Monday, October 4, 2010

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் மூன்றாவது குறுந்திரைப் பயணம் கல்பாக்கம் (கடலூர் கிராமம்)

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் மூன்றாவது குறுந்திரைப் பயணம் கல்பாக்கம் (கடலூர் கிராமம்)

ஆதவன்


ஆங்காங்கே தூறிக் கொண்டிருந்த மழை அடைமழையாய் பெய்யும் முன்னர் அடைய வேண்டிய இடத்தை அடைந்துவிட வேண்டும் என்றும் சொல்கிற சராசரி மனிதனின் மனதில்ல எனக்கு. தூரலில் சாய்ந்துக் கொண்டு அடைமழையில் அமிழ்ந்து போகத்தான் ஆசை..ஆசை நிராசையாகி செய்ய வேண்டிய பணி அழைத்திடவே சனிக்கிழமை மாலை கல்பாக்கம் நோக்கி பயணமானேன். திருவான்மியூரில் காத்திருந்த நண்பர்கள் கலையரசன், இதயாவுடன் கிழக்கு கடற்கரை சாலையில் விர்ரென பயணம் தொடங்கியது.. கல்பாக்கம் கடலூர் கிராமத்தில் குறுந்திரைப் பயணம் வைத்துக் கொள்ளலாம் என்று நண்பர் கலையரசன் சொன்னபோது அதற்கான தேதி குறித்து அக்டோபர் முதல் சனிக்கிழமை நடத்தலாம் என்று முடிவானது.

காற்றில் எவ்வித இலக்கும் இல்லாமல் எதையோ நோக்கி பறந்துக் கொண்டிருக்கும் தாத்தாப் பூவைப் போல மனம் எங்கெங்கோ பறந்துக் கொண்டிருந்தது. பேருந்தில் அமர இடம் இல்லாததால் நின்றுக் கொண்டே சிறிது தூரம் சென்றாலும் பேருந்தினுள் நடக்கும் செயல்கள், காணும் காட்சிகள் எப்போதும் என்னை வசீகரிக்கும். ஆனால் இந்த முறை மனம் எதிலும் லயிக்க மறுத்ததால் கொஞ்சம் நின்றுக் கொண்டு சென்றதையே கால்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. சிறிது தூரத்தில் அமர இடம் கிடைத்ததும் அமர்ந்துக் கொண்டேன். கலையரசன் மட்டும் இறுதிவரை நின்றுக் கொண்டே வந்ததாக நினைவு.

கிழக்கு கடற்கரை சாலை எப்போதும் வனப்பு மாறாத, குறையாத இளம் பெண் போல தன் அழகை பராமரித்து வைத்திருக்கும். யார் கண் பட்டதோ அதன் வனப்பு தொலைந்துக் கொண்டே வருகிறது. கல்பாக்கத்திற்கு முன் வழியில் இரண்டு புறமும் மிகப் பிரமாண்டமான இடத்தில் முட்செடிகளும், மரங்களும் வளர்ந்துக் கொண்டு வரும் வேளையில் அங்கே ஜீவ நதியாய் ஓடிக் கொண்டிருந்த பாலாறு காணாமல் போனதுப் பற்றியோ, அது மீண்டும் வராததுப் பற்றியோ அரசும், மக்களும் கவலைப் படாமல் இருக்கலாம். ஆனால் பாலாற்றை தூக்கி வளர்த்த அதன் காலடிச் சுவடுகளை தன் மார்புக்குள் வாங்கிக் கொண்ட அந்த மணல் பிரதேசம் இன்னமும் பாலாற்றின் வருகையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது. ஆங்காங்கே கிடக்கும் குழிகளும், மேடுகளும் கேட்பாரற்றுக் கிடக்கும் அனாதைக் குழந்தைப் போல் காட்சியளிக்கிறது. வருத்தப் பட்டு பாரம் சுமப்பதை விட வேறென்ன செய்து விட முடியும்.

பேருந்து நான்கு மணியளவில் கல்பாக்கம் தாண்டி கூவத்தூரில் நின்றது. அங்கிருந்து நான்கு கிலோமீட்டரில் உள்ள கடலூர் கிராமத்திற்கு பங்கு தானி மூலம் சென்றடைந்தோம். கிராமியக் கலைக் குழுவை சேர்ந்த முகிலன் வரவேற்றார். சென்னைக்கு மிக அருகில் இருக்கும் மிக வித்தியாசமான ஒரு கிராமத்தை இவ்வளவு நாட்களாக பார்க்காமல் விட்டதற்கு மனம் தன்னைத் தானே நொந்துக் கோனது. இன்னும் இதுப் போன்று எத்துனை கிராமங்கள் உள்ளதோ? எந்த வகையில் வித்தியாசமான கிராமம் கட்டுரையில் போக்கில் நீங்களே புரிந்துக் கொள்ளலாம். எனக்கு வித்தியாசமாகப் பட்டது. மற்றவர்களுக்கு வித்தியாசமாகப் படாமலும் இருக்கலாம். எனக்கு இத்தகைய கிராமத்தை அடையாளம் காண வைத்தமைக்கு கலையரசனுக்கு விசேஷ நன்றிகள்.

என்ன செயல் செய்தாலும், என்ன தொழில் செய்தாலும், எல்லோருடைய முதல் இலக்கும் குழந்தைகளைக் கவருவதாகத்தான் இருக்கும். நாங்களும் அதற்கு விதிவிலக்கல்ல. அந்தப் பகுதி குழந்தைகளுடன் ஒன்றர கலக்க அவர்களுக்கு சில விளையாட்டுகள் வைத்து பரிசுகள் கொடுக்க கலையரசன் முடிவு செய்தார். அவர் ஏற்கனவே என். ஜி. ஒ வில் பணிபுரிந்ததால் அந்த அனுபவம் அவருக்கு கைகொடுத்திருக்கலாம். சிறப்பாக செய்தார். குழந்தைகள் பாடினர், ஆடினார், கதைகள் சொன்னார்கள். ஆனால் எல்லாவற்றிலும் ஒரு ஒற்றுமையை பின்னர்தான் கவனிக்க முடிந்தது. அவர்கள் பாடியது, ஆடியது, சொன்னது எல்லாமும் கிறித்தவம் சார்ந்த அல்லது தழுவியவை மட்டுமே. 98% மேலாக கிறித்தவர்களாக மதம் மாற்றப்பட்ட குடும்பங்கள் என பின்னர் கேள்விப் பட்டேன். மோனிஷா எனும் சிறுமி மிக நேர்த்தியாக பாடிய விதம் அனைவரையும் கவர்ந்தது.


மேலும் படிக்க : http://thamizhstudio.com/shortfilm_guidance_screeningtravel_3.php



No comments:

Post a Comment