Wednesday, March 9, 2011

பெருந்தேவி – வானை முட்டும் நுரைகளின் கெக்கலி



ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் -6

பெருந்தேவி – வானை முட்டும் நுரைகளின் கெக்கலி

குட்டி ரேவதி

‘புத்தகங்கள் தமக்குள்ளே உரையாட இருக்கிறோம் யாம் வாசித்துக்கொண்டே. நிகழும் அல்லது அற்ற உரையாடலின் சாத்தியத்தை நிர்ணயிப்பது தமிழ் நூன்மரபு. கவிதைகள் இவை பண்பட்ட மரபின் வசமானால் மாத்திரமே எழுத்தென்று அறியப்படட்டும்’ என்ற வரிகளை வாக்குத் தத்தங்களாக்கி கவிதைக்குள்ளே அழைத்துச் செல்லும் தனது முதல் கவிதைத் தொகுப்பான ‘தீயுறைத்தூக்கம்’ எனும் கவிதைக்குரலுடன் வந்தார், பெருந்தேவி. 1997- ல் வெளிவந்த இந்நூலுக்குப் பின் பெருந்தேவியின் கவிதை ஆளுமை நிகரற்றப்பயணங்களால் விரிந்து கொண்டேயிருக்கிறது.

தன் அக உணர்வுகளை தொடர்ந்து அர்த்தப்படுத்தவும் மொழியாக்கவும் நாம் எடுத்துக்கொள்ளும் மொழிவழியான பயிற்சி தான் கவிதை என்ற புரிதலை தமிழ்த்தளத்தில் முதன்மையாக முன்வைத்த பெண் கவிஞர் பெருந்தேவி. சொற்களின் வளமான தேசத்தை இவர் தனக்கு ஏற்படுத்திக்கொண்டது போல் எவரும் அதற்கு முன்போ பின்போ ஏற்படுத்திக்கொள்ளவில்லை. ஒவ்வொரு சொல்லின் பின்னாலும் தளும்பிக்கொண்டிருக்கும் அர்த்த உணர்வு சலித்துப் போன காலக்கட்டமதில் அச்சொற்களின் வழியாகவே அவ்வுணர்வுகளைப் புழக்கத்திற்குக் கொண்டு வரும் மொழியைக் கவிதையாக்கினார், தன் தீயுறைத்தூக்கத்தில்.

விழைந்து தானிருக்க
மறுத்து சருகாக
சலசலத்து வீழும்
இலைத்துளிர் குளத்தில்.

மறுத்து தன்னிருப்பை
விழைந்து தானாக
வண்ணம் சிறகடிக்கும்
கூட்டின் புழு.

கற்கும் வாழ்வு கசடற அதனதன்
நகர்ந்தேன் என,

பிறகான வண்ணத்தின்
முட்டைகளால்
பரப்படர
இலை வீழும்
இன்னொன்று.

நீர்முகம் அலையும்
கற்பிதம் அற.

இப்படித்தான் சொற்கள் தமக்குள் அடர்த்தியாக்கி வைத்திருந்த உணர்வுகளை சொல்லும் பொருட்டும், ஒரு சொல்லோடு பிறிதொரு சொல்லை இணைத்து வேறு அர்த்தங்களுக்கு அவ்வுணர்வுகளை இழுத்துச்செல்வது என்றும் நவீனக்கவிதையில் இத்தகைய சொல் முறையை அறிமுகப்படுத்தியதுடன் அம்முறையைத் தன் வசப்படுத்தவும் செய்தார்.

சென்றது கடலுள்
வந்தது திரும்ப
நிலமெலாம் உப்புக்காடு
மணலெலாம் மணிநெற்கூட்டம்
கோள்திரிய வாய்திறந்து
நதிசேரும் புனல் பெரிது
கரையேறும் பவளப்பூச்சி
கடற்கன்னி தானியம் தின்னும்
வயல்விரவும் நாற்றாக
துயில்மடிந்த சுருளோசை
படகமிழ்ந்த நீர்த்தடத்தில்
பைகளாகும் மனிதருக்குள்
விலைபேசும் சிறுமீன்கள்

இத்தகைய சொற்சுவையும் கட்டமைப்பும் கொண்ட கவிதை மொழியிலிருந்து பின்னாளில் தன்னைத் தளர்த்திக்கொண்டார். இது இவரது மொழி வெளிப்பாடானது, இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பான, ‘இக்கடல் இச்சுவை’யில்.

