உலகப்படங்கள் -CITIZEN KANE - ஓவியர் ஜீவா
"The motion- picture medium has an extraordinary range of expression. It has in common with the plastic arts the fact that it is a visual composition projected on a two- dimensional surface; with dance, that it can deal in the arrangement of movement; With theatre, it can create a dramatic intensity of events; With music, that it can compose in the rhythms and phrases of time and can be attended by song and instrument; With poetry that it can juxtapose images; With literature generally, that it can encompass in its sound track the abstractions available only to language."
- MAYA DERAN
இயக்குனர்களை நடிகர்களாகவும் பார்க்கும் வாய்ப்பு நமக்கு நிறைய கிடைத்திருக்கிறது. உலகம் முழுவதும் நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. ஹிட்ச்காக் தன் ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒரே ஒரு ஷாட்டில் தோன்றுவதை உத்தியாக கொண்டிருந்தார். ஒரு படத்தில் அவரை ரசிகர்கள் தேடிக்கொண்டேயிருந்தனர். ஒரு காட்சியில் ஒரு கசங்கிய காதிதத்தை காமிரா உற்று நோக்க, காணவில்லை விளம்பரத்தில் காட்சியளியப்பார் ஹிட்ச்காக். மேலைநாடுகளில் புகழ் பெற்ற நடிகர்கள் இயக்குனர்களாவதும், இயக்குனர்கள் நடிகர்களாவதும் சகஜமான நிகழ்வுகள். ஆர்சன் வெல்ஸ், ஜான் ஹஸ்டன், சார்லி சாப்ளின் போன்றவர்கள் தாங்களே இயக்கி நடித்தவர்கள். புரூஸ் லீ, ட்ரூபோ, ஜாக்கி சான், சிட்னி |
லூமட், மார்ட்டின் ஸ்கார்சீஸ் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகலாம். ஹாலிவுட் நடிகர்களில் நிறைய பேர் ஒரே ஒரு திரைப்படத்தையாவது இயக்குவதில் ஆர்வம் காட்டுவதுண்டு.
நமது நாட்டை பொருத்தவரை நிறைய இயக்குனர்கள் தங்கள் ஆரம்ப கால படங்களிலேயே நடிகர்களாகவும் அறிமுகமாகியுள்ளனர். ராஜ்கபூர், குருதத், ஹிமான்சு ராய், பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், இவ்வகையினர். சில இயக்குனர்கள் காலத்தின் கட்டாயத்தில் அரிதாரம் பூசியதுண்டு. சாந்தாராம், கே.விஸ்வநாத், பாரதிராஜா, கிரீஷ் கர்நாடு போன்றவர்கள் இப்படி காமிராவுக்கு முன் வந்திருக்கிறார்கள். நாஞ்சில் நாடனின் “தலைகீழ் விகிதங்களை” “சொல்ல மறந்த கதை” என்ற பெயரில் தங்கர் பச்சான் இயக்க முனைந்த போது, கதாநாயகனாக நடிக்கப்போது யார் என்று வினவினோம். இயக்குனர் சேரன் என்றார்.
ஆச்சரியப்பட்டோம். பின்னர் சேரன் “ஆட்டோகிராப்” போன்ற படங்களை இயக்கி நடித்து, பெரும் வெற்றியை பெற்று விட்டார். இனி அவர் வேறு நடிகர்களை வைத்து படங்களை இயக்குவாரா என்ற மில்லியன் டாலர் கேள்வி நம் முன் நிற்கிறது. இப்போது முழுநேர நடிகர்களாகவே மாறிப்போன சில இயக்குனர்கள் கோமாளிகளாகவும், வில்லன்களாகவும் தோன்றி திரைகளை நிரப்பி விடுகின்றனர். மணிவண்ணன், ஆர். சுந்தர்ராஜன், அனுமோகன், ராஜ்கபூர், மலையாள லால், கே. வாசு, சந்தானபாரதி, ஜி.எம்.குமார், மனோபாலா… முழுக்க இயக்குனர்களே நடித்து சமீபத்தில் வந்த படம் 'மாயாண்டி குடும்பத்தார்'.
