வலது புறம் செல்லவும் - 13
தாவீதின் குமாரன் சாலமோன் நீதி சொன்ன மண்ணிலே ஓர் குரல் ஒலித்தது. கடவுளின் கட்டளைக்கு எதிராக செயல்பட்டு உங்களை நீங்களே அழித்துக் கொள்ளாதீர்கள் என்று சொன்ன ஜக்காரியாவை கல்லெறிந்து கொன்ற ஜெருசலேம் ஆலயத்தில் இருந்து அந்தக் குரல் ஒலித்தது. கொள்ளையடிக்கப்பட்டும், இடிக்கப்பட்டும் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுந்த அந்த ஆலயம் அன்றைய தினம் சதுசேயர்களாலும் பரிசேயர்களாலும் வியாபாரத் தலமாக மாற்றப்பட்டிருந்தது. அவர் பேசினார்: "என் மக்களே துரோகத்துக்குப் பெயர்போன ஜெருசலேம் இது. எத்தனையோ தீர்க்கதரிசிகளுக்குத் துரோகம் செய்திருக்கிறது. உங்கள் கண்ணெதிரிலேயே யோவானைக் கொன்று புதைத்திருக்கிறது. ரோமானிய ஆட்சி, ஏரோதுவின் திறமையின்மை இவற்றைப் பயன்படுத்தி மதகுருமார்களும் பரிசேயர்களும் உங்களை நசுக்கிக் கொண்டிருக்கிறார்கள். நீண்ட அங்கிகளையும் அதன் மேல் அழகிய வேலைப்பாடுகள் மிக்க மேலாடைகளையும் அணிந்துகொண்டு, வேதங்கள் எழுதப்பட்ட துணிகளை தலையிலும் கைளிலும் சுற்றிக்கொண்டு, ஆடம்பரமான விருந்துகளிலே முதலிடம் பிடித்துக்கொண்டு, கோவிலில் இவர்களுக்காக தனியிடம் ஒதுக்கிக்கொண்டு செல்வச் செழிப்பில் கொழிக்கிறார்கள். ஆலயத்துக்குள்ளே வியாபாரம். காணிக்கைப் பொருட்களை மக்கள் வெளியிலிருந்து கொண்டு வரக் கூடாது. ஆலயத்துக்குள்ளேதான் வாங்க வேண்டும். ஏன்? இதிலே அவர்கள் ஆதாயம் பார்க்கிறார்கள். கோவிலினுள் மக்கள் பயன்படுத்தும் நாணயம் செல்லாது. சீசரின் நாணயம் மட்டுமே செல்லும். காரணம் அப்பாவி மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி நாணயம் மாற்றுவதிலும் கொள்ளை லாபம் அடிப்பதற்காக. கோவிலுக்குப் பத்தில் ஒரு பங்கு என்று வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதை மட்டும் சட்டப்படி வாங்கி விடுகிறார்கள். ஆனால், அதில் சொல்லப்பட்ட நீதி, நேர்மை, இரக்கம், முதலானவற்றைக் கடைபிடிக்கவே மாட்டார்கள். அவர்கள் போதிப்பார்கள். அதன்படி நடக்க மாட்டார்கள். அவர்கள் கடவுளை வணங்குவது உங்களை ஏமாற்றிப் பணம் பறிப்பதற்காக. எங்களை குரு என்று அழை, தந்தை என்று அழை என்று மதத்தின் பெயரால் உங்களைக் கட்டாயப்படுத்துகிறார்கள். அப்படி அவர்களை அழைக்காதீர்கள். உங்கள் குருவும் தந்தையும் வானகத்தில் இருக்கும் இறைவன் மட்டுமே. வெளித் தோற்றத்திலே அழகாக உடையுடுத்தி இருக்கும் அவர்களின் மனதிலே சுயநலமும், வன்முறையும் நிறைந்திருக்கின்றன. உள்ளே எலும்புகளாகவும் வெளியே அழகாகவும் இருக்கின்ற வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைதான் அவர்கள். இவ்வாறு நான் பேசுவதால் நான் சட்டங்களை அழிக்க வந்தவன் என்று நினைக்காதீர்கள். அவற்றை நிறைவேற்றவே வந்தேன். நீங்கள் சட்டம் சொல்வதை நிறைவேற்றுங்கள். ஆனால் அவர்கள் வாழ்கிற வாழ்க்கையை மேற்கொள்ளாதீர்கள். அது சட்டத்திற்கு புறம்பானது. தீர்க்கதரிசிகளை கொலை செய்துவிட்டு அவர்களின் வாரிசுகள் நாங்கள் என்று பெருமையடித்துக் கொள்ளும் கூட்டம் அது. அவர்களுக்குச் சொல்கிறேன். இந்த ஜெருசலேமில் இருந்து கொண்டு, இந்த ஆலயத்தின் பேரால் பாவங்களைச் செய்து கொண்டிருக்கிறீர்கள். பாவத்தின் சம்பளம் மரணம் என்றால் அது உங்களுக்கு மட்டுமல்ல. இந்த ஆலயத்துக்கும்தான். உங்கள் பாவங்களினால் இந்த திருக்கோவில் இடிந்து விழுந்து ஒரு கல் கூட அதனிடத்தில் இல்லாமல் போகும். இந்த உலகத்தைப் பாவங்களிலிருந்து விடுதலை செய்யவே நான் வந்திருக்கிறேன். நான் இந்த உலகத்திற்கு ஓர் ஒளியாய் வந்திருக்கிறேன். என்னை நம்பாதவர்களின் வாழ்க்கை இருளாகவே இருக்கும். உங்களில் யாராவது என் வார்த்தைகளைக் கேட்டு நடக்காவிட்டால் நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள் என்று நான் சொல்ல மாட்டேன். நான் உங்களுக்குத் தண்டனை கொடுக்க வரவில்லை. விடுதலை கொடுக்கவே வந்திருக்கிறேன். நீங்கள் ஒளியைக் கையில் வைத்துக் கொண்டு இருளில் நடக்கிறீர்கள். உங்கள் ஒளி அணையாத ஒளி என்று நம்பிக்கை கொள்ளுங்கள். என்றும் அணையாத ஒளியாகிய கடவுளின் குழந்தைகள் நீங்கள். ஒருவருக்கொருவர் உண்மையாயிருங்கள். ஒருவர் மேல் ஒருவர் நம்பிக்கை வையுங்கள். ஒருவரிடம் ஒருவர் அன்பு செலுத்துங்கள். இந்த மூன்றிலும் அன்பே உயர்ந்தது". புத்தர் அன்பைப் போதித்த சுமார் 600 வருடங்களுக்குப் பிறகு... ஒலித்த குரல் இது. பெத்லகேமில் ஒரு மாட்டுத் தொழுவத்திலே அந்த ஒளி பிறந்தது. அந்த ஒளியின் பெயர் இயேசு. "ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு" சகிப்புத் தன்மைக்கு இதைவிட அதிகமான வார்த்தை இன்று வரை பூமியில் இல்லை. "உன்னைப் போல் பிறரையும் நேசி" நாம் நம்மளை எப்படிப் பார்த்துப் பார்த்து நேசிக்கிறோம். நல்ல உடை, நல்ல சாப்பாடு, நல்ல பெர்ஃபியூம், நல்ல வண்டி, நல்ல அழகான சிவப்பான மனைவி வேண்டும். இப்படி நீ உன்னை எப்படி நேசிக்கிறாயோ அதுமாதிரி அடுத்தவனையும் நேசி. அன்பு காட்டுவதற்கு இதைவிட அதிகமான விளக்கம் இல்லை. இதற்கு அடுத்த நிலையில் உள்ளதுதான். "உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே "உங்களில் தவறு செய்யாதவன் முதல் கல்லை அவள் மேல் எறியட்டும்" இதற்கு இணையான தீர்ப்பு இன்றுவரை இல்லை. "கடவுளே இவங்க பண்றது பாவம்னு கூடத் தெரியல. இவங்களை மன்னிச்சுடு" சகிப்புத் தன்மைக்கு இதைவிட வேறு எடுத்துக்காட்டு உண்டா? காலங்காலமாக அடக்கு முறைக்கு ஆளான இனம் யூத இனம். எகிப்தை விட்டு வெளியேறி இடம் தேடி அலைந்து, அரசு கண்டு, அடக்கு முறைகளைச் சந்தித்து, நசுக்கப்பட்டு, இறுதியில் ரோமானியர்களின் ஆட்சியில் ஏரோது மன்னனின் அடக்கு முறையில் தங்களை மீட்டெடுக்க ஒரு தேவதூதன் வருவான் என்று வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் அந்த ஒளி பூமியில் பிறந்தது. தங்களைக் காக்க ஒருவன் கையில் ஆயுதம் ஏந்தி குதிரையில் வருவான் என்று நம்பிக் கொண்டிருந்த அந்த இனத்திற்கு ஒரு ஏழையின் வீட்டில் தச்சுத் தொழிலாளி மகனாகப் பிறந்து அன்பை ஆயுதமாக்கிய இயேசுவை அடையாளம் தெரியவில்லை. அதனால்தான் வழக்குகளைச் சந்தித்து, நாள் முழுவதும் சவுக்கடி வாங்கி, ஏளனப்படுத்தப்பட்டு, அவமானம் செய்யப்பட்டு, முற்களைத் தலையில் வைத்து அடித்து, சிலுவை சுமக்க வைத்து அழைத்துச் செல்லப்பட்டபோது அந்த மக்கள் கூட்டம் வேடிக்கை பார்த்தது. நீ கடவுளின் குமாரன் என்றால் சிலுவையை விட்டு இறங்கி வா என்று கேலி பேசியது. மக்களுக்காகப் பேசுகிறான். மக்களாட்சி என்கிறான். யூதக் கொள்கையை எதிர்க்கிறான் என்று பயந்த அரசும், ஆலயக் கூட்டமும் யூதக் கொள்கைகளை எதிர்க்க இனி ஒருவன் பிறக்கவே கூடாது என்று வெறி கொண்டு அடித்தது. சவுக்கு வேறு. கசை வேறு. ஒரு கைப்பிடியின் கீழ் பத்து சிறு சிறு சங்கிலிகள் பிணைக்கப்பட்டு அதில் முழுவதிலும் தாறுமாறாக வெட்டப்பட்ட தகரத் துண்டுகள் இணைக்கப்பட்டது கசை. அந்தக் கசையால் வெறி கொண்டு அடித்தார்கள்.
யூதரில் பிறந்த ஒருவன் யூத அஸ்திவாரத்தையே அசைக்கிறான் என்ற வெறியில் கொடுக்கப்பட்ட தண்டனை என்றார் அந்த இயக்குனர். இயேசுவைப் பற்றிய செய்திகளை விவிலியத்தில்தான் தேட வேண்டி இருக்கிறது. எந்த வரலாற்றுப் பதிவும் இல்லை. பன்னிரெண்டு வயதுவரை வாழ்ந்த ஒரு சிறுவன் யூதேயாவிலேயோ, அந்த வட்டாரங்களிலேயோ எங்குமே இல்லாமல் போய் மக்களால் மறக்கப்பட்டு, பின் திடீரென்று தோன்றி, மாபெரும் புரட்சிகள் செய்து, பகுத்தறிவு பேசி, மறுபடியும் மறைந்து போன மனிதனை அன்றைய வரலாற்று ஆசிரியர்கள் சட்டை செய்யவில்லை என்பதுதான் உண்மை. அந்த புரட்சிக்காரன் கடவுளாக்கப்பட்டது, கடவுளின் விளையாட்டா, காலத்தின் தேவையா என்பதை நாம் அலசப் போவதில்லை. ஆனால் 12 வயதில் அறிவும் ஞானமும் ஊற்றெடுத்து ஆலயத்தின் நடுவே நின்று கொண்டு பெரிய பெரிய கேள்விகளுக்கெல்லாம் திகைக்கத் திகைக்கப் பதில் சொல்லி விட்டு, எங்கேயோ சுற்றி மீண்டும் வந்து, இரண்டு வருடங்களை அதிர வைத்து இஸ்ரவேலர் பூமியை இவனை அடக்காவிட்டால் சாம்ராஜ்யம் வீழ்ந்து போகும் என்று பயப்பட வைத்து, ஏரோது மன்னனையும் அவனது சகாக்களையும் உடனடியாக இயேசுவை தீர்க்க வேண்டும் என்று முடிவெடுக்க வைத்து, இயேசுவுக்கும், அவரின் இயக்கத் தோழர்களுக்கும் வலைவிரிக்க வைத்து, சிலுவை மரணத்தை சந்தித்து, பூமிப்படி உயிர்த்தெழுந்து, அவர்கள் சாம்ராஜ்யத்தில் இயேசு முடிந்து போனார். ஆனால் இயேசுவை மக்களிடம் கொண்டு போனவர். St. Paul. அவர் எடுத்துக் கொண்ட ஆயுதம் பிரச்சாரம். ஒரே ஒரு பால் ஒட்டுமொத்த ஐரோப்பிய தேசங்களையும் தன்பால் இழுத்தார். சீடர்கள் அதாவது தோழர்கள் பதினோரு பேரும் இடம் பெயர்ந்து விட்டார்கள். தோமா இந்தியாவுக்கு வந்து விட்டார். மற்றவர்கள் அண்டை நாடுகளுக்கெல்லாம் தோழனைப் பரப்பச் சென்று விட்டார்கள். பால், புனிதப்பால் உயிரோடு இருக்கும் வரை வீதி வீதியாகச் சென்றார். உங்களுக்காக, நீங்கள் பிச்சை எடுக்கக் கூடாது என்பதற்காக, நீங்கள் நோயோடு போராடக் கூடாது என்பதற்காக, நீங்கள் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதற்காக ஒருவன் உயிர் நீத்தான். பால் எடுத்துக் கொண்டது மூன்று விஷயங்கள். எப்படியெல்லாம் பிச்சை எடுத்தீர்கள்? எப்படியெல்லாம் பிச்சை எடுக்குறீர்கள்? எப்படியெல்லாம் பிச்சை எடுக்கப் போகிறீர்கள்? பாமர ஜனங்களின் மனதை அசைத்தார். பேசினார். அறிவுப் பூர்வமாகப் பேசினார். நோயோடு போராடுகிறீர்கள். வறுமையோடு போராடுகிறீர்கள். இரட்சிப்பு யார் தருவார்? ஏன் தருவார்? யார் தந்தார்? எதற்காகத் தந்தார்? மீடியாக்கள் இல்லை. வாய்வழியாகப் பரப்புவதைத் தவிர வேறு ஊடகங்கள் இல்லை. ஆனால் அந்த வாய்வழிச் செய்திகள் கிரீக் வரை பரவி எதிரொலித்தது. மாபெரும் கிரேக்க மனிதர்கள் எல்லாம் வாழ்ந்த ஒரு மனிதனை - சற்று முன்பே வாழ்ந்த ஒரு மனிதனை - தீர்க்கதரிசி என்றும் இரட்சகன் என்றும் ஏற்று அவரைக் கடவுள் ஆக்கினார்கள். ஒரு புரட்சிக்காரன் செயின்ட் பாலால் கடவுள் ஆக்கப்பட்டார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு மாமனிதன் புரட்சிகரமாக சிந்தித்திருக்கிறான் என்பதற்கு நிறைய உதாரணங்கள் விவிலியம் முழுவதும் நிரம்பிக் கிடக்கின்றன. ஒரு பரிசேயன் "நாங்கள் கடவுளுக்கு காணிக்கை கொடுப்பதா? அரசாங்கத்திற்கு வரி கொடுப்பதா?" என்று கேட்டபோது இயேசு, "இறைவனுக்குரியதை இறைவனுக்கும் அரசாங்கத்திற்குரியதை அரசாங்கத்திற்கும் கொடு" என்கிறார். ஒரு புரட்சிக்காரன் இறைவனுக்குரியது என்று சொன்னதை காணிக்கையாகவோ பலியாகவோ எடுத்துக்கொள்ளக் கூடாது. ஓரிடத்தில் "விசுவாசம் உள்ளவன் பாக்கியவான். பரலோக ராஜ்ஜியம் அவனுக்குரியது" என்கிறார். கடவுளை நம்பு, உண்மையாயிரு, அன்பு செய் அது போதும். ஆனால் அரசு செயல்பட வரி கொடு என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு முக்கியமான விஷயம். இயேசு எதையுமே அவர் சொன்ன ஒரு வார்த்தையைக்கூட எழுதி வைத்துவிட்டுப் போகவில்லை. கூடவே இருந்த சீடர்கள் கூட எந்த வார்த்தையையும் எழுதி வைக்கவில்லை. லூக், மார்க், மாத்யூ, ஜான், எபேசியர், எபிரேயர், கொரீந்தியர் போன்ற, அவருடன் முற்றிலும் தொடர்பில்லாத ஆசிரியர்களே விவிலியத்தை எழுதி இருக்கிறார்கள். ஒரு பார்வைக்காக நாம் சில யூகங்களுக்குள் போகலாம். புத்தருக்கு அரண்மனையின் ஆடம்பரம் மக்களைப் பற்றி யோசிக்க வைத்தது என்றால் இயேசுவுக்கு என்ன நிகழ்ந்திருக்கும். குழந்தை இயேசுவின் தந்தை யோசேப் தச்சுத் தொழிலாளி. தச்சர்கள் பரம்பரையில் வந்த நேர்த்தியான ஒரு தச்சர். பல கிருத்துவ மதக் காலண்டர்களில் நீங்கள் ஒரு விஷயத்தைக் கவனித்திருக்கலாம். தந்தையும் பாலகன் இயேசுவும் ஒரு வெட்டிய மரத்தை இருபுறமும் பிடித்து இழைத்துக் கொண்டிருப்பார்கள். நவீனத் தொழில்கள் அறிமுகம் இல்லாத அந்தக் காலத்தில், பாடசாலைகள் இல்லாத அந்த காலத்தில், மீனவன் மகனாகப் பிறந்தால் தோணியில் ஏற்றிக்கொண்டு தொழிலுக்குப் பழக்குவார்கள். அப்போதெல்லாம் படிப்பு என்பது யூத மதத்தின் வேதங்கள்தான். அதுவும் யூதக் கோவில்களில். தச்சுத் தொழிலும் அப்போது அப்படித்தான். ஏழு வயது முதலே சிறுவர்களை குலத் தொழிலில் ஈடுபடுத்துவது அக்கால வழக்கம். என் நினைவுக்கெட்டிய செய்தி ஒன்று. ராஜாஜி முதல்வராக