Monday, May 17, 2010

கேரென் கானெல்லி - ஒரு நாடோடியின் குரல்



கனடாவின் இளம் எழுத்தாளர்களுள் நம்பிக்கை அளிக்கின்ற ஒருவராக விளங்கும் கேரென், 'ஒரு நாடோடிக்கவி' என்று அழைக்கப்படுபவர். தாய்லாந்து, பர்மா, ஸ்பெயின் என்று அலைந்து திரிந்து, கவிதைகளும், பயண நூலும், நாவல்களும் எழுதி இருப்பவர். தீவிரமான வாழ்க்கை அனுபவங்களுக்குள்-பரிசோதகைளுக்குள் தன்னை ஆட்படுத்திக் கொண்டிருப்பவர். அடுத்த கட்டத்தில், "வீடென்பது குழந்தை வளரும் இடம் மட்டுமல்ல, அகம், விரியும் ஆழமும் கொள்ளும் இடமுமாகும்" என்று உணர்ந்திருப்பவர்.

கேரெனின் தந்தை ரோமன் கத்தோலிக்கர்; தாய் Jehovah's witness-பிரிவைச் சேர்ந்தவர். கேரெனின் குடும்பத்தில் சதா பிரச்சினைக்குரிய விஷயமாக இருந்து வந்து கொண்டிருப்பது இந்த சமய உட்பிரிவு பேதம். அத்துடன் தந்தை குடிகாரர். மூத்த சகோதரி ட்ரெஸி போதை மருந்துக்கு அடிமையாகி, 24-வது வயதில் தற்கொலை செய்து கொண்டவர். கேரென் 17 வயதில் வீட்டை விட்டு வெளியேறி, புலம்பெயர்ந்து, தாய்லாந்து சென்றவர். அடுத்து, ஸ்பெயினில் ஆங்கிலம் கற்றுத் தந்து கொண்டிருந்தார்.

இவரின் முதல் கவிதைத் தொகுதி 'The small words in my Body'. பிற பண்பாடுகள் பற்றி எழுதுகையில், பார்வையாளரா தன்னை உணர்ந்து கொள்ளும் கேரென், "கவிதை என் குருதியிலிருந்து வெளிப்படுகின்றது. அது ஒவ்வொன்றினுடைய நாடியாகவும் சுவாசிப்பாகவும் உள்ளது" என்கிறார்.
"இது ஐந்தாம் பருவம்
வரலாறு போய்விடும்போது
வார்த்தைகளுக்கு எதிரொலிகளோ
அர்த்தங்களோ இல்லாதபோது
எனது தந்தை காணாதுபோகும்போது
என் அக்கா தனித்து வதைபடும்போது ..."
என்று தொடங்குகிறது அவரது ஒரு கவிதை.

"மக்கள் என்னிடம் கதைகள் சொல்லும்போது, அவற்றை உலகிற்குக் கூறும்படி கேட்டுக் கொள்கின்றனர். அவ்வாறு நான் கூறும்போது, அவை பல்வேறு மக்களின் பல்வேறு காலங்களின் கதைகளாகின்றன" என்று கருதும் கேரென், 1996-இல் பர்மாவுக்கு ஒரு பயணியாக வந்தார். அங்கிருந்த இராணுவ ஆட்சி, அதற்கெதிரான விடுதலைப் போராட்டம், ஆங்-ஸான்-சூ-கீ போன்ற போராளிகள், பௌத்த மதத்தினரும் விலகி நிற்காமல் போராட்ட குணம் கொண்டவர்களாக மாறுவது, நாடெங்கிலும் நிலவிய வறுமை மற்றும் ஒடுக்குமுறை ஆகிய விஷயங்கள் அவரை மிகவும் பாதித்து விட்டது. ஒன்பது ஆண்டுகள் தொடர்ந்து பர்மா மீது அவரது கவனம் குவிந்திருந்தது. Pencanada அமைப்புக்காக 1994-95 இல் அவர் பணியாற்றியபோது, அதில் உறுப்பினராயிருந்த மாதிடா என்னும் எழுத்தாளர் பர்மா அரசுக்கு எதிர்நிலையில் எழுதிவந்தமையால், 20 ஆண்டுகள் தனிக் கொட்டடியில் வைக்கப்பட்டிருந்ததும், அவருக்குள் சலனங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

காட்டில் பதுங்கிப் போராட்ட வாழ்வு நடத்தும் போராளிகளைச் சந்தித்தபோது, புரட்சியாளர்களுள் ஒருவருடன் அவர் காதல் வயப்படவும் நேர்கிறது. பல்கலைக்கழகங்கள், மடாலயங்கள்


read more... http://koodu.thamizhstudio.com/ayal_ilakkiyam_thodargal_1_3.php



Tuesday, May 4, 2010

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 20வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)


தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 20வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)

நாள்: சனிக்கிழமை (08-05-2010)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: மாலை மூன்று மணி (3 மணியளவில்)

முதல் பகுதி: (3 மணி) - குறும்பட கலந்தாய்வு

இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல்

இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரைபப்ட இயக்குனர், திரு. சுப்பிரமணியம் சிவா அவர்கள் பங்குபெறுகிறார். குறும்படங்களில் இயக்கம் குறித்தான விரிவான வழிகாட்டல் நடைபெறும்.

இவர், திருடா திருடி, பொறி, யோகி போன்ற திரைப்படங்களின் இயக்குனர் ஆவார்.

மூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல்

இந்த மாதம் திரையிடப்படும் படம்:

இந்த மாதம் மூன்றாவது பகுதியில், ஆவணப்பட இயக்குனர் திரு. கைலாசம் பாலச்சந்தர் அவர்கள் இயக்கிய "நீருண்டு நிலமுண்டு" ஆவணப்படம் திரையிடப்படுகிறது. இந்த திரைப்படம் கிராமங்களில் நீர் சேகரிப்பின் தேவையை, அதன் சாத்தியங்களை மிக விரிவாக பேசும் ஆவணப்படம். 90 நிமிடங்கள் ஓடக்கூடிய ஆவணப்படம்.

மறக்காமல் வாசகர்கள் தங்கள் சந்தாத் தொகையினை கட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். சந்தாத்தொகை ரூபாய் 50 மட்டும்.

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:
9840698236, 9894422268


Thursday, April 29, 2010

தமிழ் ஸ்டுடியோ.காம் இரண்டாவது ஊர் சுற்றலாம் வாங்க..நிகழ்வு.


தமிழ் ஸ்டுடியோ.காம் இரண்டாவது ஊர் சுற்றலாம் வாங்க..நிகழ்வு.

நாள்: மே 15 -16 (சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை)
இடம்: மசினங்குடி (உதகமண்டலம்)
கட்டணம்: 2000/- (மொத்த செலவு)

தமிழ் ஸ்டுடியோ.காம் வாசகர்களே..

