| தமிழ் ஸ்டுடியோ வழங்கும் 'லெனின் விருது'
http://thamizhstudio.com/shortfilm_guidance_awards_2.php | ||
| ஆதவன் | ||
தமிழ் ஸ்டுடியோ ஒவ்வொரு ஆண்டும் படத்தொகுப்பாளர் லெனின் அவர்களின் பெயரில் "லெனின் விருதை" வழங்கி வருகிறது. இவ்விருது தமிழ் குறும்பட / ஆவணப்பட துறையில் இவ்வூடகங்கள் மூலம் மக்கள் எழுச்சி மற்றும் மறுமலர்ச்சிக்கான படைப்பை படைக்கும் கலைஞருக்கு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் 2010 ஆண்டிற்கான லெனின் விருது ஆவணப்பட இயக்குனர் திரு. ஆர். ஆர். சீனிவாசன் அவர்களுக்கு வழங்கப்பட விருக்கிறது. காஞ்சனை சீனிவாசன் என்று பரவலாக இத்துறை சார்ந்த மத்தியில் அறியப்படும் திரு. சீனிவாசன் ‘நதியின் மரணம்’ என்ற தன் முதல் ஆவணப்படத்தின் மூலமாக திரை ஊடகத்தை வெறும் பார்வையாளர் தளத்திலிருந்து, சிந்தனை மற்றும் போராட்டம் என்ற தளத்திற்குக் கொண்டு சென்றவர். காட்சி ஊடகத்தை, தன் தொடர்ச் செயல்பாடுகளின் வழியாக, ‘சமூக ஊடகம்‘ என்ற களப்பணிக்கான ஊடகமாக மாற்றியதில் முதன்மையானவர். அரசியலைப் பிண்ணனியாகக் கொண்டு சமூகக் குரலை முன்வைத்து இயங்குகின்றன அவரது ஆவணப்படங்கள். தொடர்ந்து சாதி ஒழிப்பு என்பது அவரது எல்லா ஆவணப்பட ஆக்கங்களிலும் மையமான சிந்தனையாக இருக்கிறது. சமூக, அதிகாரச் சமரசங்களுக்கு ஆளாகாமல் அடுத்தடுத்த சிந்தனைக் கட்டத்தை நோக்கித் தன்னையும் தன் ஆவணப்படத்தைப் பார்க்கும் பார்வையாளர்களையும் அழைத்துச் செல்லும் ஆற்றல் உடைய காட்சிகளை உடையவை அவரது கேமரா கண்கள். காட்சிகளின் வழியாகப் புதிய சிந்தனையை அளிப்பதில் வல்லவர். எதையும் வலிந்து சொல்லாமல் இயல்பான, உயிரோட்டமான மொழியிலும் நீதியின் குரலிலும் வழங்கக்கூடிய அவரின் ஆவணப்படங்கள் தற்காலச் சமூகத்தின் முத்திரைகளாகின்றன. அதன் பொருட்டு, சமூகத்தின் எல்லா அன்றாடச் சிரமங்களை எதிர்கொண்டுவரும் சீனிவாசன் தற்கால இளைஞர்களுக்கு பெரிய உந்து சக்தியுடையவர்! மேலும், கடந்த 15 வருடங்களாக தமிழகத்தின் ஆவணப்படச் செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் ஆர். ஆர். சீனிவாசன். பிறந்து வளர்ந்த ஊரான திருநெல்வேலியில், காஞ்சனை என்ற திரைப்பட இயக்கத்தை நடத்தி வந்தவர், அதன் தொடர்ச் செயல்பாடாகத்தான் ஆவணப்படங்கள் எடுப்பதில் ஈடுபட்டார். காடு, மலை, நதிகளுடன் இவற்றுடன் வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்திக்கொண்டிருந்தவர், மாஞ்சோலைத் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போது அதை அதன் இரத்தம் உலரும் முன்பு பதிவு செய்து, ஓர் எதிர்ப்பாக மாற்ற, சென்னை நகர்ந்தார். ‘நதியின் மரணம்’ என்ற ஆவணப்பட மாக்கினார்!
