ஊசியாய் குத்தும் மார்கழிப் பனி. பொழுது முளைத்து ஒரு பனைமர உயரம் வரும் வரைக்கும் குளிரும் பனியும். குட்டிபோட்ட பூனையாட்டம் கூடவே சுத்திக்கிட்டிருக்கும். வயதானவர்களுக்கு மட்டுமல்ல. இளந்தாரிப் பயல்களுக்கும் இந்த இளங்காலை மார்கழியில் பேசும்போது வாய் தந்தி அடிக்கும். குயில் என்று நினைத்து காக்கைகளைப் கன்னி வைத்து பிடிப்போம். எப்போதும் ஒயாமல் ஒடிக்கொண்டிருக்கும் கொய்யாமரத்து அணில்கள்கூட கொஞ்சம் அமைதியாகவே மரக்கிளையில் படுத்துக்கிடக்கும். கூரைமேல் ஏற்றிவிட்ட சுரையும், பந்தக்கொடியில் படர்ந்துக்கிடக்கிற அவரையும், தரைமீது கிடக்கிற பறங்கியும் ஏகத்துக்குப் பிஞ்சுவிடும். தைமாதம் பிறக்கப்போகிற தைரியத்தில், தைநெல் அறுத்துக் கொடுத்துவிடலாம் என எண்ணி கடன்வாங்கி புதுவண்டி மாடிகள் வாங்குவதும், இந்த மார்கழியில்தான் நடக்கும். வட்டிச்செட்டி கூட யோசிக்காமல் கடன் கொடுத்து மகிழ்வதும் இந்த மார்கழியில்தான். காலப்போக்கில் மார்கழியில் வாங்குவதை மனிதர்கள் நிறுத்தியதும் சிலர் மட்டும் வாழவேண்டும் என்ற சூழ்ச்சிதான் (அக்ஷ்யதிதி பிறந்த காரணமும் அதுதான்), பனியிறங்கும் இந்த மார்கழியை பழிக்கு ஆளாக்கி பீடைமாதம் எனக் கதிபுனைந்து விட்டுட்டாங்க. இதோ இன்னும் ஒருவாரம்தானிருக்கு தைமாதம் பிறப்பதற்கு. காணுமிடமெல்லாம் நெல்லறிந்த வயல்கள். செழித்தோங்கி வளர்ந்துக்கிடக்கிற செங்கரும்பு, மஞ்சள்கிழங்கு, வாழைன்னு மக்கள் முகமெல்லாம் மகிழ்ச்சிப் பூத்துக்கிடக்கிற தைமாதம். தை என்பது தமிழனின் அடையாளம். கன்னிப் பெண்களுக்கு தையில் பரிசம் போடுவது ஒரு வழக்கமாக இருந்தது. களஞ்சியங்கள் நிறைவதும் இந்த தை மாதத்தில். கிராமங்களின் உயிர்த்தொழிலே உழவுதான். அதனால்தான் வள்ளுவன் சொன்னான் “சுழன்றும் ஏர்பின்னுது உலகு” என. உழவு இல்லையேல் உலகு இல்லை. அந்த உழவுக்கு உறுதுணையாய் இருந்தது மாடுகள்தான். மனிதனின் உறவு. இதோ இன்று தை மாதம் பிறந்துவிட்டது. ஆண்டின் பன்னிரெண்டு மாதங்களில் முதன்மையான, செழிப்பான மாதம் . அதனால்தான் பழந்தமிழர்கள் தை முதல்நாளை தமிழ்புத்தாண்டாக கொண்டாடி மகிழ்ந்தார்கள். மீண்டும் அந்தப் பழமையின் பெருமையில் நாம் தை முதல் நாளை தைத்திருநாளாகவும், தரைப்பொங்கல் நாள் எனவும், சூரியனை