Tuesday, September 6, 2011

தூங்கா நகரம் மதுரை - ந. முருகேசபாண்டியன்



தூங்கா நகரம் மதுரை - ந. முருகேசபாண்டியன்

ந. முருகேசபாண்டியன்


இரண்டாயிரமாண்டு வரலாற்றுப் பழமையான மதுரை, கால வெள்ளத்தில் தாக்குப் பிடித்து நிலைத்திருப்பது பெரிய விஷயம் தான். வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு அரசியல் பின்புலங்களில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டாலும், அவற்றையெல்லாம் உள்வாங்கிக் கொண்டு நிமிர்ந்து நிற்கும் மதுரையின் முகமானது பன்முகத்தன்மையுடையது. ஒரு நகரம் என்பது வெறுமனே கட்டடங்ளும் தெருக்களும் நிரம்பிய இடமும் வெளியும் சார்ந்தது மட்டுமல்ல. ஆறு தன் பாதையை மாற்றிக் கொள்வது போல, மதுரை போன்ற பழமையான நகரமும், அவ்வப்போது தனது இருப்பிடத்தை மாற்றியிருந்திருக்க வாய்ப்புண்டு. பழம் பெருமையை மட்டும் முன்னிறுத்திக் கொண்டு புறத்திலிருந்து வரும் அரசியல் நெருக்கடிகளை எதிர் கொள்வது என்பது அந்நகரத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். கி.பி. 1333 – இல் மதுரை நகரில் டில்லி சுல்தானிய அரசு ஏற்பட்டது என்ற தகவல் பரிசீலனக்குரியது.



அன்றைய காலகட்டத்திலிருந்து பல்வேறு அரசியல் மோதல்கள், போர்கள் மதுரையை மையமாக வைத்துத் தொடர்ந்தது. இஸ்லாமியர்கள், நாயகர்கள், ஆங்கிலேயர்கள் என வேற்று மொழியினரின் அதிகாரத்தின் கீழ், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மதுரைக்காரர்கள் பல நூற்றாண்டுகள் வாழ நேர்ந்தது. மதுரையில் விஜயநகரப் பேரரசின் ஆட்சி நிலவிய போது, துணி நெசவினுக்காகக் குஜராத் பகுதியிலிருந்து அழைத்து வரப்பட்ட சௌராஷ்டிர மொழி பேசும் மக்கள் இன்று மதுரையெங்கும் பரவியுள்ளனர். மதுரை நாடாளுமன்ற உறுப்பினராகச் சௌராஷ்டிரர் ஒருவர் தான் கடந்த பத்தாண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டது வரலாற்று விநோதம்தான். ஒப்பீட்டளவில் பல்வேறு மாற்றங்களுடன் நவீன காலத்திற்கு ஏற்ப மாறிக் கொண்டிருக்கும் மதுரை நகரின் ஆன்மா தனித்துவமானது.

இன்றைய உலகமயமாக்கும் காலகட்டத்தில் எல்லாவிதமான பண்பாட்டு அடையாளங்களும் சிதைக்கப்பட்டு, வேகவேகமாக ஒற்றைத் தன்மைக்குள்ளாகிக் கொண்டிருக்கும் நிலையில் மதுரை நகரம் மட்டும் விதிவிலக்காக இருக்க முடியாது. எனினும் 1360 முதல் 1380 வரை நவீனத்துவத்தின் ஆளுமை படராத மதுரை நகரானது, வெள்ளந்தியான பெரிய கிராமமாகச் சோம்பிக் கிடந்த நிலையைப் பதிவாக்கிட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அன்றாட வாழ்க்கையில் மக்கள் எப்படி வாழ்ந்தனர் என்ற பரிவு எதிர்காலத்தில் சமூக வரலாறாகி விடும். அவ்வகையில் 1960 உள் தொடங்கி மதுரை நகரத்தின் இயல்புகளை என் சொந்த அனுபவத்தின் மூலம் பதிவு செய்ய முயன்றுள்ளேன்.