பிற படங்களான, ’தீண்டாத்தகாத தேசம்’, ’என் பெயர் பாலாறு’, ‘கடலும் மனிதனும்’ மற்றும் பேரறிஞர் அண்ணாதுரை பற்றிய அண்ணா 100 ஆகிய படங்கள் மனிதனின் வேறுபட்ட நிலைகளில் கூடத் தொடர்ந்து இயங்கும் சாதிய ஒடுக்குமுறையை வெறும் தர அளவில் இல்லாமல் நிகழ்வுகள், தாக்கஙக்ள் அடிப்படையில் அணுகுபவை. இப்படங்கள், அரசியல் பார்வையுடயவை என்றாலும், அவை அரசியல் வாதியினுடையவை அன்று. மக்களுடையவை, அந்த முறையில் தான், ’நதியின் மரணம்’ என்ற ஆவணப்படம் முதற்கொண்டு இன்றைய அவரது அத்தனை ஆவணப்படங்களும் அமைந்திருக்கின்றன. கலை, இலக்கிய நுகர்ச்சியில் தொடர்ந்து நவீனத்தைக் கண்டடையும் முயற்சிகளை இவரது செயல்பாடுகளும் தொடர்ந்து வெளிப்படுவதை இவரது மற்ற படங்களிலிருந்தும், தனது அடுத்தடுத்த செயல்பாடுகளை வடிவமைத்துக்கொள்வதிலிருந்தும் நாம் உணரக்கூடும். தமிழகத்தின் தன்காலத்தில், இயங்கும் இரண்டு மனிதர்களை இவர் முக்கியமான கலை அரசியல் ஆளுமைகள் என்கிறார். ஒன்று கவிஞர் தேவதேவன். இரண்டு, ஓவியர் சந்ரூ. இவர்கள் நேரடியாக அரசியல் வெளிப்பாடுகளை முன்வைப்பவர்கள் இல்லை. ஆனால், தன் மீது சமகாலம் சுமத்தும் அரசியலை தூக்கியெறியும் கலைக் கூறுகளை தம் படைப்புகளில் அயராது வைத்துக்கொண்டே இருப்பவர்கள். இது தான் இன்றைய எல்லா படைப்பாளிகளும் செய்யவேண்டியது என்பதை அவர் தன் சாதி ஒழிப்பு அரசியலை செயல்படுத்துவதற்கான வழித்தடமாகவும் வைத்திருக்கிறார். அவரின் மனோபாவம் ஒரு பத்திரிகையாளர் எப்படி இயங்க வேண்டும் என்பதற்கான ஒட்டுமொத்த கட்புலன் மற்றும் நுண்ணாய்வு பார்வையைக் கொண்டது. இவர், இதழியல், திரைப்படங்கள் பற்றிய வகுப்புகளை எடுக்கும் போது உணரமுடியும். புகைப்பட வரலாறு, சினிமா வரலாறு இரண்டிலும் நாம் இன்று எங்கு நிற்கிறோம் என்ற பார்வையை தயக்கமில்லாத விமர்சனங்களால் எப்பொழுதும் முன் வைத்துக்கொண்டே இருக்கிறார். தன்னுடைய புகைப்படக்கண்காட்சியையும், நூல்களையும், பயிற்சிப்பட்டறையையும் இப்பார்வையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாகவும் எதிர்ப்பாகவும் கொண்டிருப்பவர். தன்னைக்கவர்ந்த ஆளுமையான திரைப்பட இயக்குநர் ஜான் ஆபிரஹாம் பற்றிய கட்டுரைகள் மற்றும் நேர்காணல்கள் நிறைந்த ஒரு நூலை தொகுத்து அளித்திருக்கிறார். அந்நூல், சமூகப்பார்வையுடன் திரைப்படங்களை அணுகும் எவருக்கும் ஒரு கையேடாக இருக்கக்கூடியது. இன்று, ’பூவுலகின் நண்பர்கள்’ என்ற சுற்றுச்சூழல் இதழின் ஆசிரியராகவும் சுற்றுப்புற ஆர்வலராகவும் இயங்கி வரும் இவர், ஏற்கெனவே குறிப்பிட்ட படி காடு, மலை, நதியுடன் தன் வாழ்க்கையை இணைத்துக்கொண்டவர். கூந்தன் குளம் பால் பாண்டியனுடன் கொண்ட தன் பழைய நட்பால் பறவைகளையும் உயிரினங்களையும் தன் கலைச்செயல்பாட்டின் உள்ளடக்கமாகக் கொண்டிருப்பவர். இவ்வாறு ஒரு மனிதன் தன் பல்வகை பரிமாணங்களையும் இணைத்துச் செயல்படும்போது தான் முழு மனிதனாக இயங்க இயலும் என்ற நம்பிக்கையைக் கொண்டவர். இந்நிலையில், இந்த, ‘லெனின் விருது’ நிச்சயமாய், ஆர். ஆர். சீனிவாசனை ஊக்கப்படுத்துவதற்கான விருதே! அவர் இன்னும் இன்னும் கலை வெளிப்பாட்டை விசாலமான உலகமாகக் கண்டறியும் பயணத்திற்கான துணையாகவும் இருக்கும்!