வழிபடும் திருநாளாகவும் கொண்டாடுகிறோம். காலம்காலமாக கற்சிலைகளை வழிபட்டவர்களின்றும் மாறுபட்டு முதன்முதலான இயற்கையை வணங்கி மகிழும் தமிழன் பகலை விழுங்கியபோது சூரியன் அஸ்தமமிட செவ்வானம் அதைமுத்தமிட, நெல்லடிக்கும் களத்தில் தலைத்தரையைவெட்டி செம்மண்ணெடுத்து குழைத்து மூன்று மண்உருண்டைகளை முப்புள்ளிகளாய் (ஆயுத எழுத்தைப்போல) அடுப்பு கூட்டி வைத்தபோது. விமான இருக்கையில் இருந்த செய்திதாளை நான் வாசிக்கையில் நம்மில்பிறந்து லண்டன்வாழ் தமிழன் சமீபத்தில் நோபல் பரிசுபெற்ற விஞ்ஞானி திரு. வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் ஒரு விழா உரையில் “நான் இந்த விழாவில் நாற்பத்திஐந்து நிமிடங்கள் செலவழித்தேன். அதில் முற்பது நிமிடங்கள் சால்வைகளும், மாலைகளும் வாங்கிக்கொண்டு பதினைந்து நிமிடங்கள் மட்டுமே என்னால் பேச முடிந்தது என்பது அவரின் வருத்தம் (அவர் பேசிய வார்த்தைகள் ஒவ்வொரு விநாடியும் எவ்வளவு அர்த்தமுள்ளது என்று உணர்த்தியது). நேரங்கள் எவ்வாறு வீணாகிபோகிறது என்பதை உணர்த்தப்பட்டு எனது கையில் இருந்த பையை துழாவியபோது திலீபனின் அந்த கடைசி 12 நாட்களை பற்றி படிக்க தொடங்குகிறேன். புத்தகம் படித்து முடித்தபோது ஹைதராபாத்தும் வந்துவிட்டது. நான் உண்ட சர்க்கரை பொங்கல் எனக்குள் செறிக்க மறுத்து உடல் முழுவதும் கம்பளி புழுவாய் ஊர்ந்தது. உண்ணா விரதமிருந்து உயிர்விட்ட அந்த மாவீரனின் நினைவு என்னை வாட்டியது. காந்தியின் அகிம்சை வெள்ளையனை இறங்க வைத்தது. அதே காந்திய வழியில் போராடிய நம் தொப்பில்கொடி உறவு திலீபனை அன்று நாம் அனைவரும் போராடி காப்பாற்றி இருந்தால். ஈழமும் வீழ்ந்திருக்காது. உயிர்விட்டுக் கொண்டிருக்கின்ற உறவினர்கள் இடம்,உணவு, உடை,உடமை, அங்கிகாரம் இழந்து தவிக்கும் தமிழர்கள் அனாதையாய் இருந்திருக்கமாட்டார்கள். இந்தியப் பெருங்கடலில் சீனாவின் பின் புலத்தால் இன்று நம் மீனவர்கள் படும் அவதி. நாளை நம் தமிழ்நாட்டுக்கும் வந்துவிடுமோ? அறம் தரம் இனி | ||
Saturday, January 15, 2011
கற்பனை+கனா=நிதர்சனம்
Sunday, May 3, 2009
யாவரும் கேளிர் - பகுதி - 11 -- (ரவிவர்மன், ஒளிப்பதிவாளர்)