தமிழ் ஸ்டுடியோ.காம்மின் ஊர் சுற்றலாம் வாங்க நிகழ்ச்சி நீண்ட நாட்களுக்கு பின்னர் மீண்டும் உங்களுடன் புறப்படத் தயாராகிறது. கோடை வெப்பத்தை தணிக்கவும், ஆர்வலர்களுக்கு தமிழகத்தின் மிக முக்கிய பகுதிகளின் திரை விலக்கி காட்டவும், இந்த முறை நமதுப் பயணம் மசினங்குடியை நோக்கி செல்கிறது. மசினங்குடிப் பகுதி நீலகிரி மழைப் பகுதியில் உதகமண்டலத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில், இரவு நேரத்தில் அடர்ந்த காட்டுப் பகுதியில், வனத்துறை ஏற்பாட்டில் விலங்குகள் சுற்றித் திரியும் பகுதியை கண்டு கலைக்கலாம். மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள குடிலில் தங்கியிருந்தும் விலங்குகளை கண்டு களிக்கலாம்.

மேலும், மசினங்குடியில் இருக்கும், இயற்கை வனப்பை, அதன் அழகை பெரும்பாலான மனிதர்களின் காலடிப் படாத பகுதிகளையும் பார்த்துவிட்டு வருவதே இந்த ஊர் சுற்றலாம் வாங்க நிகழ்ச்சியின் நோக்கம். மலைப் பகுதி சார்ந்த குறும்படங்கள் எடுக்க விரும்பும், ஆர்வலர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

முழுக்க முழுக்க குறும்பட ஆர்வலர்கள், இயக்குனர்கள் என குறும்பட கலைஞர்கள் ஒன்றிணைந்து செல்லவிருக்கும் இந்த ஊர் சுற்றலாம் வாங்க நிகழ்வில் நீங்களும் கலந்துக் கொள்ளலாம். அதற்கான கட்டணம் 2000/-

பயணத்தின் போது குறும்படங்கள் சார்ந்தும், தமிழ் மற்றும் உலக இலக்கியத்தின் சிறுகதைகளை குறும்படமாக உருமாற்றும் கலந்துரையாடல் நடைபெறும். இலக்கிய குறும்பட ஆர்வலர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துக் கொள்ளலாம்.



Tuesday, April 27, 2010

கும்பகர்ணனுக்கு பிடித்த மரம்


சுஜாதா தேசிகன்


மேலே பார்க்கும் இந்த பூவை போன வாரம் என் புதிய கேமராவில் கவர்ந்தேன். பள்ளிக்கூடம் படிக்கும் நாட்களிலிருந்து இந்த பூ மீது எனக்கு ஒரு வித காதல் என்று சொல்லலாம். கிரவுண்ட் சுற்றி இந்த மரங்கள் குடை போல வளந்திருக்கும். மார்ச்-ஏப்ரல் மாதத்தில் மரம் முழுக்க சா'மரம்'மாக பூத்திருக்கும்.

பள்ளியில் இரண்டு வகுப்புக்கு நடுவில் பத்து நிமிடம் பிரேக் விடும் போது ஓடி சென்று இந்த மரத்திலிரிந்து சியக்காய் போல விழுந்திருக்கும் இதன் காய்களை பொறுக்கி டிராயர் பாக்கெட்டில் அடைத்துக்கொண்டு வருவோம்.

தட்டையாக கருப்பாக இருக்கும் இந்த காய்கள் ஒரு வித தித்திப்பு வாசனையுடன் (அதிமதுரம் மாதிரி வாசனை என்பார்கள்) பிசுபிசுப்பாக இருக்கும். ஸ்கூல் விட்டவுடன் பொறுக்கிய காய்களை கல்லை கொண்டு நசுக்கி பொடியாக்கி கார்த்திகை பொரி உருண்டை போல உருட்டினால் கார்க் பந்து போல இருக்கும். நிஜ கிரிக்கெட் பந்தின் தையலை பிரித்தால் சணல் கயிறால் சுற்றப்பட்ட சின்னதாக ஒரு கார்க் பந்து இருக்கும்.

அந்த கார்க் பந்தை இந்த காய்க்கொண்டு தான் செய்கிறார்கள் என்று புரளியை யாரோ கிளப்பிவிட, நாங்கள் இந்த கார்க் பந்து தயாரிப்பில் முழு வீச்சுடன் ஈடுபட்டோம். பந்தை ஸ்டிராங்காக்க வெய்யிலில் காய வைத்தால் சூட்டுக்கு பிளந்துவிடும், அல்லது அணில் வந்து கடித்துவிடும். உருட்டிய பந்தைக்கொண்டு ஓர் ஓவர் கூட இதுவரை விளையாடியதில்லை.

இந்த மரத்தின் தாவர பெயர் Samanea saman என்று ஹிந்தி பட டைட்டில் மாதிரி இருந்தாலும், இந்த மரத்துக்கு பெயர் 'ரெயின் டிரீ' ( Rain Tree ). மெக்ஸிகோ பிரேசிலிலிருந்து வந்தது என்று சொல்லுகிறார்கள். தமிழில் தூங்கு மூஞ்சி மரம். மாலை நேரம், மேகமூட்டம் அல்லது மழை நாளில் இந்த மரத்தின் இலைகள் மூடிக்கொள்ளும். அப்போது தான் மழை நீர் பூமிக்கு வர ஏதுவாக இருக்கும். இயற்கை!. இந்த மரத்துக்கு ஆங்கிலத்தில் அதனால் தான் Rain Tree என்று பெயர்.

இந்த மரத்துக்கு கீழே வளரும் புல் செழிப்பாக இருப்பதையும், முழுவதும் பூத்திருக்கும் மரத்த்தில் இந்த பூக்கள் கொட்டும் போது அடுத்த முறை ரசித்து பாருங்கள்.

- * - * - *

விதூஷகன் சின்னுமுதலி என்ற சிறுகதை, கல்கி 1930 விமோசனம் இதழில் எழுதியது. விதூஷகன் என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் ஜெஸ்டர்(Jester) என்று பொருள். "Gopal the Jester" என்ற "அமர் சித்ர கதா" காமிக் புத்தகத்தை நீங்கள் படித்திருக்கலாம். அரசவையில் வேலைக்கு வைத்திருக்கும் புத்திசாலியான கோமாளி என்று வைத்துக்கொள்ளலாம். தெனாலிராமன் கூட விதூஷகன் தான்.

