Tuesday, May 10, 2011

மாலதி மைத்ரி – ஒளவை மொழி வெளிச்சம்





ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் - 11

மாலதி மைத்ரி – ஒளவை மொழி வெளிச்சம்

குட்டி ரேவதி

அன்புமிக்க தமிழ்ஸ்டுடியோ வாசக நண்பர்களுக்கு,

வணக்கங்களும் நன்றிகளும்.

ஒவ்வொரு முறை கட்டுரைக்கு இடப்படும் எல்லா கருத்துரைகளுக்கும் பதிலளிக்க விரும்பினாலும் நேரம் அனுமதியாததால் அதைச் செய்ய இயலவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றாலும் ஒவ்வொருவரின் கருத்துரையையும் கருத்தூன்றி வாசித்துவிட்டுத்தான் நகர்கிறேன்.

கடந்த கால என் இலக்கிய வாழ்க்கையில் பெற்றிடாத உரையாடல் வெளியையும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறைகளையும் எதிர்வினைகளையும் நான் இங்கு பெற்றதன் மட்டற்ற மகிழ்ச்சியைத் தெரிவிக்கவே இக்கடிதம். இந்த நெகிழ்ச்சியான அனுபவத்தின் பின்பான எனது மனப்போக்கு முற்றிலும் மாறுபட்டிருப்பதையும் நான் உணர்கிறேன்.

அதிலும், கவிதை பற்றிய இக்கட்டுரைத் தொடரை நீங்கள் ஆர்வமுடனும் அக்கறையுடனும் கேட்டுப் பெறுவது என்னை இன்னும் அதிகமாய் ஊக்கப்படுத்துகிறது. நம்பிக்கை கூட்டுகிறது. ஒவ்வொருவரையும் அவர்களின் கருத்தால் நான் நினைவில் வைத்துக் கொள்வேன்.

தொடர்ந்த உரையாடலுக்குத் திசைகள் ஏற்படுத்திக் கொடுக்கும், தமிழ்ஸ்டுடியோவிற்கும் அதன் இயக்குநர்களுக்கும் கூட என் நன்றிகள்!

அன்புடன்,
குட்டி ரேவதி

--------------------------------------------------------------------------------------------------------



ஆணுடல் விதையை உருவாக்குதல் போலே தான் பெண்ணுடலும் கருவை உருவாக்குகிறது. இரண்டில் ஒன்றில்லாமல் பெண்ணின் சிறப்புத்தகுதி வெளிச்சம் பெறுவதில்லை. என்றாலும், பெண்ணுடலின் சிறப்புத் தகுதி கருவுறுதலும் அதைப் பேணிக்காத்து இனத்தைப் பெருக்குதலும்.

பெண்ணின் இனப்பெருக்க ஆற்றல், சிறப்பு வெளிப்பாடாய் இருப்பதால் அதைக் கொண்டாடுவதற்குப் பதிலாக, பொறாமையுற்று பெண்ணின் இனப்பெருக்கு உறுப்பையும் ஆற்றலையும் நசிக்கும் வேகங்கள் காலம் தோறும் எழுச்சிபெற்று வந்திருக்கின்றன. அப்பொழுது தான், பெண்ணின் உடல் நோக்கங்கள் திரித்துக் கூறப்பட்டன. அதாவது, பெண்ணின் உடல் ஆணுக்கே சொந்தமென்றும், அது குழந்தைகளை உற்பத்திச் செய்வதற்குமேயானது என்றும் தொனி மாற்றி, பொருள்விளக்கம் தரப்பட்டது.

மற்றெந்தப் போரும் ஏற்படுத்திய தாக்கத்தை விட, பாலியல் போர் பெண்ணுடல் மீது ஏற்படுத்திய தாக்கங்களும் ஊனங்களும் அதிகமானவை. நிரந்தரமானவை. இத்தகைய போர் அவளுடலின் தலை முடி முதல் உள்ளங்கால் வரை செயல்படுத்தப்படுகிறது. அவள் தலைமுடியின் அழகு பாலின்ப வேட்கையைத் தூண்டும் ஆற்றல் கூடியது என்பதாலேயே தேவாலயங்களிலும், இதர வெளிகளிலும் பெண்கள் தங்கள் தலைமுடியை மறைத்துக்கொள்ளல் அல்லது மழித்துக்கொள்ளல் எனும் பண்பாட்டு நிர்ப்பந்தங்கள் திணிக்கப்பட்டன. ’பொம்பள சிரிச்சா போச்சு; புகையிலை விரிச்சா போச்சு’ எனும் பழமொழி போல. இம்மாதிரியான திணிப்புகள் வழியாகவெல்லாம், அவளின் உளவியல் வெளி வரை புகுந்து, அவள் மனதில் இலங்கும் அடிப்படையான பெண் சமத்துவ நிலையைக் கூடத் திருகிவிட முடியும் என்ற தந்திரமே.

இத்தகைய போர்த்தந்திரங்களில், முதன்மையானவை, பெண்ணின் கருப்பைமீதும் கருவாய் மீதும் செலுத்தப்பட்ட சமூக அடக்குமுறை உத்திகள். ஏனெனில், ஆணின் உறுப்பு வலுப்பெற்றதும் அவன் பெண்ணின் கருப்பையை உபயோகிப்பதில் ஈடுபடுகிறான். அவன் வேட்கை தீர்ந்ததும் அவன் சோர்ந்து வெளியேறுகிறான். ஒவ்வொரு முறையும் வீழ்த்தும், வெற்றிபெறும் ஆயுதமாகப் பெண்ணின் கருப்பையே இருக்கிறது. அதுமட்டுமன்றி, பெண்ணின் கருப்பை மாதாந்திர இரத்தப்போக்குகளால் உழப்பட்ட புது நிலமாயும், அதே சமயம் ஆணின் உயிர் ஆற்றலை வேட்கையுடன் பெற்றுச் செழித்த விளைநிலமாயும் மாறுகிறது. ஆற்றலைப் பெருக்கிக் கொண்ட பெண்ணின் இருப்பும், அவள் தன்னைச் சோர்வுறச் செய்பவள் என்றும் மிரட்சியுறும், ஒரே மனித இனத்தின் பகுதியான ஆண் சமூகம் அவள் மீது கொண்ட மிரட்சியை அழிப்பதற்கு ஏற்ற தந்திரங்களை உருவாக்கியது. அவற்றை, பெண் கருப்பை மற்றும் கருவாய் மீது நிரந்தர ஆட்சி செய்யும் போர் உபாயங்களாக்கி நிரந்தர அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியது.

இது அடிப்படையாக, எங்கிருந்து தொடங்கியது என்றால், பெண்ணின் இயல்பான உடல் மாறுபாடுகளே கூட தீட்டிற்கு உட்பட்டவை என்றும் இம்மாதிரியான புத்துயிர்ப்பின் வெளிப்பாடுகளுக்கு உள்ளான பெண்ணின் உடலே அபாயங்களை கொண்டு வரக்கூடிய புதிர்ப் பிண்டம் என்றும் நம்பும்படியான சடங்குகளும் வழக்கங்களும் பெண் நம்பிக்கைகளுக்குள் புகுத்தப்பட்டன. இம்மாதிரியானவை பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட வழக்கங்களாயிருந்தன என்று சொல்லவேண்டிய அவசியமில்லை. அதிலும், பெண்ணின் உடலில் தோன்றி ஒழுகும் இரத்தம் சம்பந்தமான கதையாடல்களாகவே பெரும்பாலும் அவை இருந்தன. பெரும்பாலான தேசங்களில், கன்னிப்பெண்ணுடன் கொள்ளும் முதல் உடலுறவு என்பது மிகவும் அவலமான செயலாகவே இருந்தது. இந்தியாவில் உயர்சாதி ஆண்கள் ஓர் இரும்புக்கழியினால் கூட பெண்களின் முதலுறவைத் தொடங்கிவைப்பார்கள் என்பதற்கான ஆதாரத்தை எட்வார்டஸ் என்பவர் தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். சோமாலியாவில் உடலுறவுக்காகப் பெண்ணுறுப்பு கத்தியால் திறக்கப்படுவதுடன் பெண்ணின் இரத்தம் தோய்ந்த கத்தியைக் கணவன் எல்லோருக்கும் பகிரங்கப்படுத்துவதும் வழக்கம். இவை மீறி, பெண்ணின் கருச்செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படவும் கட்டுப்படுத்தவுமான விதிமுறைகளும் பிறப்பிக்கப்பட்டன. இவற்றைத் தொடர்ந்து முறைப்படுத்துவதே ஆணின் ஆண்மை என்று வியக்கப்பட்டது.

இந்நிலையில், கன்னடக் கவி அக்கம்மா தேவியின் கவிதை வரி ஒன்று என் நினைவிற்கு வருகிறது. கி.பி. 12-ஆம் நூற்றாண்டின் கவிப்பெண் இவர். ‘இன்பத்தையும் துன்பத்தையும் பேராவலுடன் குடிக்கும், ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்றல்ல, எட்டாயிரத்து நானூறாயிரம் யோனிகள் வழியாக நான் வந்திருக்கிறேன்’. எட்டாயிரத்து நானூறாயிரம் யோனிகள் வழியாகவும், மேற்கண்ட துன்பங்களைத் தின்றவாறே இன்பங்களைப் பருகிவந்திருக்கிறேன் என்பது தான் அவரது வாதம். பெண்கள் தம் யோனிகளுடன், அவற்றின் இனப்பெருக்க வல்லமையுடன் மாறாத் தொடர்பு கொண்டு இயங்கத் தொடங்கினர். பெண்கள் உருவாக்கும் குழந்தைகளுடனும் சமூகத்தின் உடைமை விதிகள் ஆண் சாய்வுடையதாக இருந்த போதிலும், தாய்மை எனும் கருத்தாக்கத்தை உருவாக்கிக் கொண்டனர்.

தாய்மை என்பது, படைப்பூக்கங்கள் மற்றும் தன்னுடலின் பாலூக்கங்கள் குறித்த சிந்தனையைக் கட்டுப்படுத்தும் ஒடுக்கு முறை என மேலைத்தேயச் சிந்தனை தாய்மை எனும் கருத்தாக்கத்தை மறுத்தாலும், ‘தாய்த்தெய்வம்’, ‘தாய்மொழி’ போன்ற தொல்மரபார்ந்த கருத்தாக்கங்களை, யோனிகளின் தொடர்ச்சியைத் தக்கவைக்கும் போராட்டத்தில் கிழக்குலகப் பெண்கள் வென்று வருவதாகவே உணர்கிறேன். மாலதி மைத்ரியின் கவிதைகள், தாயுடலுக்கும் மகளுடலுக்கும் இடையிலான கருத்தாக்க உறவையும், தொடர்ச்சியையும், நீட்சியையும், நிலைத்தன்மையையும் தன் மொழியில் தொடர்ந்து வழங்கிக் கொண்டே இருக்கிறது.

இன்றும் பெண்ணியக்க அலையைத் திசைத் திருப்பும் வேலை, இத்தகைய கருத்தாக்கத்தைச் செழுமையுறச் செய்வதன் வழியாகவே அடைய முடியும் என்பதான சிந்தனைகள் என்னையும் பீடிக்கத் தொடங்கியிருக்கின்றன. உலகமயமாக்கம், நகரமயமாக்கம், தன்னையே தான் வியாபாரமயமாக்கும் வாழ்க்கைக்குள் தன்னை உந்தித்தள்ளிச் செல்லும் மனித வேகத்தில் தாய் எனும் கருத்தமைவு, உடலார்ந்த பொதுத்தன்மையைக் கொண்டிருந்தாலும், அதை உடலுக்கு வெளியிலும் இயங்கக்கூடிய ஒரு சிந்தனையாக, உயிரெழுச்சியாகவே நான் பார்க்கவிரும்புகிறேன். ஏற்கெனவே, ‘தாய்மை’ என்பதை, இந்த ஆணுக்கு இவள் பெற்றெடுத்த பிள்ளை இவன் என்பதாக அடையாளம் பெறும் உடைமைச் சிந்தனையின் அடிப்படையிலேயே, ஒற்றை யோனியை ஒடுக்கும் இடத்திற்கு இச்சிந்தனையை நாமும் ஏற்றுக் கொள்ளக்கூடாது. தாய்மை என்பது இரத்தம் பாயும் எல்லா உயிர்களிலும் பரவும் உணர்வெழுச்சி!

மேற்கண்ட புரிதலுடன், மாலதி மைத்ரியின் கவிதைகளில் இயங்கும் உடல் பற்றிய மொழியையும், பால்நிலை அரசியலையும் அணுகுவது நம் எல்லோருக்கும் வெளிச்சம் தரக்கூடியதாக இருக்கும் என்று நம்புகிறேன். இத்தகைய புத்துயிர்ப்பான உடல், முழுவதும் நமது மொழிக்கும் நவீன இலக்கியத்திற்கும் பிரத்யேகமானது என்பதால், உதிரியான நமது உடல்களையும் கூட பாலியல் போரிலிருந்து மீட்டுக் கொள்ள உதவக்கூடும் என்றும் நம்புகிறேன்.

மாலதி மைத்ரியின் கவிதைகள், அத்தகைய உடலின் பல தருணங்களை நமக்குச் சுட்டிக் காட்டினாலும், இக்கட்டுரைத் தொடருக்குப் பொருத்தமான சில கவிதைகளை மட்டுமே இங்கு அளிக்கமுடிகிறது. மானுடத்தின் பதைப்பைக் குருவியின் மீது ஏற்றிச் சொல்லும் குருவி கவிதை, ஒரு தாவரப்பட்சி மாமிசப்பட்சியாக மாறும் இடத்தையும் சுட்டுகிறது. இதன் இடைவழியில் துளிர்க்கும் கண்ணீர் பாலியல் போருக்கான முதல் ஆயுதம். தாய்மை எனும் கருத்தாக்கத்தின் முழுப்பரிமாண புரிதலின் விளைச்சல் இக்கவிதை.

குருவி

முதல் குண்டு விழுந்தபோது அந்தத் தாய்க்குருவி
அவயத்தில் இருந்தது
தனது முட்டைகளில் செயற்கையாக
வீறல்கள் விழுவது கண்டு கலவரப்பட்டது
கட்டடங்கள் சரிந்துவிழும் பேரிரைச்சல்களினூடாக
ஓடுகளைத் திறந்து கொண்டு தமது
குழந்தைகள் வெளிவருவதைக் கண்டு
மேலும் பதற்றம் கூடிய அது
பறந்து சென்று இரை பொறுக்கிவரப் பயந்தது
குழந்தைகளின் ஈர உடம்புகளில்
சிமெண்ட் புழுதிகள் படியத் தொடங்கின
தனது கூடு நிலைத்திருப்பது பற்றிய
நிச்சயமற்றிருந்த தாய்
புழு பூச்சி தானிய மணிகள் தேடி வெளிச்செல்ல
நகரமெங்கும் இடிபாடுகளுக்கிடையில்
ரத்தம் கசிந்து கொண்டிருந்தது
கவச வாகனங்களும் இரும்புத் தொப்பிகளும்
இயந்திரப் பறவைகளும் நகரத்தை
சுற்றி வளைத்திருப்பதைக் கண்ட தாய்ப்பறவை
வெறுங்கையோடு கூட்டுக்குத் திரும்பியது
பசிகொண்ட குழந்தைகள் அம்மாவைக் கொத்தின
அம்மாவுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது
நீர் கோத்த அதன் கண்களுக்கு எட்டும் தூரத்தில்
ஆயுதத்தைப் பற்றியபடி அறுந்து விழுந்த
ஒரு மாமிச உறுப்பு சில நாட்களாக
அழுகிக் கொண்டிருப்பதை
மீண்டும் பார்த்தது – பசியின் நடுக்கத்தோடு

ஒளவையிலிருந்து ஒளவைவரை

ஒளவையின் மகள் நான்
பல காலங்களையும் வெளிகளையும்
பலவித உடல்களினூடாகக் கடந்து
சென்று கொண்டிருக்கும் ஒளவையின்
மகள் நான்

ஒளவையின் யோனி விரிந்து
இரண்டாயிரமாண்டு கால வெளியையும்
மொழி வெளியையும் உள்வாங்கி
என்னைப் பிதுக்கித் தள்ள
என் நகத்தாலேயே தொப்பூழ்க்கொடியைக்
கிள்ளித் துண்டித்துவிட்டு
குருதியீரம் காயாமல் நடந்து போகிறேன்

நான் மழலை
என்னைத் தூக்கி அமுதூட்ட
என்னெதிரே நின்று தவிக்கிறது
பால் சுரப்பு அடங்காத முலையிரண்டு

நிலவுக்குள்ளிருந்த என் முதல் ஒளவை
இன்றைக்கும் எனக்கு
கதை சொல்லிக் கொண்டிருக்கிறாள்

திசையெல்லாம்
ஒளவை மொழி வெளிச்சம்

ஒளவையெனும் நினைவு ஓங்கிய, பெண்ணியச் சிந்தனையின் காலக்கட்டமாய் நவீனப் பெண்ணிய இலக்கியம் இருந்திருக்கிறது. ஒளவை எனும் பெண், உடலற்ற ஆனால் புத்தியின் மண்டை வீங்கிய பெண்ணாக நூல்களின் பக்கங்களிலும், செவிகளின் அருகிலும், நாக்குகளின் மொழிதலிலும் உழன்று கொண்டே இருக்கிறார். என்றாலும், இன்றும் அவர் உடலற்ற பெண்ணாகவே பார்க்கப்பட்டு தமிழ் அறிவுஜீவி, பேராசிரிய, படைப்பு வர்க்கம் ஒளவையின் வெளிக்குள் நுழைய முடியாத தடித்த இரும்புக்கழிகளாகவே இருந்திருக்கின்றனர். இங்கு மாலதி மைத்ரி, ஒளவையின் உடலை தன் தனித்ததொரு, தாய் – மகள் உடல் பிணைப்புக் கருத்தாக்கத்தால் தெள்ளியதாக உருவாக்கியிருக்கிறார். விளக்கம் ஏதும் கோராமலேயே இக்கவிதை அதன் துல்லியமான அலகுகளை முன் வைத்திருக்கிறது.

விஸ்வரூபம்

ஏதோ ஒரு பருவமாற்றத்தில்
எனது அங்கங்கள் ஒவ்வொன்றும்
மிருகமாகவும் பறவையாகவும் மாறி
என்னை விட்டு விலகிச் செல்லத் தொடங்கின

அவையே திரும்பி வந்து சேர்வதும்
பல சமயங்களில் தொலைந்த ஆட்டுக்குட்டியை
தேடிச்சென்று அழைத்து வருவதென நிகழ்வதும்
பிறகு யாத்திரை போலப் புறப்பட்டுச்
சென்றுவிடுவதும் வழக்கமாகி
எல்லாக்கால வெளியிலும் அலையத் துவங்கின

நீண்ட காலமாகிவிட்டது
பல திக்குகளின் நீர் நிலங்களை
நோக்கிச் சென்றிருக்கும்
எது எத்திசையில் உலவுகிறது
என யூகித்தறிய முடியவில்லை
திரும்பி வந்துவிடும்போது
வெவ்வேறு நிலத்தின் வாசனையோடும்
குரல்களோடும் என் உடலெங்கும் மேய்ந்து
என் அடையாளத்தைக் கலைத்து அடுக்குகின்றன

யோனி ஒரு பட்டாம்பூச்சியாக
மலைகளில் அலைவதைக் கண்டதாக
காட்டில் விறகு பொறுக்கச் சென்ற
பெண்கள் வந்து கூறக்கேட்டேன்

‘விஸ்வரூபம்’ கவிதையை, ‘ஒளவையின் மகள்’ கவிதையின் தொடர்ச்சியாகவே வாசிக்கலாம். இது இவரது பிரபலமான கவிதை. யோனியின் விட்டு விடுதலையான கட்டற்ற நிலையைக் காட்சியாக்கி இருக்கிறார். உடலை ஒரு வெளியாகவும், காலமாகவும் மாற்றும் முயற்சியில் அவர் கண்டடைந்த காட்சியின் சித்திரம் இக்கவிதை. உடலின் உறுப்புகளைக் குலைத்து மாற்று அடுக்கும் உரிமையும் கற்பனையும் பெண்களுக்கு காலந்தோறும் வாய்த்துக் கொண்டே தான் இருக்கின்றன என்பதற்கு, அக்கம்மா தேவியின் கவிதை வரிகளைப் போலவே இக்கவிதையும் ஒரு சாட்சி. அக்கற்பனையின் காட்சியை நிலைப்படுத்தும் போராட்டத்தில் பெண்கள் வெற்றி பெற்றுள்ளனரா என்பது இன்னொரு தொடருக்குக் கருப்பொருளாக இருக்கலாம். கவிதை மொழி வழியாகப் பெற்ற வெற்றிகள், ஆதிக்கச் சக்தியை அபகரித்து அனுபவிக்கும் ஆணாதிக்கத் தந்திரங்களைப் பயிலும் ஆண்களிலிருந்தும் பெண்களிலிருந்தும் ஒடுக்கப்பட்ட இனப்பெண்களை விடுவிப்பவை.

இக்கட்டுரையின் இரண்டாவது பகுதி இது. மாலதி மைத்ரியின் கவிதைகளில் இயங்கும் மீனவச் சமூகத்தின் வழக்காற்று மொழியும் அவர்களின் வாழ்வெளியான கடலும் பற்றிய முழக்கங்கள். இவ்விடத்தில், மீனவசமூகத்தின் அரசியல் ஒடுக்குமுறை சமகால அரசியல் நிகழ்வுகள் வழியாக, எல்லோரும் அறிந்ததே என்பதால், அதைக் கடந்து அச்சமூகத்தின் கருத்தாக்க வெளிக்குள் நாம் நுழையலாம் என்று நினைக்கிறேன். ஆதிக்கச் சமூகப் பெண்ணியம் என்பதும் அதன் கோரிக்கைகளும் பார்ப்பனீயப் பெண்ணியத்தை முன்மொழிவதே. வெறுமனே பார்ப்பன சமூகத்தை மட்டுமே குறிப்பதன்று. கடந்த காலம் தந்த கல்வி, வாழ்க்கை முறை, பட்டறிவு, நுகர்வுப் பண்பாடு வழியாகப் பிற சமூகப் பெண்களும் பார்ப்பனீய அறிவுச்சுமையைப் பெற்றுத் தான் ஒழுகி வருகின்றனர். இவர்களின் ஆதிக்க வினை என்பது தொடர்ந்து பார்ப்பனர்களின் ஆதிக்கப்பணிகளைக் குறைகூறிக் கொண்டே இருக்கும் அதே சமயம், தான் பிறசமூகப் பெண்கள் மீது பிரயோகிக்கும் ஆதிக்கச் செயல்பாடுகளை மறைத்துக் கொள்ளும் தந்திரம். இத்தகையவர்களின் இடிபாடுகளுக்கிடையில் சிக்கிக் கொண்ட, மரபார்ந்த இம்மண்ணின் சமூகப்பிரச்சனைகளை வெளிப்படுத்தும் அதிகாரத்தையும் அவர்களே தக்கவைத்துக் கொண்ட ஊடகச்சிதைவிற்கான காலக்கட்டத்தில், மாலதி மைத்ரியின் கவிதைகள் மீனவ வழக்காற்று வெளியைத் தொடர்ந்து மொழிப்படுத்திக் கொண்டே இருக்கின்றன.

மீன்காரி

காட்டுக் குதிரையென பறப்பாள்
தினமும் முப்பது மைல்களாவது
தலைச் சுமையுடன்
மழை வெயிலில்
சிதறாப்பனை போல
மீன் விற்று திரும்புகையில்
கூடையில் சிரித்துக் கொண்டிருக்கும்
(ரொம்ப சிரிச்சா புளிப்பேறிவிடும்)
ஒரு மொந்தை கள்
ஆனாலும்
சுலகில் மறைந்திருக்கும்
ஒரு கொடுவாக்கத்தி

கடலை அழைத்து வருதல்

கடல் தன் தடயங்களால்
வீட்டை வளைய வந்துகொண்டிருக்கிறது

துவைக்கப்படாத குழந்தையின் ஆடை
கடலின் வாசனையோடு
கொடியில் தொங்கிக் கொண்டிருக்கிறது
மூலையில் ஒதுங்கிவிட்ட குத்துமணல்
எதையாவது தேடும்பொழுது
கலகலக்கும் சங்குச் சிப்பிகள்
சட்டைப்பையில் கைவிடும்பொழுதெல்லாம்
விரல்களில் ஒற்றி வரும் மணலென
ஓவியரின் கழுவப்படாத நிறக்கிண்ணங்களைப் போல்
கடல் ஒவ்வொருவரிடமும் தங்கிவிடுகிறது

அலைகளின் வீடு நங்கூரமிட்ட
தோணியென அசைந்து கொண்டிருக்கிறது

கல்யாணமும் கட்டுமரமும்

அவளின் திருமண வயதை
வேலியில் நிற்கும் கல்யாணமுருங்கை சொல்லும்
அந்த மரமும் அவளும்
வேறு வேறு திசையிலிருந்து
வெட்டி நடப்பட்டவர்கள்
இந்த நிலத்தில் ஒரே நாளில்

அவளைப் போலவே அதுவும்
பட்டும் துளிர்த்தும் – இப்போது
பெரிய தாய்மரமாக தனது வாரிசுகள்
தோட்டம் முழுதும் செழிக்க நிற்கிறது – நின்றது

வசந்தம் முழுதும் ஒரு திருவிழாப் போல
பூத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அழகில்
சுற்றிச் சுற்றி வருவாள்
அடிக்கும் காற்றுக் கெல்லாம்
காய்கள் குலுங்க சிரித்துக் கொண்டிருந்த அது
அடிமண்டை பிளந்து காற்றாடக் கிடக்கின்றது

இன்று
எங்கோ ஒரு திசையில்
கடலில் மிதக்கிறது
யாருடைய வாழ்க்கையையோ சுமந்து கொண்டு

(முகூர்த்தக் காலாக மணமகள் வீட்டில் நடப்படும் கல்யாண முருங்கை கிளை வளர்ந்து மரமான பிறகு அது கட்டுமரமாகப் பயன்படுத்தப்படுவது மீனவ சமூகத்தின் நாட்டார் வழக்காகும்)

’கல்யாணமும் கட்டுமரமும்’, ஒரே சமயத்தில் பெண்ணின் வாழ்வும் பொருளும் செயற்பொருளும் பொருளற்ற வாழ்வுமாக மாறும் நிலை பற்றிய கவிதை. ‘வார்த்தைகளின் பேரரசி’ என்ற கவிதையில்,

சினைக்கெளுத்திகளை விழுங்கும்
வெள்ளைக் கொக்குகள் பாவம்
புன்னை மர நிழலில்
பொரித்த உளுவை மீன்களுடன்
கள்ளுண்ட நாம்
கொக்குகளை விரட்டித் திரிவோம்
வெள்ளிக் கெண்டைகள் பாயும் மதகடையில்
வெள்ளிவீதி
உனது மடியில்
நானும் படர்ந்திருப்பேன்
முகமற்று ஒலிக்கும்
தூரத்து யாழிசையைக் கேட்டபடி
சினைக் கெளுத்திகளை விழுங்கும்
வெள்ளைக் கொக்குகள் பாவம்

என்ற பகுதியால் கடலும் கடல் சார்ந்த மொழியும் மாலதி மைத்ரியிடம் தீவிரம் பெற்றிருக்கின்றன. ‘சங்கராபரணி’, ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற தன் முதல் இரண்டு தொகுப்புகளில் கடல் என்பதை முக்கியமான கருப்பொருளாயும் உடலுக்கான வெளியாகவும் கட்டமைத்து, தன் மொழியை நீர்மைப்படுத்திக் கொண்டிருந்த மாலதி மைத்ரி, தனது மூன்றாவது தொகுப்பான ‘நீலி’யில் உலகப்பொதுப் பிரச்சனைகளை உரக்கப் பேசத் தொடங்கியிருக்கிறார். என்றாலும், உலகப்பிரச்சனைகள் தொடர்ந்து அடையாளம் பெறுவதற்கான அமைப்புகள் உருவாவதற்கான வாய்ப்புகள் உலகெங்கும் எப்பொழுதுமே இருக்கும்பட்சத்தில் மீனவச் சமூகக்கருப்பொருட்கள் மீதான விருப்பீர்ப்பை இன்னும் அவர் தனக்குள் தக்கவைத்திருக்கலாமோ என்ற ஏக்கம் மேலிடுகிறது. அச்சமூக வாழ்வின் நுணுக்கங்களையும் இயல்பான உரிமைகளையும் மொழிப்படுத்தும் அவசியம் உக்கிரம் பெற்றிருக்கும் ஆண்டைத்தானே நாம் வந்து சேர்ந்திருக்கிறோம்! பிராந்திய, அந்தரங்க அரசியலை உலகப்பொது அரசியலின் அக்கறைக்குக் கவனப்படுத்துவது தான் இன்றைய படைப்பிலக்கியவாதிகளின் சவால்!

அதே போல், தமிழ் நவீனக் கவிதையை சிறுகதையின் குறுக்கப்பட்ட வடிவம் என்று கருதியோர் அதன் பரப்பில் கைவைத்த போதெல்லாம், அது தன் வளர்ச்சி வேகத்தைக் குறைத்துக் கொண்டது. அதே போல, கவிதை மொழியை உரைநடையாக்கி, நடை வண்டியில் பழக்கியபோதும் தன் முதுகெலும்பை ரப்பர் சுருளைப் போல தொய்வுப்படுத்திக் கொண்டது. கவிதை மொழி, கருப்பொருளின் முக்கியத்துவத்தை, கவிஞன் சிந்திப்பதற்கு ஒத்த சொற்களிலேயே படைத்து எல்லோருக்கும் கடத்துவது என்பது என் நம்பிக்கை. மேற்குறிப்பிட்ட, இரண்டு சிக்கலையும் அணுகுவதற்கான கவித்துவ விசாரணையை எழுப்பாத, விமர்சன உரையாடலை நிகழ்த்தாத வெளியில் ஒரு வாசகன், அது கவிதையா அல்லவா என்பதைக் கண்டடையும் பயிற்சியை அடைவதற்கான வாசிப்பைத் தானே தான் நிகழ்த்தவேண்டியிருக்கிறது. மாலதி மைத்ரி, தன் தொடர் கவிதை இயக்கத்தால் பெண்ணியச் சிந்தனை வெளியை விரித்துக் கொண்டே இருக்கும் அவர், கருத்தாக்கத்தின் வெப்பத்தைப்பதிவு செய்யும் அவசரத்தில், மொழி தன் நடையை மாற்றிக் கொண்டதையும் மொத்தத் தொகுப்பையும் வாசிக்கையில் உணரமுடிகிறது.

மாலதி மைத்ரியின் உச்சபட்ச பெண்ணிய, பாலிய மொழி வெளிப்பாட்டின் நேர்மையான பதிவை அவரது பெரும்பான்மையான் கவிதைகளில் காண முடிந்தாலும், அதன் எல்லைகளைக் கடந்து பறக்க அவர் விரிக்கும் சிறகுகள், தன்னுடலை ஒடுக்குதலை சம்பிரதாயமாகக் கொண்டிருக்கும் எல்லோருக்குமே தன்னுடல் விரிக்க உதவக்கூடியவை.

ஒரு கோப்பை தேனீர்

கண்ணாடியில் வெட்டுப்பட்ட இறக்கைகளுடன்
சுற்றிக் கொண்டிருக்கிறது மின்விசிறி

என் ஆன்மாவைப் போன்ற
கறுத்த கசந்த தேனீரைக் குடித்துக்
கொண்டிருக்கிறேன்

உனது சிமிழுக்குள் அடைப்பட்ட
கிளியல்ல உயிர் – அது
விசையற்ற கோளம் போல்
அலைந்து கொண்டிருக்கிறது

உன்னால் ஏழுகடல் மட்டுமே தாண்டமுடியும்
கோப்பைக்குள் நீ- அதன்
விளிம்புக்கு வெளியே
எல்லையற்ற என்னுடல்.

அருட்பெருஞ்சோதி

நெருப்பைத் தொடும் ஆவல்
எல்லா உயிரினத்திற்குமுண்டு
நெருப்பைத் தொட்டு வளர்த்தவள் நீ

நெருப்பு.
அணைந்த பூமியில் உருவாக்கப்பட்ட
முதல் நெருப்பு
இன்று வரையிலும் உன் உடலின்
வெம்மையோடே நீடிக்கிறது.

ஒவ்வொரு துளி நெருப்பிலும் நீ

தீ பெண்ணிலிருந்து பிறந்ததென்பாள்
என் தாய்

எனக்குள் தீயைத் தொட்டறியச் சோதித்தேன்
யோனி தகித்தது

’அருட்பெருஞ்சோதி’ கவிதை, இக்கட்டுரைத் தொடரின் நோக்கத்திற்கும், ஒளவை மொழி வெளிச்சத்தைக் கவிதை மொழியால் பரப்புவதைத் தன் தொழிலாகக் கொண்ட ஒரு கவிஞருக்கும் ஏன், என் சுய விருப்பத்திற்குமே கூட நியாயம் பாராட்டும் கவிதை!

----------------------------------------------------------------------------------------------

சிறு குறிப்பு: மாலதி மைத்ரி, சங்கராபரணி (2001), நீரின்றி அமையாது உலகு (2003), நீலி (2005) ஆகிய கவிதைத் தொகுப்புகளைப் படைத்துள்ளார். கவிதை தவிர, கட்டுரை எழுதுவதிலும் தீவிர ஈடுபாடு கொண்டவர். ‘அணங்கு’ என்ற இலக்கிய இதழையும் நடத்தி வரும் இவர் புதுவை மாநிலத்தைச் சேர்ந்தவர்.


http://koodu.thamizhstudio.com/thodargal_14_12.php


Thursday, May 5, 2011

மோனா - ஆவணப்படத் திரையிடல் நிகழ்வு



மோனா - ஆவணப்படத் திரையிடல் நிகழ்வு

வணக்கம் நண்பர்களே,

தமிழ் ஸ்டுடியோ மூலம் ஏற்கனவே இரண்டு திரையிடல்கள் (குறும்படங்களுக்காக குறும்பட வட்டம், உலகத் திரைப்பட / குறும்படங்களுக்காக பௌர்ணமி இரவு) நடைபெற்று வரும் இவ்வேளையில் இன்னொரு திரையிடல் தேவையா என்கிற வாதம் எனக்குள்ளேயே உண்டு. ஆனால் சமீபக் காலமாக ஆர். ஆர். சீனிவாசன் அவர்களுடன் கதைத்துக் கொண்டிருக்கும்போது ஆவணப்படங்களின் தேவைகள் குறித்து மிக நுட்பமாக பேசிக் கொண்டிருந்தார்.

ஆவனப்படங்களுக்காகவும் ஒரு திரையிடல் இங்கே அவசியப் படுகிறது என்பதையே அவரது பேச்சு உணர்த்தியது. ஆவணப்படம் என்றால் என்ன என்று இங்கே தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கும் பலத் திரைப்படக் கலைஞர்களுக்கே தெரியாது. ஆனால் ஆவணப்படம் என்பது ஒரு சமூகப் புரட்சியின் விதை. அது ஒரு சமூகத்தின் பிரதிபலிப்பு. சிதைக்கப்பட்ட ஒரு சமூகத்தின் சவக்கிடங்கில் இருந்து வெளிவரும் விருட்சம். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். இப்படி தேவை இருக்கும் ஆவணப்படங்கள் தமிழ் சூழலில் வெகுப் பரவலாக திரையிடப்படுவதில்லை.

அங்கொன்றும் இங்கொன்றுமாக எப்போதாவது மட்டுமே திரையிடப்படுகிறது. ஆர்வலர்கள் தொடர்ந்து ஆவணப்படங்களைப் பார்க்க வசதியாக தமிழ் ஸ்டுடியோவில் இந்த மாதம் முதல் இனி ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமையன்று ஆவணப்படங்கள் திரையிடல் நடைபெறும். மிக முக்கியமாக இலக்கிய, விவசாய சுற்று சூழல் அரசியல் சார்ந்த, ஆவணப்படங்கள் இங்கு திரையிடப்படும். தமிழ் ஸ்டுடியோவின் அலுவலக மொட்டை மாடியில் (பௌர்ணமி இரவு நடைபெறும் இடம்) இந்நிகழ்வு நடைபெற இருக்கிறது.

மாதத்தின் முதல் சனிக்கிழமை மாலை 7 மணிக்கு திரையிடல் தொடங்கும். ஆவணப்படத் திரையிடல் முடிந்ததும், சிறப்பு பார்வையாளர் நம்மிடையே அந்த ஆவணப்படம் முன்வைக்கும் அரசியல் குறித்து தனது கருத்தை முன் வைப்பார். பின்னர் ஆவணப்படம் குறித்தும், அதன் அரசியல் குறித்தும், ஆர்வலர்கள் அந்த சிறப்பு பார்வையாளருடன் உரையாடலாம். நிகழ்வு மிக சரியாக இரவு பத்து மணிக்குள் முடிந்து விடும்.

ஆவணப்படத் திரையிடலை தொடங்கி வைப்பவர்: எம். சிவக்குமார்

தமிழ்நாடு திரைப்பட சங்கத்தை நிறுவியவர்களில் ஒருவர். மிக முக்கியமான ஆவணப்பட கலைஞர்.

நாள்: 07-05-2011
, சனிக்கிழமை

இடம்: எண். 41, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024 (லிபர்ட்டி திரையரங்கம் எதிரில்)

தமிழ் ஸ்டுடியோ அலுவலக நிலப்படம் (MAP)

http://thamizhstudio.com/thodarbukku.php



(எல்லாம் சரி அதென்ன மோனா? விழாவிற்கு வந்து தெரிந்துக் கொள்ளுங்கள். )

தொடர்புக்கு:

9840698236, 9894422268



Tuesday, May 3, 2011

கதை சொல்லி - கல்கி (Kalki)


கதைகளைக் கேட்க: http://koodu.thamizhstudio.com/kadhaisolli_22.php


கதை சொல்லி - கல்கி (Kalki)

லிவி



"Don’t know when
The dawn will be coming
I open all the doors
"
---------------------------------------------------------------------------------
மேற்சொன்ன‌ வ‌ரிக‌ள் க‌ல்கியின் வீட்டில் அவ‌ருடைய அழகிய புகைப்ப‌டத்துட‌ன் எழுத‌ப்ப‌ட்ட எமிலிடிக்கின்ஸனின் கவிதை வரிகள். கதை சொல்லிக்காக‌ க‌ல்கியின் கொட்டிவாக்க‌த்தில் உள்ள‌ அவ‌ர்வீட்டில் நுழைந்த‌வுட‌ன் வீட்டில் மாட்ட‌ப் ப‌ட்டிருந்த‌ ப‌ட‌ங்க‌ளும் வாச‌க‌ங்க‌ளும் பெரிதும் க‌வ‌ர‌த்தொட‌ங்கின‌. ஒரு புகைப்ப‌ட‌த்தில் க‌ல்கி அடியில் புத்த‌க‌ங்க‌ளுட‌ன் ப‌டுத்திருப்ப‌து போன்று ஒருபுகைப்ப‌டம் இருந்தது. மேலும் ஒரு புகைப்படம் க‌ல்கி அவ‌ர் தோழிக‌ளுட‌ன் வ‌ட்ட‌மாக‌ ப‌டுத்துக் கொண்டேமேலே பார்ப்பது போன்ற‌தொரு புகைப்ப‌ட‌ம். ச‌துர‌ புகைப்ப‌ட‌ச் சட்டக‌த்தின் வ‌ழி பாயும் வ‌ட்ட‌ம் உருக்கொணரும் உண‌ர்வு அலாதியான‌து. இன்னுமொரு புகைப்பட்ட சட்டத்தின் இருந்த வாசகம் இவை

" நான் திருநங்கை தான்
ஆனால் அது மட்டுமே
என் அடையாளம் அல்ல".

புற‌க்க‌ணிப்பு, கேலி, ஒடுக்குமுறை இவைகளை எதிர்க்கும் திற‌ம் கொண்ட‌ ம‌னித‌ர்க‌ள் வாழ்வின் இன்ன‌ல்க‌ளையும் தாண்டி வாழ்வையொரு கொண்டாட்ட‌மாக‌ மாற்ற‌த் தொட‌ங்கிவிடுவ‌ர். த‌ன‌க்கும் தான் சார்ந்த‌ ச‌க‌ ம‌னித‌னுக்கு வாழ்வின் உன்ன‌த‌த்தை ப‌கிர‌த் த‌ருவார்க‌ள். அன்பும் க‌ருணையும் விரவிக்கிட‌க்கும் நாளெல்லாம் வாழ்வும், ம‌து கொண்ட உச்ச‌மென‌ மன‌மும் குதுக‌ளிக்கும். ச‌மூக‌ப் போராளி, ந‌டிகை, உத‌வி இய‌க்குநர், திருந‌ங்கைக‌ளுக்கென‌ இணைய‌த‌ள‌ம், தெரு நாட‌கங்க‌ளென‌ க‌ல்கியின் ப‌ல‌ அவ‌தாரங்க‌ள்அவ‌ரைப் ப‌ற்றி நிரூபிப்ப‌வை. த‌ன் ச‌மூக‌ம் சார்ந்த‌வ‌ர்க‌ளுக்கு ஒரு ந‌ம்பிக்கையென‌வும் நெஞ்சுர‌ம் கொண்ட‌வராக‌வும் வாழ்ந்து வ‌ருப‌வ‌ர்.

கல்கி தன் பள்ளி நாட்களில் முதல் மாணவராக வந்திருக்கிறார். சங்க இலக்கியங்களில் திரு நங்கைகளைக் குறிப்பிடும் பேடி என்னும் வார்த்தை அறியாமையைத் தவிர வேறேன்ன!.

கல்கியின் சிறு பிராயத்திலே தன்னிடம் பெண்மைத் தன்மை மிளிர்வதை உணரத் தொடங்கிவிட்டார். தன்னுடைய பத்து வயதில் தன் சகோதரிகளுடன் சேர்ந்து நாடகங்களில் பங்கேற்கும் போது கூட நாட்டியக்காரி, இளவரசி, வியாபாரப் பெண்மணி என்றே தன் பாத்திரங்களை விரும்பி எடுத்திருக்கிறார். தன்னுடைய பதிமூன்றாவது வயதில் தன்னுடைய பெண்மைத்தனத்தையும் அதை மறைக்க இந்த உலகுடன் தான் மேற்கொள்ளும் போராட்டங்களையும் கவிதையாக எழுதி வைத்துள்ளார். அவை அவர் தாயாரின் கண்களில் படவே, கல்கியின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்கத் தொடங்கிவிட்டார்.

பின்னர் பள்ளி மேல் நிலை படிப்புக்காக ஆண்கள் பள்ளியில் பெற்றோர்கள் சேர்த்து விட்டிருக்கிறார்கள். சக மாணவர்கள் அவரை வார்த்தைகளாலும் செயலாலும் அவருடைய பெண்மைத் தனத்தை கிண்டல்செய்து சீண்டி இருக்கிறார்கள். இதில் ஆசிரியர்களும் அடக்கம். அந்த ரணங்களில் இருந்து தப்பிப்பதற்காக பள்ளியை மட்டம் அடித்து பூங்காக்களில் உலாவத் தொடங்கியிருகிறார். அங்கு தான் தன்னைப் போன்ற அப்சரா என்னும் திருநங்கையைச் சந்தித்திருகிறார். திருநங்கைகளின் குடும்பத்தில் தன்னை ஒருஅங்கமாக இணைத்துக் கொண்டார்.

நல்ல வேளையாக தான் பிறந்த குடும்பத்தில் இருந்து வெளியேறும் நிலை கல்கிக்கு ஏற்படவில்லை. தன்குடும்பத்தாரிடம் விலக்கிச் சொல்லி அவர்களை மனதை நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு சிறிது சிறிதாக மாற்றியுள்ளார்.

மதுரை காமராஜர் கல்லூரியில் ஊடகத் துறை சார்ந்த படிப்பை மேற்கொண்டார். தன்னைப் போன்ற பிற திருநங்கைகளில் வலியை எடுத்துக் கூறவதற்கே அந்த படிப்பை மேற்கொண்டுள்ளார். கல்லூரிநாட்களில் "சகோதரி" யென்னும் பத்திரிக்கையை திருநங்கைகளுக்காக ஆரம்பித்துள்ளார்.

பன்னாட்டு ஊடக மொன்றில் வேலைக்குச் சேர்ந்து ஆராய்ச்சி சம்மந்தமான ஆண்கள் குழு ஒன்றுக்கு தலைமை ஏற்று நடத்தியிருக்கிறார். பின்னர் வேலையை விட்டு, 'சகோதரி' அமைப்பை திருநங்கைகளுக்காக ஆரம்பித்தார். ஆரோவில்லில் உள்ள நாடகக் குழுவிலும் பங்கெடுத்திருக்கிறார். தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள கல்லூரி மாணவர்களைச் சந்திப்பதுஅவர்களுடன் திருநங்களுக்கு எதிராக நிகழும் அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பது மற்றும் திருநங்கைகளை சமமாக நடத்த வேண்டும் என்பதற்கு ஆதரவாக அவர்களுடன் உரையாடுகிறார். 2008ம்ஆண்டு ஈழ‌த்தில் நடந்த இனப் படுகொலைகளுக்கு எதிராக திருநங்கைகள் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தனர். அநீதிகள் நடக்கும் இடங்களில் எல்லாம் திருநங்கைகள் ஒன்றாக சேர்ந்து அதை எதிர்க்கவேண்டும் என்பதில் நம்பிக்கை வைத்துள்ளார் கல்கி.

திருநங்கைகளுக்காக தொடர்ந்து போரடி வருபவர் கல்கி. மெல்ல மெல்ல திருநங்கைகளைப் பற்றிய சமுதாயக் கண்ணோட்டம் மாறி வருவதைப் பார்க்கலாம். திருநங்கைகளுக்கென நலவாரியம் ஒன்றைஅமைத்திருக்கிறது தமிழக அரசு. அரசு கல்லூரிகள் பல்கலைக்கழ‌கங்களென சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுகின்றன. ஆனால் செல்ல வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருப்பதாக கருதுகிறார் கல்கி.

கல்கியுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது "விடுதலை கலைக்குழு" என்னும் முற்றும் திருநங்கைகள் பணியாற்றும் கலைக் குழுவைப் பற்றிச் சொன்னார். இக் கலைக்குழுவில் திருநங்கைகளே இசை அமைத்தும், நடனங்களையும் மேற்கொள்கின்றனர். சமீபத்தில் கொச்சின் திரைப்பட விழா மற்றும் நேபாளத்தில் நடந்த சவுத் ஏசியன் கான்பரன்ஸ் பார் வைலன்ஸ் எகெய்ன்ஸ்ட் வுமன் (south asian conference for violence against women) நிகழ்ச்சியை நடத்தி இருக்கின்றனர்.

கல்கியின் வீட்டிற்கு அருகில் சிறு தோட்டம். கதைகளை பதிவு செய்யத் தொடங்கும் தேவையானஅமைதியை கிழித்துக் கொண்டு வெளியில் இருந்த காகக் கூட்டம் கரையத் தொடங்கியது. அவைகள் பாசைகள் விளங்குமாயின் காக்கைகளின் கதைகளையும் பதிவு செய்யலாம் தான். கதைகளுக்குள் நுழைந்த பின் காக்கைகளின் பாடல் நின்று போன‌து.

மொத்தம் ஐந்து கதைகளென இலக்கு வைத்து பதிவு செய்து கொண்டோம். கோடை வெய்யில் உருக்கி எடுத்துவிடும் போன்ற நிலையிலும் அழகாக கதைகளை பதிவு செய்து தந்தார் கல்கி.

பின்குறிப்பு: கல்கியின் வாழ்க்கை குறிப்புகள் அவருடைய இணையத்தில் இருந்து பெறப்பட்டவை.

கதை 5 குழந்தைகளுக்கான கதை.

கதைகளைக் கேட்க: http://koodu.thamizhstudio.com/kadhaisolli_22.php


Tuesday, April 26, 2011

கதை சொல்லி - பாமா (Bama)


கதை சொல்லி - பாமா (Bama)

லிவி



"பாரச்சிலுவையை
சுமக்கவும் வேண்டும்
கல்லிலும் முள்ளிலும்
இடறல் படவும் வேண்டும்
முகம் குப்புற விழ‌வும் வேண்டும்
கசையடி படவும் வேண்டும்
பனிமலையுச்சிக்கு நடக்கவும் வேண்டும்
இவையனைத்தும் தாண்டுதல்
அறையப்படுவதற்காகவே "

- பானுபாரதி.

எழுத்தாளர்களை சந்திப்பதற்காக செல்லும் முன் அவர்களுடைய புத்தகங்களை படித்துவிட்டு செல்வதுவென் வழக்கமாக இருந்ததில்லை. அவர்களுடைய புத்தகங்களை ஏற்கனவே படித்திருப்பேன் அல்லது அவருடைய ஆளுமையை பற்றி முழு அறிதல் எனக்குள் இருக்கும். என்னுடைய புத்தககட்டுகளில் தேடியபோது சிறிய புத்தகம் ஒன்று தட்டுப்பட்டது. அது பாமாவின் கருக்கு நாவல். புத்தகத்தை எடுத்து படிக்க தொடங்கியவனுடன் கோடை மழையின் தூரல் கேட்டுக்கொண்டிருந்தது. மழையைகேட்டுக் கொண்டே படித்துக் கொண்டிருந்தேன். அற்புதமான இந்த மழையைப் போல் இருக்கவில்லை பலர் வாழ்க்கை. இன்னும் சாதியத்தின் துயர் நீடித்துக்கொண்டே இருக்கிறது.

சாதியென்பதை எதிர்த்து இலக்கியத்தில் வலிகளின் பதிவும், அதை எதிர்கொள்ள ஏற்றுக்கொண்ட துணிவும் முன்னெடுத்த பாதைகளுமே நாளைய வரலாற்றை மாற்றி அமைக்கும். நூற்றாண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்ட தலித்துகளின் வாழ்க்கை பதிவை அவர்கள் போல் காத்திரமாக யாராலும் முன்வைக்க இயலாது என்பதை உணர்த்தியது கருக்கு. மதம் சக மனிதனை நேசிக்கச் சொல்லித்தந்தாலும், எந்த சாதி சார்ந்த மனிதனிடம் அன்பு செலுத்துவது என்பதையும் அதன் நிறுவனம் உட்புகுத்திச் சொல்லித் தரும் என்பதை தெளிவாக்கியது அவர் கன்னியாஸ்திரியாக பூண்ட துறவறம்.

பாமாவை சந்திககச் செல்லும் காலை கருமேகங்களால் நிறைந்திருந்தன. காஞ்சிபுரத்தில் உள்ள உத்திரமேரூர் என்னும் ஊரில் அவரை கதை சொல்லிக்காக சந்திக்கப் புறப்பட்டேன். பேருந்து நிறுத்தத்தில் தேங்கிய மழை நீரும், சேறும் சகதியுமாக மழையின் இன்னொரு முகம் அனாயசத்தை வரவழைத்துக் கொண்டிருந்தது. அங்கங்கே கவனித்தும் கால்களை காந்தம் போல் ஒட்டிக் கொண்டது சேறு. புதிதாக கடைகளில் தென்பட்ட மாம்பழங்கள் மாம்பழ சீசனை சொல்லிக் கொண்டிருந்தது. அவர்வீட்டுக்கு தாமதமாகவே செல்ல நேர்ந்தது. மதியத்தை தாண்டிவிட்டிருந்ததால் கதை பதிவின் நடுவே உணவு பரிமாறினார்.

பாமாவின் மூத்த சகோதரர் ராஜ் கௌதமன். அவர் தேர்ந்த விமர்சகராக அறியப்படுபவர். சிலுவை ராஜ்சரித்திரம் அவரின் புகழ் பெற்ற நாவல். கருக்கு நாவலில் அவரை கல்வி கற்க ஊக்கப்படுத்தும் அதே அண்ணன் தான். தமையனிடம் இருந்து தான் எழுத்தைப் பெற்றுக் கொண்டீர்களா எனக் கேட்டவுடன்உடனே மறுதலித்தவர் தன் தந்தையிடம் இருந்து தான் எழுதும் திறன் கடத்தப்பட்டிருக்க வேண்டும் என்றார். "என் தகப்பனார் அறியப்படாவிட்டாலும் நாடகங்கள் எழுதுவார், பாடல்கள் இயற்றுவார். எழுத்துத்திறன் ஜீனில் வந்திருக்க வேண்டும் " என்றார்.

பாமாவின் எழுத்து அவரின் கிராமத்தில் உள்ள மனிதர்களின் வாழ்வியலை அவ்வாறே பதிவு செய்வ‌து. அவர் நாவல் எழுதுவது என்று திட்டமிட்ட வடிவுடன் எழுதாததால் பெயர்களையும் மாற்றாமல் நிகழ்காலத்தில் அழைக்கும் பெயர்களுடனே கருக்கு நாவலிலும் குறிப்பிடிருக்கிறார்.

நான் சென்னையிலுள்ள மேன்சனில் தங்கியிருந்த நாட்களில் 'ஆழி சூழ் உலகு' எழுதிய ஜே.டி.குருஷின் நண்பர் ஒருவரும் தங்கியிருந்தார். அவருடன் உரையாடிக் கொண்டிருந்த நேரத்தில் அவர் குறிப்பிட்ட விடயங்கள் சுவாரசியமானவை. ஜே.டி.குருஷ் ஆழி சூழ் உலகில் தான் பார்த்த மனிதர்களையே பதிவுசெய்துள்ளார். நாவலைப் பற்றி அறிந்து கொண்ட அங்குள்ள மனிதர்கள் கோபமைடையவே அவர்களைப்பற்றி எப்படி எழுதலாமென அவரை ஊருக்குள் நுழைய தடை விதித்து விட்டார்கள். அவருடைய கிறிஸ்தவ தேவாலயத்திலும் புத்தகத்தை எரிக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள். இதுவல்லவா இயேசுவின் மறுகன்னத்தை காட்டுவது.

அதைப் போலவே பாமாவும் தான் எழுதிய கருக்கு நாவலால் ஒரு வருடம் பாண்டிச்சேரியில் தன்னுடைய தமயன் வீட்டில் வனவாசம் இருந்திருக்கிறார். அதிகம் படிக்க தெரியாத மக்கள் பிறர் மேலோட்டமாக படித்துச் சொன்னதை அப்படியே கேட்டுவிட்டு ஆத்திரத்தில் கொதித்திருக்கிறார்கள். அந்த நாட்களில் பாமாவின் ஊரைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஒருவர் பாமாக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அவரை கொஞ்ச நாட்கள் ஊர் பக்கம் வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு, அங்கிருக்கும் மக்களை கூட்டாமாகச் சேர்த்து நாவலை வாசித்துக் காட்டியிருக்கிறார். அவர்களின் பட்டப்பெயர்கள் இன்ன இன்ன இடத்தில் தான் உபயோகித்திருக்கிறார். எதையும் அவர் தவறாக எழுதவில்லை என்பதை விளங்கப் படுத்தியிருக்கிறார். அதன் பின்னரே அம்மக்களும் சமாதானம் அடைந்திருக்கின்றனர்.

பாமாவின் ஊரில் திறக்கப்பட்ட 'அம்பேத்கர்' சிலைக்கு அவரையும் சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளனர். இன்று 'கருக்கு பாமா' எனவே அவர்களால் அறியப்படுகிறார். பாமா இருப்பது அவர்களுக்கு பெருமிதமும் கூட. 'இப்பொழுதெல்லாம் அவர்களே என்னிடம் வந்து கதைகளைக் கூறி இந்த கதையை எழுது என்று உரிமையுடன் சொல்கிற நிலைக்கு வந்துவிட்டது' என்றார். 'இப்பொழுது சுதாகரித்து விட்டேன் பெயரைமாற்றியே எழுதுகிறேன்' என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

பாமா கதைகளை சொல்வதற்கு பெரிய ஆயத்தம் எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை. கதைகள்அவருக்குள்ளே இருந்தது. கதைகளைச் சொல்லும் போதே இடையிடையே எடுத்துக் கொள்ளும் மௌனத்துடன் கதை விவரிப்பு அழகாக கடந்து சென்று கொண்டிருந்தது. கதைகளை விவரிக்கையில் சில இடங்களில் அவராலேயே சிரிப்பை அடக்க இயலவில்லை. கதைகளை லயித்து லயித்துச் சொன்னார். பன்றியும் குரங்கும் வரும் கதையில் ஆச்சியத்துடன் எழும் அவர் குரலில் இருக்கும் பூரிப்பை நேரில் கண்டேன். ஒவ்வொரு கதைக்கும் இடையில் அவர் நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. உடனே தொடங்கி மழமழவென விவரிக்கத் தொடங்கிவிடுவார். கதைகள் அனைத்தும் அவருக்கு மனப்பாடம் போல என‌ நினைத்துக்கொண்டேன்.

அவர் சொன்ன கதைகளில் 'ஏணி ஏற்ற இடம்' போலவே இன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கும் கொடுமையைச் சொன்னார். ஒன்பதாவது வகுப்பு மாணவன் ஒருவன் தாழ்த்தப்பட்ட என்று சொல்லப்படுகிற சமுதாயத்தைச் சார்ந்தவன் என்பதால் அவனால் பரிமாறப்பட்ட உணவை வேண்டாம் என்று சொன்ன அசிங்கம் பிடித்த பிற சாதித் திமிரின் நிகழ்வு ஒன்றைப் பற்றியும் சொன்னார். 1925ல் எழுதிய கதை 2011லும் பொருந்துகிறது.

கதைகளில் பதிவை தாண்டியும் தேனீருடன் அவருடன் கதைத்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது அவர் பகிர்ந்து கொண்ட நிகழ்வுகள் ஆச்சிரியத்தில் ஆழ்த்துபவை. பாமா கலந்து கொண்ட சிறுகதை பட்டறைக்கு அழகிய பெரியவனும், ஆத‌வன் தீட்சண்யாகவும் பயிற்சி பெற வந்திருக்கின்றனர். அவர்களை பட்டறை முடியும் போதே கதைகள் எழுதச் சொன்னோம். நன்றாகவே எழுதினார்கள் என்றார். இன்று இருவரும் தமிழ் இலக்கியப் பரப்பில் நன்கறிந்த ஆளுமைகளாக இருக்கின்றனர்.

பாமா ப‌ள்ளி ஆசிரியையாக‌ வேலை செய்து கொண்டிருக்கிறார். தமிழ‌க‌ அரசாங்க‌ம் ந‌டைமுறைப்ப‌டுத்தியுள்ள‌ 'செய‌ல் வ‌ழி க‌ல்வி'யில் உள்ள‌ ந‌டைமுறைச் சிக்க‌லை ப‌கிர்ந்தார். செய‌ல் வ‌ழி க‌ல்வி சிற‌ப்பான‌தாக‌ இருந்தாலும் ச‌ரியான‌ திட்ட‌மிட‌ல் இல்லாத‌தால் ஐந்தாம் வ‌குப்பு மாண‌வ‌ர்க‌ளால் த‌மிழைக்கூட‌ வாசிக்க‌ இய‌லாத‌ நிலையில் இருக்கிறார்க‌ள் என்று வ‌ருத்த‌ங்கொண்டார்.

கதை 5 மற்றும் 6 ஆகியவை குழந்தைகளுக்கான கதைகள்.

(கதைசொல்லி பகுதி ஒவ்வொரு வாரமும் செவ்வாய் இரவு வெளிவரும்)

கதைகளைக் கேட்க

http://koodu.thamizhstudio.com/kadhaisolli_21.php


Monday, April 25, 2011

சல்மா – ஒப்பந்தப் புன்னகைகள்



ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் - 10

சல்மா – ஒப்பந்தப் புன்னகைகள்

குட்டி ரேவதி



பெண்ணின், ‘பாலின்பப் பரவசநிலை’யை வெளிப்படுத்த இயலாததே ஓர் ஒடுக்கு முறைவடிவமாக மேற்கத்திய நாடுகளில் பெரும் விவாதமாக்கப்பட்டு, அதன் பல்வேறு திசைகள் ஆய்வுப் பொருளாக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலான பெண்கள், ஆணுடன் புணர்ந்து, பிள்ளைகள் பெற்று அவர்கள் பருவம் எய்தும் வரை வளர்க்கும் சுமையைப் பெற்றிருந்தாலும், இப்புணர்ச்சியின் விழிப்பையோ, பரவசத்தையோ உணர்ந்ததே இல்லை. இது ஓர் இயந்திரத்தனமான அனுபவமாகவே பெண்களுக்கு வழங்கப் பட்டுக்கொண்டிருக்கிறது. திருமணத்திற்குள் பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையிலான பாலுறவும், போர்ச்சூழலில் இராணுவத்தினர் பெண்கள் மீது செலுத்தும் பாலியல் வன்முறையும் இயக்கநிலையில் ஒரே மாதிரியானவை தான். அதற்காக, பெண்கள் இப்பால்நிலைப் புணர்ச்சியில் பரவசநிலையை எய்துவதை நோக்கிய விழிப்புநிலை அடைந்து விட்டாலோ, அல்லது அதற்கான வேட்கையை அடைந்து விட்டாலோ மட்டுமே பாலியல் உரிமையை அடைந்துவிட்டதாக ஆகாது. அந்த நிலையை அடைவது என்பதே, ஆண், பெண் இருபாலாருக்கும் தன் உடல் பற்றிய அறிவு, தான் சார்ந்த குடும்பத்தின் வழியாகத் திணிக்கப்பட்டிருக்கும் பண்பாட்டு மொழிகள், தன் சமூகம் மற்றும் வணிக ஊடகங்களான தொலைக்காட்சி, சினிமா போன்றவற்றின் வழியாகப் பழகி, நுகர்ந்து வந்த பாலியல் நம்பிக்கைகள், மேற்குறிப்பிட்ட பாலியல் உரிமைக்குப் போதுமானவையாக இல்லை என்பதை நாம் அறிந்துகொள்வதிலிருந்தே தோன்றுகிறது.

‘உடல் அரசியல்’ என்ற பெண்ணிய படைப்பிலக்கிய விவாதம் தொடங்கிய நோக்கத்திலிருந்து பல முறைகள் திசை திரும்பியிருக்கிறது. உடல் உறுப்புகள் பற்றிய குறிப்பிடலையோ அல்லது தன் பால்நிலை மற்றும் பாலுறவு பற்றிய மேம்போக்கான வாதங்களையோ, வாக்குமூலங்களையோ கூட ‘பெண்ணிய படைப்பிலக்கியம்’ என்று கூக்குரலிட்ட அரசியல் சிதறல்களும் நடந்தேறியிருக்கின்றன. ‘சென்னை பல்லாவரத்தைத் தாண்டி இவ்விலக்கியங்களை மக்கள் அறிந்திருக்கவில்லை. கல்லூரிகளில், இப்பெண்ணிலக்கியம் பற்றிப் பேசிவிடாதீர்கள்’ என்ற முறையீட்டுடன் ஓர் ஆண் எழுத்தாளர் நான் கலந்து கொண்டதொரு கருத்தரங்கத்தில் குறிப்பிட்டுப் பேசினார். ஆனால், இப்பெண்ணிலக்கியங்களின் நோக்கங்கள், சென்னை பல்லாவரம் மேம்பாலத்தை எம்பித் தாண்டுவது மட்டும்தானா? இலக்கியப் பரப்பில், சொற்களின் அரசியல் செயல்பாட்டை பெண்ணிலக்கியங்கள் விரிவுபடுத்தியிருக்கின்றன. கருத்தரங்குகளில், பெயருக்கு ஒரு பெண் எழுத்தாளரைப் பேச அழைப்பது போய், கருத்தரங்கத்தின் விவாதப் பொருளில் பெண்ணியத்தளம் ஒருமுகப்பட்டிருக்கிறது. சிந்தனைகள் கருத்துவேறுபாடும் முரண்பாடும் கொள்ளலாம். ஆனால், நிராகரிக்கப்பட முடியாத ஒரு பெருங்குரலைப் பெண்ணிய இலக்கியம் எய்திருக்கிறது.

எல்லாவற்றையும் தாண்டி, மொழி, தன் சொற்களில் படிந்துள்ள அடக்குமுறைப் புழுதியை நாம் பொருட்படுத்துவதே இல்லை. அப்புழுதியும் அழுக்கும், மனிதன் தன் சொற்புழக்கத்தில் புதுப்பிக்கத் தவறியதால் வந்து அடர்ந்தவை. மொழி, மனிதனின் உளக்கிடக்கையையும் தேவையையும் வெளிப்படுத்தப் பயன்படவேண்டுமே அன்றி, அது ஒருவரையொருவர் கட்டுப்படுத்துவதற்கான கருவியாகவும், கண்காணிப்பதற்கான கருவியாகவும் இருக்கக் கூடாது. நம் இலக்கிய அரசியலை, ‘உடலரசியல்’ எனும் இலக்கியப் போக்கு மாற்றியிருக்கிறது. வெறுமனே, வசைச் சொற்களாகவும், உடல் உறுப்புகளின் பெயர்ச்சொற்களாகவும் இருந்த சொற்களுக்கு நிறைய இயக்கங்களைப் பெண்ணிலக்கியம் செய்திருக்கிறது.

ஒடுக்கப்பட்ட மதப் பின்னணியிலிருந்து, அதிலும், சுல்பிகா, சல்மா, பஹீமா, அனார் போன்றோர் தமது மதச்சூழலிருந்தும் தமது அந்தரங்கச் சூழலிலிருந்தும் படைப்பிலக்கியத்தில் தன்னை வலுவாக ஈடுபடுத்திக்கொண்டதின் விளைவாக இலக்கியத்தின் பால்நிலை விளக்கங்களை மாற்றியமைத்திருக்கின்றனர். இதை, ஓர் அசாதாரணச் செயல்பாடாகவே நாம் புரிந்து கொள்ளவேண்டும். ‘தேசியத்தின் பேரால் ஒரு யோனி, பயங்கரவாதத்தின் பெயரால் மற்றொன்று, பலவந்தத்தின் பிடியில் இன்னுமொன்று, சுயநலத்தின் சூறையில் இன்னொன்று’ எனும் வரிகளால் சுல்பிகா, யோனிகள் சூறையாடப்படும் அத்தனை சமூகக்காரணங்களையும் ஓரிடத்தில் கொணர்ந்திருக்கிறார். மனிதர்களின் மூளைகளை தத்துவச் சிந்தனைகள் பழக்கத்தாலும் நிர்ப்பந்தத்தாலும் பீடித்திருக்கும் நிலையிலிருந்து விழிப்புறும் போது தான் கவிதை பிறக்கிறது என்பதை உணர்த்த இவர்கள் தங்கள் இலக்கியச் செயல்பாட்டில் தொடர்ந்து ஈடுபடுத்திக்கொள்கின்றனர்.

ஒப்பந்தம்

ஒவ்வொரு முறையும்
அம்மா நாசூக்காய்ச் சொல்வதை
அக்கா கோபமாய்ச் சொல்வாள்
படுக்கையறையின்
தவறுகளெல்லாம்
என்னுடையதென

தினமும் படுக்கையறையில்
எதிர்கொள்ளும் முதல் பேச்சு
‘இன்றைக்கு என்ன?’
அநேகமாக
இறுதிப்பேச்சும்
இதுவாகவே இருக்கும்

வேசைத்தனத்தினைச் சுட்டும் விரல்
ஒளிரும் கோடி நட்சத்திரங்களிலிருந்து நீள
நடுங்கும் இரவுகளில்
மிதக்கும் அறிவுரைகள்

குட்டிக்கு உணவூட்ட
இயலாப் பூனையின்
தேம்பியழும் குழந்தைக்குரல்
கவ்விப்பிடிக்கிறது ஈரலை

உனக்கும் கூடப்
புகார்கள் இருக்கலாம்
என் நிலைப்பாடு
காலத்தாலும்
வரலாற்றாலும்
தெளிவாக்கப்பட்டிருக்கிறது

உன்னிடமிருந்து
கலங்கானதே எனினும்
சிறிது அன்பைப்பெற

வெளியுலகில் இருந்து
சானிட்டரி நாப்கின்களையும்
கருத்தடை சாதனங்களையும் பெற
இன்னும் சிறு சிறு உதவிகள் வேண்டி

முடியுமானால்
உன்னைச் சிறிதளவு அதிகாரம் செய்ய

நான் சிறிதளவு அதிகாரத்தை
ஸ்திரப்படுத்திக்கொள்ள

எல்லா அறிதல்களுடன்
விரிகிறதென் யோனி.

இக்கவிதை சல்மாவின் மிகவும் பிரபலமான கவிதை. அதிகாரத்தைத் துல்லியமாகப் பண்டமாற்றுச் சரக்காக மாற்றிக் கொள்ளும் இடத்தின் வழியாக தன் இருப்பை நிலைநிறுத்த முடிந்ததை இறுமாப்புடன் சொல்லும் கவிதை. சல்மாவின் சொற்கள் ஒவ்வொன்றும் ஏன் அத்தனைக்கவிதைகளுமே கூட, மனித மனத்தின் உளவியல் வெளியையும், அரசியல் செயல்பாட்டையும் அறிந்த நிலையில் தான் உருவாகியிருக்கின்றன. இதை அவருடைய கவிதைகளின் பொதுத்தன்மையாகக் கொள்ளலாம். அவர் கவிதைகள் உள்ளே செல்லும் போதே, அவரே இதை அடிக்கடி ஆமோதிப்பதைக் காணலாம். தன்னை அணுகும் ஒவ்வொருவரின் மனநிலையையும், ‘ஆமாம்! நான் அதை அறிவேன்’ என்ற அகக்குரல் ஒலிக்க, கவிதை முடிகிறது. அதே சமயம், தன்னைச் சுற்றி உள்ள எல்லா சடப்பொருட்களும், பருவகாலங்களும், தட்பவெப்ப நிலைகளும் கூட தன்னைக் கட்டுப்படுத்துவதான மிகையான நிலையைத் தொடர்ந்து பதிவு செய்து கொண்டே இருக்கிறார். ‘மின்விசிறி / நான் காற்றைத் தேடி ஓடிவிடாதவாறு கட்டுப்படுத்தும் தந்திரம் கொண்டது’ என்றும், ‘எண்ணற்ற ஜடப்பொருட்களுடனும் ஒரு மனிதனோடும் தொடரவியலா வாழ்க்கை தொடர்கிறது அதே அறையில்’ என்றும் சடப்பொருட்கள் உயிர்த்தன்மை பெற்ற நிலையைக் கவிதை கொண்டிருக்கிறது. இது ஒருவகையில் அந்த சட உலகத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் உபாயம் தான். உமா மகேஸ்வரியின் கவிதைகளிலும் இத்தன்மையைக் காணலாம்.

இரண்டாம் ஜாமத்துக்கதை

குழந்தைகளைப் பெற்றதற்குப் பிந்தைய
இரவுகளில்
பழகிய நிர்வாணத்திற்கிடையில்
அதிருப்தியுற்றுத் தேடுகிறாய்
என் அழகின் களங்கமின்மையை

பெருத்த உடலும்
பிரசவக் கோடுகள் நிரம்பிய வயிறும்
ரொம்பவும் தான் அருவருப்பூட்டுவதாய்ச்
சொல்கிறாய்
இன்றும் இனியும்
எப்போதும் மாறுவதில்லை எனது உடலென்றும்

நிசப்தத்தின் பள்ளத்தாக்கில்
புதையுண்டிருக்கும் என் குரல்
தனக்குள்ளாகவே முனகிக்கொண்டிருக்கும்

உண்மை தான்
என் உடலைப் போலல்ல
உன்னுடையது
பறைசாற்றிக்கொள்வதில்
வெளிப்படையாக இருப்பதில்

இதற்கு முன்னும் கூட
உன் குழந்தைகள் வேறு எங்கெங்கோ
யார் யாருக்கோ பிறந்திருக்கலாம்
உன்னிடம் தடயங்களில்லை என்பதால்
நீ பெருமை கொள்ளலாம்


நான் என்ன செய்ய?
என் நசிவைப் போலத்தான்
இந்தப் பிரசவக் கோடுகளும்
எளிதில் செப்பனிட முடிவதில்லை
வெட்டி ஒட்டிவிட இவ்வுடல் காகிதமில்லை

உன்னைக் காட்டிலும்
மோசமான துரோகத்தினைப் புரிந்திருக்கிறது
இயற்கை எனக்கு
உன்னிலிருந்து தானே தொடங்குகிற்று
எனது தோல்வியின் முதலாவது நிலை

முதல் ஜாமத்தைக் காட்டிலும்
விபரீதமானது
கனவுகள் பெருகும் இரண்டாம் ஜாமம்

சுவரோவியத்தில் அமைதியாக
அமர்ந்திருந்த புலி
இவ்விரண்டாம் ஜாமத்தில் தான்
என் தலைமாட்டிலமர்ந்து
உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

மேற்கண்ட கவிதையில், விவாதம் பெறும் பிரசவம் அடிப்படையிலான பெண், ஆண் உடல்கள், கழிவிரக்கத்தின் பாற்சாய்ந்து நலிவுற்றுப் போகிறது. பெரிய அளவில் பெண், ஆண் உடலின் புற வேறுபாடுகள் விமர்சிக்கப்பட்டு விட்டன. விவாதிக்கப்பட்டுவிட்டன. என்றாலும், இயற்கையின் சாபம் போல தன்னுடலைத் தானே, தோல்வியின் குறியீடாய்ப் பார்ப்பது, வாசிப்பவரையும் அதே பாதையில் சாய்க்கும் என்பதால், புரியும்பொருட்டு இதை விரிவாக விளக்கவேண்டியிருக்கிறது. ஆணின் குறி மீதான பொறாமையுணர்வு, எப்பொழுதும் பெண்ணின் மனதில் இயங்கிக் கொண்டே இருப்பதான பழைமையான மரபார்ந்த விவாதம் போன்றது தான் இதுவும். ஆனால், இனப்பெருக்க ஆற்றலும், உயிருடலை வளர்த்துப் பிரசவிக்கும் ஆற்றலும் பெண்ணுக்கேயான பிரத்தியேக அம்சமாய்ப் பார்க்கும் சமூகப் பார்வை சமீப காலங்களில் உறுதிப்பெற்றிருக்கிறது. தளும்புகள், புற வடிவ அலகுகளால் அழகை அளவிடுவது என்பது ஆணாதிக்கப்பார்வை. ஆணின் காம நுகர்ச்சிக்கு, ஏற்றவாறு பெண்ணின் உடலைத் திருகிக்கொள்வது என்பதே ஆதிக்கச் சிந்தனையை உள்வாங்கிக் கொள்வது என்பது தான். இக்கவிதையை பெண்ணிய வாசிப்புக்குட்படுத்தும் போது, அதனுள் மறைமுகமாக இருக்கும், தன் இருப்பை ஆணின் அங்கீகாரத்தின் வழியாகத் தேடும், கோரும் மனநிலையை அங்கீகரிக்கமுடியவில்லை. ஆனால், இச்சிக்கலை, அவரே தனது இன்னொரு கவிதையான, ‘விடுபடல்’ வழியாக எளிதாக அவிழ்க்கிறார்.

விடுபடல்

ஒட்டு விளிம்பில்
தழும்பிச் சரிகிற வயிற்றோடு
தலை சொறிகிற குரங்கிற்கு
ஒரு சலனமுமில்லை
தன் உணவைத்
தானே தேடுவது குறித்து

தன் அடி வயிற்றுக் கனத்தின்
பாதுகாப்புக் குறித்து
மேலும்
யாருடைய கரு இதுவெனவும்

உழைப்பதில் ஈடுபடுவது, கருவுறுவது, அது எவருடைய கரு என்பவை குறித்த சலனமின்மை எனும் தனது அரசியலை இயல்பான கவிதையாக்கி இருக்கிறார். ஒடுக்குமுறையை படைப்பிலக்கிய மொழியால் வெல்லுவது தான் பெண்களுக்கு உற்ற வழிகளில் ஒன்று. உலகில் ஒவ்வொரு மதமும் கடவுள் எனும் கண்டுபிடிப்பாலும் அதிகாரத்தினாலும் பிறந்தது. கடவுள் எனும் கண்டுபிடிப்பு ஆண்களின் கண்டுபிடிப்பாகத் தான் இருக்கவேண்டும். ஒற்றை அதிகாரத்தூணுக்கு வசதியாகப் பெண்களிடம் சுமைகளைச் சுமத்துதற்கு ஏதுவாக, மதம் பற்றிய ஒழுங்குமுறைகளும் கடவுள் குறித்த பயமும், பெண்கள் மீது சுமத்தப்பட்டிருக்கின்றன. இஸ்லாமியப் பெண்களின் மீதான ஒடுக்குமுறை, மற்ற மதங்களை விட இறுக்கமானவை, அவர்களின் உடையில் கூடுதலான ஒரு பர்தாவைப் போலவே. பெண்களைப் பாதுகாக்கும் பொறுப்பும், சுமையும் ஆண்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்ற அர்த்தத்தில் என்னவோ பெண்களின் நலனுக்காகவே ஆண்கள் அவ்வாறு நடந்துகொள்வதாகத் தம் நியாயத்தை முன்வைக்கிறார்கள். பதிலாக, ஆண்களைப் பாதுகாக்கும் பொறுப்பு பெண்களிடம் ஒப்படைக்கப்படுவதில்லை. இன்னும், விளக்கமாகச் சொல்வதென்றால், பெண்களின் பொருளாதார, அடிப்படைத்தேவைகளை நிறைவேற்றுவதில் ஆண்கள் காட்டும் அக்கறையை விட பெண்களின் யோனித் தூய்மையின் வழியாகப் பாராட்டும் அன்றாடச்செயல்பாடுகளின் ஒடுக்குமுறை வரை ஆண்கள் தம் கண்காணிப்பையும் அடக்குமுறையையும் அக்கறை என்ற பேரில் செலுத்திவருகின்றனர்.

ஆனால், பெண்ணுக்குத் தன்னளவில் யோனி என்பது என்ன என்பதை பல கவிஞர்கள் பலதிசைகளிலிருந்து பொருள்விளக்கம் தந்திருந்தாலும் சல்மாவின், ‘என் பூர்வீக வீடு’ கவிதை சமகால பெண் தன் யோனியை இழக்க வேண்டியிருக்கும் நிலை பற்றிய பரிவைப் பதிவு செய்கிறது. ‘கருப்பையை உடலிலிருந்து பிரித்தெடுத்தல்’ நவீன வாழ்க்கையில் இன்றியமையாத நிகழ்வாகி விட்டது பெண்களுக்கு. மறுக்கமுடியாததொரு படிமமும் ஆகிவிட்டது.

என் பூர்வீக வீடு 2

முன்கூட்டிக் குறிக்கப்பட்ட
காலமொன்றில்

உலர்ந்த திராட்சையென
சுருங்கிய சருமத்தோடு
நினைவு தப்பிச் சரிந்திருந்த
அவளிடமிருந்து கருப்பையை
மருத்துவர்கள் பிரித்தெடுக்கின்றனர்
சலனமற்ற கவனத்துடன்

தண்ணீர் நிரம்பிய
பாத்திரத்தின் மெளன வெளியெங்கும்
கனத்த ஈரல் துண்டெனத்
தளும்பும் அது
துலங்கிய தன் மர்மத்தோடு

எனதுயிர் ஒடுங்கியிருந்த
அச்சதைத் துண்டை நோக்கி
இதயத்தின் மத்தியிலிருந்து
பீரிட்டெழும் கிளர்ச்சி
பின் பெரும் துக்கமாய் மாறும்

எத்தனைமுறை
உயிர் சுமந்திருந்தாலென்ன
கழிப்பறையில் உருவாகித்
தகிக்கும் வெப்பமெனச்
சபிக்கப்பட்டதாகத்தானே இருந்திருக்கும்
அவ்வுறுப்பு அவளுக்கும்

தொடர்ச்சியான வேட்டையாடலுக்குப்பின்
சக்கையாய் மாறிய அதன் ஆன்மா
இனியேனும் அமைதி பெறக்கூடும்

குறிக்கப்பட்ட நேரத்திற்குச்
சற்று முன் தனதறைக்கு வெளியே
வலைப் பின்னலின் கீழே
ஒளி நொறுங்கிக் கிடப்பதை
உற்றுப்பார்த்துக் கொண்டிருந்து விட்டுப்
பயமற்ற குரலில் சொன்னாள்

‘நான் இனிப் பாதி மனுஷி’
அவ்வார்த்தைகளில் கனன்றிருந்த
இழப்புணர்வின் வன்மம்
பிறகு என்னை
அமைதி கொள்ளவிடவேயில்லை

நவீன வாழ்வின் உளைச்சலும், வேதியியல் பொருட்கள் கலந்த உணவும், பெண்ணின் கருப்பையைத் தான் அதிகமாய்த் தாக்கியிருப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன. ஆனால், அத்தகைய கருப்பையைத் தன் பூர்வீக வீடாக்கியும், அதை இழந்தபோது, இழப்புக்குள்ளானவள், தன்னை பாதி மனுஷியாகச் சொல்லுமிடத்திலும் எத்தகைய ஆற்றல் உறுப்பாய் அது பெண்ணுக்கு இருந்திருக்கிறது என்பதை அறியலாம். அது குழந்தையை ஈன்றெடுக்கும் உறுப்பு மட்டுமே அன்று. பெண்ணுக்கு, பெண்ணுடலுக்குத் தேவையான அத்தனை பால்நிலை அம்சங்களையும் வழங்கக்கூடியது என்பதாலும் அந்த உறுப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

ஆனால், சல்மா, எங்கோ வலிந்து தன்னை விடுதலையின் வாயிலிலிருந்து விலக்கி வைத்திருக்கும் குரல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. விடுதலையை அனுபவிக்காத பாவமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பெரும்பாலான கவிதைகள் ‘ஒப்பந்தம் செய்து கொண்டதன் பேரில் வழங்க வேண்டிய புன்னகைகள்’ தொடர்ந்து கொண்டிருப்பதன் வெளிப்பாடாய் இருக்கின்றன. சில சமயங்களில் வரிகளின் அமைப்பில் கொண்ட அசிரத்தையும் அர்த்தப்பிழையைத் தருகிறது. எல்லா கவிதைகளிலும் தொடர்க் கருப்பொருளாக உடலும் அதன் உணர்வுகளும் இடம்பெற்ற போதிலும், அவை எதிர்மறையான சிந்தனைகளால் ஊக்குவிக்கப்பட்ட உடலாகவே இருக்கிறது. நேர்மறையான சிந்தனைகளும் கலந்திருப்பின் அந்த உடலைச் சூழ்ந்துள்ள வாழ்க்கையை நோக்கியும் நம் வாசிப்பையும் கவனத்தையும் திருப்ப வாய்ப்பு கிடைத்திருக்கும். ஒரே விதமான தொனியில் எல்லா கவிதைகளும் ஒலிப்பதால் ஒரே கோரிக்கைக்காக அவை இறைஞ்சுவதாகவும் ஆகிவிடுகின்றன.

வீடும் வெளியும்

சற்று முன்
தெருவைக் கடந்தது
தேர்.

என் வரையறுக்கப்பட்ட
புலன்களை
வந்தடைகின்றன
பாடல் வரிகளோடு
அரூப விழாக்காட்சிகள்.

இன்னும் வாய்க்கவில்லை
ஒரு திருவிழா நாள்.
திருவிழா முகங்கள்
திருவிழா இடங்கள்
திருவிழா குழந்தைகள்
என் திருவிழா அனுமானங்களுக்கு
என்றும் குறைவில்லை.

அனுமானங்களில் கரைந்த
என் காதலைப் போல
தொன்மையான
செவிவழிக் கதைகளால்
நிரப்பப்பட்ட மூளையில்
ஒலிக்குறிகளாய் மாறிய
காட்சிகள் நிரம்பி வழிகின்றன.

ஏதேனும் ஒரு குரல்
என்னுள் பதிவு செய்கிறது
எண்ணற்ற முகங்களை
அவற்றின் உணர்வு ரேகைகளோடு.

நுட்பமும் விஸ்தீரணமும் இழைய
ஒரு தற்செயலான பொழுது
கனவுகளின் புதிரிலிருந்து விலக்கி
காட்சியை விரிக்கும்போது
ஒட்ட இயலா மனம்
தப்பியோடும்
தன் விசித்திர சுயக்காட்சிகளுக்கு.

வீடும் வெளியும் என்ற இக்கவிதை சொல்லவந்ததை மீறி ஒலிக்கும் அதிர்வுகளுடன் துலங்குகின்றதால் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகிவிட்டது. கவிதையின் கட்டமைப்புகளைப் புரிந்த ஒரு தருணத்தால் சொற்கள் விரிந்து, அர்த்தம் பெருகுகின்றது. அதுமட்டுமன்றி, காட்சி, மனதின் கருப்பொருளில் ஏற்படுத்தும் தாக்கங்கள், அதன் விளைவுகள் பற்றிய புதிய பார்வை என்பதாலும், இக்கவிதை அவரது மற்ற கவிதைகளிலிருந்தும் விலகிய ஒன்றாய் இருக்கிறது. இதுபோலவே, ‘கோணம்’ என்ற கவிதையும் மெல்ல நகைப்பை ஊட்டியதொரு கவிதையாகவும், மேலே விவரித்திருக்கும் அத்தனை பார்வைகளுக்கும் தன் பக்கநியாயத்தை வரைவதாகவும் இருக்கிறது. அவரது சொற்களுடனான தொடர்ச் சஞ்சரிப்பில் இறுக்கமும் வெறுமையும் தனிமையும் வெக்கையும் வீசும் ஓரிடத்திற்கு வந்து நிற்பதைப்போல உணர்கிறேன். ஒரு வெளவாலைப் போலவே!

கோணம்

நான்
தலைகீழாகத் தலைவாரிக்கொண்டிருப்பதை
தலைகீழாகச் சமைப்பதை
தலைகீழாக உணவருந்துவதை
தலைகீழாக அமர்ந்து குழந்தைக்குப்
பாலூட்டுவதை
தலைகீழாகப் புத்தகம் வாசிப்பதை
தலைகீழாகவே நின்று
தன்னை உற்றுப் பார்ப்பதை
அச்சத்துடன் வியந்து பார்த்தபடியிருக்கிறது
தோட்டத்து விருட்சத்தில் காய்த்துக் கிடக்கும்
வெளவால்.

----------------------------------------------------------------------------------------------

சிறு குறிப்பு: சல்மாவின் இயற்பெயர் ரொக்கையா. ஒரு மாலையும் இன்னொரு மாலையும் (2000), பச்சைத் தேவதை(2003) என்ற இரு கவிதைத் தொகுப்புகளைப் படைத்துள்ளார். கவிதை தவிர சிறுகதை, நாவல் ஆகிய இலக்கிய வடிவங்களிலும் தீவிரமாக இயங்கி வருபவர்.


http://koodu.thamizhstudio.com/thodargal_14_10.php





Sunday, April 24, 2011

கா - சிறுகதை - ஆதவன்


எறும்புகள் நகர்ந்து செல்லும் சப்தங்கள் கேட்டுக் கொண்டிருந்த வேளையில் பறவைகள் வீரிட்டுக் கத்தின. கழுகின் ஏரார்ந்த பார்வையில் சாலையிலிருந்து வனப்பகுதிக்கு ஊர்ந்து செல்லும் பாம்புகள் தென்பட்டன. சாலையின் ஓரங்களில் இருந்த மரத்தின்னைகள் ஒன்றையொன்று விளித்து கதைத்துக் கொண்டிருந்தன. பனித்துளிகள் புற்களை சேர்த்து அனைத்துக் கொண்டு அதிகாலை காமத்திலிருந்து இன்னும் விடுபடாததாய் கிடந்தன. நேரம் செல்ல செல்ல அவை தின்னமிழந்து ஒழுகி நீர்த்துப் போகும் தருணத்தில் புற்களின் நுனிகள் கதிரைத் தேடிக் கொண்டிருந்தன. மரங்களின் மீது மயில்கள் பூங்கழுத்தை திருப்பி திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தன. இன்னொரு பக்கம் மான்கள் மெல்லடி எடுத்து வைத்து கண்கள் சிமிட்டி, அக்கம் பக்கம் பார்த்து அளவளாவிக் கொண்டன. இயற்கை தனக்குள் தன்னையே தேடிக் கொண்டிருக்கும் பரிசுத்தமான அமைதி தவழ்ந்த நேரம், அடுத்த நொடியில் சர்ரென, செவிகளை கிழிக்கும் வேகத்தில் ஓர் கார் கடந்து சென்றது. பனித்துளிகளின் ரத்தம் அருகில் இருந்த மான் மீதும், பறந்து கொண்டிருந்த பறவைகளின் மீது தெளித்து சாலையில் சிதறிக் கிடந்தன. ஊர்ந்து சென்ற பாம்பு நின்று திரும்பி பார்த்தது. கணப் பொழுதில் நகர்ந்து சென்ற காரை யாரும் காணவில்லை. ஏதோ இயற்கையின் மாயை என்று நினைத்து அனைத்தும் மௌனமாகி விட்டன.

"சூப்பர் டாடி".. காருக்குள் இருந்த சிறுவன், தன் தந்தையை இறுக அனைத்து கன்னத்தில் தன் எச்சில் படும்படி அழுத்து முத்தமிட்டான். உதடு முத்தமிட்டு திரும்புகையில் அவன் எச்சில் கன்னத்தில் இருந்து பிரிந்து விழுந்தது. 'கா'வின் மனம் முழுவதும், ஏதோ ஒருவித சோகம் வியாபித்திருந்தது.

கா, எப்போதும் மிக அதிகமான வேகத்தில் காரோட்டி செல்பவன். வாழ்க்கையின் தத்துவங்களையும், அது தரும் அனுமானங்களையும் அதன் அருகில் சென்று பருகி வருபவன். உலகில் தான் பிறந்ததே படித்து இன்புறத்தான் என்ற எண்ணத்தில் மிதப்பவன். ஜெர்மானியத் தத்துவவாதியான ஆர்தர் ஷோப்பன் ஹேவரின் "எல்லோருக்கும் பழக்கப்ட்ட சாதாரண வார்த்தைகளைப் பயன்படுத்தி யாருக்கும் பழக்கமற்ற அசாதாரண விசயங்களைத் தெரிவியுங்கள்" என்கிற கருத்தின் அடிப்படையில் உருவான "காப்காவின்" விசாரணை நாவலில் வரும் மையப்பாதிரத்தின் பெயரான "கா"வையே தன்னுடைய பெயராக வைத்துக் கொண்டவன். தனி மனிதனானவன் தன் சுதந்திரத்தைக் காக்க வேண்டுமெனில் புறக் கோரிக்கைகளை மறுத்து சமுதாய அமைப்புகளிலிருந்து விலகி தன்னைத்தானே நிர்ணயித்துக் கொள்ளும் தனித்தனி அணுக்களாக மாறிவிடுவதே சிறந்தது என்கிற "ழான்பால் சார்த்தரின்" வாக்கியங்களை எவ்வித தர்க்கங்களுக்கும் உட்படுத்தாமல் அப்படியே ஏற்றுக் கொண்டவன். அவனுக்காகவே பிறந்தவளாய் அவன் வாழ்வில் செப்படி எடுத்து வைத்தாள் வானதி. கா என்கிற அவனின் பெயரைக் கண்டே அவன் இலக்கிய தாகத்தை முகர்ந்து அவன் பின் எறும்பாய் தொடர்ந்தவள். இலக்கியம் இருவரையும் இல்லறத்தில் பிணைத்தது. பாப்லோ நெருதா, நீட்சே என அவர்களின் நீட்சியாய் தங்களை நெட்டுரு செய்துக் கொண்டனர் இருவரும். அவளுக்கு அவன் கார் ஓட்டும் அழகு மிகவும் பிடிக்கும். மிக அனாயசமாக ஒற்றை கையில் ஸ்டீரிங்கை பிடித்துக் கொண்டு ஒரு கையில் ஜான் பெயசின் இசைத் தட்டுகளை தேடி எடுத்து ஓடவிடும் ரசனை அவளின் பட்டியலில் முதலிடம் பிடித்தது.

வேகம் என்றால் காரும், அது செல்லும் சாலையின் ஸ்த்திரத்தன்மையும் சேர்ந்தே கதிகலங்கிப் போகும் வேகம். அப்படி ஒரு வேகத்தை யாரும் கண்களால் பார்த்து விட முடியாது. காட்சிப் பிழையென கணத்தினும் மெல்லிய நானோ நொடியில் கார் அந்த இடத்தில் இருந்து மறைந்து விடும். அவன் கழுத்தில் தன் இரு கைகளையும் கோர்த்துக் கொண்டு அவன் தோல் மீது சாய்ந்து நகுலனின் கவிதைகளை அவள் கொஞ்சம் சொல்லி நிறுத்த, அவன் முடித்து வைப்பான். அவன் குரலின் வலிமையில், கார் ஓட்டும் ஆண்மையில், இலக்கிய அறிவில் அவள் எப்போதும் தன்னை தொலைத்து விட்டு தேடிக் கொண்டிருப்பாள்.

அன்று பிரெட்ரிக் நீட்சேவின் Once more, ere I move on தலைப்பில் தொடங்கும்


And send my glance forward,
Lonely, I raise my hands
To you, to whom I flee,
To whom I, in the deepest depths of my heart,
Have solemnly consecrated altars,
So that, at all times,
His voice would summon me again.

கவிதையை அவள் கூற, அவன்

I want to know you, unknown one,
You who have reached deep within my soul,
Wandering through my life like a storm,
You incomprehensible one, akin to me!
I want to know you, even serve you.

என முடித்து வைத்தான்.

முடித்துவிட்டு கண் சிமிட்டி அவளைப் பார்த்தான். ஜான் பெயஸ் இசை மாறி, யானியின் வயலின் இசைத்துக் கொண்டிருந்தது. அந்த இசை சூழல், கவிதையின் செறிவு, 'கா'வின் கவிதைத் திறன் என அனைத்தும் சேர்ந்து அவளை தன்னிலை மறக்க செய்தது. வளைவில் கூட வேகம் குறையாமல் ஸ்டீரிங்கை ஒடித்து காரை அவன் திருப்பும் அழகை ரசித்துக் கொண்டிருந்த அவள் தன் முத்தங்களை அவனுக்கு பரிசாகக் கொடுத்தாள். அவன் கண்ணங்களில் ஒட்டிய அவள் இதழின் ஈரம் வறண்டு போக வெகு நேரம் ஆயிற்று. அவன் இடுப்பின் இருபுறமும் தன் கைகளை கோர்த்து, அவன் தோள்களில் மெல்ல சாய்ந்துக் கொண்டாள். அவன் அகன்ற தோளை தன் பால் பற்களால் கடித்தாள். கைகளின் இறுக்கம் அதிகாமானது. அவள் கன்னத்தில் முத்தமிட அவன் திரும்பினான்.

ஸ்ரர்ர்ர்ரர்ர்ர்....க்ரீச்ச்ச்ச்சச்...சாலையில் கார்களின் சக்கரங்கள் தேய்த்து தீப்பொறி பறந்தது. மலையின் விளிம்பில் அசுர வேகத்தில் சென்றுக் கொண்டிருந்த கார் நிலைத் தடுமாறி பள்ளத்தில் விழுந்தது.
"டாடி.. என்ன ஆச்சு உங்களுக்கு".. தன் நிலை திரும்பி மகனைப் பார்த்து லேசாய் சிரித்து விட்டு மீண்டும் காரை வேகமாக செலுத்தினான். அவளின் மரணம் அவனின் மனக்குரளியில் இருந்துக் கொண்டு அவன் இருத்தலை கேள்விக் கேட்டுக்கொண்டிருந்தது. இந்த உலகின் இருண்மையை அகற்றும் இலக்கியம் அவ்வப்போது அவனுக்கு இருத்தலின் நியாயத்தை உணர்த்தியது. அவள் விட்டு சென்ற எச்சமாய் அவன் மகன். அவளைப் போன்றே தந்தையின் இலக்கியம், வேகம் என அனைத்தையும் சிலாகிக்கும் பக்குவத்துடன் இருப்பது அவனுக்கு ஆறுதலாய் அமைந்துவிட்டது.

எங்கே தன் மகனும் இந்த கார் ஒட்டு வேகத்தால் தன்னை விட்டுப் பிரிந்துப் போய் விடுவானோ என்கிற பயம் அவனுக்குள் இருந்தாலும், தன் மகன் அதைத்தான் விரும்புகிறான் என்பதால் அவனுக்கு மாற்று தெரியவில்லை. அவனுக்கு அழகுறை சொல்லவும் அவன் தயாரில்லை.

மலையின் சரிவில், காரை ஒடித்து அவன் திரும்பும்போது அவன் மகன் கொள்ளும் பரவசம் அலாதியானது. "மார்வெலஸ் டாடி" என்று சொல்லிக் கொண்டே தன் தந்தையின் முகத்தைப் பார்த்து பின்னீட்டீங்க என்று சொல்லும் அழகில் 'கா' சொக்கித்தான் போவான். எப்போதும் தந்தை கார் ஓட்டும் அழகைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கும் நகுலனுக்கு தெரியும் தன் பிறத்தி அதனால்தான் இறந்தாள் என்று.

"எப்படி, டாடி நீங்க இவ்வளவு வேகமா கார் ஓட்டக் கத்துக்கிட்டீங்க.. நம்மக் கார் மட்டும்தான் இவ்ளோ வேகத்துல போகுமா? இல்லனா எல்லாக் காரும் இப்படிதான் போகுமா? ஹ்ம்ம்.. நீங்கள் ஓட்டுற கார் மட்டுந்தான் இப்படி போகும் கரெக்டா? அவன் பேச்சு முழுவதும், காரின் வேகம் பற்றியதாகவே இருக்கும். சரிவுகளில் காரை இறக்கும்போதும், மேடுகளில், காரை செறிவாய் செலுத்தும்போதும், 'கா'வின் கம்பீரம் நகுலனை வெகுவாய் ஈர்த்திருந்தது. எப்போது நான் வளர்வேன்.. எனக்கு எப்போது கார் ஓட்ட சொல்லித் தருவீர்கள் என்று தந்தையை ஓயாமல் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருப்பான்.

கார் ஓட்டும்போது எப்படி அமர வேண்டும், வலது கால், இடது கால் எங்கே வைக்க வேண்டும். எப்படி காரின் திசையை அறிவது, கண்ணாடியை ஏன் பார்க்க வேண்டும், இதெல்லாம் அவன் கேட்கும் உப கேள்விகள்.

தந்தையின் கால்கள் ஆக்சிலேட்டரை லாவகமாக மிதிப்பதை கவனமாக பார்த்துக் கொண்டே வந்தான் நகுலன். "கா" கொஞ்சம் மெதுவாக காரை செலுத்துக் கொண்டிருந்தான். சர்ர்ர்ரர்ர்ர்ரர்.உஸ்ச்ச்ச்சச்ச்ச்ஸ்.... அவர்கள் காரை இன்னொரு கார் முந்திக் கொண்டு சென்றது..

"டாடி" என்ன டாடி.. போங்க.. சீக்கிரம் அந்த கார பிடிங்க டாடி.. இது எனக்கு பெரிய அவமானம் டாடி", மறுத்து பேசாமல் கார் வேகமெடுத்தது.

சர்ர்ரர்ர்ர்ர்... உச்ச்சச்ச்ச்ஸ்... கீச்ச்ச்ச்சக்...இரண்டு கார்களும், ஒன்றை ஒன்று முந்திக் கொண்டிருந்தது. அந்தக் காரில் இருந்து நகுலன் வயதுடைய பெண்ணொருத்தி, மிகுந்த பயத்துடனான கண்களுடன் எட்டிப் பார்த்தாள். அவள் வேகத்தை பயத்தின் வழியாக வெளியேற்றி விட நினைத்திருந்தாள். ஆனால் அவளது தந்தை "கா"வுடன் போட்டி போட்டுக் கொண்டே இருந்தார். நகுலன் அந்த பெண்ணின் கண்களைப் பார்த்துவிட்டு, "டாடி.. விடுங்க டாடி.. அவங்க போகட்டும்.. என்று தலையை சாய்த்து, கண்கள் சிமிட்டி புன்னகைத்தான். அந்தக் காரில் இருந்த பெண் எட்டிப் பார்த்தாள். அவளின் பயம் புன்னகையாய் உருமாறி இருந்தது. அவர்களின் கார் பறந்தது.

