Friday, August 20, 2010

லெனின் விருது துவக்க விழா - 2010

படத்தொகுப்பாளர்-இயக்குனர் பீ.லெனின் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், அவர்களின் பெயரில் குறும்பட துறையில் செயல்படுபவர்களுக்கு "லெனின்" விருது துவக்க விழாவும் 15.08.2010 அன்று நடைபெற்றது. இந்த விருதை தமிழ் ஸ்டியோ.காம் வழங்குகிறது. லெனின் விருது துவக்க விழா 15.08.2010 (லெனின் பிறந்த நாள்) அன்று சென்னை இக்சா மையத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் ஜனநாதன், நடிகர் பாரதிமணி, கவிஞர் மதுமிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதல் நிகழ்வாக படத்தொகுப்பாளர் பீ.லெனின் இயக்கிய நாக் அவுட், குற்றவாளி (Culprit) ஆகிய இரு குறும்படங்கள் திரையிடப்பட்டன.

நாக் அவுட் குறும்படத்திற்கான சிறந்த இயக்குனர், குற்றவாளி குறும்படத்திற்கான சிறந்த படத்தொகுப்பாளர் என்ற பிரிவுகளில் பீ.லெனின் தேசிய விருது பெற்றுள்ளார்.

சிறப்பு விருந்தினர்களையும் குறும்பட ஆர்வலர்களையும் தமிழ் ஸ்டியோ குணா வரவேற்று பேசினார்.

குறும்பட இயக்குனர் பத்மநாபன் படத்தொகுப்பாளர் பீ லெனின் அவர்களில் வாழ்க்கை குறிப்பை வாசித்தார்.

குறும்பட இயக்குனர் யாழ்நிலவன்

லெனின் விருது தொடக்க விழாவினை கொண்டாடும் விதமாக குறும்பட திருவிழா சென்னை கோடம்பாக்கம் தமிழ் ஸ்டுடியோ அலுவலக மாடியில் மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை, 7.8.10 சனி முதல் 13.8.10 வெள்ளி வரை ஏழு நாட்கள் நடைபெற்றன.

சிறுகதைகளை அடிப்படையாக கொண்ட குறும்படங்கள் என்ற பிரிவில் செவ்ளி, கர்ணமோட்சம், நடந்த கதை, திற, கழுவேற்றம் ஆகிய குறும்படங்கள் திரையிடப்பட்டன.

ஆவணப் படங்கள் பிரிவில் கல் மனிதர்கள், சிட்டு ஆகிய இரு ஆவணப்படங்களும், பொது பிரிவில் செத்தாழை, கம்மாயில் கல்லு, இப்ப வருந்தி என்ன பயன், எச்சில் மனிதர்கள், நானும் என் விக்கியும் ஆகிய குறும்படங்களும்,

பிறமொழி குறம்பட பிரிவில் ரெட் பலூன் குறும்படமும்,

ஈழப்படங்கள் என்ற பிரிவில் என் வீட்டு முற்றத்தில் ஒரு மாமரம் என்ற குறும்படமும், முல்லை தீவு (படுகொலையின் கதை) என்ற ஆவணப் படமும் திரையிடப்பட்டன.

கடைசி நாள் விழா நாயகர் லெனின் அவர்கள் இயக்கிய தேசிய விருது பற்றிய படங்களான நாக் அவுட்டும், ஊருக்கு நூறு பேர் -ம் திரையிடப்பட்டன.

நகைச்சுவை குறும்படங்கள் என்ற பிரிவில் திரையிட திட்டமிட்டிருந்த படங்கள் தவிர்க்க முடியாத காரணங்களால் திரையிட முடியாமல் போய் விட்டது.

பெரும்பாலும் திரையிடப்பட்ட குறும்படங்களின் இயக்குனர்கள் விழாவில் கலந்து கொண்டு தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டனர்.

இக்குறும்பட திரையிடல் திருவிழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக ஒளிப்பதிவாளர் செழியன், ஆவணப்பட இயக்குனர் ஆர் ஆர் சீனிவாசன், திரைப்பட கல்லூரி பேராசிரியர் ரவிராஜ், இயக்குனர் தேவராஜ், எழுத்தாளர் அஜயன் பாலா, நடிகர் பாரதிமணி, இயக்குனர் ராசி, அழகப்பன், கவிஞர் மதுமிதா ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் மறுபடியும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

நடிகர் தயாளன் லெனின் விருது துவக்க விழாவிற்கு வருகை புரிந்து சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.


கவிஞர் மதுமிதா

தான் பார்த்த லெனின் குறும்படங்கள் குறித்த தன் எண்ணங்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக கவிதை துறையில் சொல்லுவார்கள் நாங்கள் பாரதியின் தோள் மீது அமர்ந்து கவிதை எழுதுகிறோம் என்று, அதுபோல குறும்பட துறையினர் படத்தொகுப்பாளர் லெனின் தோள் மீது அமர்ந்து தங்கள் படைப்புகளை உருவாக்குகிறார்கள் என்று சொல்லும் அளவுக்கு படத்தொகுப்பாளர் லெனின் சினிமாவுக்கு சிறப்பான பங்களிப்பை செய்துள்ளார் எனக் கூறினார். மேலும் இதனை இந்த நிகழ்வை ஒரு வரலாற்று சிறப்பு மிக்க விழா என்று புகழாரம் சூட்டினார்.