பெரும்பாலும் கிராமங்களில் நடக்கும் தெருக் கூத்தில் ராமாயணமோ, மஹாபாரதமோ விதூஷகன் என்று ஒரு கதாப்பாத்திரம் வரும். ஷேக்ஸ்பியர் நாடங்களில் வரும் க்ளவுன் கதாபாத்திரம், பாலச்சந்தர் படத்தில் அதிகப்பிரசங்கி கதாப்பாதிரம் இந்த வகை தான். கல்கி கதையில் வரும் விதூஷகனால் மற்றவர்கள் சந்தோஷமாக இருந்தாலும், அவன் வாழ்க்கையில் அவனும் அவன் குடும்பம் எப்படி இருக்கிறார்கள் ? என்பதே கதை.

கல்கி கதையில் வரும் சின்னுமுதலி என்ற இந்த விதூஷகன் சத்திரப்பட்டி என்ற கிராமத்தில் இருப்பவன், எல்லோரையும் சிரிக்க வைக்கிறான். அவனுடைய நடை உடை பாவனை, பட்லர் ஆங்கிலம், வாய்க்கு வந்த படி பாடலுடன், சர்க்கஸ் கோமாளி மாதிரி அவன் செய்யும் செய்கையால் அவன் ரொம்ப பிரபலம். தேங்காய் மூடி கச்சேரி செய்யும் பாகவதர் மாதிரி இவன் செய்யும் வேலைக்கு தேங்காய், வாழைப்பழம், முறுக்கு போன்றவை தான் கிடைக்கிறது. மனைவியும், பிள்ளையும் செய்யும் நெசவுத் தொழிலில் குடும்பம் பிழைக்கிறது. இவனுக்கு குடிப் பழக்கம் வேற இருப்பதால் குடும்பம் கஷ்டப்படுகிறது.

மேடை நாடகங்களில் நாம் பார்க்கும் கோமாளிகளும், சினிமாவில் காமெடி என்ற பெயரில் அடிவாங்குபவர்களும் அவர்கள் வீட்டில் அதை பார்த்தால் அவர்களின் மன நிலை எப்படி இருக்கும் சில சமயம் யோசித்ததுண்டு. முதல் முதலில் விதூஷகனின் மனைவி இவன் செய்யும் கூத்தை பார்க்கிறாள். கல்கி அதை இப்படி விவரிக்கிறார்.

"கோணங்கிக் குல்லாவும், விகாரமான உடைகளும் தரித்து, கூத்தாடிக்கொண்டு சின்னுமுதலி மேடைக்கு வந்ததைப் பார்த்ததும் பத்மாவதிக்கு 'பகீர்' என்றது. அவன் செய்த கோரணி ஒவ்வொன்றும் பத்மாவதிக்கு அளவிலாத மனவேதனையை அளித்தது. அசிங்கமாகவும், அர்த்தமில்லாமலும் அவன் பேசிய பேச்சு அவளுக்கு நாராசமா யிருந்தது. இதற்கிடையில் மேடைக்கு மோகினிப் பெண் வந்தாள். விதூஷகன் அவளிடம் சென்று சிங்காரப் பேச்சுகள் பேசலானான். "கண்ணே பெண்ணே" என்று ஏதேதோ பிதற்றினான். பல்லைக் காட்டி இளித்தான். மோகினிப் பெண் அவன் கன்னத்தில் ஓர் இடி இடித்தாள். எல்லாரும் 'கொல்'லென்று சிரித்தார்கள். சின்னுமுதலியும் சிரித்தான். பத்மாவதிக்குக் கண்ணில் நீர் ததும்பிற்று. அவள் மெதுவாய் எழுந்திருந்து தன் ஊரை நோக்கி நடந்தாள். கண்ணீர்விட்டு அழுதுகொண்டே போனாள்."

என்னை கவர்ந்தது இந்த கதையின் முடிவு தான். நான் இந்த கதையை எழுதியிருந்தால், கடைசியில் "அவன் கால் ஒற்றைத் திண்ணையின் தூணுடன் சங்கிலியால் பிணைத்துக் கட்டியிருப்பதும் தெரியவரும்" என்ற வரியுடன் கதையை முடித்திருப்பேன். கல்கி இதற்கு அப்பறம் கூட மூன்று வரிகள் எழுதியிருக்கார். இரண்டு விதமான முடிவிலும் சுவாரஸியம் இருக்கு. அதை வாசகர்கள் அனுபவிக்கலாம்.

இந்த கதையின் அமைப்பை பல சிறுகதை எழுத்தாளர்களின் கதைகளில் பார்க்கலாம். நிச்சயம் படிக்க வேண்டிய கதை.

- * - * - * -

தோசைக்கு சிறந்த இடம் பெங்களூரு. சென்னை தோசை மெல்லிசான வாயில் புடவை மாதிரி என்றால், பெங்களூரு தோசை கனமாக பட்டு புடவை மாதிரி. மசால் தோசைக்கு பூர்வீகம் மைசூர். தோசைக்கு நடுவில் உருளைக்கிழங்கை வைத்தால் நமக்கு மசால் தோசை ஆனால் பெங்களூர்/மைசூரில் தோசையில் சிகப்பு சட்னி தடவி பிறகு உருளைக்கிழங்கு வைத்தால் தான் மசால் தோசை. சிகப்பு சட்னிக்கு தான் மசாலா!.

தாவங்கரே பென்னே....


for more.. http://koodu.thamizhstudio.com/thodargal_9_2.php



Monday, April 26, 2010

மூன்றாவது பௌர்ணமி இரவு

மூன்றாவது பௌர்ணமி இரவு

ஆதவன்26-04-2010

புதன், 28-04-2010

இரவு 7.15 மணிக்கு தொடங்கி, நிகழ்வு முடிய இரவு 12.30 மணி ஆகும். ஆர்வலர்களுக்கு உணவு மற்றும் உறங்குமிடம் முதலியவை ஏற்பாடு செய்யப்படும். ஆனால் அதற்காக ஆர்வலர்கள் முப்பது ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

இடம்: எண். 41, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024 (லிபர்ட்டி திரையரங்கம் எதிரில்)

இந்த மாதத்திற்கான சிறப்பு பார்வையாளர்: ஆவணப்பட இயக்குனர் 'ரவி சுப்பிரமணியம்'. இவர் எழுத்தாளர் ஜெயகாந்தன் மற்றும் ம.அரங்கநாதன் ஆகியோர் பற்றிய ஆவணப்படங்களை இயக்குனர்.

திரையிடப்படும் படங்கள்:

தமிழில் எடுக்கப்பட்ட குறும்படம்: முதலாவதாக 'அழகு' என்கிற குறும்படம் திரையிடப்பட்டு அது பற்றிய கலந்துரையாடல் நடைபெறும். இக்குறும்படம் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் தயாரிப்பில் இயக்குனர் பாண்டியராஜனால் எடுக்கப்பட்டது.

