சய்லேன்ஸ் - 1
குறிஞ்சி சலாம் பா! வணக்குமோங்கம்மோய்! கும்புட்டுக்கிறேன் வாத்யாரே! வணக்கம் வந்தனம் நமஷ்கார் நமோஷ்கா... நான்தாம்பா கட்டியங்காரன்... தெருக்கூத்து தொடங்கரச்சே முன்னாடி வந்து பேசுற பபூன்.. ங்க சாமீ! நம்ம கண்ணு முன்னாடி எம்மாம் பெரிய கூத்தெல்லாம் நடக்குது! பாத்துகிட்டு சும்மாத்தானக் கீறோம்! என்னவே நாஞ்சொல்றது...? ஓய்! உன்டிங்கிறீரா... இல்லங்கீறீரா... ஏதாவது ஒரு பக்கம் தலைய ஆட்டுமேன்! இந்தப் பகுதியிலே நாம் காணப் போவது யாதெனில் படித்த நூல், ரசித்த கவிதை, அறிந்த படைப்பாளி, நிகழ்வு, திரைப்படம், சமூக விமர்சனம்,இப்படியாகத் தானேத் தொடரப் போகிறது...நம் உறவு எதப் பத்தி வேணும்னாலும் இந்தப் பத்திலப் பேசலாங்க... வாங்க பழகுவோம்!
முல்லை ஒரு நூல் வெளியீட்டுக்கு பிரம்மாண்டமானக் கூட்டமொன்றை கூட்டமுடியுமா...? நல்ல நட்பும் தூயத் தோழமையும் சாத்தியமெனில் கூடுவதும் சாத்தியந்தான்! பிப்ரவரி 2010ல் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியனின் மூன்றாவது கவிதை நூலான 'மஞ்சணத்தி' உயிர்மை வெளியீடாக, துணை முதல்வர் வெளியிட கவிஞன் அன்புத் தாயார் பெற்றுக் கொண்டார். அவ்வ்வ்வளவு பெரீய அரங்கமும் நிரம்பி வழிய அரசியல், இலக்கிய முகங்களின் புன்னகைப் பளிச் கள்! இது செய்தில்லை! நவீனக் கவிதைகளை, பரதம், பாடல் குறும்படம், நவீனநாடகம் என வேறுவேறுத் தளங்களில் மடைமாற்றியதில் கவிதைக்கும், ரசிகருக்கும் புதிய பரிமாணம் கிடைத்தது. குறிப்பாக 'மஞ்சணத்தி' என்கிற கவிதையை பரதநாட்டியத்தில் சொன்ன முறை, அடடாவோ அடடா! தமிழச்சியின் கவிதைகளை இசையமைத்து பாடிய கவிஞர் ரவி சுப்ரமணியனின் குரல் வந்திருந்தவர்களை கட்டிப்போட்டது. குறும்படமும், நவீன நாடக முயற்சிகளும் வரவேற்புக் குள்ளாயின! எளிமையானக் கவிதைகளின் விலை தான் நிகழ்ச்சி போலவே பிரம்மாண்டம் - அதிகமில்லை ஜென்டில்மேன்! 190 ரூவாதான்! கூட்டத்திலிருந்த ஒருவர் முணுமுணுத்தார். காலச்சுவடுக்கு கனிமொழி ... உயிர்மைக்கு தமிழச்சி... எப்படிப்பா! ரூம் போட்டு யோசிப்பாங்களோ...?
மருதம் 'பழமலய்' கவிதைகளை வாசித்திருக்கிறீர்களா...? கவிதையும் உரையும் கலந்து நெய்த உத்தியில் பழமலய் தந்த 'கணங்களின் கதை' தமிழ்க் கவிதை இயக்கத்தை உலுக்கியது. கவிஞர் பழமலய், தன்னைத் தனக்கும் தன் மக்களை அவர்களுக்கும் தன் கவிதைகள் மூலமாக உணர்த்துபவர்... இழிவுகளுக்கானக் காரணங்களைக் கண்டு போராட வந்தும் உக்கிரக் கவிதைகளைத் தந்தவர் தனது படைப்புகளாலும் உணர்வுள்ள செயல்பாடுகளாலும் பல படைப்பாளிகளைச் செதுக்கி வரும் கவிச்சிற்பி அதிசயமாய் .. அற்புதமாய்... ஆதிமூலந்தேடி துழாவும் புதூஉ எழுத்துப் படைப்பாளியின் ஒட்டுமொத்த படைப்புகளும் காவ்யா வெளியீட்டில் ஒரே நூலாக வெளி வந்துள்ளது (ரூ.500!) நெய்தல் உதயக்கண்ணன் வெளியீடாக வந்துள்ள 'இருவாட்சி' பொங்கல் மலர், ஓர் இலக்கியப் பொக்கிஷம்! சிறுகதை, கவிதை, குறுநாவல், நூல் விமர்சனம் எனக் கதம்ப மாலையாக கோர்த்து தந்திருக்கிறார் நம்ம ஷங்கண்ணா! (எவ். சங்கரநாராயணன்) மிகச்சிறந்த வடிவமைப்பு, திகட்டாத கோட்டோவியங்கள் வாசிக்கிறவர்களை வசீகரிக்கும் பல்வேறு படைப்பாளிகளின் எழுத்தோவியங்கள் எல்லாமும் சேர்த்து ரூ.100! தான் நூல் வாங்க - உதயக்கண்ணன், 10 கல்யாண சுந்தரம் தெரு பெரம்பூர், சென்னை - 600 011. பேசி -9444 64 0986
சாகுபடி பாலை கொப்பளித்து துப்புகிறாய் துவேஷத்தை வழித்து விசிறுகையில் தெளிக்கிறதுன் மேல் என் எதிர்ப்புணர்வு வேப்பங்காயில் தோய்த்த சொற்களைப் பூச துடைத்து வீசுகையில் வழிகிறதுன் மேலிருந்து கருங்கசப்பின் திட அழுக்கு அதிகாரம் சுமந்த ஆயுதங்களை பிரயோகிக்குமுன் வன்முறையை சமாளிக்குமென் வியூகத்துக்கு விருதளிக்கிறாய் தீவிரவாதி (அ) பயங்கரவாதியென கபடப் புன்னகைக்குள் மறைந்திருந்த துரோகத்தின் முகம் அதி அருவருப்பானது குரூரமும் குரோதமுங் கூடியது ப்ரியங்களை என்னுள் விதைத்திருந்தாய் வியாபித்து விரிந்திருக்குமே நேச விருட்சம் நம்பிக்கையைப் பரிசாக அளிக்குமுனக்கு நம்பகத்தையும் நன்றியையும் தர இயலுமென்னால் வால்குழைத்து தாய்மையின் பாசத்தோடும் துணைவியின் பொறுப்புங் கூடிய காதலைத் தெளி என்மேல் கூந்தலை வருடி பதிக்குமென் குளிர்முத்தத்தில் உணர்வாய் தூய அன்பின் சுகந்தந்தை கட்டியங்காரன் கவிதை நல்லா இருக்கா...? தொடரும்... |
No comments:
Post a Comment