இருந்த போது அரை நாள் குலத் தொழில் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஒரு சட்டம் வந்து பின் எதிர்ப்புகளால் திரும்பப் பெறப்பட்டது என நினைக்கிறேன். இப்போதும் நீங்கள் ஒரு காட்சியைக் காணலாம். ஒரு வீட்டில் ஒரு பெண் சமையல் வேலை செய்கிறாள் என்று வைத்துக் கொள்வோம். எப்போதாவது விடுமுறை நாட்களில் தங்கள் வீட்டுச் சிறுவர்களையோ சிறுமியையோ அழைத்து வருவார். அப்போது அந்தக் குழந்தை என்ன செய்யும்? அந்த வீட்டில் L.C.D, Digital T.V இருந்தால் அது ஆச்சர்யமாகப் பார்க்கும். கூடவே ஒரு ஏக்கம் பிறக்கும். கட்டில், மெத்தை, பொமரேனியன் நாய்க்குட்டி, ஊஞ்சல், உயர்ரக துணிமணிகள், என்று ஆச்சரியமும் ஏக்கமும் அந்தக் குழந்தைக்குப் பிறக்கும். அப்படியே சற்று பின்னோக்கிப் போகலாம். சுவர்களின் மேலே மூங்கில்களைப் பிணைத்து ஓலைகள் வேய்ந்து வீடுகள் கட்டுவது ஒருமுறை. கான்கிரீட் அல்லது தச்சு வேலை என்பது பணக்காரர்கள் இல்லங்கள் அமைக்கும் போதுதான் அக்காலங்களில் இடம் பெற்ற ஒன்று. தந்தையோடு கைவேலைக்குச் சென்ற இயேசு, மாளிகையின் படாடோபத்தையும் இழைத்து இழைத்து அமைக்கும் அலங்கார வேலைகளையும், அறை எங்கும் நிறைந்த தேக்குப் பொருட்களையும், சீனத்துக் களிமண் ஜாடிகளையும், பெல்ஜியம் கண்ணாடிப் பொருட்களையும் தங்கம் வெள்ளியால் இழைக்கப்பட்ட உள் வேலைகளையும் பார்த்து ஆச்சரியமும் ஏக்கமும் கூடவே வருத்தமும் அடைந்திருக்க வேண்டும். அந்தப் பாலகனுக்கு நாமும் நம்மோடு வாழ்பவர்களும் மழைக்காலங்களில் ஆலயங்களுக்குள் அல்லவா தஞ்சம் அடைய வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்க வேண்டும். தச்சு வேலைக்குச் செல்லும்போது களியோ, ரொட்டியோ எடுத்துச் சென்றிருக்க வேண்டும். அவர்களை வைத்துக்கொண்டே அறுசுவை உணவுகளை மாட மாளிகை வாசிகள் உண்டிருக்க வேண்டும். வளர்ப்புப் பிராணிகளுக்குக் கூட உயர்ந்த ரக உணவுகளை பரிசேயர்கள் கொடுத்திருக்க வேண்டும். அந்த நிகழ்வுகள் பாலகன் ஏசுவை சங்கடப்படுத்தி சிந்திக்க வைத்திருக்க வேண்டும். ஒருபுறம் உழைப்பும் வறுமையும் பசியும் மறுபுறம் அதற்கு நேர்மேறாக உழைப்பைப் பெறுபவர்களின் ஆடம்பர வாழ்க்கை. ஏன் அந்தப் பாலகனை உறுத்தி இருக்கக் கூடாது? அமெரிக்க மக்களிடையே விவிலியத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த விவிலியம் வானொலி நாடகமாக 1947 ல் "The greatest story ever told" என்ற தலைப்பில் ஒலிபரப்பப்பட்டது. பின் புத்தகமாகவும், திரைப்படமாகவும், வந்தது. அந்தப் புத்தகத்தில் அதன் ஆசிரியர் Fulton Oursler விவரிக்கும் ஒரு காட்சி. இயேசு தனது 12 வயதில் ஆலயத்தில் நின்று கேள்விகள் கேட்டதாக விவிலியம் பதிவு செய்திருக்கிறது. நாசரேத்திலிருந்து ஜெருசலேம் செல்லும் அந்த பன்னிரெண்டு வயதுச் சிறுவன் பார்த்த காட்சிகளை அவர் விவரிக்கிறார். கடவுளை வணங்கச் செல்லும் மக்களுக்கு ஆலயத்துக்குள் எதற்குப் பணம். கடவுளுக்கு பலியிடும் புறாக்களையும், ஆட்டுக் குட்டிகளையும் மக்கள் ஆலயத்துக்குள் விற்பவர்களிடம்தான் வாங்க வேண்டும். அதுவும் 5 மடங்கு அதிக விலை கொடுத்து. இன்றும் நிறையக் காட்சிகள். அந்த 12 வயதுச் சிறுவனுக்கு மனதில் கேள்விகள் பிறந்தன. ஏன் உயிர்களைப் பலியிடுகிறார்கள்? இரத்தத்தினாலும் நறுமணப் புகையாலும்தான் இறைவன் மகிழ்ச்சியடைவார் என்று ஏன் எண்ணுகிறார்கள்? எதற்காக குருமார்களிடம் இருந்தே அவைகளை வாங்க வேண்டும்? அந்தப் பணத்தை குருமார்கள் என்ன செய்கிறார்கள்? இது கடவுளுக்கு எதிரான செயல் இல்லையா? இயேசுவுக்கு தான் கற்ற வேதத்தில் ஆமோஸ் தீர்க்கதரிசியின் வார்த்தைகள் ஞாபகத்திற்கு வந்தன. கடவுள் சொல்கிறார். "நான் உங்கள் மதத்தின் விழாக்களை வெறுக்கிறேன். என்னால் அவற்றைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நீங்கள் கொடுக்கும் பலிகளையும், தானியங்களையும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். கூச்சலிடும் உங்கள் பாடல்களை நிறுத்துங்கள். உங்கள் வாத்தியங்களை இசைக்காதீர்கள். இவற்றுக்குப் பதிலாக நீதியையும், நேர்மையையும் வற்றாத ஜீவநதியாய் ஓடவிடுங்கள்" இப்படியெல்லாம் இயேசு சிந்தித்ததாகக் குறிப்பிடுகிறார். இன்னொரு யூகத்தையும் பார்த்து விடுவோம். 12 வயதுக்குப் பிறகு கிட்டத்தட்ட இயேசுவின் பணிக் காலத்தைப் பதிவு செய்கிறது விவிலியம். பதினெட்டு வருடங்கள் இயேசுவைப் பற்றி எந்தச் செய்தியும் இல்லை. 12 வது வயதில் சிறுவன் இயேசு எங்கே போனான். வீட்டைவிட்டு தானாகச் சென்றானா? நோக்கத்தின் அடிப்படையில் யாராவது அழைத்துச் சென்றார்களா? அல்லது கடத்திச் சென்றார்களா? அப்படி என்றால் அழைத்தோ அல்லது கடத்தியோ எங்கு கூட்டிச் சென்றார்கள்? அக்காலத்தில் 12 வயதில் வெகுதூரம் தனியே பயணிப்பதெல்லாம் 98 சதவிகிதம் சாத்தியம் இல்லாத விஷயம். இயலாத காரியம். நவீன போக்குவரத்து வசதிகள் அப்போது இல்லை. Transport என்ற அமைப்பே இல்லை. கடல் வழித் தடங்கள் அப்போது கண்டுபிடிக்கப்படவில்லை. நில மார்க்கமாகச் சென்றாலும் 12 வயதுச் சிறுவன் எந்த இலக்குமின்றி எங்குதான் எவ்வளவு நாள் பயணிக்க முடியும்? இங்கு ஒரு கேள்வி முளைக்கிறது. இயேசு பிறந்தபோது வானத்து நட்சத்திரம் வழிகாட்ட மூன்று பேர் குதிரைகளில் வந்து அந்த ஒளிக்கு பரிசளித்ததாக விவிலியம் பதிவு செய்திருக்கிறதே. அவர்கள் கீழ்த்திசை நாட்டிலிருந்து வந்ததாக செய்தி இருக்கிறதே. அவர்கள் மீண்டும் வந்து அழைத்துச் சென்றிருப்போர்களோ? வானுலகத்தை வணங்கி | ||
Monday, June 20, 2011
வலது புறம் செல்லவும் - 13 - இயக்குனர் அகத்தியன்
Tuesday, May 24, 2011
வலது புறம் செல்லவும் - 9 - இயக்குனர் அகத்தியன்
வலது புறம் செல்லவும் - 9
கேரளாவில் கோட்டையம் அருகே குடமலூர் என்ற கிராமம். 1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ந் தேதி ஒரு பெண் பிறந்தார். 1946 ஜூலை 28ல் இறந்து போனார். தான் வாழ்ந்த காலத்தில் துன்பமும் வறுமையும் உடல்நலக் குறைவும் அவரோடு துணைவந்த சொந்தங்கள். ஆசிரியப் பணி புரிந்தார். இறப்பிற்குப் பிறகு மக்களால் வணங்கப் பெற்றார். 1986 பிப்ரவரி 8ந் தேதி ஜான்பால்-II அவரைப் புனிதராக அறிவித்தார் (Deatification). 1996 ஜூலை 19 இந்திய அரசு அவரின் ஐம்பதாவது நினைவு நாளில் தபால் தலை வெளியிட்டது. 2008 ஜூன் ஒன்றாம் தேதி போப் பெனிடிக்ட் - XVI அவரைப் புனிதராக (செயின்ட்) அறிவித்தார். அந்த அன்னையின் பெயர் அல்போன்சா. நாம் வாழும் காலத்தில் கத்தோலிக்கத் திருச்சபை அங்கீகரித்த ஒரு அன்னை இவர். இந்து மதப் பாரம்பரியத்தில் இந்த அங்கீகாரம் தேவையில்லை. மக்கள் வழிவழியாக வழிபடும்போது தெய்வநிலையை ஒரு ஆணோ, பெண்ணோ அடைகின்றனர். குஷ்புவுக்குக்கூட நாம் கோயில் கட்டியிருக்கிறோம். குஷ்புவுக்கே கோயில் கட்டும்போது இந்த மண்ணில் மனிதகுலத்துக்காக வாழ்ந்த அன்னையர்கள் வணங்கப்பட்டதும், தெய்வமானதும் வியப்புக்கோ நகைப்பிற்கோ இடமளிக்காத ஒன்று. உழைக்கும் மக்களிடமிருந்து உழைப்பைத் திருடும் ஒரு கூட்டம் மக்களிடம் உருவானபோது திருட்டு என்பது ஒரு தொழிலாக மாறிப்போனது. மக்கள் தங்கள் உடமைகளைப் பாதுகாத்துக் கொள்ளவும், தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளவும் தங்களுக்குள் கூடி ஒருவனை காவலனாக தேர்ந்தெடுத்தனர். இன்றைய காவல்துறையின் ஆரம்பம் அது. அப்படி ஒருவன் மக்களால் காவலுக்கு நியமிக்கப்பட்டான். மாபெரும் வீரன். மொத்தக் கயவர்களுக்கும் சிம்ம சொப்பனமாய் இருந்தான். ஆஜானபாகுவான உருவம். கையில் நீண்டக் கத்தி, தானியங்களையோ, தனது மக்களின் வேட்டையாடிய பொருட்களையோ மழைக் காலங்களில் உண்டு, உண்டு தூங்கிய எழ பெரும் பானைகளில் காய்ச்சி புதைக்கப்பட்ட மதுவையோ கயவர்கள் திருடிக் கொண்டு போகாமல் காவல் செய்தான். தன் அடையாளத்திற்காய் கருப்பு நிறத்தில் தொடையில் ஒரு துணி சுற்றிக் கொண்டான். இரவு நேரங்களில் நன்றாக மதுக்குடித்து, மாமிசம் தின்று, கையில் அரிவாளுடன் நான்கு, ஐந்து அடி உயர நாயைக் கையில் பிடித்துக் கொண்டு, கையில் தீப்பந்தம் ஏந்தி கள்வர்கள் வேட்டைக்காக வலம் வருவான். அவன் வந்தால் மொத்தமாய் குலை நடுங்கி வீட்டிற்குள் அடைந்து விடுவார்கள். அவர் பொருளை அவரே இரவில் எடுக்க முடியாது. இன்னைக்கு கருப்பு வருது என்று கயவர்கள் வெகு தொலைவில் முடங்கி விடுவார்கள். கருப்புவை எந்த நேரத்தில் யார் வேண்டுமானாலும் அணுகலாம். ஆழ்ந்த தூக்கத்திலும், மது மயக்கத்திலும் கருப்பசாமி என்ற சத்தம் கேட்டால் விழித்துக் கொள்வான். கருப்பசாமியிடம் வழக்குகள் போனால் அவன் நியாய சபைக்கு வரும் முன்பே சம்பந்தப்பட்டவர்கள் வழக்குகளை முடித்துக் கொள்வார்கள். இப்படி வாழ்ந்த மனிதன் இறந்தபோது இன்னொருவன் பதவிக்கு வந்தான். இவனைப் போலவே சுடலை ஒரு பிராந்தியத்தில் இருந்தான். மாடன் ஒரு பகுதியைக் காவல் செய்தான். ஐயன் மற்றொரு பகுதியில் மக்களைக் காத்தான். இன்றும் கருப்பசாமியும் சுடலையும், மாடனும் ஐயனும் ஊர் எல்லைகளில் சிலையாக காவல் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். வன்முறையைப் பிரயோகித்து மக்களின் வாழ்வைக் காக்க வேண்டிய நிலை அன்றும் இருந்தது. அதிலும் ஆணாதிக்கச் சமுதாயம் நிலைபெற்றபின் பெண்களே பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் ஆயினர். மனிதகுல வரலாற்றில் மது பங்கெடுத்த பிறகு மதுவை அருந்தி மங்கையரை விருந்தாக்கிக் கொள்ளும் ஆண்வர்க்கம் உருவாகிவிட்டது. குழுத்தலைவனாகவோ, வலிமையுடையவனாகவோ இருக்கும் ஆண் பெண்களை பாலியல் தேவைகளுக்காக அதிகாரத்தின் பெயரால் பயன்படுத்துவது நடந்தது. அப்போதுதான் அதுவும் நடந்தது. இன்றைய கொல்கொத்தா, நேற்றைய கல்கத்தா.. மக்கள் சற்று அதிகமாகக் கூடி வாழ ஆரம்பித்த காலக்கட்டம். அந்தப் பெரிய மக்கள் கூட்டத்தில் பெண் இனம் மிகக் கோரமாக நடத்தப்பட்டது. யாரும் யாரையும் இழுத்துச் செல்லலாம். எத்தனை பேர் வேண்டுமானாலும் ஒரு பெண்ணை வன்புணர்ச்சி செய்யலாம். மூச்சு நின்று விட்டால் அவளைக் கொண்டு போய் கடலில் சேர்க்க கங்கை இருந்தாள். அங்கு இருந்த கூட்டத்தின் தலைவன் பெண்களுக்கு கொடுமைகள் இழைத்தான். தாங்க முடியாத பெண்கள் கூடினர். தலைவனின் மனைவியிடம் முறையிட்டனர். தலைவி, நதியில் குதித்து உயிர் துறக்கப் போகிறோம் என்ற பெண்களுக்காக, அன்றிரவு குடித்துப் புசித்து கைத்தடிகளுடன் மெய்த்தடங்கள் தேடிய தலைவனின் உயிர் தலத்தை அறுத்தாள். குடிபோதையில் இருந்த கைத்தடிகளின் தலைகளைத் கொய்தாள். விடிந்தபோது தலைகளை மாலையாக்கி கழுத்தில் போட்டு, வெறிகொண்டு அரிவாளுடன் வெளியே வர குலை நடுங்கிப் போனது கூட்டம். இந்த பூமியில் ஒரு பெண் மொத்தமாகச் செய்த முதல் கொலை அது. வாய் வழியாய் காட்டுத்தீபோல் சம்பவம் பரவ, அந்தப் பெண் குழுவுக்கு தலைமை ஏற்று ருத்ர ஆட்சி புரிய, இந்தியா மொத்தத்துக்கும் முதல் முறையாக ஒரு பெண் தெய்வ வழிபாடு ஆரம்பமானது. அன்னை காளி அவதரித்தாள்.. எந்த மண்ணில் எந்த இடத்தில் கோபம் கொண்டு, ரத்தம் கண்டு அன்னை காளி உருவானாரோ.. எந்த மண்ணில் ஒரு ஆணைக் கொலை செய்தாரோ .. அதே மண்ணில் அதே இடத்தில் அதுவும் அன்னை காளியின் இல்லத்தில் அமைதியும் பொறுமையும் சாந்தமும் கொண்டு அன்னை சாரதாதேவி உருவானார். ஒரு ஆண் கடவுள் நிலையை அடைய உதவினார். எப்போதுமே காலம் தன் கணக்குகளை விதிகளோடு போடுகிறது. நாம் விதி என்கிறோம். ராமகிருஷ்ணருக்காக அவர் அன்னை பெண் தேடிக்கொண்டிருந்தார். பல இடங்களில் தேடியும் பொருத்தமான பெண் கிடைக்கவில்லை. ஒரு நாள் தன் அன்னையிடம் ஜெயராம்பாடி என்ற ஊரைக் குறிப்பிட்டு, ஒரு வீட்டைக் குறிப்பிட்டு, எனக்காக ஒருத்தி அங்கிருக்கிறாள் என்றார். சாரதைக்கு அப்போது வயது ஐந்து. திருமணம் முடிந்து, பதினெட்டு வயது மங்கையாக, அன்னை ராமகிருஷ்ணரை கல்கத்தா வந்து சந்திக்கிறார். ராமகிருஷ்ணருக்கு மனமும் உடலும் தெய்வீகமாக மாறி இருந்த நேரம். ஆனால் மனைவியின் உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டிய கணவன். அன்னையிடம் கேட்டார். நீ என்ன என்னை உலகியலுக்கு இழுக்கவா வந்திருக்கிறாய்? அன்னை உடன் பதில் சொன்னார். இல்லை உங்கள் ஆன்மீக வாழ்க்கைக்கு உதவவே வந்திருக்கிறேன். ராமகிருஷ்ணர் பரமஹம்சராக மாறியது அன்னையின் தியாகத்தினால்.. அன்னை