நடிகர் பாரதிமணி

எனக்கு எடிட்டர்/இயக்குநர் பீம்சிங் லெனின் அவர்களை பத்துவருடங்களாகத்தான் தெரியும். 2000-ம் ஆண்டில், பாரதி படத்தில் சாயாஜி ஷிண்டேக்கு தமிழ் வசனங்கள் சொல்லிக்கொடுக்கும் உதவி இயக்குநராகவும், பாரதியின் தந்தையாகவும் பணியாற்றிவிட்டு, படப்பிடிப்பு முடிந்தவுடன் நான் தில்லி திரும்பிவிட்டேன். டப்பிங்கின் போது, படத்தில் பாரதியின் தந்தை பாத்திரத்தின் வசனங்களைப்பேசுவதற்கு, என்னை தில்லியிலிருந்து வரவழைத்தால், செலவு அதிகமாகுமென்று கருதி, சென்னை டப்பிங் கலைஞரைக்கொண்டே பேசச்செய்துவிடலாம் என்று இயக்குநர் விரும்பினார். பத்துக்கும் மேலான கலைஞர்களை பேசச்சொல்லியும் திருப்தியடையாத எடிட்டர் லெனின், ‘இவருக்கு மற்றவர்கள் டப்பிங் பேசுவது சிரமம். சங்கீத பாஷையில் சொன்னால், இவர் ஆரம்பிக்கும்போது, ஒரு இடம் தள்ளி எடுத்துவிட்டு, முடிக்கும்போது, சரியாக சமத்தில் முடிக்கிறார். தேர்ந்த


மேலும் : http://thamizhstudio.com/shortfilm_guidance_awards_1.php

Thursday, August 19, 2010

பாராட்டுவிழாவுக்கு வராத நாயகன் -- நான் அறிந்த லெனின்!

பாராட்டுவிழாவுக்கு வராத நாயகன் -- நான் அறிந்த லெனின்!

பாரதி மணிbharatimani90@gmail.com

கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி எனக்கு மகிழ்வான நாள். தமிழ்ஸ்டுடியோ.காம் அமைப்பினர், அருண்-குணா முயற்சியில் நண்பர் எடிட்டர் லெனினுக்கு வாழ்நாள் சாதனை விழாவும், அதையொட்டி வருடம்தோறும் அவர் பெயரில் தமிழ்க்குறும்படங்களுக்கான விருதுவிழாவும் விழாநாயகன் எடிட்டர் லெனின் வராமலே இனிது நடந்தேறியது! அவர் வராமலேயே அவருக்காக கேக் வெட்டி, ‘Happy Birthday to you….Lenin!’ என்று பாடி நாங்கள் கொண்டாடினோம். 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் நள்ளிரவில் தில்லி பாராளுமன்றத்தில் பிரதமர் நேருஜி ‘Long years ago……’ என்று முழக்கமிட்ட நாளில் பீம்சிங்கின் மனைவி சோனாபாய்க்கு இரண்டாவது மகனாக பிறந்தவர் இவர். தன் பெயரில் தமிழ்க்குறும்படங்களுக்கு ஒரு விருது கொடுக்கப்போகிறார்களென்பதை அறிந்த லெனின், அருணைக்கூப்பிட்டு, ‘இத்துறையில் எத்தனையோ ஜாம்பவான்கள் இங்கே இருக்கும்போது, என் பெயர் தான் உங்களுக்குக்கிடைத்ததா? எனக்குமுன்னால், எம்.எஸ். மணி – (இவர் தன் பெயரை Money என்று எழுதுவார்) – போன்றவர்கள் இருந்திருக்கிறார்கள். சத்யஜித் ரே பெயர் உங்கள் ஞாபகத்துக்கு வரவில்லையா? என்னாலானதை நான் செய்துகொண்டிருக்கிறேன். என்னை விட்டுவிடுங்கள்’ என்று சொல்லி விரட்டிவிட்டார்.

அருண் எனக்கு போன் பண்ணி, ‘சார்ட்டெ நீங்க சொல்லணும்!’ என்று கேட்டுக்கொண்டார். லெனினை ஓரளவு தெரிந்த நான் என் பேச்சு எடுபடாது என்று தெரிந்தும், ‘லெனின் சார், உங்களுடைய Sense of Values –ஐ நான் மதிக்கிறேன். ஆராதிக்கிறேன். ஆனாலும் ஒரு வயதுக்குமேல் நமக்கு ஓரளவு Sense of Proportion-ம் தேவையாக இருக்கிறது. அறுபது வயதானபின் நம் குழந்தைகள் ஆசைப்படுகிறார்களென்ற ஒரே காரணத்துக்காக, நமக்கு விருப்பமில்லாவிட்டாலும், திருக்கடையூர் கோவிலில் உட்கார்த்தி வைக்கப்பட்டு, குடம் குடமாக தண்ணீர் அபிஷேகம் செய்துகொள்வதில்லையா? அதிலும் ஒரு சந்தோஷமிருக்கிறது. அரசியலில் உங்கள் வயதே ஆன சுதந்திர இந்தியா எத்தனை சமரசங்களுக்கு உட்பட்டிருக்கிறது? நமக்கெல்லாம் விழாவெடுக்க யாரும் க்யூவில் காத்துக்கொண்டிருப்பதில்லை. இந்த விழா நீங்கள் சொல்லி ஏற்பாடு செய்ததல்ல. மற்றவர்கள் மகிழ்வுக்காக கொஞ்சம் விட்டுக்கொடுங்களேன்!’ என்று கேட்டுக்கொண்டேன். இந்த விழாவுக்கு இருதினங்கள் முன்பு தமிழ்ஸ்டுடியோ.காம் ஏற்பாடு செய்திருந்த லெனின் குறும்படங்களின் திரையிடலின்போதும், அருணிடம், ‘ஞாயிற்றுக்கிழமை விழாவுக்கு லெனின் வராவிட்டால், நான் ஆச்சரியப்படமாடேன்’ என்று சொன்னேன்.


read more : http://thamizhstudio.com/others_article_7.php




Thursday, August 5, 2010

ச. தமிழ்செல்வன் பங்கேற்ற கேணி இலக்கிய சந்திப்பு

ச. தமிழ்செல்வன் பங்கேற்ற கேணி இலக்கிய சந்திப்பு


கேணி அமைப்பின் 11வது மாத இலக்கியக் கூட்டம் 11.04.2010 அன்று நடைபெற்றது.

