தனது சுதந்திர தாகத்தைத் தணிக்க...
தணிக்க வழியில்லாத பசியின் கொடுமையைத் தாங்கிக்கொள்ள...
கஞ்சா போன்ற போதை வஸ்துவின் உதவியை நாடி...
பிறகு அதன் அரவணைப்பில்...
ஒரு கோவில் யானையிடம் தேவைக்கதிகமாக "விளையாட" முயன்றதால்...
பாரதி எனும் ஏழைக் கவிஞர் அமரர் ஆனார் என்பதைக் கூறும் அதே மூச்சில்...
பிரிவினைவாதம் மூலமாக தனது ஆரம்ப அரசியல் அடித்தளத்தை அமைத்த...
தமிழக முதல்வர் கலைஞரை...
தேவைக்கு அதிகமாகப் புகழ்ந்து, பெரும்பாலான படைப்பாளிகள் பிழையாகப் பிழைப்பு நடத்தப் பழகிவரும் இக்காலத்தில்...
இதனை எழுதும் என்னைப் பலர் பித்தன் என்பார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை...அச்சமில்லை...கூச்சமில்லை!
பாரதியின் காலத்திற்குப் பிறகு அவரது எழுத்துக்கள் பலர் பெரும் பணம் சம்பாதிக்க உதவின, உதவிக்கொண்டே இருக்கின்றன.
1882-ல் பிறந்த பாரதி 1921ல் இயற்கை எய்தினார்
அவர் வாழ்ந்த காலத்திற்கேற்ப பாரதி அரிய கருத்துக்களை, இன்றுள்ள கம்ப்யூட்டர்கள் போன்ற கருவிகளின் உதவியின்றி, வறுமையின் பிடியில் வாடியும் அச்சமின்றிக் கூறி அமரரானார்.
பாரதியைப் பெரிதும் கவர்ந்தவர்களுள் பெர்ஸிபிஷ் ஷெல்லி (1792-1822) என்ற ஆங்கிலக்கவிஞரும் ஒருவர். ஷெல்லியின் ஜீவகாருண்யக் கொள்கைகள் தான் பாரதியைப் பெரிதும் பாதித்தன என்பார்கள்.
ஓர் ஆங்கிலேயப் பாராளுமன்ற உறுப்பினரின் மகனாகப் பிறந்த ஷெல்லி பேச்சாற்றலற்றவர் ஆகையால் உரிமைகளுக்காகப் போராட முடியாத உயிரினங்களை, உண்பதற்காகக் கொல்வோர்களைக் ''கொடிய காட்டுமிராண்டிகள்'' என வர்ணித்தவர்.
அவரால் கவரப்பட்ட பாரதி அந்நியர்கள் ஆட்சியில் அடிமைகளாக வாழ்ந்த நமக்கும் மிருகங்களுக்கும் பெரிய வித்தியாசமில்லாததை உணர்ந்து, சுதந்திர எண்ணங்களை நம்மில் விதைத்தார்.
தமிழில் மட்டுமே அவரது எழுத்துக்கள் பிரபலமாகியிருந்தால், ஆங்கிலம், சமஸ்கிருதம், பிரெஞ்சு, இந்தி, வங்கமொழி, ஏன் வட குஜராத்தில் மட்டுமே அதிகமாகப் பேசப்படும் ''கச்சி''போன்ற மொழிகளைக்கூட நன்கறிந்தவர் பாரதி.
ஆனால் பாரதி ஒரு சிறந்த கவிஞர் மட்டுமல்ல பத்திரிகையாளராகவும் இருந்தபடியால், உரைநடையிலும் அவர் வல்லவராகத் திகழ்ந்தவர்.
வெள்ளையனின் ஆட்சியை வெறுத்தாலும் அவனது மொழியை வெறுக்கவில்லை அவர்.
அவரது காலத்தில் மட்டுமல்ல, தமிழ் எழுத்தாற்றல் உள்ள பலர் இன்றும் கூட ஒரு சிறிய வட்டத்துக்குள்ளேயே அடைபட்டுக் கிடக்கிறார்கள் என்பதையும் சொல்லியாக வேண்டும்.
பாரதிதாசன், பாவலர் வரதராஜன் போன்ற கவிஞர்கள் மற்றும். கு.ப.ரா. வ.ரா. க.நா.சு, தி.ஜ.ர. போன்ற பிரபல எழுத்தாளர்கள் பலரும் கூட, அவர்களது தகுதிக்கேற்ப தங்கள் வாழ்நாளில் பணம், புகழ் சம்பாதிக்கவில்லை என்பது உண்மை. அம்மாமேதைகளின் காலங்களில் கம்ப்யூட்டர்கள் போன்ற கருவிகள் இன்று எழுத்தாளர்களுக்கு உதவுவதுபோல் அமைந்து இருக்கவில்லை தான்.
ஆனால்...
கம்ப்யூட்டர்களில் தேர்ச்சி பெற்ற, இக்காலத்தில், தமிழில் ஜனரஞ்சகமாக எழுதிப்புகழ்பெற்ற, சமீபத்தில் மறைந்த சுஜாதா என்கிற ரங்கராஜன் கூட எழுத்துக்கள் மூலமாக தகுந்த அளவு பெயர், புகழ், செல்வம் ஆகியவற்றை சம்பாதிக்கவில்லை என்ற எனது வாதத்தை அடுத்து வரும் பத்திகள் நிரூபிக்கும்.
