Tuesday, April 13, 2010

ஸ்ரீ வில்லிப்புத்தூரில் கோடைக்கால குறும்படப் பயிற்சிப் பட்டறை

நாள்: 07-05-2010 முதல் 14-05-2010 வரை.
இடம்: ஸ்ரீ வில்லிப்புத்தூர்
கட்டணம்: தொலைபேசி வாயிலாக அறிந்துக் கொள்ளவும்.

நிழல் - தமிழ்நாடு குறும்பட / ஆவணப்பட படைப்பாளிகள் சங்கம் இனைந்து நடத்தும் 19 வது குறும்படப் பயிற்சிப் பட்டறை ஸ்ரீ வில்லிப்புத்தூரில் மே 7 முதல் 14 வரை தொடர்ந்து 8 நாட்கள் நடைபெற இருக்கின்றன.

கல்லூரிகளில் மட்டுமே கற்றுத்தரப்படும் திரைப்படக் கல்வியை, கிராமப்புற மாணவர்கள் - இளைஞர்கள் பெற வேண்டும் என்கிற குறிக்கோளோடு கேமரா, திரைக்கதை, படத்தொகுப்பு, நடிப்பு முதலியவை கற்றுத் தரப்படுகிறது. இறுதிநாள் மாணவர்களே குறும்படம் எடுக்க பயிற்சி தருகின்றனர். உணவு, உறைவிடம், பயிற்சி கருவிகளுக்கு கட்டணம் உண்டு.

பட்டறையில் 50 குறும்பட / ஆவணப்படங்களும், உலகப் புகழ் பெற்ற ஐந்து படங்களும் திரையிடப்படும். பயிற்சி பெற விரும்புவோர் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

தொடர்புக்கு: ப. திருநாவுக்கரசு 9444484868.

முகவரி:

12/28 இராணி அண்ணா நகர், சென்னை 600078


கவிதை உறவு - குறும்படப் போட்டி 2010(இறுதித் தேதி: 20-04-2010)

கவிதை உறவு - குறும்படப் போட்டி 2010(இறுதித் தேதி: 20-04-2010)

கவிதை உறவு தமிழ் மாதப் பத்திரிகை நடத்தும் 2010 ஆம் ஆண்டுக்கான குறும்படப் போட்டிகளுக்கு, 2009 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட குறும்படங்கள் வரவேற்கப்படுகின்றன.

பரிசுகள்:

முதல் பரிசு: ரூ.5000/-
இரண்டாம் பரிசு: ரூ.3000/-
மூன்றாம் பரிசு: ரூ.2000/-

நிபந்தனைகள்:

1. குறும்படங்கள் 2009 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும்.

2. குறும்படங்கள் சமூகப் பிரச்சனை சார்ந்து எடுக்கபட்டிருக்க வேண்டும்.

3. கடிதப் போக்குவரத்து வேண்டாம்.

4. குறும்படங்கள் 30 நிமிடத்திற்குள் இருக்க வேண்டும்.

5. குறும்படங்கள் வந்து சேர வேண்டிய
இறுதித் தேதி: 20-04-2010

குறும்படங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதாக்ரிஷ்ணன்,
420 E, மலர் காலனி, அண்ணா நகர், சென்னை - 600040

http://thamizhstudio.com/competitions_16.php



அயல் கவிஞர்கள் - கேரி ஸ்நைடர்

சான்ஃபிரான்சிஸ்கோவில் பிறந்த, வளர்ந்த அமெரிக்க கவிஞர். ஜப்பானிய மற்றும் சீன மொழிகள் கற்றவர். விறகுடைப்பவராக, தச்சராக, மாலுமியாகப் பணிபுரிந்தவர். தற்போது கலிஃபோர்னியா டேவிஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப்பேராசிரியர். 1975ல் கவிதைக்கான 'புலிட்ஸர்' பரிசு பெற்றர். ஜென் பௌத்தத்தில் ஈடுபாடுடையவர். சில வருடங்கள் ஜப்பானில் வாழ்ந்தவர்.

'மேற்கத்திய கீழைத்தேய பண்பாடுக்கிடையிலான, அமெரிக்காவின் இயந்திரத் தொழில் நுட்பத்திற்கும் இயற்கைக்குமிடையிலான, நகரத்திற்கும் மண்ணிற்குமிடையிலான, வரலாற்றுக்கும் நிகழ்காலத்து சமூகத்திற்கிடையிலான உறவுகள் குறித்துப் பெரிதும் அக்கறைகொண்டுள்ளவர்.