பத்திரிகையாளர் ஞாநி, அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மேலும் "எழுத்தாளர் அசோகமித்ரன் எனது மூத்த நண்பர். தமிழ் செல்வன் என் சகவயது நண்பர். அவர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. சமூகப் பிரச்சினை, கலாச்சார பிரச்சினை, தொழிலாளர் பிரச்சினை என பல துறைகள் பற்றியும் கருத்து சொல்பவர். தன் கருத்துக்களை கட்டுரைகளாகவும் எழுதுபவர். இவை எல்லாம் விட அவர் ஒரு களப் பணியாளராகவும் உள்ளார். பெரும்பாலும் பயணம் செய்து கொண்டே இருப்பவர். அறிவொளி இயக்க அனுபவங்களையும், தொழிற்சங்க அனுபவங்களையும் நூலாக எழுதியுள்ளார். இவர் களப் பணியாளராக இருப்பதனால் புனைவுகள் எழுத முடியாமல் போகிறது. "என் வாழ்க்கை என் எழுத்து" என்ற தலைப்பில் நம்மோடு உரையாடுவார் பிறகு நாம் அவரோடு விவாதிக்கலாம் என கூறி ஞாநி தொடக்க உரையை நிறைவு செய்தார்.

ச. தமிழ்செல்வன்

எதை நாம் முக்கியம் எனக் கருதுகிறோமோ அதை நம்மால் செய்து முடிக்க முடியும். ஒரு காலத்தில் கதை எழுதுவது முக்கியம் என கருதியதால் கதைகள் எழுதினேன். "வெயிலோடு போய்" என்ற என் முதல் சிறுகதை தொகுப்பு வெளிவந்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் இரண்டாவது கதைத் தொகுப்பு வந்தது. நான் 33 ஆண்டுகளில் 32 சிறுகதைகளை மட்டுமே எழுதியுள்ளேன். வருடத்திற்கு ஒரு சிறுகதை கூட வெளிவரவில்லை.

என் அப்பா வழி தாத்தா தலையாரியாக வேலை பார்த்தார். என் அம்மா வழி தாத்தா மதுரகவி பாஸ்கரதாஸ் நாடகக்காரர். என் அப்பா எழுத்தாளர். தீவிர தி.மு.க. அனுதாபி. எங்கள் வீடு நிறைய புத்தகங்கள் இருக்கும். எங்கள் சிறுவயதில் புத்தகங்கள் மீதுதான் விளையாடுவோம். எங்கள் அப்பா வேலை மாறுதல் காரணமாக பல இடங்களுக்கு மாறிக் கொண்டு இருந்ததனால் எங்கள் அத்தைதான் எங்களை வளர்த்தார். அவர் ஒரு விதவை. தன் வாழ்க்கையை எங்களிடம் கதைகதையாகச் சொல்லுவார். நான் ஆறாவது படிக்கும்போதே எழுத ஆரம்பித்து விட்டேன். நான் எழுத்தாளனாக மாறியதில் வியப்பு ஏதுமில்லை. முதல் தலைமுறை படிப்பாளிகள் படைப்பாளியாக மாறுவதுதான் சாதனை என நினைக்கிறேன்.


ச. தமிழ்செல்வன் பங்கேற்ற கேணி நிகழ்வை ஒலி வடிவில் கேட்க

http://koodu.thamizhstudio.com/ilakkiyam_seithigal_keni11.php



Monday, August 2, 2010

லெனின் விருது - குறும்படத் திருவிழா!!




லெனின் விருது

படத்தொகுப்பாளர் பி. லெனின் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா
மற்றும்"லெனின் விருது" துவக்க விழாவை முன்னிட்டு நடைபெறும் குறும்படத் திருவிழா!!

படத்தொகுப்பாளர் பி. லெனின் அவர்களுக்கு தமிழ் ஸ்டுடியோ.காம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா மற்றும் லெனின் அவர்கள் பெயரில் அடுத்த வருடம் முதல் குறும்படத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் "லெனின்" விருது துவக்க விழாவை முன்னிட்டும், லெனின் அவர்களின் பிறந்த நாளான ஆகஸ்ட் 15 ஐ உலகத் தமிழ் குறும்பட தினமாக தமிழ் ஸ்டுடியோ.காம் அறிவிக்கவிருப்பதை முன்னிட்டும், எதிர் வரும் ஆகஸ்ட் 7 முதல் 13 வரை தொடர்ந்து ஏழு நாட்கள் குறும்படங்கள் திரையிடல் திருவிழா நடைபெறும். இதில் ஆர்வலர்கள் அனைவரும் பங்கேற்று பயன்பெறலாம். அனுமதி இலவசம்.

நிகழ்வின் மேலும் சிறப்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகைப்பாட்டின் கீழ் குறும்படங்கள் திரையிடப்படுகிறது.

அதன் விபரம்:

ஆகஸ்ட் 07, 2010, சனிக்கிழமை மாலை ஏழு மணிக்கு:

வகைப்பாடு: சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட குறும்படங்கள் திரையிடல்
சிறப்பு விருந்தினர்: திரைப்பட ஒளிப்பதிவாளர் திரு. செழியன். (கல்லூரி, ரெட்டை சுழி)

ஆகஸ்ட் 08, 2010, ஞாயிற்றுக்கிழமை மாலை ஏழு மணிக்கு:

வகைப்பாடு: ஆவணப்படங்கள் திரையிடல்
சிறப்பு விருந்தினர்: ஆவணப்பட இயக்குனர் திரு. ஆர். ஆர். சீனிவாசன் (என் பெயர் பாலாறு)

ஆகஸ்ட் 09, 2010, திங்கள்கிழமை மாலை ஏழு மணிக்கு:

வகைப்பாடு: நகைச்சுவைக் குறும்படங்கள்
சிறப்பு விருந்தினர்: தொலைகாட்சி நகைச்சுவை எழுத்தாளர் திரு. பழனி (சின்ன பாப்பா, பெரிய பாப்பா)

ஆகஸ்ட் 10, 2010, செவ்வாய்க்கிழமை மாலை ஏழு மணிக்கு:

வகைப்பாடு: பொதுவான குறும்படங்கள்
சிறப்பு விருந்தினர்: அரசு திரைப்படக் கல்லூரி பேராசிரியர் திரு. ரவிராஜ்

ஆகஸ்ட் 11, 2010, புதன்கிழமை மாலை ஏழு மணிக்கு:

வகைப்பாடு: மாற்று மொழிக் குறும்படங்கள்
சிறப்பு விருந்தினர்: பிரசாத் திரைப்படக் கல்லூரி முதல்வர் திரு. ஹரிஹரன்

ஆகஸ்ட் 12, 2010, வியாழக்கிழமை மாலை ஏழு மணிக்கு:

வகைப்பாடு: ஈழம் சார்ந்து எடுக்கப்பட்ட குறும்படங்கள்
சிறப்பு விருந்தினர்: எழுத்தாளர், நடிகர் அஜயன் பாலா

ஆகஸ்ட் 13, 2010, வெள்ளிக்கிழமை மாலை ஏழு மணிக்கு:

வகைப்பாடு: எடிட்டர் லெனின் அவர்கள் இயக்கிய குறும்படங்கள்
சிறப்பு விருந்தினர்: எடிட்டர். திரு. பி. லெனின்

திரையிடப்படும் குறும்படங்கள் பற்றிய விபரங்கள் விரைவில்...

