Thursday, March 10, 2011

குறும்படங்களின் திரைக்கதை -1



குறும்படங்களின் திரைக்கதை -1

செவ்ளி


த. அறிவழகன்

காட்சி:1 இரவு/கிராமம்/வெளிப்புறம். 1/1
தாத்தாவும் பேரனும் காவலுக்குச் செல்கின்றனர்


தெரு விளக்குகள் எரிந்துகொண்டிருக்கின்ற மின் இணைப்புகள் வழங்கப்படாத வீடுகள் உள்ள கிராமம் காட்சிப்படுத்தப்படுகின்றது. தெருவில் ஒரு குழந்தை அழுதுகொண்டிருக்கிறது. கிராமத்தின் ஒரு குடிசைக்குள் இருந்து லாந்தர் விளக்கை ஏந்தியபடி ஒரு கிழவர் வெளியேருகிறார். உடன் தண்ணீர் கலயம் ஏந்திய சிறுவன் வருகிறான். இருவரும் முக்காடு இட்டபடி போர்த்தியிருக்கின்றனர். அப்போது பின்னணியில் ஒரு மாடு கத்தும் சப்தமும், கோழிகளின் சத்தமும் கேட்டுக்கொண்டிருக்கிறது. கிழவன் கையில் ஒரு கோட்டுக்கழி இருக்கிறது. கிராமத்திலிருந்து வெளிப்பகுதிக்கு நடந்தபடியே,

தாத்தா:
எப்பா காலடிய பாத்து வாடா..

பேரன்:
ம்..ம்.

என்கிறான். இருவரும் மறைகின்றனர்.

-காட்சி முடிவு-

காட்சி: 2 இரவு/கிராமம்/வெளிப்புரம் 2/1
பேய்பிசாசு பற்றி தாத்தா விளக்கமளிக்கிறார்

மரங்கள் அடர்ந்தத்தோப்பு வழியே ஏரிமேட்டைக்கடந்து போகின்றனர். கோட்டுக்கழியால் தரையைத் தட்டியபடியே நடக்கிறார் கிழவர். வழியில் காவல்தெய்வம் தெரிகிறது. (தாத்தா போகிறபோக்கில் கன்னத்தில் கும்பிடு போட்டுக்கொள்கிறார்). இருள் முழுமையாக சூழ்கிறது. அப்போது தூரத்தில் நரிகள் ஊளையிடும் சத்தம் கேட்கிறது.

பேரன்:
அங்க என்ன தாத்தா என்னமோ கத்துது...

தாத்தா:
அதா.. அது நரிங்க ஊளையிடுற சத்தம்பா..

சுடுகாட்டை ஒட்டிய பாதையில் நடக்கின்றனர். அப்போது கிழவர் வழியில் தென்பட்ட வேப்பமரத்தின் கிளையை வளைத்து தழையை ஒடித்து சிறுவனின் இடுப்பில் செருகுகிறார்.

பேரன்:
ஏன் தாத்தா வேப்பந்தழையை இடுப்புல சொருவற

தாத்தா:
சொல்லாக்கர பக்கத்துல இருக்கில்ல அதுக்குத்தான்

பேரன்:
சொல்லாக்கர இருந்தா தழையை சொருவிக்கணுமா

தாத்தா:
இங்க... பேயி பிசாசு, காத்துக்கருப்புல்லாம் நடமாடும் அதுங்க உன்ன நெருங்காம

இருக்கணும் இல்ல.

பேரன்:
நீ சொருவிக்கிலயா தாத்தா..

தாத்தா:
நாந்தான் வயசானவனாச்சே.. என்ன ஒன்னும் பண்ணாது. அதுவும் இல்லாம என் கையிலதான் லாந்தர் இருக்கே.. நெருப்பு வெளிச்சம்னா பேய் பிசாசு கிட்ட வராது.

பேரன்:
பேய் பிசாசு நம்மல என்ன செய்யும் தாத்தா..

தாத்தா:
எல்லாரையும் ஒன்னும் செஞ்சிராது.. குளிச்சிட்டு சுத்த பத்தமா இல்லாதவங்க.. பன்னிக்கறி கோழிக்கறி மாதிரி கவுச்சிங்கள தின்னுப்புட்டு நடுராத்திரியில வெளியில சுத்தரவங்க...வேப்பந்தழை, புங்கங்கொட்டை, தாயத்து இதெல்லாம் கட்டிக்காம வெளியில வர்ற ஒன்ன மாறி சின்னப்பசங்க இவங்கெல்லாம் பேய் வர்ற நேரத்துல எதிர்ல வந்தா... ஒரே அறையா அறைஞ்சி... கொன்னு போட்டுடும்.

