Friday, January 21, 2011

தமிழ்ஸ்டுடியோ.காம் நடத்திய 12வது பௌர்ணமி இரவு



தமிழ்ஸ்டுடியோ.காம் நடத்திய 12வது பௌர்ணமி இரவு

(12th Full Moon Day Film Screening)


அடலேறு19-01-2011


பால்ய வயது நியாபங்கள் எப்போதுமே மனதை லயிப்பிற்குள்ளாக்குபவை. நகரத்தின் இத்தனை சுகங்களை அனுபவித்து விட்டாலும் கிராமம் இன்னும் ஈர்த்துக்கொண்டே இருக்கிறது. எங்கள் ஊரிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமம் வீதம்பட்டி. அங்கே நடக்கும் கோயில் திருவிழா பிரசித்தமானது. திருவிழாவின் போது நடத்தும் தெருக்கூத்து, நாட்டியம் இவைகளுக்காகவே திருவிழா சென்ற நாட்கள் அவை.

இரவு பத்து மணிக்கு ஆரம்பித்து விடிய விடிய நடக்கும், புழுதி படிந்த கால்களுடன் அவர்கள் ஆடிய நடனமும், வண்ண விளக்குகளால் நிறைந்த அந்த மைதானமும் இன்னமும் கண்முன்னாடியே இருக்கிறது. பள்ளி தோழிகளை பள்ளியை தவிர வெளியே காண்பது திருவிழாக்களில் மட்டும் தான்.இரவில் ஒளிரும் பல்பு வெளிச்சத்தில் அவர்கள் காட்டும் நமுட்டுச்சிரிப்பு அத்தனை வசீகரமானது.

இரவு முழுக்க கூத்து,கரகாட்டம் என‌ பாத்துவிட்டு நடந்தே ஊர் வந்து சேருவோம். அங்கு நடனம் ஆடிய பெண்கள் தான் எங்களை பொருத்தவரை ஆகச்சிறந்த அழகு . அதில் நடனமாடிய ஒருவரை மையில்கல் என்ற ஊரில் ஐந்து வருடங்களுக்கு பிறகு சந்தித்தேன். எங்கள் கிராமம், கோயிலின் பெயர், அமைப்பு என அனைத்தையும் சொல்லி நியாபகப்படித்தினேன்.

மிக சந்தோஷத்துடன் டீ குடிக்கிறயா என்றார். அவரால் என்னை நம்பவே முடியவில்லை உண்மையிலேயே தன்னை அடையாளம் தெரிந்ததா என்றார். தான் எப்படி ஆடினேன், எல்லோரும் என்ன சொன்னார்கள் என கேட்டுக்கொண்டே இருந்தார். அவர் ஆடியது ஐந்து வருடத்திற்கு முன்பு, சிலவற்றை மட்டுமே என்னால் நியாபகப்படுத்த முடிந்தது. வேட்டியில் வைத்திருந்த ஒரு கசங்கிய பத்து ருபாய் நோட்டை டீகாரனிடம் கொடுத்தார். தலையை குனிந்து கொண்டு நீண்ட நேரம் அமைதியாக இருந்தார். நான் அவரின் உதடுகளையே கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தேன். அவைகள் ஏதோ முணுமுணுத்தபடி இருந்தன‌. சிறிது நேரம் கழித்து இப்போதெல்லாம் கூத்திற்கு யாரும் கூப்பிடுவதில்லை என்று வருத்தப்பட்டார். "கிருஷ்ணா காலேஜ் கட்டறாங்கல்ல அங்க தான் வேலைக்கு இருக்க" என்றார்.சிறிது நேரம் என்னையே பார்த்துக்கொண்டிருந்தவர், என்னிடம் எதுமே சொல்லிக்கொள்ளாமல் வீதியில் இறங்கி நடந்து போய்விட்டார்.

கூடு தமிழ்ஸ்டுடியோ நடத்திய பெளர்ணமி இரவு நிகழ்ச்சியில் நேற்றிரவு கலந்து கொண்டேன். அமைதியான மொட்டை மாடி, நடுவில் புல் தரை சுற்றிலும் பூக்கள் செடிகள் என அழகாக இருந்தது. பவா செல்லத்துரை எழுதிய ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍கதையை மையமாக வைத்து இயக்குனர் கருணாவால் எடுக்கப்பட்ட குறும்படம் தான் இந்த ஏழுமலை ஜமா.

அவர் அன்று சொல்லிக்கொள்ளாமல் சென்றதன் வலியை இந்த குறும்படம் பார்த்த பின் தான் உணர்ந்தேன். சிறு வயதில் நான் பார்த்த கூத்து அதன் பின்னாடி எத்தனை மனிதர்கள் , எத்தனை வாழ்வியல் கூறுபாடுகள் இருந்திருக்கும் என நினைக்க வைத்தது.கூத்தும், கரகாட்டமும், புழுதி படிந்த கால்கள் த‌ந்த சந்தோஷ மனநிலை அதன் பிறகு கிட்டவே இல்லை.