கேட்டார். நீங்கள் எப்படி என்னைப் பார்க்கிறீர்கள்? "அன்னையாக, அன்னை பராசக்தியின் வடிவாக, அவள் கோவிலில் சிலையாக நிற்கிறாள். நேரில் உன் வடிவத்தில் வீற்றிருக்கிறாள்" என்றார். வெறும் வார்த்தையல்ல அது. அன்னையை அமர வைத்து சாத்திர விதிகளுக்கேற்ப, மந்திரங்கள் உச்சரித்து, புனித நீரைத் தெளித்து, தேவியாக எண்ணி வணங்கி, உணவு படைத்து, வாயில் ஊட்டி, பூமியில் அன்னையின் வடிவமாக மனைவியைக் கண்டார். தெய்வநிலைக்கு தகுதியானவராக அன்னை இருந்தார். இல்லற வாழ்வில் ஈடுபட்டு தன்னை அம்மா வென்றழைக்க குழந்தை பெற்றுக் கொள்ளாத அன்னையை இன்று வரையல்ல, நாளை பிறக்கும் குழந்தையும் அம்மா என்று அழைத்துக் கொண்டுதான் இருக்கப்போகிறது. பூமி உள்ள மட்டும் ஒரு பெண் அம்மாவாக இருப்பது பெண்ணினதுக்கு எவ்வளவு பெருமை. இன்னொரு அன்னையும் கல்கத்தாதான் நமக்கு அறிமுகப்படுத்தியது. இரண்டாம் உலகப்போர் சமயத்தில் அவர் பணிபுரிந்த பள்ளி, ராணுவ நடவடிக்கைக்காக எடுக்கப்பட்டது. வேறு இடம் பெயர்ந்த அந்த அன்னை, கல்கத்தாவின் சேரிப்பகுதிகளை அருகிருந்து காண ஆரம்பித்தார். இந்த நிகழ்ச்சிதான் அவரை ஏழைகளின் பால் ஈர்த்ததா எனக் கேட்டபோது, இல்லை எனக்கு ஏசுவின் அழைப்பு என்றார். ஏசு என்ற ஆணைப் பெருமைப்படுத்திய ஒரு பெண் அவர். அவருடைய கருணை உள்ளத்தினால் மதங்களைக் கடந்த மனிதனாக ஏசு வணங்கப்பட ஆரம்பித்தார். ஏசுவின் மதத்தைத் திணிக்காமல் அவரின் மனிதநேயத்தை மக்களிடையே எடுத்துச் சென்றவர். இதை எழுதிக்கொண்டிருக்கும் போதுகூட ஒரு குழந்தையைக் கையில் ஏந்திக்கொண்டு என்னெதிரே கருணை பொழிந்து கொண்டிருக்கிறார், அன்னை தெரசா. ஆண் பாதி பெண் பாதி என்ற இறைத்தத்துவத்தில் சக்தி ஆணில் உறைகிறாள். தன் உடலில் பெண்ணுக்கு பாதியை கொடுத்ததாகத் தான் சொல்கிறார்கள். சக்தி தன்னில் பாதியை சிவனுக்கு கொடுத்தாள் என்று ஏன் சொல்வதேயில்லை. பூமியில் பிறக்கின்ற யாரும் அன்னையைத் தேர்ந்தெடுப்பதில்லை என்பது என் எண்ணம். அன்னைதான் இவன் என் மகன், மகள் என்ற தேர்ந்தெடுக்கிறார். (தேர்ந்தெடுப்பதா.. பின்னால் பேசத்தான் போகிறோம்) ஒரு பெண் பிறக்கும்போது பூமிக்கு அல்லது பூமியில் ஒரு அன்னை பிறந்திருக்கிறார் என்று யோசித்துப் பாருங்களேன். திராவிட மொழிகளின் தாய் தமிழ். அ என்ற மொழியின் முதல் எழுத்தில் பெண் அம்மா என்றழைக்கப்படுவது நம்மைத் தவிர வேறு எங்கும் இல்லையென்றே நினைக்கிறேன். மனிதர்க்கு பால்தரும் பசு, ஆடு இவைகளின் ஒலி மட்டும் "ம்மா" என்றும் "ம்மே" என்றும் அமைந்திருப்பதை வியப்போடு கவனித்திருக்கிறேன். சமயங்களில் யோசிப்பேன் "மா மனிதன்" என்றால் நற்குணங்கள் நிறைந்த உயர்ந்த மனிதன். "அம் மா மானிதன்" என்பது கூட அம்மா மனிதனாக ஆரம்பத்திருக்குமோ என்று. மொழியின் சிதைவைப் பற்றி நான் வணங்கும் அன்னை ஒருவர் (இப்படிக்கூட சொல்லலாம்). என் வணக்குத்துக்குரிய அன்னை ஒருவர் என்னிடம் சொன்னார். பெண்ணின் பிறப்புறுப்பு தமிழில் பூ உருண்டை என்று அதன் வடிவம், மென்மை கருதி அழைக்கப்பட்டது. ஆணின் பிறப்புறுப்பு பூவிதழ் என்று அழைக்கப்பட்டது. காலத்தின் மருவலில் அது இன்றயை வடிவம் பெற்றது என்றார். அவர் மேலும் ஒரு குறிப்புத் தந்தார். ஆங்கிலத்தில் Allthee என்பதற்கும் தமிழில் ஆதி என்பதற்கும் ஒரு தொடர்பு உண்டு என்றார். பெண்ணின் பிறப்புறுப்பு மங்களகரமான வார்த்தையால் குறிக்கப்படும்போது Holy என்றே அது குறிக்கப்பட்டது. அதுவும் மருவி வேறுவிதமாக உச்சரிக்கப்படுகிறது என்றார். மங்களமான சொற்கள் மருவியதுபோல் மங்களமான பெண்மையும் மாறித்தான் போய் இருக்கிறது. ஒரு பெண்ணின் மாற்றம் குடும்பம் சார்ந்ததாகவோ, சமுதாயம் சார்ந்ததாகவோ அமைந்து விடுகிறது. இங்கே இப்போது சமுதாயத்தால் மாற்றமடைந்த ஒரு பெண்ணைப் பற்றிப் பேசப் போகிறேன். கொஞ்சம் விரிவாக, நான், கௌரவப்படுத்தப்படவேண்டிய அன்னை என்று பல காலம் எண்ணியிருக்கிறேன். எனக்கு அறிமுகமானதோ வேறு பெயரில், அவரை அறிந்து கொண்ட பின் அன்னையாகவே அவரைப் பார்க்கிறேன். ஓஷோவை தினசரிகள், வாரப்பத்திரிகைகள், செக்ஸ் சாமியார் என்றே எனக்கு அறிமுகப்படுத்தின. அவரைப் படித்த பின், உலகின் தலைசிறந்த மனநல மருத்துவர் என்று புரிந்து கொண்டேன். அப்படித்தான் இந்த அன்னையும். அந்தப் பெண்ணுக்கு திருமணம். அப்போது அவள் பதினோரு வயதைக் கடந்திருந்தாள். திருமணம் என்றால் என்னவென்று அவள் இளைய சகோதரி சந்தேகம் கேட்டபோது எனக்குத் தெரியாது என்று சொல்லும் வயது. அவள் சகோதரி மாப்பிள்ளையைப் பார்த்து சொன்னாள். "உனக்கு இரண்டு அப்பாக்கள்". அம்மா பசிக்குது, சாப்பாடு போடு என்று கேட்ட சிறுமியை அழைத்துபோய் மணவறையில் அமர்த்தினர். பருத்த தொந்தியும் நரைத்த முடியுமான அந்த மனிதன் சொன்னான். வீட்டில் வேலை செய்ய உணவு தர யாரும் இல்லை, அதனால் மட்டுமே இவளைத் திருமணம் செய்து கொள்கிறேன். இவள் பெரிய மனுஷி என்று தன்னைத்தானே உணரும் வரை இவளை உடலளவில் மனைவியாக பயன்படுத்த மாட்டேன். வறுமையும், சொன்ன சொல்லின் நம்பிக்கையும் அவளை அனுப்பி வைக்க அவள் பெற்றோருக்கு காரணமாயிற்று. பதினோரு வயதில் கணவன் வீடு வந்த அந்தப் பெண்ணின் மேலாடையை அவிழ்த்துப் பார்த்து ஊர்ப்பெண்கள் சிரித்தனர். "இவளுக்கு முலை கூட இல்லை" என்றனர். முளைவிடாத விதையாகவே இருந்தாள். வீட்டிற்கு வேலை செய்ய பெண் வேண்டும் என்று சொல்லி அழைத்து வந்த அந்த முதிய கணவன் "சேலையை அவிழ்க்கும்போது, உனக்கு பத்து வயதாகிவிட்டது, எந்த ஆணின் முன்னும் உடம்பைக் காட்டக்கூடாது என்ற அம்மாவின் அறிவுரைதான் அவள் நினைவிலிருந்தது". அந்த மனிதனுக்கு அவள் குழந்தை என்று தெரியவில்லை. குழந்தையைக் கொடுப்பவள் என்றுதான் தெரிந்தாள். ஓடி ஒளிந்து, மறைந்து, பசிமறந்து, அடிவாங்கி, இல்லறம் என்பது தொல்லை என்று மனதில் கொண்டு, தப்பித்து, தாய்வீடு வந்து மீண்டும் பெற்றோரால் கணவன் வீடு அனுப்பப்பட்டு, மீண்டும் பெற்றோரிடம் ஓடி வந்து, மறுபடியும் கணவனிடம் அனுப்பப்பட்டு, அந்த பிஞ்சு, காயாகி, பழுக்காமல், கணவன் என்ற மிருகத்தால் கசக்கப்பட்டு ரத்தம் வடித்தது. அந்தக்குழந்தையின் பெயர் பூலான், பின்னாளில் இந்திய சரித்திரம், பூலான்தேவி என்றும், கொள்ளைக்காரி என்றும் பதிவுசெய்து கொண்ட பெண். எனக்கு அந்தப் பெண்ணை கொள்ளைக்காரி, கொலைக்காரி என்றுதான் தினசரிகள் அறிமுகப்படுத்தின. ஆனால் அவளைத்தான் கொள்ளையடித்தார்கள், வாழும்போதே பலமுறை கொலை செய்தார்கள். இறுதியிலும் அந்த அன்னையை கொலைதான் செய்தது ஆண் வர்க்கம். உத்திரப்பிரதேசம்தான் இந்திராகாந்தி என்ற அன்னையை நமக்குத்தந்தது. பூலான் தேவியைத் தந்ததும் அதுதான். இருவரும் சுட்டுத்தான் கொல்லப்பட்டார்கள். இந்திரா காந்தி இந்தியாவின் தலையெழுத்தை மாற்றுவதற்கு எத்தனையோ கையெழுத்துக்கள் போட்டிருக்கிறார். மன்னர்மானியம என்று மக்களின் பணத்தை தின்று கொண்டிருந்தது ஒரு கும்பல். வயிற்றுப்போக்கு என்று காரணம் காட்டி அன்று மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்து எஸ்.எஸ்.ஆர் என்று தமிழக மக்களால் நேசிக்கப்பட்ட எஸ்.எஸ்.ராசேந்திரன் என்ற நடிகர் மன்னர் மானிய ஒழிப்பிற்கு ஆதரவாக ஓட்டுப் போடாமல் ஒளிந்து கொண்டார். அன்று அவருக்கு ஏதோ தேவை இருந்திருக்கிறது. தீர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் தன் வலிமையான கையெழுத்தால் இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றினார் அன்னை இந்திரா. அன்னை பூலானோ தன் சுயசரிதையை சொல்லி, அதை எழுதிக்கொண்டு வந்த தாள்களில், கைநாட்டுத்தான் வைத்தார். எழுதப் படிக்கத் தெரியாமல் பாராளுமன்றம் சென்ற முதல் பெண், இன்று எழுதவும் படிக்கவும் தெரிந்தவர்கள் நாடாளுமன்றத்தில் தின்றது செரிக்காமல் (குசு) விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதை நான் சொல்லவில்லை பல ஆண்டுகளுக்கு முன் வந்த குஷ்வந்த் சிங்கின் சுயசரிதைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்ட செய்தி இது. அந்த சிறுமி கசக்கப்பட்டாள், தன் பதினைந்து வயதில் திருடி என்று காவல் நிலையத்தில் நிர்வாணப்படுத்தப்பட்டாள். மேல் சாதி ஆண்களின் ஆதிக்கம் மிகுந்த தனது கிராமத்தில் தாய், தந்தையரை துப்பாக்கி முனையில் நிறுத்தி, அவர்களின் கண்ணெதிரே கற்பழிக்கப்பட்டாள். அதே மேல் சாதி வர்க்கத்தால் ஒரு கொள்ளைக் கும்பல் மூலமாக எங்கள் ஊரில் ஒரு கொள்ளைக்காரி இருக்கிறாள் அவளைக் கடத்திச் செல்லுங்கள் என்று சொல்லப்பட அவள் கடத்தப்பட்டாள். பாபு என்ற கொள்ளைக்காரன் அவளைப் புணரப்படர்ந்தபோது விக்ரம் என்ற கொள்ளைக்காரனால் சுடப்பட்டு, அவள் காப்பாற்றப்பட்டு, விக்ரமை திருமணம் செய்து கொள்ளைக்காரியாக மாற்றப்பட்டு, ஒரு கொள்ளைக்காரி இந்தக் கட்டுரையில், அன்னையாக பதிவு செய்யப்படுகிறார். இதன் அடிப்படைக் காரணம் என்ன? ஆணாதிக்க சமூகம்தான். எந்தப் பெண்ணுக்காவது உடலுறவு பிடிக்காமல் இருக்குமா? ஆனால் பூலானுக்கு பிடிக்கவில்லை. சிறுவயதில் ஆணால் கற்பழிக்கப்பட்ட சிறுமியின் வேதனையும், வலியும்தான் அவர் மனதில் இருந்தது. விக்ரம் மெல்ல மெல்ல கொள்ளைக்காரி என்று இந்திய சமூகம் பதிவு செய்த அந்த அன்னையை இல்லற வாழ்விற்கு தயார் செய்ய வேண்டிய நிலை இருந்தது. விக்ரமுடன் இணைந்த பிறகு பதினோரு வயதில் தன்னை திருமணம் என்ற பெயரில் அழைத்து போய் கற்பழித்த அந்த மிருகத்தைப் பழிவாங்கினார். தன்னை தன் தாய் தந்தையின் கண்முன்னே கற்பழித்தவர்களுக்கு பாடம் புகட்டினார். விக்ரமை அவர் கூட்டாளிகள் கொலை செய்து விட தனிமைப்படுத்தப்பட்டார். எதிர்க்கும்பலால் கிட்டத்தட்ட ஒரு வாரம் நிர்வாணமாகவே வைக்கப்பட்டார். வரிசையில் நின்று மேல் சாதி ஆண்கள் அவரைக் கற்பழித்தார்கள். மனிதாபிமானமுள்ள ஒரு ஆணால் தப்புவிக்கப்பட்டார். மீண்டும் பலம் பெற்று தன்னைக் கற்பழித்த ஆண்களை வரிசையாக நிறுத்தி ஆண்குறிகளை வெட்டியெறிந்தார். தன் வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு கீழ்சாதி பெண்களை அழைத்து அவர்களோடு தூங்கச் சொல்லும் கேவலமான கலாச்சாரம் இருந்த ஊரில் அப்படிச் செய்தவனின் ஆண்குறியை வெட்டி எறிந்தார். தன்னந்தனியாக காட்டில் மாதக்கணக்கில் வாழும் நிலையெல்லாம் அவருக்கு வந்திருக்கிறது. அவரால், அவரைப் பிடிக்க முடியாமல், ஒரு மாநில முதல்வர் பதவி இழந்தார். அவரை சரண் அடைய முயற்சி செய்து வெற்றி பெற்று "முதலமைச்சரிடம் சரண் அடையுங்கள் என்று சொல்லி", "சரண் அடையும் போது CM வந்து விட்டார், சரண் அடையுங்கள் என்று சொல்ல, "நான் CM இடம் எல்லாம் சரண் அடைய "மாட்டேன்", "நீங்கள் சொன்னபடி முதலமைச்சரை வரச் சொல்லுங்கள்", என்று சொன்னவர் அவர். சரண் அடையும்போது தன்மேல் மீடியாவின் ஒளிவிளக்குகள் வீழ்ந்தபோது தன்பக்கத்தில் இருந்த உதவியாளன் "இந்த வெளிச்சம் பட்டா நாம சீக்கிரம் செத்துப்போயிடுவோம்" என்று சொல்ல கேமராவின் விளக்குகளுக்கு பயந்து ஒளிந்தவர். இப்படி அப்பாவியாக ஒரு கொள்ளைக்காரி இருக்க முடியுமா? ஆணாதிக்க சமூகம் பெண்ணை நிறைய மாற்றி இருக்கிறது. நம் தங்கையை, குழந்தையை பதினோரு வயதில் திருமணம் செய்து கொடுப்போமா? கோவையில் அந்த மகள், பிஞ்சு மகள் புணரப்பட்டதை அறிந்தபோது நெஞ்சு வலித்தது. தமிழகம் கொதித்தது. அந்த என்கவுன்டர் கூட வரவேற்கப்பட்டது. பூலனும் அப்படி ஒரு குழந்தைதானே. நம் மகள் தானே. சகோதரிதானே. அன்னைதானே. அன்று அன்னை ஒருத்தி பெண்களைக் காக்க கணவன் உயிர்த்தலத்தை அறுத்து கைத்தடிகளைக் கொன்று கழுத்தில் மாலையாக தலைகளைப் போட்டு காளி என்று பெயர் தாங்கினாள். "அவள் மட்டும் அன்னை காளி என்று வணங்கப்படலாம். இவள் மட்டும் கொள்ளைக்காரியா?" இவளும் காளிதான். இன்னொரு அன்னை காளிதான். பூமியில் பூலான் வணங்கியது அன்னை துர்க்கையை. நானும் அப்படித்தான், அன்னை துர்க்கையாகத்தான், பூலானை வணங்குகிறேன். விரும்பினால், நீங்களும் சிரம் தாழ்த்தி ஒரு வணக்கம் செய்யுங்கள், "அன்னைக்கு". | ||
Tuesday, May 10, 2011
வலது புறம் செல்லவும் - 7
| இயக்குனர் அகத்தியன் | 09-05-2011, 23:58 PM |
ஒவ்வொரு வாரமும் உங்களிடம் முற்றிலும் உண்மை பேச வேண்டும் என்பதே என் ஆசை. இதுவரை நிகழ்வுகளில் ஒரு பொய்கூட கலக்கவில்லை. சில உண்மைகளை தவிர்த்திருக்கிறேன். சிலரைக் காயப்படுத்த வேண்டாமே என்பதற்காக.