செல்லப்பாவை குளிப்பாட்டி கோவணம் உடுத்தி வீட்டின் முன்வாசலில் வறுத்து கொட்டி இருக்கும் மணல் நடுவில் செல்லப்பாவை நிறுத்திய சாமிஅய்யா ஊர்மக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் செல்லப்பா பயத்துடன் சுடுமணலில் நிற்க சாமிஅய்யா பச்சை மூங்கிலை கத்திபோல் சீவி தன் கையில் ஒரு முறை கிழித்துப்பார்க்கிறான். அவன் கைதோல் கிழிக்கப்பட்டு ரத்தம் எட்டிப்பார்க்க அதை உறுதி செய்தவுடன், சாமிஅய்யா செல்லப்பாவின் கைகளை இறுக்ககட்டி அவனை அசையாமல் நிற்கவைக்க அவனும் வறுத்த மணல் சூடு பொறுக்கமுடியாமல் நிற்க்கும் வேளையில் சாமிஅய்யா அந்த மணல் சூடு ஆறுமுன் முடித்துவிடவெண்டும் என்று ஊர்மக்கள் கூர்ந்து கவனிக்கும் வேளையில் சாரதா செல்லப்பாவின் வாயில் ரஸ்தாளி வாழைப்பழத்தை திணித்துவிட்டாள், கண் இமைக்கும் நேரத்தில் எல்லாம் முடிந்துவிட்டது. செல்லப்பாவின் அழுகை சத்தம் மைக் வைத்து மக்களை ஏமாற்ற தொண்டை தண்ணீர் வற்றும் அளவுக்கும், அளவுக்கு அதிகமாக பொய்வாக்குறுதிகளை கக்கும் வேட்பாளர்கள் போல், செல்லப்பா கத்திக்கொண்டு இருக்கும் வேளையில் அவன் கைகளின் கட்டுகள் அவிழ்க்கப்பட்டு அவனின் உடல் முழுவதும் அந்த மூங்கில் கத்தியால் கிழிக்கப்பட்டு ரத்தம், நூரூ மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஓடி நின்றால் வேர்வை உடம்பில் மழைத்துளி போல் சொட்டுமே, அதேபோல் செல்லப்பாவின் உடம்பெல்லாம் ரத்தம் சொட்டுகிறது, அவ்வேளையில் வாயில் தினித்த வாழைப்பழத்தையும் மீறி அவன் வலி பொறுக்கமுடியாமல் அல்றிக்கொண்டு இருக்கும் போதே அவனை சுடும் மணலில் போட்டு புரட்டுகிறான் சாமிஅய்யா.
கிழிந்த பகுதிக்குள் சுடும் மணல் பட்டவுடன் மேலும் செல்லப்பா துடிக்க அதைப்பொருட்படுத்தாமல் அவனை மணலில் இருந்து தூக்கி நிறுத்தி “ ஏய் அரைச்சுவச்ச மஞ்சளை எடுத்துட்டு வாடி” என்று கூற, அவள் “இதோ” என்று மரைக்காப்படியில் உப்பு, மிளகாய் சேர்த்து அரைத்து வைத்திருந்த மஞ்சளை சாரதா, செல்லப்பாவிடம் கொடுக்க அதை வாங்கி ஏற்கனவே மூங்கில் கத்தியால் கிழிக்கப்பட்டு அவனை சுடும் மணலில் வறுத்து எடுத்து அவன் நின்ற போது அவன் உடம்பு நாட்டுத்துப்பாக்கியால் சுடப்பட்டு தப்பித்த சிட்டுகுருவிபோல் துடித்துக்கொண்டு இருக்கும்போதே சாமிஅய்யா கூடி இருந்த கூட்டத்தைப்பார்த்து “ ஏலேய் இரண்டுபேர் வாங்கடா” என்றான்.