கவிஞர் மட்டுமல்லாது கட்டுரையாளரும், மொழிபெயர்ப்பாளரும், சுற்றுச்சூழலளாரும் ஆசியருமாக இருந்து வருபவர்.

ஜாக் கெரோக்கின் ''The Dharma Bums'' நாவலின் முக்கிய பாத்திரம் ஒன்றிற்கான உத்வேகமாக இருந்தவர்.

950களின் Beat Generation இயக்கத்தில் ஆலன் கின்ஸ்பெர்க் மற்றும் ஜாக் கெரோக்குடன் சேர்ந்து இயங்கியவர்.

இவரது சிந்தனையில் ஜென் பௌத்தத்திற்கு முக்கிய பங்குண்டு.

நேர்காணல் - கேரி ஸ்நைடர்

கே - தனிப்பட்ட முறையில், கிராமிய வாழ்வில் உங்களுக்குள்ள ஈர்ப்பு என்ன?

ப - கவிதை மற்றும் நகரம் (அ) கிராமப்புறம் குறித்துள விவாதங்கள் ஒருபுறமிருக்க, நகரம் சிக்கலாகியிருக்கிறது என்பது தெளிவானது. முற்றிலும் தெளிவானது. வாழ்வதற்கு மககள் பிற வழிவகைகளைத் தேடத் தொடங்குவது இயல்பானதே. கிராமப்புற வாழ்வில் உள்ளார்ந்த நிறைவு இருக்கிறது. சில பேருக்காவது நிறைய சந்தோஷங்கள் இருக்கின்றன. வேலை சிரமமானது. தனது தண்ணீர், எரிபொருள், காய்கறிகள் முதலானவற்றிலிருந்து அந்நியப்பட்டிருப்பதில்லை. அவை அடிப்படையானவை. பழங்காலத்து மானுட அடிப்படைகள்.

லட்சோப லட்சம் ஆண்டுகளாக மக்கள் எப்படி வாழ்ந்து வந்திருந்தார்கள் என்னும் அடிப்படைகளிலிருந்து மிகவும் விலக்கப்பட்டுவிட்டால், மானுட படைப்பாக்கமும் கலைகள் அனைத்தும் வாடத் தொடங்கிவிடும் என்று கூறுவது அதீதமானதாய் இருக்காது. வெயில், தண்ணீர் மற்றும் இலையின் நிகழ்ச்சிப்போக்கால் இவ்வுயிர் மண்டலத்திற்கு கொண்டுவரப்பட்ட மிருகமே நாம் அவற்றிடமிருந்து மிகத் தொலைவுக்கு விலகிச் செல்கிறோமாயின் தாயிடமிருந்தும் நமது பாரம்பரியத்திலிருந்தும் மிகத் தொலைவுக்கு விலகிச்செல்பவர்களாகவே இருப்போம். ஆனால் எனது சில நல்ல கவிதைகளை, மாதக்கணக்கில் ஒரு பசிய இலையினையோ ஈயினையோ காணாது. கப்பல் டேங்கரில் இயந்திர அறையில் பணிபுரிகையில் எழுதியிருக்கிறேன். அது ஒரு பிரச்சினையல்ல. உங்கள் பாதங்களை எங்கே பதிக்கின்றீர்கள். உங்கள் குழந்தைகளை எங்கே வளர்க்கிறீர்கள். உங்கள் கைகளால் என்ன செய்கிறீர்கள் என்பதே பிரச்சனை. இப்போது கப்பலின் இயந்திர அறையில், என் உடலாலும் கைகளாலும் வேலைசெய்வது சில வகைகளில், இந்த அழகான காட்சி கண்ணுக்குக் கிடைக்கின்றன இடத்தில் அமர்ந்து தொடர்ச்சியாக தொலைபேசியில் பேசுவது, தட்டச்சுப் பொறியைத் தொடாதபடி தட்டச்சு செய்வது என்பவற்றைவிடவும், குறைந்த அளவே அந்நியமாதல் கொண்டது. அத்தருணத்தில் உடம்பைப்பயன்படுத்துவது புலன்களை ஈடுபடுத்துவதுதான் முக்கியமானது.

கே - எலியட்டைக் குறிப்பிட்டீர்கள். எலியட் மிகவும் அறிவார்த்தான கவிஞர் இல்லையா?