உலக அளவில் புகழ் பெற்ற திரைப்படம்: Leila (1996)

இயக்கம்: Dariush Mehrjui

இந்தத் திரைப்படம் குறித்து மேலும் அறிந்துக் கொள்ள:
http://www.imdb.com/title/tt0116851/

(குறிப்பு: பௌர்ணமி இரவு நிகழ்வில் யார் வேண்டுமானாலும் கலந்துக் கொள்ளலாம். ஆனால் உணவு மற்றும் உறங்குமிடம் ஏற்பாடு செய்யவேண்டியிருப்பதால் முன் பதிவு செய்துக் கொள்ளவும். முன் பதிவு செய்யாதவர்களுக்கு உறுதியாக அனுமதி கிடையாது.)

முன்பதிவு செய்துக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 9840698236, 9894422268

Wednesday, April 21, 2010

கொஞ்சம் நியாயம்... கொஞ்சம் அக்கப்போர்


தனது சுதந்திர தாகத்தைத் தணிக்க...

தணிக்க வழியில்லாத பசியின் கொடுமையைத் தாங்கிக்கொள்ள...

கஞ்சா போன்ற போதை வஸ்துவின் உதவியை நாடி...

பிறகு அதன் அரவணைப்பில்...

ஒரு கோவில் யானையிடம் தேவைக்கதிகமாக "விளையாட" முயன்றதால்...

பாரதி எனும் ஏழைக் கவிஞர் அமரர் ஆனார் என்பதைக் கூறும் அதே மூச்சில்...

பிரிவினைவாதம் மூலமாக தனது ஆரம்ப அரசியல் அடித்தளத்தை அமைத்த...

தமிழக முதல்வர் கலைஞரை...

தேவைக்கு அதிகமாகப் புகழ்ந்து, பெரும்பாலான படைப்பாளிகள் பிழையாகப் பிழைப்பு நடத்தப் பழகிவரும் இக்காலத்தில்...

இதனை எழுதும் என்னைப் பலர் பித்தன் என்பார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை...அச்சமில்லை...கூச்சமில்லை!

பாரதியின் காலத்திற்குப் பிறகு அவரது எழுத்துக்கள் பலர் பெரும் பணம் சம்பாதிக்க உதவின, உதவிக்கொண்டே இருக்கின்றன.

1882-ல் பிறந்த பாரதி 1921ல் இயற்கை எய்தினார்

அவர் வாழ்ந்த காலத்திற்கேற்ப பாரதி அரிய கருத்துக்களை, இன்றுள்ள கம்ப்யூட்டர்கள் போன்ற கருவிகளின் உதவியின்றி, வறுமையின் பிடியில் வாடியும் அச்சமின்றிக் கூறி அமரரானார்.

பாரதியைப் பெரிதும் கவர்ந்தவர்களுள் பெர்ஸிபிஷ் ஷெல்லி (1792-1822) என்ற ஆங்கிலக்கவிஞரும் ஒருவர். ஷெல்லியின் ஜீவகாருண்யக் கொள்கைகள் தான் பாரதியைப் பெரிதும் பாதித்தன என்பார்கள்.

ஓர் ஆங்கிலேயப் பாராளுமன்ற உறுப்பினரின் மகனாகப் பிறந்த ஷெல்லி பேச்சாற்றலற்றவர் ஆகையால் உரிமைகளுக்காகப் போராட முடியாத உயிரினங்களை, உண்பதற்காகக் கொல்வோர்களைக் ''கொடிய காட்டுமிராண்டிகள்'' என வர்ணித்தவர்.

அவரால் கவரப்பட்ட பாரதி அந்நியர்கள் ஆட்சியில் அடிமைகளாக வாழ்ந்த நமக்கும் மிருகங்களுக்கும் பெரிய வித்தியாசமில்லாததை உணர்ந்து, சுதந்திர எண்ணங்களை நம்மில் விதைத்தார்.

தமிழில் மட்டுமே அவரது எழுத்துக்கள் பிரபலமாகியிருந்தால், ஆங்கிலம், சமஸ்கிருதம், பிரெஞ்சு, இந்தி, வங்கமொழி, ஏன் வட குஜராத்தில் மட்டுமே அதிகமாகப் பேசப்படும் ''கச்சி''போன்ற மொழிகளைக்கூட நன்கறிந்தவர் பாரதி.

ஆனால் பாரதி ஒரு சிறந்த கவிஞர் மட்டுமல்ல பத்திரிகையாளராகவும் இருந்தபடியால், உரைநடையிலும் அவர் வல்லவராகத் திகழ்ந்தவர்.

வெள்ளையனின் ஆட்சியை வெறுத்தாலும் அவனது மொழியை வெறுக்கவில்லை அவர்.

அவரது காலத்தில் மட்டுமல்ல, தமிழ் எழுத்தாற்றல் உள்ள பலர் இன்றும் கூட ஒரு சிறிய வட்டத்துக்குள்ளேயே அடைபட்டுக் கிடக்கிறார்கள் என்பதையும் சொல்லியாக வேண்டும்.

பாரதிதாசன், பாவலர் வரதராஜன் போன்ற கவிஞர்கள் மற்றும். கு.ப.ரா. வ.ரா. க.நா.சு, தி.ஜ.ர. போன்ற பிரபல எழுத்தாளர்கள் பலரும் கூட, அவர்களது தகுதிக்கேற்ப தங்கள் வாழ்நாளில் பணம், புகழ் சம்பாதிக்கவில்லை என்பது உண்மை. அம்மாமேதைகளின் காலங்களில் கம்ப்யூட்டர்கள் போன்ற கருவிகள் இன்று எழுத்தாளர்களுக்கு உதவுவதுபோல் அமைந்து இருக்கவில்லை தான்.

ஆனால்...
கம்ப்யூட்டர்களில் தேர்ச்சி பெற்ற, இக்காலத்தில், தமிழில் ஜனரஞ்சகமாக எழுதிப்புகழ்பெற்ற, சமீபத்தில் மறைந்த சுஜாதா என்கிற ரங்கராஜன் கூட எழுத்துக்கள் மூலமாக தகுந்த அளவு பெயர், புகழ், செல்வம் ஆகியவற்றை சம்பாதிக்கவில்லை என்ற எனது வாதத்தை அடுத்து வரும் பத்திகள் நிரூபிக்கும்.

நிற்க
பாரத நாட்டு மொழிகளில் 'எழுத்துழைப்புக்கு' தகுந்த ஊதியம் கிடைக்கவில்லைஎன்று அங்கலாய்க்க்கும் அதே நேரத்தில் நம்மவர்களுக்கும், வளர்ந்த நாடுகளின் எழுத்தாளர்களுக்கும் இடையே சிலஅடிப்படை வித்தியாசங்கள் உள்ளன என்பதையும் ஒப்புக்கொண்டாக வேண்டும்.

ஒரு பானை சோற்றுக்கு ஒருசோறு பதம் என்ற பழமொழிக்கேற்ப இரு எழுத்தாளர்களுடன் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை விவரிக்கிறேன்.