1997ல் ஒரு வாரப் பத்திரிக்கை என்னை அணுகியது. ஒரு தொடர் எழுத சம்மதித்தேன். மனம் கோபத்தில் குமுறிக் கொண்டிருந்த நேரம் அது. முன்னுரை எழுதி அனுப்பினேன். பிரசுரித்தார்கள். இயக்குனர் திரு எஸ்.ஏ.சந்திரசேகர் அதைப் படித்துவிட்டு "வேண்டாமே அகத்தியன் இப்போது இது உங்களுக்கு" என்றார். அவர் சொன்னது யோசிக்க வைத்தது. அதற்குள் முதல் தொடரை அந்த பத்திரிகைக்கு அனுப்பிவிட்டேன். அடுத்த வாரம் என் தொடரைத் தேடினேன். அகத்தியனின் தொடர் சில காரணங்களால் நிறுத்தப்படுகிறது என்ற அறிவிப்பு இருந்தது.
இந்த இடைப்பட்ட காலத்தில் என் கோபம் முற்றிலும் தணிந்து போனது. அது அவர்கள். இது நாம். ஏன் காயப்படுத்த வேண்டும் என்ற மனநிலை இப்போது. சில உண்மைகளை தவிர்த்து விட்டுத்தான் இப்போதும் எழுதுகிறேன். பொய் மட்டும் கலக்கவே இல்லை.
என்னைப் பொறுத்த அளவு எந்த இலக்கணத்தையும் வகுத்துக் கொண்டு நான் நட்பை அணுகியதே இல்லை. அந்த நேரம் என் மனம் எதைச் சொல்கிறதோ அதைக் கேட்டு நான் எப்படி செயல்படுகிறனோ அதுவே நட்புக்கான இலக்கணமாக எனக்கு ஆகிப்போனது.
கல்லூரிக் காலத்தில் என் நேசிப்புக்குட்பட்ட ஒரு நண்பனோடு பாலியல் தேவைக்காக ஒரு விடுதிக்குப் போனேன். ஒரே ஒரு பெண் இருந்தார். நண்பனை அனுப்பி வைத்தேன். வெளியே வந்து 'நீ'? என்றான். "வேண்டாம்... உன்னோடு இல்லறம் கண்ட பெண்ணை என்னால் தொட முடியாது. நீ என் நண்பன்" என்றேன்.
சராசரி மனிதனுக்குள்ள எல்லா அழுக்குகளும் எனக்குள் இருந்தது. ஆனால் அதற்குள் ஒரு நேர்மை இருந்தது.
என்னை நேசித்த ஆதரித்த ஒருவரின் இல்லத்தில் தங்கியிருந்தேன். வீட்டில் எல்லோரும் இரவுக் காட்சிக்கு போய் விட்டனர். அந்த இல்லத் தலைவி மட்டும் இருந்தார். என் மீது ஒரு பல்லி விழுந்தது. அலறிவிட்டேன். என்ன என்று அந்தப் பெண் கேட்டார். இடது தோளில் பல்லி விழுந்து விட்டது என்றேன். அதற்கு ஸ்திரிபோகம் கிடைக்கும் என்றார். என் மனைவி சென்னையில் இருக்கிறாள் என்றேன். நீங்கள் நினைத்தால் இங்கேயே கிடைக்கும் என்றார். வெளியேறி அனைவரும் இரவுக் காட்சி முடிந்து வரும் வரை எதிரே இருந்த டீக் கடையில் அமர்ந்து புகைத்துக் கொண்டிருந்தேன். இப்போதும் அந்தக் காட்சி கண்முன் விரிந்து கொண்டுதான் இருக்கிறது.
ஒரு தோழி என்னைக் கெஞ்சினார். நான் பெண்ணாய் உங்களுக்குத் தோன்றவில்லையா என்றார். தவிர்த்தேன். உன்னை என்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது வேண்டாம் என்றேன். தேவையில்லை, வாழ்வோம் என்றார். என்றாவது ஒரு நாள் உனக்குத் திருமணம் நடக்கும். கணவனோடு முதல் இல்லறம் துவங்கும்போது என் நினைவு வரும். குற்ற உணர்வில் மனசு சிதறும் என்றேன். ஒரு நாள் திருமணம் முடிந்தது. போனில் அழைத்துச் சொன்னார். நன்றி "நிம்மதியாக உறங்கினேன்" என்று.
ஆணாகட்டும், பெண்ணாகட்டும் தேவைக்காக நட்பை நான் பயன்படுத்தியதே இல்லை. எனக்கு தேவைகள் இருந்தன. அவை தம் தேவைகளைத் தேடியபோது நட்புக்களைக் காயப்படுத்தாமல் நதிகளைத் தேடிக் குளித்தன. குளித்து கரையேறி துவட்டும்போது நதியும் நானும் நண்பர்களாக மாறி இருப்போம்.
ஒரு நதியில் குளித்து கரை ஏறியபோது நதி என்னைக் கேட்டது "உங்களை மாதிரி ஒரு குழந்தை வேணும்".
எத்தனையோ அழுக்குக்களை கழுவிய நதி என் அழுக்கு கழுவி என்னை மட்டும் ஏன் நேசிக்க வேண்டும். நான் நதியில் குளிப்பதில்லை. நதியை நேசிப்பேன். நதி என்னைக் குளிப்பாட்டும். கரையேறித் துவட்டும்போது இதுதான் நட்பு என்று மனம் சொல்லும்.
"என் உயிர் நண்பன்" என்பதெல்லாம் என்னைப் பொருத்தவரை ஏற்றுக் கொள்ள முடியாத வார்த்தை வெளிப்பாடு. என் உயர்ந்த நண்பன் என்பதே நண்பனுக்கு நான் சொல்லும் அடைமொழி. உயர்வு என்பது ஒரு சொல்லில், ஒரு செயலில் கூட இருக்கும்.
அந்த நண்பன் எனக்கு நெருக்கமானவன். ஆரம்பப் பள்ளி தொடங்கி, உயர்நிலைப் பள்ளி முடிந்து, தொடர்ந்து கொண்டே இருந்த நட்பு. நான் முதலாண்டு படிக்கும்போது அவனுக்கு திருமணம். திருமணம். முடிந்து வீடு வந்து சேர்ந்த அந்த இரவு வேளையில் வீட்டிற்கு பின்னால் அவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதேன். என் நட்பு பறிபோய் விட்டதே என்ற ஆதங்கத்துடன். "எங்கேடா போயிட்டேன் கருணாநிதி" என்று அவன் தேற்றியது இப்போதும் என் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.
அந்தக் காலக் கட்டத்தில்தான் அவளும் பெண் தானே, அவள் ஒரு தொடர்கதை படங்கள் வெளியான நேரம். பெண் தவறை ஒத்துக் கொள்ளும்போது அவளை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று அவனிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவன் ஆமோதித்தான். மனைவியிடம் அதே கருத்தை அவன் சொல்ல, நீங்கள் அப்படிப்பட்ட பெண்ணை ஏற்றுக் கொள்வீர்களா? என்று அந்தப் பெண் கேட்டார். அவன் நிச்சயமாக என்றான், அவர் தன் கடந்த கால தவறுகளைச் சொல்லி மன்னிப்புக் கேட்டார். அவரை விவாகரத்து செய்தான்.
அந்த விவாகரத்துக்கு அவன் காரணங்களைத் தேடிக் கண்டுபிடித்த முறைகளை விளக்கியபோது ஒரு த்ரில்லர் திரைப்படம் பார்த்த உணர்வு எனக்கு ஏற்பட்டது. அந்த பெண்ணை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் படி வேண்டினேன். மறுத்தான், நாமே அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்துக் கொள்ளலாமா என்ற வெறிகூட வந்தது. முதன் முறையாக நட்பில் பயம் வந்தது.
நட்பு தொடர்ந்தது. நான் இயக்குனரான பிறகு ஊருக்குப் போயிருந்தேன். தொலைபேசியில் அழைத்து நான் வந்திருக்கிறேன். உடனே கிளம்புகிறேன் உன்னைப் பார்த்து விட்டுப் போக வேண்டும் என்றேன். ஒரு முக்கியமான ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கிறேன். மூன்று மணி நேரம் கழித்து வா என்றான். சந்திக்காமலே சென்னை திரும்பினேன்.
என் மூத்த மகள் கார்த்திகாவின் திருமணப் பத்திரிகையோடுதான் அவனை அடுத்து சந்தித்தேன். பத்திரிக்கை வாங்கி தேதி பார்த்தான். டைரி எடுத்துப் புரட்டினான். இந்த தேதியில் எனக்கு வேறு ஒரு அப்பாயின்ட்மென்ட் இருக்கு. முன்பே சொல்லியிருக்கக்கூடாதா? என்றான்.
கட்டிப்பிடித்து அழுதபோது எங்கேடா போயிடப்போறன் கருணாநிதி என்றவன் எங்கேயோ போய் விட்டான். நட்பு தோற்பது காதலைவிட வலி தரும் விஷயம்.
சுமார் ஐந்து வயது வரை மலேசியாவில். பிடுங்கி நடப்பட்ட நாற்றாக ஒரு கிராமத்துக்கு வந்து சேர்ந்தேன். அக்காவும் நானும் பள்ளியில் சேர்க்கப்பட்டோம். குட்டைப் பாவாடையும் காலில் செருப்பும் அணிந்து கொள்வார் அக்கா. நானும் அழகாக உடை உடுத்தி செருப்புப் போட்டுக் கொண்டு அக்காவின் கை பிடித்து பள்ளிக்குச் செல்லும்போது அந்தக் கிராமத்து சிறுவர்களுக்கு நாங்கள் காட்சிப் பொருட்கள். வேலிகளில் ஒளிந்து கொண்டு "டேய் புருஷன் பொண்டாட்டிடா" என்று கல்லெறிவார்கள். எங்கள் வீட்டின் பக்கத்தில் இருந்தான் ரெங்கசாமி. ஒரு நாள் அப்படித் திட்டி கல்லெறிந்த ஒருவனை அடித்துப் புரட்டிப் போட்டான். நான் சந்தித்த முதல் எம்.ஜி.ஆர் ஆகிப்போனோன் எனக்கு. ஏனோ அவன் படிப்பைத் தொடரவில்லை.
நான்காம் வகுப்பில் சீதாலெட்சுமி டீச்சர் மாற்றலாகிப் போகும்போது அவருக்கு பரிசு வாங்கிக் கொடுக்க காசு சேர்த்தோம். ஆறுமுகம் என்ற நண்பன் காசுக்குப் பொறுப்பாளன். காசை ஏமாற்றினான். நட்பு ஏமாற்றும் என்று முதலில் சொல்லிக் கொடுத்தவன் அவன்.
உயர்நிலைப் பள்ளியில் எல்லோரும் எல்லோருக்கும் நண்பர்கள் தான். ராமசாமி மட்டும் விதிவிலக்கு. என்னை 'வா' 'போ' என்று அழைப்பார். நான் 'வாங்க' 'போங்க' என்று அழைப்பேன். ராமசாமி வகுப்பில் முதல் மாணவன். தினமும் அறிவுரை சொல்லும் ராமசாமியைப் பார்க்கும் போதெல்லாம் இவர் எதிர்காலத்தில் ஆசிரியராக வருவார் என்று எனக்குத் தோன்றும்.
ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது ஒரு நாள் சீக்கிரமே புறப்பட்டு வந்து வகுப்பறையில் அமர்ந்து எதைப் பற்றியோ கவலைப் பட்டுக் கொண்டிருந்தேன். உள்ளே நுழைந்த ராமசாமி ஏன் கருணாநிதி தனிமையில் இருக்கிறாய்? என்றார். எனக்கு தனிமை பிடிக்கிறது என்றேன்.
தனிமை தவறானது. மனதைக் கொல்லும். தனிமையைத் தேர்ந்தெடுக்காதே என்றார். அப்போது எனக்கு அந்த கருத்தில் உடன்பாடு இல்லை. பின் தனிமை என்னைத் தத்தெடுத்துக் கொண்டபோது ராமசாமி மனசுக்குள் வந்து சொன்னேனே என்பார். உயர்நிலைப் பள்ளி முடிந்த பின் அவரைச் சந்திக்கவே முடியவில்லை.