ஒவ்வொரு சிறுவனின் வீட்டின் பின்புறத்திலும்
ஆகாயவிமானங்கள் கட்டப்பட்டிருக்கின்றன
ஒவ்வொரு சிறுமியின் காதுகளும்
புகழுரைகளின் காதணிகளுக்கென்றே வளர்க்கப்படுகின்றன
ஒவ்வொரு ஆண்மகனும் கலவியின் இன்பத்தில்
உயரப்பறத்தலை மனதில் கொள்கிறான்.
ஒவ்வொரு பெண்மணியும் அப்போது தன்
யோனியும் காதாகி வளரப் பிரார்த்திக்கிறாள்.
சிறுவன் ஆண்மகனாக சிறுமி பெண்மணியாக மட்டுமே வளர்வதாக
தப்பபிப்ராயம் கொண்டவர் அனேகம்.
சிறுமி ஆணாக வளரும் போது
விமானம் கட்டப்பெறாத
வலிய தன் துளைகண்டு எரிச்சலடைகிறான்.
சிறுவன் பெண்ணாக வளரும்போது
புகழுரையின் ஓடுதளத்தைக் கண்ட அவசரத்தில்
தன் விமானத்தை இறக்குகிறாள்.
சிறுமி சிறுவனாகவும் சிறுவன் சிறுமியாகவும்
வளர்வதுமுண்டு.
அதி
காலையாகவும்
அந்தி
மாலையாகவும்
தெரிந்த பொழுதுகளோடு கூடவும்
வேறு ரம்மியங்கள் சேர
ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் அவர்கள்.
காதுகளை உடலோடு இணைத்தும்
விமானங்களை உயரத்திலிருந்து பிரித்தும்
காணத்தெரிந்தவர்களும் கூட.

இக்கவிதை பெண்- ஆண் உடலை குறியீடுகளாக்கி, பாலியல் அரசியலை மிகவும் நுட்பமாகப் பேசும் கவிதை. இக்கவிதை பேசும் பாலியல் சமன்பாடுகள் நவீன பெண் –ஆண் உளவியலையும் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டக்கூடியன. பெண்- ஆண் என்று எந்தப் பக்கமும் சாயாமல் இரு வகையான உடலும் பாலியல் சிக்கலுக்குள் சிக்கிக்கொண்டு தத்தளிப்பதை அதன் பொருள் முனை முறியாது எடுத்து வைத்திருக்கிறார். அதே சமயம், எவ்விடத்தில் சிறுமி, சிறுவனாகிறான் என்றும் எங்கு சிறுவன் சிறுமியாகிறாள் என்றும் பிறிதொரு சமன்பாட்டை விளக்குகிறார். உடலின் பெண்மை, ஆண்மை இரண்டையுமே இழக்கச் செய்தலோ அல்லது இரண்டையுமே வலிமைப்படுத்தலோ சமூகத்தில் தொடர்ந்து நடந்து கொண்டுதானிருக்கிறது. நவீனச் சமூகத்தின் பெண், ஆண் ஆதங்கங்கள் விமானமாயும் காதணியாகவும் மாறுவது அழகர்த்தம் தருகின்றது. எந்தச் சமூக அமைப்பிலும் ஆணின் குறிகள் உயரப்பறக்கும் இழுவிசையுடனும், பெண்ணின் குறிகள் தன் புகழுரை பேசும் அணிகளை அணிந்து கொள்ளும் ஆர்வங்களுடனும் தாம் மதர்த்து எழுகின்றன.

ஆனால், ’அழுகுணி’ கவிதை பந்தயத்தில் தான் எந்தப்பக்கம் நின்று ஆடினாலும் வெற்றி பெறும் ஆணின் விளையாட்டைச் சொல்கிறது. இத்தந்திர விளையாட்டைப் புரிந்து கொள்ளுதல் பாலியல் அசமத்துவத்தைப் புரிந்து கொள்ளவும் உதவும்.

