மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் -30
வெங்கட் சுவாமிநாதன்
http://thamizhstudio.com/serial_4_30.php
இன்று இங்கு (பெங்களூருவில்) பத்திரிகைகளில் ஒரு செய்தி வந்துள்ளது. எனக்குப் பிடித்த ஒரு நடிகர் ஓம் பூரி பெங்களூருவில் இப்போது நடந்து கொண்டிருக்கும் International Film Festival – ல் பேசியிருக்கிறார். Art film – ம் commercial film - ம் ஓரிடத்தில் சந்திக்க வேண்டும் என்று. ஷ்யாம் பெனிகல், கோவிந்த் நிஹலானி போன்றவரால் சினிமா உலகத்துக்கு அறிமுகப் படுத்தப்பட்டவர். சினிமாவுக்கு வரும் முன் National School of Drama, Delhi யில் பயின்றவர். நாஸருதீன் ஷா போன்று நாடகம் பயின்றவர் சினிமாவுக்கு வந்ததும் தன்னை மிக வியந்து பாராட்டும் வகையில் ஆச்சரியப்படும் வகையில் சினிமாவுக்கு ஏற்ற வகையில் தன் நடிப்பை மாற்றிக்கொண்டவர். இன்று ஹிந்தி சினிமா உலகில் மிகச்சிறந்த நடிகர் என்று நாம் அங்கீகரித்தகுந்த மிகச் சிலரில் ஒருவர் இந்த ஓம் பூரி.
அவர் பெங்களூருவில் சொன்னதாக செய்தி சொல்கிறது. ஓம் பூரி சொன்னாராம், “ஆர்ட் சினிமாவும் வியாபார சினிமாவும் சந்தித்துக்கொள்ள வேண்டும். பாட்டையும் டான்சையும் (சங்கீதம், நடனம் என்று நான் அதை பொழிபெயர்க்க விரும்பவில்லை – இந்த இரண்டையும் நாம் புரிந்து கொண்டிருப்பது மிகவும் கேவலப்படுத்தித்தான்). நாம் வெறுத்தொதுக்கக் கூடாது. ஏனெனில் இவை இரண்டும் நம் பாரம்பரியத்தில் ஊறியவை. நம் சினிமாவை தனித்துக் காட்டுபவை. எல்லாவற்றுக்கும் மேலாக இவை இரண்டும் தான் ஹாலிவுட் சினிமாவின் படையெடுப்பை மீறி நம் சினிமாவை வாழவைப்பவை. “என்றெல்லாம் அதன் புகழ் பாடியிருக்கிறார். இது அவருக்கு தன் அறுபதாவது வயதில் தோன்றிய ஞானம். ஷ்யாம் பெனிகல், சத்யஜித் ரே, கோவிந்த் நிஹலானி போன்றோரின் சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த போதெல்லாம் அவருக்கு இந்த ஞானம் கிட்டவில்லை. அப்போதும் ஹிந்தி சினிமா தன் பாட்டு டான்ஸோடு உலகைக் கலக்கிக் கொண்டிருந்தது தான். இப்போது அவருக்கு இந்த ஞானம் தோன்றக் காரணம், ஹிந்தி சினிமாவில் கிடைக்கும் பிராபல்யமும் பணமும் வேறு எதிலும் கிடைக்காது. ஹாலிவுட் படங்களிலும் அவர் நடித்திருக்கிறார் தான். ஆனால் அதில் பெயர் கிடைக்குமே தவிர பணம் வடிவேலு மாதிரியோ கூடக் கிடைக்காது. ஹிந்தி பட வாய்ப்புக்கள் இப்போது அவருக்கு இல்லை. கிடைக்கும் வாய்ப்புக்களின் படங்கள் எப்படி இருந்தாலும் அவர் தனித்து தன்னை ஓம் பூரி என்னும் சிறந்த கலைஞராக அடையாளம் காட்டிக்கொள்கிறார் தான். எல்லாம் நகைச் சுவைப் பாத்திரங்கள். பாவம் வியாபார உலகில் ஒளி வீச அவருக்கு ஆசை ஏற்பட்டு விட்டது. தவறில்லை. ஆனால் அதற்கு நியாயம் கற்பிக்கும் வாதம் தான் அபத்தமானது.