பள்ளி முடிந்து புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பியுசி. தங்கமணி, அழகேந்திரன், செல்லையா என்று நண்பர்கள் எல்லோரும் எனக்கு சீனியர்கள். நான் அழைப்பது அண்ணா. தங்கமணிக்கு என்னை மிகவும் பிடிக்கும். என் எல்லாத் தவறுகளுக்காகவும் அவர் வருந்துவார். தன்னை வருத்திக் கொள்வார். அழகேந்திரனும் நானும் கவிதைப் பைத்தியங்கள். செல்லையா அறை நண்பர். செல்லையா ஒரு பெண்ணைக் காதலித்தார். நாங்கள் தங்கியிருந்தது தனியார் விடுதி. அந்தப் பெண் அவர் அம்மாவோடு நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு வந்து அவரைப் பார்த்துவிட்டுப் போவார். ஒரு நாள் கல்லூரி முடிந்து வந்தபோது செல்லையா அழுது கொண்டிருந்தார். அந்தப் பெண்ணுக்கு நாளை கல்யாணம். நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்றார். நானும் மாரிமுத்து என்பவரும் சைக்கிள் எடுத்துக் கொண்டு 15 கிலோ மீட்டர் உள்ள அந்த கிராமத்துக்குச் சென்றோம். மிகுந்த சிரமங்களுக்கிடையே அந்தப் பெண்ணை சந்தித்தோம். இரவு 12 மணிக்கு தயாராக இருக்கிறேன். காரோடு வந்து விடுங்கள் என்றார்.
இரவு 9 மணிக்கு விடுதி திரும்பினோம். செல்லையா அறையில் இல்லை. சினிமாவுக்கு போயிருந்தார். திரையரங்கில் தேடிக் கண்டுபிடித்தோம். அவர் அண்ணனும் கூட இருந்தார். செல்லையா என்னிடம், "அண்ணன் அந்தப் பொண்ணை மறந்துரு". வேற பொண்ணு பாத்துக்கலாம்னாரு. மறந்துட்டேன். என்றார். "அண்ணன் என்னிடம் கேட்டார். யாரு பொண்ணு கூப்பிடப்போனது?" நான், "நாந்தான்".
"அப்ப நீயே கலியாணம் பண்ணிக்க".
முகத்தில் காறித்துப்ப வேண்டும் போல் இருந்தது. கண்ணாடிக்கு முன்னால் நின்று காறித்துப்பினேன். பின்னாளில் அது கோகுலத்தில் சீதை ஆனது. செல்லையன் ஐ.சி. மோகன் ஆனார். கரண் நடித்தார். மேலே சொன்ன உரையாடலை அப்படி பயன்படுத்தினேன். கார்த்திகிடம் கோகுல கிருஷ்ணா பேசினார்.
பி.யு.சி.யுடன் தங்கமணியும் அழகேந்திரனும் செல்லையனும் வாழ்க்கையில் விடைபெற்றார்கள்.
காரைக்குடி அழகப்பர் கல்லூரியில் பி.ஏ. முதலாண்டு தமிழிலக்கியம். விடுதிக்குள் நுழையும்போதே அறிவுரை. காந்தி என்பவனுடன் சேராதே. முதலில் நான் பழகியது அவனோடு. அவன் முந்தைய ஆண்டும் அதே கல்லூரி மாணவன். வேறு துறையில். குடிப்பது, கஞ்சா அடிப்பது, இரவுகளில் நிர்வாணமாக விடுதியைச் சுற்றி வருவது என்று அவனே அவனைப் பற்றி பட்டியல் இட்டான்.
"சரி வா போய்க் குடிக்கலாம் என்றேன்". "நிறுத்திவிட்டேன்" என்றான். "சிகரெட்?" அதுவும்தான். ஒருவருஷம் ஜாலியா இருக்கணும்னு ஆசப்பட்டேன். செஞ்சேன். இனி வேற வாழ்க்கை என்றான்.
இன்று வரை ஒழுக்கமான மனிதன். குடிப்பதில்லை. எந்த கெட்டபழக்கமும் இல்லை. பின்னாளில் கராத்தே மாஸ்டர். ஹோமியோபதி டாக்டர். சமீபத்தில் அவனைக் கைபேசியில் அழைத்தபோது தேர்வுக்கு போய் கொண்டிருக்கிறேன் என்றான். இப்போதும் படித்துக் கொண்டிருக்கிறான். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் யோகா முதுகலை. "உங்க சுதந்திரம் என்பது என் மூக்கு நுனி வரைக்கும்தான். மூக்கை தொடுறது இல்லை". அவன் அடிக்கடி மற்றவர்களிடம் சொல்லும் வசனம். காதல் கோட்டையில் அஜீத் பேசுவார்.
இங்கே என்னை வியப்பில் ஆழ்த்திய இன்னொரு நண்பன் பகவதி. விடுதிவாசலில் நின்று கொண்டிருந்தேன். ஒருவன் என்னைக் கடந்து போனான். "மச்சான் எப்படிடா இருக்கே". என்றான். "நல்லாருக்கேன். உன் தங்கச்சி எப்படி இருக்காடா". என்றேன். "எனக்கு தங்கச்சி இல்ல. அதுனாலதாண்டா நீ என் மச்சான்" என்றான். அருகே வந்து "ஐ ஆம் பகவதி" என்று அறிமுகப்படுத்திக் கொண்டான்.
முதல் நாள் அவன் என்னிடம் அடித்த கூத்துதான் காதல் கோட்டையில் இரவில் பாண்டு குளித்துவிட்டு உடைமாற்றி படுத்து அழகான பெண்கள் கனவில் வருவார்கள் என்று அஜீத்திடம் சொல்லும் காட்சி.
ஒரு பெண்ணைப் பார்த்தால் மச்சான் உன் தங்கச்சியா என் தங்கச்சியா என்பான். சாராயக் கடைக்குள் உள்ளே நுழையும்போதே போதையில் தடுமாறுவான். 40 பக்க நோட்டு வாங்கி மாணவர்மன்றம் என்று எழுதி காசு வசூலித்து சாராயம் குடிக்க கூட்டிப்போவான். விடுமுறையில் ஊருக்குப் போகும் போது எல்லா மாணவர்களிடமும் பகவதி, பகவதிதெரு, கீரமங்கலம் என்று எழுதி ஒரு தபால் அட்டை கொடுத்து அவர்கள் ஊரில் போஸ்ட் பண்ணச் சொல்வான். தன் வீடு இருந்த தெருவை அப்போதே பகவதி தெரு என்று மாற்றியவன் அவன்.
நான் படிப்பைத் தவிர எதிலும் நல்ல பெயர் வாங்காத காலம் அது. 1800 மாணவர்களின் நலம் கருதி என்னைக் கல்லூரியிலிருந்து நீக்கியது நிர்வாகம்.
இரண்டாம் ஆண்டு மதுரை யாதவர் கல்லூரி. கல்லூரியில் சேர்ந்து விடுதிக்குப் போனேன். விடுதிக் காப்பாளர் அழகப்பர் கல்லூரியை விட்டதற்கான காரணம் கேட்டார். சாப்பாடு பிடிக்கவில்லை என்றேன். சிரித்துக்கொண்டே "நான் ஆறு வருடம் அங்கே மாணவன்" என்றார். உண்மை சொன்னேன். சேர்த்துக் கொண்டார். இன்று வரை என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய மிகச்சிறந்த மனிதர். தற்போது அவர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்.
முதல் நாள் கல்லூரியில் நான் அமர்ந்த வரிசையில் யாரும் அமரவில்லை. என்னை விமர்சித்து பெஞ்ச் மேல் ஏறி நிற்கச் சொன்னார்கள். விடுதியில் யாரும் அவர்கள் அறையில் தங்க அனுமதிக்கவில்லை. அழகு சுந்தரமும், வெங்கடாசலமும் அறையில் இடம் தந்தனர். நல்ல நண்பர்கள் ஆனோம்.
மூன்றாம் ஆண்டு எனக்கு விடுதி மறுக்கப்பட்டது. மிகுந்த பிரச்சனைகளைச் சந்தித்துவிட்டு கல்வியாண்டின் மத்தியில் விடுதியில் போராடிச் சேர்ந்தேன். கோவிந்தராஜூவும், ராஜேந்திரனும் இடம் கொடுத்தார்கள்.
திருச்சியில் முதுகலை. நான் மூன்று பேரை மட்டும் நண்பர்களாக ஆக்கிக்கொண்டேன். ரெங்கநாதன், முருகன், மருதுதரை. அங்கும் பிரச்சினை. என்னைப் போடா என்று திட்டிய துறைத்தலைவரை போடா என்று நான் திட்டக் கிளம்பியபோது என்னைக் குண்டுகட்டாக தூக்கிக்கொண்டு வந்து என் படிப்பைக் காப்பாற்றியவன் முருகன். கொஞ்சம் ஒத்து போனீங்கன்னா இன்டெர்னல்ல பெயிலாக்க மாட்டாங்க. உங்க ஒ கிரேட் ஏ யாகவோ, பி யாகவோ மாறாது என்று வருத்தப்பட்டவர் ரங்கநாதன். தமிழ் படிப்பதால் தன் எதிர்காலம் குறித்து கவலை கொண்டவர் மருதுதுரை.
முதுகலை முடிய அவர்களுக்கு நான் காணாமல் போனேன். திருச்சியில் பறவைகள் இல்லத்தில் தங்கியிருந்தபோது தங்கவேலு. மகேந்திரன், முகமது ரஃபி முக்கியமானவர்கள்.
முகம்மது ரஃபி மிகவும் ஒழுக்கமான மாணவன். முப்பது நாட்களில் உருது புத்தகம் வாங்கி வந்து உருது கற்றுக் கொண்டவர். நானும் ரஃபியும் அப்போது ஒரு கவிதைத் தொகுப்புப்போட முயற்சித்தோம். ஏனே முடியவில்லை.
இந்தக் கட்டுரையில் இவர்கள் அனைவரையும் மறுபடியும் சந்திக்கத்தான் போகிறோம்.. அதற்காகவே இந்த அறிமுகம்.
என் பேராவூரணி நட்புக்களைப் பற்றிக் கொஞ்சம். அன்பழகன், பன்னீர், ராமமூர்த்தி, அசோக்குமார், மகேந்திரன் (மேலே சொல்லப்பட்டவர்) அழ. மூர்த்தி, ஜானகிராமன், விஜயன் என்று பட்டியல் நீளும்.
பன்னீரிடமிருந்து நான் கற்றுக்கொண்டது நிறைய. எந்தப் பிரச்சினையையும் எதிர்நோக்கத் தயங்காதவர். நாளைக்கு பத்துமணிக்கு 100 ரூபாய் வேணும் பன்னீர். "நாளைக்குத்தானே. இப்ப ஏன் கவலைப்படுறீங்க". அடுத்த நாள் 10 மணி. "விடுங்க கருணாநிதி. பிரச்சினைய பேஸ் பண்ணுவோம்". பன்னீர் ரொம்ப பிராக்டிக்கல்.
சினிமா ஆசை எனக்கு ஆரம்பப் பள்ளியிலேயே வந்துவிட்டது. என்ன ஆகப் போகிறோம் என்று தெரியாது. ஆனால் திரையில் பெயர் வரவேண்டும. முதுகலை முடித்து ஒரு நாள் எங்கள் ஊர் பிள்ளையார் கோவில் அருகே பன்னீரிடம் சொன்னேன். "நான் சினிமாவுக்குப் போகப்போகிறேன்". "சொல்றவன் செய்யமாட்டான் கருணாநிதி. சொல்லாதீங்க செய்ங்க"..
மறுநாள் சென்னையில் இருந்தேன்.
ஒரு முறை அவரிடம் சொன்னேன். ஒரே பெண்ணுடன் வாழ்க்கையை முழுதாக வாழவேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன் பன்னீர் என்று.
சிரித்தபடி சொன்னார். எதையும் நீங்களா முடிவு பண்ணாதீங்க. வாழ்க்கை முடிவு பண்ணும். எதிர்த்து நீந்தாதீங்க. எதிர்த்து நீந்தி தோற்றுப்போய் அதன்போக்கில் நீந்திக் கொண்டிருக்கிறேன். வாழ்க்கை முடிவெடுத்ததை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். பன்னீரின் அந்த வார்த்தைகளில் எவ்வளவு உண்மை.
அன்பழகன் இன்னும் என்னை அழைப்பது "டேய் கிறுக்கா". சொல்வது, "இன்னும் கிறுக்கனா இருக்கியேடா. டேய் கிறுக்கா நீ நெனைக்கிறமாதிரியெல்லாம் யாரும் இல்லேடா. பொழைக்கிற வழியப்பாரு".
நான் சென்னைக்கு வந்து முதலில் தங்கிய இடம் ஸ்டான்லி மருத்துவமனை விடுதி. பேராவூரணி நண்பர் மாஸ்கோ அங்கு மாணவர். இளங்கோ (தற்போது திண்டுக்கல்லில் நரம்பியல் நிபுணர்) கஜேந்திரன் (தற்போது சென்னையில் தனியே கண் மருத்துவமனை) மூவரும் அறைத் தோழர்கள். அங்கு தங்கி இருந்தபோதுதான் நான் கடந்து வந்த கல்லூரிப் பாதையில் சந்தித்த ஒரு பெண்ணை மறுபடியும் சந்தித்தேன். வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தேன். மூன்றுபேரும் கேட்டார்கள். இந்த வயதில் உங்களுக்கு ஒரு பெண் தேவை. அதற்கான ஏற்பாடா? மறுத்தேன்.
எது நடந்தாலும் கடைசிவரை அந்தப் பெண்ணை கைவிட மாட்டேன் என்று உறுதி கூறினால் வந்து ரிஜிஸ்டர் ஆபிசில் கையெழுத்துப் போடுகிறோம்.
நட்பின் பெயரால் சத்தியம் செய்தேன். நட்பையும் சத்தியத்தையும் இன்று வரை காப்பாற்றுகிறேன்.
நான் சென்னை வாழ்க்கையை ஆரம்பித்த பிறகு என் வறுமையும், போராட்டமும் என் நண்பர்களுக்கு தெரியக்கூடாது என்று முற்றிலும் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். கல்லூரி, சொந்த ஊர் நண்பர்களுக்கு நான் நினைவுகளில் தங்கியவன் ஆனேன். பின் அகத்தியனாக மாறிப்போனதால் இன்னும் தூரம்.
சினிமாவில் மும்முரமாக வாய்ப்புத் தேடும் காலத்தில் நட்பு மட்டும் அமையவே இல்லை. ஒரு உதவி இயக்குனர் நண்பரானார். சேர்ந்து முயற்சிப்போம் என்றார். பின்னால் அவர் ஒரு ஒட்டுண்ணி எனத் தெரிந்தது. நேரடியாக மிக மோசமாகத் திட்டினேன். கோபப்படுவார். எதிர்த்து சவால் விடுவார் என்று எதிர்பார்த்தேன். என் காலருகே வந்தமர்ந்து கால்களைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினார். கோபம் வந்தது. எனக்கு என்மேல். தன்மானமும் சுயமரியாதையும் இல்லாத மனிதனோடு நட்பு வைத்திருந்ததற்காக. அன்றே அந்த நட்பை முறித்தேன்.
பின்னாளில் இன்னும் ஒரு ஒட்டுண்ணி நண்பன் ஆனான். எதிரிகளை மன்னிக்கலாம். துரோகிகளை மன்னிக்கக் கூடாதென்று முடிவெடுத்தேன். முதன் முறையாக அவனிடம்தான் வன்முறையைப் பிரயோகித்தேன். ஓடிப்போனான். ஆறுமாதம் கழித்து என் வீட்டருகே இருந்த காவல் நிலையத்தில் இருந்து எனக்கு அழைப்பு,
போனேன். உள்ளே அழைத்துப் போய் சோதனை இட்டார் காவலர். "ஏன் சோதனை"? என்றேன்.
"பாக்கெட்டில் வைத்திருக்கிற கத்தியைக் கொடுத்துவீடு".
"கத்தி வைத்திருக்கிறேன் என்று யார் சொன்னது".
"அவன் தான் சொன்னான்".
"நான் காவல்நிலையம் வரும்போது கத்தியோடு வருவேன் என்று நினைக்கும் ஒருவன் எப்படிப்பட்ட காரியத்தை எனக்கு செய்திருக்க வேண்டும்".
காவலர் முகம் நோக்கினார். அமரச்சொன்னார். ஆய்வாளரிடம் அனுப்பப்பட்டேன்.
"அடிச்சியா?"
"ஆமாம் சார் அடிச்சேன்".
என் காவல்நிலையத்தில் அடித்தேன் என்று ஒத்துக் கொண்ட முதல் மனிதன் நீ என்றார். சட்டத்தைக் கையிலெடுக்காதே, சங்கடங்கள் வந்தால் என்னை வந்து பார். உதவுகிறேன் என்றார். வாழ்வில் காவல்நிலையமே போகக் கூடாது என்று முடிவெடுத்திருந்தவன் நான்.. நட்பு என்ற பெயரில் ஒரு அசிங்கத்தை மிதித்துவிட்டு கழுவிக் கொண்டேன்.
காதல் கோட்டை வெற்றிக்குப்பிறகு அன்பழகனைச் சந்தித்தபோது "நீ ஜெயிச்சாத்தான் நாங்க உனக்கு பிரண்ட்ஸ்சாடா". என்றார். பன்னீர், "என்ன கருணாநிதி என்ன இருந்தாலும் நீங்க இப்படி பண்ணிருக்கக் கூடாது. நாங்கள்லாம் இல்லையா?" என்றார்.
ராமமூர்த்தி "ச்சீ போடா" என்றான்.
அழ மூர்த்தி "மறந்துட்டீங்களே" என்றார்.