2/2

பேய் பிசாசு பற்றிய எந்த ஒரு சிந்தனையுமற்று திரிந்தவனுக்குள் தற்போது இனம்புரியாத பேய் பற்றிய பயம் விரைவாக தொற்றியது. மேலும் அதுபற்றி கேட்கவிடாமல் இதயம் சற்றுவேகமாய் துடித்துக்கொண்டிருந்தது. கிழவரின் முதுகை உரசும் தூரத்தில் நெருங்கி நடக்கிறான் சிறுவன்.

-காட்சி முடிவு-

காட்சி: 3 இரவு/கிராமம்/வெளிப்புரம் 3/1
சிறுவனை ஓர் உருவம் உரசி பயமுறுத்தியது.

தற்போது சிறுவனுக்குள் பேய் பற்றிய சிந்தனைகளும், கற்பனை உருவங்களும் வந்துவந்து மறைகின்றன. லாந்தர் வெளிச்சத்தில் காலடி தடத்தை உண்ணிப்பாக பார்த்து நடக்கும்போது ஆடி அசையும் வெளிச்சம் கூட, பேயாய் உருவெடுத்து மிரட்டுகிறது.ஒழுங்கையின் இருமருங்கிலும் அடர்ந்த காரை முட்புதர்களும், சப்பாத்தி கள்ளிகளும், செடி வகைகளும், லாந்தரின் நகர்தலில் தன் நிழல்களில் பலவித பூதாகர தோற்றத்தை வெளிப்படுத்தி அவனை அச்சமுறச்செய்கிறது. அப்போது எங்கிருந்தோ ஓர் உருவம் சிறியவனின் கால்களில் பலாத்காரமாய் உரசிவிட்டு விர்ரென மறைகிறது. ஏற்கனவே படபடப்பாய் இருந்தவனுக்குள் உள்ளங்காலிலிருந்து இரத்தம் ஜிவ்வென மண்டைக்கு ஏறுகிறது.

பேரன்:
ப்...ப்...பே...பேய்

என அலறினான். பய உச்சத்தின் நடுக்கத்தில் நடை தடுக்கி விழுகிறான். கையிலிருந்த கலயம் கீழே விழுந்து தண்ணீர் கொட்டுகிறது. சப்தம்கேட்டு திடுக்கிட்ட கிழவர் லாந்தரை வேகமாய் கீழே வைத்துவிட்டு ஒரே தாவலில் சிறுவனை வாரி அணைத்துக்கொள்கிறார். சற்று பதற்றத்துடன்,

தாத்தா:
என்னடா.. என்னடாச்சி..என்னப்பா..ஏந்திர்றா..ஏந்திர்றா..பயப்படாதடா..

ஒண்ணுமில்லப்பா..ஒண்ணுமில்ல..ஏந்திர்..ஏந்திர்றா.. கிழவரின் அணைப்பில் சற்று பயம் குறைய,

பேரன்:
பே...பேயி

திடட்டிய வார்த்தைகள் பிசிறுதட்டி வெளியேறுகிறது. அவனை உரசிய உருவம் கிழவரையும் உரசிவிட்டுத்தான்போனது. அப்போது கிழவர் சிரித்துக்கொண்டே (தன் பின்னால் வாலாட்டிக்கொண்டிருந்த நாயைக்காட்டி)

தாத்தா:
அடச்சே... இது பேயில்லடா.. நல்லா பாரு நம்ம செவ்ளி..

தன்னை உரசி பயமுறுத்திய நாயின் மேல் சிறுவனுக்கு ஆவேசம் பொங்குகிறது.

பேரன்:
தேடும்போது ஊர்பீயை திங்கப்போயிருச்சி இப்ப திடீர்னு வந்து ஒரசி பயமுறுத்துது

நாயி.. திருட்டு நாயி..(கோபமாக திட்டுகிறான்).

தாத்தா:
நீ பயந்ததுக்கு செவ்ளி என்னடா செய்யும். மடையா.. அத போய் ஏசற..

பேரன்:
குடிக்க எடுத்தாந்த தண்ணில்லாம் வீணாச்சில்ல ஏசாம கொஞ்சணுமா மடையா..

தாத்தா:
நானே ராத்திரி பூரா கண்முழிச்சி காவக்காக்கணுமேன்னு நெனச்சிகிட்டிருந்தேன் நல்ல வேலை செவ்ளி வந்திருச்சு. பேசாம வாடா..

-காட்சிமுடிவு-

காட்சி: 4 இரவு/ மல்லாட்டைக்கொல்லை/குச்சுக்கட்டில்/வெளிப்புறம்/உட்புறம் 4/1


read: http://thamizhstudio.com/shortfilm_guidance_script_1.php



No comments:

Post a Comment