ப - எலியட்டிடம் வேடிக்கையாக காணப்படுவது அவரது புத்திசாலித்தனம் மற்றும் குறிப்பிட்ட திசை வழிக்கு உங்களைச் செலுத்திடும் மேற்கத்தைய குறியீடுகளை மிகவும் தெரிந்தெடுத்த விதத்திலும் வசீகரமாகவும் பயன்படுத்திக் கொள்வது '''From Ritual to Romance'' -னை வாசித்துவிட்டு 'Prolegomena'', "Greek Religion'' என்றெல்லாம் வாசித்துக் கொண்டே போனேன். கடைசியில் அது உங்களை, ஃப்ரான்சின் ட்ராயி ஃப்ரெரிகுகைகளுக்குக் கொண்டு சேர்க்கும் சாரமுள்ள எதனையும் பின்தொடர்ந்து போனால் அது உங்களை அங்கே கொண்டு சேர்க்கும். ஆகவே எலியட் அதனை அறியாமலேயே, ஆழ்ந்த திசைவழிகளை நமக்குச் சுட்டிக் காட்டுகிறார். எலியட்டின் படைப்புகளில் எனக்கு மிகவும் பிடித்தது அது ஒரு பெரும் படைப்பு என்றெண்ணுகிறேன். வேர்கள் பற்றிய உணர்வு கொண்டிருந்தார். பவுண்டால் திரும்பிப்பார்க்க இயலாது போயிற்று. வெண்கல காலம் வரை போகக்கூடியவர்தான் அவர். அவரது கற்பனை மேலும் செல்லவிடாது தடுத்துவிடும். ஆனால் புதிய கற்காலம் வரையாவது போக முடிந்தது.

கே. நவீன கவிஞர்களால் புதியகற்காலம் வரை போக முடிகிறது என்னும்போது என்ன கூற வருகிறீர்கள்?

Sunday, April 11, 2010

அங்காடித்தெரு: அன்றாட நெருக்கடிகளுடனான முதல் காதல்



தகவல்-சார் படைப்பு என்ற வகைமை நாவல்களிலும் திரைப்படங்களிலும் உண்டு. நாவல்களில் ஆர்தர் ஹெய்லி உடனே நினைவுக்கு வருபவர். பாலிவுட் படங்களில் மதுர் பண்டார்க்கர் தகவல்-சுவாரஸ்ய படங்களுக்கு பேர் போனவர். உதாரணமாக ”சாந்தினி பார்” மதுக்கூட நடனப்பெண்ணின் வாழ்க்கையை சொன்னது. ”பேஜ் 3” மேல்தட்டு மக்களின் உள்ளீடற்ற பாசாங்கு வாழ்க்கை. ”கார்ப்பரேட்” தனியார் நிறுவனங்களின் இரக்கமற்ற அரசியல். ”டிராபிக் சிக்னல்” பிச்சைக்காரர்களின் சில்லரைகள் நாட்டின் அதிகார வர்க்கத்தையே இயக்குவது குறித்தது. ”பேஷன்” மாடல் பெண்களின் நிரந்தரமற்ற பணி நிலை ஏமாற்றங்கள் மற்றும் சறுக்கல்கள். இத்தகைய தகவல்சார் படங்களின் முக்கிய பண்பு தகவல் செறிவே அவற்றின் சுவாரஸ்யமாக இருப்பது. இந்த பாணி படங்களில் இரண்டு வகை. ஒன்று தகவல்களின் வலிமையால் நிற்கும் படம். இது பலவீனமான திரைக்கதை கொண்டிருக்கும். எந்த உள்ளார்ந்த தேடலும் இருக்காது. மதுர் பண்டார்க்கரின் ”டிராபிக் சிக்னல்” தவிர்த்த பிற படங்கள் அத்தனையும் இந்த வகையறா. இயக்குனரின் அவதானிப்புகளும் தரிசனமும் ஒரு தகவல்-சார் படத்தை மேம்பட்ட தளத்துக்கு கொண்டு செல்லலாம். உலகப்படங்களிலும் ஹாலிவுட்டிலும் பல உதாரணங்கள் சொல்லலாம். எனக்கு பிரியமானது Perfume. பாலிவுட்டில் ”டிராபிக் சிக்னல்” மற்றும் Black Friday ஆகியவற்றை சொல்லலாம். நிழலுலக தாதா வகை படங்களை இவற்றுடன் நாம் குழப்பிக் கொள்ளக் கூடாது. என்னதான கள-ஆய்வுகளால் உருவாக்கப்பட்டிருந்தாலும் ஒரு உணர்வு அல்லது சமூகரீதியான பிரச்சனை அல்லது மோதலை தனது மையமாக கொண்ட படங்கள் இவை. உதாரணமாக ”சத்யா”, ”புதுப்பேட்டை”, ”அஞ்சாதே”. தமிழில் அசலான தகவல்-சார் படத்திற்கான முதல் முயற்சி வசந்தபாலனது: ”அங்காடித் தெரு”. இதை யாரும் கவனிக்காதது, அல்லது பொருட்படுத்த முடியாதபடி படம் உருவானது அதன் தோல்விக்கு முக்கிய காரணம்.