அசோக் குமார் "சந்தோசம் .. இன்னும் நல்லா வாங்க "என்றார். மகேந்திரன் வெளிநாட்டில் இருந்தார். என் முகவரி தெரியாமல் ஆனந்தவிகடன் அலுவலகத்திற்கு என் பெயரிட்டு ஒரு கடிதம் எழுதி அனுப்பி இருந்தார். ஆனந்தவிகடன் என்னிடம் அதைச் சேர்த்தது. கம்பராமாயணம் யுத்த காண்டத்தின் கடைசிப் பக்கத்தில் அதை பாதுகாத்து வைத்திருக்கிறேன். "ஏன்?" சொல்கிறேன்.
எல்லா நண்பர்களையும் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும என்ற அடங்கா ஆவல் பிறந்தது.
ஒரு நள்ளிரவு இரண்டு மணிக்கு சேத்தியாதோப்பு அருகில் உள்ள வெள்ளியங்குடியில் காந்தியை சந்தித்தேன்.
அழகு சுந்தரம் அதே யாதவர் கல்லூரியில் வணிகவியல் துறையில் பேராசிரியராக இருந்தார். வெங்கடாசலத்தை மிகுந்த போராட்டத்துக்குப் பிறகு கொடைக்கானல் போகும் வழியில் தாண்டிக்குடியில் பிடித்தேன். ஸ்கூல் நடத்திக் கொண்டிருந்தான்.
ராசேந்திரன் பாண்டிச்சேரியில் ஒரு பேக்டரிக்கு சொந்தக்காரராக இருந்தார். பலமுறை கும்பகோணம் செல்லும்போதெல்லாம் முயற்சித்தும் கோவிந்தராசுவை சந்திக்கவே முடியவில்லை.
ஒரு நண்பரின் திருமணத்துக்கு காரைக்குடி போகும்போது பொன்னமராவதி அருகில் உள்ள குழிபிறை சென்று தங்கமணி. அழகேந்திரனைப் பற்றி விசாரித்தேன். தங்கமணி நெய்வேலியில் இருந்தார். இரவு 11 மணிக்கு அவர் வீட்டுக்குப் போனேன். வெகுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு விடைபெற்றேன். அவருக்கு நான் அகத்தியன் ஆகி விட்டேன் என்று தெரியவில்லை. கிளம்பும்போது என்னுடன் வந்திருந்த கேமிரா மேன் ராஜேஷ் யாதவ் என்னைப் பற்றிச் சொல்ல. "அடப்போடா நாயே" என்றார். அழகேந்திரன் சென்னையில் இருந்தார்.
கோவை வேளாண் கல்லூரியில் ராமசாமி இருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள். போய்க் காத்திருந்தேன். ஒரு கருத்தரங்கில் இருந்தார். வந்தார். வேளாண் துறையில் பி.ஹெச். டி வாங்கியிருந்தார். அளவிட முடியா சந்தோசம் அன்று. தற்போது கலவையில் கல்லூரி முதல்வர். சேலம் கல்யாணத்துக்கு போனபோது திருச்சி விடுதி நண்பர் தங்கவேலுவைச் சந்தித்தேன். தலைமை ஆசிரியராக இருந்தார்.
திருச்சி நண்பர் முகமது ரஃபி. கல்லூரியில் ஆங்கில துறையில். நாடறிந்த எழுத்தாளர் நாகூர் ரூமியாக மாறி இருந்தார். சமீபத்தில் அவர் புத்தகம் ஒன்றுக்கு முன்னுரை எழுதும்போது கர்வப்பட்டேன்.
விஜயனை மட்டும் எங்கு தேடியும் கண்டுபிடிக்கவே முடியவில்லை. கண்ணாமூச்சிதான். கடைசியாக மூன்று மாதங்களுக்கு முன்னால் பெண்ணாகரம் அருகில் உள்ள ஏரியூரில் கண்டுபிடித்தேன். கிட்டதட்ட எல்லோரையும் தேடிக் கண்டு பிடித்துவிட்டேன். இன்னும் சிலரைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.
சினிமாவில் நான் முயற்சி செய்த காலத்தில் குறிப்பிட்டுச் சொல்லும் நண்பர்கள் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஒரு கதையாசிரியனாக என்னை அங்கீகரித்து சினிமா உலகில் வலம் வர விட்டவர்கள் அம்மா கிரியேசன்ஸ் சிவா வெங்கட்.
கவிஞர் காளிதாசனையும் இசையமைப்பாளர் தேவாவையும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். மனசுக்கேத்த மகாராசா என்ற படத்திற்கு கதை வசனம் எழுதினேன். திருதேவா இசையமைப்பாளராக அறிமுகம். காளிதாசன் பாடல் எழுதினார். அங்கு ஆரம்பித்த நட்பு இன்னும் தொடர்கிறது. என் முதல் படத்திற்கு மிக மிகக்குறைவான ஊதியத்தில் தேவா நட்புக்காக இசையமைத்துக் கொடுத்திருக்கிறார். கவிஞர் காளிதாசனுக்கு நான் உதவியாளன் என்றே சொல்லலாம். பிரபலமான இயக்குனரான பிறகும் கூட அவருக்காகப் போய் பாடல்களைப் பிரதி எடுத்துக் கொடுத்திருக்கிறேன். நான் பாடல் எழுதுவதில் அவரிடம் பெற்ற பயிற்சியும் ஒரு பங்கு வகிக்கிறது.
தங்கர்பச்சான் இனிய நண்பர். எனது நான்கு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மற்றவர்களுக்கு அவர் பேசினால் வலிக்கும். எனக்கு அவர் பேச்சு பிடிக்கும்.
அடுத்து நண்பர்கள் என்று குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால் வெள்ளத்திரை விஜியும், தயா செந்திலும்தான். தொழில் செய்யும்போது நண்பர்களாய் இருப்பவர்கள் நிறைய. நிரந்தர நண்பர்களைப் பற்றி மட்டுமே நான் குறிப்பிடுகிறேன்.
சினிமாவில் நான் சந்தித்த முக்கியமான மறக்க முடியாத நண்பன் பிரகாஷ்ராஜ். எப்போது அவர் ஞாபகம் வந்தாலும் அந்த நட்புக்கு மனம் நன்றி சொல்லும். சமீபத்தில் திரு பார்த்திபன் நான் நெருங்கிப் புரிந்து கொண்ட நல்ல நண்பர். இயக்குனர்கள் பிரபு சாலமன், சாண்டில்யன், அறிவுமணி இயக்கிய எம்.ஏ. கென்னடி, டேவிட், சுரேஷ்குரு புதிதாய் வந்த சாணக்யா, கணேஷ், பெங்களூர் பிரேம் இவர்களையெல்லாம் என் நண்பர்கள் என்று சொல்வதைவிட என் குடும்பம் என்றுசொல்வதுதான் எனக்குப் பிடிக்கும்.
அப்போதும் சரி இப்போதும் சரி என் பேராவூரணி நண்பர்கள் பெண்களைப் பற்றிப் பேசியதோ விமர்சனம் செய்ததோ கிடையாது. எங்கள் அமர்வில் யாராவது ஒருவர் புதிதாய் வந்து பெண்கள் பற்றிப் பேசினால் ஆர்.எஸ் வாத்தியார் சொன்னதை நான் அவர்களுக்குச் சொல்வேன்.
கற்பில் சிறந்தவள் கண்ணகியா, மாதவியா என்று ஒருவர் அவரிடம் கேட்டார்.
அடுத்தவன் பொண்டாட்டியப் பத்தி நாம ஏன் பேசணும். வா உன் பெண்டாட்டி கற்பில் சிறந்தவளா? எம் பொண்டாட்டி கற்பில் சிறந்தவளானு பேசலாம். என்றார். வாழ்க்கை முழுதும் இதுதான் நான் கடைபிடிப்பது.
ஆர்.எஸ் நிறையப் படிப்பவர். அப்போதெல்லாம் பேராவூரணியில் ரயில்வே ஸ்டேசனில் நண்பர்கள் கூடுவோம். ஆர் எஸ்., மாஸ்கோ. குணசேகரன், ராமகிருஷ்ணன் எல்லோருமே படித்த புத்தகங்கள், பார்த்த சினிமாக்கள், அரசியல் என்றே பேசுவார்கள். இப்போதும் நானும் என்னைச் சந்திக்கும் நண்பர்களிடம் எஸ். ராமகிருஷ்ணனின் துயில், வைகோவின் ஈரோட்டுப் புத்தகவிழாப் பேச்சு. சிவக்குமாரின் கம்பராமாயண உரை, அண்ணன் அறிவு மதியின் மழைப்பேச்சு என்றுதான் பேசிக்கொண்டிருக்கிறேன். ஆனால் இன்றைய இளைஞர்கள் நட்பின் பெயரால் கூடும்போது இது நடக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை.
பெண்களுடனான என் நட்பு குறித்து நான் நிறையப் பேச வேண்டும். அதை இங்கே திணிக்க விரும்பவில்லை. வலதுபுறம் செல்லுங்களில் வேறொரு சமயத்தில் விரிவாகப் பார்ப்போம். எனினும் மரியாதைக்குரிய ஒரு தோழியை மட்டும் குறிப்பிட்டு விடுகிறேன்.
சில ஆண்டுகளுக்கு முன் கோவையில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்துக்கு பணி நிமித்தமாய் அழைக்கப்பட்டேன். எனக்கு வணக்கத்துக்குரிய ஒரு தோழி கிடைத்தார். தமிழ்த்துறையில் பொறுப்பு. எப்போதாவது பேசுவோம். எனக்கு ஏதாவது இலக்கியம் சம்பந்தமான சந்தேகம் என்றால் தெளிவுபடுத்துவார். போகும்போது சந்திப்பேன். அவர்தான் நான் சந்திக்கத் தேடிக் கொண்டிருந்த, முதுகலை பயிலும்போது பழகிய நண்பர்களைக் கண்டு பிடித்துச் சொன்னார். முருகன் ஈரோட்டில் தமிழாசிரியர். மருதுதுரை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தமிழ்துறையில். ரெங்கநாதன் கும்பகோணம் அரசினர் கல்லூரி தமிழ்த்துறையில்.
இப்போதெல்லாம் கைபேசியில் உடனுக்குடன் நண்பர்களுடன் உரையாட முடிகிறது. நான் யாருக்கும் குறுச்செய்தி வாழ்த்துக்கள் அனுப்புவதில்லை. பண்டிகை நாட்கள் மறக்காமல் என் நண்பர்களுடன் நான் பேசும் நாட்கள்.
பொருளாதாரம் நட்பில் முக்கியம் என்று கருதுபவன்நான். வெற்றிபெறும் வரை நான் யாரிடமும் போய் நின்றதில்லை. சிலர் என் நிலையறிந்து உதவினர். திணையளவை பனையளவாக மதித்து திருப்பிக் கொடுத்திருக்கிறேன். எந்த நண்பருக்கும் அவரது தேவைக்கு கடன் என்று கொடுத்ததில்லை. இயன்றால் கொடுத்துவிட்டு எதிர்பார்க்கமாட்டேன். இயலாது என்றால் மன்னிக்கவும் என்பேன்.
ஒரு நண்பர் நான் சிரமப்பட்ட காலங்களில் உதவினார். அவரை நம்பி வாடகை சைக்கிள் எடுத்து வைத்திருப்பேன். செருப்பு வாங்கித்தருவார். நான் வெற்றி பெற்றபோது அவர் சிரமத்தில் இருந்தார். இரண்டு லட்ச ரூபாய் கேட்டார். கடனை அடைத்துவிட்டு என்ன செய்வீர்கள் என்றேன். வேலைக்கு முயற்சிப்பேன் என்றார். தொழில் தொடங்கச் சொன்னேன். பத்து லட்சம் முதலீடு. ஒரு வருடத்தில் நட்டம் என்றார். விட்டு விடுங்கள் என்று மறந்துவிட்டேன். எப்போதாவது மற்ற நண்பர்கள் என்னைத் திட்டும்போது அன்பழகன் சொல்வார். "அவனே கவலைப்படலே. உங்களுக்கு ஏன்டா தேவையில்லாத கவலை". என்று.
செல்வம் என்று ஒரு நண்பர் அறிமுகம் ஆனார். நான் ஒருமுறை இக்கட்டான சூழ்நிலையில் இருந்தபோது தானாக ஒரு பெரும் தொகை கொடுத்து உதவினார். திருப்பிக் கொடுத்தேன். பணத்தை மீறி நட்பு வளர்ந்தது. புத்தகப்பிரியர். படித்ததைப் பகிர்ந்து கொள்ள ஒரு நண்பர் கிடைத்தார். அவ்வப்போது கொடுக்கல் வாங்கல் தொடர்ந்தது. ஒரு சிறிய தொகையை திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலை. என் சூழ்நிலைக்கு அவரை மீண்டும் பயன்படுத்தக்கூடாது என்று நானே ஒதுங்கிக் கொண்டேன். வார்த்தைகள் இல்லா வருத்தங்களுடன் அந்த நட்பில் இடைவெளி விழுந்தது. அந்த நட்பை மீட்கும் காலம் அருகாமையில் இருக்கிறது. மற்றபடி பொருளாதார அடிப்படையில் நட்பை நான் வெகு கவனமாகவே அணுகியிருக்கிறேன்.
எப்போதும் எந்த நேரத்திலும் தோன்றுவதைப் பகிர்ந்து கொள்ள என் மூன்று பெண்களும் எனக்கு நல்ல தோழிகளே. மூத்தமகள் கார்த்திகாவின் கணவர் தீராத விளையாட்டுப் பிள்ளை இயக்குனர் திரு எனது நல்ல நண்பர். இதுதான் குடும்ப அமைப்பில் நான் கடைபிடிக்கும் நட்புமுறை.
நான் சந்தித்த நட்புகளில் ஒன்றிரண்டைத் தவிர அத்தனையும் உயர்ந்த நட்புகளே. சொல்லிலும் செயலிலும் இன்று வரை உயர்ந்தே நிற்கிறார்கள். நான் நட்புகளால் ஆசிர்வதிக்கப்பட்டவன். இதுவரை என் எல்லா நட்புகளும் எனக்கு மகிழ்ச்சியையே பந்தியிட்டிருக்கின்றன. ஆனால் ஒரே ஒரு நட்பு மட்டும் என்னை சோகமாக்கியது.
பேராவூரணியில் மகேந்திரன் எனக்குத் தாமதமாகத்தான் நண்பரானார். "அவனைச் சேக்காதீங்கடா" என்று மற்ற நண்பர்களிடம் சொன்னவர். அன்பழகனும், பன்னீரும் ராமமூர்த்தியும் சொல்லி என்னை நண்பனாக ஏற்றுக் கொண்டவர். இரக்க குணம் என்றால் மகேந்திரன் என்று சொல்லலாம். திருச்சியில் படிக்கும்போது பறவைகள் இல்லத்தில் அந்த நட்பு மேலும் மேன்மையுற்றது. நன்றாகப் பாடுவார். பெண்மை கலந்த நளினம் குரல் வளம் சேர்க்கும். படிக்கும்போது ஒரு இந்தி திரைப்படப் பாடலைக் கொடுத்து முதன் முதலில் தமிழில் பாடல் எழுத வைத்த நண்பன். நிறையச் சொல்லலாம் இப்படி. நான் சென்னை வந்தபிறகு அவர் வெளிநாடு போய்விட்டார். ஆனந்தவிகடன் மூலமாகக் கடிதம் அனுப்பினார். மீண்டும் தாய்நாடு வந்தார். நான் சென்னையில் ஒரு படப்பிடிப்பில் இருந்தபோது என்னைச் சந்தித்தார். மும்பை போகவேண்டும் மீண்டும் வெளிநாடு செல்ல முயற்சிக்கிறேன் என்றார். முதல்முறையாக அவருக்கு உதவ ஒரு சந்தர்ப்பம் தந்தார்.
சில மாதங்களுக்குப் பிறகு காதல் கோட்டை இந்திப் பதிப்பின் படப்பிடிப்பில் மும்பையில் இருந்தேன். அன்பழகன் என்னைக் கைபேசியில் அழைத்தார். மகேந்திரன் மருத்துவமனையில் இருக்கிறான். போய்ப்பார் என்றார். போனேன். தலை மழித்து கோமாவில் தூங்கிக்கொண்டிருந்தான் நண்பன். துணைக்கு இருந்த நண்பர்களிடம் பேசி விட்டுத்திரும்பினேன். அன்று அவன் குடும்பத்தார் வருவதாக சொன்னார்கள்.
அன்றிரவு படப்பிடிப்பு முடிந்து அதிகாலை வந்து படுத்தேன். எழுந்து பகல் 12 மணிக்கு படப்பிடிப்புக்கு கிளம்பினேன். நகரிலிருந்து 40 கிலோ மீட்டரில் படப்பிடிப்பு. போய்ச்சேர்ந்தோம். மகேந்திரன் இறந்துவிட்டான் என்ற செய்தி. அப்போது தான் கவனித்தேன். போனில் சார்ஜ் ஒரே ஒரு புள்ளி ஒட்டிக் கொண்டிருக்கிறது. இரவில் சார்ஜ் போட மறந்துவிட்டேன். இப்போதோ அப்போதோ என்று அது உயிர்விடும் நிலை. மீண்டு ஓட்டல் அறைக்குத் திரும்பி சார்ஜ்ஜர் எடுக்க இயலாத சூழ்நிலை. நான் வைத்திருந்த போன் சார்ஜ்ஜர் யாரிடமும் இல்லை. ஒரு சிலரிடம் போன் இரவல் கேட்டால் காரணம் சொல்கிறார்கள். இறைவனை நோக்கிப் பிரார்த்தித்தேன். "இது அணைந்து விட்டால் என் நண்பனுக்கு உதவப் பயந்து ஓடி ஒளிந்த நண்பனாக நான் ஆகி விடுவேன். என்னை இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்று இறைவா".