திரையிடல் நடைபெறும் இடம்:
எண். 41, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024





Sunday, August 1, 2010

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் (5)

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் (5)

வெங்கட் சுவாமிநாதன்

தமிழ் சினிமாவின் சுமார் 80 வருட சரித்திரத்தில், அது தந்துள்ள சினிமா குப்பை குவியலில் சினிமா என்று சொல்லக்கூடியது ஒன்று கூட இல்லை யென்றும், ஐம்பது வருடங்களுக்கு முன் நான் பார்த்த பழைய படங்களின் சில காட்சிகளைச் சுட்டிக் காட்டி, இம்மாதிரியான காட்சிகள் நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அன்றாடம் நிகழ்ந்த போதிலும், அவற்றுடனே நாம் வாழ்ந்து வந்த போதிலும், அத்தகைய காட்சிகளை நம் தமிழ் சினிமாவில் காண்பதற்கில்லை என்று நான் சொன்னதும், அன்பர்கள் சிலருக்கு வருத்தமும், சிலருக்கு கோபமும், இன்னம் சிலருக்கு ஏதோ நான் தமிழனை, தமிழ் சினிமாவைத் தாழ்த்திக் கேவலப் படுத்துவதற்கே எழுதுவது போலும், அவர்கள் தமிழ் ரத்தம் கொதிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ் ரசனைக்கேற்ற படங்கள் தான் என்று அவர்கள் உரத்துச் சொல்கிறார்கள். வேறொரு இணையத்தில் ஒரு பட்டியலையே கொடுத்து இவையெல்லாம் சிறந்த படங்கள் என்று என் முன் வைத்திருக்கிறார்கள். அந்தப் பட்டியல் இதோ:

சந்தியா ராகம்
வீடு
உன்னைப் போல் ஒருவன்
உதிரிப் பூக்கள்
முள்ளும் மலரும்
உச்சி வெயில்
சில நேரங்களில் சில மனிதர்கள்
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
அவள் அப்படித்தான்
அழியாத கோலங்கள்
கண் சிவந்தால் மண் சிவக்கும்
மெட்டி
ராஜ பார்வை
மகா நதி
குணா
அந்த நாள்
முதல் மரியாதை
ஹே ராம்
ஒருத்தி
நாயகன்
மொழி
சுப்பிரமணியபுரம்
சென்னை 28
ஆயுத எழுத்து
வெயில்
புதுப்பேட்டை
பருத்திவீரன்
அஞ்சாதே
நண்பா நண்பா
இரண்டு பேர் வானத்தைப் பார்க்கிறார்கள்
சங்க நாதம்
அக்ரஹாரத்தில் கழுதை
விருமாண்டி


இவையெல்லாம் நல்ல தமிழ் படங்கள் இல்லையா என்று கேள்விகள் எழுந்துள்ளன. இந்த படங்களின் பட்டியல், 32 Best Tamil Movies – Best Arthouse films – 10 Hot – ல் கொடுக்கப்பட்டுள்ளது போக இன்னும் சில சேர்க்கப்பட்டுள்ளன, அன்பர்களால்.

கேட்க வேண்டிய கேள்விதான். இந்தப் பட்டியலும் சர்ச்சைக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய ஒன்று தான். இப்பட்டியலுக்கும் கேள்விகளுக்கும் பதில் அளித்தே ஆகவேண்டும்.

முதலில் எனக்குத் தோன்றுவது கவனமாகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் பட்டியலில், மோகமுள், பாரதி, பெரியார் போன்ற படங்களை இயக்கிய ஞான ராஜசேகரனின் படங்களோ, கிராமத்து மண் வாசனையைத் தன் படங்களில் கொணர்ந்தவராக, ஸ்டுடியோவை விட்டு கிராமத்துக்குக் காமிராவை எடுத்துச் சென்ற பெருமை படைத்தவராகப் பாராட்டப்படும் பாரதி ராஜாவின் படங்களோ (ஒன்றைத் தவிர) ஏன் இடம் பெறவில்லை என்று எனக்கு யோசிக்கத் தோன்றுகிறது. இவர்களை ஒதுக்கும் என் காரணங்களும் பார்வையும் வேறு. ஆனால் மேற்கண்ட பட்டியலைத் தயாரிக்க ஐம்பது வருடங்கள், உன்னைப் போல் ஒருவனைத் தொட (1963 அல்லது 1964 என்று நினைக்கிறேன்) பின்னோக்கிச் சென்றவருக்கு ஞான ராஜ சேகரனையும் பாரதி ராஜாவையும் சேர்க்கத் தோன்றவில்லையே, ஏன்?