இன்று உலக எழுத்தாளர்களில் மிகப்பிரபலமாக இருப்போர்களுள் ஒருவர் ஃபிரடரிக் ஃபோஸைத். 1938-ல் பிறந்த இவர் ஆரம்ப காலத்தில் ஒரு பத்திரிகையாளர். ஆங்கில செய்திஸ்தாபனங்களான ராய்ட்டர்ஸ் மற்றும் பி.பி.சி. நிறுவனங்களில் 1961 முதல் 1967 வரை வெளியுறவுச் செய்தி முகவராகவும், போர் நிருபராகவும் பணிபுரிந்தார்.

ஃபிரடரிக் அனுப்பிய சில செய்திகளை பி.பி.சி. அமைப்பால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போகவே, வேலையைத் துறந்து 1968ல் முழுநேர எழுத்தாளரானார். 1969ம் ஆண்டு 35 நாட்களில் தனது முதல் முழுநீள புதினமான ''தி டே ஆப் தி ஜக்கால்'' -- அதை தமிழில் ''நரியின் நாள்'' என்று மொழி பெயர்க்கலாம் - எழுதி முடித்தார்.

சுமார் ஒன்றரை ஆண்டு காலம் இவர் பதிப்பகங்களின் ஏஜெண்டுகளிடம் கெஞ்சிக்கொண்டிருந்த நேரத்தில் அக்கதையின் முக்கிய பாத்திரமான பிரான்ஸ் நாட்டு அதிபர் சார்லஸ் டி கால் இயற்கை எய்தினார்.

அதில் சிக்கலென்னவென்றால் அந்த நாவல் டி காலைக் கொல்லத் தீட்டப்பட்ட, ஆனால் முறியடிக்கப்பட்ட ஒரு சதித்திட்டம் பற்றியது.

''யோவ், சாதாரணமாகச் செத்தவனைக் கொல்ல சதின்னு ஒரு கதையைச் சொல்ல வந்துட்டியே? எவன்யா படிப்பான்?'' என்று பதிப்பகத்தார்கள் கிண்டல் செய்தனர்.

ஃபோர்ஸைத் சேமித்து வைத்திருந்த பணம் கிட்டத்தட்ட காலியான நேரத்தில் ஒரு பதிப்பகம் அவர் மீது பரிதாபப்பட்டு ஆயிரம் பிரதிகளை வெளியிட்டது. பத்திரிகை விமர்சனங்கள் அப்புத்தகத்தை வானளாவப் புகழ்ந்தன. 1971ல் மட்டும் அப்புத்தகம் சுமார் 50000 ஆயிரம் பிரதிகள் விற்றது. சில கோடி பிரதிகள் விற்பனையான பிறகும். அப்புத்தகத்தின் புதிய பதிப்புகளை உலகம் முழுதும் உள்ள கடைகளில் இன்றும் காணலாம்.

பற்றாக்குறைக்கு 1973ல் ஃப்ரெட் ஜிமமர்மேன் அதைப் படமாக்கினார். அதுவும் சக்கைப்போடு போட்டது.

அதே கருவை வைத்து 1997 ஆம் ஆண்டு ''தி ஜக்கால்” என்ற வேறொரு ஆங்கில வெற்றிப்படமும் வெளிவந்தது.

ஃபோர்ஸைத் நாவல்களை விரும்பிப்படிக்கும் கோடானுகோடி ரசிகர்களுள் நானும் ஒருவன்.

1989ல் ஃபோர்ஸைத்தின் படைப்பான ''தி நெகோஷியேட்டர்'' என்ற நாவலில் ' ஒரு கற்பனை அமெரிக்க ஜனாதிபதியின் மகன், இடுப்பிலுள்ள பெல்ட்டில் பொருத்தப்பட்டுள்ள வெடிகுண்டு வெகுதூரத்திலிருந்து இயக்கப்பட்டு கொல்லப்படுவதாக' சித்தரிக்கப்பட்டிருந்தது.

ஃப்ரெடரிக் ஃபோர்ஸைத்

1991ல் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொல்ல ஐடியா வழங்கிய புத்தகம் இதுதான் என்ற பேச்சு அடிபட்டது.

1992ல் நான் லண்டனில் இருந்தபோது மிகவும் சிரமப்பட்டு ஃபோர்ஸைத்தை தொடர்பு கொண்டேன்.

நகரிலிருந்து சுமார் 60 மைல் தூரத்தில் ஒரு சிறு கிராமத்தில் தான் வசிப்பதாகவும், அடுத்த நாள் மதியம் சரியாக பன்னிரண்டு மணிக்கு மேல் சுமார் ஒரு மணிநேரம் பேசலாம் என்றும் தொலைபேசியில் தெரிவித்தார் ஃபோர்ஸைத்.

அவர் வீட்டுக்குச் செல்ல சரியான வழி, ரயிலின் எண், வழி தவறினால் தொலைபேசி மூலம் உதவும் எண்கள் போன்ற விஷயங்களைத் தெளிவாக விளக்கிச் சொன்னார் அவர்.........


மேலும் படிக்க: http://koodu.thamizhstudio.com/katturaigal_7.php


Friday, April 16, 2010

இயேசு கிறிஸ்துவின் வரலாற்றுப் பின்னணி அல்லது கிறிஸ்து ஏன் உவமைகளினூடே பேசினார்?


இயேசு கிறிஸ்துவின் வரலாற்றுப் பின்னணி அல்லது கிறிஸ்து ஏன் உவமைகளினூடே பேசினார்?

ம.ஜோசப்வெள்ளி, 16-04-2010 ; 10:10 PM

இயேசு கிறிஸ்துவின் காலத்தின் வரலாற்றுப் பின்னணி குறித்து அடிப்படையான விபரங்களை இக்கட்டுரை ஆராய்கிறது. அவரது வரலாற்றுப் பின்னணி, அவரைக் குறித்தும், அவரது போதனைகள் குறித்தும் புதிய புரிதல்களுக்கு வழிவகுக்கும் என்பதை நிறுவுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

வரலாற்றுப் பின்னணி

கிறிஸ்து பிறப்பு வரையுள்ள இஸ்ரவேலரின் வரலாறு குறித்த இச்சுருக்கமான குறிப்பு இக்கட்டுரையின்
சில விபரங்ளை புரிந்து கொள்ள உதவும். பெரு வெள்ளத்தில் காப்பற்றப்பட்ட நோவாவின் புதல்வர்களான சேம், காம், யாபேத்து ஆகியோர்களில், சேமின் (Shem) வழிமரபினர் செமிட்டிக் இனத்தவர் (semitic tribes) என அழைக்கப்படுகின்றனர்.