Friday, April 9, 2010

குறும்பட ஆலோசனை



உங்கள் குறும்படங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்க, தயாரிப்பு செலவு, உபகரணங்கள் (கேமரா, லைட்டிங், படத்தொகுப்பு, இசைக் கோர்ப்பு போன்ற தொழில்நுட்ப உதவிகள் குறித்து தேவையை தெரிவிக்க, மேலும் சந்தைப்படுத்துதல் போன்ற குறும்படங்கள் சார்ந்த உங்கள் அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கீழ்க்கண்ட முகவரியில் ஆலோசனை பெறலாம். (முன் அனுமதி பெற்று சந்திக்கவும்)

நேரம்: காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணி வரை

இச்சேவை முற்றிலும் இலவசம்

நூலக வசதி:

ஏதேனும் சிறுகதையை குறும்படமாக்க விருப்பமிருந்து, கதை தேடலில் இருந்தால் நீங்கள் தமிழ் ஸ்டுடியோவின் குறும்பட நூலக வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இங்கே அனைத்து வகையான சிறுகதைகளும் அடங்கிய நூல்களுடன் கூடிய ஒரு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

எண். 41, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024
தொலைபேசி: 9840698236, 9894422268

வேண்டுகோள்:

தமிழ் ஸ்டுடியோவின் குறும்பட நூலகத்திற்காக அனைத்து விதமான திரைப்பட தொழில்நுட்பங்கள், சிறுகதைகள், நாவல், வெளிநாட்டு கதைகள், முக்கிய சம்பவங்கள் அடங்கிய அனைத்து விதமான நூல்களும் தேவைப்படுகிறது. இந்த திட்டத்திற்கு நூல்கள் தந்து உதவிடுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். நூல்கள் எப்படி நிலையில் இருந்தாலும் அனுப்பலாம். இந்த நூல்கள் அனைத்தும், தமிழ் ஸ்டுடியோவின் அலுவலகத்தில் ஆர்வலர்கள் அனைவருக்கும் படிக்க வசதியாக வைக்கபட்டிருக்கும்.

இதுமட்டுமின்றி, முக்கிய சம்பவங்கள், உதாரணமாக வீரப்பன் இருந்தபோது சத்தியமங்கலத்தின் நிலை, தற்போது அந்த கிராம மக்களின் நிலை சார்ந்த தகவல்கள், கிராமங்களின் நிகழும் வித்தியாசமான சடங்குகள், ஏதனும் உங்களிடம் இருப்பின் அவற்றையும் தந்து உதவலாம். அவை தமிழ் ஸ்டுடியோவின் உதவியுடன், ஆர்வலர்களைக் கொண்டு ஆவணப்படமாக உருமாற்றப்பட்டு உலகம் முழுவதும், மக்களின் பரவலான கவனத்திற்கு வைக்கப்படும்.

அனைத்து விதமான நூல்களையும், சம்பவங்களையும் அனுப்ப வேண்டிய முகவரி:

எண். 41, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024



Thursday, April 8, 2010

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 19 வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)


நாள்: சனிக்கிழமை (10-04-2010)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: மாலை மூன்று மணி (3 மணியளவில்)

முதல் பகுதி: (3 மணி) - குறும்பட கலந்தாய்வு

சென்ற மாதம் புதிதாக தொடங்கிய குறும்பட கலந்தாய்வு பகுதியில் "படமெடுக்கலாம் வாங்க" திட்டத்தின் கீழ் கேமரா மற்றும் படத்தொகுப்பு உதவி பெற்ற ஆர்வலர் செந்தில் அவர்கள் இயக்கிய குறும்படம் திரையிடப்பட்டு அது பற்றிய விரிவான கலந்துரையாடல் நடைபெறும். இக்குறும்படம் மூலம் அவர் பெற்ற அனுபவங்கள் குறித்தும், குறும்படம் எடுக்கப்பட்டிருக்கும் விதம் போன்றவை குறித்து அனைத்து ஆர்வலர்களும், தங்கள் கருத்துகளை பகிர்ந்துக் கொள்வார்கள்.