இப்பட்டியலில் காணும் பல படங்கள் வித்தியாசமானவை, வழக்கமான தமிழ்ப் படங்களிலிருந்து விலகி வேறு தடத்தில் பயணிக்கவேண்டும் என்ற எண்ணமும் முயற்சியும் காணும் படங்கள் தான் என்பது எனக்குத் தெரியும். அனேகம் படங்கள் வேறு தடத்தில் பயணிப்பதாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் செயல்பாடுமே கொண்ட படங்களும் உண்டு. உதாரணமாக, கமல ஹாஸனின் படங்கள் அத்தனையும். இனி வரப் போவனவற்றையும் சேர்த்து. அவரது ஆளுமை தன் படங்களில் தானே மையமாகவும் தன்னைச் சுற்றியே உலகம் இயங்குவதாகவும் காட்டிக்கொள்ளும் ஆசை கொண்ட ஆளுமை அவரது. ஒவ்வொரு படமும் முந்தையதிலிருந்து வித்தியாசமாக முயற்சிக்கப்பட்டதாகக் காட்டிக்கொள்ளலாம். காட்டிக்கொள்ளலாம் தான். அவ்வளவே.. மையம், அவரே தான். இதெல்லாம் போக, ஒரு படம் அசாதாரண வெற்றி பெற என்னென்ன மசாலாக்கள் இருக்கவேண்டும் என்பது சினிமா உலகில் இப்போதைய கால கட்டத்தில் தீர்மானமாகியுள்ளதோ அவையெல்லாம் கொண்ட ஒரு தயாரிப்பைத் தான் அவரது வித்தியாசமான படங்களும் தரும். இதையே மணிரத்தினத்திற்கும் சொல்ல வேண்டும். இவையெல்லாம் சினிமாவே அல்ல. இவை எதுவும் சினிமா என்ற கலை சார்ந்தவை அல்ல. சினிமா என்ற சூதாட்டமாகிப்போன வியாபாரம் சார்ந்தவை.

கமலஹாஸன் நல்ல நடிப்புத் திறமையுள்ளவர் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். அவரிடம் திறமை மட்டுமே உண்டு. அந்தத் திறமையை அவர் என்றும் ஒரு கலையாக பரிணமிக்க விட்டதில்லை. அவரது திறமையெல்லாம் தன்னைப் பூதாகாரமாக முன்னிறுத்திக்கொள்வதற்கும், அதை முதலீடாக வைத்து, சந்தைக்கான மசாலாக்களையும் சேர்த்து வியாபாரம் செய்யும் வணிகர் தான் அவர். லாவகமாக உடல் வளைத்து ஆடத் தெரிந்தால், ரிக்கார்ட் டான்ஸ் ஆட தேர்ந்துகொள்வது போன்றதே, கமலஹாஸனின் நடிப்புத் திறமை பெற்ற வடிகால். இந்த வணிகத்தில் அவர் கணக்குகள் தவறாகி நஷ்டம் ஏற்பட்டால் அது ஒரு கலைஞனின் புதிய பாதைத் தேர்வில் எதிர்ப்படும் தோல்வி அல்ல. பங்குச் சந்தைக்காரனின் கணக்குகள் தோற்கும் சமாசாரமே அது. இது அவருக்கு மட்டுமலல, சினிமா வர்த்தகம் ஒரு சூதாட்டமாகி இதில் தம் அதிர்ஷ்டத்தைச் சோதிக்க வந்தவர்கள் எல்லோருக்கும் நேர்வது தான். மணி ரத்னத்துக்கும், ரஜனி காந்துக்கும், சங்கருக்கும், நேர்வது தான். எஸ். எஸ். வாசனுக்கும் நேர்ந்தது தான். இயக்குனர் சிகரத்துக்கும் நேர்ந்தது தான். இது கலைத் தோல்வி அல்ல. பங்குச் சந்தையில் சூதாடிக் கிடைத்த தோல்வி. இதில் சாமர்த்தியமாக தான் தப்பித்துக் கொண்டு தயாரிப்பாளர் தலையில் விழச் செய்வதில் தான் நம் உலக நாயகர்கள சூப்பர் ஸ்டார்கள, இளைய தளபதிகள் இத்யாதிகள கவனமாக இருப்பார்கள்.

ஆனால் உண்மையிலேயே இந்த வணிகப் பாதையின் சூதாட்டத்திலிருந்து விலகிசீரிய முயற்சிகள் சில செய்து பார்க்கவேண்டும் என்று துணிந்தவர்கள் என முதலில் ஜெயகாந்தனைச் சொல்வேன். பின் அதைத் தொடர்ந்தவர்கள் என பாலு மகேந்திராவையும், மகேந்திரனையும், ஞான ராஜசேகரனையும் சொல்வேன். இவர்களைப் பற்றி பேசலாம்.


மேலும் படிக்க : http://thamizhstudio.com/others_article_5.php



Friday, July 23, 2010

தமிழ்ஸ்டுடியோ.காம் நடத்தும் ஆறாவது பௌர்ணமி இரவு.


தமிழ்ஸ்டுடியோ.காம் நடத்தும் ஆறாவது பௌர்ணமி இரவு.


ஆதவன்26-06-2010


ஞாயிற்றுக்கிழமை, 25-07-2010

இரவு 08.30 மணிக்கு தொடங்கி, நிகழ்வு முடிய இரவு 01.30 மணி ஆகும். ஆர்வலர்களுக்கு உணவு மற்றும் உறங்குமிடம் முதலியவை ஏற்பாடு செய்யப்படும்.

இடம்: எண். 41, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024 (லிபர்ட்டி திரையரங்கம் எதிரில்)

திரையிடப்படும் படங்கள்:

தமிழில் எடுக்கப்பட்ட குறும்படம்:

முதலாவதாக சிட்டுக்குருவி என்கிற ஆவணப்படம் திரையிடப்படும்.
சிட்டுக்குருவியின் அழிவைப் பற்றி அக்கறையுடன் பேசும் படம்.

உலக அளவில் புகழ் பெற்ற திரைப்படம்: பதேர் பாஞ்சாலி
இயக்கம்: சத்ய ஜித் ரே

இந்தத் திரைப்படம் குறித்து மேலும் அறிந்துக் கொள்ள:

http://www.imdb.com/title/tt0048473/

(குறிப்பு: பௌர்ணமி இரவு நிகழ்வில் யார் வேண்டுமானாலும் கலந்துக் கொள்ளலாம். ஆனால் உணவு மற்றும் உறங்குமிடம் ஏற்பாடு செய்யவேண்டியிருப்பதால் முன் பதிவு செய்துக் கொள்ளவும். முன் பதிவு செய்யாதவர்களுக்கு உறுதியாக அனுமதி கிடையாது.)