இஸ்ரவேலர் ஒரு செமிட்டிக் இனத்தவர் ஆவர். செமிட்டிக் இனத்தவராகிய ஆபிரகாம் ஏறக்குறைய கி.மு.1900-ல், குடும்பத்துடன் கானான் தேசத்திற்கு வருகிறார். அவர்களது மூதாதையர்கள் ஊர் (சுமேரிய நாகரீக நகர்) பகுதியைச் சார்ந்தவர்கள். கானான் தேசம் என்பது இப்போதுள்ள இஸ்ரவேல் நாடு, பாலஸ்தீன நாடு, மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைக் குறிக்கும். அவரின் வழி மரபினரான யாக்கோபு, எகிப்து நாட்டிற்கு, கானான் தேசத்தில் ஏற்பட்ட மாபெரும் வறட்சியின் காரணமாக, குடும்பத்துடன் சென்றார். (யாக்கோபின் 11-ஆம் புதல்வர், ஜோசப், அவரின் சகோதரர்களால் அடிமையாக எகிப்திய வியாபாரிகளுக்கு விற்கப்பட்டு, சில காலம் கழித்து, நன்னடைத்தையாலும், கூர்மையான அறிவாலும், எகிப்தின் பாரோவுக்கு (pharaoh) ஆலோசகராயிருந்தார், அவர் தனது தந்தையின் குடும்பத்தினரை, பாரோவின் அனுமதியுடன் எகிப்திற்கு அழைத்துக் கொண்டார்). ஆபிரகாமின் சந்ததியினர், எகிப்தியர் பொறாமை கொள்ளும் அளவுக்கு, பெரும் மக்கள் திரளாக பெருகினர். காலப்போக்கில் அவர்கள் எகிப்தில் அடிமைகளாயினர்.

காலம் ஏறக்குறைய கி.மு 1700 - கி.மு.1250.

ஏறக்குறைய கி.மு.1250-ல் மோசேயினால் அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கப்பட்டு, கானான் தேசத்தை அடைந்தனர். அங்கு இஸ்ரவேல் அரசை நிறுவினர். சவுல், தாவீது, சாலமன் போன்ற மன்னர்கள் ஆட்சி புரிந்தனர்.

தாவீது அரசரின் காலம் ஏறக்குறைய கி.மு.1000.பின் அரசு யூத அரசு, இஸ்ரவேல் அரசு என இரண்டாக உடைகிறது.

பின் அசிரியர்களும், பாபிலோனியர்களும் அவ்வரசுகளை ஆண்டனர். ஏறக்குறைய கி.மு.587ல் பாபிலோனிய மன்னன் நேபுகாத்நேச்சர் யூதர்களை சிறை பிடித்துச் சென்றான். அதன் பின் பாரசீக ஆட்சிக்குட்படுகிறது. பாரசீக மன்னன் சைரஸ் கி.மு. 538-ல் யூதர்கள் தாய் நாடு திரும்ப அனுமதிக்கின்றான். பின் கி.மு. 333 பேரரசர் அலெக்சாண்டரின் ஆட்சியின் கீழ் இஸ்ரவேல் நாடு வந்தது. அதன் பிறகு இஸ்ரவேலின் யூதா குலத்தைச் சார்ந்த மக்கபேயர்கள் கி.மு 166 முதல் கி.மு 63 வரை பிற படையெடுப்புகளிலிருந்து காத்தனர். ரோமப் படைத் தளபதி போம்பே இஸ்ரயேலைக் கி.மு 63-ல் கைப்பற்றினான். அதன் பின் அது ரோமப் பேரரசின் ஆட்சியின் கீழ், பெரிய ஏரோது (Herod the Great) உள்ளிட்ட ஆளுனர்களால் ஆட்சி செய்யப்பட்டது. இவர்தான், இயேசு பிறந்த போது, குழந்தைகள் படுகொலைக்குக் (massacre of innocents) காரணமானவர். இம்மக்களின் மிக முக்கியமான
குணம், மேற்குறிப்பிட்ட வரலாறு முழுவதையும் பதிவு செய்துள்ளனர். அதுதான் விவிலியம் (Bible). உலகிற்கு இஸ்ரவேலரின் நன்கொடை இதுவாகும்.

பேரரசர் அகஸ்டஸ் சீசர் காலத்தில், ரோம ஆட்சிக்குட்பட்ட யூதேயாவில் உள்ள பெத்லகேமில் இயேசு
கிறிஸ்து பிறந்தார். காலம் ஏறக்குறைய கி.மு 5 அல்லது 6. யூதேயாவில்தான் ஜெருசலேம் நகரம் இருந்தது.

யூதேயாவின் ஆளுனரின் அரண்மனை அங்குதானிருந்தது. பெரிய ஏரோதிற்கு பயந்து, எகிப்தில், ஜோசப், குழந்தை இயேசு மற்றும் மேரியுடன் சில காலம் வாழ்ந்தார். பின் அவரது இளமைக்காலம் கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரில் கழிந்தது. அதனாலேயே நசரேயன் என அவர் அழைக்கப்படுகிறார். அதுவும் ரோம ஆட்சிக்குட்பட்டதாகும்.

ஏறக்குறைய கி.பி. 27-ல் அவர் போதிக்க ஆரம்பித்தார். கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் மக்கள் பணி, வேதாகமத்தின்படி, கலிலேயாவிலிருந்து, யூதேயா வரைக்குட்பட்ட பகுதிகளிலேயே இருந்தது.

இப்பகுதிகளில் வாழ்ந்த மக்களிடையேதான் அவர் போதித்தார். ஏறக்குறைய கி.பி. 30-ல் அவர் ரோம ஆளுனர் பிலாத்துவினால், யூத குருமார்களின் பொய்க் குற்றச்சாட்டுகளின்படி, மரண தண்டனை விதிக்கப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டுக் கொல்லப்பட்டார்.

யூத சமூகம்

யூத சமூகம் மிகுந்த சடங்கு, ஆச்சாரங்களுக்குட்பட்ட ஒரு மூடுண்ட சமூகமாகவே இருந்தது.

ரோம ஆளுனர் கீழ் அரசியல் அதிகாரம் இருந்தது. அக்கால கட்டத்தில், அச்சமூகத்தில் பரிசேயர் மற்றும் சதுசேயர் என்ற இரு பிரிவினர் இருந்தனர். மேலும் திருச்சட்ட அறிஞர்களும், யூத குருமார்களும் இருந்தனர். அவர்கள் அச்சமூகத்தில் உயர் குடிமக்கள் ஆவர். ஆலயங்களிலும், தொழுகைக்கூடங்களிலும், மற்ற பிற பொது இடங்களிலும் அவர்களே முதன்மையானவர்கள். குறிப்பாக சொல்ல வேண்டுமெனில், சமூகத்தைப் பொறுத்தவரை அவர்களே அதிகாரம் பெற்றவர்கள்.

திருச்சட்டம் மோசேயினால் அச்சமூகத்திற்குக் கொடுக்கப்பட்டது. 10 கட்டளைகளும், பிற கட்டளைகளும் அதில் அடங்கும்.