அழுகுணி

பகடையாட்டத்தில் தோற்கும் நிலை
தெரிந்தவுடனேயே
பதறி ஆட்டத்தைக் காலால்
கலைத்துவிடும் சிவன்
சாபமிட்டு விடுவான் உடனுக்குடன்
உமையொர் பாகத்துக்கு
அவ்விடம் நீங்கி
இவ்விடம் சேர.
ஈசன் அருள் பெற்ற
அசுரரைக் கொல்லும் முனைப்பில்
ஆயிரமாயிரம் ஆண்டுகளின் தபசு
அவளது
ஆயுத நீட்சிகளையும்
குருதி குடிக்கக் கன்னிப்பெண்களையும்
அடிமைத்தலை தாங்கிகளையும்
இச்செகக்
கோயில்களின் கலாகுழுமங்களாகப்
பிறப்பிக்க
அங்கே விளையாட்டுத்துணை அகன்ற துக்கத்தில்
எதிராளி மறைந்த களிப்பில்
தானே ஆடிக்கொள்வான் பித்தன்
இப்பக்கத்திலிருந்தும்
அப்பக்கத்திலிருந்தும்
தெறித்த எண் இணைவுகள்
புழங்க வரம் பெற்று சொற்றொடர்களாக
அவதரிக்க
இறை தாயகத்தின் முதல் ஒழுங்காக
உலகம் நிறைக்க
தாயுமாகிய
விளையாட்டின்
தந்தையாட்டம் ஜெயிக்கும்
எப்பக்கம் நின்று ஆடினாலும்

இம்மாதிரியான தந்தையாட்டங்களை அழுகுணி ஆட்டம் என்கிறார் கவிஞர்.

ஊரிழுக்கும்

ஒவ்வொரு முக்கிலும்
பலிகளைக்
கேட்டும் கொண்டும்
நகர்கிறது குடும்பத்தேர்
மயானத்தை நோக்கி


உட்பொருள், சொல்லாட்சி, நடை நயம், உணர்வெழுச்சி, தொடர்ந்த சலனம் மேற்கண்டவற்றைக் கையாளும் கவிஞரின் ஆளுமை இவை எல்லாவற்றின் வழியாகவும் தான் கவிதை உருப்பெறுகிறது. இதில் ஒன்று தளர்ந்தாலும் கவிதை தன் இலக்கை அடையாமலோ அல்லது கவிஞரின் நேர்மையின்மையைப் பறைசாற்றுவதாகவோ ஆகிவிடுகிறது. இத்தகைய தருணத்தில் உடல்வெளிக்கவிதைகள் எனப்படுபவை உடல் எதன் கயிறெல்லாம் கொண்டு கட்டப்படுகிறதோ அந்தக் கயிறுகளை எல்லாம் அறுத்தெறியும் மொழியுடன் உருவாகி நிற்கின்றன. குடும்பம், பால்நிலைப்பாகுபாடுகள், அர்த்தம் பொதியப்பட்ட முனை மழுங்கிய சொற்கள் இவற்றையெல்லாம் உடைத்தெறியும் வீர்யத்துடன் எழுகின்றன. பெருந்தேவி, இந்நுட்பங்கள் எல்லாவற்றையும் அறிந்தவராயும் சொற்களை நவீனப்படுத்தும் தன் முயற்சியைத் தொடர்பவராயும் இருக்கிறார். ‘ஒவ்வொரு கண்ணும் ஆகப்பெரும் வனம்’, ‘இரவின் ஒவ்வொரு நாளும் தூக்கத்தின் விழுதுகளைப் பற்றி விரைந்து கனவுகளுக்குள் விழுகிறேன்’, ‘என் உதடுகளின் பாகு சொற்களை இனித்துக் கெட்டிக்கிறது’ எனும் சொல் தொடர்கள் இன்னும் அதிகமாய் தித்திக்கின்றன.