நிற்க
பாரத நாட்டு மொழிகளில் 'எழுத்துழைப்புக்கு' தகுந்த ஊதியம் கிடைக்கவில்லைஎன்று அங்கலாய்க்க்கும் அதே நேரத்தில் நம்மவர்களுக்கும், வளர்ந்த நாடுகளின் எழுத்தாளர்களுக்கும் இடையே சிலஅடிப்படை வித்தியாசங்கள் உள்ளன என்பதையும் ஒப்புக்கொண்டாக வேண்டும்.
ஒரு பானை சோற்றுக்கு ஒருசோறு பதம் என்ற பழமொழிக்கேற்ப இரு எழுத்தாளர்களுடன் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை விவரிக்கிறேன்.
இன்று உலக எழுத்தாளர்களில் மிகப்பிரபலமாக இருப்போர்களுள் ஒருவர் ஃபிரடரிக் ஃபோஸைத். 1938-ல் பிறந்த இவர் ஆரம்ப காலத்தில் ஒரு பத்திரிகையாளர். ஆங்கில செய்திஸ்தாபனங்களான ராய்ட்டர்ஸ் மற்றும் பி.பி.சி. நிறுவனங்களில் 1961 முதல் 1967 வரை வெளியுறவுச் செய்தி முகவராகவும், போர் நிருபராகவும் பணிபுரிந்தார்.
ஃபிரடரிக் அனுப்பிய சில செய்திகளை பி.பி.சி. அமைப்பால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போகவே, வேலையைத் துறந்து 1968ல் முழுநேர எழுத்தாளரானார். 1969ம் ஆண்டு 35 நாட்களில் தனது முதல் முழுநீள புதினமான ''தி டே ஆப் தி ஜக்கால்'' -- அதை தமிழில் ''நரியின் நாள்'' என்று மொழி பெயர்க்கலாம் - எழுதி முடித்தார்.
சுமார் ஒன்றரை ஆண்டு காலம் இவர் பதிப்பகங்களின் ஏஜெண்டுகளிடம் கெஞ்சிக்கொண்டிருந்த நேரத்தில் அக்கதையின் முக்கிய பாத்திரமான பிரான்ஸ் நாட்டு அதிபர் சார்லஸ் டி கால் இயற்கை எய்தினார்.
அதில் சிக்கலென்னவென்றால் அந்த நாவல் டி காலைக் கொல்லத் தீட்டப்பட்ட, ஆனால் முறியடிக்கப்பட்ட ஒரு சதித்திட்டம் பற்றியது.
''யோவ், சாதாரணமாகச் செத்தவனைக் கொல்ல சதின்னு ஒரு கதையைச் சொல்ல வந்துட்டியே? எவன்யா படிப்பான்?'' என்று பதிப்பகத்தார்கள் கிண்டல் செய்தனர்.
ஃபோர்ஸைத் சேமித்து வைத்திருந்த பணம் கிட்டத்தட்ட காலியான நேரத்தில் ஒரு பதிப்பகம் அவர் மீது பரிதாபப்பட்டு ஆயிரம் பிரதிகளை வெளியிட்டது. பத்திரிகை விமர்சனங்கள் அப்புத்தகத்தை வானளாவப் புகழ்ந்தன. 1971ல் மட்டும் அப்புத்தகம் சுமார் 50000 ஆயிரம் பிரதிகள் விற்றது. சில கோடி பிரதிகள் விற்பனையான பிறகும். அப்புத்தகத்தின் புதிய பதிப்புகளை உலகம் முழுதும் உள்ள கடைகளில் இன்றும் காணலாம்.
பற்றாக்குறைக்கு 1973ல் ஃப்ரெட் ஜிமமர்மேன் அதைப் படமாக்கினார். அதுவும் சக்கைப்போடு போட்டது.
அதே கருவை வைத்து 1997 ஆம் ஆண்டு ''தி ஜக்கால்” என்ற வேறொரு ஆங்கில வெற்றிப்படமும் வெளிவந்தது.
ஃபோர்ஸைத் நாவல்களை விரும்பிப்படிக்கும் கோடானுகோடி ரசிகர்களுள் நானும் ஒருவன்.
1989ல் ஃபோர்ஸைத்தின் படைப்பான ''தி நெகோஷியேட்டர்'' என்ற நாவலில் ' ஒரு கற்பனை அமெரிக்க ஜனாதிபதியின் மகன், இடுப்பிலுள்ள பெல்ட்டில் பொருத்தப்பட்டுள்ள வெடிகுண்டு வெகுதூரத்திலிருந்து இயக்கப்பட்டு கொல்லப்படுவதாக' சித்தரிக்கப்பட்டிருந்தது.
ஃப்ரெடரிக் ஃபோர்ஸைத் |
1991ல் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொல்ல ஐடியா வழங்கிய புத்தகம் இதுதான் என்ற பேச்சு அடிபட்டது.
1992ல் நான் லண்டனில் இருந்தபோது மிகவும் சிரமப்பட்டு ஃபோர்ஸைத்தை தொடர்பு கொண்டேன்.
நகரிலிருந்து சுமார் 60 மைல் தூரத்தில் ஒரு சிறு கிராமத்தில் தான் வசிப்பதாகவும், அடுத்த நாள் மதியம் சரியாக பன்னிரண்டு மணிக்கு மேல் சுமார் ஒரு மணிநேரம் பேசலாம் என்றும் தொலைபேசியில் தெரிவித்தார் ஃபோர்ஸைத்.
அவர் வீட்டுக்குச் செல்ல சரியான வழி, ரயிலின் எண், வழி தவறினால் தொலைபேசி மூலம் உதவும் எண்கள் போன்ற விஷயங்களைத் தெளிவாக விளக்கிச் சொன்னார் அவர்.........
மேலும் படிக்க: http://koodu.thamizhstudio.com/katturaigal_7.php
No comments:
Post a Comment