இது அசீரிய மன்னர் ஹம்முராபியின் சட்டத் தொகுப்பை ஒத்திருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பரிசேயர்(Pharisees)

பரிசேயர் என்றால் தனித்துவம் உடையவர்கள் (Separated One) என பொருள் கொள்ளலாம். இவர்கள்
திருச்சட்டத்தை மிக உறுதியாகப் பற்றிக் கொண்டவர்கள். ஓய்வு நாளை மிகத் தீவிரமாகப் பின் பற்றுபவர்கள். இவர்களில் ஒரு பிரிவினர் ஓய்வு நாளில் போர் தொடுத்தால் இவர்கள் திருப்பி தாக்கமாட்டார்கள். சிரியாவை ஆண்ட ரோம படைத் தளபதிகள் ஓய்வு நாளில் போர் தொடுத்து வெற்றி அடைந்துள்ளனர். அந்த அளவிற்கு சட்ட திட்டங்களில் பற்று உடையோர் ஆவர். பரிசேயர் பாவிகளுடனும், வரி தண்டுவோரிடமும் பழகமாட்டார்கள். அவர்கள் வீடுகளுக்குச் செல்ல மாட்டார்கள். இவர்களில் மற்றொரு பிரிவினர் செலூட்கள் (zealots) ஆவர். இவர்கள் போராளிகள் என்றால் மிகையில்லை.

யூத சமூக சடங்கு, சட்ட திட்டங்களை பின்பற்றாமல், ரோம, கிரேக்க சடங்குகளைப் பின்பற்றும் யூதர்களை கொல்வதும், அவ்வாறு பின்பற்ற கட்டாயப் படுத்தும் ஆட்சியாளர்களுக்கு எதிராக போர் புரியும் இயல்பும், உடையவர்கள்.

(இவர்களின் தொல்லையால்தான், கி.பி.70 ரோம பேரரசர் டைடஸ், புகழ் பெற்ற, சாலமோன் அரசரால் கட்டப்பட்ட எருசலேம் தேவாலயத்தை அழித்தார் என வரலாறு கூறுகிறது.)

சதுசேயர்(Sadducees)

இவர்களின் திறந்த மனமுடையவர்கள் எனக் கருதப்படுகின்றனர். ஆட்சியாளர்களுடன் நல்லுறவு கொண்டு, அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டனர். கோவில் நிர்வாகம் இவரகளின் கையில்தானிருந்தது. இவர்களும் மக்கள் மேல் அதிகாரம் கொண்டவர்கள். பரிசேயர், சதுசேயர்கள் வேறு வேறான கொள்கை உடையவர்களாயிருந்தும், கிறிஸ்துவை எதிர்ப்பதில் ஒன்றாக செயல்பட்டனர்.

மக்கள்

ரோம பேரரசில் மக்கள் ஆட்சியால் அடிமைப்பட்டு கிடந்தனர். அவர்களின் அடிமை வரலாறு மிக நீண்டது. அசிரியர்கள் காலம் முதல் இது ஆரம்பிக்கின்றது. மேலும் மக்கள் சமூக ரீதியில், பரிசேயர், சதுசேயர்களால் அடிமைபட்டுக் கிடந்தனர்.

அவர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க அவர்கள் மீட்பரை எதிர்பார்த்திருந்தனர்.

கிறிஸ்துவின் மக்கள் பணி

கிறிஸ்துவின் மக்கள் பணி (வேதாகமப்படி திருப்பணி) மூன்றாண்டுகள் மட்டுமே. அப்போதனைகள் இன்றளவும் நிலைத்துள்ளன. பேசப்படுகின்றன. விவாதிக்கப்படுகின்றன. பெரும்பாலானோரால் பின்பற்றப்படுகின்றன. கிறிஸ்துவின் போதனைகள் அதிகார மையங்களுக்கு எதிரானதாக இருந்தது. இயேசுவுக்கு இருந்த முதன்மையான நோக்கமே, மக்களை யூத அதிகார மையங்களின் (குருமார்கள் மற்றும் பிற) பழமைவாத பிற்போக்குப் பிடியில் இருந்து மீட்டு எடுப்பதும், இறைவனின் ஆட்சியை
(Kingdom of God) நிறுவுவதுமே ஆகும். இதை அன்பின் அரசு என்கிறது வேதாகமம்.

பரிசேயர்கள், சதுசேயர்களை மிக அதிகமாக விமர்சித்தார். 'மாயக் காரர்கள்', என சாடினார். 'சுமக்க முடியாத நுகத்தடியை மக்கள்மேல் சுமத்துகிறீர்கள்', எனவும் விமர்சித்தார். 'இறைவனின் இல்லத்தை கள்வர் குகையாக்கினீர்கள்', என குற்றம் சுமத்தினார், இயேசு. அக்காலங்களில் பெரிய ஆலயங்கள், முக்கிய வியாபாரத் தளங்களக இருந்தன என்பது நினைவு கொள்ளத்தக்கது. திருமுழுக்கு யோவான் (John the Baptist), அவர்களை 'விரியன் பாம்புக் குட்டிகளே', என கூறினார்.

இயேசு, 'ஓய்வு நாளும் மானிட மகனுக்கு கட்டுப்பட்டதே', என்றார். அவர் பாவிகளுடனும், வரி தண்டுவோரிடமும் பழகினார். தாழ்த்தப்பட்ட சமாரியப் பெண்ணிடம் தண்ணீர் வாங்கி அருந்தினார். அவரின் சீடர்கள், செம்படவர்கள் மற்றும் சாதாரண மக்கள். சில பெண்களும், சீடர்கள் என்பது ஆச்சரியத்திற்கும், ஆய்வுக்கும் உள்ள விபரமாகும். 'கிறிஸ்து மக்களினிடையே மக்களுக்காக வாழ்ந்தார்', என்றால் மிகையில்லை. பெரும் மக்கள் கூட்டம் அவரைப் பின் தொடர்ந்தது.

'திருச்சட்டத்தை நிறைவு செய்ய வந்தேன்', என்றார். புதிய அன்பின் கட்டளைகளைக் கொடுத்தார். மக்களை
அன்பின் அரசிற்கு தயார் செய்தார். சமூத்தின் மீது ஆதிக்கம் கொண்டவர்களின் இருப்பை கேள்விக்கு உள்ளாக்கியது, அவரது போதனைகள். பழமைவாதிகளின் அதிகாரம் ஆட்டம் கண்டது. அவர்கள், இயேசுவைக் கொல்ல தக்க சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தனர், என புதிய ஏற்பாடு பலமுறை குறிப்பிடுகிறது. கிறிஸ்துவும், தமது போதனைகளுக்காக, தாம் கொல்லப்படுவோம், என்பதை திட்டவட்டமாக அறிந்திருந்தார். அவரே, தனது சாவை சில முறை முன்னறிவித்தார், என புதிய ஏற்பாடு குறிப்பிடுகிறது.

