தமிழ்ஸ்டுடியோ.காம் நடத்திய ஒன்பதாவது பௌர்ணமி இரவு http://thamizhstudio.com/shortfilm_guidance_fmd_9.php | ||
| ||
”தமிழ் ஸ்டூடியோ.காம்” மாற்று ஊடகத்திற்கு களமாய் திகழும் இவர்கள் மேற்கூரிய நம் புலம்பல்களுக்கு தடா போடும் வகையில் உருவாக்கியிருப்பதுதான் “பெளர்ணமி இரவு”.. கோட்டைக்கு வடிகாலாம் கோடம்பாக்கத்தில், அவர்தம் அலுவலக மாடியில் புல்வெளியோடு, மூலிகை செடிகளும் நம்மை சூழ்ந்திருக்க, நிலவு மங்கையின் ஒளிக்கீற்று மட்டுமே மாடியை நிறைத்திருக்க, மெகா ஸ்கிரீனில் திரைப்படங்கள்.. அதுவும் டிஷ்யூம் டுமீல் ரகம் அல்ல, அழுவாச்சி சிரிப்பாச்சி வகையறாவும் அல்ல, இரண்டு படங்களுமே, நம் மனதை மயிலிறகாய் வருடும் இதமான இளையராஜா மெலோடி போன்றவைத்தான். மாடியின் அட்மாஸ்ஃபியரே நம்மை ஆட்கொண்டுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். பெளர்ணமி இரவின் வணக்கங்களோடும், விளக்கங்களோடும் அருண் நிகழ்ச்சியைத் தொடங்க, முதலில் திரையிடப்பட்டது ”பயணம்”- எனும் தமிழ் குறும்படம். மூன்று விருதுகளோடு வாகை சூடி வந்திருந்தது அத்திரைப்படம். படத்தின் கர்த்தாவான இயக்குனர் சுப்புராஜும் நம்மோடு படத்தை பார்த்தார். வட மாநிலத்திலிருந்து நான்கு பிள்ளைகளால் துறத்தியடிக்கப்பட்ட ஒரு தந்தையின் மும்பை முதல் கன்னியாக்குமரி வரையிலான ஒரு பயணத்தை இயக்குனர் பதிவு செய்திருந்தார். 15 நிமிட படத்தின் ஒளிபரப்பு முடிந்த கையோடு இயக்குனரோடு ஒரு கலந்தாய்வு அவ்விரவை இன்னும் விறுவிறுப்பாக்கியது. ஏன்? எதற்கு? ஏன் இப்படி இருந்திருக்கக்கூடாது? என்று கேள்விகள் அனைத்திற்கும் நிறைவாய், சமாளிப்பாய் பதில் சொல்லி அசத்தினார் இயக்குனர். மேலும் “என்னுடைய தந்தை ஒரு பேங்க் ஆபிஸர். அவரது நீண்ட நாள் கனவான சினிமாவை வைத்து அவருக்கு ஒரு கிஃப்ட் கொடுக்க நினைத்தோம். நானும் என் சகோதரர்களும், அதற்காகவே இந்தத் திரைப்படத்தை தந்தை எனும் கருவில் எடுத்து முடித்தோம்” என்று பெருமிதத்தோடு சொன்ன இயக்குனரின் தந்தை பாசத்திற்கு கை கொட்டுகள் ஏராளமாய் விழுந்தன. ஒரு சிறிய இடைவேளை. தொடர்ந்தது இரானிய இயக்குனர் மஸ்ஜித்மஸ்ஜிதி இயக்கத்தில் “தி கலர் ஆஃப் பேரடைஸ்” எனும் உலக சினிமா. ஒன்றரை மணி நேர திரைப்படத்தில் ஒரு கண் பார்வையால் சவால்விடப்பட்ட சிறுவனின் கதையை உருக்கமாய் சொல்லியிருந்தார் இயக்குனர். படத்தில் நிறங்கள் பேசின, அசைவுகள் பேசின, ஒளிப்பதிவு ஒரு புறம் பேச, ஒலிச் சேர்ப்பு மறுபுறம் பேசின, காட்சியும், கருமமும்கூட பேசின, உண்மையில் இயக்குனர் பேச நினைத்ததையெல்லாம் பேசாமல் பேசின ஒண்றரை மணி நேர செல்லுலாய்டுப் பதிவுகள். ஒரு உண்மையான பேசும் படத்தைப் பார்த்து முடித்தக் கையோடு, பேசத் தொடங்கினோம் பேச்சில் வல்லுநர்களாகிய நாம். படத்தைப் பற்றிய பல்முனைக் கருத்துக்கள், பார்வைகள், தாக்கல்கள், தூக்கல்கள் என்று படம் பார்த்ததைவிட சிறந்ததொரு அனுபவத்தை அந்த அலசல் தந்தது எனலாம். இரவு மணி 1… இனிய இரவின் காட்சிப் பகுதி நிறைவுக்கு வரவே நன்றிகளோடு அடுத்தடுத்த பெளர்ணமி இரவுக்கான வரவேற்பையும் பகிர்ந்துகொண்டார் அருண். மொட்டை மாடி, நிலா வெளிச்சம், அரட்டை இல்லாமலா? இரவு தங்குபவர்கள் தங்கலாம் என்னும் அறிவிப்பு நம்மைக் குஷிபடுத்த நம்மைப்போலவே தங்குவதற்குத் தயாரானார்கள் பலரும். ஒத்த ரசிப்புத் திறன் கொண்ட இத்தனை பேரை பார்ப்பதே அரிதான இக்காலத்தில் அவர்களோடு நட்பு பாராட்டவும் வழி கிடைத்தால்? டபுள் தமாக்கா ஆஃபர் தந்த தமிழ் ஸ்டூடியோவிற்கு மீண்டும் ஒரு நன்றி சொல்லி வணக்கம் போட்டோம் எங்கள் அரட்டைக்கு. எது நல்ல சினிமா? மாற்று ஊடகம் என்றால் என்ன? என்று தொடங்கி டிவி, மீடியா, நாடு, நிலைமை, இணையம், பதிவுலகம், பஞ்சுமிட்டாய் என அத்தனைக்குள்ளும் சென்று வந்த விவாதங்களுக்கு எண்ட் கார்ட் போட்ட நேரம் என்ன தெரியுமா? அதிகாலை 6.30…. சிந்தனை டேங்க் ஓவர்ஃபிளோ ஆகத் தொடங்கியதாலும் மறுநாள் பணிகள் பணித்ததாலும் வலுக்கட்டாயமாக ஒரு டீ குடித்து பிரிவு சோகத்தை ஆற்றி விடைபெற்றோம். இப்படி ஒரு இனிமையான, இதமான, இன்ஃபர்மேட்டிவான இரவு இதுவரை நான் பெற்றதில்லை. பெறச்செய்த தமிழ் ஸ்டூடியோவிற்கு நன்றிகள். இவ்ளோ பெரிய பதிவா? என்று என்னை ஏகவசனத்தில் திட்டிக்கொண்டிருப்பீர்களேயானால், அடுத்த பெளர்ணமி இரவிற்கு வந்து பாருங்கள். நான் பதிய மறந்த விஷயங்கள் எத்தனை இருக்குமென்று தெரியவரும். “பெளர்ணமி இரவு… எதிர்பார்க்கிறது வாழ்வின் ரசனையாளர்களது வரவு….” http://thamizhstudio.com/shortfilm_guidance_fmd_9.php |
Tuesday, October 26, 2010
தமிழ்ஸ்டுடியோ.காம் நடத்திய ஒன்பதாவது பௌர்ணமி இரவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment