தமிழ் ஸ்டுடியோ.காம் தனது பரப்பை விரிவுப் படுத்தவும், பொது மக்கள் மத்தியில் குறும்படங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், குறும்படங்களை வணிக ரீதியாக வெற்றியடைய செய்யவும் ஏற்படுத்தப்பட்டதே தமிழ் ஸ்டுடியோவின் குறுந்திரைப் பயணம். இத்திட்டத்தின்படி தமிழகத்தில் உள்ள எல்லா கிராமங்களிலும் குறும்படங்கள் திரையிடப்பட்டு, அது சார்ந்து நடைபெறும் கலந்துரையாடலில் பொது மக்களையும் பங்கேற்க செய்து, அவர்களுக்கு குறும்படங்கள் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி, பின்னர் படிப்படியாக அந்த கிராமத்தில் உள்ள சிறு திரையரங்கில் குறும்படங்கள் திரையிடப்பட்டு அதில் கிடைக்கும் வருவாயை அதன் தயாரிப்பாளருக்கு கொடுப்பதே இந்தப் பயணத்தின் முதல் குறிக்கோள். நிகழ்வின் முடிவில் அந்த கிராமத்தில் தமிழ் ஸ்டுடியோவின் கிளை ஏற்படுத்தப்பட்டு தொடர்ந்து ஒவ்வொரு மாதமும், இரண்டாம் சனிக்கிழமை குறும்படங்கள் திரையிடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்படும். அந்தப் பகுதியில் இருந்து அதிக அளவில் குறும்பட இயக்குனர்களை வெளிக்கொணரவும் இத்திட்டம் உதவி புரியும்.
இந்த வரிசையில் தமிழ் ஸ்டுடியோவின் முதல் குறுந்திரைப் பயணம் திண்டிவனம் அருகிலுள்ள புலியனூர் கிராமத்தில் கடந்த (17-07-2010) சனிக்கிழமை அன்று நடைபெற்றது.
நண்பர் சிவக்குமாரின் வேண்டுகோளின்படி புலியனூர் கிராமத்தில் குறும்படங்கள் திரையிடுவது என்று முடிவானது. பின்னர் தமிழ் ஸ்டுடியோவின் குறும்பட வட்டத்தில் செயற்குழு உறுப்பினர்களாக இருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. இதில், இதயா, பத்மநாபன், விஜயக்குமார், சதாசிவம், ஐந்தாவது தூண் அமைப்பை சேர்ந்த ஜெய் செல்வா மற்றும் தமிழ் ஸ்டுடியோ நிறுவனர்கள் அருண் & குணா உள்ளிட்ட நண்பர்கள் புறப்படலானோம். நண்பர் பத்மநாபன் தனது மகிழுந்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றுக் கூற அதன் படி அனைவரும் அவரது மகிழுந்தில் பயணப்பட்டோம். சனிக்கிழமை அன்று நாங்கள் புறப்பட்ட நேரம், முதல் காதலியை முத்தமிடும் காதலன் தயங்கி தயங்கி நிற்பது போல், மண்ணை முத்தமிடலாமா வேண்டாமா என மழை தயங்கி தயங்கி நின்றது. பின்னர் சத்தில்லாத முத்தமாக சிறு சிறு தூறல்களை சிந்திக் கொண்டிருந்தது. அச்சிறுப்பாக்கம் தாண்டியது கொஞ்சம் கனமழைப் பொழிய ஆரம்பித்தது. மகிழுந்தை சாலையோரமாக நிறுத்தி ஒரு தேநீர்க் கடையில் அனைவரும் தேநீர்ப் பருகினோம். கிராமம் தானே எப்படியும் தேநீர் சுவையாக இருக்கும் என நினைத்துக் கொண்டிருந்த எங்களுக்கு விழுந்தது பேரிடி. பச்சைத் தண்ணீரில் செங்கல் தூள் கலந்தது போல இருந்து தேநீர். இருந்தாலும் மழைக் கொடுத்த குளிரில் சூட்டை அணைத்தவாறே தேநீர் பருகிவிட்டு புலியனூர் நோக்கி புறப்படலானோம்.
தேசிய நெடுஞ்சாலையில் இருந்து புலியனூர் நோக்கி பிரிந்த சாலையில் மகிழுந்து தன் பாதையை அமைத்துக் கொண்டது. மிகக் குறுகலான சாலைகள், சாலையின் இரு பக்கமும் வயல்வெளிகள், அடர்ந்த மரங்கள், என அந்தப் பாதை மிக ரம்மியமானதாக இருந்தது. சிறு வயதில் மிகவும் ரசித்து சாப்பிட்ட ஈச்ச்சம்பலங்கள் நிறைந்த ஈச்சமரங்கள் மிக அதிகமாக இந்த சாலைகளில் காணப்பட்டது மனதை கொஞ்சம் மயக்கத்தான் செய்தது. தூக்கணாங்குருவிகள் கட்டிய மிக ஆச்சரியமான கூடுகள் அதிக அளவில் தொங்கிக் கொண்டிருந்த பனை மரங்கள் பாதை எங்கும் பதநீர் தெளித்து எங்களை வரவேற்றது தூக்கனாங்குருவிகளின் இசைக் கச்சேரியோடு.
மாலை ஆறுமணியளவில் புலியனூர் கிராமத்தை சென்றடைந்தோம். புலியனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் திரையிடலுக்கான ஏற்பாடுகளை முழு வீச்சில் செய்துக் கொண்டிருந்தார் நண்பர் சிவக்குமார்.
கல்யாண வீட்டில் ஓயாமல் இழவுக் கொட்டிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சி நாடகங்கள் இன்னும் இந்த கிராமத்தை முழுமையாக ஆக்கிரமிக்கவில்லை. பெரும்பாலான வீடுகளில் தொலைக்காட்சி பெட்டியே இல்லை. அதனால் அதிக அளவிலான பொது மக்கள் குறும்படங்களைக் காண வந்திருந்தனர். புலியனூர் கிராமத் தலைவர் முன்னிலையில் குறும்படங்கள் திரையிடல் தொடங்கியது.
|
சென்னையில் கூட குறும்படங்கள் முடிந்த பின்னர் கைத் தட்டுங்கள் என்று சொன்ன பிறகுதான் கைத் தட்டுவார்கள். ஆனால் இந்தக் கிராம சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொரு குறும்பட முடிவிலும் கரகோஷம் எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். திரையிடல் நிகழ்வு பத்து மணி வரை நடைபெற்றது. சுமார் பதினைந்து குறும்படங்கள் திரையிடப்பட்டது. சுமார் ஒன்பதரை மணியளவில் பெரியவர்கள் தங்கள் வீடு நோக்கி புறப்பட்டனர். சென்றவர்கள் மீண்டும் தங்கள் குழந்தைகளை அழைத்து செல்ல வந்திருந்தனர். ஆனால் சிறுவர்களோ, நீ போ.. நான் அப்புறமா வரேன்.. என்றுக் கூறி அனைத்துக் குறும்படங்களையும் பார்த்தப் பின்னரே வீட்டுக்கு சென்றனர்.
குறும்படங்களின் கதைப் பற்றியும், அதில் இயக்குனர் சொல்ல வந்த கருத்தையும் மிக தெளிவாக இந்தக் கிராம மக்கள் உள்வாங்கிக் கொண்டனர். இந்தக் கிராமத்தில் இனி ஒவ்வொரு மாதமும் குறும்படத் திரையிடல் நடைபெறும்.
குறும்படத் திரையிடல் முடிந்ததும், இரவு உணவை முடித்துக் கொண்டு அனைவரும் உறங்க சென்றோம்.. உறங்க சென்றவர்களுக்கு ஆனந்த அதிர்ச்சி.. உறங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடம் அந்தக் கிராம நூலகம். டால்ஸ்டாய் முதல் தபு சங்கர் வரை அனைத்து எழுத்தாளர்களின் புத்தகங்களும் கிடைக்கப் பெற்ற நூலகமாக இருந்தது அது. கி.ரா.. ஜெயகாந்தன்.. ராமகிருஷ்ணன்..என சகலவிதமான எழுத்தாளர்களும் எங்களுக்கு முன்னரே அங்கு சென்று இடம் பிடித்துக் கொண்டிருந்தது போல இருந்தது. புதிதாக திருமணம் செய்துக் கொண்ட ஆண், முதலிரவில் முதன் முதலில் மனைவியை எங்கே தொடுவது என்று தவிப்பது போல், எந்தப் புத்தகத்தை எடுப்பது, எந்தப் புத்தகத்தை விடுவது என்று எல்லோரும் திணறிக் கொண்டிருந்தனர். பின்னர் ஒருவழியாக அனைவரும் ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு உறக்கத்தை கலைத்து புத்தகங்களுடன் உரையாடிக் கொண்டிருந்தனர். |
விடிந்தது. நீண்ட நாட்களுக்கு பின்னர் வயல்வெளிக்கு இரைக்கும் பம்ப் செட்டிலும், கிணற்றில் நீந்தியும் குளித்த அனுபவம் காலையில் கிடைத்தது. இந்த பம்ப் சேட்டை அடைவதற்கு நாங்க பயணப் பட்ட தூரம் குறைந்தது நான்கு கிலோ மீட்டர்கள் இருக்கும். ஆனால் பாதை முழுவது அரிதான பல பறவைகள் எங்களுடன் பயணப்பட்டது. ஏரி முழுவது வளந்திருந்த புல்வெளிகள், ஈச்சமரங்கள், தேனீக்கள், பெயர் தெரியாத பல பறவைகள் என அந்தப் பாதை கொடுத்த பரவசம் நடந்து சென்ற களைப்பை கலைந்தது.
ஒருத் தேநீர்க் கடைக்கூட இல்லாத கிராமம் இந்தப் புலியனூர் கிராமம். தேநீர் வேண்டுமென்றால் சுமார் ஒன்பது கிலோ மீட்டர்கள் பயணப்பட்டு வெள்ளிமேடுப் பேட்டை சென்றுதான் குடிக்க வேண்டும். தேநீர்ப் பிரியர்களுக்கு மட்டுமே இதுக் குறை..மற்றபடி சென்னைக்கருகே மிக அழகான, அருமையான கிராமம் இந்த புலியநூர் கிராமம். குறுந்திரைப் பயணத்தை முடித்துக் கொண்டு ஞாயிறு அன்று செஞ்சி புறப்படத் தயாரானோம். வேல்லிமேடுப் பேட்டை வந்து காலை உணவருந்த நல்ல உணவகம் தேடினோம். ஒரு சிறு உணவகம், ஒரு இட்லி 1.50 மட்டுமே. 600 ரூபாய் பில் வந்திருக்கும் என்று பார்த்தால் 65 ரூபாய் என்று வந்தது. நல்ல காலை உணவாக அமைந்தது. பரிமாரியப் பெண் தேவையறிந்து மிகப் பணிவாக பரிமாறினால். அந்த காலை உணவை இன்னும் ஒரு மாதத்திற்கு மாக்க இயலாது. செஞ்சி நோக்கி புறப்பட்டது மகிழுந்து. பள்ளிக் காலத்தில் ஆசிரியர்களின் அறிவினைக் கொண்டு சுற்றிப் பார்த்த இடம், விபரம் தெரிந்து முதல் முறையாக செல்வதால் உண்மையில் ஒரு பேரானந்தம்.
வேல்லிமேடுப் பேட்டையிலிருந்து செஞ்சி செல்லும் சாலை சிலக் கிலோ மீட்டர்கள் யாரோ சாபம் விட்டது போல் குண்டும் குழியுமாகக் கிடக்கிறது. சாலை செப்பனிடும் பணி நடக்கிறது. எப்படியும் தேர்தல் வரும் முன்னர் முடிந்துவிடும். அதுவும் அங்குள்ள ஓட்டுக்களின் எண்ணிக்கையைப் பொருத்தது. குறைந்த ஓட்டுக்கள் என்றால் முடிய அடுத்த ஐந்து வருடங்கள் ஆகும். சாலை எப்படி இருந்தாலும் அதன் இருமங்கிலும் இருந்த வயல்வெளியில் பெண்கள் களை எடுத்துக் கொண்டிருந்தனர். களை எடுத்த பெண்கள் கலையாக இருந்ததால் சாலை களைப்பை மனம் களை எடுத்துவிட்டது. |
செஞ்சியில் முதலில் ராணிக் கோட்டையை சுற்றிப் பார்க்க சென்றோம். விரைவாக கோட்டையின் உச்சியைத் தொட்டுவிடலாம். ஆனால் படிகள் ஏறுவதற்குள் நெஞ்சு வெடித்துவிடும். அவ்வளவு செங்குத்தான படிகள். ஆனால் இராஜாக் கோட்டை உச்சியைத் தொட நேரமாகும். பயணம் இனிமையாக இருக்கும் என்று அங்கிருந்த பெண் ஒருவர் சொன்னார். கோட்டைகளில் கூட பெண்கள் யாரையும் நிம்மதியாக விடுவதில்லை. நல்ல நல்ல இடங்கள், பொது மக்கள் அதிகம் வராத சுற்றலாத் தளங்கள் அனைத்திலும் காதலர்களின் வருகையும், சில்மிசங்களும் எல்லையைத் தொடும். சித்தன்னவாசல், செஞ்சிக் கோட்டை, என நான் பார்த்த இடங்கள் அனைத்தும் அதற்கு விதிவிலக்கல்ல. சித்தன்ன வாசலில் அறிய ஓவியங்களுக்கிடையில் ரேவதி ஐ லவ் யு ...ராஜா என எழுதியிருக்கும் காதல் கிறுக்கன்கள் செத்தொழிந்தால்தான் இந்த இடங்கள் எல்லாம் உருப்படும். செஞ்சிக் கோட்டை முழுவதும் காதல் கதிதங்கள்.. வாசகங்கள்.. போதாக் குறைக்கு இலவசப் படம் காட்ட நிஜக் காதலர்கள்...இவர்களை காதலர்கள் என்று எப்படி சொல்ல.. 'காம'கோடிகள். பின்னர் ராஜா கோட்டையை பார்க்க புறப்பட்டோம். மாலை மூன்று மணி வரைதான் இராஜாக் கோட்டையை பார்க்க அனுமதி.. நாங்கள் சென்றது மாலை நான்கு.. எனவே கோட்டை ஏறாமல் மற்ற இடங்களைப் பார்த்துவிட்டு சென்னை நோக்கி புறப்பட்டோம். முதல் குறுந்திரைப் பயணம் வெற்றிகரமாக அமைய காரணமாயிருந்த நண்பர்கள் சிவக்குமார், மகிழுந்து கொடுத்து உதவிய பத்மநாபன், (உண்மையில் மகிழுந்து இல்லையென்றால் பயணம் இத்தகைய சிறப்பாக இருந்திருக்க வாய்ப்பில்லை.) உடன் வந்து உதவிப் புரிந்த விஜயக்குமார், இதயா, சதாசிவம், அனைவர்க்கும் இந்த தமிழ் ஸ்டுடியோ.காம் தன்னுடைய நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது. ------------------------------------------------------------------------------------------------------- தமிழ் ஸ்டுடியோ.காம் முதல் குறுந்திரைப் பயணம்
பொது மக்களை குறும்படங்களும், அதன் பயனும் சென்று சேர வேண்டும், அனைத்து தரப்பினரும் குறும்படம் குறித்த விழிப்புணர்வு வரவேண்டும் என்கிற நோக்கில் தமிழ் ஸ்டுடியோ.காமின் குறுந்திரைப் பயணம் அமையவுள்ளது. இதன்படி, தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும், திறந்த வெளியில் இரவு நேரத்தில் கிராம மக்கள் முன்னிலையில் குறும்படங்கள் / ஆவணப்படங்கள் திரையிடப்படும். பின்னர் அந்தக் குறும்படங்கள் குறித்து பொது மக்களிடம் விவாதங்கள் நடத்தப்படும். நிகழ்வின் இறுதியில் அந்த கிராமத்தில் குறும்படம் சார்ந்த ஒரு இயக்கம் ஏற்படுத்தப்பட்டு தொடர்ந்து குறும்படங்கள் திரையிட ஏற்பாடு செய்யப்படும். காரணம்? அனைத்து தரப்பினரையும் குறும்படங்களின் பயன் சென்று சேரவேண்டும். பொது மக்கள் மத்தியில் குறும்படங்கள் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும், என்பவையே இதன் பிரதான நோக்கமாக இருப்பினும், இதில் குறும்படங்களை வணிக அளவில் வெற்றி பெற செய்யும் நோக்கமும் அடங்கியிருக்கிறது. முதலில் பொது மக்களிடம் குறும்படங்கள் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தினால் பின்னர் அவர்களே குறும்படங்களை தேடித் பார்க்கும் நிலை ஏற்படும். இதன் விளைவாக அந்தக் கிராமங்களில் உள்ள சிறியத் திரையரங்குகளில் குறும்படங்கள் திரையிடப்பட்டு அந்தக் கிராம மக்களிடம் சிறுத் தொகை வசூல் செய்யப்பட்டு, குறும்பட தயாரிப்பாளருக்கும், திரையரங்க உரியமையாளருக்கும் வழங்கப்படும். இத்திட்டம் எட்டாக்கனியாகவே இருந்தாலும் அதனை பரீட்ச்சார்த்த முறையில் செய்துப் பார்க்க தமிழ் ஸ்டுடியோ.காம் முனைந்துள்ளது. இதன்படி உங்கள் கிராமத்தில் குறும்படங்கள் திரையிட நீங்கள் விரும்பினால் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். 9840698236, 9894422268 குறுந்திரைப் பயணத்தின் முதல் கிராமமாக திண்டிவனத்தில் உள்ள புலியனூரில் எதிர்வரும் சனிக்கிழமை (17-07-2010) குறும்படங்கள் திரையிடப்படுகிறது. புலியனூர் செல்லும் வழி.. திண்டிவனம் --> செஞ்சி பேருந்து நிலையம் --> பேட்டை --> புலியனூர். புலியனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் குறும்படங்கள் சனிக்கிழமை மாலை ஏழு மணி முதல் இரவு பத்து மணி வரை திரையிடப்படும். ஆர்வலர்கள் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விபரங்களுக்கு
9840698236, 9894422268 |
1 comment:
அருமை.
வாழ்த்துகள். அடுத்த பயணத்தில் பங்கு கொள்ள ஆவல்.
Post a Comment