கூட்டத்தில் இருந்து இருவர் ஒடி வந்து செல்லப்பாவின் கைகளையும், கால்களையும் இறுக்கி பிடித்துக்கொள்ள சாமிஅய்யா செல்லப்பாவின் உடம்பு முழுவதும் தன் கையில் வைத்திருந்த அரைத்த மஞ்சளை தடவ, மஞ்சலும், காய்ந்த மிளகாயும், உப்பும் அவன் உடம்பில் உள்ள புண்ணில் பட்டவுடன் கரும்பு தோட்டத்தில் தீப்பற்றி எரிவது போல் அவன் உடம்பில் வலிபாடாய்படுத்தியதில் செல்லப்பாவின் வாயில் இருந்த வாழைப்பழம் வெளியே வந்துவிழ, அவன் அலறும் சத்தம் கேட்டு ஊர்மக்கள் அனைவரும் கூடிக்கொண்டிருக்கும் வேளையில் ஸ்டீபன் வாத்தியாரும் அங்கே வந்துவிட்டார். அவரிடம் கொளந்தசாமி “வாத்தியாரே நீங்களாவது சொல்லக்கூடாதா? ஏன் சாமிஅய்யா இந்தப்பாடுபடுத்துறான், அந்த பச்சபுள்ளைய? “ அதைக்கேட்ட வாத்தியார் கொளந்தசாமியிடம் அவர் நல்லதுதான் பண்ணிக்கிட்டு இருக்கார். நாமதான் நாகரீகமா மாறணும்ன்னு நெனச்சு நல்ல விஷயங்களை எல்லாம் தொறத்திக்கிட்டு இருக்கோம் இந்த மாதிரி விஷயம் உங்களுக்கு புதுசா இருக்கும், ஆனா ?...
நரிக்குறவர் இனத்தில் இன்றும் ஒர் வழக்கம் உண்டு. நிறைமாத கர்ப்பிணியை யார் துணையுமின்றி காட்டில் அவளுக்கென்று அமைக்கப்பட்ட குடிசைக்கு அனுப்பிவிடுவார்கள், அவளே தனக்கு தேவையான பணிகளை செய்து தன்னைத்தானே பார்த்துக்கொண்டும், சமைத்து சாப்பிட்டுக்கொண்டும், தனது பிரசவவலியை அடக்கி மனதைரியத்துடன் தானே பிரசவித்ததும் தனது குழந்தையுடன் சென்று தனது கூட்டத்தினருடன் வந்தினைந்து மகிழும் அவளின் மனோ பலத்தை என்னவென்று சொல்வது. பிரசவசக்காலத்தில் தாயும் குழந்தையும் இறந்தாலும் அவளின் உறவினர்கள் இறந்தபின்புதான் சென்று பார்ப்பார்கள்.
ஆப்பிரிக்க காட்டுல வசிக்கிற பழங்குடியினர் இன்றும் தங்களுக்கு குழந்தை பிறந்த சில நிமிடங்களில் குழந்தையை மரப்பானையில் ஐஸ்சை நிறைய நிறப்பி அதனுள் குழந்தையை தலைகீழாக பிடித்து தலையை மட்டும் ஐஸ் தண்ணீருக்குள் மூழ்கடிக்க சில நிமிடங்கள் கழித்து வெளியே எடுப்பார்கள். அதிலிருந்து பிழைத்த குழந்தைக்கு நோய் எதிர்ப்பு ச்க்தி அதிகமாம். அந்த மாதிரி செய்யும் போது சில குழந்தைகள் இறப்பதும் உண்டாம்.
அந்த கால போர் வீரர்கள் இந்த வைத்தியத்திற்கு உட்பட்டவர்கள் என்று வரலாறு சொல்கிறது. தமிழ் இனத்துக்காக மட்டுமல்ல நம்தமிழ் மொழிக்காகவும் தான் அந்த போராட்டம் என்பது நமக்கு தற்போது அறிவது கடினம். நம்மைவிட்டு வெகுதூரம் சென்றுவிட்டது தூயதமிழ். அதாவது யாழ்ப்பாணம் வழியாக கனடாவுக்கும் மற்றும் பல நாடுகளுக்கும் சென்று கொண்டு இருக்கிறது. (இதைப்பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் விளாவரியாக பேசுவோம்).