மேலும், இந்த மாதம் ஆர்வமுள்ள ஒரு உறுப்பினருக்கு கேமரா மற்றும் படத்தொகுப்பு வழங்குவது குறித்தான அறிவிப்பும் வெளியாகும்.

இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல்

இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரைபப்ட இயக்குனர், திரு. அகத்தியன் அவர்கள் பங்குபெறுகிறார். குறும்படங்களில் இயக்கம் குறித்தான விரிவான வழிகாட்டல் நடைபெறும்.

திரு. அகத்தியன், வான்மதி, காதல் கோட்டை, கோகுலத்தில் சீதை, ராமகிருஷ்ணா போன்ற திரைப்படங்களின் இயக்குனர் ஆவார். தமிழ் திரைப்பட வரலாற்றில் முதன் முதலில் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை தன்னுடைய காதல் கோட்டை திரைப்படத்திற்காக பெற்றவர்.

மூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல்

இந்த மாதம் திரையிடப்படும் குறும்படங்கள்.

குறும்படத்தின் பெயர்இயக்குனர் பெயர்கால அளவு
வாழ்வின் நடனம்செந்தில் 13 நிமிடங்கள்
யோசிஆரோக்கியராஜ்15 நிமிடங்கள்
வாழ்க ஜனநாயகம்கணபதி20 நிமிடங்கள்

மூன்றாம் பகுதியின் சிறப்பு அழைப்பாளர்:

மூன்றாம் பகுதிக்கு இந்த மாதம் திரைப்பட ஒளிப்பதிவாளர் திரு. துவாரகநாத் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மூன்றுக் குறும்படங்களையும் பார்த்துவிட்டு அதன் நிறை குறைகளை அலசி ஆராய்ந்து அதன் இயக்குனர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்க உள்ளார்.

துவாரகநாத் அவர்கள், ஆடோக்ராப், மாயக்கண்ணாடி, காவலர் குடியிருப்பு போன்ற திரைப்படங்களின் ஒளிப்பதிவாளர் ஆவார்.

மறக்காமல் வாசகர்கள் தங்கள் சந்தாத் தொகையினை கட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். சந்தாத்தொகை ரூபாய் 50 மட்டும்.

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:
9840698236, 9894422268

www.thamizhstudio.com



Wednesday, February 24, 2010

பௌர்ணமி இரவு

பௌர்ணமி இரவு
(அரியத் திரைப்படங்கள் திரையிடல் & கலந்தாய்வு நிகழ்வு)

வணக்கம்,

நகரின் சப்தங்கள் அனைத்தும் ஆர்பரித்துப் பின்னர் அடங்கிப் போன பின்பனி இரவு, முழு நிலவு, மனதுக்கு மிக நெருக்கமான அல்லது ஒத்த கருத்துடைய நண்பர்களுடன் செடிகளும், பூக்களும் நிறைந்த தோட்ட வெளியில், புல் தரை மீது அமர்ந்து நாம காணக் கிடைக்காத பல அரியத் திரைப்படங்கள், உலக குறும்படங்கள் மற்றும் நம் நண்பர்கள் உருவாக்கத்தில் வெளிவந்த ஒரு தமிழ் குறும்படம் ஆகியவற்றை, நிலா சோறு உண்டுக் கொண்டே பார்க்கும்போது ஏற்படும் பரவச நிலை பல ஆண்டுகள் செய்யும் தவத்திற்கு சமம். அத்தகைய தவ நிலைக்கு, அல்லது பரவச நிலைக்கு உங்களை அழைத்து செல்ல நாங்கள் தயார். வருவதற்கு நீங்கள் தயாரானால்!