போகட்டும். நம்மூர் சந்தை தயாரிப்பாளர்களில் சிலர் கொஞ்சம் ஆங்கிலம் ஸ்டைலாக பேசுகிறவர்கள் தம் கோமாளித்தனத்துக்கு அங்கீகாரம் கேட்பது போல, ”ஆர்ட் சினிமா, கமர்ஸியல் சினிமா என்று இரண்டு கிடையாது. ஆர்ட்டோ கமர்ஸியலோ, எதாக இருந்தாலும், நல்ல சினிமா மோசமான சினிமா என்று தான் இரண்டு உண்டு” என்பார்கள். இந்த வாதம், ”படம் எதுக்கய்யா எடுக்கறாங்க, சம்பாதிக்கத்தானே. சம்பாதிக்கறது ஒண்ணும் பாவம் இல்லையே” என்று சொல்வார்கள். இது எந்த அரசியல் வாதியும் “நாங்கள் மக்களுக்கு உழைக்கிறோம்” என்று சொல்வது போன்ற ஒரு படு மோசடித்தனமான கோஷம்.
வெகு காலம் ஆர்ட் சினிமா என்று சொல்கிறார்களே, அது என்ன ஆர்ட் சினிமா.? அதை அர்த்த முள்ள சினிமா, நம் வாழ்க்கையைச் சார்ந்த சினிமா, இன்றைய சந்தைக்கான சரக்கு என்றில்லாமல், வெகு நீண்ட காலத்துக்கு மனித வாழ்க்கையோடு உறவாடும் குணமுள்ள சினிமா, மொழி, கலாசாரம், எல்லாவற்றையும் தாண்டி உலகின் எந்த மூலையிலிருக்கும் மனிதனுக்கும் அர்த்தமும் உறவும் உள்ள சினிமா, சினிமாவான சினிமா (புகைப்படமெடுக்கப்பட்ட நாடகமோ, கூத்தோ, ரெக்கார்ட் டான்ஸொ அல்ல) சினிமா என்ற தொழில் நுணுக்கம் தரும் சினிமா என்ற தகுதி பெறக்கூடிய சினிமா, சுருக்கமாக சினிமா என்று இனம் காணக்கூடிய ஒன்றைத் தான் சந்தைக்காக தயாரிக்கப்பட்ட சரக்கு அல்லாத ஒன்றை ஆர்ட் சினிமா என்று பிரித்து பார்க்கும் வகையில் சொல்லப்பட்டிருக்க வேண்டும்..
இது தெரியும் பாமரத்தனமான மோசடி கோஷங்கள் எழுப்புகிறவர்களுக்கு. ஆனால் இவர்களின் பணக்கொள்ளையை நியாயப் படுத்த குத்தாட்டம் போட்டு அதை நமது பாரம்பரியத்தில் உள்ள டான்ஸாக்கும் என்று கோஷம் போட்டு மறைக்கும் களவாணித் தனம்
முதலில் இவர்களுக்கு சினிமா என்றாலே என்னவென்று தெரியாது. ஓம் பூரி பேசிய அதே விழாவில் பேசிய இரானிய சினிமா இயக்குனர் மெஹ்ர்ஜூயி, Cinema’s soul is in poetry and philosophy not in gadgetry“ என்று சொல்லியிருக்கிறார். ஓம் பூரியைக் கேட்டால் “ஆமாம் அது உண்மைதான்” என்று கட்டாயம் ஒப்புக்கொள்வார். மெஹ்ர்ஜூபியின் படங்கள் எதுவும் நான் பார்த்தது கிடையாது. அவர் பெயரையே நான் இப்போது தான் கேள்விப்படுகிறேன். ஆனால் இராணிய படங்கள் பற்றியும் இயக்குனர்கள் பற்றியும் எனக்கு அபரிமிதமான மதிப்பும் மரியாதையும் உண்டு. அவர்களில் பெரும்பாலானவர் இரானிய அரசின் சிறையில் கிடப்பவர்கள். அரசின் கொடுமைக்கு ஆளாகியவர்கள். இரான் ஒரு முஸ்லீம் நாடு. அரசும் இஸ்லாமின் மதகுருக்களின் பிடியில் சிக்கி பணிந்து நடப்பவர்கள். அரசின் முடிவுகளையும் தன் மதப்பார்வைக்கு ஏற்ப் தடுத்து நிறுத்தும் அதிகாரம் மதகுரு கொமேனிக்கு உண்டு. அத்தகைய