அடேயப்பா, இவர்கள் ஒரு காலத்தில் வெற்றிப்பட இயக்குனர்கள் என்பதை இவர்களே மறந்திருக்கக்கூடும். நடிகர்களாக இருந்தும் திரைப்படங்களை இயக்கும் வேட்கை கொண்டவர்கள் உண்மையிலேயே பாராட்டப்படவேண்டியவர்கள். திரைப்படத்தின் தலைமைசிற்பி இயக்குனர்தான் என்று உணர்ந்தவர்கள். எம்.ஜி.இராமச்சந்திரன், தேவ் ஆனந்த், அமோல் பாலேகர், ராகுல் ராய், ஸ்ரீநிவாசன், கமல்ஹாசன், நாசர், ரேவதி, ஆமிர்கான்… இவர்களையெல்லாம் தூண்டியது இயக்குனர் என்ற மந்திரச்சொல்தான்.
ஒவ்வோரு இயக்குனரின் முதல் திரைப்படம்தான் அவரது சிறந்த படைப்பு என்று கருதப்படுகிறது. பிறகு வருவதெல்லாம் புகழ்போதையின் மிச்சங்கள் அல்லது அன்றாடக் கடமை என்று ஆவதுண்டு. சில விதிவிலக்குகள் எதற்கும் உண்டு. உலக திரைப்பட வரலாற்றில் மகத்தான முதல் அறிமுகப்படம் என்று பெயர் பெற்ற படைப்பு - “சிட்டிஸன் கேன்” சரியாக 63 வருடங்களுக்கு முன் “சிட்டிஸன் கேன்” வெளியானபோது, அதன் இயக்குனருக்கு வயது 26 தான் என்பதை நம்புவதே சிரமமாயிருக்கும்.
கதாநாயகனின் நீண்ட வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளை வரிசைப்படுத்துகிறது திரைப்படம். “ரோஸ்பட்”(ரோஜாமொட்டு) என்று தன் இறுதி வார்த்தையை உதிர்த்துவிட்டு உயிரை விடுகிறார் சார்லஸ் பாஸ்டர் கேன். இந்த இறுதி வார்த்தையின் அர்த்தம் தேடி ஒரு நிருபர், கதாநாயகனுடன் தொடர்பு கொண்ட அனைவரையும் பேட்டி காண, பிளாஷ்பேக் வாயிலாக திரைக்கதை தொடர்கிறது. கேனுக்கு 8 வயதாகும்போது, போர்டிங் பள்ளிக்கு அனுப்பப்படுகிறான். அவனுடைய காப்பாளர் தாட்சர் ஒரு பந்தா பேர்வழி; அரசியல் பிரமுகரும் கூட. தன் இருபது வயதுகளில் கேன் ஒரு செய்தித்தாள் பதிப்பாளராக வாழ்க்கையை தொடங்குகிறார். தன் இரு சகாக்களுடன், ஒடுக்கப்பட்டவர்களின் உரிமை காக்கவும், அதிகார பீடங்களின் ஊழல் திரையை கிழிக்கவும், தன்னை அர்ப்பணிக்கிறார். தன் பணியின் பொற்காலத்தில், அமெரிக்க அதிபன் உறவுக்காரப் பெண் எமிலி நார்ட்டனை மணம் புரிகிறார். காலம் மாற மாற, திருமண பந்தம் சுவாரசியம் இழந்து கசக்கிறது. நடுத்தர வயதில் கேன், சூசன் அலெக்சாண்டர் என்ற அழகான முட்டாள்த்தனமான, பாடகியாக விரும்பும் லட்சியம் கொண்ட பெண்ணை ஆசைநாயகியாக வரித்துக்கொள்கிறார்.
புகழின் வளர்ச்சி, கேனை நியூயார்க் கவர்னர் தேர்தலுக்கு போட்டியிடத்தூண்டுகிறது. போட்டி வேட்பாளர், கேனின் திருமணத் தோல்வி மற்றும் கள்ள உறவு விஷயங்களை பகிரங்கப்படுத்தாமல் இருக்க போட்டியில் இருந்து விலகச்சொல்லி நிர்ப்பந்தப்படுத்துகிறான். தன் புகழ், திருமண வாழ்க்கை, மனைவி, மகன் உறவு அனைத்தும் பாதிக்கப்படும் என்று தெரிந்தும் சவாலை |
எதிர்கொள்கிறார். தேர்தல் தோல்வியின் பலனாக, நண்பன் லேலண்டின் மரியாதையை இழக்கிறார். மணமுறிவு பெற்று, மனைவியோ மகனுடன் பிரிந்து செல்கிறாள்.
சூசன் புது மனைவியாகிறாள். திறமையற்ற அவளை ஒரு ஆபெரா பாடகியாக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறார் கேன். பாவம் இசையாசிரியர். படாத பாடு பட்டும் பலனில்லை. அவளுக்கும் விருப்பம் குறைந்துவிட, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் அபிப்ராயமும் அவளுக்கு எதிராக திரும்ப, தற்கொலைப் பாதையின் நுனிக்கு சென்றுவிடுகிறாள் சூசன். கேன் தன் முயற்சிகளை கைவிட வேண்டி வருகிறது. மாறாக, ஜானாடு என்ற தனிமையான அரண்மனையை உருவாக்குகிறார். அங்கு சூசனுடன் தனிமைச்சூழலில் வாழ்வைத் தொடருகிறார். வருடங்கள் கடந்து, சோர்வுரும் சூசன் பொங்கியெழுந்து வெளியேறுகிறாள். தனிமை வாட்ட, புண்பட்டுக்கிடக்கும் முதியவர் கேன், ஜானாடுவின் வெற்றுப் பிரம்மாண்டத்தின் நடுவே இறந்து போகிறார். “ரோஜா மொட்டு” என்ற வார்த்தை கதை சொல்வதற்க்கான ஒரு உத்தி மட்டுமே என்பதுதான் இத்திரைப்படத்தின் சிறப்பு.
உலகத்தின் தலைசிறந்த படங்களில் அதுவும் ஒன்று என்று எப்படி பெயர் பெற்றது? பொதுவாக இந்தத்தொடரில் இடம் பெறும் திரைப்பட வரிசை, எங்கும் காணக்கிடைக்காத ஈரான், ஆப்ரிக்க, ஆப்கானிய திரைப்படங்களின் தொகுப்பு அல்ல. குறுந்தகட்டில் சுலபமாக கிடைக்கப்பெரும் படங்களில் ஒன்றுதான் “சிட்டிஸன் கேன்” திரையில் காணும்போதுதன் இதன் மகத்துவம் புலப்படுகிறது. 21 வயதிலேயே “டைம்” இதழின் முகப்பில் இடம் பெற்ற ஆர்சன் வெல்ஸ் ஒரு பரபரப்பான ரேடியோ கலைஞர். பின்னர் பிராட்வே நாடக இயக்குனர். 26 வயதில் இத் திரைப்படம் வெளியானபோது அவரும் புதுமுகம், உடன் நடித்தவர்கள் அனைவருமே புதியவர்கள். ஒளிப்பதிவாளர் கிரெக் டோலண்ட் மட்டுமே அனுபவஸ்தர். ஆகவே இயக்குனரின் எண்ணம் முழுவதையுமே, அற்புதமாக அவரால் செலுலாய்டில் பதிவு செய்ய முடிந்தது. அப்போதைய சராசரி அமெரிக்க திரைப்படங்களை விட “கேன்” மிகவும் வித்தியாசப்பட்டிருந்தது. இத்தனைக்கும் இதில் பரிசோதிக்கப்பட்டிருந்த, ஆழ்ந்த போகஸ், இருளுடன் கூடிய ஒளியமைப்பு, செம்மையான பரப்புகள், வித்தியாசமான கட்டமைப்பு, பின்புலத்திற்கும் முன்புலத்திற்கும் இலக்கணம் மீறிய வித்தியாசங்கள், பின்புற பக்கவாட்டு ஒளியமைப்புகள், கேமிரா கோணத்திலும் தெரியக்கூடிய உட்கூறையமைப்புகள், சரிவான கோணங்கள், ஆழ்ந்த க்ளோஸ்-அப்கள் விரவி நிற்கும் காவிய நிகர் தூரக்காட்சிகள், வியக்க வைக்கும் க்ரேன் ஷாட்டுகள், எதுவும் திரைக்கு புதிதல்ல. ஆனால் இத்தனையையும் பயன்படுத்தி பல அடுக்குகள் கொண்ட கேக்கை அலங்கரிப்பதைப்போல் இத்திரைப்படத்தை உருவாக்கினர் இயக்குனரும் ஒளிப்பதிவாளரும்.
