ் மற்றும் ஜீவா இருவரும் பாடி மாணவர்களை அந்தப் பாடலுக்கேற்ப அசைவுற செய்து ஒரு புதுப் புத்துணர்ச்சி கொடுத்தார்கள் என்றால் மிகையல்ல. நான் மிகவும் ரசித்துக் கேட்டப் பாடல் இது. மேலும் தொடர்ந்து இதுப் போன்ற பல பாடல்களை சகோதரர்கள் இருவரும் பாடி மாணவர்களை புத்துணர்ச்சிப் பெற செய்தனர். நிகழ்வின் வெற்றியில் இந்த இரு சகோதரர்களுக்கும் நிச்சயம் பங்குண்டு. அடுத்ததாக நிகழ்வின் இறுதியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. Dr. அம்ப்ரோஸ் சான்றிதல்களை வழங்கி நிறைவுரை ஆற்றினார். நிகழ்வில் ஆசிரியர்களுக்கு தனியாக பேராசியர் சின்னப்பன் தகவல் தொடர்பியல் தொடர்பாக விளக்கங்கள் அளித்தார். இந்த நிகழ்வில் கல்லூரி நாட்டு நலப் பணி திட்டக் குழுவினர், விஜய், பிரேம், கவிதா, தமயந்தி, சோபியா, ராஜ் ஆகியோர் உறுதுணையாக இருந்தனர். இப்படியான ஒரு நிகழ்வை பள்ளி மாணவர்களிடையே நடத்தியது நிச்சயம் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி. அந்த வகையில் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த ஆயர் திரு. லியோ டொமினிக் அவர்களுக்கு நன்றிகள் பல. தமிழ் ஸ்டுடியோ.காம் தொடர்ந்து இதுப் போன்ற பயிற்சி அரங்குகளை அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் நடத்தும் திட்டத்தில் உள்ளது. |
Wednesday, January 5, 2011
செங்கைக் கலைத்தொடர்பு நிலையம் (Chengai Commision for Communication, Diocese of Chengalpattu) மற்றும் தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய கட்-கட் 2011 குறும்படப் பயிற்சிப் பாசறை
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
good effort all the best
Post a Comment