சமூகத்தில் தான் பெண்கள் சுதந்திரம் மறுக்கப்படுவதையும் ஆண்களின் யதேச்சாதிகாரத்தையும் வெளிப்படுத்தும் படங்களை அவர்கள் தயாரிக்கிறார்கள். ஒரு யதேச்சாதிகாரத்தின் கீழ், மதத்தின் இறுகிய பிடியின் கீழ் வாழும் ஒரு கலைஞன் தன் சுதந்திரத்தை வலியுறுத்தும் போது தான் கருத்து சுதந்திரம் என்றால் என்ன, கலைஞர் என்று யாரைச் சொல்வது என்று நாம் தெரிந்து கொள்கிறோம். அதை நாம் இரானிய சினிமாவிலிருந்தும் இரானிய கலைஞர்களிடமிருந்தும் கற்றுக் கொள்கிறோம். சற்று முன் சொல்லப்பட்ட மெஹ்ர்ஜூயியின் படம் ஒன்று ஒன்பது வருடங்களாகத் திரையிடப்படவில்லை. ”என் இப்போதைய அக்கறை எங்கள் சமூகமும் அரசும் மறுக்கும் பெண்களின் சுதந்திரத்தைப் பற்றித் தான்”, என்கிறார் மெஹ்ர்ஜூயி. அவர் சொல்கிறார் ”தொழில் நுட்ப சாதனங்கள் முக்கியமல்ல” அவை சினிமாவாகாது” என்று.
நம்மூர்க் காரர்களுக்குத் தான் அது புரியாது. நாம் எவ்வளவு டெக்னிக்கில் முன்னேறியிருக்கிறோம். சங்கரைப் பாருங்க, மணிரத்தினத்தைப் பாருங்க, க்ராபிக்ஸைப் பாருங்க, நாம் உபயோகப்படுத்தற காமிராவைப் பாருங்க, அந்தால காரு ஆகாயத்திலே பறக்க வச்சிடறாரே. ரயில் பெட்டி முப்பது முப்பத்தைந்தையும் ரஜனி என்னமா பக்கவாட்டிலே படுத்துக்கிட்டே என்னா வேகமா ஒடி பெட்டிக்குள்ளெ சடக்குனு புகுந்துக்கறாரு? இதெல்லாம் டெக்னிக் இல்லாமே முடியுமா?” என்று சொல்லக் கூடும்.
இதெல்லாம் நம்மூரில் கிராமங்களில் பயாஸ்கோப் காட்டுகிறேன் என்று ஒரு பெட்டியைத் தூக்கிக்கொண்டு ஒருவன் வருவான். ஒரு சின்ன துவாரத்தில் கண் வைத்துப் பார்க்க வேண்டும். ”பாரு பாரு பட்டணம் பாரு,” என்று பாடிக்கொண்டே உள்ளே படம் காட்டுவான். அதைப் பார்த்து அதிசயித்த சிறு வயதுப் பருவம் உண்டு. இப்போது வளர்ந்து பெரியவர்களாகி விட்டதால் நமக்கு ரஜனி சுட்டு விரலை ஆட்டினால் ரம்பம் அறுக்கும் சப்தம் வர வேண்டும். ஆகாயத்தில் சங்கர் படக் கதா நாயகியும் நாயகனும் டான்ஸ் பண்ணிக்கொண்டே ஆகாயத்தில் மிதப்பார்கள். பின் அந்தரத்திலேயே அப்படியே கால் பரத்தி கைகள் நீட்டி உறைந்து விடுவார்கள். ரஜினி நடு ரோட்டில் நின்றால் அவரைத் தாக்க வந்த கூட்டத்தின் திருப்பாச்சி, வெட்டருவாள், பிச்சுவாக்கத்தி எல்லாம் அவர் உடம்பில் வந்து ஒட்டிக்கொள்ளும். இது ரஜனி ஸ்பெஷல். மற்ற ஹீரோக்களுக்கெல்லாம், டெக்னீக் வேறே. சரி தனுஷை எடுத்துக்குவோம். அவருக்குன்னு ஒரு ஸ்டைல் அவர் வீர நடை போட்டு வருவார். எதிரில் வரும் எட்டு தடியன்களும் அவர் முஷ்டியை நீட்டியதுமே எட்டு திசைகளிலும் ஏதோ கம்பி மத்தாப்பு பூச்சொரிவது போல மிக அழகாக ஆகாயத்தில் கோலம் போட்டது போல விழுவார்கள். அவர்களுக்குஒன்றும் ஆகியிருக்காது ஒரு