தமிழ் ஸ்டுடியோ.காம் இணையதளத்தின் குறும்பட வட்டம் நிகழ்வு கடந்த பதினேழு மாதங்களாக மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஊடகங்களும், ஆர்வலர்களும் கொடுத்த பேராதரவே இதற்கு காரணம். அதே அளவிற்கான ஆதரவை எதிர்பார்த்து மேலும் ஒரு திரையிடல் நிகழ்வை தமிழ் ஸ்டுடியோ.காம் ஏற்பாடு செய்திருக்கிறது. எப்போதும் வெறும் வார்த்தையளவில் நாம் பேசிக்கொண்டிருக்கும் சில திரைபபடங்கள், விமர்சகர்கள் கொண்டாடும் சில இயக்குனர்களின் காணக்கிடைக்காத அரியத் திரைப்படங்கள், உலக அளவில் புகழ் பெற்ற குறும்படங்கள், உலகின் பல உண்மைகளை வெளிக்கொணர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆவணப்படங்கள், தமிழிலும் முயற்சி செய்கிறோம் என பறைசாற்றும் குறும்படங்கள் போன்றவை இந்த நிகழ்வில் திரையிடப்படும்.

மேலும், தமிழில் குறும்படம் எடுக்க விரும்பும், அல்லது அந்த குறும்படத்தில் பங்கேற்க விரும்பும் அல்லது குறும்பட உதவி வேண்டும் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் தங்களுக்குள் குழுவாக பிரிந்து அது பற்றி விவாதிக்கும் நிகழ்வும் இந்த பெவுர்ணமி இரவில் நடைபெறும். தங்கள் மனதுக்குள் இருக்கும் பல்வேரு பிரச்சனைகளால் தாங்கள் உருவாக்க நினைத்த குறும்பட முயற்சியை தள்ளி வைத்த அனைத்து நண்பர்களின் பிரச்சனைகளை ஆராய்ந்து அவர்கள் சிறப்பாக குறும்படம் எடுக்க இந்த நிகழ்வில் வழிநடத்தப்படும்.

உலகப் படங்கள் பற்றியான ஒரு புரிதலை ஏற்படுத்தவும், அதுபற்றி கலந்துரையாடவும், ஒவ்வொரு மாதமும் ஒரு சிறப்பு பார்வையாளர் பௌர்ணமி இரவில் நம்முடன் பங்கேற்பார். ஆர்வலர்கள் அந்த மாதம் பௌர்ணமி இரவில் திரையிடப்படும் படங்களை அந்த சிறப்பு பார்வையாளருடன் சேர்ந்து பார்த்துவிட்டு அந்தப் படம் குறித்து அவருடன் கலந்துரையாடலாம்.

முதல் மாத பௌர்ணமி இரவு நிகழ்வு:

ஞாயிறு, 28-02-2010

இரவு 8 மணிக்கு. நிகழ்வு முடிய இரவு 12.30 மணி ஆகும். ஆர்வலர்களுக்கு உணவு மற்றும் உறங்குமிடம் முதலியவை ஏற்பாடு செய்யப்படும். ஆனால் அதற்காக ஆர்வலர்கள் இருபது ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

இடம்: எண். 41, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024 (லிபர்ட்டி திரையரங்கம் எதிரில்)


திரையிடப்படும் படங்கள்:

உலக அளவில் அனைவரும் பார்க்க வேண்டிய அரிய திரைப்படம்:

உலக அளவில் மிக நேர்த்தியாக எடுக்கப்பட்ட குறும்படம்: லிட்டில் டெர்ரரிஸ்ட்
லிட்டில் டெர்ரரிஸ்ட் குறும்படம் குறித்து மேலும் அறிந்துக் கொள்ள:http://www.imdb.com/title/tt0425200/plotsummary

தமிழில் எடுக்கப்பட்ட குறும்படம்: என் வீட்டின் முற்றத்தில் ஒரு மாமரம்
என் வீட்டின் முற்றத்தில் ஒரு மாமரம் குறும்படத்தை பற்றி மேலும் அறிந்து கொள்ள:http://www.imdb.com/title/tt1402517/

இந்த மாதத்திற்கான சிறப்பு பார்வையாளர், மற்றும் முதல் மாத நிகழ்வை தொடங்கி வைப்பவர்:திரைப்பட நடிகர், வி. டி. எம். சார்லி M.A., M.Phil.

(குறிப்பு: பௌர்ணமி இரவு நிகழ்வில் யார் வேண்டுமானாலும் கலந்துக் கொள்ளலாம். ஆனால் உணவு மற்றும் உறங்குமிடம் ஏற்பாடு செய்யவேண்டியிருப்பதால் முன் பதிவு செய்துக் கொள்ளவும். முன் பதிவு செய்யாதவர்களுக்கு உறுதியாக அனுமதி கிடையாது.)

முன்பதிவு செய்துக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 9840698236, 9894422268