ஊரில் இருநது அவன் குடும்பத்தார் பொருளாதாரம் கருதி அங்கேயே அடக்கம் செய்து விடுங்கள் என்றனர். மனம் ஒப்பவில்லை. மகேந்தரனின் துணைக்கு இருந்த நண்பர்களிடம் பேசினேன். வந்து சேர்ந்த குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரியாமல் செய்தியை மறைக்கச் சொன்னேன். எல்லோருக்கும் விமானத்தில் டிக்கெட் போட்டு, மகேந்திரனை மருத்துவமனையில் இருந்து தூக்கி வந்து பெட்டிக்குள் அடைத்து, அவனுக்கும் டிக்கெட் போட்டு எல்லாம் முடிந்துவிட்டு என் செல்போன் முடிந்தது என ஒலியெழுப்பி ஓய்ந்தது.
அதிகாலை வந்து, மகேந்திரனை அனுப்பும் அந்த நிறுவனத்திற்குப் போய், பெட்டி திறந்து, ஒரு மாலை போட்டு ரெஸ்ட் இன் பீஸ் (rest in peace) என்று அந்தப் பெட்டியில் எழுதிவிட்டு.. மெல்லக் கேட்டேன்.
"நீ எனக்குச் செய்த உதவிகளை இப்படியா நீ திருப்பிச் செய்ய வைப்பது?"
மகேந்திரன் எப்போதும்போல மௌனமாகவே இருந்தான்.
அந்த சிரிப்பு மட்டும் இல்லை.
நட்புடன்
அகத்தியன்.
Monday, April 18, 2011
வலது புறம் செல்லவும் - 4
வலது புறம் செல்லவும் - 4
இந்த முறை கடவுள் ஒரு அன்னையை அனுப்பியிருந்தார். எழுந்து வணங்கினேன். அடையாளம் தெரியாமல் குழம்பினேன். ``நிவேதிதா’’ என்றார். பேச ஆரம்பித்தார். எனக்கு வந்த இடத்தில் விவேகானந்தரின் தோற்றமே முதலில் கவர்ந்து விட்டது. காவியிலேயே தூய்மையாக, ஒரு சிறு கறை கூட இன்றி, அந்த அசத்தலான தலைப்பாகையோடு, அவரைக் காண்பதே ஆரோக்யமாக இருந்தது. இருக்கும் உடையை மற்றவர்கள் மதிக்கும் வண்ணம் அணிந்து கொள்வார். அடுத்து அவரின் செயல்பாடுகள். பசிக்கிறது என்றால் கூட லேசாக மேலே பார்த்து ஏதோ விண்ணப்பம் வைப்பார். காலை, மதியம், இரவு மெல்ல மேலே நோக்குகிறார் என்றால் உணவு தேவை என்று அர்த்தம். ஏற்கனவே ஆஜானபாகுவான தோற்றம், மிரட்டி விடும் பார்வை. ஒளி என்பது அந்த மகானின் கண்களிலும் உடலிலும் நிரம்பிக் கிடந்தது. எவ்வளவு பசியாக இருந்தாலும் வாழ்ந்த காலத்தில் அந்த மாமனிதன் பசியோடு இருந்தது தான் அதிகம். என்ன பசியாக இருந்தாலும் அவரின் உணவுப் பழக்கம் மிக வித்தியாசமாக இருக்கும் விள்ளல் என்று சொல்வார்களே, அளவாக வாங்கி, விண்டு, சாப்பிட்டு எழுந்துபோய் விடுவார். ``ஏன்?’’ என்றால், ``ஏன்?’’ பதிலுக்கு அவர் கேட்பது!. ``அளவான உணவுப் பழக்கமே உணவின் மேல் உள்ள பற்றை மழுங்கடிக்கும். எவ்வளவு சுவையானதாக இருந்தாலும் இவ்வளவுதான் எனக்கு என்று முடிவு கட்டிக் கொண்டால் அந்த உணவு கிடைக்காதபோது எண்ணம் தேடாது. என்றாவது ஒருநாள் கிடைக்கும்போது ஆவலுடன் எண்ணம் அதை உண்ணாது’’. எண்ணம் உண்கிறதா? உள்ளே சமைக்கும்போதே நாவில் எச்சில் ஊறுகிறது என்றால் உன் நாவிற்கு முன்பே எண்ணம் அதை சுவைத்து விட்டது என்று அர்த்தம். இது அசைவம், இது சைவம், இது காய்கறி, இது பழம் எனப் பிரித்துப்பார்த்து உன் வயிற்றுக்குள் அனுப்புவது எண்ணம்தான் என்பார். ஆட்டிறைச்சி, மானிறைச்சி, மீனிறைச்சி எந்த இறைச்சியாக இருந்தாலும் அது சதையே, ஒவ்வொரு சதையும் வேறு வேறு போல் இருக்கும் என்பதும் எண்ணமே. மீன் இறைச்சியைத் தவிர சொல்லாமல் சமைத்து வைக்கும் பல இறைச்சி உணவுகளை யார் முன் வைத்தாலும் பெரிதாக வித்யாசம் காண்பது இயலாது. பிய்த்து சமைக்கப்பட்ட மீன்களுக்கும் இந்தக் கருத்து பொருந்தும். ஒரு உணவுக்கு அந்த மகான் அளிக்கும் விளக்கத்தைக் கேட்டு விட்டால் உடனடியாக உணவின் மேல் உள்ள பற்று யாருக்கும் போய்விடும். எங்கோ சமைக்கும்போது நாவில் உமிழ்நீர் ஊறுவது கூட நமக்கு அவமானமாகத் தோன்றும். ``அய்யோ. எண்ணம் உண்கிறது’’ என்று. இப்படி இதுபோல் பொருட்களின் மேல் உள்ள அவா ஆகட்டும், நில நீச்சங்களில் உண்டான பற்று ஆகட்டும், ஒரு ஐந்து நிமிடம் அந்த மகான் பேசுவதைக் கேட்டாலே போதும். அதுமட்டுமில்லை அவர் பேசும் சில சபைகளில் அறுபது வயதுப் பெரியவர்கள் அதிகமாக இருந்தால் அன்று இரவு அவர் வருந்திக் கொண்டிருப்பார். ``ஏன் சுவாமி’’ என்று கேட்டால், இவர்கள் போகும்போது புண்ணியம் தேடிக் கொள்ளும் ஆசையில் வந்திருக்கிறார்கள். மாலை நேரங்களில் இவர்களின் பொழுது போயாக வேண்டும், ஒரு இரண்டு மணி நேரம், மருத்துவர்கள் சொன்னது போல், மதுவை மறக்க வேண்டும், திண்ணைகளில் அமர்ந்து எனது பேச்சுக்கள் பற்றி அவர்களது அறிவை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும், ``விழலுக்கு இறைத்த நீர்’’ என்பார். ``நான் பேசுவது இளம் ரத்தங்களுக்கு உரித்தானது. இளம் ரத்தங்கள் உலகை மாற்றும் சக்தி கொண்டவை’’. நிறைந்த கூட்டமாய் இருக்கும் சபைகளில் அவர் பார்வை மகாராஜாவே அமர்ந்து இருந்தாலும் இளைஞர்களைத்தான் தேடும். என்று சொல்லி ``உன் பார்வையும் இளைஞர்கள் மீது இருக்கட்டும்’’ என்று சொல்லிவிட்டுப் புன்னகையுடன் புறப்பட்டார் அன்னை.. நண்பர்களே.. நிறைய நட்புக்களைப் பார்த்திருப்பீர்கள். நண்பனைத் தேடி இருப்பீர்கள். நண்பனாய் இருந்திருப்பீர்கள். ``அக நக’’ நட்பும், ``இடுக்கண் களைகிற நட்பும்’’ கண்டு ``நவில்தொறும் நூல்நயம்’’ உணர்ந்திருப்பீர்கள். நட்பு (Friendship) நட்பாராய்தல் (Choosing) பழமை (Old Friends) தீ நட்பு (Bad Friends) கூடா நட்பு (False Friends) என்று நட்பைப் பற்றி ஐந்து அதிகாரங்களில் பேசுகிறது வள்ளுவம். கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார் நட்புதான் எனக்குக் காதல்கோட்டை கதை கொடுத்தது. கோகுலத்தில் சீதையும் நான் சந்தித்த நட்பின் கதைதான். ஆனால் நான் சந்தித்த, மிகச் சிறந்த, உயர்ந்த, கதைகளிலோ, எடுக்கவோ கோர்க்கவோ என்ற மனநிலையிலோ, செஞ்சோற்றுக் கடன் தீர்த்த சூழ்நிலையிலோ காணக் கிடைக்காத நட்பைப் பற்றி நான் இப்போது பேசப் போகிறேன். அது எனது பள்ளிப் பருவம். உயர்நிலைப் பள்ளி மாணவன் நான். என் முதல் வகுப்பில் இருந்து பதினொன்றாம் வகுப்பு வரை, பள்ளி நேரம் போக மீதி நேரம் கழிந்தது எனது அத்தானின் முடிதிருத்தும் கடையில் (Saloon), அங்கு நான் சந்தித்தவர்களே இதுவரை என்னை சிந்திக்க வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு நாள் பள்ளி முடிந்து திரும்பிய மாலைவேளை, கூட்டம் இல்லாத நேரம், பக்கத்து கிராமத்தில் இருந்து ஒருவர் வந்தார். நான் கடையின் மூலையில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தேன். தனது முன் நெற்றி வழுக்கை விழாத் தலையில் ஒரு சுடப்படாத அப்பளத்தின் பாதிபோல், முடியை அகற்றி வழுக்கை ஏற்படுத்தி இருந்தார். இரண்டு மூன்று நாட்கள் தாடிபோல் அந்த அரை அப்பள முன் மண்டையில் முடி முளைத்து நின்றது. கடைக்குள் வந்து அமர்ந்து முண்டாசு அவிழ்த்தபோதுதான் அது தெரிந்தது. அங்கே அமர்ந்திருந்த ஒரு சிலருக்கு அந்தக் காட்சி கேள்விகளை எழுப்பியது. நானோ பதில்களுக்காக காத்துக் கொண்டே படித்துக் கொண்டிருந்தேன். அந்த அரை அப்பள முன்மண்டைக்கு அவரது கிராமத்தில் நிறைய நண்பர்கள். ஒரு மாலை வேளை. ஏரிக்கரையோரம், செடிகள் மறைவில், காலையில் கழிக்க முடியாத கடனை மாலையில் கழித்துக் கொண்டிருந்தார். இவரின் நண்பர்கள் இருவர். ஒருவருக்கு ஒரு பெண் மேல் காதல், கிராமத்தில் காதல் என்பது காமம் சார்ந்தது. வைக்கோல் போரில் முட்டை ஒளித்து வைத்து காதலனின் உடல் தேற்றும். பத்துப் பேருக்கு மத்தியில் பெண்ணின் கையிலிருக்கும் குழந்தையை வாங்கும்போதே அவள் ஜாக்கெட்டுக்குள் பணம் சொருகும். யாருமில்லா நேரத்தில் வயல்காட்டில் புல் அறுத்துக் கட்டிய அந்தப் பெண்ணின் தலையில் புல்லுக்கட்டை தூக்கி வைத்து பட்டென்று தள்ளிவிட்டு கட்டிப்பிடித்துக் கொள்ளும். வெட்ட வெளியில் வினாடிகளில் ஆடையுயர்த்தி.. கால் பரப்பி காமம் தணிந்து கோழியாகும். எல்லாம் முடிந்து. யாருக்கும் தெரியாமல் பப்பாளிக்காய் தின்று, உதிரம் கக்கி, கன்னிமை காப்பாற்றி ஒரு நாள் மாங்கல்யம் வாங்கி அடுத்த ஊர் போகும். அரை வழுக்கை செடிக்குள். கரையில் இரண்டு நண்பர்கள். ஒருவன் சொன்னான் இரவுகளில் நான் என் காதலியை தேடிப் போவேன். கதவு திறந்திருக்கும். கதவருகே படுத்திருப்பாள். தொடுவேன். என் முன் நெற்றி வழுக்கையைத் தடவுவாள். அனுமதிப்பாள்.. இணைவேன்.. (இணைவோம் இல்லை) பிரிவேன்.’’ செடிக்குள் அவன் கேட்டுக் கொண்டிருந்தான். உடல் மலம் கழுவி, மனமலம் சேர்த்து வெளியே வந்தான். பேச்சுக் கொடுத்தான். பேச்சு விவாதம் ஆகியது. அந்தப் பெண் பொருளானாள். செடிக்குள் இருந்த நண்பன் சவால் விட்டான். ஒரு மாலைப்பொழுதில் அவள் அணிந்திருக்கும் ஜாக்கெட்டை இருவரும் பார்வையிடுவோம். அன்று இரவு அதைக் கழட்டிக் கொண்டு வந்து நான் காட்டுகிறேன் என்று. ஒரு மாலைப்பொழுது கிணற்றில் தண்ணீர் எடுக்க வந்த அந்த ஜாக்கெட் இருவரின் பார்வைகளில் பதிவு செய்யப்பட்டது. இரவு வந்தது. வழுக்கைத் தலையனின் வழுக்கைபோல சவால்விட்டவன் ஒரு சலூனில் அமர்ந்து அப்பளத்தின் அரை வட்டவடிவமாக தன் முன் மண்டையில் இருந்த முடிநீக்கினான். இரவில் சென்று தான் செடிமறைவில் ஒளிந்து கேட்டதுபோல் அடிநீக்கினான். மடி நீக்கினான். அவள் நெற்றி தொட்டாள். வழுக்கையை வழுக்கிக் கொண்டாள். ஜாக்கெட்டை திருடி, நண்பனிடம், உடுக்கை எடுத்தவன் என்றான். ``உடுக்கை எடுத்தவன் கையாலே ஆங்கே இந்த உயர்ந்த நட்பை இன்று நினைத்தாலும் நண்பன் என்பவன் ஜாக்கெட் கழட்டுபவனோ என்று எனக்குத் தோன்றும். இதை எழுதிக் கொண்டிருக்கும்போதே தர்மபுரி பெண்ணாகரம் தாண்டி ஏரியூர் என்னும் இடத்தில் இருந்து நண்பர் விஜயன் ``நண்பா.. எப்படி இருக்கீங்க’’ என்று அழைத்தார். காலையில் பேசுகிறேன் என்று கைபேசியை துண்டித்தேன். ``நண்பன் ’’ என்பது பற்றியும் ``தோழி’’ என்பது பற்றியும் சொல்ல வேண்டும் என்று தோன்றியது. கிட்டதட்ட பனியுகம் (Ice Age) முடிய ஆரம்பித்து மனித இனம் விதைக்கப்பட்டது. சந்ததி பெருகியது. பெண் தலைமையேற்றாள். வேட்டையாடினாள். உணவு கொணர்ந்தாள். மனித இனம் ஆங்காங்கே சந்ததியைப் பெருக்கியது. கொடுமையான மிருகங்களின் தொல்லை. ஜந்துக்களின் தொல்லை. மழை, பனி போன்ற சீற்றங்களின் தொல்லை. பனி என்றால் நடுநடுங்க வைக்கும் குளிர். மனிதர் குழுக்களாக ஆயினர். அந்தந்தக் குழுவைத் தவிர எந்தக் குழுவும் வேறு எந்த குழுவோடும் பழகாது. தங்களின் கூட்டத்திலேயே இரண்டு குழந்தைகள் மேலும் பெருகிவிட்டால் பங்கு போட இரண்டு வந்து விட்டதே என்று அஞ்சுவார்கள். சில குழுக்களில் தலைவி வேட்டையாடிக் கிளம்பி திரும்பி வருவதற்குள் குழந்தைகள் கொன்று வீசப்பட்டன. அதீத அவாவோடு அதிக மாமிசம் தின்னும் ஒருவன் கூட்டத்தில் இருந்தான். தலைவி எல்லோருக்கும் போதுமான அளவு கொடுத்து அவனைத் தனியாக மண்டிபோட வைத்து மீதம் இருப்பதைக் கொடுப்பாள். நாளடைவில் அளவு தீனிக்கு அவன் பழகிக் கொள்வான். பழக இயலாதவன் தனியே பிரிந்து செல்வான். எங்காவது ஒரு தனிப்பெண் கிடைப்பாளா! (வேட்டை ஆடி உணவு தர) எந்தக் குழுவாவது தன்னைச் சேர்த்துக் கொள்ளாதா? பசியிலும், பனியிலும் விறைத்து எங்கோ ஒரு குழுவைப் பார்த்துவிட்டால் பசிகூட இரண்டாம பட்சம்தான், எரியும் நெருப்புக்கு அருகில் இடம் கொடுக்க மாட்டார்களா? கொடுக்கவே மாட்டார்கள். ஊர்ப்பிடாரியை விரட்டி விடும் என்பதற்காக. எல்லோரும் தின்ற