ஒரு இறுதி வார்த்தையின் புதிரை விடுவிப்பது போல, மலர்ந்து விரியும் திரைக்கதை ஒரு ஜிக் ஜாக் புதிர் போல் கலைந்தும் இணைந்தும் வருவதும், கதாநாயகன் லட்சியவாதியாயிருந்து பின்னர் சுயநலமும் முதலாளித்துவமும் பிடிவாதமும் கொண்டவனாக மாறி வருவதையும் ஒளிப்பதிவின் துணை கொண்டு வெற்றிகரமாக காட்சிப் படிமங்களாக்கினார் வெலஸ். ஒரு புதிரின் சாயலை படம் நெடுக கொண்டு வருவதில் எடிட்டர் ராபர்ட் வைஸ் பெரும் பங்கு கொண்டார். பின்னர் பெரும்புகழ் பெற்ற “சவுண்ட் ஆப் மியூசிக்” போன்ற வெற்றிப்படங்களின் இயக்குனராக இவர் திகழ்ந்தார். மாண்டேஜ் காட்சிகளாகவே தம்பதியின் பிணக்கம் அதிகரிப்பதை சொன்ன முறை, ஒரு சோற்றுப் பதம். திரைக்கதை அமைப்பில் ஒரு நபரைப் பற்றி பல்வேறு கதாபாத்திரங்கள் சொல்வது போல் அமையும் காட்சிகளில், துல்லியமான மேதைத்தனம் மிளிரும்.
பின்னர் “சைக்கோ”, “வெர்டிகோ” போன்ற திரைப்படங்களின் இசையை அளித்த பெர்னார்ட் ஹெர்தனுக்கும் இது முதல் படம். வெல்ஸின் காட்சியமைப்புக்கு ஈடு கொடுத்தது பிண்னணி இசை. செட் அமைப்புகளும் மிகவும் அற்புதமாக அமைந்து போயின. ஜானாடுவின் பிரம்மாண்டமான உள் அமைப்புகளின் முன் கதாபாத்திரங்கள் குறுகிச் சிறுத்தும், |
அவர்களிடையே அமைக்கப்பட்ட இடைவெளிகளும் கதைமாந்தர்களின் மனவெளியை சித்தரித்தன. பெரும்பாலான காட்சிகள் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் உபயோகித்து இரு காட்சிகளின் கலவையாகவும், இருட்பகுதிகளை அதிகரித்தும், பார்வையாளனுக்கு பிரம்மாண்டத்தை அளித்தது.