மதுரை நகரின் மையமாக உள்ள மீனாட்சி அம்மன் கோவிலை முன்வைத்துச் சதுர வடிவில் விரிந்து செல்லும் தெருக்கள் நெரிசலாகவும் இறுக்கமாகவும் இன்றளவும் உள்ளன. மாடுகளை வளர்த்துப் பால் வியாபாரம் செய்யும் கோனார் சாதியினர் வடக்கு, மேற்குப் பகுதிகளில் பெருமளவில் குடியிலிருந்து இன்றும் தொடர்கின்றது. மீனாட்சி அம்மன் கோவிலும், அங்கு ஆண்டு முழுக்க நடைபெறும் பல்வேறு திருவிழாக்களும் பெரிய அளவில் சாதாரண மக்களை ஈர்க்காத காலகட்டம் இருந்தது. 1930 களில் கூட பிறப்பினால் தாழ்த்தப்பட்டவங்களும் நாடார் சாதியினரும் கோயிலுக்குள் நுழையக் கூடாது என்று வைதீக சிந்து சமயம் தடை விதித்திருந்தது. எனவே உழைக்கும் மக்களுக்கும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் பெரிய அளவில் தொடர்பில்லை. வடக்குக் கோபுரத்துக்கு வெளியே இருக்கும் முனியாண்டி சாமியை வழிபடும் மக்களில் பலர், பிரமாண்டமான கோவிலுக்குள் நுழைவதில் ஆர்வமற்று இருந்தனர். மதிய வேளையில் கோவில் நடை சாத்தப்பட்டவுடன், வெளிப் பிரகாரத்தில் ஜிலுஜிலுவென வீசும் காற்றில் வயதான ஆண்கள் பலர் படுத்து உறங்கினர். ஒண்டுக் குடித்தன வீடுகளில் பகல் வேளையில் உறங்க வாய்ப்பற்ற முதியவர்களுக்குப் பொழுதைப் போக்கிடவும் உறங்குவதற்கான இடமாகவும் கோவில் விளங்கியது.

மதுரை என்றால் சித்திரை திருவிழா பலருக்கும் நினைவுக்கு வந்த காலகட்டம் இருந்தது. சித்திரை மாதம் முழுமதி நாளில், மதுரையைச் சுற்றி 25 மைல் தொலைவில் வசிக்கும் மக்களில் பலர் மதுரைக்கு நடந்தும், மாட்டுவண்டிகளிலும் வருவது வழக்கமாக இருந்தது. ஆயிரக்கணக்கான மாட்டு வண்டிகளில் மதுரைக்கு வந்தவர்களின் நோக்கம், ஆற்றில் குதிரை வாகனத்தில் எழுந்தருளும் கள்ளழகரைத் தரிசிப்பது மட்டுமல்ல. ஒரு வகையில் கொண்டாட்டம் தான். வருடம் முழுக்க வயல்வெளியில் கடுமையாக உழைத்த கிராமத்தினர், அரிசி, கிடாய், சேவல், விறகு, பாத்திரம் என வண்டிகளில் எடுத்துக் கொண்டு உறவினர்களுடன் மதுரை நகரின் திறந்த வெளித் திடல்களில் தங்கி, சமைத்துச் சாப்பிடுவதில் உற்சாகமடைந்தனர். விடலைப் பருவத்தினர் மதுரை நகரத்துத் திரையரங்களில் தவமிருந்து ஒரே நாளில் இரண்டு திரைப்படங்களைக் கண்டு மகிழ்ந்தனர். அப்புறம் தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் சித்திரைப் பொருட்காட்சி சுற்றிப் பார்க்கவும், பொருட்களை வழங்கவும் ஊக்கமளித்தது.

அனுபவங்களில் வட வைகை ஆறு மணல் படுகையுடன் மதுரை நகருக்குள் அழகாகக் காட்சியளித்தது. கடும் கோடைக்காலத்தில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர். ஆற்றில் ஒரமாகச் சென்று கொண்டிருக்கும். ஆற்றின் நடுவில் பல்வேறு அமைப்புகள், வணிக நிறுவனங்கள் தென்னங்கீற்றினால் பெரிய பந்தல்கள் போட்டிருப்பார்கள். வி.எஸ். செல்வம் சோப், சைபால் களிம்பு, கோபால் பல்பொடி, பூச்சி பாக்கு ஆர்.எஸ். பதி மருந்து, தென்னை மரக்குடி எண்ணெய் போன்றவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனத்தாருடன், தனிப்பட்ட அமைப்புகளும் ஆறு முழுக்கக் கொட்டகைகள் போட்டிருந்தன. அழகர் ஆற்றில் இறங்கிய நாளில் இரவில் பத்து விதமான அலங்காரத்தில் காட்சி தருவார். அதனைக் காண மதுரை நகரத்து மக்கள் புளியோதரை மற்றும் தின் பண்டங்களுடன் இரவு முழுக்கக் குழுமியிருப்பார்கள். ஓடி விளையாடிய குழந்தைகள் கொட்டகைக்குள் ஆனந்தமாக உறங்குவார்கள்.