களைப்பில் தூங்கும்போது ஆப்பிரிக்காவில் (மனித இனம் தோன்றிய முதல் இடம்) அந்த அடர்ந்த காட்டில் ஒரே ஒரு மூர்க்கன் நெருப்பில் காய, பரிதாபமாக தூரத்தில் நின்ற அந்த நாடோடியைப் பார்த்து, என்ன தோன்றியதோ சைகையில் அழைத்து நெருப்புக்கு அருகில் இடம் கொடுத்தான். மொழியறியா காலத்தில் வாய்க்கு வந்த ஒலி எழுப்பும் மன நிலையில் நெருப்பில் இடம் கொடுத்தவனைப் பார்த்து இடம் பெற்றவன் ``நம்பெ’’ என்றான்.. வாய்க்கு வந்த ஒலி அது. முதல் நட்பு தோன்றியது. நம்பெ அந்த நாடோடியைப் பகலில் தன் கூட்டத்தின் கண்களில் மறைத்து, ஒளித்து வைத்தான். உணவு கொடுத்தான். இருவரும் காடு சுற்றினார்கள். பசி வெறி அதிகமுள்ள அந்த நாடோடி மிகத் திறமையாக கல்லால் எறிந்து விலங்குகளை வீழ்த்துவதில் வல்லவன். வீழ்த்தி, நெருப்புக் கங்குகளைத் திருடி `நம்பெ’க்கு கொடுத்தான். நம்பெ கூடவே சுற்றும் அந்தப் பெண்ணுக்கும் கொடுத்தான். நம்பெ நாடோடிக்கு தன்னுடன் சுற்றும் பெண்ணைக் கொடுத்தான். அவள் ஒத்துழைத்தாள். அந்த நாடோடி வீழ்த்திய விலங்குகளை நம்பெ தன் கூட்டத்துக்கு கொடுத்தான். பின் அவனைத் தன் கூட்டத்தில் சேர்த்தான். வெகு காலம் கழித்து நாடோடி தன் உறவுகளைப் பார்க்கும்போது நம்பெயை தன் குழுவுக்கு அறிமுகம் செய்து வைத்தான். நட்பு காரணமாக உலக வரலாற்றில் முதன் முறையாக இரண்டு குழுக்கள் இணைந்தன. பெண்களும், ஆண்களும் தங்களைப் பரிமாறிக் கொண்டார்கள். உறவுகள் தோன்றியது நட்பில்தான். இந்த உறவுகளில் விரிசல் ஏற்படுவதும் அதே நட்பால் தான். மனிதன் தோன்றிய புதிதில் அவனுக்கு நிறைய எதிரிகள் சுற்றிச் சுற்றி வந்தனர். உதாரணமாக கூட்டமாக வரும் விஷத்தேனிக்கள் எதிர்பாரா நேரத்தில் நூறுபேர் கொண்ட குழுவை நொடியில் சாகடித்துக் கொன்றுவிடும். இப்படி நிறைய இருப்பினும் பெண்ணுக்குப் பெண் எதிரி என்பதுதான் மனித குலம் தோன்றிய காலத்தில் இருந்து நியதியாய் இருந்திருக்கிறது. காரணம் வேட்டையாடுவதும், உழைப்பதும், காப்பதும் தாய்களின் கையில் இருந்திருக்கிறது. வானம் பார்த்து, பருவம் பார்த்து, சப்தம் பார்த்து, இரைச்சல் பார்த்து, வீசும் காற்று பார்த்து, கதிரவனின் நிறம் பார்த்து, இந்த இடத்தில் இதை சுலபமாகத் தட்டலாம் என்று கல் ஆயுதத்தோடு கிளம்பும்போது அதையெல்லாம் பார்த்த இன்னொரு தாய் மிக எளிதாக இரையை வீழ்த்தி இருப்பாள். இவளின் குடும்பம் பல நாள் பட்டினி கிடக்கும். ஆக எங்காவது இருகுழுப் பெண்கள் வேட்டையில் சந்தித்து விட்டால் கொலைவெறித் தாக்குதல் கூட நடக்கும். ``பசி’’ பசியே முதன் முதலில் பெண்ணைப் பெண்ணுக்கு எதிரியாக்கியது. பத்தாவது மாதத்தில் பிரசவ வலியால் காடுகளில் ஒரு பெண் துடித்துக் கொண்டிருந்தாலும் இன்னொரு குழுவில் உள்ள இன்னொரு பெண் பார்த்தால் போய்க்கொண்டே இருப்பாள். அவளும் எங்கோ துடித்துக் கொண்டிருந்தவள்தான். கடந்து போகிறவள் சிசுவை சுமந்து கொண்டிருந்தாலும் துடிப்பவளுக்கு கருணை செய்ய மாட்டாள். அப்படி ஒரு பெண் துடித்துக் கொண்டிருந்தபோது ஒரு பெண் பார்த்தாள். இருவருமே ஓரிரு முறை மோதிக் கொண்டவர்கள். என்ன தோன்றியதோ அருகே சென்று இளநீரைப் பிளந்து அவள் வாயில் ஊற்றி, இடுப்பில் மிதித்து குழந்தை வெளியே வர உதவினாள். சில காலம் கழித்து ஒரு இரைக்காக இருவரும் சந்தித்துக் கொண்டபோது தான் வீழ்த்திய இரையை எடுத்துக் கொண்டு போகச் சொன்னாள் வலியால் துடித்தவள். முதன் முதலில் அங்கு நட்பு அரும்பியது. உதவிய பெண்ணை வாய்க்கு வந்தபடி அழைத்த பெயர் "தொலி". ஒருவருக்கொருவர் உதவினால் பெண்கள் நட்பாகிக் கொள்ளலாம் என்பதும் அங்கு தோன்றியது. ஓரு ஆழிப்பேரலையில் அந்தப் பகுதி ஆப்பிரிக்காவில் இருந்து பிய்த்துக் கொண்டு வந்து ஆசியாவில் மோதியது. இந்தியா ஆனது. அந்த ``நம்பெ’’யும் ``தொலி’’யும் அந்த நிலப்பரப்பின் தெற்கே வாழ.. அது தமிழகம் ஆனது."நண்பன்".. "தோழி".. என்றானது. நட்பைத் தொடருவோம். | ||
http://koodu.thamizhstudio.com/thodargal_16_4.php |
Monday, March 28, 2011
வலது புறம் செல்லவும் - 1
| இயக்குனர் அகத்தியன் | 28-03-2011, 08.00 PM |
கடவுளிடம் அவரின் உதவியாளர்கள் வந்து நின்றார்கள். "என்ன?’’ என்று கேட்டார். மனிதர்களைப் படைத்து, அவர்களுக்கு நன்மை செய்வதாகவே அனைத்தையும் படைத்து விட்டீர்கள். அவர்கள் உங்களை மதிக்க மாட்டார்கள். ஏதாவது ஒரு கெட்டதையும் அவர்களுக்காக படைத்து விடுங்கள் என்றனர். கெட்டதை அவர்களே படைத்துக் கொள்வார்கள். கீழே எட்டிப் பாருங்கள் என்றார் கடவுள். கீழே எட்டிப்பார்த்தனர்.
"மனிதர்கள் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தனர்’’.
செய்முறை மட்டும் தான் நாம். மூலப்பொருட்கள் எல்லாம் கடவுள்தான். இதற்காகத்தான் இந்த மூலப்பொருள் என்று கடவுள் படைக்கவில்லை. ஆனால் இது இதற்குப் பயன்படும் என்று கண்டுபிடித்தது மனிதனின் புத்திசாலித்தனம்.
நிலையாக ஓரிடத்தில் மனிதன் தங்கிவாழ ஆரம்பித்த பின் தேவைக்காக சேமிக்க ஆரம்பித்தான். பழ உணவுகளைப் பானையில் இட்டு எதிரிக்குப் பயந்து பூமியில் புதைத்து வைத்தான். அடையாள மிட்டான். திடீரென எதிரிகளின் தாக்குதல் நிகழ இடம் பெயர்ந்தான். மீண்டும் தன் இருப்பிடம் வந்து அடையாளம் வைத்ததைத் தோண்ட மது உருவானது. காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது. இங்கே மனிதனின் புத்திசாலித்தனம் என்று மேலே சொன்னதை மறுக்கத்தான் வேண்டியிருக்கிறது. அதற்கும் மேலே சொன்ன "கடவுள் படைப்பில் எல்லாம் நல்லது’’ என்பதும் தவறுதான். எல்லா நன்மைக்குள்ளும் தீமை வைத்துதான் கடவுள் படைத்திருக்கிறார்.
இங்கிலாந்து, பிரான்ஸ் , போர்ச்சுகீசிய நாடுகள், ரோம சாம்ராஜ்யம், மெசபெடோமியா பகுதிகள் இங்கெல்லாம் முறையாக ஒயின் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் போதையும் கலந்தார்கள். அது ராஜரீக பானம் என்றழைக்கப்பட்டது.
அரண்மனை விருந்துகளின் வி.வி.ஐ.பிக்களுக்கு மட்டுமே இந்த "ராஜரீக’’ பானம் பரிமாறப்பட்டது. பின்பெரும் வணிகர்கள் அயல்நாட்டுத் தூதர்கள் என அது சற்று தன் எல்லையை விரித்துக் கொண்டது. தயாரித்தவன் அதைக் குடித்தாலும் தலை சீவப்பட்டது. அரண்மனையில் அதைக் கண்டுபிடித்தவனோ தயாரித்தவனோ வயதாகி ஓய்வு பெறும்போது அவர்கள் உயிரோடு நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். பிரான்சில் ஓய்வு கொடுத்து அனுப்பும்போது நான்கு விரல்களும் துண்டிக்கப்பட்டன. இவ்வாறெல்லாம் மது ஒரு கௌரவம் மிக்க பானமாகக் கருதப்பட்டது.
எல்லைகளில் குளிரில் காவல் காக்கும் வீரர்களுக்காக சாராயம் தயாரிக்கப்பட்டது. அதை பீப்பாய்களில் ஊற்றி, முத்திரை பதித்து ஒருவருக்கு இத்தனை அவுன்ஸ் என்று அளந்து கொடுத்தார்கள்.
மரபுகளை மீறுபவன்தான் மனிதன். அதைப்பிடித்து இதைப்பிடித்து காக்காய் பிடித்து தயாரிப்பு ரகசியத்தைக் கண்டறிந்தான் ஒருவன். கும்பலாக காட்டுக்குள் சென்று, காய்ச்சி, மாதக்கணக்கில் உருண்டு கிடந்து கை கால் தளர்ந்ததும் இல்லம் திரும்பினார்கள். உழைக்க மனித சக்தி இல்லையென்றதும் யோசித்த அரச வம்சம் முத்திரையோடு அலுமினியக் குழாய்களில் சரக்கை அடைத்து தானியமோ, பட்டுப்புழுக்களோ, துணியோ கொடுத்து இரவுகளில் வந்து வாங்கிச் செல்லலாம் என்றது. பட்டுப்புழுக்கள் கொடுப்பவருக்கு அளவின்றி குழாய்கள் கிடைத்தன. பட்டுப்புழுக்களுக்காகவும் பருத்திக்காகவும் மனிதர்கள் அலைய ஆரம்பித்தனர். உழைப்புக்கு ஊதியம் சாராயம் என்றானது.
முழுமையான நாகரீகம் தோன்றியதும் எல்லா விருந்துகளிலும் மது அனுமதிக்கப்பட்டது. 17, 18ம் நூற்றாண்டு வரை கிடைத்தற்கரிய பொருள் மது என்பதால் அதற்கு கௌரவம் கொடுத்து குடித்தார்கள். அப்படியே அனுபவித்தார்கள். விழாக் காலங்களில் மதுவிருந்து கொண்டாடினார்கள். மீண்டும் விழாக் காலத்தை எதிர்நோக்கினார்கள்.
நாமறிந்த வரலாறுகளில் வெள்ளையர்களின் விருந்து என்றால் மது பிரதானம். இப்படி கௌரவத்தின் அடையாளமாக இருந்த மது மாறத் துவங்கியது மொகலாயர்களால். ஓபியம் கிடைத்தாலும் சரி சாராயம் கிடைத்தாலும் சரி முழுநேர உணவாக ஆகிப்போனது அவர்களுக்கு. குடிப்பதும் தின்பதும் மட்டுமே அரசலட்சணம். இப்போது அது புருஷலட்சணம். அறுபதுகள் வரை புருஷலட்சணத்திற்கு பர்மிட் என்ற ஒன்று தேவைப்பட்டது. ரேசனில் குடிக்கும்போது ஆசை இருந்தாலும் அளவாய்க் குடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.
மறப்போர் புரியும் வீரர்களுக்கு போர்க்காலங்களில் பசியைப் பொருட்படுத்தாமல் வெறிகொண்டு எதிரியைத் தாக்க மது கட்டாயமாகப் பரிமாறப்பட்டது. பின்னாளில் அதே மறவர்கள் ஜாதிக் கலவரங்களில் குடியை பிரயோகித்தனர். ஒரே ஊருக்குள் பிரிந்து சண்டை போட்டுக் கொள்ளும் போது கூட இருதரப்பும் குடித்தனர். குடித்தால் வீரம் வரும் என்று விதைக்கப்பட்டது.
இன்னும் பின்னால் பர்மிட் எல்லாம் தூக்கிப்போட்டு விட்டு கடையில் வாங்கலாம் பாரில் குடிக்கலாம் என்றானபோது குடிப்பவக்ளின் எல்லை விரிந்தது. வயது வித்தியாசமின்றி குடிப்பழக்கம் தொற்றியது.
வானொலி இல்லாக் கிராமங்களில் வேலை இல்லாதோர் சாராயம் குடித்து விட்டு பகல் இரவு என்று சீட்டாடினார்கள். நகரங்களில் வருமானம் இல்லாதோர் அதற்காகக் கவலைப்பட்டுக் குடிக்க ஆரம்பித்தனர். வசதி உள்ளவர்கள் குடித்துவிட்டு "கிளப்’’ புகளில் சீட்டாடுவதை வேலையாக மாற்றிக்கொண்டனர்.
அரசின் உறவினர்கள் காய்ச்ச, அரசு அதை விற்க ஒரு பழக்கம் உருவானபோது மதுக்கடை இருக்கும் இடத்தில் திருவிழாக் கூட்டம் தோன்றியது. முகவரி கேட்பவருக்கு அடையாளமாக இருந்த கோவிலும், பள்ளிக்கூடமும், சைக்கிள் கடையும் மாறிப்போய் மதுக்கடை என்றானது. மதுக்கடைகளில் குடிக்கும் போதெல்லாம் வெட்டிப்பேச்சும், தகராறும் என்றாகிப்போனது. ரோட்டில் விழுந்து கிடப்பதும் காலையில் எழுந்து தள்ளாடி வீடு போவதும் சராசரிகளின் சராசரியானது. காலை ஆறுமணிக்கு குடிப்பவர்களுக்காக தெருவோரங்களில் அரசியல்வாதிகளால் மதுவிற்பனை அமோகமானது.
குடிப்பவன் வீட்டிலும் பெண்கள் இருந்தார்கள். விற்பவன் வீட்டிலும் பெண்கள் இருந்தார்கள். குடிப்பவனைத் திட்டினாள், விற்பவனை வாழ்த்தினாள். குடிப்பவன் குழந்தைகள் பட்டினி கிடந்தனர். வேலைக்கு சென்றனர், விற்பவன் குழந்தைகள் கறிச்சோறு தின்றனர். கான்வென்ட் சென்றனர். அரசு எழுபத்தைந்து ரூபாய்க்கு குவாட்டரை ஒருவனுக்கு விற்று ஒரு ரூபாய்க்கு அவனுக்கு அரிசி கொடுத்தது. ஸ்டார் ஓட்டல்களில் காக்டெய்ல் பார்ட்டி வைத்து விழாக்களுக்கு படித்தவர்களை அழைத்தார்கள். மாநாடுகளுக்கு குவாட்டரும் பிரியாணியும் கொடுத்து அரசியல்வாதிகள் மக்களை அழைத்தார்கள். ரேசன் கடைகளிலும் பொது இடங்களிலும் போராட்டம் நடத்த மது லஞ்சமாக மக்களுக்கு வழங்கப்பட்டது. திருமணங்களுக்கும் மரண நிகழ்வுகளுக்கும் குடிப்பதற்காக ஒரு கூட்டம் வந்தது. ஒரு குவாட்டர் தமிழகத்தின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறிப்போனது. ராஜரீக பானம் தனது ராஜபாட்டையில் தேரேறி வந்து, இறங்கி, நடந்து, தடுமாறி, லஞ்சமாக மாறி அழுக்காகி ரோட்டில் விழுந்து கிடக்கிறது.
more: http://koodu.thamizhstudio.com/thodargal_16_1.php