முன்பதிவு செய்துக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 9840698236, 9894422268

Tuesday, July 20, 2010

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய முதல் குறுந்திரைப் பயணம் (17-07-2010)

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய முதல் குறுந்திரைப் பயணம் (17-07-2010)
ஆதவன்


தமிழ் ஸ்டுடியோ.காம் தனது பரப்பை விரிவுப் படுத்தவும், பொது மக்கள் மத்தியில் குறும்படங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், குறும்படங்களை வணிக ரீதியாக வெற்றியடைய செய்யவும் ஏற்படுத்தப்பட்டதே தமிழ் ஸ்டுடியோவின் குறுந்திரைப் பயணம். இத்திட்டத்தின்படி தமிழகத்தில் உள்ள எல்லா கிராமங்களிலும் குறும்படங்கள் திரையிடப்பட்டு, அது சார்ந்து நடைபெறும் கலந்துரையாடலில் பொது மக்களையும் பங்கேற்க செய்து, அவர்களுக்கு குறும்படங்கள் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி, பின்னர் படிப்படியாக அந்த கிராமத்தில் உள்ள சிறு திரையரங்கில் குறும்படங்கள் திரையிடப்பட்டு அதில் கிடைக்கும் வருவாயை அதன் தயாரிப்பாளருக்கு கொடுப்பதே இந்தப் பயணத்தின் முதல் குறிக்கோள். நிகழ்வின் முடிவில் அந்த கிராமத்தில் தமிழ் ஸ்டுடியோவின் கிளை ஏற்படுத்தப்பட்டு தொடர்ந்து ஒவ்வொரு மாதமும், இரண்டாம் சனிக்கிழமை குறும்படங்கள் திரையிடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்படும். அந்தப் பகுதியில் இருந்து அதிக அளவில் குறும்பட இயக்குனர்களை வெளிக்கொணரவும் இத்திட்டம் உதவி புரியும்.

இந்த வரிசையில் தமிழ் ஸ்டுடியோவின் முதல் குறுந்திரைப் பயணம் திண்டிவனம் அருகிலுள்ள புலியனூர் கிராமத்தில் கடந்த (17-07-2010) சனிக்கிழமை அன்று நடைபெற்றது.

நண்பர் சிவக்குமாரின் வேண்டுகோளின்படி புலியனூர் கிராமத்தில் குறும்படங்கள் திரையிடுவது என்று முடிவானது. பின்னர் தமிழ் ஸ்டுடியோவின் குறும்பட வட்டத்தில் செயற்குழு உறுப்பினர்களாக இருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. இதில், இதயா, பத்மநாபன், விஜயக்குமார், சதாசிவம், ஐந்தாவது தூண் அமைப்பை சேர்ந்த ஜெய் செல்வா மற்றும் தமிழ் ஸ்டுடியோ நிறுவனர்கள் அருண் & குணா உள்ளிட்ட நண்பர்கள் புறப்படலானோம். நண்பர் பத்மநாபன் தனது மகிழுந்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றுக் கூற அதன் படி அனைவரும் அவரது மகிழுந்தில் பயணப்பட்டோம். சனிக்கிழமை அன்று நாங்கள் புறப்பட்ட நேரம், முதல் காதலியை முத்தமிடும் காதலன் தயங்கி தயங்கி நிற்பது போல், மண்ணை முத்தமிடலாமா வேண்டாமா என மழை தயங்கி தயங்கி நின்றது. பின்னர் சத்தில்லாத முத்தமாக சிறு சிறு தூறல்களை சிந்திக் கொண்டிருந்தது. அச்சிறுப்பாக்கம் தாண்டியது கொஞ்சம் கனமழைப் பொழிய ஆரம்பித்தது. மகிழுந்தை சாலையோரமாக நிறுத்தி ஒரு தேநீர்க் கடையில் அனைவரும் தேநீர்ப் பருகினோம். கிராமம் தானே எப்படியும் தேநீர் சுவையாக இருக்கும் என நினைத்துக் கொண்டிருந்த எங்களுக்கு விழுந்தது பேரிடி. பச்சைத் தண்ணீரில் செங்கல் தூள் கலந்தது போல இருந்து தேநீர். இருந்தாலும் மழைக் கொடுத்த குளிரில் சூட்டை அணைத்தவாறே தேநீர் பருகிவிட்டு புலியனூர் நோக்கி புறப்படலானோம்.

தேசிய நெடுஞ்சாலையில் இருந்து புலியனூர் நோக்கி பிரிந்த சாலையில் மகிழுந்து தன் பாதையை அமைத்துக் கொண்டது. மிகக் குறுகலான சாலைகள், சாலையின் இரு பக்கமும் வயல்வெளிகள், அடர்ந்த மரங்கள், என அந்தப் பாதை மிக ரம்மியமானதாக இருந்தது. சிறு வயதில் மிகவும் ரசித்து சாப்பிட்ட ஈச்ச்சம்பலங்கள் நிறைந்த ஈச்சமரங்கள் மிக அதிகமாக இந்த சாலைகளில் காணப்பட்டது மனதை கொஞ்சம் மயக்கத்தான் செய்தது. தூக்கணாங்குருவிகள் கட்டிய மிக ஆச்சரியமான கூடுகள் அதிக அளவில் தொங்கிக் கொண்டிருந்த பனை மரங்கள் பாதை எங்கும் பதநீர் தெளித்து எங்களை வரவேற்றது தூக்கனாங்குருவிகளின் இசைக் கச்சேரியோடு.

மாலை ஆறுமணியளவில் புலியனூர் கிராமத்தை சென்றடைந்தோம். புலியனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் திரையிடலுக்கான ஏற்பாடுகளை முழு வீச்சில் செய்துக் கொண்டிருந்தார் நண்பர் சிவக்குமார்.

கல்யாண வீட்டில் ஓயாமல் இழவுக் கொட்டிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சி நாடகங்கள் இன்னும் இந்த கிராமத்தை முழுமையாக ஆக்கிரமிக்கவில்லை. பெரும்பாலான வீடுகளில் தொலைக்காட்சி பெட்டியே இல்லை. அதனால் அதிக அளவிலான பொது மக்கள் குறும்படங்களைக் காண வந்திருந்தனர். புலியனூர் கிராமத் தலைவர் முன்னிலையில் குறும்படங்கள் திரையிடல் தொடங்கியது.