வைகை ஆற்றில் மழைக்காலத்தில் வெள்ளம் பெருகியோடுவது செய்தியாக மாறாத காலகட்டமிருந்தது. ஒரு மாதம் கூட ஆள் இறங்க முடியாத அளவுக்குச் சீறாய் பாய்ந்து வெள்ளம் கழித்தோடியது. வெள்ளம் வற்றிய பிறகு, ஆயிரக்கணக்கான மக்கள் ஆற்றில் குளிப்பதும் துணி துவைப்பதும் என மதுரை மக்கள் வாழ்க்கை முழுக்க ஆற்றைச் சார்ந்திருந்தது. புலவர் நாவில் பொருந்திய வையை என்னும் பொய்யாக் குலக்கொடி எனப் பரிப்பாடலில் போற்றப்படும் வையை பண்பாட்டின் அடையாளமாக மதுரை நகர மக்களுடன் பின்னிப் பிணைந்திருந்த காலகட்டம் இருந்தது என்பது இன்றைய தலைமுறையினர் அறியாதது,

மதுரை நகரத்து மக்களுக்கு இயல்பிலே தெனாவிட்டு அதிகம். பல நூற்றாண்டுகளாக நிலைத்திருக்கும் நகரத்தில் தொடர்ந்து தலைமுறைகளாக வாழ்ந்து வருவதானல், எது குறித்தும் பெரிதும் அலட்டிக் கொள்ளாத மனப்பாங்கு பலருக்கும் உள்ளது. இதனால் எல்லாவற்றையும் பகடி செய்வது சாதாரணமாக நடைபெறுகிறது. சுமை தூக்கும் தொழிலாளி, ரிக்ஷாகாரர், பேருந்து நடந்துநர் எனத் தொடங்கி யார் யாரை வேண்டுமானாலும கேலி, கிண்டல், வந்து செய்தாலும் யாரும் அதை சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். கேலிக்குள்ளாரும் நபரும் மெல்லச் சிரித்துக் கொள்வார்.

நாங்க எல்லாம் ஊருக்குள்ளே ரொம்பப் பேருக்கு யோசனை சொல்றவங்க என்று சொல்லும் திரைப்பட நடிகர் வடிவேலு சித்தரிக்க முயலும் உதார் பேர்வழி, மதுரையின் அடிமட்டத்துக் கச்சா ஆள். ஏய் எங்ககிட்டயே உன் வேலையைக் காட்டுறீயா? நாங்க எல்லாம் அரிவாளை எடுத்தோம் …. .. யே யாருன்னு தெரியாமலே பேசீட்டுப் போறியே . …. .. என்னா நீ பாட்டுக்குப் போறே . . மாமா நிக்கிறேன் இல்லே . .. மாமாவைக் கவனிச்சிட்ல் போ மாப்பிள்ளை நாம விட்ட உதாரில் ஆள் டர்ராயிட்டான், . .. அவன் பண்ணின வேலைக்குச் சங்கைக் கடிச்சத் துப்பினால் . . . இப்படியான மதுரை நகரத் தெருப் பேச்சுகள் கட்டமைக்கும் புனைவுகள் அளவற்றவை. நாங்க, எங்க என்ற சொற்கள் மூலம் சலம்புகிறவர் உணர்த்த விரும்புவது, தான் ஒரு பெரிய கும்பலின் ஆள் என்று. தெருபோரத்தில் அமர்ந்து இதுபோன்று வீம்பு பேசும் பேச்சுகளை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஒரு காலகட்டத்தில் மதுரை நகரில் ரௌடிகள் வெவ்வேறு பகுதிகளில் உதார் காட்டிக் கொண்டிருந்தனர். பாண்டி என்ற சொல்லுக்கு முன்னால் ஏதோ ஒரு ஒட்டுடன் வலம் வந்த ரௌடிகள் காலப் போக்கில் மறைந்து போயினர். சிலர் மதுரை நகரத் தெருவோரத்தில் குத்துப் பட்டுச் செத்துக் கிடந்தனர். மக்களைப் பயறுத்தி வாழும் ரௌடிகளின் காலம் என்பது மிகக்கொடியது. வெறுமனே ரௌடி என்ற லேபிளுடன் வாழ்ந்த ரௌடிகள், இன்று அரசியல் வேஷம் பூசிக் கொண்டு அண்ணன் ஆதரவில் மதுரை மக்களுக்குத் தந்து கொண்டிருக்கும் தொந்தரவுகள் அளவற்றவை.