கி.பி. 28ல், கிறிஸ்துவிற்காக, வேதாகமக் கூற்றுப்படி, வழியை ஆயத்தப்படுத்திய இறைவாக்கினர், திருமுழுக்கு யோவான் கொல்லப்பட்டார். இயேசு, 'எருசலேமே, இறைவாக்கினர்களை (தீர்க்கதரிசிகளை) கல்லெறிந்து கொல்பவளே', என எருசலேம் குறித்துக் கூறினார். ஆகவே, அவர் சாவை எதிர் நோக்கியிருந்தார், என்றால் அது மிகையானது இல்லை. அவரது சிறப்பானகுணம், அவரது போதனைகளுக்கு உண்மையாய் வாழ்ந்தது மட்டுமின்றி, உயிரையே கொடுத்ததுதான்.
உவமைகளின் நோக்கம் இயேசு கிறிஸ்து பேசிய மொழி, அக்காலத்தில், அப்பகுதி மக்கள் பேசிய மொழியான அரமாயிக் ஆகும். அது மேன் மக்களின் மொழியல்ல. Passion of Christ படத்தில் பாத்திரங்கள் இம்மொழியை பேசுகிறார்கள் என நினைக்கின்றேன். இயேசு பெரும்பாலும் உவமைகளாலேயே அதாவது சிறு சிறு கதைகள் மூலம் பேசினார். அவரது நல்ல சமாரியன் கதையை, உலகின் முதல் மனோதத்துவக் கதையாக அத்துறை சார்ந்த ஒரு அகராதி (encyclopedia) குறிப்பிடுகிறது. கிறிஸ்து மொத்தம் 39 உவமைகள் அல்லது கதைகள் கூறியுள்ளார் என ஆய்வுகள் ( நான்கு நற்செய்தி நூல்களின் படி) தெரிவிக்கின்றன. பழைய ஏற்பாட்டிலும் நிறைய உவமைகள் உள்ளன. அவற்றையும் கிறிஸ்து கையாண்டிருக்கிறார். உ.ம். மூலைக்கல் உவமை. கிறிஸ்துவின் புகழ் பெற்ற கட்டளையான,
'உன்னைப் போல உன் அயலானையும் நேசி' என்பது மோசேயின் கட்டளைகளில் உள்ளது. அவரது வேரகள், யூத புனித நூல்களில் (Jewish Scriptures) இருந்துள்ளது என இதன் மூலம் புரிந்து கொள்ளலாம். மிக இளமைக் காலத்திலேயே அந்நூல்களை கற்று தெளிந்தவராயும், அவை குறித்து வல்லுனர்களிடையே விவாதிக்கிறவராயும் இருந்தார், என புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்படுகிறது. இது அவரது அறிவைக் குறித்து, நாம் புரிந்து கொள்ள உதவும்.

ஏன் அவர் உவமைகளினூடே பேசினார்? மக்களுக்கு புரியும்படி நேரிடையாக பேசியிருக்கலாமல்லவா?
அவரிடம், சீடர்கள், ஏன் மக்களிடையே உவமைகளினுடே பேசுகின்றீர்? எனக் கேட்டதற்கு, 'கேட்பதற்கு, காதுள்ளவன் கேட்கட்டும்', என மறுபடியும் குறியீடாகவே பதிலளிக்கிறார். 'யாருக்கு அருளப்பட்டிருகிறதோ, அவர்களே புரிந்து கொள்வர்', எனப் பொருள் படும்படி பதிலளிக்கிறார்.

'தமது போதனைகளுக்காக, தாம் கொல்லப்படுவோம்', என்ற சூழலில், அவர்களை எதிர்த்து பேச வேண்டிய கட்டாயத்தில், அவர் எப்படி நேரிடையான மொழியில் பேச முடியும்?, என்பது ஒரு முக்கியமான கேள்வி. ஆகவே அவர் குறியீட்டு மொழியை தேர்வு செய்தார், எனலாம்.

அவர், காலம் கடந்து, இனம், மொழி கடந்து மனிதனை நேசித்தவர். அவர் போதித்த அன்பின் அரசை, ஒரு கடுகு விதைக்கு ஒப்பிடுகிறார். அது வளர்ந்து பெரிய மரமானது (அப்பகுதியில் கடுகு செடி பெரிய மரமாய் வளரும் இயல்புடையது).

வானத்து பறவைகள் அங்கு வந்தடைந்தன என்கிறார். ஒரு பெண் கைபிடியளவு புளித்த மாவை, ஒரு மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுதும் புளிப்பேறியது. காந்தி, தனது அஹிம்சை தத்துவத்தை கிறிஸ்துவிடமிருந்து பெற்றதாக கூறப்படுகிறது. மார்டின் லூதர் கிங்கும் கிறிஸ்துவின் போதனைகளிலிருந்து உந்துதல் பெற்றதாகக் கூறப்படுகிறது. மேலும் அவர், தனது போதனைகள் மேல் கொண்டிருந்த நம்பிக்கை அளப்பரியது. காலம், இனம், மொழி கடந்து தனது போதனைகள் மக்களை
சென்றடைய வேண்டுமென விரும்பினார். அதற்காக தனது சீடர்களை தயார் செய்தார். அதனாலேயே, அவர் காலம் கடந்து நிற்கும் குறியீட்டு மொழியில் பேசினார். மேலும், கதைகள், மக்கள் மனதில் எளிதில் பதிந்துவிடுவதும், ஒருவரிடமிருந்து, மற்றொருவருக்கு எளிதில் பரவுவதற்கும் உகந்ததும் ஆகும். அதனாலேயே அவை காலம் கடந்து நிற்கின்றன.

இன்றைக்கும் அவரது அன்பின் தத்துவத்தின் தேவையை நாம் உணர முடியும். மனித நேயமும், சக மனிதன் மீதான அன்பும், தற்போதய சூழலுக்கு மிகவும் இன்றியமையாததாகும். இச்சூழ்நிலையில் கிறிஸ்துவின் போதனைகள் மீதான வாசிப்பும், ஆய்வும் தவிர்க்கவியலாதது என்பதால், அதற்கான ஒரு ஆரம்ப முயற்சியாக இக்கட்டுரை எழுதப்படுகிறது.

முக்கிய ஆதார நூல்கள்
[1] பரிசுத்த வேதாகமம் - கத்தோலிக்க கிறிஸ்தவ மொழிபெயர்ப்பு.
[2] பரிசுத்த வேதாகமம் - சீர்திருத்த கிறிஸ்தவ மொழிபெயர்ப்பு.
[3] The Open Bible (The New King James Version)
[4] World History by B.V..Rao, Sterling Publishers Private Ltd, New Delhi


more: http://koodu.thamizhstudio.com/katturaigal.php