சிராய்ப்பு, ஊஹூம். . நமக்கு கால் எலும்பு முறிந்திருக்கும். ஆனால் அந்த தடியர்கள் மீண்டும் எழுந்து வந்து இன்னொரு ரௌண்ட் வந்து வரிசையாக ஒவ்வொருவராக வந்து அடிவாங்கிச் செல்வார்கள்.. அல்லது மறுபடியும் தனுஷ் தன் முஷ்டியைச் சுழட்டவேண்டியிருக்கும். ஸ்டண்ட் மாஸ்டர் என்ன சொல்லியிருக்கிறாரோ தெரியாது. எவ்வளவு நேரத்துக்கு எவ்வளவு ரௌண்ட் அடிவாங்க வேண்டும் என்பது ஷூட்டிங் ஸ்க்ரிப்டில் இருக்கும்.
தமிழ் வாழ்க்கைக்கும் நம் அன்றாட சந்தோஷங்கள், ஏமாற்றங்களுக்கும் இந்தப் படங்களுக்கும் ஏதும் சம்பந்தமிராது. எல்லாம் கனவுலக மயக்கங்கள். கற்பனைக் கனவுகள். அதிலும் பைத்தியக்காரக் கனவுகள்.
சினிமாவில் தொழில் நுட்பம் என்பது நமக்குத் தெரியாது எப்படி எடுத்தார்கள் என்று. படம் பார்க்கும்போது “என்னா டெக்னிக்கு என்னா டெக்னிக்கு” என்று வாய் பிளக்க மாட்டோம்.
ஒரு இரானியன் படம். Mirror. என்று பெயர். Zafar Panahi அதன் இயக்குனர். இவர் இப்போது எட்டு வருஷ காலமாக சிறையில் இருக்கிறார். எந்த அப்பீலும் அவருக்கு உதவவில்லை. உலகத்தின் சிறந்த சினிமா கலைஞர்கள் எல்லாம் அவருக்காக மண்றாடியும் பயன் இல்லை. அப்படி என்ன ராஜத்ரோகம் செய்துவிட்டார் அவர்?. பேசாமல் நமீதாவோடு “வருவீயா, மாட்டீயா? என்று டான்ஸ் ஆடிவிட்டுப் போயிருக்கலாம். ஆனால அவர் புத்தி கெட்டுப் போய், இரானில் பெண்களின் அவல நிலை பற்றி படம் எடுத்திருக்கிறார். அவ்வளவே. The Circle என்று ஒரு படம். ஒரு இளம் பெண் கர்ப்பமாகியிருக்கிறாள். அவளுக்கு உதவுகிறவர்கள் யாரும் இல்லை. அவளுடைய அன்பான சினேகிதி கூட அவள் கர்ப்பத்தைக் கலைக்க உதவுவதில்லை. அவள் சிறையிலிருந்து தப்பியவள். கடைசியில் தெரு விபசாரியாகத் தான் குற்றம் சாட்டப் பட்டு சிறைக்கு எடுத்துச் செல்லபடுகிறாள்.
Off side என்று இன்னொரு படம். ஒரு இளம் பெண். அவளுக்கு. கால்பந்தாட்டம் பார்க்க ஆசை. கொரியாவும் இரானும் ஆடுகிறார்கள். அப்பாவின் கட்டுப் பாட்டையும் மீறி, ஆண் வேஷம் போட்டுக்கொண்டு ஸ்டேடியத்துக்குப் போகிறாள். அவள் பிடிபட்டு அவளைப்போல பந்தாட்டம் பார்க்க வந்த இன்னும் மற்ற பெண்களோடு ஒரு வெளியிடத்தில் ஆடுகள் கிடையில் அடைக்கப்படுவது போல அடைபடுகிறாள். கடைசியில் அவளும் ஒரு போலீஸ் வானில் மற்ற கால்பந்தாட்ட ரசிகைகளோடும், வேசிகளோடும் எடுத்துச் செல்லப் படுகிறாள். அவள் குற்றம் அனேகமாக தெருவில் தொழில் செய்தாள் என்று தான் இருக்கும். சரி, மிர்ரருக்கு வரலாம். ஒரு எட்டு வயதுக் குழந்தை. ஸ்கூல் முடிந்ததும் வெளியே வருகிறது. ஸ்கூலின் சுற்றுச் சுவர் மேல் உட்கார்ந்து கொள்கிறது. அதன் இடது கையில் ப்ளாஸ்டர். அம்மா வருவாள் அழைத்துச் செல்ல என்று.