’உலோக ருசி’ என்ற தன் மூன்றாம் தொகுப்பில் நவீன வாழ்வில் நவீனமடைந்திருக்கும் மனித உறவுகளின் புதிர்களையும் அறியாமைகளையும் விலங்குகளையும் விடுவிக்கும் கவிதைகளுடனும் அவ்வாழ்வின் முட்டுச்சந்துகளுடனும் திருப்பங்களுடனும் கூட வருகிறார். இணைய வெளி தந்த புலனுணரா காமங்களை மொழிப்படுத்துவதில் தீவிரப்பட்டவராயும் அப்பாலினத் தன்மையை அதன் நேர்மையான அரசியலுடன் முன்வைப்பவராயும் இருக்கிறார். ’மதிப்பு’ எனும் கவிதையில், ’ஆண்கள் / பெண்கள் / இருபாலர் / உடல்களுக்கு / உடல்களின், நீண்ட உறவுக்கு / கொழுத்த வங்கிக்கணக்கு போதும். / சின்ன முத்தங்களே / தரமுடியாத உறுதிமொழிகளைக் / கேட்கின்றன விலையாக. ’ கவிஞர் குறிப்பிட்டிருக்கும் உடல் சார்ந்த ஒப்பந்தங்களும் பேரங்களும் இன்றைய பாலின உறவுமுறையின் நேரடியான அணுகுமுறைகளாகி விட்டன.

என்றாலும் எனக்கு பெருந்தேவியிடம் பிடித்தமானது, அவரது கவிதைகளில் தொனிக்கும் பல்வேறு பட்ட வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் நின்று பேசும் பெண்குரலாய் மாறி நிற்கும் கவிதைகள் தாம். தன் உடல் வெளியை விரிக்கும் குரலாயும் உடலுக்கும் அதன் மொழிக்கும் பொதுத்தன்மையையும் அடையாளத்தையும் கட்டமைப்பில் அவர் தீவிரப்பட்டிருப்பது இங்கே தான். ஒரு பெண்ணியவாதிக்கு வயப்படும் தீவிரமான போராட்டத்தை இவர் மொழிவழியாகவும் அதில் கையாளும் நவீனப் படிமங்கள், உருவகங்கள், ஆளுமைச் சித்திரங்கள் வழியாகவும் தொடர்ந்து வழங்குகிறார். இது பெண்ணல்லாதோருக்கும் பெண்விடுதலைக்கான விழுமியங்களைக் கற்றுக்கொடுக்கும் பயிற்சியை ஆற்றும் என்பதில் சந்தேகமில்லை.

புஷ்பா சேலையணிந்த முதல் நாள்

புஷ்பாவின் அண்ணன்
குளியலறைக்குப் போய்
நேரங்கழித்து வந்தான்
புஷ்பாவின் அக்கா
அத்தானை
அன்று அழைத்து வந்தது தான்
புஷ்பாவின் அப்பா
அவள் மேல் கண்ணடிபடுமென்றார்
புஷ்பாவின் காதலன்
அவன் எங்கே சேலையைப் பார்த்தான்?
புஷ்பாவின் சிநேகிதி
அவள் மட்டும் தொட்டுப் பார்த்தாள்.

புஷ்பா
புஷ்பாவின் அம்மாவாக இருந்தபோது
சேலையணிந்த முதல் நாள்
இப்படித்தான்
சிடுசிடுத்தாள்
தடுக்கி விழாமலே
தடுக்கி விழுந்ததாக நினைத்துக் கொண்டாள்
கற்பனையில்கூட அன்று
அவள் சேலை விலகவேயில்லை.

இக்கவிதை, மறுவாசிப்பில் பால் நிலை உட்பொருளை மிகத்துல்லியமாகவும் கத்தியைப் போன்றும் எடுத்துவைக்கிறது. குடும்பச்சுவருக்குள், கழிவறை, குளியலறை, படுக்கையறையின் சுவர்களுக்குள் தனிமனிதன் கொண்டிருக்கும் பாலியல் உள்நோக்கங்கள், வெளியுலகில் அவற்றை நேர்மையின்மையாய் ஆக்கி வன்மங்கொண்டு எழும் தன் சுயத்தை பிறர் மீது ஏவும் வல்லமையான பாலிமை கொண்ட மனிதர்கள் தாமே நாம்!