இரவு முழுக்க மதுரை நகரத் தெருக்களில் வழிப்பறி பற்றிய பயமில்லாமல் நடந்து செல்லாம். மதுரை பெரியார் பேருந்து நிலையம் முதலாகச் சிம்மக்கல், முனிச் சாலை, காளவாசல், தத்தனேரி என நகரமெங்கும் இரவுக் கடைகள் விழித்திருக்கும். எந்தப் பொருளையும் நள்ளிரவு நேரத்திலும் வாங்கலாம். இரவு 11 மணி முதல் காலை 4 மணி வரை எந்த நகரப் பேருந்தும், புறநகர்ப் பேருந்தும் இயங்காத காலகட்டம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். திரையரங்குகளில் இரண்டாவது ஆட்டம் திரைப்படம் பார்த்து விட்டு இரவு 2 மணிக்கு கிளம்பியவர்கள் பேருந்து நிலையத்தில் காத்திருப்பார்கள். எழுபதுகளில் கவிஞர் சமயவேல், புதிய ஜீவா, காமராஜ், முருகேசன் போன்ற பல நண்பர்களுடன் இரவு முழுக்க மதுரைத் தெருக்களில் நடந்தவாறு பேசிக் கொண்டு, பொழுது புலர்ந்தவுடன் கிளம்புவது எனது வழக்கம். எங்களைப் போன்று பல்வேறு குழுவினர் தெருக்களில் நடந்து கொண்டிருந்தனர். தேநீர், புகைத்தல் எனப் பேச்சுகளும் மறு பேச்சுகளும் காற்றில் மிதக்கும். இராப் பறவை என்ற சொல்லுக்கான அர்த்தத்தை மதுரைக்காரர்கள் புரிந்து வைத்திருந்தனர். கம்பப்பயல் தான் ராத்திரியில் தூங்குவான் என்று மூத்த எழுத்தாளர் கரிச்சாள் குஞ்சு எழுதியிருப்பது தற்செயலானது அல்ல ஆழ்ந்த அனுபவத்தின் விளைவாகும்.

எண்பதுகளின் முற்பகுதியில் நாவலாசிரியர் ப. சிங்காரத்துடன் பேசிக் கொண்டிருந்த போது சொன்னார், மதுரை மாதிரி ஒரு ஊர் வராதுங்க. ராத்திரி எந்த நேரமானலும் எது வேண்டுமென்றாலும் சாப்பிடலாம், என்ன வேணும்னாலும் வாங்கலாம் என்று. இரவு என்பது மனித உயிர்கள் உறங்குவதற்காக என்ற கருத்தினைப் புரட்டிப் போட்டு இருளின் வழியாகத் தங்கள் இருப்பினைத் தேடிய மதுரைக் காரர்களில் உலகம் வேறுவிதமானது.