சென்னையில் கூட குறும்படங்கள் முடிந்த பின்னர் கைத் தட்டுங்கள் என்று சொன்ன பிறகுதான் கைத் தட்டுவார்கள். ஆனால் இந்தக் கிராம சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொரு குறும்பட முடிவிலும் கரகோஷம் எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். திரையிடல் நிகழ்வு பத்து மணி வரை நடைபெற்றது. சுமார் பதினைந்து குறும்படங்கள் திரையிடப்பட்டது. சுமார் ஒன்பதரை மணியளவில் பெரியவர்கள் தங்கள் வீடு நோக்கி புறப்பட்டனர். சென்றவர்கள் மீண்டும் தங்கள் குழந்தைகளை அழைத்து செல்ல வந்திருந்தனர். ஆனால் சிறுவர்களோ, நீ போ.. நான் அப்புறமா வரேன்.. என்றுக் கூறி அனைத்துக் குறும்படங்களையும் பார்த்தப் பின்னரே வீட்டுக்கு சென்றனர்.

குறும்படங்களின் கதைப் பற்றியும், அதில் இயக்குனர் சொல்ல வந்த கருத்தையும் மிக தெளிவாக இந்தக் கிராம மக்கள் உள்வாங்கிக் கொண்டனர். இந்தக் கிராமத்தில் இனி ஒவ்வொரு மாதமும் குறும்படத் திரையிடல் நடைபெறும்.

குறும்படத் திரையிடல் முடிந்ததும், இரவு உணவை முடித்துக் கொண்டு அனைவரும் உறங்க சென்றோம்.. உறங்க சென்றவர்களுக்கு ஆனந்த அதிர்ச்சி.. உறங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடம் அந்தக் கிராம நூலகம். டால்ஸ்டாய் முதல் தபு சங்கர் வரை அனைத்து எழுத்தாளர்களின் புத்தகங்களும் கிடைக்கப் பெற்ற நூலகமாக இருந்தது அது. கி.ரா.. ஜெயகாந்தன்.. ராமகிருஷ்ணன்..என சகலவிதமான எழுத்தாளர்களும் எங்களுக்கு முன்னரே அங்கு சென்று இடம் பிடித்துக் கொண்டிருந்தது போல இருந்தது. புதிதாக திருமணம் செய்துக் கொண்ட ஆண், முதலிரவில் முதன் முதலில் மனைவியை எங்கே தொடுவது என்று தவிப்பது போல், எந்தப் புத்தகத்தை எடுப்பது, எந்தப் புத்தகத்தை விடுவது என்று எல்லோரும் திணறிக் கொண்டிருந்தனர். பின்னர் ஒருவழியாக அனைவரும் ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு உறக்கத்தை கலைத்து புத்தகங்களுடன் உரையாடிக் கொண்டிருந்தனர்.

விடிந்தது. நீண்ட நாட்களுக்கு பின்னர் வயல்வெளிக்கு இரைக்கும் பம்ப் செட்டிலும், கிணற்றில் நீந்தியும் குளித்த அனுபவம் காலையில் கிடைத்தது. இந்த பம்ப் சேட்டை அடைவதற்கு நாங்க பயணப் பட்ட தூரம் குறைந்தது நான்கு கிலோ மீட்டர்கள் இருக்கும். ஆனால் பாதை முழுவது அரிதான பல பறவைகள் எங்களுடன் பயணப்பட்டது. ஏரி முழுவது வளந்திருந்த புல்வெளிகள், ஈச்சமரங்கள், தேனீக்கள், பெயர் தெரியாத பல பறவைகள் என அந்தப் பாதை கொடுத்த பரவசம் நடந்து சென்ற களைப்பை கலைந்தது.

ஒருத் தேநீர்க் கடைக்கூட இல்லாத கிராமம் இந்தப் புலியனூர் கிராமம். தேநீர் வேண்டுமென்றால் சுமார் ஒன்பது கிலோ மீட்டர்கள் பயணப்பட்டு வெள்ளிமேடுப் பேட்டை சென்றுதான் குடிக்க வேண்டும். தேநீர்ப் பிரியர்களுக்கு மட்டுமே இதுக் குறை..மற்றபடி சென்னைக்கருகே மிக அழகான, அருமையான கிராமம் இந்த புலியநூர் கிராமம்.

குறுந்திரைப் பயணத்தை முடித்துக் கொண்டு ஞாயிறு அன்று செஞ்சி புறப்படத் தயாரானோம். வேல்லிமேடுப் பேட்டை வந்து காலை உணவருந்த நல்ல உணவகம் தேடினோம். ஒரு சிறு உணவகம், ஒரு இட்லி 1.50 மட்டுமே. 600 ரூபாய் பில் வந்திருக்கும் என்று பார்த்தால் 65 ரூபாய் என்று வந்தது. நல்ல காலை உணவாக அமைந்தது. பரிமாரியப் பெண் தேவையறிந்து மிகப் பணிவாக பரிமாறினால். அந்த காலை உணவை இன்னும் ஒரு மாதத்திற்கு மாக்க இயலாது. செஞ்சி நோக்கி புறப்பட்டது மகிழுந்து. பள்ளிக் காலத்தில் ஆசிரியர்களின் அறிவினைக் கொண்டு சுற்றிப் பார்த்த இடம், விபரம் தெரிந்து முதல் முறையாக செல்வதால் உண்மையில் ஒரு பேரானந்தம்.

வேல்லிமேடுப் பேட்டையிலிருந்து செஞ்சி செல்லும் சாலை சிலக் கிலோ மீட்டர்கள் யாரோ சாபம் விட்டது போல் குண்டும் குழியுமாகக் கிடக்கிறது. சாலை செப்பனிடும் பணி நடக்கிறது. எப்படியும் தேர்தல் வரும் முன்னர் முடிந்துவிடும். அதுவும் அங்குள்ள ஓட்டுக்களின் எண்ணிக்கையைப் பொருத்தது. குறைந்த ஓட்டுக்கள் என்றால் முடிய அடுத்த ஐந்து வருடங்கள் ஆகும். சாலை எப்படி இருந்தாலும் அதன் இருமங்கிலும் இருந்த வயல்வெளியில் பெண்கள் களை எடுத்துக் கொண்டிருந்தனர். களை எடுத்த பெண்கள் கலையாக இருந்ததால் சாலை களைப்பை மனம் களை எடுத்துவிட்டது.