புல், பூண்டுகள் கூட அழிந்துபோனால் மீண்டும் முளைத்துவிடுகிறபோது, ஒர் இனமா, அதுவும் நம் தமிழினமா அழிந்துவிடப்போகிறது? வெட்ட, வெட்ட முளைப்பவர்கள் வீரர்கள் அல்லவா! போரும், காதலும் தமிழனின் வாழ்வியல் விழுமியங்கள். போர் இலக்கணங்களை அறியாதவன் தமிழனல்ல என்று புறநானூறு சொல்கிறது. தமிழினத்தை காக்க போரிடுவது குற்றமா? ஈழத்தமிழினத்தை காக்க போரிடும் தமிழினத்தலைவன் தனது இளமை பருவத்தில் மஞ்சள்பத்து வைத்தியத்திற்கு உற்பட்டவர்தான் என்று சொல்ல கேள்வி. இதைப்பற்றி விளக்கமாக பிறகு பார்ப்போம்.....
“களம் கழுமிய படைஇரிய
உளம் கிழித்தவேல் பறித்தோச்சின்னு “ என
தமிழின வீரத்தை புறநானூறு சொல்கிறது.
பத்துவயதுக்கு மேலான ஆண்பிள்ளைகளுக்கு அந்தகாலத்தில் இதுபோல் செய்வது வழக்கமாம். “ஆமாம் கொளந்தசாமி ஏன் இந்த மாதிரி சாமிஅய்யா செல்லப்பாவுக்கு செய்கிறார்ன்னு தெரியுமா? “ தெரியாது வாத்தியாரே. “அதாவது இதுமாதிரி செய்த பிறகு உடல் உறுதியாகும், உடம்புல கத்தியால குத்துனாக்கூட கத்தி உடையுமாம். அதையும் மீறி காயப்பட்டா உடனே ஆறி அந்த காயப்பட்ட இடத்தில சுவடே அறியாதாம். எந்த பூச்சிகடிச்சாலும் விஷம் ஏறாது.”அப்படியா சார் “ நான் என்ன கதையா சொல்றேன்” என்றார் வாத்தியார். இருவரும் சிரிக்க, செல்லப்பாவை வேப்ப இலையையும் அதில் கொஞ்சம் புளிய இலையையும் கலந்து நாலு கையளவு ஆலம்பட்டையை அரைத்து தண்ணீரில் கொதிக்க வைத்து இளம் சூடாகிய பிறகு அந்த தண்ணீரை ஊற்றி சாரதா செல்லப்பாவை குளிப்பாட்ட அவனுக்கும் இதமாக இருக்கிறது. அவனுக்கு உடல் மட்டுமல்ல மனதும் உறுதியாகிறது. குளிப்பாட்டியபின் செல்லப்பாவின் தலையை தன்சேலைமுந்தானையால் துடைத்துக்கொண்டு இருக்கும் போது செல்லப்பாவிடம் சாரதா இதுயெல்லாம் ஒன் உடம்புக்கு நல்லது நீ பட்டனத்துலா படிக்கும் போது கண்டகண்ட தண்ணீயில குளிச்சு கண்டத தின்னாலும் எந்த வியாதியும் வராது... சரியாப்பா...
சரிம்மா... என்றான் செல்லப்பா.
Sunday, April 26, 2009
யாவரும் கேளிர் - பகுதி - 1 -- (ரவிவர்மன், ஒளிப்பதிவாளர்)
ஓவியம்: மு. ராஜ்குமார்
செல்லப்பா வீட்டில் கடைக்குட்டியாக பிறந்து செல்லத்துக்கு அப்பாவாகி போனவன். ஆறு முடிந்து ஏழைத் தொடும் வயது. தண்ணீரை கையால் அள்ளி தனக்கு மட்டுமே சொந்தமென சுயநலம் கொண்டாடும் குணம். அவன் வயது பிள்ளைகள் அவன் விரும்பியதை வைத்திருந்தால், அதைப்பிடுங்கி தன்னுடையது என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு, தனது பெட்டகமாக வைத்துள்ள குடிசை வீட்டினுள் குன்றுபோல நிற்கும் குளுமைக்கும், குட்டிச்சுவருக்கும் இடையில் மறைத்து வைத்துக்கொள்வான்.