அந்தி வேளையானால் அசைவ உணவு என்ற வாசங்களுடன் எழுபதுகளில் மதுரையில் பிரபலமான மிலிடரி ஓட்டல் அல்லது காக்கைக் கடை இன்று தமிழகமெங்கும் கேரளாவிலும் பரவி விட்டது. பரோட்டா, ஆட்டிறைச்சி, உணவு வகைகளுடன் மாலையில் தொடங்கி நள்ளிரவு வரை நடக்கும் உணவகங்களுக்கெனத் தனிப்பட்ட வாடிக்கையாளர் இருந்தனர். அதிலும் கீழ்வாசல், விளக்குத்தூள், முனிச்சாலை, தெற்கு வெளி வீதி, தெற்கு வாசல் போன்ற பகுதிகள்ல இரவு நேர உணவகங்கள் இன்றும் விஷேசம் தான். மதுரை கீழவாசல். முனிச்சாலை பகுதிகளில் இரவு 9 மணிக்கு மேல் தெருவோரம் சௌராஷடிரார்களால் தொடங்கப்பட்ட இட்லி, தோசை கடைகளில் வழங்கப்பட்ட உணவுகள் வீட்டுத் தயாரிப்புகள் போலிருந்தன. வகைவகையான சட்டினிகள் சுவையாகப் பலரையும் கவர்ந்தன. பொங்கல், புளியோதரை, தக்காளிச் சாதம் போன்ற உணவு வகைகள் சுவையுடன் சௌராஷ்டிரார் தொடங்கிய அன்னபூரணி பொங்கல் கடை இன்றும் பிரசித்தமாக உள்ளது. பருத்திப் பால், ஜிகிர் தண்டா போன்ற பானங்கள் பல்லாண்டுகாளகப் பிரபலமாக உள்ளன. தென்னை மரத்தின் குருத்தினை மெல்லிய சீவில்களாகச் சீவி விற்கிறவரும் அதை வாங்கி விருப்பத்துடன் உண்கிறவர்களும் நிரம்ப உள்ளனர். இரவு வேளையில் 2 மணிக்கு கண் விழிக்கும் போது, பசியெடுத்தால் சாப்பிடுவதற்குத் தெருவோரத்தில் கடைகள் உண்டு என்பது அற்புதமான விஷயம் தானே.

மதுரை போன்ற பழைய நகரத்தின் முகம் மாறிக் கொண்டிருக்கிறது என்பதற்கு அடையாளம் உணவகங்கள் தான். நெல்பேட்டை சோயா ஹோட்டல், டி.எம். கோர்ட் மெட்ராஸ் ஹோட்டல், டவுன் ஹால் ரோடு சுல்த்தாணியா ஹோட்டல், ரயில் நிலையம் எதிரில் அன்னபூரணி ஹோட்டல், காலேஜ் ஹவுஸ் ஹோட்டல், ஸ்ரீராம் மெஸ் விளக்குத் தூண் அருளானந்தம் ஹோட்டல், சித்திராக்காரத் தெரு தேனியப்பன் ஹோட்டல், நேதாஜிரோடு மாடர்ன் ரெஸ்டாரண்ட் . .. என நகராமெங்கும் பரவியிருந்த உணவகங்களில் சில இன்று மறைந்து விட்டன. இஸ்லாமியர் நடத்திய உணவங்களில் மாட்டிறைச்சி உணவு வழங்கப்படுவதாகப் பேச்சு நிலவினாலும, அந்த உணவங்களுக்கு விருப்பத்துடன் போகின்றவர் எண்ணிக்கை கணிசமாக இருந்தது. டி.எம். கோர்ட் என அழைக்கப்படும் இடத்தில் இன்றைய தெற்கு மாஜி வீராயும் மேலமாசி வீதியும் சந்திக்கும் இடம் இருந்த மெட்ராஸ் ஹோட்டலில் நான்கு பேர் சேர்ந்து சாப்பிடும் வகையில் சிறிய அறைகள் தள்ளு கதவுடன் இருந்தன. கல்லுரி மாணவர்கள், இளைஞர்கள் சம்சாவைப் புதினா சட்டினியைத் தொட்டுத் தின்று, தேநீர் குடித்தனர். பன் பட்டர் ஜாம், சமோசா போன்ற உணவுகள் அந்த உணவகத்தில் பிரபலம். தேநீரைக் குடித்து விட்டு ஒரு மணி நேரம் கூட அமர்ந்து அரட்டையடித்துக் கொண்டிருப்போம். உணவக உரிமையாளர் எதுவும் சொல்லமாட்டார். போரடித்தால் இன்னொரு செட் சம்சா. தேநீர் எனப் பேச்சு நீளும். வித்தியாசமான உணவு, பேச்சு என இடமளித்த மெட்ராஸ் ஹோட்டல் மறைந்து போனது

to read more: http://koodu.thamizhstudio.com/katturaigal_25.php

No comments:

Post a Comment