செஞ்சியில் முதலில் ராணிக் கோட்டையை சுற்றிப் பார்க்க சென்றோம். விரைவாக கோட்டையின் உச்சியைத் தொட்டுவிடலாம். ஆனால் படிகள் ஏறுவதற்குள் நெஞ்சு வெடித்துவிடும். அவ்வளவு செங்குத்தான படிகள். ஆனால் இராஜாக் கோட்டை உச்சியைத் தொட நேரமாகும். பயணம் இனிமையாக இருக்கும் என்று அங்கிருந்த பெண் ஒருவர் சொன்னார். கோட்டைகளில் கூட பெண்கள் யாரையும் நிம்மதியாக விடுவதில்லை.

நல்ல நல்ல இடங்கள், பொது மக்கள் அதிகம் வராத சுற்றலாத் தளங்கள் அனைத்திலும் காதலர்களின் வருகையும், சில்மிசங்களும் எல்லையைத் தொடும். சித்தன்னவாசல், செஞ்சிக் கோட்டை, என நான் பார்த்த இடங்கள் அனைத்தும் அதற்கு விதிவிலக்கல்ல. சித்தன்ன வாசலில் அறிய ஓவியங்களுக்கிடையில் ரேவதி ஐ லவ் யு ...ராஜா என எழுதியிருக்கும் காதல் கிறுக்கன்கள் செத்தொழிந்தால்தான் இந்த இடங்கள் எல்லாம் உருப்படும். செஞ்சிக் கோட்டை முழுவதும் காதல் கதிதங்கள்.. வாசகங்கள்.. போதாக் குறைக்கு இலவசப் படம் காட்ட நிஜக் காதலர்கள்...இவர்களை காதலர்கள் என்று எப்படி சொல்ல.. 'காம'கோடிகள்.

பின்னர் ராஜா கோட்டையை பார்க்க புறப்பட்டோம். மாலை மூன்று மணி வரைதான் இராஜாக் கோட்டையை பார்க்க அனுமதி.. நாங்கள் சென்றது மாலை நான்கு.. எனவே கோட்டை ஏறாமல் மற்ற இடங்களைப் பார்த்துவிட்டு சென்னை நோக்கி புறப்பட்டோம்.

முதல் குறுந்திரைப் பயணம் வெற்றிகரமாக அமைய காரணமாயிருந்த நண்பர்கள் சிவக்குமார், மகிழுந்து கொடுத்து உதவிய பத்மநாபன், (உண்மையில் மகிழுந்து இல்லையென்றால் பயணம் இத்தகைய சிறப்பாக இருந்திருக்க வாய்ப்பில்லை.) உடன் வந்து உதவிப் புரிந்த விஜயக்குமார், இதயா, சதாசிவம், அனைவர்க்கும் இந்த தமிழ் ஸ்டுடியோ.காம் தன்னுடைய நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.

-------------------------------------------------------------------------------------------------------
தமிழ் ஸ்டுடியோ.காம் முதல் குறுந்திரைப் பயணம்

பொது மக்களை குறும்படங்களும், அதன் பயனும் சென்று சேர வேண்டும், அனைத்து தரப்பினரும் குறும்படம் குறித்த விழிப்புணர்வு வரவேண்டும் என்கிற நோக்கில் தமிழ் ஸ்டுடியோ.காமின் குறுந்திரைப் பயணம் அமையவுள்ளது. இதன்படி, தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும், திறந்த வெளியில் இரவு நேரத்தில் கிராம மக்கள் முன்னிலையில் குறும்படங்கள் / ஆவணப்படங்கள் திரையிடப்படும். பின்னர் அந்தக் குறும்படங்கள் குறித்து பொது மக்களிடம் விவாதங்கள் நடத்தப்படும். நிகழ்வின் இறுதியில் அந்த கிராமத்தில் குறும்படம் சார்ந்த ஒரு இயக்கம் ஏற்படுத்தப்பட்டு தொடர்ந்து குறும்படங்கள் திரையிட ஏற்பாடு செய்யப்படும்.

காரணம்?

அனைத்து தரப்பினரையும் குறும்படங்களின் பயன் சென்று சேரவேண்டும். பொது மக்கள் மத்தியில் குறும்படங்கள் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும், என்பவையே இதன் பிரதான நோக்கமாக இருப்பினும், இதில் குறும்படங்களை வணிக அளவில் வெற்றி பெற செய்யும் நோக்கமும் அடங்கியிருக்கிறது. முதலில் பொது மக்களிடம் குறும்படங்கள் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தினால் பின்னர் அவர்களே குறும்படங்களை தேடித் பார்க்கும் நிலை ஏற்படும். இதன் விளைவாக அந்தக் கிராமங்களில் உள்ள சிறியத் திரையரங்குகளில் குறும்படங்கள் திரையிடப்பட்டு அந்தக் கிராம மக்களிடம் சிறுத் தொகை வசூல் செய்யப்பட்டு, குறும்பட தயாரிப்பாளருக்கும், திரையரங்க உரியமையாளருக்கும் வழங்கப்படும். இத்திட்டம் எட்டாக்கனியாகவே இருந்தாலும் அதனை பரீட்ச்சார்த்த முறையில் செய்துப் பார்க்க தமிழ் ஸ்டுடியோ.காம் முனைந்துள்ளது.

இதன்படி உங்கள் கிராமத்தில் குறும்படங்கள் திரையிட நீங்கள் விரும்பினால் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். 9840698236, 9894422268

குறுந்திரைப் பயணத்தின் முதல் கிராமமாக திண்டிவனத்தில் உள்ள புலியனூரில் எதிர்வரும் சனிக்கிழமை (17-07-2010) குறும்படங்கள் திரையிடப்படுகிறது. புலியனூர் செல்லும் வழி.. திண்டிவனம் --> செஞ்சி பேருந்து நிலையம் --> பேட்டை --> புலியனூர்.

புலியனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் குறும்படங்கள் சனிக்கிழமை மாலை ஏழு மணி முதல் இரவு பத்து மணி வரை திரையிடப்படும். ஆர்வலர்கள் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விபரங்களுக்கு

9840698236, 9894422268