--------------------------------------------------------------------------------- லெனின் விருது வழங்கும் விழா இந்த லெனின் விருது வழங்கும் விழா எதிர்வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று சென்னை அண்ணா சாலையிலுள்ள மாவட்ட மைய நூலக அறையில் (தேவநேயப் பாவாணர் நூலகம்) LLA Building, மாலை 6 மணியளவில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் கலந்துக் கொள்ளவிருப்பர்வர்கள்: இயக்குனர் பாலு மகேந்திரா, தயாரிப்பாளர் தனஞ்செயன் எழுத்தாளர் பவா செல்லத்துரை கவிஞர் தேவன் தேவன் மருத்துவர் புகழேந்தி. நிகழ்வில் செல்வி ஹம்சவேனியின் வீணைக் கச்சேரி நடைபெறும். இவர் வீணை வாசிக்கும்போது இடையில் ராகங்கள் பற்றியும், திருக்குறளின் அதிகாரங்கள் பற்றியும் கேள்விகள் கேட்டால் மிக துல்லியமாக பதிலளிப்பார். அனைவரும் வருக..
http://thamizhstudio.com/shortfilm_guidance_awards_2.php
|
Tuesday, August 9, 2011
தமிழ் ஸ்டுடியோ வழங்கும் 'லெனின் விருது'
Thursday, August 19, 2010
பாராட்டுவிழாவுக்கு வராத நாயகன் -- நான் அறிந்த லெனின்!
பாராட்டுவிழாவுக்கு வராத நாயகன் -- நான் அறிந்த லெனின்!
| பாரதி மணி | bharatimani90@gmail.com |
கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி எனக்கு மகிழ்வான நாள். தமிழ்ஸ்டுடியோ.காம் அமைப்பினர், அருண்-குணா முயற்சியில் நண்பர் எடிட்டர் லெனினுக்கு வாழ்நாள் சாதனை விழாவும், அதையொட்டி வருடம்தோறும் அவர் பெயரில் தமிழ்க்குறும்படங்களுக்கான விருதுவிழாவும் விழாநாயகன் எடிட்டர் லெனின் வராமலே இனிது நடந்தேறியது! அவர் வராமலேயே அவருக்காக கேக் வெட்டி, ‘Happy Birthday to you….Lenin!’ என்று பாடி நாங்கள் கொண்டாடினோம். 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் நள்ளிரவில் தில்லி பாராளுமன்றத்தில் பிரதமர் நேருஜி ‘Long years ago……’ என்று முழக்கமிட்ட நாளில் பீம்சிங்கின் மனைவி சோனாபாய்க்கு இரண்டாவது மகனாக பிறந்தவர் இவர். தன் பெயரில் தமிழ்க்குறும்படங்களுக்கு ஒரு விருது கொடுக்கப்போகிறார்களென்பதை அறிந்த லெனின், அருணைக்கூப்பிட்டு, ‘இத்துறையில் எத்தனையோ ஜாம்பவான்கள் இங்கே இருக்கும்போது, என் பெயர் தான் உங்களுக்குக்கிடைத்ததா? எனக்குமுன்னால், எம்.எஸ். மணி – (இவர் தன் பெயரை Money என்று எழுதுவார்) – போன்றவர்கள் இருந்திருக்கிறார்கள். சத்யஜித் ரே பெயர் உங்கள் ஞாபகத்துக்கு வரவில்லையா? என்னாலானதை நான் செய்துகொண்டிருக்கிறேன். என்னை விட்டுவிடுங்கள்’ என்று சொல்லி விரட்டிவிட்டார்.