அந்த ஸ்கூல் எதிரில் மௌண்ட் ரோட் மாதிரி ஒரு போக்கு வரத்து நெரிசல் மிகுந்த ரோட். நமது மிகச் சிறந்த படங்களில் ஒன்றான, மூன்றாம் பிறை உலக நாயகன் நொண்டி நொண்டிக்கொண்டே,. ஸ்ரீதேவி உட்கார்ந்து இருக்கும் பெட்டி பின்னால் கதறிக்கொண்டே ஒட வசதியாக முற்றிலும் ஈ காக்கா இல்லாத ரயில்வே ப்ளாட்ஃபார்மாக (ஒரு அரை நாளுக்கு ஸ்டேஷனையே வாடகைக்கு எடுத்திருப்பார்களோ என்னவோ) இராது. கார்களும் பஸ்களும் விரைந்து சென்று கொண்டிருக்கும் அந்த ரோடின் குறுக்கே அந்த சிறு பெண் கொஞ்சம் இடைவெளி கிடைத்ததும் குறுக்கே போவாள், எதிர் நடை பாதைக்குச் செல்ல. முதலில் யாராவது ரோடைக் கடக்கிறார்களா என்று பார்த்து அந்த ஆளோடு ஒட்டிக்கொண்டு செல்வாள். இதற்குள் மறுபடியும் கார்கள் குறுக்கிடும். பாதி ரோடில் நின்று பின் அடுத்த பாதியில் ரோடு காலியாவது பார்த்து ஓடுவாள்.. இப்படி அந்த படம் பூராவும் சுமார் ஒன்றரை மணி நேரம் படம் பிடித்திருப்பது அத்தனையும் அந்தக் குழந்தை தாய் வராது தவிக்கும் நிகழ்வுகள் தான். படப் பிடிப்புக் குழு ஒரு வானில் காமிரா வைத்துக்கொண்டு படம் பிடித்துக்கொண்டிருப்பார்கள். அது நமக்குத் தெரியாது. கடைசியில் படம் முடிவதற்கு 10 நிமிஷம் இருக்கும் போது தான் அந்தப் பெண், ”நான் இனிமேல் நடிக்க மாட்டேன் என்று கோபித்துக்கொண்டு தன் உடலில் பொருத்தியிருக்கும் ஸ்பீக்கரைக் கழற்றிக் கொடுப்பாள். படம் பிடிப்பவர்கள் ஒவ்வொருவராக வந்து அவளைக் கெஞ்சுவார்கள் ”யாரும் உன்னை எதாவது திட்டினார்களா?. என்று. அவர்களுக்குள் தகராறு எழும். ”இன்னம் கொஞ்ச நேரம் தானே கடைசிக் காட்சி. யார் குழந்தையை என்ன சொன்னது.? என்று அவர்களுக்குள் வாதப் பிரதி வாதங்கள். ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொள்வார்கள். இந்தக் கடைசிக் காட்சியின் போது தான் நமக்கு காமிராவுடன் ஒரு வண்டி பின் தொடர்கிறது என்று தெரியும். அதுவும் எப்படி சாத்தியம்? என்று நமக்கு வியப்பாக இருக்கும். அங்கு இருக்கும் டாக்ஸி ட்ரைவர்களின் கூட்டத்தில் சென்று அந்தப் பெண் விசாரிப்பாள். இன்னொரு துணி வியாபாரி தான் அவளை பஸ் ஸ்டாண்டுக்கு அழைத்துச் செல்வதாக தன் பைக்கில் ஏற்றிச் செல்வான். இன்னொரு சமயம் அங்கு வரும் பஸ் டிரைவரிடம் விசாரிப்பாள். “அன்னிக்கு என் அப்பாவோட சண்டை போட்டாயா? என்று இன்னொரு ட்ராஃபிக் போலிஸிடம் கேட்பாள். அன்று ஃபைன் போட்டாயே? எங்க அப்பா இன்ன காரில் வந்து கொண்டிருந்தாரே என்று அவரிடம் வழி கேட்பாள். அவர்கள் விழிப்பார்கள். குழந்தைக்கு உதவ விருப்பம் தான். ஆனால் குழந்தை சொல்வதை எப்படி புரிந்து கொள்வது? கற்பனை செய்துகொள்ளுங்கள். மௌண்ட் ரோடில் சாயந்திரம் ஆறு மணிக்கு இதெல்லாம் நடக்கிறது. ஷூட்டிங் நடக்கிறது. ஒரு எட்டு வயதுப் பெண் அங்குமிங்கும் ரோடைக் கடக்கிறாள் விசாரிக்கிறாள். ட்ராஃபிக் போலீஸ். டாக்ஸி ட்ரைவர்கள் கூட்டம் என்று எல்லாரையும்.