தெருக்கூத்து க‌லைஞ‌ர்க‌ளின் அகஉல‌க‌ம், வாழ‌விய‌ல்,ஆளுமை, வாழ‌க்கைமுறை ஆகியவைகளை பற்றிய ஒரு நுண்ணிய ஆவனம் இந்த “எழுமலை ஜமா” குறும்படம். சினிமா என்ற மாற்று ஊடகத்தால் தெருக்கூத்தின் அழிவையும் அதன் பின்னான கலைஞர்களின் வாழக்கையையும் இந்த குறும்படம் மிக தெளிவாக காட்சிப்படுத்துகிறது.

”தனக்தாஹ் தனக்தாஹ்” என ஒரு பாடல் பின்னனியாக வந்து கொண்டே இருந்தது. மனதை என்னமோ செய்தது அதன் இசையும் அதன் பின்னான சொல்லப்படாத வலியும். ஆரம்ப காட்சியில் இருந்தே மிக இனக்காமன படத்தை பார்த்துக்கொண்டிருப்பதாக உணர்தேன். அதில் இடம்பெற்ற கூத்து எத்தனை நாட்கள் படமாக்க பட்டிருக்கும் என நினைத்துக்கொண்டேன். மிக நுண்ணியமாக காட்சியமைப்பு, பின்னனி இசை , கலைஞர்கள் என அத்தனையிலும் தமிழரின் ஆதிக்கலையை அழகாக காட்டியிருந்தார்கள்.

தெருக்கூத்து ஆடுபவர்களின் தலைவனை வாத்தியாரே என்று கூப்பிடுகிறார்கள். முதல் காட்சி வாத்தியார் பெங்களூர் ரயில் நிலையம் வருவதிலிருந்து ஆரம்பிக்கப்படுகிறது. அதன் பின் அவர் வருவதற்கான காரணம், தெருக்கூத்தின் அழகு,நிராகரிக்கப்படுதலின் வலி என நுட்பமாக காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளது.

ம‌ன‌திற்கு நெருக்க‌மான‌ ப‌டங்களை பார்க்கும் தருணங்கள் அழகானது. கூத்தும், அத‌ன் பின்னான‌ ந‌ம் வ‌ர‌லாறும், வாழ்க்கையையும் அழ‌காக‌ ப‌ட‌ம் பிடித்துள்ளார்க‌ள். வார்த்தைக‌ள‌ற்ற‌ உண‌ர்ச்சி வெளிப்பாடுக‌ளை காட்டும் போது அனைவரின் மத்தியிலும் க‌ண‌த்த‌ மெள‌ன‌ம் நில‌விய‌து.

நாற்பது நிமிடம் ஓடக்கூடிய இந்த படம் முடிவடைந்ததும் கலந்துரையாடல். ப‌ட‌த்தில் இருக்கும் குறைக‌ளை ப‌ற்றி ம‌ட்டுமே நான் பேசுவேன் என‌ எழுந்த‌ ஒருவர் படத்தை பற்றி அதன் அழகுணர்ச்சி பற்றியும் சிலாகித்தார். குறைகளை கடந்து ரசிக்க வேண்டிய குறும்படம் இது. தெருக்கூத்தினை ஆவனப்படுத்துவதில் இந்த குறும்படம் ஒரு முக்கிய இடத்தை பெரும். எந்த வித சலனமும் இல்லாமல் நூற்றாண்டின் கலையை தொலைத்துவிட்டு அமைதியாக இருக்கிறோம் என்ற வலி இருந்துகொண்டே இருந்தது.

படத்தை பற்றி நான், பாத்தீமாபாபு, மற்றும் நான்கு நண்பர்கள் பேசினோம்.கலந்துரையாடலில் பாத்தீமா பாபு “ ஒரு நிமிடம் கூட கண்ணை இமைக்க முடியாமல் கட்டிப்போட்ட படம்” என்றார். நான் படத்தின் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்கள் பற்றி குறிப்பிட்டேன், பின்னாடி வந்த நண்பர் ஆவணப்படுத்தப்படுதலின் முக்கியத்துவத்தை பற்றி பேசினார். அதன் பின் வந்தவர் உணர்ச்சிவயப்பட்டவராக கதையை பற்றி சொல்லி சென்றார்.

கலந்துரையாடல் முடிந்த பிற‌கு நிலாச்சோறு. பெளர்ணமி நிலாவை பார்த்துக்கொண்டே மொட்டைமாடியில் வட்டமாய் அமர்ந்து உணவருந்தினோம். நிறைய நண்பர்கள் வந்திருந்தனர். மனதிற்கு பிடித்த படம், மொட்டை மாடி,நெருக்கமான நண்பர்கள், உணவு, புல்தரை என‌ சென்னையின் இரவும் மிக அழகானதாக இருந்தது.

நிகழ்வு தொடர்பாக மேலும் ஒளிப்படங்களைக் காண:

http://picasaweb.google.com/thamizhstudio/1219012011#



No comments:

Post a Comment