பாலியல் அரசியலைப் பேசுவதைக் காலமொட்டியும் வரலாறு ஒட்டியும் தன் இயக்கமாக்கிக் கொண்ட நவீனத்தமிழ்க் கவிதை, இன்று பேசவந்திருப்பதோ பண்பாட்டால் பிளவுண்டிருக்கும் பெண்ணுடல்களை அறிந்த காத்திரமும் அதற்கான உழைப்பும் கொண்டு அந்தப் பல உடல்களையும் முன் வைக்கும் இயக்கத்தை நோக்கி எல்லா பெண்களையும் குரலெடுத்து அழைக்கிறது. இது மிகவும் கடினமான முயற்சி என்றாலும் சீதை, ஆண்டாள் போன்ற தன் உடலை பக்தி என்ற பெயரில் ’கார்க் அடைப்பானா’ல் அடைத்துகொண்ட பெண்களை முக்கியமான படிங்மகளாக்குவது தொடரியக்கத்தைச் சாத்தியப்படுத்தாமல் போய்விடுமோ என்ற சந்தேகம் எழுகிறது. அப்பெண்களின் உடல்கள் ஆதிக்கத்துடன் இயங்கிய உடல்கள் என்பதால் தாம் கடவுளின் உடலை ஆண் உடலாக வரிந்து கொண்டவை, அதற்கு தம் உடலை வழங்கத்துணிந்தவை என்பது மறை பொருள்.

இம்மாதிரியான சிக்கலான ஒற்றைத்தன்மையான பெண் படிமங்களைப் புறக்கணித்தல் அல்லது பிற பண்பாடுகள் சார்ந்து சீரமைத்தல் எல்லா பெண்களும் ஓர் அணியாக உணர்வுகொள்ள உதவக்கூடும்.

பெருந்தேவியின் ‘என் புனல்’ கவிதை பேராற்றின் சுழிப்பும் பாய்ச்சலும் நிறைந்த கவிதை. நவீனபெண்ணுடலை மொழிப்படுத்தும் அழகியலும் சொல்லாட்சியும் கொண்ட இக்கவிதை, பெண்ணுடலுக்கான இலக்கைத் தீர்மானித்த அதே சமயம், அதைக்கைக்கொள்ளும் நம்பிக்கைகளுடனும் பாய்கிறது. மறுவாசிப்பில் தீவிர அர்த்தம் பெறும் உட்பொருள் கொண்ட கவிதை. வாசித்துப்பாருங்கள்!

என் புனல்

என் புனல் வலிது
கொப்பும் நுரையும் நிறைந்தது
பழைய வெள்ளத்தின் பயணம் தெரிந்தது
அபாயத்தின் நுட்பம் கூடியது
ஓடோட ஓட
நளினத்தின் அருங்கரைகள் நைகின்றன
ஒழுக்கத்தின் திண்தோள்கள் குலைகின்றன
இன்னும் இன்னும்
என்கிறதென் நீர்கள்
சரியின் புதைகுழிகள் அடித்துச்செல்லப்படுகின்றன
சரியற்றதன் மலர்கள் முக்குளிக்கின்றன
பேராண்மையின் சில கூரைகள் தடுமாறுதல் கண்டு
ஒரு சுழிப்பில் பெண்புனல் சிரிக்கிறது
அஞ்சும் பாவனையில் அலையுயரம் குறைகிறது
நீர்க்கால்களைப் பரப்பி எழும்புகிறது பின்
வானை முட்டுகிறது நுரைகளின் கெக்கலி
நாணுறத் தெரிந்த ஆணை
நாண மறுக்கிற பெண்ணை
இதமாய் அணைத்தல் அதன்
குளுமை அறிந்த ஒரு விதி.
ஆணைப் புரட்டிப் பெண்ணோடு இணைத்தல்
போகும்போக்கில் அதன் ஒரு இலக்கு.

----------------------------------------------------------------------------------------------

சிறு குறிப்பு: பெருந்தேவி ‘தீயுறைத்தூக்கம்’, ‘இக்கடல் இச்சுவை’, ‘உலோக ருசி’ ஆகிய மூன்று கவிதைத்தொகுப்புகளை எழுதியிருக்கிறார். பண்பாட்டு மானுடவியலில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். அமெரிக்காவில் க்ளேர்மாண்ட் மெக்கென்னா கல்லூரியில் வருகை உதவிப்பேராசிரியாகப் பணியாற்றுகிறார்.




1 comment:

மதுரை சரவணன் said...

thanks for sharing. perumthevi kavithaikal manathai thodukirathu... vaalththukkal

Post a Comment