அருண் எனக்கு போன் பண்ணி, ‘சார்ட்டெ நீங்க சொல்லணும்!’ என்று கேட்டுக்கொண்டார். லெனினை ஓரளவு தெரிந்த நான் என் பேச்சு எடுபடாது என்று தெரிந்தும், ‘லெனின் சார், உங்களுடைய Sense of Values –ஐ நான் மதிக்கிறேன். ஆராதிக்கிறேன். ஆனாலும் ஒரு வயதுக்குமேல் நமக்கு ஓரளவு Sense of Proportion-ம் தேவையாக இருக்கிறது. அறுபது வயதானபின் நம் குழந்தைகள் ஆசைப்படுகிறார்களென்ற ஒரே காரணத்துக்காக, நமக்கு விருப்பமில்லாவிட்டாலும், திருக்கடையூர் கோவிலில் உட்கார்த்தி வைக்கப்பட்டு, குடம் குடமாக தண்ணீர் அபிஷேகம் செய்துகொள்வதில்லையா? அதிலும் ஒரு சந்தோஷமிருக்கிறது. அரசியலில் உங்கள் வயதே ஆன சுதந்திர இந்தியா எத்தனை சமரசங்களுக்கு உட்பட்டிருக்கிறது? நமக்கெல்லாம் விழாவெடுக்க யாரும் க்யூவில் காத்துக்கொண்டிருப்பதில்லை. இந்த விழா நீங்கள் சொல்லி ஏற்பாடு செய்ததல்ல. மற்றவர்கள் மகிழ்வுக்காக கொஞ்சம் விட்டுக்கொடுங்களேன்!’ என்று கேட்டுக்கொண்டேன். இந்த விழாவுக்கு இருதினங்கள் முன்பு தமிழ்ஸ்டுடியோ.காம் ஏற்பாடு செய்திருந்த லெனின் குறும்படங்களின் திரையிடலின்போதும், அருணிடம், ‘ஞாயிற்றுக்கிழமை விழாவுக்கு லெனின் வராவிட்டால், நான் ஆச்சரியப்படமாடேன்’ என்று சொன்னேன்.
read more : http://thamizhstudio.com/others_article_7.php
Monday, August 2, 2010
லெனின் விருது - குறும்படத் திருவிழா!!
லெனின் விருது |
படத்தொகுப்பாளர் பி. லெனின் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா படத்தொகுப்பாளர் பி. லெனின் அவர்களுக்கு தமிழ் ஸ்டுடியோ.காம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா மற்றும் லெனின் அவர்கள் பெயரில் அடுத்த வருடம் முதல் குறும்படத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் "லெனின்" விருது துவக்க விழாவை முன்னிட்டும், லெனின் அவர்களின் பிறந்த நாளான ஆகஸ்ட் 15 ஐ உலகத் தமிழ் குறும்பட தினமாக தமிழ் ஸ்டுடியோ.காம் அறிவிக்கவிருப்பதை முன்னிட்டும், எதிர் வரும் ஆகஸ்ட் 7 முதல் 13 வரை தொடர்ந்து ஏழு நாட்கள் குறும்படங்கள் திரையிடல் திருவிழா நடைபெறும். இதில் ஆர்வலர்கள் அனைவரும் பங்கேற்று பயன்பெறலாம். அனுமதி இலவசம். நிகழ்வின் மேலும் சிறப்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகைப்பாட்டின் கீழ் குறும்படங்கள் திரையிடப்படுகிறது. அதன் விபரம்: ஆகஸ்ட் 07, 2010, சனிக்கிழமை மாலை ஏழு மணிக்கு: வகைப்பாடு: சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட குறும்படங்கள் திரையிடல் ஆகஸ்ட் 08, 2010, ஞாயிற்றுக்கிழமை மாலை ஏழு மணிக்கு: வகைப்பாடு: ஆவணப்படங்கள் திரையிடல் ஆகஸ்ட் 09, 2010, திங்கள்கிழமை மாலை ஏழு மணிக்கு: வகைப்பாடு: நகைச்சுவைக் குறும்படங்கள் ஆகஸ்ட் 10, 2010, செவ்வாய்க்கிழமை மாலை ஏழு மணிக்கு: வகைப்பாடு: பொதுவான குறும்படங்கள் ஆகஸ்ட் 11, 2010, புதன்கிழமை மாலை ஏழு மணிக்கு: வகைப்பாடு: மாற்று மொழிக் குறும்படங்கள் ஆகஸ்ட் 12, 2010, வியாழக்கிழமை மாலை ஏழு மணிக்கு: வகைப்பாடு: ஈழம் சார்ந்து எடுக்கப்பட்ட குறும்படங்கள் ஆகஸ்ட் 13, 2010, வெள்ளிக்கிழமை மாலை ஏழு மணிக்கு: வகைப்பாடு: எடிட்டர் லெனின் அவர்கள் இயக்கிய குறும்படங்கள் திரையிடப்படும் குறும்படங்கள் பற்றிய விபரங்கள் விரைவில்... |