மே மாதம் பிறந்து மேகமூட்டமும் கருமை கட்டத் தொடங்கிவிட்டது. மேட்டூரில் தண்ணீர் திறந்தாயிற்று. செய்தித்தாளே அறியாத வேலாயிகூட தண்ணீர் வருவதை விளாவாரியாக, தேனீர் அருந்திக்கொண்டு (காந்திக்கணக்கில்) திண்ணைக்கடையில் கதையளந்துக் கொண்டிருக்கிறாள். காத்து வாங்கப்போன அய்யாக்கண்ணு டீக்கடைக்கிட்ட குய்யோ மொய்யோவென கூட்டம் அலைமோதுவதைப் பார்த்து ஆச்சர்யத்தோடு வருகிறார். புலவன்காட்டு வெளங்கொண்டார் போனவருஷம் அறுவடை முடிஞ்சி, வட்டியும் மொதலும் வாங்கி வேட்டியில முடிஞ்சிக்கிட்டு பொய்கை கிராமத்தைவிட்டுப் போனவரு இப்பதான் வந்துக்கிட்டு இருக்காரு.
அவர் எப்பவுமே பல கலர்ல டவுசர் போட்டுகிட்டு, தன்னோட வேட்டிய தாமரை ஏரியில நனச்சி, தலைக்கு மேல இரண்டு கையிலும் பிடிச்சு, காத்துல காயவச்சிக்கிட்டுதா வருவாரு. அவர பின்தொடர்ந்து வெள்ளையன், தம்பிக்கண்ணு, சின்னுமொய்ந்தார், தனபால் கவுண்டர் எல்லோரும் வெள்ளையும் சொள்ளையுமா கதர் வேட்டிசட்ட மினுமினுக்க கடன் வாங்க வந்துகிட்டு இருக்காங்க. |
ஆனா ஒண்ணு வெளங்கொண்டார் எப்பவுமே கந்துவட்டி கலாச்சாரம் பண்ணுவதே இல்ல. நெல் அறுவடை முடிஞ்சுவுடனே அவர்கிட்டதான் கொள்முதல் பண்ணணும். அவரும் ஆத்து தண்ணி வருமுன்னே கடன் கொடுக்க வந்துட்டாரு. பொன்டுவசட்டி ராமையா வெளங்கொண்டாரப் பார்த்து
‘வாய்க்குள்ளே வந்துட்டான் வட்டிசெட்டி…ஒரு வருஷமா ஊருகுள்ள வராதவன் ஆத்துல தண்ணி வந்ததும்…அறுத்தவுடனே மரக்காள்ல நெல்ல அளவில்லாம அள்ளிக்கிட்டுப் போறதுக்கு’ என்று முணுமுணுக்க….
"என்ன ராமையா வாய்க்குள்ளயே பேசிக்கிற?
என்று வெளங்கொண்டார் கேட்க,
"அது ஒன்னுமில்லன்னே... அதெல்லாம்...அதான் வந்துட்டீங்களே மேட்டூர் தண்ணியோட கடன் கொடுக்க..."