இது ஸ்டுடியோவில் நடக்கிற காரியம் இல்லை. பகலில் நடு ரோடில். இயல்பான அவ்வளவு நெரிசலையும் படத்துக்குள் கொணரவேண்டும். இடையில் அந்தச் சிறு பெண்ணும் நடிக்கவேண்டும், அவர்களில் ஒருவராக.. இது தான் தொழில் நுட்பம். இந்த தொழில் நுட்பம் இன்னம் நம்மவர்க்கு சாத்தியமாகவில்லை என்று தான் நான் நிச்சயமாகச் சொல்வேன்..
ஜாஃபர் பனாஹி சிறையிலடைபட அவர் செய்த குற்றம் என்ன? அயதொல்லா கொமேனி ராஜ குருவாக இருக்கும் இரான் நாட்டில் பெண்கள் கால்பந்தாட்டம் பார்க்கப் போகலாமா? கர்ப்பமாகி தவறு செய்த பெண் தான் கர்ப்பத்தைக் கலைக்கலாமா? அவளுக்கு உதவுவது குற்றம் என்று மறுக்கும் சினேகிதி நர்ஸும் டாக்டரும் இருக்கும் நாட்டில். சரி. இந்தச் சிறு பெண் எட்டு வயதுப் பெண் அம்மாவுக்காகக் காத்திருக்கும் பெண்ணின் கதையில் என்ன குற்றம்.?
எப்படியடா இதையெல்லாம் படம் எடுக்கிறார்கள் என்று நாம் வியக்கச் செய்தவன் சிறையில். கெட்டிப்பட்ட மதவாதிகளின் இறுகிய மனங்கள் ஆட்சி செய்யும் நாட்டில் இருக்கும் வதைபடுவோருக்கு சாத்தியமாகும் படங்கள் இந்த மதச் சுதந்திரம் மதசார்புற்று இருக்கும் சுதந்திரம், பிராமனின் நாக்கில் இருக்கும் சரஸ்வதி எங்கு மலம் கழிப்பாள் என்று கேட்கும் சுதந்திரம் உள்ள நாட்டில் ஏன் மாயா ஜாலங்களே மக்கள் விரும்பும் சினிமாவாகிறது? அதனால் தான் நம்மவரகள் அரசுக்கு வாரத்துக்கொரு முறை பாராட்டு விழா கொண்டாடுகிறார்கள். ஏதாவது ஒரு காரணம் வைத்துக்கொண்டு. அதில் தம் ஜன்ம சாபல்யம் காண்கிறார்கள். இவர்களும் சிறை செல்ல வேண்டும் என்று சொல்லவில்லை. கொஞ்சம் முதுகெலும்போடு, கொஞ்சம் வியவஸ்தையோடு, கொஞ்சம் பொதுப்புத்தியை இழக்காமல் இருக்கலாம். இதுவே இவர்களிடம் அதிகம் வேண்டுவதாகிறதோ என்னவோ!
தொடரும்....
http://thamizhstudio.com/serial_4_30.php
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment