Showing posts with label thodargal. Show all posts
Showing posts with label thodargal. Show all posts

Sunday, May 15, 2011

வயது வந்தவர்களுக்கு மட்டும்



வயது வந்தவர்களுக்கு மட்டும்

கலாப்ரியா

http://koodu.thamizhstudio.com/thodargal_7_21.php


ஊருக்கு தென் மேற்கே ஒருபெரிய மண்மேடு போல இருக்கும். செக்கச்சிவப்பாய், ஏதோ பல ரகசிய இறந்த காலங்களைத் தன்னுள் அடக்கி வைத்திருப்பது போல் இருக்கும். ஏதாவது பாண்டியர்களின் பொக்கிஷங்களை அடக்கியிருக்கும் என்று அதன் மேல் ஏறிப் போகும்போதெல்லாம் சொல்லிக்கொள்ளுவோம். அநேகமாக சனிக்கிழமை மத்தியான வெயிலில்த்தான் இப்படி யோசனைகள் யாருக்காவது உதிக்கும். ”ஏல, திருநாங் கோயில் போவோமாலே, சுத்தமல்லி அணைக்கிப் போவோமாலே”, என்று யாருக்காவது யோசனை கிளம்பும். நேரம், சைக்கிள் வசதி இவற்றைப் பொறுத்து, போகும் இடம் முடிவாகும்.குன்னத்தூர்ப் பொத்தை என்றால், அடிவாரம் வரைதான் சைக்கிளில் போகமுடியும் அதனால் அங்கு நடந்தே போய்விடுவோம்.

குன்னத்தூர் பொத்தை என்கிற மண் குன்றுக்கு, கல்லணை வாய்க்கால், பாட்டப்பத்து, கம்புக்கடைத்தெரு என்று போகிற வழியும் ரம்மியமாய் இருக்கும். அடிவாரத்துக்குச் சற்று முன்னர் ஒரு பலசரக்குக் கடை உண்டு அதுதான் அந்தப்பக்கத்து மக்களுக்கான சூப்பர் மாக்கெட்.’லண்டன் நேவிகட்’ சிகரெட் மட்டும் கிடைக்கும். மற்றப்படி பீடிதான். சிகரெட்டையும் அவர் கல்லாப்பெட்டிக்குள்தான் வைத்திருப்பார், அந்த வயசான செட்டியார். அநேகமாக, இந்தமாதிரிக் கிளம்பும்போதெல்லாம், நாங்கள் ஊருக்குள்ளிருந்தே சிகரெட் வாங்கிக் கொள்ளுவோம். குஞ்சுப்பிள்ளை மகன் – ’குசன்,.(லெச்சுமணபிள்ளை சன், ‘லெசன்’ கந்தையாப்பிள்ளை சன் ‘கசன்’ கொஞ்ச காலம் இப்படி ஒருவரையொருவர் கூப்பிட்டுக் கொள்ளுவோம், அப்புறம் அது வழக்கொழிந்து போகும்.) அபூர்வமாய் ‘கூல்’ என்று ஒரு சிகெரெட் வாங்கி வருவான், அது மெந்தால் கலந்தது. அது இல்லையென்றால் ’நார்த் போல்’ என்று ஒரு மெந்தால் சிகரெட் வாங்கி வருவான். பொத்தையின் மீது அநியாயத்துக்கு காற்றடிக்கும்.ஒரு பாக்கெட் சிகரெட்டைப் பத்த வைக்க இரண்டு பெட்டி தீக்குச்சிகள் வேண்டும். எல்லோருக்கும், எப்போதாவது ‘திருட்டு தம்’ குடிக்கிற பள்ளிக்கூட வயசு. வழியிலேயே ‘கூல்’ சிகெரெட் காலியாகிவிட்டால்தான், செட்டியார் கடையில் லண்டன் நேவிகட்.

செட்டியார், சின்னப் பெண்பிள்ளைகளுக்கு, தாளில் பொதிந்து, சாமான் கொடுக்கும் போது கையை ஒரு தடவு தடவித்தான் கொடுப்பார். ”சும்மா இருங்க தாத்தா”, என்று பிள்ளைகள் வெட்கத்துடன் சொன்னால் “ஏட்டீ, கிழவன் சாமான் கிழங்குடீ….பாக்கியா தாத்தாவுக்கு பவுன் பவுனா விழும்.”என்பார்.”போங்க பாட்டையா..” என்று சொல்லியபடியே ஓடிப்போகும். குசன்தான், “என்னா அண்ணாச்சி…பெரிய ஆளா இருந்துகிட்டு இப்படியெல்லாம் பேசுதீங்க..” என்று கொஞ்சம் நக்கலாய்க் கேட்டான். அதற்கு அந்த ஊக்காரர் ஒருவரே, “தம்பிகளா என்ன டவுன் பசங்களா வந்து வெவகாரம் பண்ணுதீங்களா….” என்று சண்டைக்கு வந்து விட்டார். நாங்கள் ”யாத்தாடி இது என்ன வம்பு, பாட்டையா பிரபலமான ஆள் போல இருக்கே என்று நகர்ந்துவிட்டோம்..அடுத்த முறை அடிவாரம் வரை போகும் போது நல்ல மழை பெய்து இரண்டு நாட்களாகி இருந்தது. கோடை மழை. அதனால் சகதியான பாதையில் வண்டிகள் ஓடி ஓடி,சகதி பாதையெங்கும் கரண்டை உயரத்திற்கு வரிவரியாக, நீளமாக காய்ந்திருந்தது. சைக்கிளில்தான் போயிருந்தோம். சைக்கிளை ஓட்டுவதும் சிரமமாக இருந்தது. உருட்டிக் கொண்டு போவது அதைவிடச் சிரமமாயிருந்தது. காலை, திரடு கட்டிப் போயிருந்த சகதி வரிகள் அறுத்தது.

நாங்கள் புதிதாக ஆரம்பிக்க இருந்த எம்.ஜி.ஆர் மன்றத்திற்கும் திறப்பு விழாவிற்கும் ரசீது புத்தகம் அடித்து நிதி பிரித்துக் கொண்டிருந்தோம்.அப்போது பிரபலமாகிக் கொண்டிருந்த ஒரு கட்சிப் பிரமுகர் இரண்டு ரூபாய் எழுதியிருந்தார். ஆனால் பணம் தரவேயில்லை.இரண்டு ரூபாய் என்பது மிகப்பெரிய நன்கொடை. ஒரு ரூபாய்க்கு மேல் எழுதுபவர்களுக்கு என்று தனி ரசீது புத்தகம் வைத்திருந்தோம். அதில் முதல் ரசீதாக அவர் இரண்டு ரூபாய் எழுதிய போது நாங்கள் எல்லாம் அதிசயித்துப் போனோம். அதுவரை அதிகபட்ச ஸ்கோரே எட்டணாதான். ஆனால் அவரிடம் பணத்தை வசூல் பண்ணத்தான் சிரமமாயிருந்தது. பல முறை வீட்டுக்கு நடந்தும் ஆளையே பிடிக்க முடியவில்லை. தெருவின் மூத்த கட்சிக்காரர்கள் எல்லாம் சொன்னாகள். ”வேய் தம்பியாபுள்ளைகளா, இந்த மாதிரி பார்ட்டிகளெல்லாம் நாம திறப்பு விழா நடத்தற அண்ணக்கி வந்து மேடையில பேசறதுக்கு சான்ஸ் கேட்டு நிப்பாங்க, அப்பத்தாம்ப்பா கறக்கணும்….நீங்க இப்பவே ரசீது கிழிச்சிட்டீங்களே… இன்னம இந்த மாதிரி ‘பிரமுகர்கள்’ கிட்ட வசூல் பண்ணற வேலையை எல்லாம் எங்க கிட்ட விட்டுருங்க…” என்றார்கள். இதை எப்படியும் வசூல் பண்ணிருவோம் என்ற தீர்மானத்தில்தான் கிளம்பிப் போனோம். அவர் குன்னத்தூர் வயலுக்குப் போயிருப்பதாகச் சொன்னார்கள். அங்கேயே போயிர்றதுன்னு முடிவு செய்து திடீரென்று பதினோரு மணி வெயிலில் கிளம்பினோம். சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினோம்.

அன்று மத்தியானம் பாப்புலரில் ‘வெண்ணிற ஆடை’ இரண்டாவது ‘ரன்’ போட்டிருந்தார்கள். அதற்குப் போவதாகப் பிளான். ஆறு ஏழு மாதத்திற்கு முன்னால் ராயலில்தான் முதல் ரிலீஸ். ’வயதுவந்தவர்களுக்குமட்டும் ’என்று சென்ஸார் சர்ட்டிஃபிகேட்டுடன் வந்த படம். தமிழின் இரண்டாவது ’’ஏ’ சர்ட்டிஃபிகேட் படம். முதல்ப்படம் மர்மயோகி. வெண்ணிற ஆடையுடன் ‘கார்த்திகை தீபம்’ என்ற படத்திற்கும் ‘ஏ’ சர்ட்டிஃபிகேட் கொடுத்திருந்தார்கள். அதாவது சற்றுப் பொருத்தமானதாக இருந்தது.

வெண்ணிற ஆடைக்கு ’ஏ’ சர்ட்டிஃபிகேட் சற்றும் தேவையில்லை. காதலிக்க நேரமில்லையின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பின் வந்த ஸ்ரீதரின் படம். ஏ சர்ட்டிஃபிகேட் வேறு ரொம்ப எதிர்பார்ப்பைக் கிளப்பி விட்டது. முதல் நாள் பயங்கரக் கூட்டம். அதிலும் முதல் நாள் என்னையெல்லாம், 15 வயது கட்டிளங்காளையான என்னையெல்லாம், அனுமதிக்கவில்லை. இவ்வளவிற்கும் அண்ணனின் நாலு முழ வேட்டியை, இடுப்புப் பகுதியில் கொஞ்சம் மடித்து மூணரை முழமாக்கிக் கட்டிக்கொண்டு போனேன், ’ம்ஹூம்’, விட மறுத்துவிட்டார்கள். மாட்னி ஷோவுக்கு அப்புறம் ரிசல்ட் கூவி விட்டது. செகண்ட் ஷோவுக்கு ஆளைத் தேட வேண்டியதாயிற்று. நாங்கள் மறுநாள்க் காலைக்காட்சிக்கு டிராயர் சட்டையுடன் போனோம். எங்களுக்குப் படம் ரொம்பப் பிடித்திருந்தது. ஆனால் தியேட்டரில் ஒரே கூச்சலாயிருந்தது. படமும் ஓடவில்லை. எங்கவீட்டுப்பிள்ளை படத்தின் தாக்கம் இரண்டு மாதமாகியும் குறையவில்லை. எந்தப் படம் வந்தாலும் சுருண்டு கொண்டிருந்தது. காதலிக்கநேரமில்லை படமும் அப்படியே, அது ஓடும் போது வந்த படங்களையெல்லாம் சாப்பிட்டு விட்டது.

பிரமுகரைத் தேடி காலைப்பதம் பார்க்கும் காய்ந்த சகதிச் சாலையில் இரண்டு கிலோ மீட்டருக்கு மேலும் பயணம் பண்ணியும் பயனில்லை. இன்னொரு வழியாய் வந்து பழைய செட்டியார்கடை அருகே பிரமுகரை ஒரு வழியாய்ப் பிடித்தோம். ரொம்ப அன்பாய் உபசரித்தார். மூன்று பேருக்கும் செட்டியார் முணுமுணுக்க, கடனுக்கு கலர் வாங்கித் தந்தார். பர்ஸ் வீட்டில் இருக்கு தம்பிகளா என்றார். எங்களுக்கு படம் போகிற நினைப்பு வேறு விரட்ட நாளைக்கு வீட்டில் வந்து வாங்கிக் கொள்வதாகச் சொல்லி விட்டு திரும்பினோம். மனுஷன் கடைசி வரை தரவே இல்லை.

திறப்புவிழாவிற்கு, அப்போதிருந்த ஐம்பது எம்.எல்.ஏக்களில் ஒருவர் வந்திருந்தார். அவருக்கு போக்குவரத்துச் செலவிற்கு ஐம்பது ரூபாய்தான் அனுப்பியிருந்தோம். எவ்வளவோ பெரிய ஆட்களையெல்லாம் கூப்பிட பிளான் போட்டோம். பணம் அவ்வளவு திரட்டமுடியவில்லை. மூத்த தோழர்கள் சொன்னது போல் அவர்கள் பெரிய ஆட்களிடம் கொஞ்சம் வசூல் செய்து தந்தது கூட்ட மேடை, ஒலிபெருக்கிச் செலவுக்கு கூட காணவில்லை. கடைசியில், திறப்புவிழா முடிந்து கூட்டம் துவங்கியதும், எனக்கு ஒரு ஐந்து நிமிடம் பேச வாய்ப்புத் தாருங்கள் என்று ,பிரமுகர்கள் கெஞ்ச ஆரம்பித்தனர். அப்போது தென் பகுதியில் எம்.எல்.ஏக்களே கிடையாது. வந்திருந்தவரும் சட்டமன்றத்தில் உரத்துக் குரல் கொடுப்பவர். அதனால் உள்ளூர்ப் பிரமுகர்கள் அவர் முன்னால் பேசி, தங்களை நன்கு அறிமுகப்படுத்திக் கொள்ளவேண்டுமென்ற முனைப்பில் எங்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்தனர். இதுதான் சமயமென்று மூத்த தோழர்கள் சொல்லித் தந்த மாதிரி. நன்கொடை கேட்டோம். மறு பேச்சுப் பேசாமல், பத்து ,பதினைந்தெல்லாம் தந்தார்கள். சிலர் அதற்கு வசதியில்லாமல் தொடர்ந்து கெஞ்சிக் கொண்டிருந்தார்கள். ஒன்பது மணியை நெருங்க நெருங்க நச்சரிப்பும் கூடிக்கொண்டிருந்தது. ஏனென்றால்,ஒன்பது மணிக்கு ‘ஸ்டார் ஸ்பீக்கர்’ பேச ஆரம்பித்தால்தான் பத்து மணிக்குள் முடிக்க முடியும்.கோவில்பட்டி தேவராஜன் என்று அப்போது பிரபலமாகிக் கொண்டிருந்த பாடகர் ஒருவர் தானும் கடைசியில் இரண்டு இயக்கப்பாடல்கள் பாட விருப்பம் தெரிவித்திருந்தார்.

அப்போதுதான் ஒரு பெரிய மாலையுடன் நம்ம ‘இரண்டு ரூபாய் பிரமுகர்’ வந்தார். மூச்சுக் காட்டாமல் என்னிடம் பத்து ரூபாயை நீட்டினார்….நான் வாங்கவா வேண்டாமா என்று தயங்கினேன். எங்கள் அரசியல் குருநாதர், வாங்கிக்கோ என்று கண்ணைக் காட்டினார்… வாங்கியதுதான் தாமதம், விறுவிறுவென்று மேடையில் ஏறி மாலையை எம்.எல்.ஏவுக்குப் போட்டுவிட்டு மைக்கை விடாப்பிடியாகப் பிடித்து பத்து நிமிடம் முழங்கி விட்டே இறங்கினார். என்னிடமும் சில நண்பர்களிடமும், ”தம்பி நம்ம பேச்சு எப்படி” என்றார். நாங்கள் பிரமாதம் அண்ணாச்சி, அந்த ரெண்டு ரூபாய் நன்கொடை என்று இழுத்தோம். சரியான விடாக்கண்டனுங்கப்பா என்று ‘கொடாக்கண்டனாய்’ நழுவினார். மீட்டிங் முடிந்ததும் எல்லோரும் பிரமுகரின் கெட்டிக்காரத்தனத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தோம். பாரு பின்னால பெரிய ஆளா வரப்போறான் பாரு.,என்றார் எங்கள் ‘குருநாதர்;’ குருநாதர் என்னவோ கடைசி வரை எங்களைப்போல் தொண்டனாகவே இருந்தார். நாங்களோ மேற்படிப்பு, வேலை சோலி என்று தேடிக் கொண்டிருந்தோம்.. ஆனால் அவர் சொன்ன மாதிரி, பிரமுகரோ பிரபலமாகி விட்டார். யூனியன் சேர்மனாகி போடுபோடென்று போட்டுக் கொண்டிருந்தார். என்னை எங்கே பார்த்தாலும் அடையாளம் கண்டு கொள்வார். என்ன தம்பி மன்றமெல்லாம் நல்லா நடக்கா என்று கேட்பார். ஆமா அண்ணாச்சி என்று நிறுத்திக் கொள்வேன். ஆனால் அதெல்லாம் எப்பொழுதோ விட்டாயிற்று. எத்தனையோ அரசியல் மாற்றங்கள்… வாழ்க்கை மாற்றங்கள்.

நண்பர்கள் அழைத்த அழைப்பிற்கெல்லாம், அங்கே போக இங்கே போக என்று ஒவ்வொரு நாளும் கழிந்து கொண்டிருந்தது. ஒரு நண்பனுக்கு சென்னையில் பெரிய தனியார் கம்பெனியில் வேலை வாங்கித் தருவதாக ஒருவர் சொல்லியிருந்தார். அவர் நம்பகமான ஆளில்லை, சரியான ’டம்பாச்சாரி’ (ஏமாற்றுப் பேர்வழி) என்று நான் கேள்விப்பட்டதை அவனிடம் சொன்னேன். அவனது அப்பா அந்த ஆளை நெருக்க, அவர் சென்னைக்கு அவனை அழைத்துப் போய் அந்தப் பெரிய கம்பெனியினைச் சுற்றிக் காட்டிக் கொண்டுவந்து விட்டார். பேருக்கு ஏதோ ஒரு அதிகாரியிடம் இன்டர்வியூ மாதிரி நடத்திக் கூட்டி வந்து விட்டார். அதிகாரி, நீ சரியாகத் தயார் செய்யவில்லை, இன்னொரு முறை வா என்று அனுப்பி விட்டார். டம்பாச்சாரி ஒரு விபத்தில் மாட்டி ஒரு காலை எடுக்க வேண்டியதாயிற்று.ஒரு கையும் சரியாக விளங்கவில்லை. அவர் ஒரு டம்பாச்சாரி என்று என் அப்பாதான் சொன்னார். எனக்கும் அவர் மூலமாக வேலைக்கு முயற்சிக்கலாமா என்று கேட்ட போது அப்படிச் சொன்னார்.

சென்னைக்குப் போய் அவரைப் பாத்து விவரம் கேட்டு வர என்னையும் துணைக்கு அழைத்தான். ”எதுக்குலே துக்கம் விசாரிக்கவா, எவ்வளவுலே கொடுத்தே… ” என்றேன். தொகையைச் சொன்ன போது ஆச்சரியமாயிருந்தது.”உங்க அப்பா அவ்வளவு சீக்கிரமா ஏமாற மாட்டாரே..” என்றேன். “நீ வாறியா இல்லையா என்றான். கிளம்பினேன். சென்னையில் இலக்கிய நண்பர்களைப் பார்க்கலாம் என்றும் யோசனை. சென்னையில் அவர் தங்கியிருந்த லாட்ஜைப் பார்த்து அசந்து போனேன். அது கொஞ்சம் ஒதுங்கிய சந்து ஒன்றில் இருந்தது. ஆனால் ரொம்ப நன்றாக இருந்தது.. அதையும் அவரையும் கண்டுபிடிக்கச் சிரமமாயிருந்தது. அப்போது எமெர்ஜென்சி நேரம். பல கட்சிக்காரர்கள் சிறையில் இருந்தனர். பலர் எனக்கும் கட்சிக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்துவிட்டு ஒளிந்து கொண்டிருந்தார்கள். போலீஸ் தரப்பில் அப்படி விளம்பரம் கொடுக்க நிர்ப்பந்தப் படுத்திக் கொண்டிருந்தார்கள் என்று கேள்வி. அப்படி விளம்பரம் கொடுத்த பின்னும் சிலரை விடுவதாயில்லை. அதை வைத்தே ஒளிந்திருக்கும் இடங்களைக் கண்டுபிடிக்க யுக்தி செய்தார்கள் என்றெல்லாம் கதைகள் உலவிக் கொண்டிருந்தன.

லாட்ஜிலும், எங்களை எளிதில் விடவில்லை.எப்படியோ அறையைக் கண்டு பிடித்து ரொம்ப நேரம் தட்டிய பின், ஊன்றுகோலுடன் ‘டம்பாச்சாரி’ தட்டுத்தடுமாறி வந்து திறந்தார். பார்க்கவே பாவமாயிருந்தது. அவருக்கு வயது கிட்டத்தட்ட 67 வயது இருக்கும். ரொம்பத் தளர்ந்திருந்தார். ஆஸ்பத்திரியில் இருந்து இங்கே வந்து தங்கியிருப்பதாகச் சொன்னார். எங்களுடன் ஒரு சென்னை நண்பர், ’ஸ்ரீ’ வந்திருந்தார். அவர் எங்கள் ஊர்தான். சென்னையில் இருக்கிறார். ரொம்பக் கெட்டிக்காரப் பையன். சினிமாவில் நல்ல செல்வாக்கானவன். அவனால்த்தான் லாட்ஜைக் கண்டு பிடிக்க முடிந்தது என்றே சொல்ல வேண்டும்.அவன் எப்படியோ அறையில் மூன்றாவது ஆள் ஒருவர் இருப்பதை மோப்பம் பிடித்து விட்டான். நைசாக டம்பாச்சாரியின் வாயைக் கிளறிக் கண்டு பிடித்துக் கேட்டும் விட்டான். அப்புறம்தான் அவர் சொன்னார்.”ஏம்யா பயப்படனும் இந்தா நாங்கள்ளாம் கரை வேட்டி கட்டிக்கிட்டு தைரியமா அலையலையா அவரை வெளிய வரச் சொல்லுங்க’’ என்றான்.

பாத் ரூமிலிருந்து ‘பிரமுகர்’-இரண்டு ரூபாய்ப் பிரமுகர் வந்தார், அசட்டுச் சிரிப்புடன். ”தம்பீ…, நீங்க.., நம்ம புள்ளைகளா, நான் பயந்துட்டேன்” என்றார். டம்பாச்சாரியிடம் அவனே பேசினான். ஒரு வழியாக பாதிப்பணத்தை தருவதாகச் சொன்னார். அவனும் பிரமுகரும் ரொம்ப நேரம் அளவளாவிக் கொண்டிருந்தார்கள். அவரிடமும் சண்டை போட்டான், நீங்கல்லாம் என்ன கட்சிக்காரங்க என்று. நாளை வருவதாகச் சொல்லிவிட்டு வெளியே வந்தோம்.

பிரமுகர் பின்னாலேயே வந்து ஸ்ரீயைத் தனியே உள்ளே அழைத்தார். நாங்கள் வெளியேயே நின்றோம். ஸ்ரீ வெளியே வந்து தலையில் அடித்துக் கொண்டான். என்னப்பா விஷயம் என்றேன். “என்ன விஷயம், எல்லாம் பொம்பளதான்..காலும் கையும் வெளங்கலேன்னாலும் கிழவனுக்கு ரொம்பநாளாச்சாம்ன்னு ஆசையா இருக்காம்….அவருக்கேயிருந்தா அப்புறம் சின்னக் கிழவனுக்கு இருக்காதா….சினிமாக்குட்டியா கிடைக்குமான்னு கேக்கானுக….”என்றான். என்னாப்பா இந்த வயசிலயா..என்றோம் நாங்கள் இருவரும். ஸ்ரீ சிரித்துக் கொண்டே, :” ஒரு கைப்பிடி உமியைத் தூக்கற அளவுக்கு சீத்துவம் (தெம்பு) இருக்கிற வரை எல்லாருக்கும் இந்த ஆசை விடாதுன்னு நம்ம ஊர்ல சொல்லுவாங்கல்லா… அந்தக்கதைதான்…….“ ,என்றான். உம்ம விஷயத்துக்காக வேண்டியாவது ஏதாவது ஏற்பாடு செய்யறேன்னேன். ஒன்றியம்தான் பணத்துக்குப் பொறுப்புன்னும் சொல்லீட்டு வந்திருக்கேன்….”என்ற ஸ்ரீ, ”எத்தனையோ பிள்ளைங்க என்னைச் சுத்திச்சுத்தி வந்தாலும் நான் ஒன்னைக்கூடத் தொட்டதே கிடையாது…”என்று சிரித்தான். ஆம்.. ’ஸ்ரீ’ அவ்வளவு அழகாயிருப்பான்.




Monday, April 25, 2011

சல்மா – ஒப்பந்தப் புன்னகைகள்



ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் - 10

சல்மா – ஒப்பந்தப் புன்னகைகள்

குட்டி ரேவதி



பெண்ணின், ‘பாலின்பப் பரவசநிலை’யை வெளிப்படுத்த இயலாததே ஓர் ஒடுக்கு முறைவடிவமாக மேற்கத்திய நாடுகளில் பெரும் விவாதமாக்கப்பட்டு, அதன் பல்வேறு திசைகள் ஆய்வுப் பொருளாக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலான பெண்கள், ஆணுடன் புணர்ந்து, பிள்ளைகள் பெற்று அவர்கள் பருவம் எய்தும் வரை வளர்க்கும் சுமையைப் பெற்றிருந்தாலும், இப்புணர்ச்சியின் விழிப்பையோ, பரவசத்தையோ உணர்ந்ததே இல்லை. இது ஓர் இயந்திரத்தனமான அனுபவமாகவே பெண்களுக்கு வழங்கப் பட்டுக்கொண்டிருக்கிறது. திருமணத்திற்குள் பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையிலான பாலுறவும், போர்ச்சூழலில் இராணுவத்தினர் பெண்கள் மீது செலுத்தும் பாலியல் வன்முறையும் இயக்கநிலையில் ஒரே மாதிரியானவை தான். அதற்காக, பெண்கள் இப்பால்நிலைப் புணர்ச்சியில் பரவசநிலையை எய்துவதை நோக்கிய விழிப்புநிலை அடைந்து விட்டாலோ, அல்லது அதற்கான வேட்கையை அடைந்து விட்டாலோ மட்டுமே பாலியல் உரிமையை அடைந்துவிட்டதாக ஆகாது. அந்த நிலையை அடைவது என்பதே, ஆண், பெண் இருபாலாருக்கும் தன் உடல் பற்றிய அறிவு, தான் சார்ந்த குடும்பத்தின் வழியாகத் திணிக்கப்பட்டிருக்கும் பண்பாட்டு மொழிகள், தன் சமூகம் மற்றும் வணிக ஊடகங்களான தொலைக்காட்சி, சினிமா போன்றவற்றின் வழியாகப் பழகி, நுகர்ந்து வந்த பாலியல் நம்பிக்கைகள், மேற்குறிப்பிட்ட பாலியல் உரிமைக்குப் போதுமானவையாக இல்லை என்பதை நாம் அறிந்துகொள்வதிலிருந்தே தோன்றுகிறது.

‘உடல் அரசியல்’ என்ற பெண்ணிய படைப்பிலக்கிய விவாதம் தொடங்கிய நோக்கத்திலிருந்து பல முறைகள் திசை திரும்பியிருக்கிறது. உடல் உறுப்புகள் பற்றிய குறிப்பிடலையோ அல்லது தன் பால்நிலை மற்றும் பாலுறவு பற்றிய மேம்போக்கான வாதங்களையோ, வாக்குமூலங்களையோ கூட ‘பெண்ணிய படைப்பிலக்கியம்’ என்று கூக்குரலிட்ட அரசியல் சிதறல்களும் நடந்தேறியிருக்கின்றன. ‘சென்னை பல்லாவரத்தைத் தாண்டி இவ்விலக்கியங்களை மக்கள் அறிந்திருக்கவில்லை. கல்லூரிகளில், இப்பெண்ணிலக்கியம் பற்றிப் பேசிவிடாதீர்கள்’ என்ற முறையீட்டுடன் ஓர் ஆண் எழுத்தாளர் நான் கலந்து கொண்டதொரு கருத்தரங்கத்தில் குறிப்பிட்டுப் பேசினார். ஆனால், இப்பெண்ணிலக்கியங்களின் நோக்கங்கள், சென்னை பல்லாவரம் மேம்பாலத்தை எம்பித் தாண்டுவது மட்டும்தானா? இலக்கியப் பரப்பில், சொற்களின் அரசியல் செயல்பாட்டை பெண்ணிலக்கியங்கள் விரிவுபடுத்தியிருக்கின்றன. கருத்தரங்குகளில், பெயருக்கு ஒரு பெண் எழுத்தாளரைப் பேச அழைப்பது போய், கருத்தரங்கத்தின் விவாதப் பொருளில் பெண்ணியத்தளம் ஒருமுகப்பட்டிருக்கிறது. சிந்தனைகள் கருத்துவேறுபாடும் முரண்பாடும் கொள்ளலாம். ஆனால், நிராகரிக்கப்பட முடியாத ஒரு பெருங்குரலைப் பெண்ணிய இலக்கியம் எய்திருக்கிறது.

எல்லாவற்றையும் தாண்டி, மொழி, தன் சொற்களில் படிந்துள்ள அடக்குமுறைப் புழுதியை நாம் பொருட்படுத்துவதே இல்லை. அப்புழுதியும் அழுக்கும், மனிதன் தன் சொற்புழக்கத்தில் புதுப்பிக்கத் தவறியதால் வந்து அடர்ந்தவை. மொழி, மனிதனின் உளக்கிடக்கையையும் தேவையையும் வெளிப்படுத்தப் பயன்படவேண்டுமே அன்றி, அது ஒருவரையொருவர் கட்டுப்படுத்துவதற்கான கருவியாகவும், கண்காணிப்பதற்கான கருவியாகவும் இருக்கக் கூடாது. நம் இலக்கிய அரசியலை, ‘உடலரசியல்’ எனும் இலக்கியப் போக்கு மாற்றியிருக்கிறது. வெறுமனே, வசைச் சொற்களாகவும், உடல் உறுப்புகளின் பெயர்ச்சொற்களாகவும் இருந்த சொற்களுக்கு நிறைய இயக்கங்களைப் பெண்ணிலக்கியம் செய்திருக்கிறது.

ஒடுக்கப்பட்ட மதப் பின்னணியிலிருந்து, அதிலும், சுல்பிகா, சல்மா, பஹீமா, அனார் போன்றோர் தமது மதச்சூழலிருந்தும் தமது அந்தரங்கச் சூழலிலிருந்தும் படைப்பிலக்கியத்தில் தன்னை வலுவாக ஈடுபடுத்திக்கொண்டதின் விளைவாக இலக்கியத்தின் பால்நிலை விளக்கங்களை மாற்றியமைத்திருக்கின்றனர். இதை, ஓர் அசாதாரணச் செயல்பாடாகவே நாம் புரிந்து கொள்ளவேண்டும். ‘தேசியத்தின் பேரால் ஒரு யோனி, பயங்கரவாதத்தின் பெயரால் மற்றொன்று, பலவந்தத்தின் பிடியில் இன்னுமொன்று, சுயநலத்தின் சூறையில் இன்னொன்று’ எனும் வரிகளால் சுல்பிகா, யோனிகள் சூறையாடப்படும் அத்தனை சமூகக்காரணங்களையும் ஓரிடத்தில் கொணர்ந்திருக்கிறார். மனிதர்களின் மூளைகளை தத்துவச் சிந்தனைகள் பழக்கத்தாலும் நிர்ப்பந்தத்தாலும் பீடித்திருக்கும் நிலையிலிருந்து விழிப்புறும் போது தான் கவிதை பிறக்கிறது என்பதை உணர்த்த இவர்கள் தங்கள் இலக்கியச் செயல்பாட்டில் தொடர்ந்து ஈடுபடுத்திக்கொள்கின்றனர்.

ஒப்பந்தம்

ஒவ்வொரு முறையும்
அம்மா நாசூக்காய்ச் சொல்வதை
அக்கா கோபமாய்ச் சொல்வாள்
படுக்கையறையின்
தவறுகளெல்லாம்
என்னுடையதென

தினமும் படுக்கையறையில்
எதிர்கொள்ளும் முதல் பேச்சு
‘இன்றைக்கு என்ன?’
அநேகமாக
இறுதிப்பேச்சும்
இதுவாகவே இருக்கும்

வேசைத்தனத்தினைச் சுட்டும் விரல்
ஒளிரும் கோடி நட்சத்திரங்களிலிருந்து நீள
நடுங்கும் இரவுகளில்
மிதக்கும் அறிவுரைகள்

குட்டிக்கு உணவூட்ட
இயலாப் பூனையின்
தேம்பியழும் குழந்தைக்குரல்
கவ்விப்பிடிக்கிறது ஈரலை

உனக்கும் கூடப்
புகார்கள் இருக்கலாம்
என் நிலைப்பாடு
காலத்தாலும்
வரலாற்றாலும்
தெளிவாக்கப்பட்டிருக்கிறது

உன்னிடமிருந்து
கலங்கானதே எனினும்
சிறிது அன்பைப்பெற

வெளியுலகில் இருந்து
சானிட்டரி நாப்கின்களையும்
கருத்தடை சாதனங்களையும் பெற
இன்னும் சிறு சிறு உதவிகள் வேண்டி

முடியுமானால்
உன்னைச் சிறிதளவு அதிகாரம் செய்ய

நான் சிறிதளவு அதிகாரத்தை
ஸ்திரப்படுத்திக்கொள்ள

எல்லா அறிதல்களுடன்
விரிகிறதென் யோனி.

இக்கவிதை சல்மாவின் மிகவும் பிரபலமான கவிதை. அதிகாரத்தைத் துல்லியமாகப் பண்டமாற்றுச் சரக்காக மாற்றிக் கொள்ளும் இடத்தின் வழியாக தன் இருப்பை நிலைநிறுத்த முடிந்ததை இறுமாப்புடன் சொல்லும் கவிதை. சல்மாவின் சொற்கள் ஒவ்வொன்றும் ஏன் அத்தனைக்கவிதைகளுமே கூட, மனித மனத்தின் உளவியல் வெளியையும், அரசியல் செயல்பாட்டையும் அறிந்த நிலையில் தான் உருவாகியிருக்கின்றன. இதை அவருடைய கவிதைகளின் பொதுத்தன்மையாகக் கொள்ளலாம். அவர் கவிதைகள் உள்ளே செல்லும் போதே, அவரே இதை அடிக்கடி ஆமோதிப்பதைக் காணலாம். தன்னை அணுகும் ஒவ்வொருவரின் மனநிலையையும், ‘ஆமாம்! நான் அதை அறிவேன்’ என்ற அகக்குரல் ஒலிக்க, கவிதை முடிகிறது. அதே சமயம், தன்னைச் சுற்றி உள்ள எல்லா சடப்பொருட்களும், பருவகாலங்களும், தட்பவெப்ப நிலைகளும் கூட தன்னைக் கட்டுப்படுத்துவதான மிகையான நிலையைத் தொடர்ந்து பதிவு செய்து கொண்டே இருக்கிறார். ‘மின்விசிறி / நான் காற்றைத் தேடி ஓடிவிடாதவாறு கட்டுப்படுத்தும் தந்திரம் கொண்டது’ என்றும், ‘எண்ணற்ற ஜடப்பொருட்களுடனும் ஒரு மனிதனோடும் தொடரவியலா வாழ்க்கை தொடர்கிறது அதே அறையில்’ என்றும் சடப்பொருட்கள் உயிர்த்தன்மை பெற்ற நிலையைக் கவிதை கொண்டிருக்கிறது. இது ஒருவகையில் அந்த சட உலகத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் உபாயம் தான். உமா மகேஸ்வரியின் கவிதைகளிலும் இத்தன்மையைக் காணலாம்.

இரண்டாம் ஜாமத்துக்கதை

குழந்தைகளைப் பெற்றதற்குப் பிந்தைய
இரவுகளில்
பழகிய நிர்வாணத்திற்கிடையில்
அதிருப்தியுற்றுத் தேடுகிறாய்
என் அழகின் களங்கமின்மையை

பெருத்த உடலும்
பிரசவக் கோடுகள் நிரம்பிய வயிறும்
ரொம்பவும் தான் அருவருப்பூட்டுவதாய்ச்
சொல்கிறாய்
இன்றும் இனியும்
எப்போதும் மாறுவதில்லை எனது உடலென்றும்

நிசப்தத்தின் பள்ளத்தாக்கில்
புதையுண்டிருக்கும் என் குரல்
தனக்குள்ளாகவே முனகிக்கொண்டிருக்கும்

உண்மை தான்
என் உடலைப் போலல்ல
உன்னுடையது
பறைசாற்றிக்கொள்வதில்
வெளிப்படையாக இருப்பதில்

இதற்கு முன்னும் கூட
உன் குழந்தைகள் வேறு எங்கெங்கோ
யார் யாருக்கோ பிறந்திருக்கலாம்
உன்னிடம் தடயங்களில்லை என்பதால்
நீ பெருமை கொள்ளலாம்


நான் என்ன செய்ய?
என் நசிவைப் போலத்தான்
இந்தப் பிரசவக் கோடுகளும்
எளிதில் செப்பனிட முடிவதில்லை
வெட்டி ஒட்டிவிட இவ்வுடல் காகிதமில்லை

உன்னைக் காட்டிலும்
மோசமான துரோகத்தினைப் புரிந்திருக்கிறது
இயற்கை எனக்கு
உன்னிலிருந்து தானே தொடங்குகிற்று
எனது தோல்வியின் முதலாவது நிலை

முதல் ஜாமத்தைக் காட்டிலும்
விபரீதமானது
கனவுகள் பெருகும் இரண்டாம் ஜாமம்

சுவரோவியத்தில் அமைதியாக
அமர்ந்திருந்த புலி
இவ்விரண்டாம் ஜாமத்தில் தான்
என் தலைமாட்டிலமர்ந்து
உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

மேற்கண்ட கவிதையில், விவாதம் பெறும் பிரசவம் அடிப்படையிலான பெண், ஆண் உடல்கள், கழிவிரக்கத்தின் பாற்சாய்ந்து நலிவுற்றுப் போகிறது. பெரிய அளவில் பெண், ஆண் உடலின் புற வேறுபாடுகள் விமர்சிக்கப்பட்டு விட்டன. விவாதிக்கப்பட்டுவிட்டன. என்றாலும், இயற்கையின் சாபம் போல தன்னுடலைத் தானே, தோல்வியின் குறியீடாய்ப் பார்ப்பது, வாசிப்பவரையும் அதே பாதையில் சாய்க்கும் என்பதால், புரியும்பொருட்டு இதை விரிவாக விளக்கவேண்டியிருக்கிறது. ஆணின் குறி மீதான பொறாமையுணர்வு, எப்பொழுதும் பெண்ணின் மனதில் இயங்கிக் கொண்டே இருப்பதான பழைமையான மரபார்ந்த விவாதம் போன்றது தான் இதுவும். ஆனால், இனப்பெருக்க ஆற்றலும், உயிருடலை வளர்த்துப் பிரசவிக்கும் ஆற்றலும் பெண்ணுக்கேயான பிரத்தியேக அம்சமாய்ப் பார்க்கும் சமூகப் பார்வை சமீப காலங்களில் உறுதிப்பெற்றிருக்கிறது. தளும்புகள், புற வடிவ அலகுகளால் அழகை அளவிடுவது என்பது ஆணாதிக்கப்பார்வை. ஆணின் காம நுகர்ச்சிக்கு, ஏற்றவாறு பெண்ணின் உடலைத் திருகிக்கொள்வது என்பதே ஆதிக்கச் சிந்தனையை உள்வாங்கிக் கொள்வது என்பது தான். இக்கவிதையை பெண்ணிய வாசிப்புக்குட்படுத்தும் போது, அதனுள் மறைமுகமாக இருக்கும், தன் இருப்பை ஆணின் அங்கீகாரத்தின் வழியாகத் தேடும், கோரும் மனநிலையை அங்கீகரிக்கமுடியவில்லை. ஆனால், இச்சிக்கலை, அவரே தனது இன்னொரு கவிதையான, ‘விடுபடல்’ வழியாக எளிதாக அவிழ்க்கிறார்.

விடுபடல்

ஒட்டு விளிம்பில்
தழும்பிச் சரிகிற வயிற்றோடு
தலை சொறிகிற குரங்கிற்கு
ஒரு சலனமுமில்லை
தன் உணவைத்
தானே தேடுவது குறித்து

தன் அடி வயிற்றுக் கனத்தின்
பாதுகாப்புக் குறித்து
மேலும்
யாருடைய கரு இதுவெனவும்

உழைப்பதில் ஈடுபடுவது, கருவுறுவது, அது எவருடைய கரு என்பவை குறித்த சலனமின்மை எனும் தனது அரசியலை இயல்பான கவிதையாக்கி இருக்கிறார். ஒடுக்குமுறையை படைப்பிலக்கிய மொழியால் வெல்லுவது தான் பெண்களுக்கு உற்ற வழிகளில் ஒன்று. உலகில் ஒவ்வொரு மதமும் கடவுள் எனும் கண்டுபிடிப்பாலும் அதிகாரத்தினாலும் பிறந்தது. கடவுள் எனும் கண்டுபிடிப்பு ஆண்களின் கண்டுபிடிப்பாகத் தான் இருக்கவேண்டும். ஒற்றை அதிகாரத்தூணுக்கு வசதியாகப் பெண்களிடம் சுமைகளைச் சுமத்துதற்கு ஏதுவாக, மதம் பற்றிய ஒழுங்குமுறைகளும் கடவுள் குறித்த பயமும், பெண்கள் மீது சுமத்தப்பட்டிருக்கின்றன. இஸ்லாமியப் பெண்களின் மீதான ஒடுக்குமுறை, மற்ற மதங்களை விட இறுக்கமானவை, அவர்களின் உடையில் கூடுதலான ஒரு பர்தாவைப் போலவே. பெண்களைப் பாதுகாக்கும் பொறுப்பும், சுமையும் ஆண்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்ற அர்த்தத்தில் என்னவோ பெண்களின் நலனுக்காகவே ஆண்கள் அவ்வாறு நடந்துகொள்வதாகத் தம் நியாயத்தை முன்வைக்கிறார்கள். பதிலாக, ஆண்களைப் பாதுகாக்கும் பொறுப்பு பெண்களிடம் ஒப்படைக்கப்படுவதில்லை. இன்னும், விளக்கமாகச் சொல்வதென்றால், பெண்களின் பொருளாதார, அடிப்படைத்தேவைகளை நிறைவேற்றுவதில் ஆண்கள் காட்டும் அக்கறையை விட பெண்களின் யோனித் தூய்மையின் வழியாகப் பாராட்டும் அன்றாடச்செயல்பாடுகளின் ஒடுக்குமுறை வரை ஆண்கள் தம் கண்காணிப்பையும் அடக்குமுறையையும் அக்கறை என்ற பேரில் செலுத்திவருகின்றனர்.

ஆனால், பெண்ணுக்குத் தன்னளவில் யோனி என்பது என்ன என்பதை பல கவிஞர்கள் பலதிசைகளிலிருந்து பொருள்விளக்கம் தந்திருந்தாலும் சல்மாவின், ‘என் பூர்வீக வீடு’ கவிதை சமகால பெண் தன் யோனியை இழக்க வேண்டியிருக்கும் நிலை பற்றிய பரிவைப் பதிவு செய்கிறது. ‘கருப்பையை உடலிலிருந்து பிரித்தெடுத்தல்’ நவீன வாழ்க்கையில் இன்றியமையாத நிகழ்வாகி விட்டது பெண்களுக்கு. மறுக்கமுடியாததொரு படிமமும் ஆகிவிட்டது.

என் பூர்வீக வீடு 2

முன்கூட்டிக் குறிக்கப்பட்ட
காலமொன்றில்

உலர்ந்த திராட்சையென
சுருங்கிய சருமத்தோடு
நினைவு தப்பிச் சரிந்திருந்த
அவளிடமிருந்து கருப்பையை
மருத்துவர்கள் பிரித்தெடுக்கின்றனர்
சலனமற்ற கவனத்துடன்

தண்ணீர் நிரம்பிய
பாத்திரத்தின் மெளன வெளியெங்கும்
கனத்த ஈரல் துண்டெனத்
தளும்பும் அது
துலங்கிய தன் மர்மத்தோடு

எனதுயிர் ஒடுங்கியிருந்த
அச்சதைத் துண்டை நோக்கி
இதயத்தின் மத்தியிலிருந்து
பீரிட்டெழும் கிளர்ச்சி
பின் பெரும் துக்கமாய் மாறும்

எத்தனைமுறை
உயிர் சுமந்திருந்தாலென்ன
கழிப்பறையில் உருவாகித்
தகிக்கும் வெப்பமெனச்
சபிக்கப்பட்டதாகத்தானே இருந்திருக்கும்
அவ்வுறுப்பு அவளுக்கும்

தொடர்ச்சியான வேட்டையாடலுக்குப்பின்
சக்கையாய் மாறிய அதன் ஆன்மா
இனியேனும் அமைதி பெறக்கூடும்

குறிக்கப்பட்ட நேரத்திற்குச்
சற்று முன் தனதறைக்கு வெளியே
வலைப் பின்னலின் கீழே
ஒளி நொறுங்கிக் கிடப்பதை
உற்றுப்பார்த்துக் கொண்டிருந்து விட்டுப்
பயமற்ற குரலில் சொன்னாள்

‘நான் இனிப் பாதி மனுஷி’
அவ்வார்த்தைகளில் கனன்றிருந்த
இழப்புணர்வின் வன்மம்
பிறகு என்னை
அமைதி கொள்ளவிடவேயில்லை

நவீன வாழ்வின் உளைச்சலும், வேதியியல் பொருட்கள் கலந்த உணவும், பெண்ணின் கருப்பையைத் தான் அதிகமாய்த் தாக்கியிருப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன. ஆனால், அத்தகைய கருப்பையைத் தன் பூர்வீக வீடாக்கியும், அதை இழந்தபோது, இழப்புக்குள்ளானவள், தன்னை பாதி மனுஷியாகச் சொல்லுமிடத்திலும் எத்தகைய ஆற்றல் உறுப்பாய் அது பெண்ணுக்கு இருந்திருக்கிறது என்பதை அறியலாம். அது குழந்தையை ஈன்றெடுக்கும் உறுப்பு மட்டுமே அன்று. பெண்ணுக்கு, பெண்ணுடலுக்குத் தேவையான அத்தனை பால்நிலை அம்சங்களையும் வழங்கக்கூடியது என்பதாலும் அந்த உறுப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

ஆனால், சல்மா, எங்கோ வலிந்து தன்னை விடுதலையின் வாயிலிலிருந்து விலக்கி வைத்திருக்கும் குரல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. விடுதலையை அனுபவிக்காத பாவமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பெரும்பாலான கவிதைகள் ‘ஒப்பந்தம் செய்து கொண்டதன் பேரில் வழங்க வேண்டிய புன்னகைகள்’ தொடர்ந்து கொண்டிருப்பதன் வெளிப்பாடாய் இருக்கின்றன. சில சமயங்களில் வரிகளின் அமைப்பில் கொண்ட அசிரத்தையும் அர்த்தப்பிழையைத் தருகிறது. எல்லா கவிதைகளிலும் தொடர்க் கருப்பொருளாக உடலும் அதன் உணர்வுகளும் இடம்பெற்ற போதிலும், அவை எதிர்மறையான சிந்தனைகளால் ஊக்குவிக்கப்பட்ட உடலாகவே இருக்கிறது. நேர்மறையான சிந்தனைகளும் கலந்திருப்பின் அந்த உடலைச் சூழ்ந்துள்ள வாழ்க்கையை நோக்கியும் நம் வாசிப்பையும் கவனத்தையும் திருப்ப வாய்ப்பு கிடைத்திருக்கும். ஒரே விதமான தொனியில் எல்லா கவிதைகளும் ஒலிப்பதால் ஒரே கோரிக்கைக்காக அவை இறைஞ்சுவதாகவும் ஆகிவிடுகின்றன.

வீடும் வெளியும்

சற்று முன்
தெருவைக் கடந்தது
தேர்.

என் வரையறுக்கப்பட்ட
புலன்களை
வந்தடைகின்றன
பாடல் வரிகளோடு
அரூப விழாக்காட்சிகள்.

இன்னும் வாய்க்கவில்லை
ஒரு திருவிழா நாள்.
திருவிழா முகங்கள்
திருவிழா இடங்கள்
திருவிழா குழந்தைகள்
என் திருவிழா அனுமானங்களுக்கு
என்றும் குறைவில்லை.

அனுமானங்களில் கரைந்த
என் காதலைப் போல
தொன்மையான
செவிவழிக் கதைகளால்
நிரப்பப்பட்ட மூளையில்
ஒலிக்குறிகளாய் மாறிய
காட்சிகள் நிரம்பி வழிகின்றன.

ஏதேனும் ஒரு குரல்
என்னுள் பதிவு செய்கிறது
எண்ணற்ற முகங்களை
அவற்றின் உணர்வு ரேகைகளோடு.

நுட்பமும் விஸ்தீரணமும் இழைய
ஒரு தற்செயலான பொழுது
கனவுகளின் புதிரிலிருந்து விலக்கி
காட்சியை விரிக்கும்போது
ஒட்ட இயலா மனம்
தப்பியோடும்
தன் விசித்திர சுயக்காட்சிகளுக்கு.

வீடும் வெளியும் என்ற இக்கவிதை சொல்லவந்ததை மீறி ஒலிக்கும் அதிர்வுகளுடன் துலங்குகின்றதால் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகிவிட்டது. கவிதையின் கட்டமைப்புகளைப் புரிந்த ஒரு தருணத்தால் சொற்கள் விரிந்து, அர்த்தம் பெருகுகின்றது. அதுமட்டுமன்றி, காட்சி, மனதின் கருப்பொருளில் ஏற்படுத்தும் தாக்கங்கள், அதன் விளைவுகள் பற்றிய புதிய பார்வை என்பதாலும், இக்கவிதை அவரது மற்ற கவிதைகளிலிருந்தும் விலகிய ஒன்றாய் இருக்கிறது. இதுபோலவே, ‘கோணம்’ என்ற கவிதையும் மெல்ல நகைப்பை ஊட்டியதொரு கவிதையாகவும், மேலே விவரித்திருக்கும் அத்தனை பார்வைகளுக்கும் தன் பக்கநியாயத்தை வரைவதாகவும் இருக்கிறது. அவரது சொற்களுடனான தொடர்ச் சஞ்சரிப்பில் இறுக்கமும் வெறுமையும் தனிமையும் வெக்கையும் வீசும் ஓரிடத்திற்கு வந்து நிற்பதைப்போல உணர்கிறேன். ஒரு வெளவாலைப் போலவே!

கோணம்

நான்
தலைகீழாகத் தலைவாரிக்கொண்டிருப்பதை
தலைகீழாகச் சமைப்பதை
தலைகீழாக உணவருந்துவதை
தலைகீழாக அமர்ந்து குழந்தைக்குப்
பாலூட்டுவதை
தலைகீழாகப் புத்தகம் வாசிப்பதை
தலைகீழாகவே நின்று
தன்னை உற்றுப் பார்ப்பதை
அச்சத்துடன் வியந்து பார்த்தபடியிருக்கிறது
தோட்டத்து விருட்சத்தில் காய்த்துக் கிடக்கும்
வெளவால்.

----------------------------------------------------------------------------------------------

சிறு குறிப்பு: சல்மாவின் இயற்பெயர் ரொக்கையா. ஒரு மாலையும் இன்னொரு மாலையும் (2000), பச்சைத் தேவதை(2003) என்ற இரு கவிதைத் தொகுப்புகளைப் படைத்துள்ளார். கவிதை தவிர சிறுகதை, நாவல் ஆகிய இலக்கிய வடிவங்களிலும் தீவிரமாக இயங்கி வருபவர்.


http://koodu.thamizhstudio.com/thodargal_14_10.php





Thursday, April 7, 2011

உமா மகேஸ்வரி – பசுமையின் வரியைத் தனியாக எழுதும் ஒற்றைப்புல் - குட்டி ரேவதி


ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் -8

உமா மகேஸ்வரி – பசுமையின் வரியைத் தனியாக எழுதும் ஒற்றைப்புல்

குட்டி ரேவதி

அன்புமிக்க வாசக நண்பர்களுக்கும், நிரூபனுக்கும்...

வணக்கம். விவாதம் ஒரு நிலைக்கு வரட்டும் என்று காத்திருந்தேன். இந்நீளவிவாதத்திற்கு ஏற்ற பொருள் இது அன்று என்பதே என் தாழ்மையான கருத்து. என்னுடைய முழுமுதற் நோக்கம், வழக்கம்போல ஒரு கவிஞர் பட்டியலை உருவாக்குவதன்று என்பதையும், எவரையும் முழுதாக நிராகரித்து விட்டு மேற்செல்வது என்பதில்லை என்பதையும் முதலில் இங்கு குறிப்பிட்டுக்கொள்கிறேன்.

என்னுடைய பேசுபொருளென்பது, ஏற்கெனவே நண்பர், ‘முத்து ரமணி’ குறிப்பிட்டிருப்பது போன்று, “ஆண்மையப் புனைவைச் சிதைத்தப் பிரதிகள்” என்பதே. அதற்கான முகவுரையில், எம்மாதிரியான பயணத்தை முன்னெடுக்கப்போகிறேன் என்பதை முன்னமேயே தெளிவாகவும் நிதானமாகவும் விளக்கியிருக்கிறேன். அதுமட்டுமன்றி, முழுத் தொகுப்பாக கவிதைகளை வெளியிட்டு இருப்பவர்களையும் தொடர்ந்து கவிதை இயக்கத்தில் இயங்குபவர்களையும், குறைந்த காலத்திலேயே கவிதை இயக்கத்திற்கு பெண்ணிய அக்கறையோடு பங்களிப்புச் செய்தவர்களையும் மட்டுமே இங்கு கவனப்படுத்துவது என் நோக்கம்.

இந்நிலையில், முன்நிகழும் எதையும் வாசித்திராது வந்து தன் வாதங்களை தான்தோன்றித் தனமாக நிரூபன் முன்வைப்பது அவர் அசிரத்தையைத் தான் காட்டுகிறது. எவரையும் நான் ஒருத்தி நிராகரிப்பதால், அக்கவிஞர்கள் இல்லாது போவதற்கும் அவரை இருட்டடிப்புச் செய்வதற்கும் நான் ஒன்றும் கவிதையின் தலைமையிடத்தை எடுத்துக் கொண்டு இங்கு எழுத வரவில்லை. நான் எழுதாமால் போவதால் மட்டுமே நீங்கள் சொல்லும் வரலாற்றின் பொன்னேட்டிலிருந்து, எந்தக் கவிஞரின் பெயரும், அவர் அங்ஙனம் பங்களிப்புச்செய்தவர் என்றால் அழிந்தும் போய்விடப்போவதில்லை. மேலும், இக்கட்டுரைத் தொடரின் நோக்கத்தையே சிதறடிக்கும் நிரூபனின் ஆதிக்க உத்தி தான் இது என்று தோன்றுகிறது. இது போல, பெண்ணியக் கவிதை இயக்கம் தீவிரப்படும்போதெல்லாம், ’பொத்தாம்பொதுவாக’ கவிதை என்பதை மட்டுமே காரணமாகக் கொண்டு உள்நுழைந்துச் சிதறடிப்பவர்களை கடந்து சென்ற காலங்களில் நான் ஏற்கெனவே பலமுறைகள் சந்தித்திருக்கிறேன். அதனால் தான் இத்தொடரை எழுதுவதற்கான ஊக்கத்தையும் பெற்றேன் என்று குறிப்பிட வேண்டும், ’தமிழ் ஸ்டுடியோ’ பெண் கவிதை குறித்தத் தொடரொன்றை எழுத வேண்டும் என்று என்னைக் கேட்டுக் கொண்டதும், சில மாதங்கள் தயாரிப்பிற்குப் பின் தான் இதை எழுதவும் தொடங்கினேன். அதிலும், மையப்பொருள் குறித்த பல விவாத முன்னெடுப்புகளும் ஆலோசனைகளுக்கும் பின் தான் இதைத் தேர்ந்தெடுத்தேன்.

கவிதைக்குள் ஒட்டுமொத்தமாக பெண்ணியச் சிந்தனை எப்படி கட்டமைக்கப்படுகிறது என்றும் அது காலப்போக்கில் அந்தக்கவிஞரின் சுயமுயற்சியினாலேயே என்னனம் வளர்ச்சியுறுகிறது என்றும் அறிய விரும்புபவர்களுக்கும் கவனிக்கத் தவறுபவர்களுக்கும் இக்கட்டுரை உதவக்கூடும். ஆனால், கவிதை என்றால் என்ன என்று அறியாதவர்கள் சிலர், இம்மாதிரியாகச் சீர்மைப்படும் பாதைகளைச் சிதறடிப்பது வழக்கமானது தான். எனது இக்கட்டுரையின் நோக்கம், வெறுமனே பெண்ணியக் கவிதைகளோ, பெண்கள் கவிதைகளையோ தொகுத்து அடையாளம் பெறுவது அன்று. (மீண்டும் சென்று இக்கட்டுரை முகவுரையைப் படிக்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்). தம் கவிதைகள் வழியாக, உடல் எனும் பிரதியைக் கலைத்துப் போட்டவர்கள் மற்றும் ஆதிக்கமொழிப் பிரதியைச் சிதைத்தவர்கள் வழியாக மட்டுமே கவிதையை ஓர் இயக்கமாக அணுகுவது. இதில், கவிதைகள் அல்லாத பிரதிகளையும் நாம் நிராகரிக்கவே வேண்டியிருக்கும். நான் இதைச் செய்யவேண்டியதில்லை என்றாலும், ‘தமிழ் ஸ்டுடியோ வாசகர்கள்’ தம் தொடர் வாசிப்பின் பயனால், எது சீர்மையான கவிதை என்பதை தாமே கண்டறியும், தெளியும் இடத்திற்கு வந்திருக்கின்றனர். அவர்கள் முன்பு, கவிதையல்லாத, கவிதை என்று முன்மொழியப்பட்ட வரிகளாலான தொகுப்பை நான் முன்வைத்தால் அவர்களே முன் வந்து இது கவிதையன்று எனச் சுட்டிக்காட்டும் தேர்ச்சியுடையவர்கள். இதை கவனத்தில் கொண்டு, நான் தேர்ந்தெடுக்கும் கவிஞர்கள் எழுதியவை, கவிதைகளாகவும் இருக்கவேண்டும் என்பதற்கும் அழுத்தம் கொடுக்கிறேன்.

ஏற்கெனவே, செல்வி, சிவரமணி ஆகிய இரு கவிஞர்களையும் அவர்கள் கவிதைகளை முன்வைத்து ஒரு கட்டுரை எழுதியுள்ளதை இங்கு நினைவுகூறுகிறேன். http://koodu.thamizhstudio.com/thodargal_14_3.php.

அவர்கள், தோன்றி வரும் இயக்கப்பின்னணிகளை வைத்து எழுதினால், என் இக்கட்டுரைத் தொடரின் நோக்கத்திலிருந்து கவனம் திருப்பும் ஒரு தொடராக இருக்கும் என்பதாலேயே, இக்கட்டுரையின் உள்ளுறையை, ‘உடலரசியல்’ என்றும், என்னளவில் இக்கட்டுரையில், உடலரசியல் என்று எதை முன்மொழிகிறேன் என்றும் திடமான விளக்கம் அளித்து விட்டுத்தான் நாம் இந்தக் கட்டுரைப் பயணத்தைத் தொடர்ந்தோம் என்பதை நினைவு கூறிக்கொள்கிறேன்.

இத்தொடரில் கப்டன் கஸ்தூரி போன்றவர்களையும் நான் விலக்கிவைத்துத்தான் நகர்கிறேன் என்ற கவன விழிப்பையும் கொண்டிருக்கிறேன். காரணம், இத்தொடரின் அடிப்படைக் காரணங்களால் விலக்க முடியாத தகுதிகளைக் கவிஞர் கொண்டிருக்கவேண்டும். இரண்டு, அவை கவிதைகளாகவும் இருக்கவேண்டும். பெண்கவிதைகளைப் பதிப்பிக்கும் பதிப்பாளர், தொகுக்கும் தொகுப்பாளர் ஆகியோரை முன்மொழியும் கட்டுரைத் தொடர் இது இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில், இம்மாதிரியான நாகரிகம் தான் பட்டியலையும் அதில் படிநிலையையும் உருவாக்கியது என்பதால் இதை முற்றிலுமாக மறுக்கிறேன். அப்பணியை நானும் செய்ய ஒப்பவில்லை. மேலும், நிரூபனின் விவாதத்தில் உள்பொருளும் அக்கறையும் சில முக்கியமான கவிஞர்கள் விடுபட்டிருக்கின்றனரே என்பதைக் காட்டிலும் ஆழியாளை முதன்மைப்படுத்தியது தான் காரணமாக இருப்பது ஒரே சமயத்தில் எனக்கு வியப்பையும் நிறைய சந்தேகங்களையும் எழுப்புகிறது. பெண்ணியக் கவிதை மீதான அக்கறையோ தேர்ச்சியோ சிறிதும் ஏதுமில்லை. நிரூபன், தன் ஆதிக்கச் சிந்தனையை நிரூபிக்க இவ்வளவு போராடவேண்டியதில்லை. உங்கள் களம் வேறு என்பதையும் தாழ்மையுடன் குறிப்பிட்டுக்கொள்கிறேன்.

ஆழியாளின் வழியாக, கவிதைத்தளத்திலும் பெண்ணியத்தளத்திலும் நிகழ்ந்த நகர்வுகள் துல்லியமானவையும் வெளிப்படையானவையும்! நான் வியந்து மிகையாகச் சொல்வதற்கும் ஏதும் இல்லை. இம்மாதிரியான பெண்ணிய அசைவுகளில் அதிலும் கவிதைகளில் நிகழ்வது என்றால், அவை நாம் எல்லோருமே கொண்டாட வேண்டிய நகர்வுகள் தாம்! அம்மாதிரியான நகர்வுகளை தங்கள் சுய மொழியால் கவிதை வடிவத்தால் ஏற்படுத்தியவர்களை மட்டுமே அடையாளப்படுத்துவது என் முயற்சி! விடுபட்டவர்கள், வேறொரு பொருள் கொண்ட அத்தியாயத்தில் ஒருங்கிணையலாம்.

இன்னும் தெளிவாக விளக்கவேண்டுமெனில், கடந்த காலக் கவிதை வரலாற்றில் பெண்ணியச் சிதைவுகள் நிகழ்ந்ததை விளக்கியும் ஒரு தொடர், இக்கட்டுரைத் தொடருக்கான எதிர்த்திசையில் எழுதமுடியும். ஆனால், அது என்னுடைய நோக்கமன்று. நீங்கள் குறிப்பிட்டிருப்பது போலவே, பேராசிரியர் கிருஸ்ணபிள்ளை விசாகரூபனின் ஈழத்து கவிதை வளர்ச்சி மற்றும் பிற ஈழக்கவிதை மரபுகள் குறித்த பேராசிரிய ஆய்வுகளை எல்லாம் நானும் வாசித்திருக்கிறேன். அவற்றின் பேராசிரியத்தன்மை நிஜமாகவே அலுப்பூட்டுகின்றது. அம்மாதிரியான கட்டுரைகள் வழியாக ஈழக்கவிதையின் ஒட்டுமொத்த கவிதைப் புலத்தையும் முன்வைப்பதும் இத்தொடரின் நோக்கமன்று. அதுமட்டுமன்றி, கவிதையை வாசிக்கும் போது பெறும் உணர்வெழுச்சியையும், அரசியல் கிளைத்தல்களையும் அவ்வாய்வேடுகளில் என்னால் ஒருபோதும் நுகரவே முடிந்ததில்லை. கவிதைகளே தமதளவில் முழுமையும் உணர்வெழுச்சியின் சுனைகளாக இருக்கும் போது எனக்கு இந்தப் பேராசிரிய ஆய்வுகள் எந்த வெளிச்சத்தையும் கொடுத்ததில்லை. ஆழியாளின் நூலில், மதுசூதனன் எழுதியிருந்த கட்டுரையின் நேர்மையான குரல் மட்டுமே என் உற்சாகத்திற்குத் துணை சேர்வதாக இருந்தது என்று சொல்லலாம். மொழியின் வழியாக, கவிதை என்று சொல்லிப் பிரசாரம் செய்தவர்கள் இக்கட்டுரையின் பொருளுக்குள் அடங்கமாட்டார்கள் என்பதே என் தாழ்மையான கருத்து.

மேலும், இம்மாதிரியான வரலாற்றுப் படிநிலைகளுக்கு அழுத்தம் கொடுத்து, அழுத்தம் கொடுத்தே, கவிஞர்களின் தனித்துவ முயற்சிகள் அதிலும், பெண்ணிய முன்னெடுப்புகள் நிகழ்த்தியவர்களின் சித்தாந்தங்களை விவாதத்திற்கு உட்படுத்தாததாலும், சமூகத்தின் இயக்கங்கள் உள்வாங்கிக் கொள்ளாததாலும் அம்முயற்சிகள் முனைமுறிந்து போயின. நீங்கள் முன்மொழிந்திருக்கும் தொடர் கருத்துரைகள் எல்லாமே ஆதிக்கச் சிந்தனைப் புரையோடியவையாக இருக்கின்றன. வரலாறு என்பதற்கு அழுத்தம் கொடுத்து, தனி நபர் படைப்பாற்றலை விவாதப்பொருளாக்குவதைச் சிதைக்கின்றன. ஆனால், நீங்கள் குறிப்பிட்ட தமிழ் என்னும் அடையாளம் குறித்த விவாதத்தில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், இங்கு நீங்கள் காட்டும் பொருத்தங்கள் தெளிவற்றும் பொருள் மயக்கங்களோடும் விரிகின்றன என்பதால், நீங்கள் வந்து நிற்கும் இடத்தை ஒரு முறை திரும்பிப் பார்த்துக்கொண்டு எழுதுங்கள். அல்லது, நீங்கள் விரும்பும் பொருளில் தொடரொன்றை எழுதுங்கள்.
கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக, கவிதையையும் அதன் அசைவையும் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருக்கும் நான் கவிதை பற்றிய எந்த நூலையும் தவறவிடுவதில்லை. விவாதத்தையும் தவறவிடுவதில்லை. நிரூபன் குறிப்பிட்டிருக்கும் நூல்களையும் வாசித்திருக்கிறேன். அதன் பின்னணியில் உள்ள அரசியல் ஆதாயங்களை ஒரு விவாதமாக்கவும் விமர்சனமாக்கவும் என் இடம் இது இல்லை என்பதை நான் தெளிவாக அறிந்திருக்கிறேன். ஆனால், நூல் வடிவிலும், கட்டுரை வடிவிலும், தனிமனிதக் குரல் தொனியிலும் வரும் அவதூறுகளுக்கு நான் இது வரை பதிலளித்ததே இல்லை. புறக்கணித்திருக்கிறேன். அதற்காக என் நேரத்தை ஒரு பொழுதும் வீணாக்கியதில்லை. இது ‘ஆழியாள்’ என்ற, நான் இது வரை சந்தித்திராத, நான் உரையாடியிராத ஒரு கவிஞரைப் பற்றி நான் எழுதிய கட்டுரை என்பதால் மட்டுமே இதற்கு பதிலளிக்கும் பொறுப்பை நான் ஏற்றிருக்கிறேன். செவிமடுத்த எல்லோருக்கும் நன்றி! இம்முறை கவிஞர் உமா மகேஸ்வரியின் கவிதைகளுடன் வந்திருக்கிறேன்! வாருங்கள், நகர்வோம்!!

***************************

பெண்ணிய இயக்கங்கள், ஒரே நோக்கத்திற்காகப் போராடும் பெண்களை ஒன்றாக இணைப்பவை. இவ்வியக்கங்களில் இணைய முடியாமல் குடும்பத்தின் வலைகளில் சிக்கிக் கொண்ட பெண்கள் எப்படி தங்கள் உரிமைகளை வென்றெடுக்கின்றனர் என்ற கேள்விக்கான பதில்களைத் தேடிப் பெறுகையில், காலந்தோறும் பெண்கள் தம்மீதான குடும்ப வன்முறையை வென்ற வரலாற்றையும் பெறலாம். இத்தகைய வரலாற்றுப் பதிவுகள் எங்குமே ஆவணப்படுத்தப்படுவதில்லை. ஆனால், மானுட இனத்தின் சரிப்பாதியான பெண்ணினம் தம்மீதான எல்லா வகையான வன்முறைகளையும் ஒடுக்குமுறைகளையும் எவ்விதம் எதிர்த்து நிற்கின்றனர் என்பதை நாம் அறிய பெண்ணெழுத்து மிகத் துல்லியமான ஆவணமாகவும் வெளிப்பாடாகவும் இருக்கிறது.

எழுத்தைத் தன் போராட்டத்திற்கான ஆயுதமாகக் கொண்டு, தான் சார்ந்த குடும்பம், மதம், தன் இருப்பு இவற்றுடன் தொடர்புடைய அடிமைத்தனங்களை தன்னளவிலும் தன்னைச்சேர்ந்த பெண்கள் அளவிலும் புரிந்து கொண்டு மொழி வழியாக அவற்றை எதிர்க்கும் ஒற்றைப் பயணம் என்பதை நிறுவுவதாய் உமா மகேஸ்வரியின் எழுத்து தொடர்கிறது. தன் வீட்டை எல்லையாகத் திணித்த தன் இருப்பை மீறும் எழுத்தைப் படைப்பவர் இவர். குடும்பத்திற்குள் நின்று இயங்கும் பெண்கள் தம் உயிரைப் பேணுதலை மட்டுமே அதிகபட்ச உரிமையாகக் கொண்டிருக்கின்றனர். இவர்கள், தம்மீது திணிக்கப்பட்ட தாய்மை எனும் மதிப்பையும், மனைவி எனும் பாரத்தையும் ஒரே சமயம் சுமக்கவேண்டியிருக்கிறது. குடும்பம் எனும் மண்டபத்தின் தூண்களாக எழுந்து நின்று தோள்களில் அதன் விதானத்தைத் தாங்கிக் கொண்டிருந்தாலும், அவற்றிலிருந்து விட்டேகும் விடுதலைக்கான கற்பனைகளைக் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். இத்தகைய கற்பனைகளை எவரும் அவர்களிடமிருந்து அபகரித்துவிடவே முடியாது. விடுதலைக்கான கற்பனை தான் பெண்ணெழுத்தின் சீரிய நெடுஞ்சாலை.

உமா மகேஸ்வரியின் எழுத்து வீட்டுக்குள்ளேயே தன் முழு காலத்தையும் கழிக்க வேண்டியதொரு பெண்ணின் சிந்தனைகளை அன்றாடம் எழுத்தாக்குகிறது. எதிர்ப்பின் தொனியாக்குகிறது. கற்பனைகளின் வெளி கொண்டு அச்சூழலின் இறுக்கத்தை வெல்கிறது. ஒடுக்கப்பட்டவர்களுக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட ‘அன்றாடம்’ என்பதன் அரசியலைப் புரிந்து கொள்ள பெண்ணெழுத்து தான் உதவுகிறது. நாட்குறிப்புகள் என்றும் அழுகைப் புலம்பல்கள் என்றும் விமர்சிக்கப்பட்ட பெண்ணெழுத்து, மறுக்கப்பட்ட அவற்றிற்கான வெளியாக எழுத்தைக் கண்டுகொண்டது தான் பெண்விடுதலையின் தொடக்கம். தினந்தோறும், தான் காண நேரும் ஜன்னல் சட்டமிட்ட காட்சி, அடுப்பு மேடை, படுக்கையின் எல்லை, ஒரே மாதிரியான தோசைகளை உருவாக்கும் பணி ஆகியவற்றிலிருந்து விடுபட, ஜன்னல் கம்பியில் வந்து அமரும் ஒரு சிட்டுக் குருவி போதும். அது சிறகடித்துப் பறக்கும் வெளியைத் தனதாக்கிக் களிக்கும் கற்பனை போதும், விடுதலையைத் தொடங்க!

எனது நதி

சிறுவயதில் பார்த்த போது
அம்மாவின் புடவையென
அலையோடிருந்தது.
செல்லமாய் வளைவுகளில்
சேர்த்தணைக்கும்;
வருடும் மெல்ல.
பள்ளங்களில் கால்பட்டால்
பதறிப்பாய்ந்து மிரட்டும்.
பருவ காலத்தில்
ஓரம் தைத்த தாவணிகளாய்
உருவம் மாறிக் கிடந்தது
துள்ளல் போர்த்தித் துவண்டு அடங்கி
சன்னமாய் மின்னும் ஜரிகை வரிகளோடு.
வேறுதிசையில் எறிந்து
மாறுதலாக்கியது திருமணம்
திரும்பி வந்து தேடினால்
பிரிந்த நூலிழைகளாய்த்
திரிந்திருந்தது அதுவும்
அறுந்த அடி நீரோட்டத்தோடு

எனது நதி என்ற இக்கவிதை ஒரே சமயத்தில் நதியின் அடையாளம் தூர்ந்து போவதையும் அம்மாவின் புடவை வேறுருக் கொண்டு மாற்றமடைதலையும் ஒப்புமைப்படுத்துகிறது. ’பெண்மை’ என்பதன் மீது திணிக்கப்பட்ட தொடர் மாற்றங்களையும் திரிபுகளையும் சொல்லியிருக்கிறார். அவரது நதியின் பண்புகள் இன்னனம் தாம் அவருக்கு அர்த்தமாகியிருக்கின்றன என்பதைக் கவனப்படுத்துகிறார். இம்மாதிரியான புறவுலக மாற்றங்களை அகப்பண்புகளுடன் தொடர்புப்படுத்தும் பணியை உமா மகேஸ்வரி தொடர்ந்து தன் கவிதைகளில் செய்த வண்ணம் இருக்கிறார். இது ஒருவகையான சங்கேதங்களைத் தனக்குத்தானே நிகழ்த்திக்கொள்ளும் வெளிப்பாடு. இதுவே கலையுருவம் கொள்கிறது கவிதையில்.

பெண்களின் மாதாந்திர உதிரப்பெருக்கை, ‘பெரும்பாடு’ என்கிறது சித்தமருத்துவம். பெண்களின் உதிரப்பெருக்கு பெண் கவிதைகளாக்கிய போதெல்லாம் அதன் வலியும் அதை ஒட்டிய உடற்சங்கடங்களுமே பதிவாகியிருக்கின்றன. இங்கு உமா மகேஸ்வரி, அந்நிகழ்வின் காலாகாலங்களையும் தாமதங்களையும் காலம் தாண்டித் தொடர்தலையும் அரசியலாக்குகிறார். பெண்களுக்கு இடையிலான ’பேத அரசியல்’ என்பதே ஆண்களைத் தன்னிடம் தக்கவைத்துக் கொள்ளும் ஹார்மோன் அரசியலைத் தான் அடிப்படையாகக்கொண்டது. இவர் கவிதையிலும் மாமியார் கேட்கிறார்: ’மாமியாரின் ஆதங்கமோ ‘இன்னும் வருதா’ என.’ தனது இழப்பில் கொள்ளும் கவலையினும் இன்னொருவரின் அனுபவிப்பின் மீது கொள்ளும் ஆற்றாமை. இது நான் ஏற்கெனவே ஒரு கட்டுரையில் விளக்கியுள்ளபடி, குடும்பத்தைத் தொடர்ந்து இயக்குவதற்கு மாமியாரையும் மருமகளையும் ஒருவருக்கொருவர் எதிரான நபர்களாய் நிறுத்தி ஆதாயங்களை அறுவடை செய்யும் நிகழ்தகவு. இதில் பெண்ணினம் பகுக்கப்படுவதுடன், ஒரே மாதிரியான பிரச்சனைகளையே இருவருமே அனுபவித்தாலும் அங்ஙனம் அடையாளம் காணமுடியாதவாறு முகம் பார்க்கும் கண்ணாடிகளைத் திருப்பிவைக்கும் ஆதிக்கத்தந்திரம். ’காட்டுத் தீ மரமோ பருவங்களைக் கவனியாது பூத்துத் தள்ளுகிறது அதன் போக்கில்.’ என்ற தன் ஆதங்கத்தைப் பதிலாக்கி விடுதலையுறுகிறார்.

பூத்தல்

சிறுமியில் ஆரம்பித்தபோது
‘அதற்குள்ளேயா” என
அம்மாவின் பதற்றம்.
அடுத்தடுத்த மாதங்களில்
‘இன்னும் வரவில்லையா?’
ஆணியறைந்து மாட்டப்பட்ட
நாட்காட்டி என் முகத்தில்.
மாமியாரின் ஆதங்கமோ
‘இன்னும் வருதா’ என.
தனியாய்ப் போனால் பிடிக்கும் முனி,
தலை குளியாதிருந்தால் அடையும் தேள்கள்
என்று நீளும் கதைகளில்
குத்திக் கோர்த்தெடுக்கப்பட்ட என் தினங்கள்.
காட்டுத் தீ மரமோ
பருவங்களைக் கவனியாது
பூத்துத் தள்ளுகிறது அதன் போக்கில்.
நான் நடமுடியாது
என் இஷ்டப்படி பூக்கும்
எந்த நாற்றையும் என்னுள்.
மஞ்சளில் ஆரம்பித்து
ஆரஞ்சில் ஆழ்ந்து
குருதிச் சிவப்பிற்கே திரும்புகிறது
உபயோகித்த சானிடரி நாப்கின்களைக்
கொளுத்திய தீ

சிலந்தி

எனக்குள் இருக்குமொரு சிலந்தி
எப்போதும் வலை பின்னியவாறே.
மனதின் இடுக்கில் இழைகள் விரித்துக்
காத்துக் கிடக்கும்.
நினையாத் தருணங்களில்
எதிர்முகத்தில்
கொடுக்கைச் சுழற்றி
சொடுக்கும் வார்த்தை நஞ்சை.
சின்னஞ்சிறு கனவுகளையோ,
எண்ணற்ற விரல்களால்
நசுக்கி விழுங்கும்.
வெறுப்பென்றும் கோபமென்றும்
மறைகுணங்கள் மிகைத்து
குறுக்கும் நெடுக்கும் திரியும் ஊர்ந்து
இரவின் அமைதிகளில் விழி வழி நகர்ந்து
உலகைப் பார்க்கும்.
கண்ணாடிக் காகிதத்துள்
பொத்திய மலர் போன்று
அழகு காட்டும் சிலசமயம்.
விலக்கவே விருப்பமெனினும்,
பழகிப் பழகியே
பரிச்சயமாற்று தினமும்
எதுவும் செய்யக்
கூடுவதில்லை என்னால்
என்னுள் இருக்கும்
இந்தச் சிலந்தியை

தோசை என்பதைப் பெண்ணடிமைத் தனத்தின் குறியீடாக்கி நோக்கும் கவிதை! அதன் வடிவையும் தன்மையையும் பெண்மையுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார். இக்கவிதையை வாசிக்கையில், பெண்கள் தங்கள் வாழ்வில் கணவனுக்காகச் சுடவேண்டிய தோசைகளின் எண்ணிக்கையற்ற தன்மையைப் பேசும் அம்பையின் சிறுகதையொன்று நினைவுக்கு வருவதைத் தவிர்க்க இயலவில்லை. என்றாலும் உமா மகேஸ்வரியின் ’தோசை’, கவிதையின் நவீனத்துவத்துடன் பிரச்சனையைத் துலங்கவைக்கிறது.

தோசை

ஆண்டாண்டு காலமாக அளவு மாறாதது
தோசைகளின் விட்டம்
விளிம்பு தாண்டாதது அவற்றின் விட்டம்
உலோகக் கடின அடித்தளத்தில்
ஊற்றப்பட்டாலும் அவை
ஒரு போதும் இழப்பதில்லை மென்மையை.
விரிவும் திருப்பமுமற்ற
வெற்றுச் சுழற்சி.
எதனோடும் இணைந்து போகும் சுயமின்மை.
இழப்பின் விழிப்பற்று
மூடிக்குள் புழுங்கி வேகும்.
உள்ளே வெந்தாலும்
வெளிக்காட்டாத புன்முறுவல் மேலே.
சுருட்டித் திருப்புகையில்
சோர்ந்த முனகலன்றி
வேறெதுவும் சொல்லாதவை.
நகர்த்தவில்லை அவற்றை,
நவீன வகைப்படுத்தல்கள்
நிஜமான சுதந்திரத்துள்.
வருடங்களால் வளர்ச்சியுறாது,
வடிவம் மாறாது தோசைகள்
வாழும் வாழ்தலற்று.
அம்மாவின் பாட்டியின்
பாட்டியின் அம்மாவின்
இன்னும் என்னுடைய தோசைகள்
ஆண்டாண்டு காலமாய் அப்படியே.

இன்றைய காட்சி

நிராசைகள் கொப்புளிக்கும்
நம் படுக்கையில் நிகழ்த்துவோம் இன்றும்
திரை நியமங்கள் விலகாத
எண்ணிக்கையில் வராத இன்றைய காட்சியை.
நீயே நிர்மாணித்த சுலபப்பாதையை
ராஜபாட்டையென்று கருதி
நிறுவிக்கொள்கிறாய் நீயாகவே
இறுதி நிறுத்தத்தை வெற்றிப் புள்ளியென்று.
அனுசரணைகள் பூசிமெழுகல்கள்
சம்பிரதாயங்கள் சமரசங்கள்
மூடிய புதைகுழிகளினூடாக
அடையமுடியாது நாம் என்றைக்குமே
ஆதிக்காதலின் வனத்தை
புதர்கள் தாண்டிப் பூத்த உச்சி மலரை
செய்வதொன்றுமில்லை இனி
திரும்பிய முதுகோடு உன் ஒரே நொடி உறக்கம்
சில்லிடும் தரை
ஒண்டிய சுவர்.
சுருண்ட பூனையாக என் உளைச்சல்கள்.

மேற்கண்ட கவிதையில், ‘சில்லிடும் தரை / ஒண்டிய சுவர்’ என்ற முந்தைய வரிகளிலேயே சுருண்ட பூனையின் உளைச்சல்களை உணரமுடிகிறது பாருங்கள். ’நீயே நிர்மாணித்த சுலபப்பாதையை / ராஜபாட்டையென்று கருதி / நிறுவிக்கொள்கிறாய் / நீயாகவே / இறுதி நிறுத்தத்தை வெற்றிப் புள்ளியென்று.’ ஆணுடனான பாலுறவின் இலக்கணத்தை விமர்சிக்கிறார். ஆணே நிர்மாணித்த சுலபப்பாதையை ராஜப்பாட்டையென்று கொள்ளுதல் தான் பாலியல் உறவிற்காக ஆண் கொண்டிருக்கும் நியமங்களில் முதன்மையானது. அப்படியான ஒருதலைப்பட்ச நியமம் கொண்ட உறவில் ஆதிக்காதலின் எந்தச் சுவடும் சுகமும் இருக்கமுடியாது. ’இன்றைய காட்சி’யின் தொடர்ச்சியாக உணரப்பட்ட இன்னொரு கவிதை.

முத்தங்களின்றி புகையும் நம் உடல்களைப்
புணர்ச்சிக்கு நகர்த்தலாம்;
மூலைகளில் உறைந்த பல்லியின்
மேற்செதில்களைப் போல்
அருவருப்பூட்டுகின்றன
உள்ளூர இந்த பாவனைகள்.
கனவின் தளிரசையும் பள்ளத்தாக்குகள்.
பிரியத்தின் நுனியிலாடும் வெறிக்கூர்மை;
நனைந்த வானம் விலக்கிவரும் மெதுவெயில்;
பட்டாம்பூச்சியின் நிற நிழலாடும் தோட்டச்சுவர்
எல்லாவற்றிலும் ஒரு தகரத்தன்மை ஏறுகிறது
பகல் சரிகிறது மெல்ல

அடி

நூற்றாண்டுகள் கண்ட
சாட்டைகள், சவுக்குகள்
ஈட்டிகள், கத்திகள்
எல்லாம் உண்டு அதில்; அடி

உன் வலு காட்டும்
வழி மட்டுமன்று,
என் பலவீனத்தை அடிக்கோடிடும்
வகையுமாகும்; அடி

மழுங்கிய உணர்வுகளை
மாற்றிக் கூராக்கும்;
எதிர்த்துக் குத்தவோ
எதையேனும் தைக்கவோ.
எனவே, மீண்டும்..
தழும்புகள்
கண்ணீர் பெருக்கவென்பதோடு
கலகம் துவக்கவும்
காரணமாகலாம்

தொடல்களை இனிமையற்றதாக்கும்
அடிகளாலான வலி.
நம் தூரம் நீட்டி
என்னை விடுவிக்கும் எதிலிருந்தாவது.

ஒருவேளை உன் மொழி
அதுவென்றால்
வேறெப்படிப் பேசுவாய் நீ?
ஆகவே, அடி.


’அடி’ என்பதே ஆணின் மொழியாக இருப்பதன் முரண் நியாயங்களை எழுதும் கவிதை இது. குடும்ப வன்முறை என்பது இன்றும் பேசாப்பொருளாக இருக்கிறது. சமீபத்தில் ஹைதராபாத்தில் ஒரு பால்நிலைப் பயிற்சிப்பட்டறைக்கு வரவழைக்கப்பட்டிருந்தேன். அதில் ஓர் அமர்வில், அவரவர் உடல் குறித்த துன்பங்களையும் அவற்றிற்கு அடிப்படையான காரணங்களையும் ஏதேனும் படைப்பாக்க வடிவில் வெளிப்படுத்த வேண்டும். அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து கலந்து கொண்ட இருபத்திநான்கு வயதுப் பெண், இரு குழந்தைகளின் தாய். கணவன் குடித்து விட்டு வந்து அவளிடம் காசு கேட்க, இல்லையென்பதால் கணவன் வீட்டை விட்டு துரத்தியடிக்கப்படுகிறாள். இதில், மாமியாரும் கணவன் பக்கம் நின்று அவளை விரட்டுகிறாள். கொட்டும் மழை. நடுநிசி. தன் பெற்றோர் வீட்டுக்குச் செல்கிறாள். அவளையும் குழந்தைகளையும் கண்ட அவள் பெற்றோரோ, ‘இது உன் குடும்பத்தின் பிரச்சனை. நாங்கள் தலையிட உரிமை இல்லை’ என்று கதவைச் சாத்திக்கொள்ள அவள் முழு இரவும் தன் குழந்தைகளுடன் தெரு ஓரக்கடையின் தாழ்வாரத்தில் கழிக்க நேர்ந்த தன் வரலாற்றைப் பகிர்ந்தாள். குடும்பத்தின் வன்முறை பலமுனைகளைக் கூர்மையாகக் கொண்ட ஆயுதம் என்பதைச் சொல்லும் இக்கதை உடனே அங்கிருந்த நாடகக் கலைஞர்களால் அவள் விருப்பத்தின்பேரில் நாடகமாக்கப்பட்டது. மேற்கண்ட கவிதையில், ஆண் அடிப்பதை தன் திசை பொருள் விளக்கங்களுடன் அணுகுகிறார், கவிஞர். அதாவது, ஆண் பேசுவதற்குத் தேர்ந்தெடுக்கும் ஒரே மொழியாக வன்முறையைக் குறிப்பிடுகிறார்.

சிலாம்புகள்

உதிரத்தின் சுவையோடிருந்தது
அந்தக் கூடல்
என்னைக் குத்திய சிலாம்புகள்
பிடுங்கப்படாமலிருந்தன

பயணக்களைப்பையும்,
ரணங்களின் நோவையும்,
பசிக்கும் வயிற்றையும்,
உன் கண்ணசைவு
புறக்கணித்தது.

தகிக்கும் உடலைத்
தண்மைப்படுத்தவில்லை
குளிர்சாதன இயந்திரம்.
பிரிபடாத உணவுப்பொட்டலம்
பேசித்தீர்க்காத உணர்வுகள்
முத்தங்களால்
மாறி மாறித் தாக்கிக் கொண்டோம்
ஒருவரையொருவர்

கொன்ற கோழியிறகுகளைப்
பிய்த்தெறிவது போல்
என் ஆடைகளை.
நாம் தழுவத் தழுவ
அவை நழுவிவிட விரும்பினேன்
தானாகவே

பகலொளி படக் கூசும் என் உடல்.
படபடத்து அதிரும் சுவர்கள்,
மோகம் பருகும்
என் மூடிய கண்களும்
உன் திறந்த பார்வையும்.

இறுகித் தவிக்கும் மனம்
உன் வருடலின் ஆறுதல் தேட
தேகமோ இளகிவிடுகிறது
வெண்ணையில் செய்த மலராக
உன் கத்திகளைக் காதலுடன் வரவேற்றவாறு.

காதல் தனக்குள் பொதிந்த வன்முறைகளுடன் வெளிப்படுவதைக் கவிஞர், அக்காதல் வெளிப்படும் அவசர உணர்வின் வேகத்துடனேயே வெளிப்படுத்தியிருக்கிறார். எல்லாவற்றையும் புறக்கணித்து வெளிப்படுத்துவதிலேயே வேகமாய் இருக்கும், காதல். வன்முறைக்கான தடங்கள் இடம்பெற்றிருக்கும் இடங்களைப் பாருங்கள்! ‘உதிரத்தின் சுவையோடிருந்தது / அந்தக் கூடல் / என்னைக் குத்திய சிலாம்புகள் / பிடுங்கப்படாமலிருந்தன’

அடுத்து, ‘முத்தங்களால் / மாறி மாறித் தாக்கிக் கொண்டோம் / ஒருவரையொருவர்’.

தொடர்ந்து, கொன்ற கோழியிறகுகளைப் / பிய்த்தெறிவது போல் / என் ஆடைகளை. / நாம் தழுவத் தழுவ / அவை நழுவிவிட விரும்பினேன் / தானாகவே.’

’உன் கத்திகளைக் காதலுடன் வரவேற்றவாறு.’ என முடிக்கிறார்.

தன் நிராசைகளைத் தொடர்ந்து பதிவு செய்தலையே தன் விடுதலைக்கான வழியாகக் கொண்டிருக்கிறார் உமா மகேஸ்வரி. இதற்காகத் தன் நிராசைகள் என்னவென்று கண்டறியும் அயரா பணியையும் தொடர்கிறார். இவை, எந்தவொரு மனித ஆளுமை பயிற்சி ஏட்டிலும் பட்டியல் பெறுவதில்லை. ஏனெனில், இவை சுயத்தின் நதியில் தீவிரமான தொடர் நீச்சலால் கண்டறியப்படுபவை. தனது தனிமையிடத்தையும் தனிமைத்துவத்தையும் அவர் கண்டு அடையும் மொழி, சீரிய அழகியலையும் பெண்பாற் விசனங்களையும் கொண்டவை. புற உலகத்தைப் புறக்கணித்து, தன்னை அக உலகத்தின் சிலந்தியாக்கிக் கொண்டிருப்பவை. மனதின் இடுக்கில் இழைகள் விரித்துக் காத்துக் கிடப்பவை!

புல்

விருட்சங்கள்
விரிந்து கிளைக்க
கொடிகள்
பந்தலைப் பற்றிப் படர
புதர்கள்
போக்கின்றி அடர –
மிதிபடுகிறது; நசுங்குகிறது;
நீரற்று வாடுகிறது;
எனினும் எழுதுகிறது
பசுமையின் வரியைத்
தனியாக –
ஒற்றைப் புல்.

----------------------------------------------------------------------------------------------

சிறு குறிப்பு: மதுரையில் பிறந்து ஆண்டிப்பட்டியில் வசித்து வரும் உமா மகேஸ்வரி ஆங்கில இலக்கியத்தில் பட்ட மேற்படிப்புப் பெற்றவர். ’நட்சத்திரங்களின் நடுவே’ (1990), ‘வெறும் பொழுது’ (2002), ‘கற்பாவை’ (2004) மற்றும் ‘இறுதிப் பூ’ (2008) ஆகிய கவிதைத் தொகுப்புகளைப் படைத்துள்ளார். கவிதை தவிரவும் சிறுகதை மற்றும் நாவல் வடிவங்களிலும் தீவிர ஈடுபாடு கொண்டு நூல்களைப் படைத்திருக்கிறார்.

http://koodu.thamizhstudio.com/thodargal_14_8.php


Tuesday, April 5, 2011

வலது புறம் செல்லவும் - 2



வலது புறம் செல்லவும் - 2


இயக்குனர் அகத்தியன்04-04-2011, 23.58 PM

கடவுளிடம் அவரின் உதவியாளர்கள் வந்து நின்றார்கள். "என்ன?’’ என்று கேட்டார். பூமியில் ஒருவன் ``போதை’’ என்பதையும் ``குடி’’ என்பதையும் நியாயப்படுத்தி எழுதிக் கொண்டிருக்கிறான் என்றனர். கடவுள் ஒரு தேவதூதனை அழைத்தார். எழுதுபவனிடம் சில குறிப்புகள் கொடுத்து விட்டு வா என்று பணித்தார். தேவதூதன் கொடுத்த குறிப்புகள்.

ஒரு பெண்ணின் சகோதரன் எப்பொழுது தன் நண்பர்களுடன் அமர்ந்து மதுவருந்தினாலும் கொஞ்சம் போதை ஏறியவுடன் தன் நண்பர்களிடம் சவால் விடுவது ``என் தங்கச்சிய விட ஒரு செம பிகரை காட்டு பாக்கலாம்’’. யாரோ ஒரு பெண்ணைப் பார்த்து பரவசப்படும் ஆணைப் போல் அவன் தன் தங்கையை வர்ணிப்பான். ஒருமுறை நிகழ்ந்தது அடிக்கடி நிகழ்ந்ததால் சீரியசான விஷயம் காமெடி ஆகிப் போனது. ஆம். கடைசியில் அது வடிவேலு அர்ஜூன் நடித்த ஒரு திரைப்படத்தில் காமெடியும் ஆகிப்போனது.

மதுவருந்தும் ஓரிடத்தில் அறிமுகமில்லாத இருவர் எதிரெதிரே அமர்ந்திருந்தனர். ஒருவன் சோகமாக இருக்க மற்றவன் காரணம் கேட்டான். சோகமாக இருந்தவன் மெல்ல குடும்பப் பிரச்சினை என்றான். பேச்சு நழுவி குடும்ப உறுப்பினர்களை பற்றிய குறைகளை பட்டியல் இட்டது. சோகமாக இருந்தவனின் மனைவி பட்டியலில் முதலிடம் வகித்தாள். அடுத்தவனுக்கு இவனின் குற்றப்பத்திரிகையால் இவன் மனைவி மேல் அதீத கோபம். போதை கொஞ்சம் தலைக்கேற, சோகமானவன் அழ, மற்றவன் ``கவலைப்படாதே சகோதரா, உன் வீட்டுக்கு வந்து அவளை நான் தூக்கிப் போட்டு மிதிக்கிறேன்’’ என்றான்.

"அந்தத் தேவடியாளுக்கு எவ்வளவு திமிரு’’ என்றான். முதலாமவன் "அதையும் சொல்லிட்டேனா’’ என்று அழுதான்.

அந்த தேவதூதன் முதலில் இந்த இரண்டையும் சொல்லிவிட்டு கூட்டமாய்க் குடிப்பதும் முன்பின் தெரியாதவர்களோடு குடிப்பதும தேவையா என்று கேட்டார். நல்லவேளை குடிப்பது தேவையா என்று கேட்கவில்லை.

கொஞ்ச நாள் முன்பு Drink and Drive பிடித்துக் கொண்டிருந்தார், ஒரு காவலர். இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞன் சோதனைக்கு உட்படுத்தப்பட்டான். காவலர் பக்கத்தில் இருந்த வாழைப்பழம் விற்பவரை அழைத்து அவர் முகத்தில் ஊதச் சொன்னார். மறுநாள் வாழைப்பழம் விற்பவரைச் சந்தித்து காரணம் கேட்டபோது 'காவலர் மதுவருந்தி இருந்தார், அதனால் வாடை தெரியாது என்பதால்', என்றார். இரவு நேரக் காவலில் காவலர்களை ஊதச் சொல்லி யார் கேட்பது.. இதைச் சொல்லிவிட்டு அந்த தூதன் சொன்னது "வாகனங்களை ஓட்டும்போது நாம் குடிக்காமல் இருந்தால் அவர்களை ஊதச் சொல்லலாம். சட்டத்துக்கு உட்படுத்தலாம்..’’

Assignment, sketch இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் மதுவுக்கும் உள்ள தொடர்பு உங்களில் யாருக்காவது தெரியுமா? அசைன்மென்ட் என்பது ஒரு காரியத்தைச் செய்ய ஒருவரிடம் தருவது. ஸ்கெட்ச் என்பது வரைபடம். இது நாம் அறிந்த அர்த்தங்கள். Oxford Dictionary Assignment என்பதற்கு "A task or piece of work that somebody is given to do usually as part of their job or studies” என்றும் The act of giving something to somebody என்றும் சொல்கிறது. Sketch என்பதை "a simple picture that is drawn quickly and does not have many details” என்றும், A short funny scene on television in theater என்றும், a short report of story that gives only basic details about something என்றும் சொல்கிறது. இப்பொழுது தமிழகத்தின் நடைமுறையில் இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் என்ன அர்த்தம் என்று பார்த்து விடுவோம்.

Assignment என்பது ஒருவரை கொலை செய்ய ஒருவரிடம் ஒப்படைக்கப்படும் வேலை.

Sketch என்பது அந்த வேலையை ஏற்றுக் கொண்டவர் தன் உதவியாளர்களிடம் எப்படி எங்கு எப்பொழுது அந்த வேலையை, அதாவது கொலையை நிகழ்த்துவது என்று திட்டமிட்டுக்கொடுப்பது.

இந்த Assignment and sketch க்கும் மதுவுக்கும் என்ன தொடர்பு? ஒருவரைக் கொலை செய்யவேண்டும் என்று வன்முறைக் குற்றவாளியை (Rowdy) ஒருவன் அணுகும்போதே இருவருக்கும் இடையில் மதுவே முதலிடம் பெறுகிறது. அந்த வன்முறைக் குற்றவாளி தன்னுடன் இருப்பவர்களை அழைத்து Sketch போடும்போது மது தலைவிரித்தாடுகிறது. இந்த ஸ்கெட்ச் என்பதே ஒரு வெள்ளைத்தாளில் அந்த வன்முறைக் குற்றவாளி பென்சிலால் வரையும் கோடுகள். யார் கொலை செய்யப்பட வேண்டுமோ அவரது வீடு ஒரு கோடு. அவர் காலையில் நடைப் பயிர்ச்சி செய்பவர் என்றால் அடுத்த கோடு. இப்படி அவரின் அன்றாட நடவடிக்கைகளுக்கு கோடுகள் போடப்படும். நாள் நிர்ணயிக்கப்படும். பதினேழு முதல் இருவது வயது வரை உள்ள இளைஞர்கள் அழைக்கப்படுவர். திட்டம் விவரிக்கப்படும். கொலையை அரங்கேற்றுவதற்கு முதல் நாளிலிருந்துகட்டிங் கொடுக்கப்படும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு கட்டிங். மெல்ல மனமும் உடலும் மதுவிற்கு உடன்படும். பாலுறவு மனதில் மென்மையை விதைக்கும். எனவே பாலுணர்ச்சி தோன்றா வண்ணம் போதையில் வைக்கப்படுவர். எங்கு, எப்பொழுது, எப்படி, யார் நிறைவேற்றுவது, யார் காரில் இருப்பது, யார் பைக்கில் இருப்பது, எப்படி இருப்பிடம் சேர்வது என்றெல்லாம் சொல்லிக் கொடுக்கப்பட்டு கொலை நிகழ்வதற்கு அரைமணி நேரமோ அல்லது ஒரு மணி நேரமோ முன்பாக அளவில்லா மது ஊற்றிக் கொடுக்கப்படும். மதுவின் ஆளுமையில் மனிதாபிமானம் மறந்து போனால்தான் கொலையை நிகழ்த்த முடியும். இந்த வகையில் மது நிறையக் கொலைகளைச் செய்திருக்கிறது. துப்பாக்கி, அரிவாள் போன்று மதுவும் ஒரு ஆயுதமாகிப் போனது இன்று.

பரிதாபத்திற்குரிய காவலர்களுக்காக நாம் சில நிமிடங்கள் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும. நம் அண்ணனோ, அப்பாவோ அந்த இடத்தில் இருந்தால்தான் நம் பிரார்த்தனையின் அர்த்தத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். இந்தப் பிரார்த்தனைக்கான காரணம் ஒரு சொல். என்கவுன்டர்.

வன்முறைக் குற்றவாளி சமூகத்தில் ஊடுருவி பாலியல் குற்றங்களில் ஈடுபடும்போதுதான் மக்கள் தெருவுக்கு வந்து போராட ஆரம்பிக்கின்றனர். அதிலும் மலர்களைக் கசக்கும்போதுதான் செடிகள் வேர்பிடுங்கிக் கொண்டு வீதிக்கு வருகின்றன. தவிர்க்க இயலாமல் சமூகத்தின் அமைதிக்காகவோ வன்முறைக் குற்றவாளிகளை உளவியல் ரீதியாக செயலிழக்கச் செய்வதற்காகவோ என்கவுன்டரை கையிலெடுக்கவேண்டிய நிர்பந்தத்திற்கு மறைமுக வாய்மொழி உத்தரவுகளால் காவல் நிர்வாகம் உட்படுத்தப்படுகிறது.

இங்கே மது என்ன செய்கிறது? யாரோ ஒருவர் கைகாட்டப்படுகிறார். அவர்தான் அதை நிறைவேற்ற வேண்டும். அவர் நமது அண்ணனாக இருக்கலாம். அப்பாவாக இருக்கலாம். சராசரி காவலர்மேல் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு அவர் உட்பட்டிருந்தாலும் துப்பாக்கியை எடுத்து பட்டென்று போட்டுத்தள்ளும் சினிமா வில்லன் அல்ல அந்தக் காவலர். உத்தரவை நிறைவேற்றியாக வேண்டும். இங்கும் மனிதாபிமானத்தைக் கொல்ல மதுதான் பயன்படுகிறது. ஒரு பொம்மையைப் போல் துப்பாக்கியை எடுத்து, ஒரு பொம்மையைச் சுட்ட உணர்வுடன், காயப்பட்டு மருத்துவமனையில் இருக்கும்போது சுட்டது மனிதனா? மதுவா? என்று குழம்பும் அந்தக் காவலருக்காக பிரார்த்திப்போம்.

இதுவரை குடித்துவிட்டு தங்கையையோ, அக்காவையோ, அம்மாவையோ கற்பழித்ததாக செய்திகள் இல்லை. மகளைக் கற்பழித்த தந்தை பற்றி படித்திருக்கிறேன். மகளுடன் குடும்பம் நடத்திய தந்தையைப் பார்த்திருக்கிறேன். ஒன்று விட்ட சகோதரனும், சகோதரியும் காதலித்து திருமணம் செய்து கொள்ள உறவுகளை விட்டு ஓடிப்போனதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். சகோதரியுடன் உடலுறவு கொண்ட அண்ணனைச் சந்தித்திருக்கிறேன். இதெல்லாம் எதற்காக? ஒரு பெண்ணை அல்லது ஒரு குடும்பத்தலைவியை குறி வைக்கும்போது மதுவைக் கையிலெடுக்கின்றனர். ஒருவனோ, இருவரோ, ஒரு குழுவோ மதுவருந்தி ஒரு பெண்ணைக் கற்பழிப்பது மதுவின் செயல் திறமையாக மிளிர்கிறது. ஆனால் பாலுணர்வின் தேவைக்காக பெண்கள் மதுவைக் கையிலெடுக்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடியுமா?

இந்தியாவின் எந்த சுற்றுலாத்தலமாக இருந்தாலும் சரி, ஆக்ரா, நைனிடால், குற்றாலம், ஊட்டி, கொடைக்கானல் இப்படி உணவு உண்ண ஒரு உணவகத்தில் அமர்ந்தால் ஒரு பையன் வந்து நிற்பான், வயதைக் கேட்டால் 18 என்பான். ஒரு 14 அல்லது 15ல் இருப்பான் சற்று 10 ல் இருந்தும் ஆரம்பிக்கும். மிரட்டி வயது கேட்டால் ஒரு பெரியவர் வருவார்.. அறைகளில் தங்கும்போதும் இதுதான்.

அறைகளில் தங்கும் விருந்தினர்கள் மதுவருந்திவிட்டு கொஞ்சம் மிச்சம் மீதி இருந்தால் வேண்டாம் என்று விட்டு விட்டு வீடு திரும்ப.. அந்த சிறார்களால் கொஞ்சம் கொஞ்சமாக மது சேகரிக்கப்படும். வாரவிடுமுறையில் இரண்டு இரண்டு பேராகவோ நான்கு எண்ணிக்கையின் அடிப்படையிலோ சேகரிக்கப்பட்ட மதுவை எடுத்துக் கொள்கின்றனர். மது அருந்தியவுடன் அந்த சிறார்களுக்கு வடிகாலாக ஆணுக்கு ஆண் என்று ஆகிவிடுகிறது.

சாதாரண உணவு விடுதியில் பத்து வயதுப் பையன்களை பாத்திரம் தேய்ப்பதற்கும் மேலே குறிப்பிட்ட வேலைகளுக்கும் சேர்த்துக் கொள்கின்றனர். அவர்களது தங்குமிடம் பெரும்பாலும் ஓட்டலில் சமையல் கூடத்தின் மேலே அமைந்து விடுகிறது. வெப்பம் தாங்க இயலாது, பத்திற்கும் பதினைந்துக்கும் இடைப்பட்ட சிறுவர்கள் நாடுவது பகல் நேரத்தில் பூங்காக்களை. நான்கு மணி நேரமோ மூன்று மணி நேரமோ பூங்காவில் தூங்க வரும் அந்த உழைப்பாளிகளுக்கு உழைக்க மதுவும் கொடுத்து, அதுவும் கொடுப்பது கொடுமையான விஷயம்.

பூங்காக்களில் தூங்கும் இவர்கள் வசதி படைத்த பெண்மணிகளால் கவனிக்கப்படுகிறார்கள். பரிவு காட்டப்படுகிறார்கள், வீட்டிற்கு வா என்று அழைக்கப்படுகிறார்கள். சாப்பிடு என்று அரவணைக்கப்படுகிறார்கள். கூல் டிரிங்ஸ் என்று லெமநேட் கலந்த வோட்காவோ அல்லது ஜின்னோ அருந்த வைக்கப்படுகிறார்கள். ஒரு பெண்ணால் பாலூட்டி வளர்க்கப் பெற்று மடியில் கிடந்தவன், இன்னொரு பெண்ணால்.........


more: http://koodu.thamizhstudio.com/thodargal_16_2.php



Wednesday, March 23, 2011

தழும்பு... - கலாப்ரியா



தழும்பு...

கலாப்ரியா

வல்லிக்கண்ணன் சொல்வது போல, ரொம்ப நாள் கழித்துப் பார்க்கையில் சொந்த ஊரும் தெருக்களும் இன்னும் சுருங்கி இருந்தது. இந்தப் பகுதிக்கு வந்து எவ்வளவோ காலம் ஆகி விட்டது. பரப்பான சாலை அது. எதிர் எதிராக இரண்டு தெருக்கள் சாலையிலிருந்து பிரிகின்றன. சாலையில் தாருக்கு மேல் தார் விரித்து விரித்து, நல்ல உயரமாகி இருந்தது. தெருக்கள் தாழ்ந்திருந்தன. ஒரு தெருவின் முனையில் நாங்கள் படித்த ஆரம்பப் பாடசாலை. எதிர்த் தெருவின் முனையில் இருந்த பூடம், அதன் மேல் போகும் வரும் வாகனங்கள் இறைக்கும் தூசி, அதன் மேல் எண்ணெய், மறுபடி தூசி என்று படிந்து படிந்து அது என்ன உருவம் என்று தெரியாமல் கழுக் மொழுக்கென்றிருந்தது. அந்தப் பூடமும் அதைச் சுற்றிய சிறு காலி இடமும் அப்படியே இருப்பதால் அந்தப் பகுதி மட்டும் பழைய அகலத்துடன் இருப்பது போலிருந்தது.

பூடத்தையே பார்த்து, அது என்ன பூடம் என்று நினைவு படுத்திக் கொண்டே வந்தவன், நாய் குரைப்பதையே கவனிக்கவில்லை. நாய் எதிர்த்தாற் போலிருந்த சற்றே உயரமான படிகள் கொண்ட வீட்டிலிருந்து குரைத்துக் கொண்டிருந்தது. நல்ல பெரிய அல்சேஷன் வகை. அந்தப் பூடத்தின் அருகேயிருந்த பெட்டிக் கடையில்தான் பள்ளிக்கூடம் இடைவேளை விடும்போது ஓடி வந்து ஏதாவது பண்டம் வாங்குவது, காலணா அரையணாவுக்கு தாய்க்குப்பின் தாரம் எம்.ஜி.ஆர்-பானுமதி, நேரு மாமா-குருஷ்சேவ், படங்கள் வாங்குவது (ரவி அன் கோ படங்கள்), அந்நேரம் கடை பரபரப்பாக இயங்குவது என எல்லாவற்றையும் மனதில் ’ரீவைண்ட்’ பண்ணிப் பார்த்துக் கொண்டேயிருக்க என்னை அறியாமலேயே, நான் அந்தப்படிக்கட்டின் அருகே போயிருந்திருக்கிறேன். அது கத்திக் களேபாரம் பண்ணியதில் வீட்டின் வெராந்தாவில் இருந்த பூந்தொட்டிகள் உருண்ட சத்தம் கேட்டு, “யார் அங்கே” என்று கேட்டபடியே ஒரு பெண் உள்ளேயிருந்து வந்தாள்.....நல்ல வெண்மையான சேலையும் முழங்கை வரை நீண்ட உடலைப் பிடித்த ஜாக்கெட்டும் அணிந்திருந்தாள். தலை பின்னப்படாமல், முடி முகத்தை ஒட்டி வழிந்து, இரண்டு தோளிலும் ஏகத்திற்கு பரந்து கிடந்தது.. கொஞ்சம் ஆண் தன்மையுள்ள முகம். பொட்டு இல்லாதது நெற்றியின் அகலத்தை இன்னும் அதிகமாக்கிக் காட்டியது. எல்லாம் ஒரு வினாடியில் மனதில் பதிவாகிவிட்டது....”ஆகா இது பெர்னி அக்கா மாதிரி இருக்கே..... “ என்று தோன்றியது...மனக்குறளி சட்டென்று ”அக்காவா....!” என்று தன்னையறியாமலே கேட்டுக் கொண்டது.

பெர்னியின் பெயர் ’பெர்னாடின்’ என்பதன் சுருக்கம் என்பார்கள். அப்போது அர்த்தமெல்லாம் தெரியாது.என்னவோ. பெயருக்கேத்த தைர்யசாலி என்பார்கள்

கல்லூரி என்.சி.சியில் எல்லாம் அவள் உண்டு. பஸ்ஸ்டாண்டில் அவள் நிற்கிறாள் என்றால்...கொஞ்சம் அடக்கி வாசிக்கணும்..இல்லேன்னா அவள் வாயில் விழ முடியாது என்பார்கள். நல்ல வேளை அவள் எங்களை விட மூத்த செட். அநேகமாக எங்கள் புறாக்கள் முதலாண்டோ இரண்டாமாண்டோ படிக்கிற காலத்தில் அவள் இறுதியாண்டை முடித்து விட்டாள்.எப்போதும் சேலை கட்டியிருப்பாள். அப்போதெல்லாம் லோஹிப் சாரி தமிழ் சினிமாவை லேசாக எட்டிப் பார்த்திருந்த நேரம். அந்நேரத் தமிழ் நடிகைகள், லோஹிப் கட்டினால் இடுப்பின் கருப்புத் தழும்பு மேக்கப்பை மீறித் தெரியும்.. ராஜ்யஸ்ரீ போன்ற இந்தி நடிகைகளை லோஹிப்பில் பார்க்கவே, ’ஷெனாய்’, ’பிரம்மச்சாரி,’ போன்ற படங்களை விரும்பிப் பார்ப்போம்.ராஜ்யஸ்ரீ மேல் அப்படியொரு பைத்தியம். அற்புதமான நடிகையும் கூட. அவர் பிரபல டைரக்டர் வி.சாந்தாராமின் மகள். ‘கீத் கயா பத்தரோன் நே’ (கற்கள் கவி பாடின-என்று தலைப்பை சரியாக மொழிபெயர்த்து குமுதத்தில் பிரமாதமான விமர்சனம் எழுதியிருந்தார்கள். குமுதத்தில் சிறப்பாக எழுதுவதென்பது அந்தக்காலத்தில் ரொம்ப அபூர்வம்.)

http://video.easybranches.com/video/4INDBRQVtuM/Geet-Gaya-Pattharon-Ne-from-Geet-Gaya-Pattharon-Ne-1964.html

ராஜ்யஸ்ரீ ஒரு அமெரிக்க மாப்பிள்ளையை –கிரிகோரி சப்மென் என்று நினைவு-மணந்து கொண்டு சினிமாவுக்கு முழுக்குப் போட்டதற்கு தென்கோடியில் நாங்கள், கறுப்பு பேட்ஜ் அணிந்து, துக்கம் அனுஷ்டிக்காத குறைதான்.அந்த திருமணமும் ரொம்ப நாள் நிலைக்கவில்லை என்பதற்கு அதிக சோகம் கொண்டோம், ”ஏன் நாமெல்லாம் இல்லையா”, என்கிற மாதிரி. பெர்னிக்கு ரஜ்யஸ்ரீயின் சாயல் என்று ஞானையா சொல்லுவான். அவன் அவளது வீட்டுப்பக்கம். அது அவ்வளவு உண்மையில்லை என்றாலும் பெர்னியின் உடல் ஒரு சிற்பம்தான். சேலையும் .... இடுப்பை விட்டு இறங்கட்டுமா என்று கேட்பது போல் அழகாகக் கட்டியிருப்பாள்.

பெர்னியின் அப்பா அருமையாக வயலினும், ஆர்கனும் வாசிப்பார். கொஞ்சம் ஹிட்லர் மீசையுடன் சற்றே கனமான நாகேஷ் போல இருப்பார். நாங்கள் “ஏலே, காக்கும் கரங்கள் நாகேஷ்...” என்று ஞானையாவிடம் கேலி செய்வோம்.. காக்கும் கரங்கள் படத்தில் ”திருநாள் வந்தது தேர்வந்தது..ஊர்வலம் போகின்ற நாள் வந்தது.. ஓட முடியாமல் தேர் நின்றது.....” என்று பி.சுசிலாவின் பிரமாதமான பாட்டு வரும் அதில் நாகேஷ் வயலின் வாசிப்பது போலவும் வரும்... ஞானையா, .”போடா அவர் சர்ச்சுல் வாசிச்சு நீங்க கேட்கணும்”, என்பான். நாங்கள் அதற்கும் கேலி செய்வோம். யாரிடம் என்ன பந்தயம் கட்டியிருந்தாளோ., பெர்னி ஒரு நாள் பஸ்ஸ்டாப்பில் வைத்து ஜம்மென்று தம் அடித்துக் கொண்டிருந்தாளாம்.. இதைக் கேள்விப்பட்டு பஸ்டாண்டிற்கு ஓடிப் போய்ப் பார்க்கப்போனோம்... அதற்குள் பஸ்ஸே போயிருந்தது.... அவள், அப்பாவுக்கு வளர்ப்புப் பிள்ளைதான்.இதைக் கேள்விப்பட்டு அவள் அப்பா ரொம்ப வருத்தப்பட்டார் என்றும் அவர், இரவு நெடுநேரம், எதுவும் பேசாமல் வயலின் வாசிக்க அவள் மண்டியிட்டு மன்னிப்புக் கோரினாள் என்றும் மறுநாள் வந்து ஞானையா சொன்னான். அப்போதும் நாங்கள் “ யாரு, காக்கும் கரங்கள் நாகேஷா, நீ தானலே சிகரெட்டே வாங்கிக் கொடுத்தியாம் ”என்று கேலி செய்து சிரித்தோம். ஞானையாவுக்கு கோபமே வராது. ஆனால் ஒரு நண்பனின் கல்யாண வரவேற்பிற்கு-அவனுக்குத்தான் எங்கள் குழுவிலேயே முதலில் திருமணம் நடந்தது, அப்பாவும் மகளும் வயலின் பெட்டியுடன் வந்திருந்தார்கள்.அவர் மணமக்களுக்கு கல்யாணப் பரிசாக அரை மணி நேரம் வயலின் வாசித்தார்.... அன்று பிரபலமான கிளாரினெட் கச்சேரி வேறு இருந்தது. கிளாரினெட் வாசிப்பவருடன் இணைந்தும் அவர் வாசித்தார், ஜுகல் பந்தி போல. வாசித்து முடித்துப் போகையில் நான் கவனித்தேன், கிளாரினெட்காரரின் கண்ணில் துளிர்த்த லேசான கண்ணீரை..ஆறு ஏழு வருட இடைவெளியில் நாங்கள் சற்று எங்கள் கேலிகளைக் குறைத்திருந்தோம். உண்மையிலேயே அற்புதமான வாசிப்பில் நெகிழ்ந்து போயிருந்தோம்.. நெகிழ்ச்சியை இரவில் எப்படிக் கொண்டாடினோம் புது மாப்பிள்ளை செலவில் என்பது சொல்லாமாலே தெரிந்திருக்கும்.

பெர்னியைத் திடீரென்று பார்த்ததும் ஆச்சரியத்தில் பேசாமல் நின்றேன். அவளும், “ ஏய் நீங்க...நீ... ஸ்டீபன் ஞானையா சேக்காளியில்லா... “ என்றாள். தெருவில் ஒன்றிரண்டு பேர் நின்று இதைப் பார்க்க ஆரம்பித்திருந்தார்கள். நாய், குரைப்பை நிறுத்தியிருந்தாலும், இன்னும் அடங்கியபாடில்லை. அதை அடக்கியவாறே தெருவில் நின்றவர்களை “ என்ன ...?” என்று பார்வையாலே கேட்பது போல் பார்த்து விட்டு, ” வா உள்ளே” என்றாள். நான் எங்களது வீட்டின் மாடிக் கூரைக்கு பனங்கம்புகள் வாங்குவதற்காக அந்தத் தெருவில் ஒருவரைப் பார்க்கப் போய்க் கொண்டிருந்தேன். ஓடு போட்ட பழைய மாடி வீடு, அதன் பனங்கைகள் இற்று விழ ஆரம்பித்திருந்தன....”ஒன்று அதை மாற்ற வேண்டும் அல்லது ஓட்டுக் கூரையைத் தட்டி விட்டு செண்ட்ரிங் போடு” என்று அதை மேற்பார்க்கும் உறவினர்கள் வற்புறுத்தியதாலேயே கிடைக்காத லீவை எடுத்துக் கொண்டு வந்திருந்தேன்.

இன்னும் அதே துணிச்சலான தொனியும் ’அசால்ட்டான’ நடையும் போகவில்லை போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டே நேரமாகிறதே என்கிற மாதிரியில் தயங்கி நின்றேன். அவள் ”என்ன...? “ என்று மறுபடி அதிகாரமான தொனியில் கேட்டதும்...கால்கள் மரியாதையாக உள்ளே சென்றன. இல்லையென்றல், ”போகிறாயா.. போ...”என்று கதவைச் சாற்றினாலும் சாற்றி விடுவாள். .நாய் சற்று அடங்கி வாலை ஆட்டியது,. “பார் ’டார்லின்’ சமாதானமாகி விட்டான்....நீ தாராளமாய் வரலாம் என்கிறான்... வா...” என்று சொல்லியபடியே அதை அவிழ்த்து விட்டாள். வீட்டினுள் சென்றாள்.அந்த வீடு ஏற்கெனவே எங்களுக்குப் பழக்கமான வீடுதான். நல்ல பெரிய வீடு. முன் வெராந்தாவில் உயரமான இரண்டு தூண்கள் மட்டும் இருக்கும்.இப்போது அது உயரத்திற்கு பெரிய மூங்கில் அழி அடித்து க்ரீப்பர்கள் எல்லாம் படர்ந்திருந்தது. நிறைய சிமெண்ட் தொட்டிகளில், க்ரோட்டன்ஸ், பின்சார்வெல்ஸ், பெரணீ, ரோஜா என்று செடிகளாக இருந்தன.ஆனால் அவையெல்லாம் சமீபமாகப் பராமரிக்காமல் இருப்பது போலிருந்தது.

பூபாலனின் ஆச்சி வீடு அது. அவனது ஆச்சி மட்டும் அவ்வளவு பெரிய வீட்டில் தனியே இருந்தாள். கூடமாட ஒத்தாசைக்கு பண்டாரம் பிள்ளை என்கிற தவசுப்பிள்ளை மற்றும் மேனேஜர். எல்லா வரவு செலவுகளும் அவர்தான். காலணா திருட மாட்டார். கல்யாணமும் பண்ணிக் கொள்ளவில்லை. அவருக்கு நான் அறியவே முப்பது வயதுக்கு மேலிருக்கும். அதாவது என்னையும் பூபாலனையும் விட இருபது வயதாவது கூட இருக்கும். ஆனால் எல்லோரும் அவரை நீ, வா, போ என்று ஒருமையில்தான் கூப்பிடுவார்கள். ஆச்சி கூப்பிடும் பழக்கம். அவரும் ஒன்றும் சொல்ல மாட்டார். எங்கே போனாலும் மடித்துக் கட்டிய எட்டு முழ வேட்டி மட்டும்தான். சட்டை மேல்த்துண்டு எதுவும் கிடையாது. கல்யாண வீட்டிற்கு போகும்போது மட்டும், போனால் போகிறதென்று ஒரு கதர்ச் சட்டை போட்டுக் கொள்வார்.அதையும் எப்படா கழட்டுவோம் என்கிற மாதிரி ஒரு தவிப்பு தெரியும். சில பெரியவர்கள், ”வே பண்டாரம் பிள்ளை, என்ன இன்னும் சட்டையோட அலையுதீரு, கல்யாணம் முடிஞ்சு மாப்பிள்ளை பொண்ணுக்கு நாலாம் நீர் சடங்கு நடக்கே..” என்று கேலி செய்வார்கள்.” எங்கெ ஐயா இன்னும் பொம்பளை பந்தியே முடியலையெ..நீங்க அதுக்குள்ளேயே ராத்திரி ஆன மாதிரி பேசுதீங்களே” என்று சிரிப்பார்.

பட்டாசல் இப்பொழுது டிராயிங் ரூம் ஆகி இருந்தது. நடுவில் சோஃபா செட், டீப்பாய், அழகான கண்ணாடித்தட்டில் கொஞ்சம் பழங்கள், டீப்பாய்க்கு கீழே பழைய ஆங்கில தினசரிகள், ஒரு ஆஷ்ட்ரே, என்று ஜாடை மாறி இருந்தது.முன்பு ரேடியோ கிராம் இருந்த இடத்தில் இப்பொழுது ஒரு டி.வி. பூபாலன் அம்மா வீடு அதற்கு இரண்டு தெரு தள்ளி இருந்தது.. பூபாலன், அதாவது பூரண பாலசுப்ரமணியன் ஆள் நல்ல வளர்த்தி, வீட்டில் அம்மாச்சி செல்லம். யாருக்கும் அடங்க மாட்டான். அவனது ஆச்சி பெரிய பண்ணையார் வீட்டு வாரிசு.எல்லாமே அவள் சொத்து என்பார்கள். அவன் ஆச்சி வீட்டிலேயேதான் இருப்பான். பத்து படிக்கும் போதே ஆச்சி அவனுக்கு, புல்லட் பைக் வாங்கித் தந்து விட்டாள். அவன் கேட்டானென்று குதிரை வாங்குவதற்கு பண்டாரத்திடம் சொல்லி அனுப்ப, அவர், விவரம் தெரியாமல், பாலனின் அப்பாவிடம் போய் நின்றிருக்கிறார். அவர் நேரே ஆச்சியிடம் வந்து, ”செல்லம் கொடுக்கதுக்கும் அளவில்லையா..... அத்தையம்மா” என்று சத்தம் போட்டுவிட்டுப் போய் விட்டார். அவர், வராதவர் வந்ததும், முகம் பார்த்துப் பேசாதவர் பேசியதும் ஆச்சி சற்று ஆடிப் போய்விட்டாளாம். ”ஏய், பண்டாரம் பட படங்கு, பானைச்சட்டி குடுகுடுங்குன்ன மாதிரி அவுக கிட்டயா போய் சொல்லுவே....அவுகளும்தான் எதுக்கு இப்படிக் குதிக்காக, ஏன் எங்க வீட்டில குதிரையும் சாரட்டும் இருந்ததில்லையாமா...” என்று அங்கலாய்க்க ஆரம்பித்திருக்கிறாள். எல்லா விஷயமும் கேள்விப்பட்டு பாலனின் அம்மா தன் அம்மாவை சமாதானப் படுத்த, போட்டதை போட்ட மாதிரி கைச் சோலி எல்லாம் விட்டுவிட்டு ஓடியே வந்து விட்டாளாம்.எல்லாமே பாலன் சொல்லிச் சிரிக்கிற, பெருமையடித்துக் கொள்கிற கதைகளில் ஒன்று.

நான் பெர்னியை நிமிர்ந்து பார்க்காமல், குனிந்தே பார்த்துக் கொண்டிருந்தேன். பேசவேயில்லை. அவளாகத்தான் ஆரம்பித்தாள் “ ஏய், அம்பிகாபதி, உங்க ஆளு அதாம்ப்பா உங்க அமராவதி கொஞ்ச நாள் இந்தா எதிர் வீட்டிலதான் குடியிருந்தா தெரியுமா.....””ஆமா இப்ப பத்திரிக்கைகளிலெல்லாம் எழுதறியாமே.. நீ நோட்டில் எழுதி வச்சிருப்பியே அந்த மாதிரி, நீளமான கூந்தலுக்கே காவியம் உண்டுன்னு அது மாதிரி அவ சுருள் சுருளான தலை முடிதான் உன்னை கிறுக்கனா அலையவிட்டிருக்கு, ஒரு நாள் குற்றாலத்தில பார்த்தேன் ஐந்தருவில வச்சு, எல்லா அருவிகள்ளையும் குளிச்சுட்டு பிசாசு மாதிரி தலை விரிஞ்சு கிடக்க ஐந்தருவிக்கு வந்தா பாக்கணும்....., எனக்குத் தெரியும் நீயும் அங்கதான் எங்கேயாவது இருந்திருப்பேன்னு.. . ஆனால் தேட முடியலை, அன்னக்கி பாலன் ஏகமா குடிச்சுட்டு காரிலிருந்து இறங்கவே கஷ்டப்பட்டான்......” சொல்லும்போதே குரல் கம்மத்தொடங்கியது. வலது கையிலிருந்த பிறை நிலா வடிவத் தழும்பை இடது கையால் தடவ ஆரம்பித்தாள். அவளுக்கு இடுப்பிலும் இதே போல் ஒரு தழும்பு உண்டு.

ஞானையா ஒரு ப்ளஸ் டூ பிள்ளையை டாவடித்துக் கொண்டிருந்தான். அதை எப்படி கணக்குப் பண்ணினான் என்றே புரியவில்லை. என்னையும் அழைத்துக் கொண்டு அவள் வீடு இருக்கும் ஒரு தெருவில் ராத்திரி எட்டுமணி சுமாருக்கு கிழக்கும் மேற்குமாக அலைந்து கொண்டிருந்தான். அந்த தெருவின் முடிவில் ஒரு வாய்க்கால். ஸ்டாப் பெயரே வாய்க்கால்ப்பால ஸ்டாப்தான். இரண்டு தடவை அலைந்தாயிற்று. மூன்றாம் முறை போனால் “ஏல யாராவது கட்டி வச்சிராமலே...” என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு வீட்டிலிருந்து அந்தப் பெண் வெளியே வந்து உங்களுக்கு யாரைப் பார்க்கணும் என்று கேட்டது. அவளுக்கருகே ஒரு சேக்காளி .” இல்லை.... என் தங்கை.. குளோரின் ஒரு நோட்டு வாங்கி வரச் சொன்னாள்.....மனோ வீடு எது” என்று கேட்டான்..இதுதான் என்றது சேக்காளிப் பெண்.அதற்குள் அவளது சித்தி வெளியே வந்தாள். “ யாரப்பா தம்பி என்ன விஷயம்...” என்றதும் ஞானையா அதே கதையச் சொன்னான். அவள் ஒன்றும் சொல்லவில்லை. எனக்கு தொடை நடுங்கிக் கொண்டிருந்தது....”சரி கொடுத்து அனுப்பிட்டு வா என்றாள் சித்தி. அவள் ஒரு நோட்டைக் கொடுத்தாள்.”ஞாவகமா நாளைக்கி நோட்டைக் கொண்டு வரச் சொல்லிருங்க...”என்று சத்தமான சிரிப்புக்கிடையே சேக்காளிப் பெண் சொன்னது.

இரண்டு பேருக்குமே வெலவெலத்துப் போனது.நோட்டுக்குள் காதல் கடிதம் வேறு. நான் படிக்கிற முதல் காதல்க் கடிதம் அதுதான் என்று நினைக்கிறேன்.” இயற்கையெனும் இளைய கன்னி (மனோ), ஏங்குகிறாள் துணையை (ஸ்டீபன்) எண்ணி ....”என்று ஆரம்பித்து புகுந்து விளையாடி இருந்தது பெண். சித்தியின் கொடுமை பற்றி அங்கலாய்ப்பு வேறு. ஞானையாவுக்கு நோட்டை எப்படி திரும்பக் கொடுப்பது என்று ஒரே யோசனை. மறுநாள் அவனே எப்படியோ கொடுத்து விட்டான். இதில் வேடிக்கை, அந்தப் பெண்ணுக்குப் பதில் எழுத என்னிடம் கவிதைகள் கேட்டிருந்தான். நான் என் கவிதை நோட்டைக் கொடுத்து விட்டு, ஏங்கிக் கொண்டிருந்தேன். என் நோட்டைத்தான் பெர்னியிடமும் காட்டியிருக்கிறான், ஸ்டீபன். அவள் என்னை அழைத்து வா, பார்ப்போம் என்றாளாம்.”ஏய் யார் இந்தக் காதலன், வார்த்தையிலேயே தாஜ்மகால் கட்டியிருக்கிறான், ஆளைக் கொஞ்சம் காண்பி பார்ப்போம்“ என்றாளாம்.சொன்னதோடு சரி, நானும் நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு காத்திருந்தேன். அவளைச் சந்திக்க தைரியமில்லை. ஆனால் ஓரிரு முறை சந்தித்தேன். பெர்னியின் கண்ணில் கண்ணீர் துளிர்த்திருந்தது. அப்போதுதான் என் கண்ணில் பட்டது பூபாலனின் மாலையிட்ட படம். ஆகா, யாரோ சொன்னார்களே அவன் இறந்து போனதாக என்று நினைவு வந்தது.பக்கென்றிருந்தது வயிற்றுக்குள். பெர்னி இன்னும் தழும்பையே வருடிக் கொண்டிருந்தாள். அதில் தனக்குத்தானே அவள் எதையோ கண்டு கொண்டது போலிருந்தது. வருடுவதை நிறுத்திவிட்டு என்னைப் பார்த்தாள். எல்லாம் பழங்கதை என்பது போல சோகமான முறுவல் ஒன்று உதட்டில் நெளிந்தது. பழங்கதை என் நினைவில் ஆடியது அன்று திடீரென்றுதான் திருச்செந்தூர் போகலாம் என்று முடிவெடுத்தோம். பூபாலன் கார் எடுத்துக் கொண்டு வருவதாகச் சொல்லியிருந்தான். அநேகமாக எல்லோரும் வேலை தேடுகிற வேலையைத்தான் அப்போது பார்த்துக் கொண்டிருந்தோம்.அவனுக்கு வேலை பற்றியெல்லாம் ஒரு அவசியமும் இல்லை.நன்றாகத்தான் பழகுவான். ஆனாலும் ஏனோ ஒரு ஒட்டுதல் இருக்காது. எப்போதும் ஒரு பெட்டிக்கடை முன் நின்று அரட்டை நடக்கும். திடீரென்று வருவான். பைக்கில் அமர்ந்தபடியே, யாரிடமாவது, ”ப்ரதர் என் கணக்கில் ஒரு சிகரெட் வாங்குங்க” என்பான், ”அப்படியே உங்களுக்கும் வாங்கிங்க” என்பான். அதைக் கேட்கும்போது எனக்கெல்லாம் எரிச்சலாயிருக்கும். அவனே இறங்கி வாங்கிக் கொண்டாலென்ன என்றிருக்கும். அவன் நடவடிக்கை, கதையாடல் எல்லாமே இப்படித்தான் இருக்கும்.

பொதுவாக நான் அவனிடமிருந்து சற்று விலகியே இருப்பேன். காரை இன்னொருவன் எடுத்து வந்தான். நிறையப்பேர் சேர்ந்து விட்டதால், சிலரைக் கழிக்க வேண்டியதாயிற்று.சிலர் பஸ்ஸில் வருவதாகச் சொன்னார்கள் நானும் பஸ்ஸில் போகவே பிரியப்பட்டேன்.ஆனால் என்னைச் சிலர் காரில் வரச் சொல்லி கட்டாயப் படுத்தினார்கள்.சில அடல்ட்ஸ் ஒன்லி கதைகள் கேட்டுக் கொண்டே போகலாம் என்றோ என்னவோ. காரில் போகையில்தான் சொன்னார்கள், பாலன் பைக்கில் வரப்போவதாகவும் அவனுடன் யார் வரப்போகிறார்கள் என்பது சஸ்பென்ஸ் என்றும். எங்களில் சிலருக்கு பராபரியாக காதில் விழுந்திருந்த செய்திதான், பூபாலனும் பெர்னியும் நெருக்கமாயிருக்கிறார்கள் என்று. பெர்னியுடன் இரண்டு மூன்று பேரை நெருக்கமாக்கி பேச்சு அடிபட்டு அது மறைந்துவிட்டது. ஸ்டீபன், நாணிக் கோணி சமர்ப்பித்த ‘வேட்புமனு’வை நிராகரித்து....”எதற்கு எனக்கு, தலை மாட்டில் உட்கார்ந்து கதைப் புஸ்தகம் படிக்கப்போறியா...” என்று கிண்டலடித்து அனுப்பியதாக பாலனே சொல்வான்.

நாங்கள் பின் சீட்டில் அமர்ந்து கதை பேசிக் கொண்டு வந்தோம். பாதி வழியில் திடீரென்று பைக் ஒன்று எங்களை முந்தியது.பாலனும் அவளும்.. பாலனை இடுப்பைச் சுற்றிக்கட்டிப் பிடித்திருந்தாள். அப்போது பார்க்கையில் பாலனை விட சின்னப் பெண்ணாகத் தெரிந்தாள். திடீரென்று கார் அவர்களை முந்தியது. மறுபடி பாலன் முந்துவதற்கு முயற்சித்தான். கொஞ்ச நேரம் இந்த தொட்டுப்பிடி விளையாட்டு நடந்தது. சற்று நேரம் கழித்தே பார்த்தேன் திடீரென்று பாலன் காரை இடது கையால் தட்டியபடி கத்திக் கொண்டே வந்தான். யாருக்கும் புரியவில்லை.. இங்கே காருக்குள் சிகரெட் பற்றவைக்கும் முயற்சியில் எல்லோரும் தோற்றுக் கொண்டிருந்தார்கள்.என்ன நடந்தது என்று நிதானிக்கும் முன் அவளை அவன் கீழே தள்ளினான். அவன் காரோடு இழுபட்டுக் கொண்டே பைக்கை ஓட்டி வந்தான். அவனுடைய பம்பர் காரின் பம்பரில் சிக்கிக் கொண்டது போலிருக்கிறது. எங்கள் கூக்குரலைக் கேட்டுக் கார் ஒருவழியாய் நின்றது. குறைந்தது ஒரு கிலோ மீட்டராவது வந்த பாதையிலேயே ஓடி இருப்போம் நானும் இன்னும் இரண்டு பேரும். பெர்னி சாலையோரம் நிலைகுலைந்து உட்கார்ந்திருந்தாள்., நல்ல மத்தியான வேளை, அதனால் பெரிய போக்கு வரத்து ஒன்றுமில்லை.பெர்னி எழுந்து நின்றாள். அப்பாடா என்றிருந்தது. அதற்குள் கார், பின்னால் வந்தது. பாலனுக்கு நல்ல அடி, காருக்குள்ளிருக்கிறான் என்றார்கள்.

அவள் தன் வீட்டுக்குப் போகத் தயங்கினாள். வீட்டில் என்ன சொல்லிவிட்டு வந்திருந்தாளோ. பெர்னியை, ஆச்சி வீட்டில் கொண்டு சேர்ப்பது என்று பாலனின் யோசனையின் பேரில் முடிவாகி, அது என் பொறுப்பாயிற்று..ஏனென்றால் பாலனின் ஆச்சியை எனக்குத்தான் கொஞ்சம் தெரியும். ஒரு வகையில் தூரத்து உறவு. ஆச்சிக்கு இது பிடித்தமில்லை, என்னை யாரென்று விசாரித்துக் கொண்டிருந்தாள் எனக்கு உறவு வழிகளைச் சொல்லத் தெரியவில்லை, விரும்பவுமில்லை.. நான் ஆச்சியிடம் உறவையும் காரண காரியங்களையும் விளக்கும் முன்பாகவே பாலன் வந்து விட்டான். நிறையக் கட்டுப் போட்டிருந்தான். அவனைப் பார்த்ததும் ஆச்சியின் கோபமெல்லாம் போய் அழுகை வந்து விட்டது. நான் நழுவி விட்டேன்.

இந்த சங்காத்தமெல்லாம் ஓய்ந்து முடிந்தது. அவ்வப்போது அவர்கள் கதை சபைக்கு வரும். பாலனை விட அவளுக்கு நான்கு வயதாவது அதிகம் இருக்கும். அவன் ‘மாட்டிக்கொண்டான்’ என்றே எல்லோரும் பேசினார்கள். ஸ்டீபன் மிலிட்டரியிலிருந்து லீவில் வந்திருந்தான். ஒரு நாள் மதியம் போல ஸ்டீபன் வீட்டு மாடியிலிருந்து அவனுடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தேன். அன்று அவன் வீட்டில் பிரியாணி என்று சாப்பிடக் கூப்பிட்டிருந்தான். ஒரு வித்தியாசமான முகப்பவுடர் மணம் மாடிப்படியேறி வந்தது. ரொம்ப ஸ்ட்ராங்கான மணம். யார் என்று பார்த்தால் பெர்னி..நான் ஒரு மேஜையின் ஒருபுறம் உட்கார்ந்திருந்தேன். எதிர் முனையில் ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டு அவள் உட்கார்ந்தாள். ஒரு பெண்ணை இவ்வளவு அருகில் சாவகாசமாகப் பார்ப்பது அதுதான் முதல் முறை. திடீரென்று என்னிடம், ”ஹேய், நீங்கதான் ஸ்டீபன் சொன்னதா... ஆமா யார் அது. உங்கள் கவிதைக்காதலி என்று நேராகக் கேட்டாள். ஹி ஹி என்று தயங்கிக் கொண்டே சொன்னேன். ”ஓ... அதுவா... அது நல்ல பெண்ணாயிற்றே... அவளும் உண்டா...” என்றாள்...” இல்லை இல்லை என்று அவசரமாக மறுத்தேன். ஸ்டீபன் உன் கவிதை நோட்டுகளை வைத்திருந்தான்.. நானும் பார்த்தேன்..என்றாள்.”நீளமான கூந்தலுக்கே காவியம் உண்டு என்று முதல்ப்பக்கம் எழுதியிருந்ததைப் படித்தேன்......அது என்ன, இதுவா நீளமான முடி..”என்று அவள் முடியைக் காண்பித்தாள். ”இல்லை, அது கண்ணதாசன் பாட்டு... ”என்றேன். ஸ்டீபன் அவள் ரொம்ப சங்கோஜமில்லாத டைப், பட் பட்டென்று மனதைப் படம் பிடித்துவிடுவாள் என்று சொல்லியிருக்கிறான், என்றாலும் என்னவோ போலிருந்தது.

அவன் மேஜையில் தி.ஜா வின் இரண்டு நாவல்கள் இருந்தன. ’மலர் மஞ்சம்’, ’அன்பே ஆரமுதே’. பலத்த தேடலுக்குப்பின் ஒரு லைப்ரரியிலிருந்து நான் எடுத்து வந்திருந்தேன். அதை எடுத்துப் பார்த்தாள். “மோக முள்’ இருக்கா என்றாள். இவள் என்ன மாதிரியான பெண், உண்மையில் இதையெல்லாம் படிக்கிற நம்முடைய ஜாதியா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.”எங்க ப்ரொஃபஸர் சொல்லுவார்..அது ரொம்ப நல்ல நாவலாமே...காதல் எல்லாம் சும்மா, வெறும் உடம்பு மட்டும்தான் எல்லாமுமே என்று சொல்லியிருப்பாராமே...”என்றாள். எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.அவள் வலது கையில் தழும்பு நல்ல தடிப்பாய் பிறை மாதிரி இருந்தது.அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். இது அன்றைய விபத்தில் ஏற்பட்டது. இதோ இடுப்பில் இன்னும் பெரிதாய்க் கிழித்து விட்டது” என்று எழுந்து நின்று இடது வயிற்றைக் காட்டினாள்.வயிற்றின் சரிவில் சேலையை ஒட்டி.....தழும்பு நீளமாய் உள்ளிறங்கியது. ”அவன் இதைத்தான் எப்போதும் தடவிக் கொண்டேயிருப்பான்” என்றாள் திடீரென்று. நான் மச்சு வெக்கையில் சட்டை வேறு போட்டிருக்கவில்லை. அதனால் ரொம்ப நெளிந்து கொண்டிருந்தேன் ”அவன் என்னை இப்போதெல்லாம் ரொம்பத் தவிர்க்கிறான்...சொல்லி வை, என் குணம் எல்லோருக்கும் தெரியுமில்லையா...” என்றாள். “நீங்கள் இதை ஸ்டீபனிடம் சொல்லுங்களேன் அவன்தான் அவனுக்கு நெருக்கம்., உங்களுக்கும் சொந்தம்” என்றேன். “அவனுக்கு என்ன தெரியும், எங்களுக்கு மிலிட்டரியிலிருந்து ரம் வாங்கிவந்து தருவான், வேறு என்ன செய்வான்” என்றாள்.

என் மௌனத்தைப் பார்த்தோ என்னவோ. ”சரி நான் போகிறேன், சும்மா காதல் கத்திரிக்காய் எல்லாம் விட்டு விடு....இப்போ நான் சம்மதிச்சா என்னை தொட்டுப்பார்க்க மாட்டியா” என்றாள்.. வெறுமே எச்சிலை விழுங்கிக் கொண்டேன்.”நானே பார்க்கிறேன் அவனை. முடிஞ்சா சொல்லு” என்று மிரட்டுகிற தொனியில் சொல்லி விட்டு இறங்கிப் போனாள். நான் சாயுங்காலம் இதை சபையில் சொன்னபோது “போடா நீ தான் கடைசி ஆள். அவ..............

more: http://koodu.thamizhstudio.com/thodargal_7_18.php




Monday, March 21, 2011

வலது புறம் செல்லவும் - இயக்குனர் அகத்தியன்





இயக்குனர் அகத்தியன்21-03-2011, 11.45 PM

வணக்கம்

உங்களை சந்திக்கிறதுல ரொம்ப மகிழ்ச்சி, சுஜாதா சார் ஒரு சிறுகதை எழுதியிருக்காரு, ஒரு பொண்ணு பாண்டிபஜார்ல பஸ்சை விட்டு இறங்குவா, பின்னால வந்தவன் செருப்பை மிதிச்சு அறுத்துருவான், செருப்பு வாங்கிக் கொடுப்பான், ஆறுமாசத்தில வயித்துல ஒரு கொழுந்தையோட தற்கொலை பண்ணிக்கப்போவா, மேலே இருந்து ஒரு தேவதூதன் வருவான், தற்கொலையை நிறுத்துவான், என்ன வரம் வேணும் கேளும்பான், ஆறுமாசத்துக்கு முன்னால இருந்த மாதிரி ஆகணும்பா, அப்படியே ஆயிடுவா.

அதுசரி, இங்க, இப்ப, இந்தக் கதை எதுக்கு?

எனக்கும் ஒரு ஆசை, மேலே இருந்து ஒரு தேவ தூதன் வரவேண்டும், என்னிடம் என்ன வரம் வேண்டும் என்று கேட்க வேண்டும், எல்லோரும் நல்லவர்களாக மாற வேண்டும், உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்று கேட்க வேண்டும், அது கிடைக்க வேண்டும்,

“அப்படி ஒண்ணு கெடைச்சுட்டா அதை வச்சிகிட்டு என்ன பண்ணப் போறீங்க”,

“அப்படி ஒண்ணு கெடைச்சிருச்சுனு வைச்சுக்குங்களேன். இந்த நிமிஷத்துலேர்ந்து உலகத்துல இருக்குற எல்லோரும் நல்லவங்க ஆயிடுவாங்க, உண்மையை மட்டுந்தான் பேசுவாங்க”,

“மாறிட்டா?”
“ஆமாம்,,”
“சரி சொல்லுங்க”

ஆடு திருடிய வழக்கில் கைதான ராசா மட்டன் பிரியாணி யார் யார் சாப்பிட்டாங்கனு சொல்லிடுவாரு (நன்றி: kolaaru@twitter.com)

சுப்ரமணிய சாமி நான் பேசுனா , என்னனு சொல்லிடுவாரு,

63 நாயன்மார்களை எப்படி நாத்திகம் ஒத்துக்குச்சுனு நாட்டுக்குத் தெரிஞ்சிடும், அதவிடுங்க, போனவாரம் போன் பண்ணி இன்னும் பத்து நாள்ல குடும்பத்தோட ஊருக்கு வர்றேன் மாமானு சொன்ன பொண்ணு. “மாமா எலக்ஷன் வருது. ஆறு ஓட்டு, ரெண்டு பக்கமும் ஆறுரெண்டு பன்னிரெண்டு, எலக்ஷன் முடிஞ்சு வர்றேன்”னு சொல்லிருச்சு, நான் சொன்ன மாதிரி வரம் கெடைச்சா,

“மாமா நேர்மையாயிட்டேன், நாளைக்கே வர்றேன்,

“நாளைக்கு எப்படி வருவே, ஆறுபேரு, டிக்கெட் கிடைக்கணுமே”

“எல்லோரும் நல்லவங்க ஆயிட்டாங்க மாமா,”

“ஏஜெண்டெல்லாம் புக்கிங்கை கேன்சல் பண்ணிட்டாங்க கவுண்டர்லயே டிக்கெட் கெடைக்குது,,,”

கொஞ்சம் கண்மூடிப் பாருங்கள், எத்தனையோ நிர்வாணமான பெண்கள் சேதப்படுத்தப்படாமல் உடைகள் அணிந்து கொள்கிறார்கள், அதில் நமக்குத் தெரிந்தவர்கள் யாரேனும் இருக்கலாம்,

“சத்தியமா நான் உன்னை ஏமாத்தத்தான் காதலிச்சேன் என்னை மன்னிச்சிடு”

“நான் உன்னைக் காதலிக்கும்போதே அவனைத்தான் கல்யாணம் பண்ணிக்கிறதுனு முடிவு பண்ணிட்டேன், என்னை மன்னிச்சிடுடா”,

“அய்யோ,,, நான் உங்களுக்கு துரோகம் பண்ணிட்டேங்க,"

“போன வாரம் நான் இதுமாதிரி நல்லவனா மாறி இருக்கக் கூடாதா, உன் தங்கச்சியையும் என்னையும் மன்னிச்சிடு,,,,”

காதுகளில் மன்னிப்புகளின் மணி அடித்துக் கொண்டே இருக்கும்,

பெரியோர்களே, தாய்மார்களே,

“இதுவரை அரசியல் வாழ்க்கையில் நான்செய்த கற்பழிப்புகள். கொலைகள். மோசடிகள். ஏமாற்றுக்கள். சம்பாதித்த பணம் இப்படி எல்லாவற்றையும் இந்த மக்கள் மன்றத்தில் சொல்லி உங்கள் மன்னிப்பைக் கோர வந்திருக்கிறேன்”,

ஒரு அரசியல் மேடையில் இப்படியும் கேட்கலாம்,

சிக்னலை மீறாத போக்குவரத்து. சிக்னலை விட்டு தள்ளி மறைந்து நின்று வாகனங்களை புலிபோல் பாய்ந்து மடக்கி பணம் பறிக்காத போக்குவரத்துத்துறை, காவல்நிலையத்தில் உண்மை பேசும் குற்றவாளி, குற்றவாளியை அவனது அம்மாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்காத காவலர், இப்படி எல்லா இடங்களிலும் ஒழுக்கம். உண்மை. நேர்மை, யோசிக்கும்போது நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் என்னவோ இடிக்கிறது,

“எல்லோருமே நல்லவங்க ஆயிட்டா அப்புறம் எதுக்கு காவல்துறை - நீதிமன்றம்?”

அப்துல்கலாமுக்கு அரெஸ்ட் வாரண்டும். குஷ்புவுக்கு Community Certificate-ம் வாங்கி அப்புறம் மீடியா எப்பிடி பொழப்பு நடத்துறது, தினத்தந்தியில கள்ளக்காதல் வராது, சதக் சதக் வராது, அது இல்லாம யாரு படிப்பாங்க? வனிதாவும் விஜயகுமாரும் சண்டை போட்டுக்கிட்டாதானே News, சமாதானம் ஆயிட்டா Loss இல்லீங்களா? N.D.T.V., CNNIBN, Times Now, Headlines Today எல்லாத்தையும் இழுத்து மூடிடணும், தினமும் 9 மணி Debated க்கு எந்த விஷயமும் கெடைக்காது, அப்பறம் கத்திக்கத்தி எப்படிப் பேசுறது,

தாடி வச்சுகிட்டு பக்கத்துல அமர்ந்து பயணிக்கிற முஸ்லிம் நண்பனை தீவிரவாதியோ என சந்தேகிக்க முடியாது, நற்செய்திக் கூட்டங்களில் முடவர்கள் நடக்க மாட்டார்கள், குருடர்கள் பார்க்க மாட்டார்கள், வாயும் பேசாது, காதும் கேளாது, தேவன் யாருக்காகவும் 12B பஸ்-ஐ 5 நிமிடம் தாமதப்படுத்திய காட்சி இருக்காது. முஸ்லிம் நாட்டில் முஸ்லிமைப் பிடிக்காமல் முஸ்லிமே குண்டுவைக்க மாட்டான், ராமஜென்ம பூமியும் ராமர்பாலமும் உண்மையைச் சொல்லி விடுதலை அடையும், இந்திய சாமியார்களின் சாம்ராஜ்யத்தில் சூரியன் உதிப்பதும் இல்லை அஸ்தமிப்பதும் இல்லை என்ற ஆணவம் மறைந்துபோகும்,

நீதிமன்றங்களை மூடி விடலாம், காவல்நிலையங்களை மூடிவிடலாம், முதல்வர் பேருந்தில் பயணிப்பார், இலவசங்கள் இல்லாமல்போகும், நேரடி. மறைமுக பிச்சைக்காரர்கள் மறைந்து போவார்கள், உலக நாடுகள் ஆயுதச் செலவை ஒழிக்கும், ஒபாமா குனிந்து இன்னொரு முறை எந்தப் பெண்ணின் பின்னழகையும் ரசிக்க மாட்டார்,

2600 வருடங்களாக புத்தரை இறுக்கி கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருப்பது நாம் தவறாக இருப்பதால்தான், நல்லவர்கள் ஆனதும் புத்தரைத் தூக்கிப்போட்டு விடலாம், இயேசு தேவைப்படமாட்டார், நபிகள் நாயகம், ம்ஹும்... வேண்டவே வேண்டாம், காந்தி, எதுக்குங்க அவரெல்லாம் நாம ஒவ்வொருவருமே ஒரு சத்தியசோதனை எழுதுவோம், அவ்வளவு உண்மை, நித்யானந்தா கூட கல்யாணம் செய்து கொள்வார், யாரை என்பது கேள்வியாக இருக்காது, எத்தனை பேரை என்பதுதான் கேள்வியாக இருக்கும், ஒன்றுமட்டும் உண்மை, உலகம் காவி கட்டாத சாமியாராகி விடும், “நித்யானந்தா சாமியார் இல்ல, இமயமலை சாமியார்”,

“என்னங்க உலகம் சாமியாராயிட்டா போரடிக்காதா”,

“கண்டிப்பா,” நம்பியார் இல்லாத எம்ஜிஆர் சினிமா மாதிரி போரடிக்கும்,

பைபிளே பொய்யிலயும் கொலையிலயும் தான் ஆரம்பிக்குது, கண்ணன் அர்ச்சுனனைக் கூப்பிட்டு கொலை பண்ணச் சொல்றான், நபிகள் வாளேந்தித்தான் இஸ்லாத்தை வாழவச்சாரு,

ராமன் வந்தது ராவணனைக் கொல்றதுக்கு, ஆனா புத்தர் வந்தது கொல்லாமையை போதிக்கிறதுக்கு, பாண்டவர்கள் அஞ்சு ஊரோ அஞ்சு வீடோதான் கேட்டாங்க, கொடுத்திருக்கலாம், நூறு அண்ணன் தம்பிக்கும் ஆசை - பேராசை, ஆசையே துன்பத்துக்கு காரணம்னு அப்ப புத்தர் வந்து ஏன் சொல்லலை?

சரி, நமக்கு எதுக்குங்க அதெல்லாம் எல்லோரும் நல்லவங்க ஆயிட்டா உலகம் இமயமலை சாமியாரா ஆயிடும், நம்பியார் இல்லாத எம்,ஜி,ஆர், படம் மாதிரி போரடிக்கும்,

அப்பறம், அரசாங்கமே குற்றம் செய்தால் பரிசுனு அறிவிக்கும், மஞ்சள்கோட்டை தாண்டினால் 50 ரூபாய் பரிசு, கற்பழித்தால் தங்கமெடல்,

அப்பத்தானே இயக்கம் இருக்கும், எதிர்விசை இல்லா இயக்கம் எப்படி சாத்தியம், கர்த்தருக்கும் சாத்தானுக்கும் தானே உடன்படிக்கை,

அப்பிடின்னா "சரி” மட்டும் இருந்தா போதாது, “தவறும்” இருக்கணும், அப்பத்தான் இயக்கம், புத்தர். ஏசு. நபிகள் பேச்சைக் கேட்டு எல்லோரும் திருந்திட்டா பூமி போரடிச்சிடும்,

நல்லதுங்கிறது உதாரணத்துக்கு கெட்டதுங்கிறது உபயோகத்துக்கு, 'கோட்சே'ங்கிற கெட்டதுனால காந்திங்கிற நல்லது உதாரணமா இருக்கு, கோட்சே மட்டும் சுடலைனா காந்தி ரொம்ப நாள் இருந்து நெறைய வம்புல மாட்டி இருப்பாரு,

ஆஸ்வால்ட் கென்னடியை சுடலைன்னா பில்கிளிண்டன் ரேஞ்சுக்கு காணாம போயிருப்பாரு, இப்ப மோனிகா லெவின்ஸ்கினா அப்ப மர்லின் மன்றோவா இருந்திருக்கும், அப்ப யார் யாருக்கெல்லாம் கெட்டது நடந்துச்சோ,

அதனோட உபயோகமா நல்லது உதாரணம் ஆயிடுச்சு, பைபிள்ல யோவான்ல இருந்து - நம்ம அன்னை இந்திரா காந்தி உட்பட,

ஐ.கே. குஜ்ரால். தேவகௌடா. நரசிம்மராவ். மொரார்ஜிதேசாய். வாஜ்பாய் இவங்களை எல்லாம் யாருனு ஞாபகம் இருக்கா?

ஆக “கெட்டது” என்பதும் வாழ்க்கையோட ஒருபகுதி, ஒருவனை மற்றவன் அடித்ததனால்தான் ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தைக் காட்டு என்ற அகிம்சையை ஏசுவால் போதிக்க முடிந்தது,

ஒருத்தி பாலியல் தொழிலாளியாக இருந்த காரணத்தினால்தான் உங்களில் பாவம் செய்யாதவர் முதல் கல்லை எறியட்டும் என்ற உன்னதமான தீர்ப்பினை வழங்க முடிந்தது,

மனிதாபிமானமற்ற சமூகம் இருந்ததினால்தான் உன்னைப் போல் பிறரை நேசி என்ற மனிதவளச் சிந்தனை ஏசுவுக்கு தோன்றியது,

ஆசைப்பட்டதினால்தான் ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று புத்தர் சொன்னார்,

“நாம தப்பு பண்ணுனாத்தான் மகான்களுக்கே பூமியில வேலை, இல்லேனா நாமளே மகான்கள் ஆயிடுவோம்”,

சரி! இவர்களை மகான்கள் ஆக்குவதற்கு நாம் செய்கின்ற தப்பை ஒழுங்காச் செய்கிறோமா? கூட்டிக் கழித்துப் பார்த்தால் “இல்லை” (லா,சா,ரா, வுடையது)

“பண்ற தப்பை எப்படி ஒழுங்கா பண்றது?”
 
வணக்கம்..

உங்களை சந்திக்கிறதுல ரொம்ப மகிழ்ச்சி, பண்ற தப்பை எப்படி ஒழுங்காப் பண்றதுனு நாம கொஞ்சம் பேசப் போறோம், இந்த இரண்டாவது வணக்கம் இதைத்தொடர்ந்து படிப்பவர்களுக்காக.

அந்தக் கதையில - அதாங்க சுஜாதா சார் கதையில வரம் கெடைச்ச உடனே அந்தப் பொண்ணு அவ கேட்டபடி ஆறு மாசத்துக்கு முன்னாடி இருந்த மாதிரி அதாவது பழைய மாதிரி ஆயிடுவா, அப்பறம்?, மறுபடியும் அவ பாண்டிபஜார்லேர்ந்து பஸ்ஸ விட்டு இறங்குவா.

“அப்படினா நடக்கணும்னு இருக்குறது நடந்தே தீருமா?”

“அதப்பத்தியெல்லாம் நாம இப்ப பேச வேணாம்”

“சரிங்க”

“நீங்க குடிப்பீங்களா?”

“ம், குடிப்பேன்”

“அது தப்புனு நெனைக்கிறீங்களா?” எல்லோரும் சொல்றாங்க, அதுனால நானும் அப்படித்தான் நெனைக்கிறேன்.

அப்ப ஜீசஸ் ஒயின் குடிச்சாரு, கல்யாணத்துல ஒயின் பத்தலைன உடனே தயாரிச்சாரு, அவருகிட்டே கேட்டிருந்தா இப்பிடித்தான் பதில் சொல்லியிருப்பாரா?

ஆனா Contrast பாருங்க, நபிகள் குடிக்கிறது தப்புனு சொன்னாரு,

காந்தி நபிகளை follow பண்ணுனாரு, பக்கத்துல இருந்த ஜின்னா ஜீசஸ் follow பண்ணுனாரு, குடிக்கிற விஷயத்துல மட்டும் விஸ்கிக்கும் மூன்றெழுத்து - ஜின்னாவுக்கும் மூன்றெழுத்துனு யாராவது கவிதை கூட எழுதலாம்,

நம்ம ஊரு ஐயனாரு சாராயம் குடிக்கிறாரு, இப்ப கொஞ்சம் Brandy, Whiskey வரைக்கும் வந்திருக்காரு, டெல்லியில காளிமாதா Brandy குடிக்கிறாங்க, எல்லா சாமியுமே சோம பானம். சுராபானம் குடிச்சவங்கதான்.

எனவே தோழர்களே பெரியர்கள் எல்லாம் குடித்த ஒன்றைத்தான் நாமும் குடிக்கிறோம், (விருப்பமுள்ள தோழியர்கள் தோழர்களுக்குப் பக்கத்தில் சேர்ந்து கொள்ளலாம்,)

ஆனா ஒரு பிரச்சனை, அவங்க குடிச்சா வரலாறு ஆகுது, நாம குடிச்சா வாந்தி ஆகுது,

ஆக பண்ற தப்பை நமக்கு ஒழுங்காப் பண்ணத் தெரியலை,

ரொம்பப் பேசிட்டேன்..

இந்த வாரம் வரைக்கும் இதுவரையில குடிச்ச மாதிரியே குடிங்க..

அடுத்தவாரம் மாத்திக்கலாம்..

அன்புடன்
அகத்தியன்.