இன்று நம் கண் முன்னே, நிறைய நடிகர்கள் எப்படி ஒப்பனையில் புதுமை புரிந்தார்கள், எப்படி கதாபாத்திரமாகவே மாறினார்கள் என்று பக்கம் பக்கமாக பேட்டி கொடுப்பதை பார்க்கிறோம். ஆனால் 1941ல், 26 வயது ஆர்சன் வெல்ஸ், தானே இயக்கி, தானே நடித்த முதல் படத்திலேயே புரிந்த ஒப்பனைப் புரட்சியை பார்க்கவேண்டும். துள்ளலும் துடிப்புமான இளம் பதிப்பாளராகவும்,(கோட்டும் ஜாக்கட்டும் ஒரு சுமை போல அவிழ்த்தெறிந்து விட்டே நடப்பார், ஒடுவார்) பின்னர் வயது முதிர்ந்து, முகமெல்லாம் சுருக்கம் பாய்ந்து, தாடை வீங்கி, கண் இரப்பைகள் தொங்கி, மெதுநடை நடக்கும் கிழட்டு கோடீஸ்வரனாகவும் அவரைப் பார்க்கும்போது பிராட்வே சாயல் இல்லாத தூய சினிமா பாணி நடிப்பைக் காணலாம். பின்னர் “காட்பாதரில்” பிராண்டோவின் நடிப்பை காணும்போது வெல்ஸ் நினைவுக்கு வருவார் எனபதில் ஐயமில்லை. ஜோசப் காட்டன் போன்ற சக நடிகர்களும், நடிகைகளும் இது தங்கள் முதல் படம் என்ற சாயல் சிறிதும் தோன்றாமல் வெகு இயல்பான நடிப்பைத் தந்தார்கள்.
“சிட்டிஸன் கேன்” கதை, அப்போதைய பிரபல பத்திகை அதிபரான ஹார்ஸ்ட்டின் வாழ்க்கையைத் தழுவியது என்ற சர்ச்சை எழுந்தது.. நெகடிவை அழிக்க பெரும் பேரங்கள் நடத்தன. வெல்ஸ் ஒரு கம்யூனிஸ்ட் என்றும், கட்டாய ராணுவப் பயிற்சியிலிருந்து நழுவிய கோழை என்றும் குற்றசாட்டுகள் எழுந்தன. திரையிட கடும் தடைகளை எதிரிகள் ஏற்படுத்தினர். ஒரு வழியாக திரைக்கு வந்தது. 1941ல் சிறந்த படமாக அறிவிக்கப்பட்டு “நியூ யார்க் திரைப்பட விமர்சகர் விருது” வழங்கப்பட்டது. 9 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டும், பரிசளிப்பு விழாவின்போது ஒவ்வொரு முறையும் “சிட்டிஸன் கேன்” பெயர் உச்சரிக்கப்பட்டபோது கேலிக்கூச்சல்கள் எழுந்தன. ஆஸ்கர் அரசியலில் திரைக்கதைக்கென்று ஒரே ஒரு விருதுதான் இதற்கு கிடைத்தது. வசூல் ரீதியாகவும் கேன் ஒரு தோல்விப் படம்தான்.
ஆனாலும் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்குமிடையே நடைபெறும் அனைத்துலக திரைப்பட விமர்சகர் விருது ஒட்டெடுப்பில், உலகின் சிறந்த 10 படங்களில் முதல் இடத்தை இன்றும் பெற்று வருவது “சிட்டிசன் கேன்” தான். அதே போல் “திரைப்பட வரலாற்றின் மிகச்சிறந்த இயக்குனர்” ஒட்டெடுப்பில் இன்றும் முதலிடத்தில் இருப்பவர் ஆர்சன் வெல்ஸ்தான்.
---------------------------------------------------------------------------------------------
1 comment:
நன்று! இது ஒரு முக்கியமான ஆவணம்! திரைவிமர்சனத்தை நேர்த்தியாக செய்திருக்கிறீர்கள்! திரைக்கதை, ஒளிப்பதிவு, இசை என அனைத்து கூறுகளையும் எடுத்துரைப்பது இதன் தரத்தை உணர்த்திவிட்டது! நன்றிகள்!
Post a Comment