சாரதாம்பாள் கேழ்வரகு சமைக்க, காஞ்சமுள் பொறுக்க, கருவேலங்காட்டுக்கு செல்கிறாள்;. முள்பொறுக்கப்போகும் தாயின் முந்தானயப் புடிச்சிகிட்டு செல்லப்பனும் போகிறான். உச்சிவெயில் முடிஞ்சு பொழுது சாய்கிற நேரம். அவசர அவசரமா முள்ளப்பொறுக்கி முந்தானயில மூட்டைக்கட்டி, தலையில சுமந்துகிட்டு வேகமாக வீடு திரும்பிக்கொண்டிருக்கிறாள் சாரதாம்மாள், பின்தொடர்ந்து செல்கிறான் செல்லப்பனும். தலையில குத்துற முள்ளின் வலி தாங்க முடியாமல் ஓட்டமும் நடையமுமாக தாய் செல்ல, சப்பாத்திக்கள்ளிப் பழத்த தின்னுக்கிட்டு இரத்த சிவப்பா செவந்துப்போன வாயோட செல்லப்பனும் ஓடுகிறான். வீடு சேர்ந்தாள்; சாரதாம்மாள், சமையல் வேலை முடிந்து வீடே பரபரப்பாகிறது. பலமாதம் கழுவ மறந்த மாட்டுத்தொழுவத்த சுத்தம் செய்து சீர்படுத்துகிறாள். வெள்ளிச்சந்தைக்கு மாடுவாங்கப்போன சாமி அய்யா மயிலக்காளையுடன் விளக்கு வைக்கும் முன்னே வந்துகொண்டிருப்பதை தெருவே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. தனது அப்பா வாங்கிவந்த மாயவரத்து காளைய பார்க்க கன்றுக்குட்டி துள்ளி ஓடிவருவதைப்போல ஓடிவருகிறான் செல்லப்பா. பகலை மறைக்க இரவும் வந்துவிட்டது. மழைய துரத்த மேகமும் கூடிவிட்டது.
சாமி அய்யா மாடுகளுடன் வாசலில் வந்து நிற்கிறான். ஒரு பக்கம் நாய் குரைக்க மறுபக்கம் மாடுகளுக்கு ஆராதணை செய்து மாட்டுத்தொழுவத்தில் கட்டி விட்டு, மாடு வருமுன்னே அறுத்து வைத்திருந்த புல்லை போட்டுவிட்டு வாசலில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டே மாடுகளைப்பற்றி கதை அளந்துகொண்டிருக்கிறான் மகனிடம்.
“டேய் செல்லா…” (சாமி அய்யா செல்லப்பனை செல்லமாக இப்படிதான் கூப்பிடுவான்)
“என்ன அய்யா?” (கிராமங்களில் அப்பாவை அய்யா என்றழைப்பது வழக்கம்.)
“நீ அந்த மச்சக்காளைகிட்ட மட்டும் போயிடதே. அது பாச்சக் காள. தரவு பாக்க வந்தவனையே பாய்ஞ்சிரிச்சி…”
என்று சொல்லி முடிக்கும் முன்னே உறங்குவதைப் போல கண்களை மூடிக்கொண்டு, விடிந்தவுடனே காளையை நன்றாகப் பார்த்துவிட வேண்டுமென்ற நினைவுடன் தூங்கிவிடுகிறான். கிராமத்து வீடுகளில் எப்போதும் நடுவீட்டுக்குள் அழுக்குச்சேலை தொங்கிக்கொண்டிருக்கும். ஒரு சேலையை எடுத்து திரைச்சீலைபோல தொங்கவிட்டு, மறுபக்கம் படுத்துறங்கும் செல்லப்பாவை மறைத்துவிட்டு, சாமி அய்யாவும் சாரதாம்மாவும் சலனமில்லாமல் சரசமாடத் தொடங்கினா... செல்லப்பா மெதுவாக கண்விழித்தான். திரைச்சீலைக்கு அந்த பக்கம் கிசுகிசு சத்தம் கேட்டது. சில்லென்று மழைக்காற்று கதவு இல்லாத நிலை வழியாக வந்து அவனைத் தழுவியது. படுக்கையைவிட்டு மெல்ல எழுந்து பாய்ச்சக் காளையைப் பார்க்க மாட்டுத்தொழுவத்திற்கச் சென்றான்.
தொடரும்...
மேலும் படிக்க பாருங்கள்: www.thamizhstudio.com