நகுலன் கொஞ்சம் களைத்துப் போய் இருந்தான். "டாடி அம்மா வாசிச்ச கவிதைய போடுங்க டாடி என்றான். அவள் நீட்சே, நகுலன், பிரமிள், ஆத்மாராம், நெருதா போன்றவர்களின் கவிதையை வாசித்து பதிவு செய்து தினமும் காரில் கேட்டுக் கொண்டே செல்வது வழக்கம். கார் முழுவதும், மங்கிய வெளிச்சத்தில், அவளின் மெல்லிய குரலில் கவிதைகள் இசைக்கத் தொடங்கின. நகுலன் உறக்கத்தைத் தேடிக் கொண்டிருந்தான். "கா" அவளை தேடிக் கொண்டிருந்தான். அந்தக் கவிதைகள் முழுவதும் ஒரு வித மௌனம் ஆட்கொண்டிருந்தது. அவனையறியாமல் கண்கள் பனிக்க ஆரம்பித்தது.

அவள் நினைவுகள் அவனுக்குள் நங்கூரமிட்டு உட்கார்ந்துக் கொண்டிருந்தது. அவள் கண்ணக்குழிக்குள் அவன் தன் வாழ்தலின் அர்த்தத்தை அது தரும் மாய சுகத்தை உணர்ந்துக் கொண்டிருந்தான். இன்று அவள் இல்லை. அவனும் இல்லை. தன் நினைவுகளால் மட்டுமே இன்னும் அவன் வாழ்ந்துக் கொண்டிருக்கிறான். அவன் கரங்கள் வழுவிழப்பதை அவன் எங்கோ ஒரு புள்ளியில் உணர தொடங்கினான். அவள் நினைவுகளின் வலிமை அவனை வழுவிழக்க செய்துக் கொண்டிருந்தது.

அடுத்த நொடியில் மலையே அதிரும் வண்ணம் ஒரு கார் "காவின்" காரை முந்திக் கொண்டு சென்றது. அந்த அதிர்வில் நகுலன் சட்டென்று முழித்துக் கொண்டான். நகுலனைப் பார்த்த கா அவனின் சோகம் புரிந்து காரை வேகப்படுத்தினான். ஆனால் அவன் இப்போது தன் வழுவை இழந்து ஒரு பொதிமாடாய் ஓய்ந்துப் போய் இருந்தான். இருந்தாலும் முடிந்த வரை காரை வேகமாக செலுத்தினான். நகுலன் ஜன்னல் வழியே அடிக்கடி எட்டிப் பார்த்தான். ஒரு கார் வேகமாய் துரத்துவதையும், சிறுவன் எட்டி எட்டிப் பார்ப்பதையும் முன்னே சென்றுக் கொண்டிருந்த காரின் ஓட்டுனர் பார்த்துக் கொண்டே இருந்தார். ஏதோ புரிந்தனவாய் தனது காரின் வேகத்தை கொஞ்சமாய் கட்டுப்படுத்தினான். காவின் கார் முந்தியது. ஆனால் "கா"விற்கு புரிந்துப் போனது. ஜன்னல் வழியே எட்டிப் பார்த்து ஒரு புன்முறுவல் செய்தான். அந்த காரை செலுத்தியவன் வலது கையின் கட்டை விரலை உயர்த்திக் காட்டி சிரித்தான்.

எதிரே வந்த கண ஊர்தி அடித்து நொறுக்கி எங்கு வீசி எரிந்தது என்று தெரியவில்லை. பின்னால் வந்த காரை செலுத்தியவன் மனமுடைந்துப் போனான். காவும் நகுலனும், மலைச் சரிவில் உருண்டு கொண்டிருப்பதை ஆங்காங்கே சிலர் பார்த்துக் கொண்டிருந்தனர். வேறென்ன செய்து விட முடியும் என்கிற தொனியில்.

கார் வெடித்துடைக்கும் சில மணித் துளிகளுக்கு முன்னர் காரில் வானதியின் குரலில் நகுலனின் கவிதை ஒலித்துக் கொண்டிருந்தது கர கர குரலில்..

"எனக்காக யாரும் இல்லை,

ஏன்

நான் கூட இல்லை"

- ஆதவன்

Tuesday, April 19, 2011

ராஜாங்கத்தின் முடிவு - குறும்பட விமர்சனம்


ராஜாங்கத்தின் முடிவு - குறும்பட விமர்சனம்

ஸ்ரீகணேஷ்

திரைக்கதை : ஆறு.அண்ணல்
ஒளிப்பதிவு : விஜய் திருமூலம்
இசை : லக்ஷ்மி நாராயணன்
இயக்கம்: அருள் எழிலன்



குறும்படங்களின் ஆளுமை தற்போதைய சூழலில், சமூகத்தில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மக்களிடையே தற்போது குறும்படங்கள் மிகவும் பிரபலம். அது வெகுஜன மக்களைக் கவரத் துவங்கி விட்டதால் தானோ நிறைய கமர்ஷியல் கதைகளும் குறும்படங்களில் வரத் துவங்கிவிட்டன. 'டேய் அவன போட்றா', 'அவ ரொம்ப அழகு' போன்ற வசனங்களை தற்போது குறும்படங்களிலும் கேட்டு பிறவிப் பயனடைகிறோம். கூடிய விரைவில் குத்துப் பட்டும் வரலாம்.

குறும்படங்களைப் பற்றி அதிகம் தெரியாத, பெரிதாய் பேசப்படாத பத்தாண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட ஒரு முக்கியமான குறும்படம் "ராஜாங்கத்தின் முடிவு". இப்படத்தை இயக்கி நடித்திருப்பவர் திரு. அருள் எழிலன். இவர் ஒரு முழுநேர பத்திரிகையாளர். விகடனில் முதன்மை நிருபராய் நீண்ட நாட்கள் பணியாற்றிக் கொண்டிருந்தார். இவர் விகடனில் எழுதிய பல கட்டுரைகள் மிகவும் பிரபலம். நல்ல ஆழமும், மனிதமும் நிறைந்த எழுத்து இவரின் சிறப்பு.

இனி படத்தைப் பற்றி பாப்போம். இப்படம் முழுக்க முழுக்க ஒரு வீட்டிற்குள்ளேயே படமாக்கப்பட்டுள்ளது. ஒரு மனிதனும், ஒரு தொலைபேசியும், ஒரு பெண்ணின் குரலுமே இப்படத்தில் வரும் பாத்திரங்கள். ஒரு மனிதனின் தனிமையே இப்படத்தின் கரு. அதை காட்சி மூலமும், நிறைய வசனங்கள் மூலமும் பார்வையாளர்களுக்கு கடத்துகிறார் இயக்குனர்.

ரவிக்குமார் என்பவன் வேலைகள் ஏதுமற்ற, அன்பு காட்டவும் ஆளில்லாத ஒருவன். அவனுக்கென்று சொந்தமாக பொருட்களோ, தங்கும் இடமோ கூட இல்லை. சாலை ஓரங்களில் தங்கிக் கொண்டு, கிடைத்த இடத்தில சாப்பிட்டுக் கொண்டு வாழ்கையை ஓட்டுகிறவன். ஆயினும், வாழ்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் கொண்டாடுபவன். தன் மேல் துளி கூட கழிவிரக்கம் இல்லாதவன். எதையும் எளிதாக, மகிழ்ச்சியாகவே பார்க்கிறவன்.

துன்பங்கள் அவனை பாதிப்பதில்லை. எல்லாமே அவனைக் கடந்து செல்கின்றன.

அவனுடைய நண்பர் ஒருவர் வெளியூர் செல்ல வேண்டியிருப்பதால், தன் அலுவலகத்தை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை ரவியிடம் ஒப்படைக்கிறார். அவன் சில நாட்கள் அங்கேயே தங்கிக் கொண்டு, புத்தகம் படித்துக் கொண்டு பொழுதை ஓட்டிக் கொண்டிருக்கிறான். அப்போது ஒரு நாள் ஒரு பெண் ராங் நம்பராய் இவனுக்கு போன் பண்ணி விடுகிறாள். தவறுதலாய் பேசும் அந்த ஃபோன் காலிலிருந்து இவர்கள் நட்பு துவங்குகிறது. பின்பு இருவரும் அடிக்கடி பேசத் துவங்குகிறார்கள்.

ஆரம்பத்தில் இருவருமே அந்த ஃபோன் காலை பேச விரும்பவில்லையோ எனத் தோன்றுகிறது. பின்பு மெல்ல மெல்ல அவர்களின் உரையாடல் சுவாரசியம் அடைவதையும், இருவருக்கும் இடையே ஒரு இழை ஓடிக் கொண்டே இருப்பதையும் நம்மால் மெலிதாய் சிரித்துக் கொண்டே உணர முடிகிறது. எதுவும் என்னை பாதிக்காது என அசால்டாய் திரியும் ரவி, மெல்ல மெல்ல அவனையறியாது அப்பெண்ணின் குரலுக்கு அடிமையாவதும், தனக்குள் இருக்கும் காதலை உணர்வதும் நல்ல தருணங்கள். அப்பெண்ணின் குரல் மட்டுமே நமக்குக் கேட்டாலும், நம்மை மிகவும் கவர்ந்து விடுகிறாள். இதற்கு மேல் இப்படத்தின் கதையை சொன்னால் சுவாரசியம் கெட்டுவிடும். பார்த்து அனுபவியுங்கள்.

சரத் ஹசன் மாண்டோவின் சிறுகதையைத் தழுவி இக்குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இக்குறும்படம் நம் பௌர்ணமி இரவு நிகழ்ச்சியில் திரையிடப்பட்டது. இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் அருள் எழிலன் இக்கதையை படித்த உடனேயே இதைப் படமாக்க வேண்டும் என முடிவு செய்ததாகவும், நீண்ட நாள் கனவு நிறைவேறிய மகிழ்ச்சியையும் நம்முடன் பகிர்ந்து கொண்டார். நிறைய நல்ல படைப்பாளிகள் இலக்கிய படைப்புக்களை திரைப்படுத்த முனைவது நல்ல விஷயம். இது இன்னும் தொடர வேண்டும்.

படத்தை இயக்கி தானே நடிக்கவும் செய்திருக்கிறார் அருள் எழிலன். முழுக்க முழுக்க mono acting வகையிலான நடிப்பில் நன்றாகவே செய்திருக்கிறார். படத்தில் வரும் பெண்ணின் குரல் திரு.ஜெயா மாதவனுடையது. நல்ல ஆழமான குரல். படத்தில் வரும் தொலைபேசி கூட ஒரு பாத்திரம் தான். இப்படத்தின் மிகப் பெரும் பலம் அதன் வசனங்கள். சின்ன சின்ன ஷார்ப்பான வசனங்கள். கேலியும் கிண்டலும் பல இடங்களில் மின்னுகின்றன. அவை மட்டும் இல்லா விட்டால் இப்படம் போர் அடித்திருக்கும்.

'சாப்பிட போலாம்னு நெனச்சேன்.. உங்க ஃபோனுக்காக தான் காத்திருந்தேன்..'
'அய்யோ சரி சாப்பிடப் போங்க..'
'முடியாதே. சும்மா தான் நெனச்சேன். கைல காசு இல்ல.'

'இந்த புத்தகத்தையே 3 , 4 வாட்டி படிச்சிருப்பேன். இன்னும் சுவாரசியம் போகல..'
'எப்படி? போர் அடிக்காதா..'
'இதில் தான் கடைசி பக்கம் கிழிஞ்சுடுச்சே .. அதனால் இன்னும் முடிவு தெரில'

இவை சின்ன சாம்பிள் தான். படத்தில் இன்னும் நிறைய உள்ளது. கதையை குறும்பட வடிவில் தர இயக்குனர் நன்கு உழைத்திருக்கிறார் எனத் தெரிகிறது. திரைக்கதை அமைத்த ஆறு.அண்ணல் அவர்களும் பாராட்டுக்குரியவர். ஒளிப்பதிவு விஜய் திருமூலம். இசை லக்ஷ்மி நாராயணன்.

படத்தில் சிறு குறைகளும் இருக்கவே செய்கின்றன. தொழில்நுட்ப விஷயங்களில் இப்படத்தை விமர்சித்தல் சரியல்ல. பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்த வசதிகளை வைத்துக் கொண்டு நன்றாகவே செய்திருகிறார்கள். படத்தின் கதையில் தான் சில நெருடல்கள். ரவிக்கும் அந்த பெண்ணுக்குமான உறவு சரியாக register செய்யப் படவில்லையோ எனத் தோன்றுகிறது. அதற்கு குறும்படத்தின் கால அளவும் காரணமாக இருக்கலாம். அந்த பெண் பாடும் பாடல் ஒன்று படத்தில் வருகிறது. அப்பாடல் தேவையா என விமர்சனம் ஒருபுறம் இருந்தாலும், வைத்த பாடலின் இசையாவது நன்றாக இருந்திருக்கலாம். அப்பாடல் கொஞ்சம் அயர்ச்சியே தருகிறது. 20 நிமிடம் ஒரு நல்ல படம் பார்த்த உணர்வு கடைசி காட்சியில் பெரிதாக உடைந்து விடுகிறது. ரவி பழைய தமிழ் சினிமா பாணியில் 'என் ராஜாங்கம் இன்றுடன் முடிகிறது' என படத்தின் தலைப்பை சொல்வது தேவையற்றது. மேலும் அந்த சோகமான முடிவே திணிக்கப்பட்டதாகவும் தோன்றுகிறது. ஒரு நல்ல குறும்படம் இப்படிப்பட்ட குறைகளால் முழுமையான பாதிப்பை ஏற்படுத்தாமல் போகிறது.

இம்மாதிரி கதைகள் சினிமா படிப்பவர்களுக்கும், புத்தி ஜீவிகளுக்கும் மிகவும் பிடிக்கலாம். எளிய மக்களை இப்படம் சுவாரசியமான குறும்படம் என்ற அளவிலே கடந்து சென்று விடும். இன்னும் கொஞ்சம் கதையை செதுக்கி இருந்தால் இக்குறும்படம் தனிமையை சிறப்பாய் பேசிய குறும்படமாயிருக்கும். அருள் எழிலன் என்னும் நல்ல படைப்பாளி இதை நிச்சயம் ஒத்துக் கொள்வார்.

-ஸ்ரீகணேஷ்


http://thamizhstudio.com/shortfilm_review_19.php